Homeகட்டுரைகள்சமையலறை என்பது பிக்பாஸ்

சமையலறை என்பது பிக்பாஸ்

சில வருடங்களுக்கு முன்பு மாறுவதற்காக வீடுகள் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் இரண்டு வீடுகள் எங்களுக்கு நம்ப முடியாத அமைப்பினைக் கொண்டிருந்தன. இனி வரும் காலத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வீடுகளா அல்லது ஒரு கட்டாயத்தை நோக்கி நம்மைத் தள்ளும் அவசரமா என்று புரியவில்லை. அதில் ஒரு வீடு, நகரின் பிரதான ஓடத்தில் அமைந்திருந்தது. வெளித்தோற்றமும், மற்ற வசதிகளும் நிறைவைத் தந்திருந்தன. ஆனால் வீடு முழுவதும் தேடியும் சமையலறையைக் காணவில்லை. வீட்டினைக் காட்ட அழைத்துப் போனவரிடம் சமைலறை எங்கே என்றதும், ஹாலில் ஒரு இடத்தைக் காட்டினார். அந்த இடத்தை நான் சர்விஸ் ரூம்’ என்று நினைத்திருந்தேன். ஏனெனில் நான்கு பூச்செடிகளை அடுத்தடுத்து அடுக்கினால் அந்த இடம் நிரம்பிவிடும். இடப்பற்றாக்குறைக்காக மட்டும் சொல்லவில்லை, ஒரு சமையலறையில் அடிப்படையாக இருக்க வேண்டிய வசதிகள் எதுவும் அதில் வடிவமைக்கப்படவில்லை. சிலிண்டர் வைக்க என இடமில்லை. இரண்டு அடுக்குகள் கொண்ட அலமாரி தான் மொத்த சமையலறைக்கும். ‘எப்படி இது சாத்தியம்?” என்று எனக்கு புரியவேயில்லை. வீட்டின் உரிமையாளரே வந்துவிட்டார். முப்பத்தைந்து வயதுக்குள் உள்ள உரிமையாளர். “இப்பல்லாம் யாரு சமைக்கறாங்க? அவசரத்துக்கு எதாவது செய்துக்கனும்னா இன்டக்ஷன், எலக்ட்ரானிக் குக்கர்ல பண்ணிக்கலாம், இடத்தை அடைச்சிட்டு கிச்சன் தேவையில்லைஎன்றார். அந்த வீட்டுக்கு யார் குடிபோயிருக்கிறார்கள் என்கிற ஆவல் அதிகரித்தபடி இருக்கிறது.

மற்றுமொரு வீடு. நம்பமாட்டீர்கள், அதில் சமையலறையே இல்லை. முதல் உரிமையாளர் போலவே தான் இவருக்கும் எண்ணம். “யாரு இனிமே வீட்டுல சமைக்கப்போறாங்க..இடம் வேஸ்ட்இப்போது சமையலறைக்கென உள்ளங்கை அளவு இடம் விட்டிருந்த முதல் உரிமையாளர் எனக்கு பரவாயில்லை என்று தோன்றி விட்டார். சிறிது கரிசனம் கொண்டவர் அவர்.

இந்த வீடுகளைப் பார்த்துவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தபோது இதுவரை நான் வெவ்வேறு வீடுகளில் பார்த்திருந்த சமையலறைகள் நினைவுக்கு வந்தபடி இருந்தன. சமையலறைகள் எத்தனை ஆர்வமிக்கவை, எத்தனை வடிவங்கள் கொண்டவை என்பதை நினைத்துக் கொண்டே வந்தேன்.

உடுமலைப்பேட்டையில் என் அம்மாவின் உறவினர் ஒருவர் பூர்வீக வீட்டில் வாழ்ந்தார். அந்த வீட்டின் வயது அது இடிக்கப்படும்போது நூறு வயதினைக் கடந்திருந்தது. அந்த சமையலறை சுவாரசியமானது. பாரம்பரியமான கேரளா வீடுகள் போலவே சமையலறையின் ஒரு ஜன்னலில் இருந்து அதன் நேர் கீழே கிணறு உண்டு. சமைத்துக் கொண்டே ஒரு கையால் ஜன்னல் வழியே இலாவகமாக கயிறை அந்த வீட்டுப் பெண்கள் இழுப்பார்கள். ,கிணற்றிலிருந்து தண்ணீர் வாளி வழியே கைக்கு வந்துவிடுகிறது. தோட்டத்துக்கு செல்ல சமையல்கட்டிலிருந்து ஒரு சிறிய வாசல். இரண்டடிக்குள் கருவேப்பிலையும் பச்சை மிளகாயும் பறித்துக் கொள்ளலாம்.. உக்கிராண அறை என்று சொல்லப்படுகிற ஸ்டோர் ரூம் என்பது சமையல் அறைக்குள் ஒரு பாதாள அறை போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. குழந்தைகள் ஒளிந்து விளையாட அருமையான இடம். அறைக்கு வெளியிலிருந்து பார்த்தால் அப்படியொரு ரகசிய பாதாள அறை வீட்டினுள் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அந்த சமையல் அறையை ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.

i

தக்ஷின் சித்ரா சமையலறைகளுள் ஒன்று

சென்னையில் தக்ஷின் சித்ரா என்றொரு இடம் உண்டு. அங்கு தென்னிந்திய பாரம்பரியமான வீடுகளைக் கட்டியிருப்பார்கள். அவை  யாவும் காட்சிப் பொருள் மட்டுமே. வீடுகள் எல்லாம் ஒரே மாதிரியான அமைப்புக்குள் வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பழமையான வீடுகள் எப்படியிருந்தன என்பதை தெரிந்து கொள்ள அங்கு செல்லலாம். அங்கு இதுவறை ஐந்து முறை சென்றிருக்கிறேன். அந்த வீடுகளுக்குள் போய் வருவதில் எனக்கு சலிப்பு ஏற்பட்டதேயில்லை. சென்னையில் என மனதுக்கு நெருக்கமான இடங்களில் ஒன்றாக அது மாறிப்போயிருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள சமையலறைப் பொருட்களும் என்னை அதிகம் கவர்ந்தவை. விதவிதமான பாத்திரங்கள், குடுவைகள், கரண்டிகள், அறிவைப் பொருட்கள், ஜாடிகள் என ஒவொரு வீட்டுக்கும் ஒவ்வொரு விதம். அங்கு சுற்றிப்பார்க்க வரும் பெண்கள் அந்த சமையலறைகளில் வெகு நேரம் நின்று ஆராய்வதைப் பார்த்திருக்கிறேன். உரியில் கட்டி வெண்ணையைப் பாதுகாப்ப்த்தை கதைகளில் கேட்டிருப்போம். என் வீட்டில் அந்தப் பழக்கம் இருந்தது. குளிர்சாதனப்பெட்டியின் வருகையால் அந்தப் பழக்கம் இன்று இல்லை. ஆனால் அதே போல் அங்கு உரியில் கட்டிய பானையைப் பார்த்ததும் என்னுடைய குழந்தைகள் எக்கி குதித்துப் பார்த்தார்கள். இப்படிக் குதித்துப் பார்ப்பது மரபில் இருக்கிற ஒன்றாக நினைத்துக் கொண்டேன்.

சமையலறையை ஒருவர் பராமரிப்பதைக் கொண்டு அவர்களின் உளவியலையும், குணத்தையும் சொல்லிவிட முடியும் என்பது பொதுவானதொரு நம்பிக்கை. அது ஓரளவு உண்மையும் கூட. எழுத்தாளர் தி.ஜானகிராமன் இதில் பெரும் நம்பிக்கை கொண்டவர் எனபது அவரது எழுத்துகளில் தெரியும். அவருடைய கதாபாத்திரங்களில் பெண்கள் சமையலறையை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டே இருப்பார். ‘உயிர்த்தேன் என்று ஒரு நாவல். அதில் ஒரு பெண் கதாபாத்திரம் ரவை கேசரி செய்வதைப் பற்றி  எழுதியிருப்பார். ரவையும், நெய்யும், சர்க்கரையும் எடுத்து அதே கையோடு திரும்ப எடுத்த இடத்தில் வைப்பதும் என ஒரு ஒழுங்கு கொண்ட சமையலை விவரித்திருப்பார். எதுவும் சிந்தாமல் சிதறாமல் வாசனையைக் கொண்டு மட்டுமே அங்கே சமையல் நடப்பதை அறிந்து கொள்ள முடியும் என அந்தக் கதாபாத்திரம் எதையும் நேர்த்தியாய் செய்யக்கூடியது என்பதை நறுக்குத் தெரிந்தாற் போல சொல்லிவிடுகிறார்.

சமையலறையை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பது குறித்த வீடியோக்கள் யூடிபில் காணக் கிடைக்கின்றன. இவை இலட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இது போன்று சமையலறை ஒழுங்கு வீடியோக்கள் வெளிநாட்டு சேனல்களில் குறைவாகவே காணக்கிடைக்கின்றன. அங்கெல்லாம் வீட்டின் மற்றப்பகுதிகளை ஒழுங்கு செய்யும் வீடியோக்கள் அதிகம். காரணம் அவர்கள் சமைப்பதற்கும், அதற்கான பாத்திரங்களுக்கும் ஒதுக்கும் நேரமும், இடமும் குறைவு. ‘ஒப்பன் கிச்சன்எனப்படும் கூடத்தின் ஒரு பகுதியை சமையலறைக்கென ஒதுக்கும் இந்த வகை வடிவமைப்புகள் இப்போது இந்தியாவிலும் வர ஆரம்பித்து விட்டன. இந்த வகை சமையலறைகள் அத்தனை ஒட்டுதலாக எனக்கு இருந்ததில்லை. சமையல் அறை என்பதன் ஒரு குணமும், வாசனையும், வடிவமும் வீட்டுக்கு வீடு மாறுபட வேண்டும். கழுவி துடைத்து வீட்டைக் காலி செய்தது போன்றதான சமையலறைகளில் அழகு இருப்பதேயில்லை. சமையலறை என்பது பாத்திரங்களின் சங்கமமும் கூட.

சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு பெண் தன் வீட்டில் நடந்த சம்பவத்தை பகிர்ந்திருந்தார். அவருடைய மாமியார் நெடுங்காலமாய் ஈயம் பூசிய ரசம் வைக்கும் பாத்திரத்தை பாதுகாத்திருக்கிறார். அது மாமியாரின் பாட்டி வழி வந்த சொத்து. மாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நேரத்தில் இந்தப் பெண் அதில் ரசம் வைத்து மாமியாரைக் கவர வேண்டும் என்று நினைத்திருக்கிறார். தவறொன்றும் இல்லை. ஆனால் பாத்திரத்தை அடுப்பில் வைத்தது மறந்து ஃபோனில் பேசிக்கொண்டிருக்க, உருகி ஒட்டையாகிவிட்டது பாத்திரம். மாமியாரோ மருத்துவமனையில் இருந்து வரவிருக்கிறார். என்ன ஆகப்போகிறதோ என பயத்தில் எழுதியிருந்தார். அவர் எழுதியிருந்த விதம் ஒரு திகில்கதையின் அத்தனை இயல்புகளையும் கொண்டிருந்தது. மாமியார் வந்ததும் என்னவாயிற்று என்று எழுதப்போகும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

பக்கத்து வீடுகளுக்கு நம் வீட்டில் செய்த பதார்த்தங்களை பாத்திரத்தில் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, அந்தப் பாத்திரம் வருமா, வரதா, கேட்டால் தவறாகி விடுமா, எப்படிக் கேட்பது என்றெல்லாம் யோசித்திராதவர்கள் இந்தத் தேசத்தில் இல்லை. பணம் கடன் கொடுத்திருந்தால் கூட நம்மால் அவர்களிடம் சகஜமாய் உரையாட முடியும், அந்தப் பாத்திரம் கைக்கு வந்து சேரும் வரையில் நம் நாட்டமும், எண்ணமும் அந்தப் பாத்திரத்தை விட்டு அகலாது. ரயிலைத் தவறவிட்டுவிடப்போகும்  பதற்றத்தை விட அதிகமானது ஒரு பாத்திரத்தின் மூடி தொலைந்தால் ஏற்படக்கூடிய பதற்றம்இது இந்த மண்ணின் குணம்.  ‘என் கல்யாணத்துக்கு என் மாமா பொன்னையா நாடார் கடையில வாங்கிக்  கொடுத்த பாத்திரம் இது’, என் பெரிய பையன் பிறந்தப்போ, என் அம்மா என் பையனுக்கு வாங்கிக் கொடுத்த ஸ்பூன் இதுஎன்று ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் உள்ள கதைகள் தான் தினமும் கைகளில் பாத்திரங்களாய் தவழுகின்றன. என்னுடைய அக்காவுக்குத் திருமணமாகி சென்னைக்கு வந்து இருபத்திஐந்து வருடங்கள் ஆகின்றன. ஒவ்வொரு முறையும் எங்கள் ஊருக்கு போகையில் ஊரின் நினைவாக பாத்திரங்கள் தான் வாங்கிப் போவாள். அவை யாவும் சமையலறையில் இருக்கையில் ஊரில் இருப்பது போலத் தோன்றும் போல இருக்கிறது.

The Great Indian Kitchen மலையாளப் படம் வெளிவந்திருந்தபோது அதற்கான ஒரு கூட்டத்தினை வாசகசாலை நண்பர்கள் நடத்தினார்கள். அதில் நான் கலந்து கொண்டு பேசினேன். அந்த உரையினை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்திருக்கிறார்கள். இப்போதும் அந்த உரையைக் குறித்து பார்க்கும் சிலர் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். என்னுடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து பேசிய பெண்களும் உண்டு. பேசும் பலரும் அவர்களைப் பற்றிப் பேசியதாகவே சொன்னார்கள். ஆனால் நான் பேசியது சமையலறைகளைக் குறித்து. அவை பெரும்பாலான பெண்களைப் பற்றியதாக மாறியிருந்தது. ஏனெனில் இங்கு சமையல் அறையும், பெண்களும் இரு வண்ணங்கள் கலந்த ஓரோவியம்.

சிலருக்கு சமையலறை என்பது ஒரு தியானக்கூடம் போன்றது. உள் நுழைந்துவிட்டால், பின்பு வெளியுலகம் மறந்து போகும். எங்கள் குடும்ப நண்பரின் வீட்டில் ஒரு பாட்டி பல காலங்களாக சமையல் வேலை செய்து வந்தார். யாரிடமும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார். என்ன சமைக்க வேண்டும் என்று ஒருநாளும் அவர் கேட்டதேயில்லை. வீட்டுக்குள் அவர் வருவதும். போவதும் எப்படி அத்தனை இரகசியமாக நடக்கிறது என்று நாம் வியக்கும் அளவுக்குத்தான் அவர் நடமாட்டம் இருக்கும். அவருக்கு கோபம் வரும் என்று நான் நினைத்ததேயில்லை.

ஒருநாள் அவர் குரலைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் முதன்முதலில்  கேட்டேன். நண்பரின் மகளைக் கண்டித்துக் கொண்டிருந்தார். விஷயம் ஒன்றுமில்லை நமக்கு, ஆனால அவரைப் பொறுத்தவரை அது பெரிய தவறாய்ப் போனது. ‘முகத்துக்கு கடலை மாவு தேய்க்கனும்னா அதுக்குத் தனியா வாங்கி வைக்கணும், சமையலறைல நான் வச்சிருந்த இடத்துல இருந்து எடுத்துட்டு போகக்கூடாது. இப்படி இனிமே பண்ணினா நான் வரமாட்டேன்என்றார் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பின்னரே அந்த மாபெரும் தவறை அவர் மன்னித்தார். அப்போது எனக்கு அவர் ஒரு மகாராணி போலவும், அந்த சமையலறையின் பாத்திரங்களும், பொருட்களும் அவரின் குடிமகன்கள் போலவும் தெரிந்தனர். ஒரு  நாட்டின் குடிமகனை எவரேனும் அபகரித்து அழைத்துப் போனால் எழும் கோபமே பாட்டியின் அந்த சீற்றம்.

சமையலறை என்பது பெண்களின் ராஜ்ஜியம். ஒருவகையில் அது அவர்களை முடக்கிப்போடும் இடமும் கூட. ஆனால் சமையலறை என்பது ஒரு உரிமை  கொள்ளும் இடமும் கூட. அது இரகசியங்கள் கொண்டது. ஒரு வீட்டின் செயல்களின் தொடக்கமும், முடிவும் சமையலறையையே   சார்ந்திருக்கிறது. வேறு ஒருவர் அதனுள் நுழைவதென்பது அங்கு கோலோச்சும் ஒருவருக்கு அவரின் ரகசிய எண்ணத்துக்குள் அத்துமீறுவது போன்றது. ஒரு வீட்டின் பெண்களுக்கு ஏற்படுகிற பிரச்சனைகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமையலறை ஒரு காரணமாக இருக்கும். அதனால் தான் வீட்டின் மூலையில் சமையலறை இருந்தாலும் அது ஒரு பிக் பாஸ் போல நம்மை ஆட்டுவிக்கிறது.

Subscribe
Notify of
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

ஒரு வீட்டின் செயல்களின் தொடக்கமும், முடிவும் சமையலறையையே சார்ந்திருக்கிறது. வேறு ஒருவர் அதனுள் நுழைவதென்பது அங்கு கோலோச்சும் ஒருவருக்கு அவரின் ரகசிய எண்ணத்துக்குள் அத்துமீறுவது போன்றது. உண்மை தான். என் வீட்டு சமையல் அறையில் நான் நுழைந்தால் என் மனைவி பதற்றம் அடைவார். உங்களுக்கு இங்க என்ன வேலை என குரலை உசத்தி பேசுவார். அருமையான கட்டுரை.