Homeகட்டுரைகள்அகச்சுடர்

அகச்சுடர்

2010 ஆம் ஆண்டு. ஒருநாள் எழுத்தாளர் ஆர். சூடாமணி மறைந்த செய்தி தெரிய வந்த அன்று முதலில் ஏற்பட்டது வருத்தம் என்பதை விட குற்றஉணர்வு தான். ஒருவர் நம்மைவிட்டுப் பிரியும்போது பல நேரங்களில் நம்மிடையே ஏதேனும்  குற்றஉணர்வினைத் தந்துவிட்டே செல்கிறார்கள். அவரைச் சந்தித்திருக்கலாம், அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கலாம், அவர் கேட்ட உதவியை செய்திருக்கலாம் இப்படி ஏதேனும் தோன்றிவிடுகிறது. சூடாமணியைப் பொறுத்தவரை எனக்குள் எழுந்த குற்றஉணர்வின் காரணம், அவருடைய எழுத்துகளை அதற்கு முன்பு வாசித்திருக்கவில்லை என்பது தான். அன்றைய இரவு அவருடைய சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன். ஒரே நாள் இரவில் ‘நாகலிங்க மரம்’ என்கிற சிறுகதைத் தொகுப்பினை வாசித்து முடித்திருந்தேன். ஒருவகையில் ஒரு எழுத்தாளருக்கு ஒரு வாசிகியாக நான் செய்த அஞ்சலியாகவும் நினைத்துக் கொண்டேன்.

அதை வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றிய ஒன்று பிரமிப்பு. எழுத்தாளர்கள் ஒருவகையில் மனநல ஆலோசகர்கள். அவர்கள் விதவிதமான மனித மனங்களை எழுதக்கூடியவர்கள். ஆர்.சூடாமணியின் எழுத்துக்களை இந்தவகையில் தவறாது சேர்த்துக் கொள்ள வேண்டும். எதையும் ஆழமாகவும் அன்போடும் பார்க்கும் ஒருவர் எழுத்தாளரானால் எப்படி இருக்குமோ அப்படித் தான் சூடாமணி எழுதினார். என்னால் இப்படித் தான் இவர் எழுத்தை வாசிக்குந்தோறும் யோசிக்க முடிகிறது.

இவருடைய கதைகளில் பெண்களும் குழந்தைகளும் அதிகமும் வருகிறார்கள். ஒவ்வொருவரும்  ஒவ்வொரு விதம். இவர்களை நாம் அனுதினமும் சந்தித்துக் கொண்டிருப்போம். ஆனால் அவர்கள் மனதினை அறிந்திருக்க மாட்டோம். ‘நீங்கள் பார்க்கும் மனிதர்கள் தான், நான் அவர்களின் அகத்தையும் சேர்த்து பார்க்கிறேன் என்று சொல்வது போன்று சூடாமணி எழுதிவிடுகிறார்.

சிறுகதை ஒன்றில், ஒரு வீட்டுக்கு சமையல்வேலை செய்ய வயதான பாகிரதி என்கிற ஒரு அம்மா வருவார். அந்த வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் அவரைப் பிடித்துவிடும். வாய் ஓயாமல் அப்பாவித்தனமாக அவர் பேசுகிற பேச்சினை எல்லாரும் ரசிப்பார்கள். சமயங்களில் மெலிதாய் அலுத்துக் கொண்டு கடந்து போவார்கள். அவர் தனக்கு யாரும் துணையில்லை என்று சொல்லி அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்திருப்பார். ஒருநாள் தனக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள் என்றும் நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள் என்று சொல்லும்போது அந்த வீட்டின் எஜமானி செல்லத்துக்கு ஆச்சரியமாக இருக்கும். “என்னம்மா துணை இல்லைன்னு சொன்னீங்களே”

“ஆமாம்மா..எல்லாரும் இருந்தும் ஆதரவு இல்லன்னா துணை இல்லாத மாதிரி தானே” என்பார் பாகிரதி.

பாகிரதியின் மகன் அம்மா சம்பாதிக்கிறாள் என்றதும் பணம் கேட்டு வந்து நிற்பான். அந்த மகன் பாகிரதிக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தபோது கூட வராமல் இருந்தவன்.  பாகிரதி அவனுக்கு தான சேர்த்து வைத்த அத்தனை பணத்தையும் தந்துவிடுவாள். “உங்களை கோடீஸ்வரி என்று நினைத்துக்  கொண்டு வந்தானா அல்லது கறவை மாடு என்று நினைத்தானா?” என்பாள் செல்லம். “அம்மா என்று நினைத்து வந்திருக்கிறான்” என்பாள். அந்த பதிலில் செல்லம்  அயர்ந்து போய் நிற்பாள். அதன்பிறகு அம்மாவுக்கும் குழந்தைகளுக்குமான உறவினைப் பற்றி அத்தனை யதார்த்தமாக பாகிரதி பேசுவாள்.  மிக உண்மையான வார்த்தைகளாக இருக்கும் அவை. இப்படி பல்வேறு அம்மாக்கள் சூடாமணியின் கதைகளில் வருவார்கள். கணவனை இழந்த ஒரு பெண் தன மகனை அத்தனை தூரம் பார்த்து பார்த்து வளர்ப்பாள். அதுவே அவளுக்கு பிரச்சனையாகும். ஒவ்வொரு முறையும் மகனுக்குத் திருமணத்துக்கான பெண் பார்க்கும்போதும் அவள் தட்டிக் கழிப்பாள். எத்தனை தூரம் கஷ்டபட்டு வளர்த்தேன் தெரியுமா என்பாள்.

இன்னொரு கதையில் வரும் அம்மா , தன்னுடைய நான்கு வயது மகன் அவனது டீச்சரிடம் அதிக பிரியமாக இருக்கிறான் என்பதைத் தாளமுடியாமல் அழும் குணம் கொண்டவள். மற்றொரு அம்மா மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி வீடு திரும்புவாள். நானும் ஒரு தாய் தான் என்பதை நிரூபிக்கப் பாடுபடுவாள் இந்த அம்மா.

இவருடைய கதைகளில் தாய் கதாபாத்திரங்கள் யாவும் எப்படி தங்களின் இடத்தை நிலைநிறுத்திக் கொள்ள போராடுகிறார்கள் அதில் ஏக்கம் கொள்கிறார்கள் என்பதாக அமைந்திருக்கும். சில அம்மாக்கள் தங்களுக்கென மரியாதையை இயல்பாக எப்படி பெற்றுக்கொள்கிறார்கள் என்பதாகவும் இருக்கும். பெண்களுக்கான மரியாதை, மதிப்பு குறித்து இப்போது நாம் பேசும் எதையும் சூடாமணி ஐம்பது ஆண்டுகளாகவே எழுதிக்கொண்டிருக்கிறார்.

அதற்கு முன்பு எந்த எழுத்தாளரும் இத்தனை தூரம் ‘அம்மாக்கள்’ பற்றி எனக்குத் தெரிந்த வகையில் எழுதியதில்லை.

ஐம்பதுகள் தொடங்கி இரண்டாயிரம் வரையிலான ஐம்பது வருட காலகட்டத்தின் கதை மாந்தர்களும் சமூகத்தின் நிகழ்வுகள் குடும்பங்களில் எதிரொலிப்பதையும் எழுதியவர். ஆரம்ப கால  கதைகளுள் ஒன்று  காரடையான் நோன்பிருக்கும் ஒரு சிறுமியைப் பற்றியது.

2003ஆம் ஆண்டு  ஒரு கதை எழுதியிருக்கிறார். அது எஸ்.சுகந்தி என்பவரைப் பற்றியது. எஸ்.சுகந்தி என்கிற அறுபது வயதான் பெண் அதுவரை இல்லாமல் வீட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் தன பெயரை ‘எஸ்.சுகந்தி’ என்று எழுதி வைத்திருப்பார். சுகந்தியைப் பார்க்க வந்த வந்த ரமா என்கிற பெண்ணுக்கு  சுகந்தி இப்படி பெயர்களை எழுதிவைத்திருப்பது ஆச்சரியம் தரும். இவருக்கு ஒருவேளை தான் என்ற அகந்தை வந்துவிட்டதோ அதனால் தான் வீடு முழுவதும் தன் பெயரை அங்கங்கே எழுதி வைத்திருகிறார் போல இருக்கிறது என்று நினைப்பார் ரமா. ஆனால் தனக்கு வயதான காலத்தில் வரும் அம்னிஷியா நோய் தாக்குகிறது என்று தெரிந்ததும் சுகந்தி தன் பெயர் கூட மறந்து போகும் நிலை வரக்கூடாது என்று சுவர்களில் தன் பெயரை எழுதி வைத்திருப்பார். சூடாமணி இப்படி எழுதுகிறார் .”ஈகோ விஞ்சுவதால் தன் பெயரை எழுதுகிறாள் என்று நினைத்தாளே! மாறாக ஈகோவின் அழிவை அஞ்சி எழுதுகிறாள்.

ஆர்.சூடாமணியின் கதைகளில் மிகவும் பிரபலமானது ‘நான்காவது ஆசிரமம்’. இந்தக் கதை வெளிவந்த ஆண்டினை குறிப்பிட்டாக வேண்டும். 1972ல் வெளிவந்த கதை. இப்போது இந்தக் கதை வெளிவந்திருந்தால் கூட விவாதங்களையும் வாக்குவாதங்களையும் எதிர்ப்புகளையும் புரியாதவர்களிடம் ஏற்படுத்தியிருக்கும். ஒரு பெண் மூவரைத் திருமணம் செய்து கொள்கிறாள் என்பது கதை. முதல் திருமணத்தின்போது கணவன் இறந்துவிடுவார். இரண்டாம் திருமணம் நடக்கும். மிக அன்பான தம்பதிகளாக இருப்பார்கள். ஆனால் சங்கரி என்கிற அந்தப் பெண் அவரிடமிருந்து பிரிந்து மூன்றாவதாக ஒரு பேராசிரியரைத் திருமணம் செய்து கொள்வார். கடைசியில் ஒருநாள் பேசிக்கொண்டே இருக்கும்போது தற்கொலை செய்துகொள்வார். ஏன், எதற்காக என்பதை அத்தனை ஆத்மார்த்தமாகவும், அற்புதமான சொல்தேர்வுகளிலும் எழுதியிருப்பார் சூடாமணி. சங்கரியைப் பற்றி அவளுடைய இரண்டு கணவர்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். இருவரிடம் இருந்தும் ஒரு சொல் கூட மரியாதை குறைவாக சங்கரியைப் பற்றி  வெளிப்படாது. அவர்கள் பார்வையில் நாம் சங்கரியைப் புரிந்து கொள்வோம். அவளுக்கு விடுதலை தேவைப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருப்பார்கள். “ஒவ்வொரு மனித உயிரும் நிஜத்தில் தனி தான் மூர்த்தி. எத்தனை தொடர்புகள் வந்தாலும் அதிலெல்லாம் தன்னை உருவாக்கிண்டு வளர்த்து முதிர்ச்சியடைந்து ஆனால் அவைகளிலேயிருந்து விலகி வந்து கடைசியில் தனிமையில் தான் தானாக மட்டும் இருப்பதில் யாரும் தன் உண்மையான மோட்சத்தைக் காண முடியும். அதை ரொம்ப பேர் உணர்ந்திருக்கறதில்லை. சங்கரி உணர்ந்துண்டாள்” என அவர்கள் புரிந்து கொண்டு பேசுகிற விஷயங்கள்…இந்தக் கதை சூடாமணியின் எழுத்துகளின் உச்சம் என்று சொல்லலாம்.

‘இரவுச் சுடர்’ என்கிற நாவல். அநேகமாக இது சூடாமணி எழுதிய படைப்புகளில் இறுதி என்று நினைக்கிறேன். இந்த நாவல் என்னை அதிகம் பாதிப்புக்காக்கியது. தமிழின் கிளாசிக் நாவல்கள் என்று ஒரு பட்டியலிட்டால் ‘இரவுச் சுடர்’ நிச்சயம் இடம் பெற வேண்டும். சூடாமணியின் மனம் ஒருவகையில் ‘விடுதலையைத்’ தேடியிருக்கிறதோ என்று தோன்றும். அவர் விடுதலை என்று நினைப்பது சுயத்தில் இருந்து, கட்டுகளில் இருந்து, உடலில் இருந்து என்று எல்லாவற்றில் இருந்தும் தான். ஒரு எழுத்தாளரின் படைப்பினைக் கொண்டு அவரின் ஆழ்மனதை அறிய முடியும், அறிய முடியாது  என இரு வேறு கருத்துகள் இருந்தாலும் எனக்கு சூடாமணியை அவர் எழுத்தின் வழியே மட்டும் தெரியும் என்பதால் நான் அவர் விடுதலையை அறிந்து கொண்டிருந்தார் என்றே உரிமையுடன் நினைத்துக் கொள்கிறேன்.

இரவுச் சுடரில் யாமினி என்கிற ஒரு கதாபாத்திரம் அரூபமாய் வரும். யாமினியைப் பற்றிய நினைவுகள் தான் நாவலின் கரு. அவளை நினைத்துக் கொண்டே இருப்பது யாமினியின் அப்பா ராமேசன். யாமினி தான் வாழும் காலத்தில் திருமணத்தை வெறுத்தவளாக இருந்திருப்பாள். அதிலும் ஒரு ஆணுடன் சேர்ந்திருப்பது பாவம் என்று தீர்க்கமாக நம்புவாள். அவளுக்குத் திருமணத்தை செய்து வைத்து அவளுக்கு குழந்தையும் பிறந்தபிறகு யாமினி மேலும் மனச்சிக்கலுக்கு உள்ளாகிறாள். அவளுடைய அப்பா ராமேசனே யாமினி தற்கொலைக்கு முயலும்போது அதை அனுமதிக்கிறார். அதன் பிறகே கதை தொடங்குகிறது. இருளைப் பார்க்கும்போதெல்லாம் ராமேசனுக்கு யாமினியின் நினைவு வருகிறது. அவளுடைய மனச்சிதைவுக்கும், இறப்புக்கும் தான் மட்டுமே காரணகர்த்தா என்று நினைக்கும் ஒரு தகப்பனின் அத்தனை கேள்விகளையும், மனநிலையையும் ஆராய்கிறது நாவல். யாமினியின் மகளான கீதாவும் யாமினியைப் போல ஆண்களை வெறுத்து ஒதுக்குவாளோ என்று நினைக்க, அவளோ தான ஒருவரைக் காதலிக்கிறேன் என்றதும் ஏற்படும் ஆசுவாசம்… மனதின் அத்தனை மூலைகளிலும் நின்று கொண்டு எண்ணங்களை அப்படியே எழுதிவிட்டார்போல சூடாமணி இதில் எழுதியிருப்பார்.

அவருடைய சிறுகதைகள் மின்னல்கள் என்றால், நாவல் மலையுச்சியின் மேல் சுடரும் தீபம்.

சூடாமணியின் அம்மா ஒரு சிற்பக் கலைஞர். சூடாமணி ஓவியரும் கூட. அவர் அதிகமும் வெளியுலகத்தின் தொடர்புகள் இல்லாமல் இருந்தவர். ஆனால் எப்படி மனித மனங்களை இப்படி எழுதினார் என்பது ஆச்சரியமே. சூடாமணி அவர்கள் மறைந்ததும் அவர் எழுதி வைத்த உயிலின்படி அவருடைய பனிரெண்டு கோடி மதிப்புள்ள சொத்துகளும் ஒரு ஆசிரமத்துக்கு தரப்பட்டது. அவர் மறைந்த அபிறகு தான் அவருடைய வீட்டில் இருந்த பிரசுரமாகாத கதைகளும் பிரசுரமாயின.

சூடாமணி அபூர்வமாகத் தந்த ஒரு நேர்காணலில் அவர் எழுத்து குறித்து இப்படி சொல்கிறார்  “நான் பார்த்து, கேட்டு அறிந்த விஷயங்களையும் மனிதர்களையும் எனக்குள் தோன்றும் ஒரு கதைப்பொறியில் அமைத்து எழுத முயல்கிறேன். மனித மனத்தின் சித்தரிப்பும் கலை நோக்கும் சரியாக வந்திருப்பதாய்த் தோன்றினால் மகிழ்வடைகிறேன்”

இவருடைய கதைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமையைப் பார்க்கலாம். எழுதும் ஒவ்வொரு கதையுமே மெல்லிய நூலிழான இழைகள். கவனமாய்ப் பின்ன வேண்டும். சற்று அழுத்தம் கொடுத்தால் அறுந்துவிடும். ஆனால் அறுந்து கொள்ளாமல் இழை பின்ன சூடாமணியால் முடியும். மனித மனதின் சித்தரிப்பு சரியாகவே சூடாமணிக்கு கைகூடியிருக்கிறது. அவர் அதற்காக மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும்.

(மல்லிகை மகள் இதழில் எழுத்து வாசம் தொடருக்காக எழுதியது)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments