Homeகட்டுரைகள்ஊரின் கொடை

ஊரின் கொடை

ஒரு ஊரின் அடையாளமாக சிலர் மாறுவார்கள். அந்தக் கொடுப்பினை எல்லாருக்கும் அமைவதில்லை. திருநெல்வேலி ஊரின் அடையாளமாய் தொ.ப என்கிற தொ. பரமசிவம் இருந்தார். இப்போது அவரது படைப்புகளின் வழி அவர் நிலைபெற்றிருக்கிறார். ‘எங்க ஊர்க்காரர்’ என மதுரைக்காரர்களும் அவரைச் சொல்லிக் கொள்வார்கள்.  இந்த நிலங்களை இவர் போல ஆய்வுக்கு உட்படுத்தியவர்கள் மிகக்குறைவு.

நான் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் அப்போது தான் சேர்ந்திருந்த நேரம். ஒருநாள் தொ.ப பல்கலைக்கழக அரங்கத்தில்  உரையாற்றுகிறார்  என்ற தகவல் கிடைத்ததும் என்னுடைய சீனியர்கள் பரபரப்பானார்கள்.அந்த நாளுக்காகக் காத்திருந்தனர். எங்களுடைய பேராசியர்கள், அன்றைய தினம் எல்லாருக்கும் அங்கு செல்ல அனுமதி தந்தார்கள். அவர் அப்போது அங்கு தமிழ்த்துறையின் தலைவராக இருந்தார். எனது சீனியரிடம் “நான் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நன்றாகப் பேசக்கூடியவரா? ஏன் நீங்கள் இத்தனை ஆர்வம் காட்டுகிறீர்கள்?” என்றதும் அவர்கள் சொன்னது “திருநெல்வேலியில் நீ வாழ்கிறாய் என்றால் அவர் குறித்து நீ அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் எழுத்தை வாசிக்காமல் உன்னால் ஊடகத்தில் பயணப்படக் கூடாது” என்றனர். எனக்கு ஆர்வம் அதிகமானது. அவரது உரையைக் கேட்க சென்றிருந்தேன்.

அதுவரை பேச்சாளர்கள் என்றால் எனக்கொரு பிம்பம் இருந்தது. இவரோ எளிமையாக எல்லோருடனும் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் பேசும் நேரம் வந்தது. ஒன்றரை மணி நேர உரை அது. ஒரு கோயிலும் அதனைச் சுற்றிய ஊர்களும் எப்படி உருவாகும் என்று பேசினார். அதற்கு முன்பு அப்படியொரு பேச்சை நான் கேட்டதில்லை. பேச்சு என்றால், குரலுயர்த்தி அழுத்தம் கொடுத்து நம்மைக் கைதட்ட வைக்க பேசப்படுபவற்றைத் தான் கேட்டிருந்தேன். இப்படி ஒருவர் பேச வேண்டுமானால் அதற்குப் பின்னணியாக எத்தனை பெரிய உழைபைத் தந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு தலைநகரங்களும் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை அவர் அன்று பேசினார். இன்று நாம் நகரம் என்று சொல்லப்படும் எல்லாமே குன்றுகள் சூழ்ந்தவை..இதற்கு எந்த நகரமும் விதிவிலக்கல்ல,, சென்னை உட்பட. குன்றுகளுக்கு இடையில் நீர்வளத்துக்கு அருகில் தான் ஒரு நகரம் அமையும், என அடிப்படைத் தகவலில் இருந்து தொடங்கி, அதன் மேல் தகவல்களை கட்டிக் கொண்டே போனார். இன்னும் அந்த உரை எனக்கு நினைவிருக்கிறது.

அதன் பின்னரே தேடித் தேடி தொ.பரமசிவன் அவர்களின் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். மூன்று முறை அவரை சந்தித்து நேரடியாக சில சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தன. ஒவ்வொரு முறையும் அவர் ஊர் குறித்தும் பண்பாடுகள் பற்றியும் பெரியது பிரமிப்பைத் தந்தன.

தொ.ப சிறுகதை எழுத்தாளர் அல்ல. அவர் கட்டுரையாளர். பண்பாடு , கலாசாரம் என்று நாம் சொல்லும் அத்தனைக்கும் பொருள் தெரிந்தவர். இவை சார்ந்தே தனனுடைய ஆய்வினை முன்வைத்தவர்.  

ஒரு கோயிலை வைத்து தல புராணம் , அதன் கலைத்தன்மை எழுதப்பட்டிருபப்தை வாசித்திருப்போம். இவர் கோயில்களை பண்பாட்டுச் சின்னமாகப் பார்த்தார். ஒரு ஆய்வு நூல் அதிகம் வாசிக்கப்பட்டது என்றால், அது தொ.ப வின் அழகர் கோயில் எனும் நூலாகத் தான் இருக்கும். அழகர் கோயில் புத்தகத்தில் அழகர் கோயிலின் வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். புராணங்களின் அடிப்படையில் அவர் அணுகவில்லை. அழகர் கோயிலின் தன்மை, அதன் வழிபாட்டு மரபு, திருவிழாக்கள், எத்தனை காலத்துக்கு முந்தையது அதன் நிலவியல் என்ன, ஏன் அழகர் மலையில் கோவில் கட்டப்பட்டது , கல்வெட்டு சொல்லும் செய்திகள் என பெரிய ஆய்வுகளை மேற்கொண்ட அவர் அதில் சுவாரஸ்யமான விஷயங்களையும் சொல்லியுள்ளார். அழகர் கோயில் கடவுளான கள்ளழகர் கையில் இருக்கும் ஒரு ஆயுதம் வளர் எனப்படும் பூமராங்கு. இந்த வளரியை சிவகங்கை, மதுரைப் பகுதிகளில் முன்னொரு காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால், ஒரு தெய்வம் மக்களிடம் இருந்து உருவாவதை அவர் இதில் தெளிவுபடுத்த்யுள்ளார். திருவிழாக்கள் வெறும் சடங்குகளால் ஆனது அல்ல, அப்படி ஆகியிருந்தால் அது பின்னாட்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்கிறார். திருவிழாக்களில் நடைபெறும் சில சடங்குகள் முன்னோர்களின் வாழ்வியலைக் குறிக்கக்கூடியவை. மனிதன் தன்னுடைய கடவுளைத் தன்னில் ஒருவராய்ப் பார்த்த்தான் விளைவே இப்படியான வாழ்வியல் சடங்குகளை திருவிழாவிற்குள் இணைந்தது என்கிறார்.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் தான் மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழாவையும், அழகர் கோயில் திருவிழாவையும் இணைத்தார் என்பதற்கான சான்றுகளையும் புத்தகத்தில் அவர் முனவைக்கிறார். இப்படி ஒரு கோயிலை முன்வைத்து வரலாறையும், மக்களையும், பண்பாட்டையும் இணைத்ததால், அழகர் கோயில் புத்தகம் இன்றளவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது மட்டுமல்லாது, அன்றாட வழக்கங்களின் தொடக்கத்தினை அவர் ஆராய்வது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது. நாம் அனுதினமும் குளிப்பதைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘நீராட்டும், ஆராட்டும்’ என்பது கட்டுரையின் தலைப்பு. குளிர்த்தல் என்று தான் சொல்ல வேண்டும் என்பார். இந்தக் கட்டுரையில் பழந்தமிழ் இலக்கியத்தில் குளிர்ப்பதற்கு எந்தெந்த பொருட்களை யார் யார் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து எழுதியிருப்பார். பூவந்தி, திரிபலை, கருங்காலி, நாவல் போன்ற பத்துத் துவர்ப்புப் பொருட்களை ஊறவைத்த நீரினை தோலின் வனப்புக்காக சேர்ப்பார்களாம். உடலின் நறுமணதுக்காக இலவங்கம், கச்சோளம், இலாமிச்சம், தான்றி, புன்னைத்தாது போன்ற முப்பத்திரெண்டு வகை மூலிகைகள ஊறிய நீரைச் சேர்த்துக் கொள்வார்களாம். ஆடையில் மஞ்சளைக் கலந்து தோய்த்துக் கொள்வதற்கு நமக்கு பெரும் பின்னணி உண்டு என்கிறார். போர்ர்க்களம் செல்லும் வீரர்கள் ஆடையில் மஞ்சளை பூசி அணிவார்களாம். அதற்கு அர்த்தம், சாவும் கூட பொருட்டே அல்ல என்பதைக் குறிக்கும் என்கிறார். அதனால் தான் அரக்கனை அழிக்கும் தாய்த் தெய்வத்தின் ‘சாமியாடி’ மஞ்சள் நீராடி மஞ்சள் உடை உடுத்துகிறார் என்கிறார். இப்படிச் சொல்பவர் அந்தக் கட்டுரையை இப்படி முடிக்கிறார். தமிழகத்தில் சமண மதம் வலுவிழந்து போனதற்கு காரணம், அதன் கடுமையான நெறிமுறைகள் மட்டுமல்ல, சமணர்கள் நீராடுவதில்லை என்பதும் தான் என்று முடிக்கிறார்.

அதே போல வெற்றிலை பற்றிய தகவலில் இப்படிச் சொல்கிறார். வெற்றிலை தாம்பூலம் என்பது மகிழ்ச்சியின் குறியீடு. ஒரு விழா, நிகழ்வு முடிந்த பின்னர் அது மகிழ்ச்சியாக நிறைவடைந்தது என்பதைச் சொல்ல தாம்பூலம் அளிக்கப்படுகிறது. அதனால் தான் இறந்தவர் வாயில் வெற்றிலையை வைத்து அனுப்புகிறார்கள். இந்த நபர் மகிழ்ச்சியாக வாழ்க்கையை முடித்துக் கொண்டு பயணப்படுகிறார் என்பது அர்த்தமாகிறது என்கிறார். இப்படி நாம் காரணம் தெரியாமல் சடங்கு என்ற பெயரில் செய்கிற பலவற்றுக்கும் தேடித் தேடி நமக்கு தகவலகளைக் கொடுப்பவராக இருக்கிறார் தொ.ப. இதற்கு அவருக்கு சங்க இலக்கியங்களும், பழந்தமிழ் நூல்களும், மக்களிடமிருந்து பெறப்படுகிற தகவல்களும், நாட்டார் பாடல்களும் உதவியிருக்கின்றன.

‘தெய்வம் என்பதோர்..’ என்கிற தொ.ப வின் தொகுப்பில் வள்ளி, பழையனூர் நீலி, சித்திரகுப்தன். உலகம்மன், வள்ளலார் இவர்கள் குறித்த இவரது பார்வை முக்கியமானது. ஆண் தெய்வங்கள் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி காரணமாக பழி வாங்குகையில் அவை தெய்வமாகப் போற்றப்படுகின்றன. மதுரை வீரன், கார்த்தவராயன் போன்றவர்களைச் சொல்லலாம். ஆனால், பெண் தெய்வங்கள் பழி தீர்த்தால் அவை பாடப்படுகிறதே தவிர வழிபடப்படுவதில்லை என்கிறார். இதற்கு பழையனூர் நீலி கதையை எடுத்து வைக்கிறார். பக்தி இலக்கியத்துக்கு முந்தைய காலத்தில் வணிகர்களே எல்லா இலக்கியங்களிலும் முன் நின்றனர். பக்தி இலக்கிய காலகட்டத்தில் வேளாண் சமூகத்துக்கு முக்கியத்துவம் ஏற்பட்டு, வேளாண் மக்கள் காப்பிய நாயகர்களாக மாறினார்கள் என்கிற பார்வையையும் சொல்கிறார். இதற்குச் சான்றாக நீலி கதையை சொல்கிறார். வணிகன் ஒருவன் நீலி என்கிற தன்னுடைய முதல் மனைவியைக் கொல்கிறான். திருவாலங்காட்டுக்கு அவன் செல்கையில், அந்த நீலி மனித உருக்கொண்டு குழந்தையோடு அவன் முன் நின்று “நீ தானே என்  கணவன்..என்னோடு வா” என்று அழைக்கிறது. வணிகன் அவளோடு போக மறுக்க, இது ஊராரின் முன் பஞ்சாயத்துக்கு வருகிறது. நீலி அழுகிறாள், பெருக்கெடுகிறது அவளது கண்ணீர். “இவன் தான் என்னுடைய கணவன் சேர்த்த்து வையுங்கள்” என்கிறாள். வழக்கை விசாரித்தவர்கள் வேளாளர்கள். அவர்கள் நீலியுடன் வணிகன் தங்க வேண்டும் என்றும் ஒருவேளை நீலியால் வணிகனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் வழக்கினை விசாரித்த எழுபது பேரும் தீக்குளிப்போம் என்றும் சொல்ல, அவர்கள் வார்த்தைக்காக வணிகன் நீலியுடன் தங்குகிறான். மறுநாள் வணிகனைக் கொன்றுவிட்டு நீலி மாயமாகிறாள். சொன்ன சொல் தவறாத வேளாளர்கள் எழுபது பேரும் குழியினை வெட்டி அதில் நெருப்பெறித்து இறங்குகின்றனர். அவர்கள் எரிந்த ஆகுதி பல நாட்களுக்கு அணையாமல் இருந்ததைப் பார்க்க மூவேந்தர்களும் அங்கு வந்து தனித்தனியாக அதைப் பதிவு செய்திருக்கின்றனர். இந்தக் கதையின் அடிப்படையே வணிகர்களுக்கும் வேளாளர்களுக்குமானது என்கிறார் தொ.ப.

தொ. பரமசிவன் அவர்களின் எழுத்துகளின் ஒவ்வொரு வரியும் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே எழுதப்பட்டிருக்கிறது. கல்வெட்டு, புராதனக் கோயில்கள் , தொல்பொருள் போன்றவற்றில் அவருக்கு ஈடுபாடு அதிகம். அவர் பாளையங்கோட்டை பற்றித் தெரிந்து வைத்திருந்ததில் ஒரு பகுதியைத் தான் தன்னுடைய ‘பாளையங்கோட்டை வரலாறு’ புத்தகத்தில் சொல்லியிருக்கிறாரோ என்று தோன்றுமளவுக்கு அந்த ஊரைப் பற்றி ஏராளமான செய்திகள் அவரிடத்தில் இருந்தன.

ஒரு தலைமுறையினரை பண்பாடு, சமயம்,தொல்பொருள் என ஆய்வு நோக்கி ஈர்த்ததில் தொ.பவின் பங்கு முக்கியமானது. அவருடைய மாணவர்கள் பலர் இந்தத் துறைகளில் இப்போதும் முன்னணியில் இருக்கிறார்கள். அவருடைய கருத்துகளுக்கு விமர்சனங்களும் வந்திருக்கின்றன.. அதற்கான பதில்களை சளைக்காமல் சொல்லியிருக்கிறார். அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கான பதிலாக இப்படிச் சொல்கிறார், “தாலாட்டுப் பாடல்களும், ஒப்பாரிகளும் பெண்கள் பங்களிப்பில் வெளிவந்த பேரிலயக்கியங்கள்” என்கிறார். இது போன்ற பார்வைகள் தான் அவரை தமிழ்த்துறை சான்றோர் என்பதில் இருந்து பண்பாட்டு வெளிக்குள் அவரை நிலைநிறுத்துகிறது.

தொ.ப  அவர் வாழும் காலத்தில் தேடித் தேடி தகவல்களைத் தந்தார். ஒருவகையில் அதுவும் கூட வேட்டை தான். சிங்கத்திற்கு எப்படி உணவு வேட்டை என்பது ஒரே நோக்கமாக இருக்குமோ அப்படித் தான் அவர் தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்காகச் சுற்றியலைந்தார். ஒவ்வொரு முறையும் அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போதும் நண்பர்கள் அவரைப் பற்றி சொல்லும்போதும் வியக்கும் விஷயமென்பது. எந்த  ஊர் பேரைச் சொன்னாலும் அந்த ஊரில் தெய்வத்தையும், மக்களையும், அங்கிருக்கும் வழக்கங்களையும்,  தொன்மையான இடங்களையும் அவரால் துல்லியமாகச் சொல்ல முடியும். அதை ஒரு தகவலாக இல்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்வார். 

தொ.ப நமக்கு எப்போதும் தேவைப்படுவார். நமது பண்பாடு, கலாச்சாரங்கள் அர்த்தமற்றவை என்று எவரேனும் சொல்லும்போது, அங்கு தொ.ப வந்து நிற்பார். மூட நம்பிக்கைக்கும், நம்பிக்கைக்கும் இடையிலான வித்தியாசத்தை அழுத்திக் காட்டியவர் அவர். அசராமல் அவர் உழைத்து வீண்போகவில்லை என்றும் தோன்றுகிறது. இப்போதுள்ள இளம் தலைமுறையினர் தொப.வின் புத்தகங்களை அதிகளவு வாசிக்கின்றனர். அதற்கு அவருடைய எழுத்தின் எளிமையும் ஒரு காரணம். ஒரு மனிதர் கடினமான ஆய்வுகளை சளைக்காமல் மேற்கொண்டு, அந்தக் கடினத்தை எளிமையாக்கி நமக்குத் தந்து போயிருக்கிறார். அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தமாகவும் அதை மாற்றியிருக்கிறார். இவர் பண்பாட்டின் பொக்கிஷம்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments