Homeகட்டுரைகள்மலையாளம் …மது..கொண்டாட்டம்?

மலையாளம் …மது..கொண்டாட்டம்?

Manjummal Boys குறித்த திரு. ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். கருத்து சொல்வது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதற்கு நாம் எப்போதும் எதிர்வினையாற்றக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். ஆனால் ஜெயமோகன் எழுதிய இந்தப் பதிவு குறித்து பேச வேண்டிய தேவையிருக்கிறது. அவர் எழுதியது சினிமா குறித்தல்ல, சினிமா ரசிகர்களைப் பற்றி.

இந்தப் படம் எனக்கு நல்ல படமாகத் தோன்றியது, அதே நேரம் பிரமாதமான ஒன்று என்று எனக்குப் படவில்லை. ஆனால், இது ஹிட் ஆகியிருக்கிறது. உணர்வுரீதியாகப் பலரை சென்றடைந்த படமாக இருக்கிறது. இந்த உணர்வு ஒட்டுமொத்த மக்களையும் ஈர்த்திருக்கிறது என்றால், அதற்கு நாம் மரியாதை கொடுத்தாக வேண்டும். ரசிகர்களை அத்தனை தூரம் மலினப்படுத்தக் கூடாது. மலையாளப் படங்களில் மது அருந்தும் கலாசாரங்களைத் திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள் என்றால், அப்படி அந்தச் சமூகம் தன்னுடைய கேளிக்கைகளில் ஒன்றாக மதுவினைக் கொண்டிருக்கிறது என்பதே அர்த்தம். அதனைக் காட்ட இயக்குநர்களுக்கு அத்தனை உரிமையும் உண்டு. அதே நேரம், மது அருந்திவிட்டு காடுகளில் பாட்டில்களை வீசுவதால் ஏற்படுகிற தீமைகளைச் சொல்லும் கடமையும், உரிமையும் எழுத்தாளர்களுக்கு உண்டு. அதை ஜெயமோகன் சிறப்புற செய்து வருகிறார். அவர் யானை டாக்டர் எழுதிய காரணத்தால், அதை வாசித்த பின்பே காடு குறித்து ஒருவர் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாக இருக்கும்?

இந்தப் படத்தினைப் பொறுத்தவரை படத்தைப் பார்த்தவர்கள் யாருக்கும் கதாபாத்திரங்கள் மது அருந்திய நினைவே இருக்காது. மது அருந்திதினால் தன்னிலை மறந்து பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் என்றும் இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். இது அவரவர் பார்வையைப் பொறுத்தது. எனக்கு இந்தப் படத்தில் பிடித்திருந்தக் காட்சிகளில் ஒன்று, போலிஸ் ஸ்டேஷன் போய்வரும் வழியில் டாஸ்மாக்கிற்குப் போய் பாட்டில் வாங்கச்சொல்லி போலிஸ் சொல்வதும் அந்தப் பையன்கள் கையறு நிலையில் நிற்பதும். இது போன்ற காட்சிகளின் வழியாகத் தான் ஒரு இயக்குநர் தான சொல்ல விரும்புவதைச் சொல்ல முடியும்.

மது அருந்துவதைப பற்றி கேரள சினிமா தொடர்ந்து படமெடுப்பதால் அந்தச் சமூகம் அதனைப் பின்பற்றுகிறது என்று ஒரு வாதம் வைத்துக் கொண்டால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் போதைப் பொருள் பரவலை வைத்து படமெடுப்பதைப் பார்த்து தமிழ் மக்கள் சமீபகாலங்களில் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என்கிற வாதத்தையும் முன்வைக்க முடியும். அது குறித்தும் திரு.ஜெயமோகன் விரிவாக எழுத வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், தமிழ் என வரும்போது அது வணிக ரீதியிலான படங்கள் என்கிற வாதத்துக்குள் அவருக்கு வந்துவிடுகிறது.

மலையாளப் படங்கள் எல்லாவற்றையும் கொண்டாடும் பைத்தியாகரத்தனம் இன்னும் தமிழர்களுக்கு வரவில்லை. வரவும் வராது. தமிழிலும், மராத்தியிலும், இந்தியிலும், வடகிழக்கிலும் ஒரு படம் நன்றாக இருந்தாலும் நாம் அது குறித்துப் பேசுகிறோம் என்பதும் முக்கியமானது. ஒருவேளை அவருடைய கவனத்துக்கு அது சென்றிருக்கவில்லை என புரிந்து கொள்கிறேன்.

ஒரு படம் தொடர்ந்து மக்களாம் பார்க்கப்படுகிறது என்பதற்குப் பின்புலத்தில் உள்ள உளவியல் சாதாரணமானதல்ல, அதை ஒற்றைத்தன்மை கொண்டு பார்க்கவியலாது. ஜெயிலர்,விக்ரம், லியோ இங்கு ஓடியபோதும அதற்குக் கிடைத்த கவனமும் என்னை அச்சம்கொள்ளச் செய்தன. கதாநாயகத்தனம் உள்ளப் படங்கள், அதனால் வெற்றி பெறுகிறது என்று தேற்றிக்கொள்ள முடிந்த்து. Manjummal Boys வெற்றிப்பெருகிறபோது ஆறுதலாக இருக்கிறது. மக்கள் எதற்காக படம் பார்க்கிறோம் என்கிற தெளிவில் இருக்கிறார்கள் என்கிற ஆறுதல் அது.

ஜெயமோகன் அவர்கள் முதல் வரியில் சமகாலப் படங்கள் குறித்துப் பேசுவதில்லை, தானும் அவற்றில் ஒரு பங்கு கொண்டிருப்பதால் என்கிறார். ஒட்டுமொத்தமாக அவரும் திரைத்துறையை வணித்திற்கு மட்டுமே இயங்குவதாக ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நல்ல படமெடுக்கணும்…என்று கதைக்காக முக்கியத்துவம் தந்து, அது ஓடாமல் போனாலும் தொடர்ந்து படமெடுக்கும் தைரியம் கொண்டவர்களும் இங்கு இருக்கிறார்கள்.

சொல்லப்போனால், இலக்கியம் இப்போது பல விதங்களில் சினிமாத்துறை போல மாறிகொண்டிருக்கிறது. அதனால் இலக்கியத்துக்குக் கொடுக்கும் விமர்சனத்தினை ஜெயமோகன் அவர்கள் சினிமாவுக்கும் பாரபட்சமில்லாமல் தரலாம்.

Manummal Boys படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியே. நான் மலினமான ரசிகை என்று சொன்னாலும் கூட.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments