எல்.ஆர் ஈஸ்வரி

2
19

எனக்கு எல் .ஆர் ஈஸ்வரியைப் பிடிக்கும். இரவு நேரங்களில் வேலை செய்யும் சூழல் ஏற்பட்டால் பழைய பாடல்களைக் கேட்டுக் கொண்டே வேலைப் பார்ப்பது எனக்குப் பழக்கமான ஒன்று. அப்படித் தான் ‘அவளுக்கென்ன அழகிய முகம்…” சர்வர் சுந்தரம் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எல். ஆர் ஈஸ்வரி பற்றி எந்த முகாந்திரமும் இல்லாமல் யோசிக்கத் தொடங்கினேன். அடுத்தடுத்து அவர் பாடிய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு குரல் தெய்வீக உணர்வையும், போதையையும் தருமென்றால் அது இவருக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. செல்லாத்தா ..தங்க மாரியத்தா பாடலின் அந்த அதிர்வும், பளிங்கினால் ஒரு மாளிகை பாடலின் குழைவும் எளிதில் எல்லோருக்கும் சாத்தியப்படாத ஒன்று.

சமீபத்தில் ஒரு விருது மேடையில் அவரைப் பாடச் சொன்னார்கள். அவரும் பாடினார். இப்போதும் அந்தக் குரலில் எந்த மாற்றமும் இல்லை. சிலருக்குத் தான் குரல் காலகட்டத்தோடு அப்படியே பொருந்தி நிலைகொள்ளும். ஈஸ்வரியின் அம்மா, அக்கா எல்லோருமே பாடகிகள். சேர்ந்து கோரஸ் பாடியிருக்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரமே அதுவாகத் தான் இருந்திருக்கிறது. பாவாடை சட்டை அணிந்து கொண்டு ‘அப்ப நான் நிறமாயிருக்க மாட்டேன்’ என்ற ஈஸ்வரி ரெட்டை சடையில் ஸ்டுடியோக்களில் கோரஸ் பாடியபோது அவர் பெயர் ராஜேஸ்வரி. பயந்த சிறுமி. ஆனால் என்றேனும் தனிப்பாடல் தனக்குக் கிடைக்கும் என்று நம்பியவர். ஒரு பாடலுக்கு கோரஸ் பாடும் வாய்ப்பு வருகிறது. அம்மா, அக்கா ஈஸ்வரி இன்னும் சில பாடகிகள் பாட, சவுண்ட் இஞ்சினியருக்கு எதோ நெருடுகிறது. மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டபோதும் அதே இடறல். அவர் அந்தக் காலத்தில் பிரபலமான சவுண்ட் இஞ்சினியர். அவர் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. எல்லோரையும் நிறுத்தச் சொல்கிறார். ஈஸ்வரியிடம் “நீ மட்டும் வெளில போ” என்கிறார். அத்தனைப் பேருக்கும் முன்னால் நிராகரிக்கப்பட்ட வேதனை, அம்மாவும் அக்காவும் பாட தான் மட்டும் வெளியில் காத்திருக்கக் வேண்டிய சூழல், தன்னை இத்தனை பெரிய மனிதர் வேண்டாம் என்று அனுப்பிவிட்டால், இது எல்லா இடத்திலும் பரவிவிடுமே என்கிற அச்சம்..நன்றாகத் தானே பாடினோம் எது சரியில்லாமல் போனது என்கிற குழப்பம் ..அழுதுகொண்டே ஸ்டுடியோ வாசலில் நின்று கொண்டே இருந்திருக்கிறார். இனி அவ்வளவு தான் என்று நினைத்து மிகுந்த மனத் துக்கத்தில் இருந்தபோது அவரது அம்மா அவரைத் தேற்றி  கோரஸ் பாட அடுத்தடுத்து அழைத்துப் போகிறார்.  

இயக்குநர் ஏ.பி நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் ஒரு படத்தில் பாட வாய்ப்பு வருகிறது. ஈஸ்வரி எதிர்பார்த்திருக் காத்திருந்தது போல தனிக்குரலில் பாட வேண்டிய பாடல். யார் பாடல் பதிவு செய்யப்போகிறார்கள் எனக் கேட்க, எந்த சவுண்ட் எஞ்சினியர் ஈஸ்வரியை வெளியேறச் சொன்னாரோ, அதே மனிதர் தான் எனத் தெரிய வருகிறது. ஈஸ்வரி அழுதேவிட்டார் ஏ.பி. நாகராஜனிடம் “அவர் என்னைப் பாடவிட மாட்டார்..அவர் என்னைத் துரத்திவிடுவார்” எனச் சொல்ல, “அப்படியா..அதையும் பார்ப்போம்..நான் இருக்கிறேன்” என்று சொல்லி அமர வைத்திருக்கிறார். பிறகு பாடல் பதிவின்போது பயந்துகொண்டே பாட, அதே சவுண்ட் எஞ்சினியர் ‘’அற்புதமான குரல்..நம்ம பொண்ணுப்பா இது” என்றிருக்கிறார். அந்தக் கணம் எல்.ஆர் ஈஸ்வரியின் வாழ்க்கையின் தேவ கணம். அதுவரை ராஜேஸ்வரி என்கிற பெயரில் கோரஸ் பாடிக்கொண்டிருந்தவருக்கு வேறு பெயர் சூட்டலாம் என இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் யோசித்து யோசித்து பிறகு லூர்து ராஜேஸ்வரியை சுருக்கி எல்.ஆர் ஈஸ்வரி என்று பெயர் வைத்துவிட்டார்கள். அதற்குப் பிறகு இந்தப் பெயர் மறுக்க முடியாத ஒரு இடத்தை இந்திய இசயில் பெற்றுக் கொண்டது.

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை பின்னணி பாடல் பாடுவதென்பது கிட்டத்தட்ட குரலால் நடிப்பது தான். கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை குரல் வழி பாடகர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். கதையின் ஒரு பகுதி அவர்கள். இப்போது எல்.ஆர் ஈஸ்வரியின் பாடல்களைக் கேட்டுப் பார்த்தால், அவர் அந்தக் கதாபாத்திரத்துக்கு எத்தனை தூரம் வலுசேர்த்திருக்கிறார் என்பது புரியும். அந்தப்பாடல் எந்தச் சூழலுக்குப் பாடப்படுகிறது, யாரால் யாருக்காக பாடப்படுகிறது என்பதெல்லாம் அவருக்கு எல்லாப் பாடல் பதிவின்போதும்  விளக்கியிருபபர்களா என்பது தெரியாது. ஆனால் , அதெல்லாம் தெரிந்தது போலவே பாடியிருப்பார்.  ஈஸ்வரி பாடிய பாடலை மேடைகளில், ரியாலிட்டி ஷோக்களில் பாடுவார்கள். நன்றாக இருக்கும். ஆனால் அந்தப் பாடலுக்கான ஒரு சேர்த்தி குறைந்திருக்கும். ஈஸ்வரி பாடும்போது குரலில் அவர் காட்டும் ஏற்ற இறக்கங்களும், குழைவும், சில வார்த்தைகளுக்குப் அலட்டிக் கொள்ளாமல் அவர் கொடுக்கும் அழுத்தமும் தான் ஈஸ்வரியை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருக்கிறது.

‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலில் கோபுர…..ம், இரவு நேரத்து மல்…லிகை , போன்ற இடங்களுக்கு அவர் தருகிற அந்த முக்கியத்துவம்..இது தான் எல்.ஆர் ஈஸ்வரி. எந்த வாரதைக்கு அழுத்த வேண்டும, எதை இழையோட வைக்க வேண்டும் என அவர் உணர்ந்ததைப் புரிந்து கொள்ளாமல் பாடப்படும் எதுவும் அவர் பாடுவதற்கு இணையாகாது.

க்ளப் டான்ஸ்கள், கதாநாயகனை மயக்குகிற பெண்கள் பாடும் பாடல்கள் போன்றவைக்கு அதிகமாக எல்.ஆர் ஈஸ்வரியை பாட வைத்திருக்கிறார்கள். ஆண் பாடகர்களோடு இணைந்து அவர் பாடிய பாடல்களில், ஒவ்வொரு முறையும் ஈஸ்வரியின் குரல் இன்னும் ஒரு படி அழகாய்த் தெரியும். டி.எம் எஸ் அற்புதமான பாடகர். சிறு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும், அவர் எல்.ஆர் ஈஸ்வரியுடன் பாடும்போது ஈஸ்வரி அசத்தியிருப்பார். பறக்கும் பாவையில் ‘முத்தமோ மோகமோ’ கேட்டுப் பார்த்தால் தெரியும். ‘அவளுக்கென்ன அழகிய முகம்..’ பாடலில் …இன்னும் கூடுதலாகத் தெரியும். இந்தப்பாடலில் ‘என்ன என்ன’ என்று வரும் இடங்களில்  ஒவ்வொரு முறையும் அவர் காட்டுகிற வேறுபாடுகள் அற்புதம்…!!

சிற்றிடை என்பது என டி எம்எஸ் பாட முன்னழகு என எல் ஆர் ஈஸ்வரி பாட

சிறுநடை என்பது பின்னழகு..

இதெல்லாம் எல்.ஆர் ஈஸ்வரி சொல்லி வைத்து குரலில் ஆடிய ஆட்டம்..

சீர்காழி கோவிந்தராஜனோடு ஈஸ்வரி பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இரண்டு பேருமே போட்டிப்போட்டு பாடியது போலவே இருப்பதால் ஏனோ காதல் பாடல்களில் அதிகம் எடுபடவில்லை. ஆனால் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்களில் பக்திப்பாடல்கள் அருமையாக இருக்கும்.

 ஒரு குரல் பாடும்போதே அழ வேண்டும், சிரிக்க வேண்டும், கத்த வேண்டும் என ‘எஃபக்ட்ஸ்’ தருவதை எம்.எஸ்வியின் பல பாடல்களில் பார்க்கலாம். இப்படியாகப் பாடும் பெண் குரலுக்கு எம்.எஸ் வி, எல்.ஆர் ஈஸ்வரியையே தேர்ந்தெடுத்திருந்தார். ‘வெண்ணிற ஆடை’ படப் பாடல் தநேம்எஸ்வி இசையில் எல்.ஆர் ஈஸ்வரி பாடிய முதல் பாடல்.  ‘நீ என்பதென்ன..நான் என்பதென்ன’ பாடல் ஒரு கிரிச்சிடும் குரலோடு தொடங்கும்..பிறகு நடுநடுவே வித்தை காட்டும்.முழுப்பாடலையும் பாடியவர் ஈஸ்வரி தான். எம எஸ் வி ஈஸ்வரிக்குத் தந்த முதல் பாடலிலேயே அவருடைய திறமயைக் கண்டுகொண்டது போல இருக்கும். ‘பட்டத்து ராணி’ பாடலைப் பற்றித் தனியாகச் சொல்ல தேவையேயில்லை. அது ஒரு அசுரமுயற்சி.

எல்.ஆர் ஈஸ்வறியைப் பற்றி எழுதுகையில் ஹம்மிங் பாடிய பாடலைப் பற்றி சொல்லாமல் விட முடியாது. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?”. “வீடுவரை உறவு”, பாடலின் ஹம்மிங் எனக்குப் பிடித்தவை.

ஈஸ்வரியின் குரலை கதாநாயகிகளுக்கு பயன்படுத்தியது மிகக்குறைவு. ஒஸ்தி படப்பாடல் வரைக்கும் இது தொடர்ந்தது. ஆனாலும் தனக்குத் தரப்பட்ட பாடல்களுக்கான நியாயத்தை செய்திருப்பார். எந்தப் பின்னணியும் இல்லாமல், யாருடைய சிபாரிசும் கிடைக்காமல், அடுத்த வேளை உணவு கூட கோராஸ் பாடினால் மட்டுமே கிடைக்கும் என்கிற சூழலில் இருந்தவர் முன்னேறி வந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, கிடைத்த அத்தனை வாய்ப்பினையும் அவர் தக்க வைக்க தனது குரலயே மீண்டும் மீண்டும் பணயம் வைத்திருக்கிறார். எந்தவிதமான வித்தையும் குரலில் காட்ட முடியும் என நிரூபித்த ஒரே பெண் பாடகி என்றும் அவரைச் சொல்ல முடியும். இவரைப் போலக் குரலை எந்த விதமான சாகசத்துக்கும் உட்படுத்திய பெண் பாடகிகள் இல்லை.

அதிகாலைகளில் அம்மன் கோயில்களில் இருந்து புறப்படும் இசையையும், இரவுகளில் மயக்கும் அந்தரங்கமான குரலையும் கொண்டிருக்கும் அவர் போல யாரும் இல்லை என்பது தான் சாதனையே. அந்தச் சாதனையை இனியும் யாரும் முறியடிக்க முடியாது என்பதே உண்மை. குரலை குயில் போல என்றெல்லாம் சொல்வார்கள்…ஈஸ்வரி…எதையும் செய்து காட்டும் வல்லமை கொண்ட யானையைப் போல பயிற்றுவித்திருக்கிறார் என்றே தோன்றும்..இசையின் எல்லா வரங்களையும் பெற யானை அது.  

2 COMMENTS

  1. Continuously,i read your articles,we can know about new things from your R&D,thanks for engaging us…osthe movie la LR eswari mam re entry koduthurupanga avlo energetic ah panirpanga

  2. நல்ல விமர்சனம். ஆம் பக்தி, காமரசம் இரண்டுக்கும் பொருந்தி போன குரல். காதோடு தான் நான் பாடுவேன் என்ற அந்தரங்கத்தை குழைந்து தரும் பாடல் ஒரு மாஸ்டர் பீஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here