பக்த இசை

ஆண் பாவம் படம் நினைவிருக்கிறதா? சில படங்கள் தான் ஒரு காலகட்டத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தும். 80களின் கிராமப்பகுதி எப்படி  இருந்தது, மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நமது பிள்ளைகளுக்குக் காட்ட வேண்டுமெனில் ஆண்பாவம் படத்தைக் காட்டலாம். இந்தக் கட்டுரை ஆண்பாவம் படத்தைப் பற்றியது அல்ல. அதில் வரும் ஒரு காட்சியில் இருந்து தொடங்க வேண்டியே ஆண் பாவம் படத்தில் இருந்து கட்டுரை தொடங்குகிறது. படம் தொடங்கும்போதே அந்த ஊருக்கு ஒரு டூரிங் டாக்கீஸ் திறக்கப்படும் வைபவத்தில் தான் ஆரம்பிக்கும். சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி.எம் சௌந்தராஜன் குரல்களில் கணீரென ஒலிக்கும் “திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்…”.

ஒரு டூரிங் டாக்கிஸ் திறக்கப்படும்போது இயல்பாகவே அன்றைய வழக்கப்படி பக்திப் பாடலை பின்னணியில் ஒலிக்க விடுவார்கள். இன்றும் அபூர்வமாய் சில இடங்களில் இதைப் பின்பற்றுகிறார்கள். படத்தில் இந்தக் காட்சியை இன்று பார்க்கையில் அது ஒரு ஆவணமாக தெரிகிறது. டூரிங் டாக்கிஸ்கள் அநேகமாக இல்லாமலாகிவிட்டன. நவீன தொழில்நுட்பத்துடன் திரையரங்குகள் மாறத் தொடங்கிவிட்டன. டிஎம்எஸ்ஸும், கே.பி சுந்தரம்பாளும், சீர்காழியாரும் இப்போது படம் பார்க்கும் பார்வையாளர்களை தங்கள் குரல்களால் அழைப்பதில்லை.

கோயில்களிலும், திருமணம் போன்ற விசேஷ வீடுகளிலும் பக்திப் பாடல்களை ஒலிக்கவிடுவது இயல்பானது. ஆனால் ஏன் திரையரங்குகளில் ஒலிக்க விட வேண்டும்? இதற்கு இரண்டு விதமான காரணங்களை சொல்லலாம். ஒன்று, மங்களகரமாக தொடக்கம் அமைய வேண்டும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். மற்றொன்று, திரைப்படங்கள் என்பது அனைவராலும் விரும்பப்பட்டது. அதே நேரம் அது தன்னை வசீகரிக்கிறது என்று சொல்வதில் தயக்கமும் இருந்தது. தயங்கும் எதன் மீதும் பக்தியைக் கலப்பது என்பது இந்த மனித இனம் உருவாகி வந்த காலந்தொட்டு உள்ளது தான். திரையரங்குகளில் பக்திப்பாடல்கள் ஒலிக்கும்போது படம் பார்க்க விருப்பம் கொள்கிறவர்களுக்கு இருந்த தயக்கம் விடுபடுகிறது.

தமிழ்சினிமாவில் மட்டும் பக்திப்பாடல்களை எடுத்துக் கொண்டால் பிரபலமான பாடல்களே எப்படியும் நூற்றுக்கணக்காக இருக்கும். அது தவிர தனி பக்தி பாடல்கள் வேறு அதிகம். ஐயப்பன் சீசனில் வருடந்தோறும் வெளியாகும் பாடல்கள் இன்றும் குறைந்தபாடில்லை. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். இசையில் கடவுளைத் தரிசிப்பது என்பது எல்லா மதங்களிலும் உண்டான ஒன்று.

ஒரு தீவிரமான கிறித்தவ குடும்பத்தை எனக்குத் தெரியும். தீவிரம் என்று நான் சொல்லும் பொருள், அவர்கள் வேறு எந்த மதத்தினர் செய்த உணவையும் ருசிக்க மாட்டார்கள். மற்றவர்களின் சடங்குகளில் கலந்து கொள்ள மாட்டார்கள்.  அவர்கள் வீட்டில் தொலைக்காட்சி உண்டு. ஆனால் ஒருநாளும் நான் அதில் கிறித்தவ பாதிரிமார்கள் நடத்தும் சேனல்கள் தவிர வேறொன்றையும் பார்ததில்லை. இத்தனை இறுக்கமாக தங்களை வைத்துக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி ஒவ்வொருமுறையும் அவர்களைப் பார்க்குந்தோறும் எழும். அவர்கள் அதிகபட்சமாய் முணுமுணுப்பது அதில் ஒளிபரப்பாகும் பாடல்களைத் தான். ஒருமுறை அவர்களிடம் வேறு சிலரும் அருமையான கிறித்தவ பாடல்களை பாடியிருக்கிறார்கள் என்று சொன்னதற்கு அவர்கள் அதைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு சிலர் பாடிய செவ்வியல் தன்மை கொண்ட கிறித்தவப் பாடல்களைத் தந்து கேட்கும்படி சொன்னதற்கு விருப்பம் இருந்தும் மறுத்து விட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “எங்க பாஸ்டருக்கு பிடிக்காது” என்பது.

இசை கேட்பதென்பதே விலக்கப்பட்ட ஒன்றாக மதங்களில் இருக்கிறது. அதே நேரம் இறைவனை அடைய இசை ஒரு கருவி என்று சொந்தமதங்களில் இருந்து தனியாக ஒரு இசையை மையப்படுத்தி மதத்தை நிறுவிய வரலாறும் உண்டு. சிறந்த உதாரணமாக சூஃபி இசையை சொல்ல முடியும்.

சூஃபி இசையின் சாயலைக் கொண்ட பாடல்களை ஏ. ஆர் ரகுமான் இசையில் காண முடியும்.

தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் சூஃபி இசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது என்னை வெகுவாக ஈர்த்திருந்தது. அதைக் கேட்க, கேட்க அதனுள் நம்மை இழுத்து சென்று விடும். ஒரு தியான நிலைக்கு நம்மை ஈட்டுச்செல்லும் மகிமை அதற்குண்டு. அதற்காகத் தான் இந்த வடிவ இசை கண்டுகொள்ளபப்டது என்றபோது அதன் கடமையை அது சிறப்பாகவே செய்யும். ஒருநாள் ‘ஊர்வசி..ஊர்வசி..டேக் இட் ஈஸி ஊர்வசி” கேட்கும்போதும் அதே மனநிலை வருவதை உணர்ந்தேன். அந்தப் பாடலின் அர்த்தம் வரிகள், குரல்கள் எல்லாம் மறந்து போய் அதன் உள்ளுக்குள் போய் உட்கார்ந்து கொள்ள முடியும் என்று தோன்றியது. இப்படி தனக்குள் எந்த விதை விழுகிறதோ அது தான் மரமாக வளரும் என்பது போல ரகுமானின் எண்ணற்ற பாடல்களில் இந்த சூஃபிய நிலையைக் காண முடியும்.

தொடக்கக் காலத்தில் இறைவனைத் துதி செய்யும் பாடல்கள் தமிழ்த் திரைப்படங்களில் ஏராளம் இருந்தன. புராணப்படங்கள் வந்த காலகட்டத்தில் சொல்லவே வேண்டாம். பிறகு இங்கு திராவிட கருத்துகள் வலுப்பெறத் தொடங்கியது. ஆச்சரியமாக அந்த தாக்கங்கள் பக்திப்படங்களில் இருந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. எளிமையான மொழியில் பாமரருக்கும் தமிழ் மொழி சென்றடைய வேண்டும் என்பது திராவிடக் கருத்தாக்கங்களில் ஒன்று. அதை திரைப்பட பக்திப் பாடல்கள் செய்தன. அதற்குக் காரணமாக கவிஞர் கண்ணதாசன் அவர்களை சொல்லலாம். திரைப்பட பக்திப் பாடல்களில் பெரும் வீச்சை நிகழ்த்தியவர் கண்ணதாசன். பக்தி இலக்கியத்தை அப்படியே எடுத்தாளாமல் அதன் தத்துவத்தை உள்வாங்கி வெகுஜனத்துக்கு எடுத்துப் போனவர் அவர்.

உதாரணத்துக்கு அவர் எழுதிய காரைக்கால் அம்மையார் படத்தின் பாடல்களை எடுத்துக் கொள்ளலாம்

காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி , இரட்டை மணிமாலை போன்ற நூல்களைப் பாடியவர். கவிஞரான அவரைப் பற்றிய படத்தில் அவரது பாடல்களையே இடம் பெறச் செய்திருக்க முடியும். ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை கண்ணதாசன் தான் எழுதினார்.  ஏனெனில் இந்தப் படம் காரைக்கால் அம்மையார் சிவனை எப்படிப் பார்த்தார் என்பதை காட்டிலும் காரைக்கால் அம்மையார் சிவனைப் போற்றியதை ஒரு படைப்பாளர் எப்படிப் பார்த்தார் என்கிற ரீதியில் அமைந்த படம்.

“பாடுகின்றேன் உன்னை பாடுகின்றேன்

என்னால் பாட முடிந்த வரை

பாடுகின்றேன் பரமன் திருப்புகழை”

என்று தொடங்கும் பாடல் ஒன்று.

காரைக்கால் அம்மையாரின் மொழி இதுவல்ல. அவரது மொழியை வெகுஜன மக்களிடம் அபப்டியே கொண்டு சேர்ப்பதில் ஒரு சினிமாவுக்கு சவால்கள் உண்டு. அதனால் காரைக்கால் அம்மையார் சமகாலத் தமிழில் பாடினால் என்ன மாதிரியான மொழியில் இறைவனுடன் பாடி உரையாடுவாரோ அதை கண்ணதாசன் உள்வாங்கி எழுதிய பாடல் இது. ;உன்னை பாடும் வரம் எனக்குத் தர வேண்டும்; என்று ஈசனிடம் இறைஞ்சி அவர் காலடியில் பேயுருவம் தாங்கி நின்ற ஒரு பக்தை காரைக்கால் அம்மையார். அப்படியெனில் அவரது மனம் எந்த காலகட்டமானாலும் இப்படித் தானே ஈசனிடம் உருகி வேண்டும் என்று கண்ணதாசன் நினைத்ததால் எழுந்த பாடல் இது.

இதே படத்தில் மற்றொரு பாடல் உண்டு. எனக்கு எப்போதுமே விருப்பமாண ஒரு பக்திப் பாடல்.

தகதகதக தகதகவென ஆடவா..

சிவ சக்தி சக்தி சக்தி என்று பாடவா

என்கிற பாடல் குறித்து ஒரு ஆய்வே செய்ய முடியும்.

காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு ஈசன் மீது திருப்பதிகம் பாடியிருக்கிறார். சொல்லப்போனால் பதிகத்தில் அடித்து ஆடியிருப்பார் அம்மையார். ஒரு சுடுகாட்டின் தன்மையை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். ஒரு சடலம் எரிகையிலும் முடிந்த பின்னும் ஒரு சுடுகாடு எப்படி காட்சித் தரும் என்பதை அவர் விளக்கிய விதம் அபாரம். அந்தத் திருப்பதிகத்தில் அவர் எடுத்தாண்டது உக்கிரமான மொழி நடை. பிறப்பையும் இறப்பையும் கேள்வியாக முன்வைக்கிறார். ஈசனிடம் உரிமையாக பதில் கேட்கிறார். இப்படி இத்தனை உரிமையாக கேள்வி கேட்டதால் தான் ஒரு தாய் மகனிடம் கொள்ளும் உரிமையை முன்னிறுத்தி ஈசனே “அவளே என் அம்மை” என்கிறார்.

இத்தனை உரிமை கொண்ட ஒரு பக்தை இறைவனை புகழ்ந்து பாடும் விதம் எப்படி இருக்கும் என்பதன் எடுத்துக்காட்டு தான் ‘தக தகவென ஆடவா’ பாடல்..குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் அமைந்த பாடல்கள்.

இந்தப் பாடலை கேட்டுவிட்டு அப்படியே திருவாலகாட்டு  திருப்பதிகத்தை வாசித்தால் இரண்டுக்குமான ஒரு லயம் புரியும்.

எளிமையும் காத்திரமும் மிக்க மொழியில் அவர் தந்த பாடல்களை அடுக்கியபடி போகலாம்.

கண்ணதாசன் பக்தி இலக்கியத்துக்கு செய்த மாபெரும் பணி என்பது இப்படியான பக்திப் பாடல்களைத் தருவதின் மூலம் பெரிய புராணம் , பாசுரம் என பக்தி இலக்கியத்தின் மீது மக்களின் கவனத்தை அதிகப்படுத்தியது என்று சொல்லலாம்.

ஆறு வயது வரை நான் வாசுதேவநல்லூர் என்கிற கிராமத்தில் வாசித்தேன். அந்தக் கிராமம் எனக்குத் தந்த நினைவுகள் பல. அவற்றில் முக்கியமானதாக கருதுவது பக்திப் பாடல்களின் மேல் எனக்கு ஏறபட்டுள்ள ஈர்ப்பை சொல்ல முடியும். சிறிய ஊர். ஒரே தெருவில் இரண்டு கோயில்கள். அது போக ஒரு பெரிய கோயில். தமிழகத்தில் இரண்டு இடங்களில் தான் அர்த்தநாரீஸ்வரரை மூலவராகக் கொண்ட கோயில்கள் உண்டு. அதில் ஒன்று வாசுதேவநல்லூர்.  இது போக மாரியம்மன் கோயில். சித்திரை மாதமென்றால் மாரியம்மன் கோயில் களைகட்டும். இந்த நான்கு கோயில்களும் திருவிழாக்களும் விசேஷங்களும் நடந்தபடி இருக்கும். அப்போது தொடர்ந்து கேட்ட பக்திப் பாடல்கள் இப்போதும் என்னோடு ஒன்று கலந்ததாகவே நினைக்கிறேன். திருவிளையாடல் படப்பாடல்களைக் கேட்குந்தோறும் மணலில் அமர்ந்து திருவிழாவைப் பார்த்த நினைவு வருகிறது.

திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கிற்கான ஊடகம். இதில் கடவுளரே கூட திரையில் தோன்றி நம் பொழுதைத் தான் போக்கினார்கள். இது தான் உண்மை. ஆனால் இதைக் கடந்து இந்தப் படங்களும் பாடல்களும் ஒன்றைச் செய்தன. அது மக்களின் மனதில் இருக்கும் உருக்கத்தை வெளிக்கொண்டு வந்தன. ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ என்று கேட்கும்போது நம் மனம் உருகவில்லை என்றால் எந்த இசை நம்மை உருக்கும்.

‘க்வாஜா மேரா க்வாஜா’ என்று சூஃபி நமக்குத் தரும் போதை அனுபவத்தில் மட்டுமே வைக்ககக்கூடியது.

பெர்க்மான்ஸ் அல்லது ஜிக்கியைக் கேட்குந்தோறும் கண்களை மூடினால் பாளையங்கோட்டையில் இருக்கும் ஏதாவது ஒரு தேவாலயத்தின் முன் ஞாயிறு அன்று காலையில் நிற்கும் உணர்வு எப்போதும் ஏற்பட்டுவிடுகிறது.

“இசை என்பது அதன் நோட்ஸ்களில் இல்லை..அதனிடையில் இருக்கிற மௌனத்தில் உள்ளது” என்கிறார் இசை மேதை மொசார்ட். இறைவனை தங்கள் உள்ளுணர்வில் தரிசித்தவர்களும் இதைத் தான் சொல்கிறார்கள். “இறை உணர்வதில் இல்லை..அதற்கும் அப்பால் இருக்கிறது” இசையும் இறையும் ஒரே தன்மையைக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே இரண்டும் ஒன்றிணைகிறது.

பாமரனுக்கும் எளியோனுக்கும் இறையை இசையோடு அனுபவிக்கத் தந்த இசைக் கலைஞர்கள், கவிஞர்களின் நினைவோடு இந்தக் கட்டுரையை முடிப்பதே பொருத்தமாக இருக்கும்.


(மல்லிகை மகளில் வெளிவந்த கட்டுரைத் தொடரின் ஒரு அத்தியாயம்)

Subscribe
Notify of
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

மிகவும் அருமை. இசையைப்போலவே இழையோடும் எழுத்துகள்.
காரைக்கால் அம்மையார் கண்ணில் நிற்கிறார் எழுத்துகளில். மணலில் அமர்ந்து பார்த்த தருணமெல்லாம் கண்முன்னே எழுத்துகளாக.
இன்னும் சிலர், பாடல் கேட்டால் அவருக்கு பிடிக்காது என்ற நிலையெல்லாம் மாற சில காலமே உள்ளது. அடுத்த தலைமுறையினர் வந்துவிட்டனர். கிராம மக்களிடையேயும் விழிப்புணர்வு மேலோங்கட்டும்.
மதமெனும் போர்வையில் தங்களை திணித்துக்கொள்வது மாறட்டும்.

இசையும் இறையுமான கலந்த கட்டுரையின் வரிகள், படிக்கவும் இழையோடி இசைக்கிறது.

அனுபவப் பூர்வான சுவாரஸ்ய பதிவு.