Homeகட்டுரைகள்கர்த்தாக்கள் – குசெப்பே டோர்னோடோரோ

கர்த்தாக்கள் – குசெப்பே டோர்னோடோரோ

குசெப்பே டோர்னோடோரோ (Guiseppe Tornatore) சிசிலிய இயக்குனர். இவர் இயக்கம் படங்களுக்கு திரைக்கதையும் இவரே எழுதுகிறார். படங்கள் ஒவ்வொன்றுமே தனி அனுபவத்தினைத் தரக்கூடியது. இவர் இயக்கியது ஒன்பது படங்கள் என்றாலும் பரவலான கவனத்தைப் பெற்ற படங்கள் என Cinema Paradiso மற்றும் Melenaவைச் சொல்ல முடியும்.

இவரது படங்களில் ஒரு பாணியைக் கண்டுகொள்ள முடியும். சிறுகதை நாவல் மற்றும் கட்டுரைகளில் இருந்து இவர் தனது படத்துக்கான கதையத் தேர்ந்தெடுப்பதில்லை. விதிவிலக்காக Melena படத்தினை சொல்லலாம். அதுவும் கூட அவருக்கு ஒரு உந்துதலைத் தான் ஒரு சிறுகதை மூலமாக தந்ததே தவிர அவர் தனது சிறுவயது அனுபவங்களையும் சேர்த்தே சொன்ன படம் இது. ஒரு ஐடியாவையே இவர் படமாக மாற்றுகிறார். இதனை அவர் தனது நேர்காணல்களிலும் சொல்லியிருக்கிறார்.

இந்தத் திரைப்படங்களின் மூல ஐடியாவை யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

ஒரு கப்பலில் பிறந்து அதிலேயே தன்னை மாய்த்துக் கொண்ட மாபெரும் இசைக்கலைஞன்…

ஒரு திரையரங்கம் இடிக்கப்படுவதினால் ஏற்படும் நினைவுகள்

பழம்பொருள் விற்பனையாளருக்கும், மனிதர்களைப் பார்க்க பிடிக்காத பெண் ஒருத்திக்கும் ஏற்படுகிற காதல்

இப்படி ஒவ்வொரு கதைக்குப் பின்பும் ஒரு ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டு கதையாக மாற்றி விடுகிறார். இதெல்லாம் சரிவராது அல்லது படமாக மாற்றுவது கஷ்டம் என்று நினைக்ககூடிய ஐடியாக்களையே படமாக மாற்றுகிறார்.

ஒரு நூலிழைக் கதையை பிரம்மாண்டமான காட்சிகளுடன் அடர்த்தியான திரைக்கதையாக மாற்றக்கூடிய திறன் கொண்டவர் இவர். அதே போல கதையின் முடிவும் அது சொல்கிற உணர்வும் என்னவாக இருக்கும் என்று துல்லியமாகத் திட்டமிட்டுக் கொள்கிறவர். அதனால் அதைக் கடந்து கதை அங்கும் இங்கும் திணறாமல் ஒரே கோட்டில் பயணம் செய்யும். உதாரணமாக Melena திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் மெலினாவின் அழகும் உடலும் தான் கதையின் பேசுபொருள். அதைக் கடைசியில் மரியாதைக்குரிய ஒன்றாக மாற்றுவதற்கு மீண்டும் மீண்டும் காட்சிகளை பயன்படுத்துகிறார்.

ஒரு திரையரங்கம் இடிந்து விழும்போது நம்முடைய மனமானது வெறுமைக்கு செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினால் மீண்டும் மீண்டும் திரையரங்கின் கொண்டாட்டக் காலத்தை மட்டும் விதவிதமாக பதிவு செய்வார்.

ஒரு மர்மமான பெண் மூலமாக திடுக்கிடும் திருப்பத்தை படத்தில் வைக்கிறார் என்றால் அந்த பெண்ணின் மீதான மர்மத்தைக் கூட்டிக் கொண்டே போவார்.

இப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அவர் எதைச் சொல்ல நினைக்கிறாரோ அதை நோக்கியே கதைக்களத்தை தீர்மானிக்கிறார்.

இவரது படங்கள் மிக மெதுவாக நகர்வதாகத் தோற்றம் தரும். ஆனால் நம்மை அங்குமிங்கும் யோசிக்கவும், செய்யவும் விடாது. காரணம் எதை மெதுவாக சொல்லிச் செல்ல வேண்டும், எதைச் சொன்னால் சுவாரஸ்யம் தரும் என்பதைத் தெரிந்து எழுதப்பட்டத் திரைக்கதைகள். இது தெரிந்து தான் பெரும்பாலான படங்களில் ‘பிளாஷ்பேக்’ யுத்தியைப் பயன்படுத்துகிறார். எதோ ஒன்று நடந்திருக்கிறது அது எப்படி நடந்தது அதன் முடிவு என்ன என்பதை முதல் சில காட்சிகளில் சொல்லிவிடுவதால் அதன் முடிவுக்காகக் காத்திருப்போம். இவர் ஆறஅமர கதையைச் சொல்வார். The Best Offerமாதிரியான படம் நேரடியாக எந்த ஃபிளாஸ்பேக் யுத்தியும் இல்லாமல் சொல்லப்பட்டக் கதை தான். ஆனால் ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது என்பதால் நமக்கு கதையின் அழுத்தமே போதுமானதாக இருக்கிறது.

இவருடைய கதைகள் எல்லாமே நம்புவதற்கு இயலாதவை. மனிதர்களையே பார்க்காத ஒருத்தி, கப்பலில் வாழும் ஒருவன், திரையரங்கு இடிக்கப்படுவதால் கனத்த வேதனைக்கு உள்ளாகும் ஒருவர் என்று முதலில் கதையாகக் கேட்கும் ஒருவரை நம்பச் செய்யும் எந்த அம்சமும் இருக்காது. ஆனால் இதனை நம்மை நம்பச் செய்யும் மாயவித்தைகளை யதார்த்தமாகக் கொண்டு வந்து சேர்த்து விடுவார். இதற்கு இவர் துணையாகக் கொள்வது அந்தக் காலகட்டத்த்தின் உடைகள், பிண்ணனி வரலாற்றுச் சம்பவங்கள், கதை நடக்கிற இடங்களில் உருவாக்குகிற நம்பகத்தன்மை, கனமான வசனங்கள்  போன்றவற்றை.

இவரது படங்களில் பொதுவான ஒன்றாக அவரது லொகேஷன் தேர்வினை சொல்ல வேண்டும். Melena படத்தில் சிசிலியின் அந்த பழமையான ஊர் திரும்பத் திரும்பக் காட்டப்படும். அந்த ஊரில் நம்மை இறக்கிவிட்டால் மெலினாவின் வீட்டினை யாருடைய உதவியும் இன்றி நம்மால் கண்டுபிடித்துவிட முடியும் என்கிற அளவுக்கு காட்டப்பட்ட தெருக்களும், ஊரும்.

The Best Offer படத்தில் வருகிற நாயகி கிளையரின் வீடு..இந்த வீடு ஒரு கனவுப் பிரதேசம் போன்றது. ஒரு வீட்டுக்குள் இத்தனை நிலவறைகளும், ரகசியங்களும், மூடப்பட்ட சுவர்களும் இருக்குமா என்கிற அளவுக்கு நம்மை வியப்பில் ஒவ்வொரு கணமும் ஆழ்த்தக்கூடிய வீடு அது. ஒருவகையில் அது க்ளையரின் மனம் தான். அந்த வீட்டின் ஒவ்வொரு ரகசிய இடங்களையும் ஒல்ட்மன் திறந்து போவது போல, கிளையரின் மனதையும் அறிந்து உள்செல்கிறார்.

பிறகு the legend of 1900 படத்தில் காட்டப்பட்ட கப்பல். இந்தப் படத்தின் புத்திசாலித்தனம் என்பது கப்பலைக் காட்டிய அளவுக்கு கடலை இந்தப் படம் காட்டவில்லை. கடல் மேல் நடக்கும் கதை என்றபோதிலும் கடல் தனியாக ஒரு ஃப்ரேமிலும் காட்டப்படாதது. இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவாக இருந்திருக்கும். கடலின் ஒருபகுதி தான் 1900 என்று குசெப்பே டோர்னோடோரோ என்று நிறுவ நினைத்திருக்கலாம். அதனால் கடலையும் அவனையும் தனியாகக் காட்டவேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.

அதோடு அவரின் பிரியத்திற்குரிய இசையமைப்பாளர் எனியோ மோரிகொனேவின்இசையும். காட்சியின் தன்மைப் பிரிக்க முடியாதபடி அமைகிற இசை இவரது படங்களின் மிக அற்புதமான அம்சம். இப்படி இவையெல்லாம் இல்லை என்றால் கதையே சொல்ல முடியாது என்பது போல ஒன்றாக இணைந்த அம்சங்கள் இவை.

அதே போல எல்லாப் படங்களிலும் கதையை எதை நோக்கி நகர்த்துவாரோ அதற்கான முடிவு படத்தின் பாதியிலேயே வந்தது போலத் தோன்றும். சினிமா திரையரங்கம் இடிக்கப்படுவது தான் கதை என்றால், படத்தின் பாதியில் அந்தத் திரையரங்கம் எரிந்து போயிருக்கும். வீட்டை விட்டு வெளியே வராத ஒரு பெண் பற்றிய கதை என்று நினைத்தால், அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவாள். கப்பலை விட்டு இறங்காத ஒருவனைப் பற்றிய கதை என்றால், அவன் ஒரு கட்டத்தில் கப்பலை விட்டுப் போக முடிவு செய்து கிளம்பியும் விடுவான். அதன் பின்னும் கதையை இன்னும் அடர்த்தியாகக் கொண்டு செல்வது தான் குசெப்பே டோர்னோடோரோவின் செம்மையான திரைக்கதை யுத்தி.

ஒவ்வொரு படத்தின் திரைக்கதை குறித்தும் சொல்ல ஏராளம் உண்டு.

Cinema Paradiso படம் ஒவ்வொரு முறை பார்க்கும்போது புதுப் புது செய்திகளை சொல்வதாக அமைந்திருக்கிறது. அந்தப் படம் பார்ப்பதென்பது எவருக்கும் ஒரு அனுபவமே. சிசிலியின் ஒரு கிராமத்தில் இருந்து ரோம் நோக்கி வந்த ஒரு திரைப்பட இயக்குநர் சல்வடோர் என்பவர் முப்பது வருடங்களுக்குப் பிறகு தனது ஊருக்கு செல்கிறார். அவரை ஊர் நோக்கி அழைத்துக் கொள்வது ஒரு மரண செய்தி. அல்பிரெடோ என்கிறவரின் மரண செய்தியைக் கேட்டதும்  சல்வடோர் அவருக்கும் தனக்குமான உறவினையும் அதை ஏற்படுத்திக் கொடுத்த அந்த ஊரின் திரையரங்கையும் நினைத்துப் பார்க்கிறார். அல்பிரெடோவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ஊர் நோக்கிப் போகிறார். அல்பிரெடோ சல்வடோருக்காகொரு பரிசு வைத்திருக்கிறார். அந்தப் பரிசை சல்வடோர் ரோமுக்குத் திரும்பி வந்தபின் பார்க்கிறார். அதோடு படம் முடிகிறது.

பார்க்கும் எவருக்கும் இந்தப் படம் ஏற்படுத்தி விடுகிற பாதிப்பு அசாதாரணமானது. பொதுவாக , ஒரு திரைப்படத்தின் உணர்வென்பது பார்வையாளர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியான  படம் நிச்சயம் வெற்றிகரமான படமாக அமையும் என்பது திரைப்பட விதி. Cinema Paradiso படம் திரையரங்கைக் குறித்தது.  ஊரில் ஒரே ஒரு திரையரங்கம் தான் உண்டு என்றால் அந்த ஊரில் கோயிலைக் காட்டிலும் அதற்கு மதிப்பு அதிகரித்துவிடும். அதுவும் டீவிக்கள் புழக்கத்தில் வராத காலகட்டத்துக்கு முன்பு.

இந்தப் படம் மூலம் குசெப்பே டோர்னோடோரோ சொல்ல நினைத்த எல்லாவற்றையும் காட்டிவிடுகிறார். காலம் உறைவதில்லை. ஆனால் நம் மனதுக்குள் காலம் சில நேரங்களில் உறைந்து நின்று விடுகிறது. அந்தக் காலத்தை மனதுக்குள் அசைக்கும் வேலையைத் தான் இந்தப் படம் செய்கிறது. “உங்கள் ஊரில் யாரோ அல்பிரெடோவாம்..அவர் இறந்துவிட்டாராம்..உங்களுடைய அம்மா தொலைபேசியில் சொன்னார்”  என்று சால்வடோரின் காதலி அவரிடம் சொல்கிறாள். அல்பிரெடாவுக்கு அன்றைய இரவு தூக்கம் போகிறது. சிறுவயது நினைவுகள் அவரைத் தொந்தரவு செய்கின்றன. சால்வடோர் இப்போது சிறு வயது டோடோவாக காட்டப்படுகிறார. அந்த டோடோ எத்தனை புத்திசாலித்தனமான சிறுவன் என்பதை அடுத்தடுத்த காட்சிகள் சொல்கின்றன. சினிமா பாரடைசோ திரையரங்கின் சொந்தக்காரர் உள்ளூர் பாதிரியார். எந்தப் புதுப் படம் வந்தாலும் அவர் தான் முதலில் தனியாக அமர்ந்து பார்ப்பார். படத்தில் முத்தக் காட்சிகளோ, நெருக்கமான காட்சிகளோ இருந்தால் உடனே  கையில் வைத்திருக்கும் மணியை அடிப்பார். உடனே அல்பிரெடோ அந்த நெகடிவ் ஃபிலிமை கட் செய்வதற்காக ஒரு காகிதத்தை வைத்து ரீலில் மார்க் செய்து கொள்வார். பின்னர் அந்தப் பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து வைத்து விடுவார்.

எது கதையின் தொடக்கமோ அதை முடித்து வைக்க வேண்டும் என்பது திரைக்கதையின் விதிகளில் ஒன்று. இதனை இப்படியும் புரிந்து கொள்ளலாம், எது கதையின் உணர்வாகத் தொடங்குகிறதோ அதற்கு நியாயம் செய்வதே திரைக்கதையின் விதிகளில் ஒன்றாகும். அப்படிப் பார்த்தால் கதையின் ஆரம்பமும் உணர்வும் இந்தக் காட்சியில் இருந்து தான் தொடங்குகிறது. ஏனெனில் வெட்டி ஓட்டப்பட்ட முத்தக் காட்சிகளைத் தான் அல்பிரெடோ சால்வடோருக்கு பரிசாக வைத்திருப்பார். இப்போது திரைப்பட இயக்குனராக வளர்ந்த டோடோ சால்வடோர் தனக்காக அல்பிரெடோ என்ன மாதிரியான ‘ரீலை’ பரிசாகத் தந்திருப்பார் என்கிற ஆர்வத்தில் அந்தக் காட்சிகளை ஓடவிட்டுப் பார்க்கும்போது அவையெல்லாம் வெட்டப்பட்ட முத்தக் காட்சிகள் என்று தெரிய வருகிறது. இது படத்தின் அற்புதமான இடங்களில் ஒன்று. தொடர்ந்து திரையில் வருகிற கிளர்ச்சியூட்டும் நெருக்கமான காட்சிகள், சால்வடோருக்கும் நமக்கும் நெகிழ்ச்சியை மட்டுமே தருகிறது.

இந்தப் படத்தை எங்கு வேண்டுமானாலும் முடித்திருக்கலாம். அல்பிரெடொவின் இறுதி சடங்கில் அல்லது சினிமா பாரடைசோ திரையரங்கு வெடி வைத்து இடிந்து விழும்போது அல்லது சால்வடரோ அவரது அம்மாவிடம் பேசும் காட்சி என எங்கு வேண்டுமானாலும் முடித்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனாலும் சால்வடோர் ஆல்பிரெடோ கொடுத்த அந்த பரிசை பார்க்கிறார் என்கிற இதை விட சிறப்பாக எந்த முடிவும் படத்திற்கு பொருந்தியிருக்காது.

முதல் ஒரு மணிநேரம் சிறுவன் டோடோவுக்கும் ஆல்பிரெடோவுக்கும் இடையிலான காட்சிகள் தான். டோடோவும் ஆல்பிரெடோவும் எப்படி சண்டையிட்டுக் கொள்கிறார்கள் பிறகு எப்படி நண்பர்கள் ஆகிறார்கள் டோடோவுக்கு ஆல்பிரெடோ எப்படி பிரஜக்டரை ஆபரேட் செய்வது எனக் கற்றுத் தருகிறார என்பதாக காட்சிகள் செல்கின்றன. ஒவ்வொன்றுமே சுவாரஸ்யமானவை. இத்தனை நிகழ்வுகளும் வெறும் சுவாரஸ்யத்துக்கு மட்டுமே பயன்படுவதில்லை.  ஒவ்வென்றும் கதையில் தொடர்புடையக் காட்சியாக இருக்கிறது. திரையரங்கு தீ விபத்துக்குள்ளாகிறபோது ஆல்பிரெடோவின் கண்கள் அந்த தீ விபத்தினால் பாதிப்படைந்து பார்வை தெரியாமல் போகின்றது. புதுத் திரையரங்கு கட்டப்பட்டவுடன் சிறுவன் டோடோ அதன் ஆபரேட்டர் ஆகிறான். இந்த இடத்துக்கு கதை நகர்வதற்குத் தான் முதலில் இருந்து கதை சொல்லப்படுகின்றன.

பிறகு சால்வடோருக்குள் ஒரு இயக்குநர் உருவாவதை அவன் தனது சிறிய கேமராவினால் படமெடுத்து ஆல்பிரெடோவுக்கு மட்டும் திரையிட்டு காட்டும் காட்சியிலும் பார்வை தெரியாத அவருக்கு தான் எடுத்த காட்சியை அவன் சொல்லும் விதத்திலும்  ஆல்பிரெடோ சால்வடோருக்குள் இருக்கும் ஒரு படைப்பாளியைப் புரிந்து கொள்கிறார். அவர் தான் அவனை ‘இங்கே இருக்காதே..இங்கே எல்லாமே மாறிவிடும்..பழைய நினைவுகளைத் திரும்பிப் பார்க்காதே..உனது பாதை விரிவடைந்து கொண்டே இருக்கட்டும்’ என்று ரோமுக்கு திரைப்பட இயக்குனராக வேலை செய் என்று அனுப்பி வைக்கிறார்.

படத்தின் தொடக்கத்தில் நமக்கு இது சால்வடோரின் நினைவுகளின் தொகுப்பு என்று காட்டப்படுகிறது. இடையில் எங்குமே வளர்ந்த சால்வடோர் பற்றிக் காட்டப்படுவதில்லை. ஆனால் சரியான ஒரு இடம் அமைந்திருக்கிறது.  சிறுவன் டோடோ தீ விபத்தின்போது தனியொருவனாக ஆல்பிரெடோ காப்பாற்றுவான். சுற்றிலும் தீ பற்றியோ எரிய, அந்த நேரம் அவன் ஆல்பிரெடோவைக் காப்பாற்றும் காட்சியில் ஓரிடத்தில் நிறுத்தி இப்போதுள்ள சால்வடோரை ஓரிரு வினாடிகள் மட்டும் காட்டுவார்கள். திரைக்கதையின் உச்சமான இடங்களுள் ஒன்று இது.

இப்படி இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அடுத்து வரும் காட்சியின் தொடர்பாகவே அமைந்திருக்கிறது. திரைப்படங்கள் எது மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்ந்து பல காட்சிகளில் வந்தாலும் சலிப்பு ஏற்படுத்தாமல் இருக்கிறது. அதே போல் சினிமா பாரடைசோ திரையரங்கத்தின் இரண்டு விதமான மாற்றங்களும் காட்டப்படுகின்றன. பாதிரியாரின் உரிமையில் திரையரங்கம் இருக்கிறபோது அது மிகக் கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. தீ விபத்துக்குப் பின் வேறொருவர் வசம் அந்தத் திரையரங்கம் சென்றபின் அது கேளிக்கைக்கான இடமாக மாறிவிடுகிறது. இந்தக் காட்சிகள் எல்லாமே திரும்பத் திரும்பக் காட்டப்படுவதால் தான் அந்தத் திரையரங்கம் பாழும் நிலையில் இருக்கும்போதும், அது இடிபடும்போதும் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. நாம் பார்த்த, இழந்த திரையரங்குகள் நமக்கு நினைவுக்கு வருகிறது. இப்போது வரை திரையரங்கம் குறித்த படமென்றால் இந்தப் படத்தை எல்லோரும் நினைவு கொள்ளும் காரணம் திரையரங்கை சுற்றியே அமைத்த காட்சிகள் தான். என்னென்ன சாத்தியங்கள் உண்டோ அத்தனையையும் சொல்லிப் போகிற திரையரங்கு காட்சிகள் எல்லாமே. 

அதே போல ஒரு காட்சியின் முடிவில் நாம் எதிர்பாராத ஏதாவது ஒன்றைக் காட்டியே காட்சி முடிவு பெறுகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அறிமுகப்படுத்தும் காட்சி, சால்வடோர் ஊரை விட்டுக் கிளம்பும்போது ரயில் நிலையத்துக்கு  ஓடிவரும் பாதிரியார் , முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் சால்வடோருக்காக அவன் அம்மா காட்டுகிற அவனது அறை ..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் இந்தப் படத்தின் சுவாரஸ்யத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது. நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்கிறது.

நினைவுகள் மீட்கப்பட வேண்டியதாக இருப்பின் அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதன் சிறந்த உதாரணம் இந்தத் திரைப்படம். எந்த சிக்கலுமில்லாமல் திரைக்கதையை எழுதியிருக்கிறார் குசெப்பே டோர்னோடோரோ.

Malena இவர் எழுதி இயக்கியதில் பலராலும் நினைவுக்கூரப்படுவது. பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படமும் கூட. அப்பட்டமாய் எதையும் சொல்லும்போது ஏற்படுகிற அதிர்ச்சி அது. பதின்வயது சிறுவன் ரெனேடோ பார்வையில் சொல்லப்பட்ட படம். இத்தாலியில் இரண்டாம் உலப்போர் நடக்கும் சமயம் ஒரு ஜூன் மாதம் ரெனேடோரவுக்கு புது சைக்கிள் கிடைக்கிறது. அன்றைய தினம் இத்தாலி இரண்டாம் உலகப்போரில் இணைகிறது. அதே நாளில் தான் ரெனேடோ மெலினாவை முதன்முறையாக சந்திக்கிறான். அந்த நாள் தொடங்கி அவன் மெலினா மீது பெரும் ஆசை கொள்கிறான். மெலினாவின் கணவன் போர் வீரனாகச் சென்றிருப்பதால் தனியாக வாழ்கிறாள் மெலினா. மிக அழகியும் வசீகரமும் கொண்ட அவளை அந்த ஊரின் ஆண்கள் அத்தனை பேரும் அவளது உடலுக்காக விரும்புகின்றனர்.

ரெனேடோவோ மெலினா தனக்கு மட்டுமே உரியவள் என்று நினைக்கிறான். மெலினாவின் கணவன் போரில் இறந்து போனதாகத் தகவல் வருகிறது. இனி அவளுடைய ஒரே பாதுகாவலன் தான் என்று நினைக்கிறான் ரெனேடோ. ஆனால் அவனுக்கு அவளை எப்படி பாதுகாப்பது என்று தெரியவில்லை. மெலினா மீது மற்ற ஆண்களைப் போல அவனுக்கும் உடல் சார்ந்த ஈர்ப்பே இருக்கிறது. மெலினாவின் அப்பாவும் இறந்துபோய்விட பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள் மெலினா. ஊரில் ஆண்கள் அனைவருக்கும் இப்போது அவள் சுலபமாக அணுகக்கூடியவளாக இருக்கிறாள். அந்த ஊரின் பெண்களுக்குத்  தொடக்கத்தில் இருந்தே அவளது அழகும், ஆண்கள் அவள்பக்கம் ஈர்க்கப்ப்படுவதும் பிடிக்காமல் போகிறது. சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தார் போல அமெரிக்கப் படை அவர்கள் ஊருக்குள் நுழையும்போது ஒரு கலகத்தில் பெண்கள் மெலினாவை அடித்து உடையைக் கிழித்து முடியையும் கத்தரித்து அவமானப்படுத்துகிரார்கள்.

மெலினா அந்த ஊரை விட்டுச் செல்கிறாள். போரில் இறந்ததாய் நினைத்த அவளது கணவன் இப்போது ஊர் திரும்புகிறான். அவனிடம் மெலினா பற்றி யாரும் சொல்லாமல் மறைக்கிறார்கள். ரெனேடோ மெலினாவின் கணவனுக்கு மெலினா ஏறிச்சென்ற ரயிலை வைத்து அவள் எங்கு சென்றிருக்கிறாள் என்பதை தனது அடையாளத்தை மறைத்து செய்தி அனுப்புகிறான். சில நாட்கள் கழித்து மெலினா தனது கணவனுடன் அதே ஊருக்கு வருகிறாள். இப்போது அவளை அவமானம் செய்த பெண்களே  அவளிடம் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், மரியாதை செய்கிறார்கள். எப்போதும் போல அமைதியான முகத்துடன் அதை ஏற்றுக்கொள்கிறாள் மெலினா. ரெனேடோ முதன்முதலாக மெலினாவிடம் பேசுகிறான், “நீங்கள் நன்றாக வாழ வேண்டும்” என்கிறான். அவள் அதற்கும் தன்னுடைய புதிரான ஆழ்ந்த புன்னகையை வெளிப்படுத்துகிறாள். ரெனேடோ அவளிடமிருந்து விலகுகிறான் என்பதன் அறிகுறியாக அவள் சென்ற திசைக்கு நேர்மாறாக ரெனேடோ செல்கிறான்.

மேற்சொன்ன இதே நிகழ்வுகளின் அடிப்படையில் தான் திரைக்கதை அமைந்திருக்கிறது. குழப்பமற்ற ஒரு திரைக்கதை. இந்தப் படம் ஒரு சிறுகதையில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. குசெப்பே டோர்னோடோரோ பொதுவாக கதை கட்டுரைகளில் இருந்து திரைக்கதைகளை அமைத்துக் கொள்வதில்லை. இந்தக் கதையை வாசித்தபின்பும் கூட அவர் இதனை திரைப்படமாக எடுக்க முடியும் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால் அவரது சிறு வயதின் நினைவுகளில் அவர் தள்ளி நின்று ரசித்த பெண்களைப் பற்றிய நினைவும் இருக்க, பலருக்கும் இந்த அனுபவம் வாய்த்திருக்கும் என்றே படத்தின் கதையை எழுதத் தொடங்கினார். இது மெலினா பற்றிய கதை தான் என்றாலும் ஒரு காட்சி கூட மெலினாவின் பார்வையில் சொல்லப்பட்டதல்ல. முழுமையாக ரெனேடோ பார்வையில் சொல்லப்பட்ட கதை. மெலினாவை ரெனேடோ புரிந்து கொண்ட கதை. மற்ற எல்லா ஆண்களையும் போலவே ரெனேடோவும் மெலினாவை உடல் வேட்கையோடு நினைத்துக் கொள்கிறான். ஆனால் மற்றவர்கள் அவளுடைய உடலை மட்டும் ரசிக்க, ரெனேடோவுக்குள் மெலினா மீது சிறிய நேசம் உருவாகிவிடுகிறது.. அவனுக்கு மெலினாவாலே தான் தனது உடல் குறித்த ரகசியங்கள் விடுபடத் தொடங்குகிறது. அவனுடைய அப்பா அவன் மேல் கோபம் கொண்டாலும் அவனுக்கு தீராத உடல் இச்சை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறார். அவர் ரெனேடோவை பாலியல் விடுதிக்கு அழைத்துச் செல்கிறார் தான் ‘ஆண்’ ஆகிவிட்டோம் என்கிற எண்ணமே ரெனேடோவுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அவன் மெலினாவைப் பார்க்கும் பார்வையும் சற்று மாறுகிறது. மெலினா நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த இடம் தான் மற்ற ஆண்களுக்கும் ரெனேடோவுக்கும் உள்ள வித்தியாசமாகிறது. இந்தக் கதை ஒரு சிறுவனுக்குள் ஏற்படுகிற உடல் சார்ந்த ஈர்ப்பினை மட்டும் கூறுவது அல்ல. ரெனேடோ பார்வையில் சொல்லப்பட்டாலும் கூட இந்தக் கதை ஒரு சமூகம் தான் அடைய முடியாத ஒரு பெண்ணை எப்படியெல்லாம் அடைய நினைக்கும் எனபதும் அப்படி முடியாத பட்சத்தில் அவளை நோகடிக்க எதுவும் செய்யும் என்பதும் தான்  குசெப்பே டோர்னோடோரோ சொன்னது.

இது உளவியலைப் பேசுகிற படம். இந்தத் திரைக்கதையின் ஒரு அம்சம் நிச்சயம் குறிப்பிடப்படவேண்டியது. ரெனேடோ பார்வையில் மெலினாவை நாம் புரிந்து கொள்வதில்லை, ஆனால் அவன் பார்வையில் தான் அவள் காட்டப்படுகிறாள். நாம் மெலினாவை முதல் காட்சியில் இருந்தே புரிந்து கொள்கிறோம். ஆனால் ரெனேடோ மிகத் தாமதமாகத் தெரிந்து கொள்கிறான். இது புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதை. ஒரு ஊரே ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறது என்கிற கதையில் ரெனேடோ இருக்கிறான். மெலினா இருக்கிறாள். இது ஒரு ஊரின் கதை. அந்த ஊர் என்பது இந்தப் படத்தினைப் பார்க்கும் நாமும் தான். முதல் காட்சியில் “அன்று தான் அவளை முதன்முதலாகப் பார்த்தேன்” என்கிறது ஒரு குரல். அது ரெனேடோவின் குரல் என்பது தெரிகிறது. அதன் பின்னர் அந்தக் குரல் படத்தின் முடிவில் மட்டுமே நமக்குக் கேட்கிறது. “அதன்பிறகு எத்தனையோ பெண்கள் என் வாழ்க்கையில் வந்து போனார்கள். அவர்கள் எல்லோரும் என் நினைவில் இல்லை..ஆனால் மெலினாவை மட்டும் என்னால் மறக்கமுடியவில்லை” என்கிறது குரல். இப்போது தான் புரிகிறது. வளர்ந்த ரெனேடோ தனது கடந்தகால வாழ்க்கையை சொல்லியிருக்கிறான் என்பது.

ஊரில் உள்ள ஆண்கள் எல்லாரும் மெலினாவை ஒரே மாதிரி வேட்டை மிருகத்தின் பார்வையில் பார்க்கிறார்கள் என்பதில் மிகைத்தன்மை இருந்தாலும் கூட அப்படிக் காட்டப்பட வேண்டிய அவசியம் படத்தில் இருக்கிறது.

இது போன்ற ஒரு படத்தில் ஒரே மாதிரியான காட்சிகள் அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதனால் திரைகதையின் ஓட்டத்தை மூன்றாக குசெப்பே டோர்னோடோரோ பிரித்துக் கொண்டிருக்கிறார். ஒன்று ரெனேடோ பார்வையில் மெலினா, மற்றொன்று மெலினா ரெனேடோவுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள். மூன்றாவது ஊராரின் பார்வையில் மெலினா.  இந்த மூன்றும் படத்தின் இறுதியில் ஒன்ரையொன்று சமன் செய்கின்றன. நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட கதை. திடுக்கிடுதல், திருப்பங்கள் இன்றி ஒரு வாழ்க்கையை பதிவு செய்கிற படம்.

மெலினா இன்றளவும் எல்லோர் மனதிலும் தங்கியிருக்கும் காரணம் அது நம்மை கேள்வி கேட்கிற படம். ரெனேடோ மெலினாவை அப்பட்டமாக ஒவ்வொரு முறையும் ரசிக்கிறான். அவள் ஆடைக்குள் ஊடுருவிய பார்வை தான் அவனுடையதும். அது சலிப்பூட்டும் அளவுக்கு காட்சிகளாகக் காட்டப்பட்டாலும், அது கதைக்குத் தேவையாக இருக்கிறது. இப்படித் தான் மெலினாவை ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனபதை சொல்வதற்காகவே அந்தக் காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன. அப்படிப் பார்க்கும் உரிமை எவரொருவருக்கும் கிடையாது என்பதை சொல்வதற்கும் அந்தக் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. புனிதர்கள் என தங்களைக் கருதிக் கொண்டு இறைவனின் முன் மண்டியிடுபவர்கள் தங்கள் மனதின் முன் எப்படியான ‘நிர்வாண’ நிலையை அடைகின்றனர் என்பதும் இந்தப் படம் சொல்வது. அதற்கு உதாரணமான காட்சி தான் மெலினாவை கன்னி மேரி உருவத்தில் எல்லோரும் பார்ப்பது. எல்லோரையும் பற்றி அறிந்ததாலேயே மெலினா மீண்டும் அந்த ஊருக்குள் வரமுடிகிறது. எல்லோரும் பற்றி முன்பே தெரிந்ததாலேயே அவளால் எப்போதுமாகத் தன்னை ஒரே மாதிரி வெளிக்காட்ட முடிந்திருக்கிறது.

இவர் எழுதி இயக்கிய மற்றொரு திரைப்படம் The Legend of 1900. இந்தப் படம் இசையை மையப்படுத்தியது. இரண்டாயிரம் பேர் வரை பயணம் செய்யும் மாபெரும் கப்பல் ஒன்றில் ஒரு குழந்தை பிறக்கிறது. அங்கேயே வளர்கிறது. அந்தக் குழந்தை இளைஞராகும்போது அதன் இசைத்திறமையும் கூடவே வளருகிறது. அந்தக் குழந்தையின் பெயர் தான் 1900. இந்த 1900 முப்பது வருடங்களாக அந்தக் கப்பலை விட்டு இறங்கியதேயில்லை. கடலின் மேல் கப்பலுக்குள் அவன் வாழ்வு கழிகிறது. இப்படியான ஒருவனுக்கு அற்புதமான இசைப் புலமையும் இருக்கிறது. அவனுக்கு கான் என்கிற நண்பன் கிடைக்கிறான். கான் அந்தக் கப்பலின் இசைக்குழுவில் கிளாரினெட் வாசிப்பவன். 1900 தனது மனதினை கானிடம் மட்டுமே வெளிப்படுத்துகிறான். கான் வறுமை காரணமாக தனது கிளாரிநெட்டை இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததும் வறுமை காரநாமாக ஒரு இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடையில் விர்கப்போகிறான். அங்கே தான் விர்ஜினியா கப்பலை உடைக்கப்போகிரார்கள் என்கிற தகவல் தெரிகிறது. 1900 ஒருநாளும் அந்தக் கப்பலை விட்டு இறங்கியிருக்க மாட்டான் என்று துறைமுகம் நோக்கி ஓடுகிறான். அவன் போகும்போது அந்தக் கப்பலை டைனமைட் வைத்துத் தகர்க்கும் வேளையில் பணியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களிடம் தனது நண்பன் உள்ளே கப்பலில் இருக்கிறான் என்று சொல்ல, ஆவர்கள் தாங்கள் கப்பல் முழுவதையும் பல நாட்களாக ஒவ்வொரு அடியாக சோதனை செய்திருக்கிறோம் அப்படி யாரும் இருக்க வாய்ப்பேயில்லை என்கிறார்கள். கான் தனது நண்பன் 1900உள்ளே தான் இருப்பன் என உறுதியாக் அனம்புகிறான். தேடித்[போகிறான். நீண்ட முயற்சிக்குப் பிறகு கான் 1900ஐ கப்பலுக்குள் சந்தித்துவிடுகிறான். தன்னுடைய உலகம் கடலும் கப்பலுமே என்று சொல்லி கானை அனுப்பிவிடுகிறான் 1900. கப்பல் வெடிவைத்து தகர்க்கபப்டுகிறது. தெரிந்தே தன நண்பனை பலி கொடுத்த வருத்ததோடும், 1900ன் முடிவு இப்படித் தான் இருக்க முடியும் என்றும் ஒரு மனநிலைக்கு வருகிறான் கான்.

இது போன்ற படத்தில் காட்சிகள் அமைப்பது சுவாரஸ்யம் தருவது. பிராம்மண்ட கப்பல், கதைக்கு பலம் சேர்க்கும் இசை, கப்பலில் மட்டுமே வாழும் ஒருவர் என்கிற இந்த அசாத்தியமான கதைக்குள் என்னென்ன வித்தைகளை செய்யமுடியுமோ அத்தனையையும் குசெப்பே டோர்னோடோரோ காட்டிவிடுகிறார். இந்தப் படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றுமே பிராமாண்டமானவை. ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிற்குள் கப்பல் நுழைகிற அந்தக் காட்சி, அது தான் படத்தின் முதல் காட்சியும் கூட. இந்தக் காட்சியை எந்தெந்த இடத்தில் வைத்தால் சரியாக இருக்குமோ அங்கு மட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.

 ‘பிறக்கவும் இல்லை..இறக்கவும் இல்லை’ என்கிற தத்துவத்தின் காட்சி இந்தப் படம். 1900 தான் பிறக்கவுமில்ல அதனால் இறக்கவுமில்லை என நம்புகிறான். உண்மையும் அது தான். உலகத்தின் பார்வையில் எந்த ஆவணங்களிலும் அவன் பெயர் இல்லை. அப்படி இல்லாதவன் இந்த பூமியில் பிறக்காதவன் தானே..

மூன்று மணிநேர படம் இது. ஒரு காட்சி கூட தேவையில்லாதது என்று சொல்லிவிட முடியாது. 1900 என்கிற ஒரு இசைக்கலைஞன் இத்தனை அற்புதமான திறமை கொண்டும் இப்படி வாழ்நாளை கப்பலில் வீணடிக்கிறானே என்று பார்க்கும் நமக்கும் தோன்றும். இறுதியில் தன் நண்பன் கானுடன் நிலத்துக்கு வந்துவிட மாட்டானா என்று எதிர்பார்ப்போம்..அந்தளவுக்கு 1900 நம்மை ஈர்த்திருப்பார். ஆனால் கான் தன் நண்பன் 1900ஐ சந்தித்து இறுதியில் பேசுகையில் 1900 வாழ்க்கை அந்தக் கப்பலிலேயே முடியட்டும் என்று கனத்த மனதோடு நாமும் அவனுக்கு விடைதருவோம். இது தான இந்தக் கதையின் வெற்றி.

இந்தக் கதையில் பல்வேறு அடுக்குகள் உண்டு. மேலோட்டமாக பார்க்கும்போது 1900 பற்றி சொல்லப்பட்ட கதை என்றாலும் கான் கதாபாத்திரத்தில் தான் படத்தின் தொடக்கமும் முடிவும் அமைந்திருக்கிறது. கான் ஒரு கிளாரிநெட் கலைஞன் மட்டுமல்ல, நல்ல கதைசொல்லியும் கூட. “என்னிடம் இருக்கும் கிளாரிநெட்டை வறுமை காரணமகா விற்றுவிட்டேன். ஆனால் எனது சொத்தாக இருப்பது 1900 பற்றிய கதை தான். அதை என்னிடம் இருந்து யாராலும் பறிக்கவே முடியாது” என்பான் கான். இந்தக் கதை தான் கடைசியில் கானுக்கு அவனுடைய கிள்ளரிநெட்டைத் திருப்பித் தரும். இசைக் கருவிகளின் விற்பனையாளர் 1900 பற்றிய கதையை கான் மூலம் கேட்டுவிட்டு அதனால் மனம் நெகிழ்ந்துபோய் அவனுடைய கிளாரிநெட்டை அவனுக்கே திருப்பித் தந்துவிடுவார்.

1900 மாதிரியான ஒரு நபர் கப்பலுக்குள்ளேயே இன்னும் வாழ்கின்றான் என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அதனை எல்லாரும் நம்பவேண்டும் இல்லையா..அதற்குத் தான் கான் கதாபாத்திரத்தை அற்புதமான கதைசொல்லியாக அமைக்கபப்ட்டிருக்கிறது. கான் பேசும் எந்தவொன்றுமே ஆர்வம் தரக்கூடியதாக மாறிவிடுகிறது. இப்படி ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்த உடனேயே கதையின் பெரும் பகுதி பிரச்சனை முடிவடைந்து விடுகிறது. கதைக்கு நம்பகத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது.

கதை கானின் பார்வையில் ஃப்ளாஷ்கட்களாக சொல்லப்படுகின்றன. ஆனால் அதில் கான் அறியாத சில ரகசியங்களும் 1900க்கு இருக்கின்றன. அப்படியானால் எப்படி 1900ன் கதையினை கானால் சொல்லியிருக்க முடியும் என்று கேள்வி எழும். அதற்காகத் தான் திரைக்கதையில் ஒரு நுணுக்கத்தை வைத்திருக்கிறார் குசெப்பே டோர்னோடோரோ. படம் தொடங்கும்போது ஒரு கப்பல் காட்டப்படுகிறது. அதில் தான டைட்டில் கார்ட் வருகிறது. அந்தக் கப்பல் அமெரிக்காவினை அடைகிறது. பயணிகள் எல்லாரும் இறங்கியபின், கப்பலில் ஒரு பிறந்த குழந்தை தனியாக இருப்பதை ஒரு கப்பல் தொழிலாளி பார்த்துவிடுகிறார். அவர் தான் அவனை வளர்க்கிறார். இப்படித் தொடங்கும் ஒரு காட்சி ஓரிடத்தில் நின்று, கானிடம் தொடங்குகிறது. இப்போது கான் தனக்குத் தெரிந்தவற்றை சொல்கிறேன் என்று கதையை சொல்கிறான். ஆக, கதை முழுக்கவும் கானின் பார்வையில் சொல்லப்படவில்லை, கதைக்குள் ஒரு கதைசொல்லியாக கான் வருகிறார் என்பது தெளிவாகிறது.

The Legend of 1900படத்தினைப் பொறுத்தவரை இது இசை பற்றிய படம் அல்ல என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்திருக்கிறார். இசை என்பது கதையின் விலக்கமுடியாத அம்சம். திரைக்கதையின் மையம் என்பது வாழ்தல் என்பது யாது என்கிற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது. ஒரு தெருவில், ஒரு குடும்பத்தோடு ஒரு வீட்டில் ஒரு வேலையில் வாழ்கிற வாழ்க்கை எப்படி நிறைவானதாக முழுமையாக இருக்கும்? என்பது 1900ன் கேள்வி.

ஒரு மீன் கதை ஒன்று உண்டு. ஒரு மீன் குஞ்சு தன தாயிடம், “கடல் என்றால் என்ன?” என்று கேட்கும். தாய் சொல்வாள், “இதோ இது தான் கடல்..நீ அங்கு தான் வாழ்கிறாய். “இது தண்ணீர் அம்மா..நான் கேட்டது..கடல் என்பது என்ன?”: அம்மா சொல்வாள். “நீ கரையில் இருந்தால் மட்டுமே கடலை உணர முடியும்” என்று. அந்த மீனுக்கு கடைசி வரை சந்தேகம் தீராது. ஆனால் இந்த மீன் கேட்ட கேள்வியின் பதிலை 1900உணர்ந்திருந்தான். அவனுக்கு தானும் கடலும் வேறு வேறு அல்ல..கடலின் வாழும் உயிரினம் அங்கேயே மாய்வது போல கடலுடன் கலக்கிறான்.

எந்தவொரு வாழ்க்கைத் தத்துவத்தையும் படமாக மற்ற முடியும் என்பதற்கு 1900 ஒரு உதாரணம்.

குசெப்பே டோர்னோடோரோ தனது திரைக்கதை குறித்தும், கதைகள் பற்றியும் தந்த நேர்காணல்களின் தொகுப்பு இது.

உங்களுடைய கதைகள் எங்கிருந்து உருவாகின்றன?

ஒரே நேரத்தில் பல கதைகளுக்கு வேலை செய்வது எனது பழக்கம்.  சின்ன சின்ன ஐடியாக்களை எனது பாக்கெட்களிலும் கம்ப்யூட்டர்களிலும்  எழுதி வைத்திருப்பேன்.  நாளாக  ஆக அவற்றில் சில  அப்படியே மறைந்து போகும்.  சில முழுக்கதைகளாக  மாறும்.  பிறகு திரைப்படமாகவும் மாற்றம் பெறும்.  கடந்த இருபது வருடங்களாக அக்ரோஃபோபியா (பொது இடங்கள், மனிதர்கள் குறித்த அச்சஉணர்வு கொண்டவர்) மனநிலை கொண்ட ஒருவரின் கதையை யோசித்துக் கொண்டிருந்தேன். 22வருடங்கள் கழித்து எனக்கு மற்றொரு ஐடியா கிடைத்தது.  இது ஏலம் விடுபவர் ஒருவரைப் பற்றியது.  எனக்கு இது போன்ற தொழில் செய்பவர்ளை  பிடிக்கும்.  ஒரு பொருளின் மதிப்பை அளக்கத்தெரிந்தவர்கள் என்பது எனக்கு பிடித்திருந்தது.  இந்த கதாபாத்திரத்தின் தன்மை எனக்கு மிகப் பிடித்திருந்தது.  ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து வித்தியாசமான கதையை கண்டுபிடிக்க முடியவில்லை.   பிறகு ஒரு நாள் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்தேன்.

இது காதலிக்கத்  தெரியாத மனிதன் படிப்படியாக  எப்படி காதலிக்கிறான் என்பதாக மாற்றம் பெற்றது.  இவன் பொருட்களை மதிப்பிடுபவனாக இருப்பதால் அவனால் எது அசல் எது போலி  என்பதை  கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் தனது வாழ்க்கையில்  அவனால்  அதனை கண்டுபிடிக்க இயலவில்லை. அவனால் ஒரு பெண்ணின் கண்ணை நேரடியாக பார்த்து பேச முடியவில்லை. இதனை அவன் ஓவியங்கள் மூலமாக  மட்டுமே செய்ய முடிகிறது. இது தான் The Best Offer திரைப்படமானது.,

 உங்களது  பயணத்தை திருப்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

ஒரு படம் முடிந்தவுடன் அடுத்த படத்தை  பற்றி யோசிப்பதற்கு  எனக்கு பிடிக்கும்.  ஒரு சிசிலிய படத்தை முடித்தவுடன்  இந்த உலகத்தின் மற்றொரு  முனையில்  போய் படமெடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.   ஒவ்வொரு படத்திலும் எனக்கு தெரியாத ஒன்றையே  எடுக்க நினைக்கிறேன்.  அப்போதுதான்   புதிதாக ஒன்றில் பணிபுரிவது போல தோன்றும். அதோடு முதல் படத்திற்கு வேலை செய்வது போல தோன்றும்.  அச்ச உணர்வுதான்  படைப்பூக்கத்தை தருமே தவிர பாதுகாப்பு உணர்வு அல்ல என்பது எனது நம்பிக்கை. வேலையிலும்  அதித  பாதுகாப்பு உணர்வு என்பது எப்போதுமே நல்லதல்ல.

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக்கொள்வோம். வெற்றிக்கான  சரியான ஃபார்முலா இருக்கிறது என்றால்  எதைச் சொல்வீர்கள்என்னவெல்லாம் தேவைப்படும்?

வெற்றிக்கான சரியான ஃபார்முலா  இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால்  எல்லாருமே வெற்றிகரமான  படங்களை தந்து விட முடியும்.  ஆனால் சில அடிப்படைகள் உள்ளன. நாம் மக்களுக்காக  படம் எடுக்கிறோம் என்றால் கதைத்தேர்வில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும்.  அந்தக் கதையை நகர்த்தக் கூடிய  உணர்வுகள் தீவிரமாக இருக்க வேண்டும்.   முதலில் நாம் சொல்கிற கதை  நம்மை முதலில் அசைத்துப் பார்க்க வேண்டும்.  இது மக்களுக்குப் பிடித்த கதையை  எடுக்க ஒரு குறுக்கு வழி.  ஆனால் இது தன்னிச்சையாக நடந்து விடாது.

பார்வையாளர்களை வேறு ஒரு  உலகத்தில் வாழ வைக்கிற தன்மை சினிமாவுக்கு உண்டுஉங்களுடைய படத்தில் நீங்கள் தனித்துவமான ஒரு உலகத்தை  காட்டுகிறீர்கள். அது எப்படி சாத்தியமாகிறது?  

நான் எல்லாவற்றையும் கவனிப்பேன். என்னை எல்லாமுமே ஈர்த்துவிடும். யாரெனும் ஒருவர் என்னை ஈர்க்கிறபடி சாலையில் நடந்தாலோ அல்லது தபால் நிலையத்தின் வரிசையில் நிற்கும்போது  காதில் விழுகிற நகைச்சுவையோ  என்னை ஈர்க்கும்.  இப்படி எதையும் கிரகித்து கொள்வேன். சில நேரங்களில்  செய்தி துணுக்கு மட்டுமல்ல, தூக்கத்தில் வருகிற கனவுகள் கூட  என்னை  ஈர்த்துவிடும். புத்தகங்களில் இருந்து  அரிதாகவே கவரப்படுகிறேன்.  எவற்றிலிருந்து வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.  இதில் முக்கியமானது என்னவென்றால் ஒரு  ஐடியா தோன்றியதும் அது உங்களைப் பாடாய்படுத்தவேண்டும்.  உங்கள் எண்ணத்தை சுற்றி சுற்றி வர வேண்டும்.  அந்த எண்ணம் இல்லாமல் வாழவே முடியாதோ  என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.   அதுதான் திரைப்படமாக மாறும்.   மற்றபடி உங்களை ஈர்க்கும் எல்லாவற்றிலும் இருந்து திரைப்படத்தை உருவாக்கிவிட முடியாது.

  Cinema Paradiso  எப்படி பிறந்தது?

ஒரு நேர்காணலில் சொல்ல முடியாத அளவுக்கு பெரிய கதை அது.  ஆனால் எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன்.  1977 ஆம் ஆண்டு ஒரு இலையுதிர்காலத்தில்  இந்த படத்திற்கான  முதல் ஐடியா தோன்றியது.  அப்போது  என்னுடைய கிராமத்தில் நான் தியேட்டர் புரோஜக்டர் ஆப்பரேட்டராக இருந்தேன்.  அந்த நேரம் எங்கள் கிராமத்தில் மற்றொரு திரையரங்கினை மூடினார்கள்.  அந்த திரையரங்கம் 1930களில் திறக்கப்பட்டது.  அந்த திரையரங்கு கட்டடத்தை விற்க வேண்டும் என அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.  அதற்காக அவர் எல்லா ஃபர்னிச்சர்களையும் அப்புறப்படுத்த நினைத்தார்.  அங்கிருந்து எதை வேண்டுமானாலும் நான் எடுத்துக்கொள்ளலாம்  என்றார் அவர்.  அங்கிருந்து  பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக  நான் உதவி செய்தேன்.  நான்கு நாட்கள்  அங்கேயே இருந்தேன்.  ஒரே அழுக்கும் தூசியுமாக இருந்தது. மொத்த  சூழலும் துன்பமயமானதாக அமைந்திருந்தது.  இந்தச் சூழலை அப்படியே ஒரு கதைக்குள் கொண்டு வர நினைத்தேன்.  அடுத்த பத்து ஆண்டுகள் தோன்றியதையெல்லாம் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்.  பல புரொஜக்டர் ஆபரேட்டர்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை  கேட்டுக்கொண்டிருந்தேன்.  அதன் பிறகே என்னுடைய கதையை எழுதினேன்.  எனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிவிட்டுத்தான் இந்த  ஸ்கிரிப்டை படமாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  ஐந்தாவது அல்லது ஆறாவது படமாக இதனை இயக்க வேண்டும்.  ஆனால்   முதல் படம் முடிந்தவுடனேயே என்னுடைய தயாரிப்பாளர்  உனக்கென்று கனவு புராஜக்ட் எதுவும் இல்லையா? என்று கேட்டார்.  அப்போது  அவரிடம் Cinema Paradiso  கதையை  முழுமையாகச் சொன்னேன்.  அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.  இரண்டாவது படமாக இதையே  தயாரிக்கிறேன் என்றார் அவர்.  எங்கு சென்றாலும் Cinema Paradiso பற்றித்தான் என்னிடம் அதிகமும் கேட்பார்கள். இந்த படத்திற்காக எழுதும்போது  நான் பெயரையும் புகழையும் நினைத்து எழுதவில்லை.  இது வெறும்  இலாப நஷ்டக் கணக்குகளால் ஆன படம்  அல்ல. எனது முழுமையான அன்பை பெற்றுக்கொண்ட படம். இது படம் பார்த்த எல்லோரையும் குட்டிப்பையன் டோட்டோவாக மாற்றிய படம்.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments