Homeகட்டுரைகள்ஜதியின் நாயனம்

ஜதியின் நாயனம்

பிரிக்க முடியாதது என்னவோ?’ என்றால் தமிழ் சினிமாவும், காதலும் என்று சொல்லலாம். திரைப்படத் துறையில் சில வருடங்களுக்கு முன்பு கால்பதித் ஒரு இளைஞர் யாரிடமும் உதவி இயக்குனராய்ச் சேராமல் திரைப்படம் இயக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். இதற்காக பல தயாரிப்பளர்களை அவர் சந்தித்தபோதும் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கதை கேட்ட தயாரிப்பாளர்கள் எவருமே அவருக்கு முன் அனுபவம் இல்லாதைதைப் பற்றிக் கூடக் கவலைப்படவில்லை. ஆனால் அவரின் கதையை நிராகரித்ததற்கான காரணமாகச் சொன்னது, ‘கதையில காதல் கட்சிகளே இல்லியே..’ என்பதைத் தான். தமிழ் சினிமாவில் புரட்சி செய்துவிட வேண்டும் என்று நினைத்திருந்த அந்த இளைஞருக்கு தமிழ் சினிமாவின் பழைய , புதிய படங்களில் சிலவற்றின் பெயர்களைச் சொல்லி, ‘அப்படியொரு கதை இருந்தா வாங்கஎன்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். எல்லாமே வித விதமாய் காதலை வெளிப்படுத்திய திரைப்படங்கள். இப்போது அவர் அந்தப் படங்களின் டீவிடிக்களை வாங்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உபரி செய்தி.

தயாரிப்பாளர்கள் பட்டியலிட்ட படங்களில் ஒரு திரைப்படத்தை விட்டுவிட்டார்கள். ஆனால் அந்தத் திரைப்படத்தைத்தான் பல்வேறு விதங்களில் உருவி தமிழ் சினிமா திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று வரை அந்தப் படத்தின் ஒரு காட்சியையோ. பாடலையோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் நமது மனம் அடுத்த சேனலுக்குத் தாவாதவாறு கட்டிப் போட்டிருக்கிறது அந்தப் பெருமைமிகு படமானதில்லானா மோகானாம்பாள்’. நாற்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை புதிய படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒளிபரப்பும் தனியார் சேனல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பும்போதெல்லாம் டிஆர்பி எகிறுகிறது.  அன்றைய தினங்களில் அந்தச் சேனலுக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துவருகிறது  தில்லானா மோகனாம்பாள்’.

கலைமணி என்கிற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் தொடர்கதையாக எழுதி ஆனந்தவிகடனில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள்அதே பெயரில் இயக்குனர் ஏ.பி நாகராஜன் அவர்களால் திரைப்படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களுக்கு எழுதப்பட்ட ஒரு பெரும் நாவல் மூன்று மணி நேர படமாக சுருக்கப்பட்ட விதம் கவனிக்கப்படவேண்டியது. .பி. நாகராஜன் தனது படத்திற்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். மோகனாவுக்கும், சிக்கல் சண்முக சுந்தரத்திற்கும் ஏற்படுகிற காதல், அதற்கு ஏற்படுகிற தடைகள், போட்டி, முரண்பாடுகள் அதன் பின் சுபமாக இருவரும் இணைவது என ஒரு காதல் படத்திற்குள் நாதஸ்வரத்தையும், நாட்டியத்தையும் அழகாகச் சேர்த்திருக்கிறார் ஏ.பி. நாகராஜன்.

முதன்முதலில் சண்முகத்தைப் பார்ப்பதற்கு முன்பே அவரைக் கேட்டுவிடுவார் மோகனா. அழகர் கோயில் திருவிழாவில் நகுமோமுகீர்த்தனையை சண்முகம் வாசித்துக் கொண்டிருக்கும்போது மாட்டுவண்டியில் வந்து இறங்குகிற மோகனா தன்னையும் மறந்து அப்படியே நின்று விடுவாள். சண்முகமும் கூட முதன் முதலில் மோகனாவைப் பார்க்கிறபோது தன்னை மறந்து அவளுடைய அழகில் லயித்துப் போவார். ஆனாலும் இருவருக்கும் முதல் சந்திப்பு என்பது மோதலிலேயே முடிந்திருக்கும்.

சண்முகம் தன்னுடைய நாட்டியத்தைப் பார்க்காமல் போகிறாரேஎன்கிற வருத்தத்தில் இருக்கும் மோகனாவிற்கு மறைந்து நின்று சண்முகம் தன்னுடைய நாட்டியத்தை ரசிக்கிறார் என்பது பேரானந்தத்தைத் தருகிறது. கூடவே கடைசியில என் வழிக்கு வந்துட்டீங்களா!’ என்கிற சிறிய எள்ளலும் அவளுக்குள் ஏற்படுகிறது. தமிழ் சினிமாவில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்னபாடலைச் சொல்லலாம். ஐந்து நிமிடங்கள் வரும் நாட்டியத்தில், திறமை, பக்தி, வெட்கம், ஆளுமை, கிண்டல், பணிவு, சமர்ப்பணம் என எல்லாவற்றையும் சரியாகக் கலந்து கொடுத்த இந்தப் பாடல் இன்றும் நிலைத்திருக்கிறது. பாடிக்கொண்டிருக்கும்போதே சண்முகாஎன சின்ன குறிஞ்சிரிப்போடு மோகனா  பாடி ஆட, ‘என் பேரையே சொல்றியா?’ என்கிற மாதிரியான சண்முகத்தின் பாவனையும், ‘என்னை ஆளும் சண்முகாஎன்று அடுத்து சரணடையும் முத்திரைக் காட்டுகிறபோது அதை ஆமோதிப்பது போல சண்முகம் சிரிப்பதும் நம்மை மறந்து பார்க்க வைக்கிற காட்சிகள்.

இவை எல்லாற்றிற்கும் மேல் என் பொண்ணு பாடற நயன பாஷை எனக்குத் தெரியாதா?” என்று பத்மினியின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவு சொல்வார் பாருங்கள், அப்போது தெரியும் இவர்களின் காதலுக்கு வில்லி யாரென்று?

இந்தியத் திரைப்படங்களின் சிறந்த காதல் காட்சிகளைத் தொகுக்கும்போது இந்தப் படத்தில் வருகிற ரயில் காட்சியை சேர்க்காமல் விட முடியாது. ஒருபக்கம் பாலையா தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருக்க, பத்மினியும், சிவாஜியும் கண்களாலேயே பேசிக்கொள்ளும் காட்சிகிளாசிக்’. அதற்கு முன்பு தான் பத்மினி சிவாஜியிடம், “மதுரை கோயில்ல நாதஸ்வரம் வாசிக்கும்போது யாரும் தேங்காய் உடைச்சிடலியேஎன்று சிவாஜியையே வெட்கப்பட்டு சிரிக்க வைத்திருப்பார்.

மோகனாவும், சண்முகமும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அதீதப் பிரியமே அவர்களிடம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியிருக்கும். தன்னை விட்டு பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ள மோகனா சம்மதித்து விடுவாளோ என்கிற சண்முகத்தின் அவசர முடிவு, ஒரு நாடகக்காரியினுடைய நெருக்கத்தில் தன்னை சண்முகம் வெறுக்கிறாரோ என்கிற மோகனாவின் பதைபதைப்பு என இருவரும் ஒருவருக்கொருவர் உருகுவது படம் முழுக்கவே கையாளப்பட்டிருக்கிறது.

சுப்பு எழுதிய நாவலில் இருவருக்கும் திருமணமாகி, குழந்தைப் பிறந்த பிறகும் கதை நீளும். ஆனால் திரைப்படம் எனும்போது விறுவிறுப்புக்காக சில மாற்றங்களை ஏ.பி. நாகராஜன் செய்திருந்தார்.

கண்டதும் காதல், காதலர்களுக்கிடையே மோதல், ஊடல், நண்பர்களின் ஆதரவு, கதாநாயகியை அடைய பலரும்  முயற்சிப்பது, நாயகன், நாயகி இருவருக்கும் இடையே உருவாகிற ஈகோ’, ‘டைமிங் காமெடி என தில்லானா மோகனாம்பாள் பாதிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

சிவாஜியும், பத்மினியும் பல படங்களில் காதலர்களாகவும், கணவன் மனைவியுமாக நடித்திருக்கிறார்கள்.  தமிழ் சினிமாத் திரையின் ஒப்பற்ற ஜோடி என்று இவர்களைச்  சொல்லலாம். ஒரு அன்னியோன்யமான தம்பதிகள் எப்படி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வார்களோ அதை அப்படியே திரையில் பிரதிபலித்தவர்கள் இவர்கள். கையில் கத்திக் குத்துப்பட்டு நகரத்து மருத்துவமனையில் இருக்கும் சன்முகத்திற்காக மோகனா உருகிக் கொண்டிருப்பார். எப்படியாவது சண்முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பாள் மோகனா. இருவரும் கலந்து கொள்ளும் ஒரு கச்சேரி வாய்ப்பு வரும். ‘சண்முகத்திடம் பேசவே கூடாதுஎன்கிற வடிவாம்பாளின் நிபந்தனையோடு கச்சேரியில் ஆட வருவாள் மோகனா. நீண்ட நாட்களுக்குப் பிறகு  அவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது இருவரும் கண்களாலேயே வெளிப்படுத்தும் நல விசாரிப்பு ஒன்று போதும் மற்ற திரை ஜோடிகளின் கெமிஸ்ட்ரியைதூக்கிச் சாப்பிட. இதற்காகவே பல்லாண்டுகள் இந்திய சினிமாவை ஆண்டுவிட்டு திருமணமாகி அமெரிக்க போய் தங்கிவிட்ட பத்மினியை இந்தப் படத்திற்காக மறுபடியும் அழைத்து வந்திருப்பாராக இருக்கும் .பி நாகராஜன்.

கொத்தமங்கலம் சுப்பு தனது நாவலில் தில்லானா போட்டியைப் பற்றி பத்து பக்கங்களுக்கு எழுதியிருப்பார். அதை நாம் வாசித்து முடித்ததும் நாமே நாதஸ்வரம் வாசித்து ஆடியது போல மூச்சு வாங்கும். அந்தளவு நுணுக்கமாகவும், விறுவிறுப்பாகவும் போட்டியை வர்ணித்திருப்பார். இப்படியொரு ஆடலை ஆடுவதற்கு அப்போது பத்மினியை விட்டால் கதாநாயகிகளில் வேறு யார் இருந்திருக்க முடியும்? அதனால் தான் அமெரிக்காவில் இருந்து பறந்து வந்து இந்தப் படத்தில் நடித்தார் பத்மினி. தனக்கு நன்றாகத் தெரிந்த பரதக் கலையை பத்மினி ஆடியதில் வியயப்பேதும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் நாதஸ்வரத்தின் அரிச்சுவடி கூட தெரியாத சிவாஜி நாதஸ்வரத்தை இசைப்பதாக நடித்தது இப்போது வரை பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்திற்காக யாரை நாதஸ்வரம் வாசிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது சிவாஜியின் பரிந்துரையின்பேரில் மதுரை சகோதரர்களான சேதுராமன் மற்றும் பொன்னுசாமியை அணுகினார்கள். இவர்களின் கச்சேரியை சிவாஜி காரைக்குடியில் கேட்டிருந்தார். ‘திரைப்படதிற்கெல்லாம் வாசிப்பதில்லைஎன்று மறுத்தவர்களிடம் சிவாஜியே நேரில் சென்று கதையைப் பற்றி விளக்கி வாசிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார். ‘நலந் தானா?” பாடலில், ‘இந்தப் பெண் பட்டப் பாட்டை யார் அறிவார்?” என்று பி.சுசிலா உருகும்போது, அதை நாதஸ்வரத்தில் வாங்கி முடித்து வைப்பார்கள் பாருங்கள் நாதஸ்வர சக்ரவர்த்திகள், அப்போது பார்வையாளர்கள் எப்படி ரசிப்பார்களோ அப்படி பாலையா ஒரு பாவனை கொடுத்திருப்பார். படத்தினைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களை ஆஹாபோட்டு ரசிக்க வைத்த இடம் அது.

அதே போல் தவில் வித்வான் முத்துராக்காக நடித்த பாலையா படத்தின் மற்றொரு கதாநாயகன். உடம்பில் தசை ஆட தவில் வாசிக்கும் அவரது நடிப்பு, அதை வெறும் நடிப்பு என்று மட்டும் எப்படி சொல்லிவிட முடியும்? முத்துராக்கு தான் முதன்முதலாக சண்முகம், மோகனாவை விரும்பத் தொடங்கிவிட்டார் என்பதை புரிந்து கொள்வார். ‘திருவாரூர்ல எனக்கு சோடாக் கடைக்காரரைத் தெரியும்என்று சன்முகத்தோடு ஒட்டிக் கொண்டே நகைச்சுவை அள்ளித் தெளிக்கும் முத்துராக்கு தான், சண்முகம் மனமொடிந்து நிற்கும்போது, ‘தம்பி எனக்கே இப்படியிருக்கே, உங்க மனசு என்ன பாடு படும் ;? என்று தோழமையுடன் பரிந்து பேசுவார். இங்க்லீஷ் நோட்சினை தனது தவில் கொண்டு முடித்துவிடும் இடத்தில் பாலையாவின் உடல்மொழி அபாரம். இவருக்கு பின்னணியாகத் தவில் வாசித்தவர் திருவிடைமருதூர் வெங்கடேசன் அவர்கள். இவருக்கே பாலையா தான் நேரடியாக வாசித்திருப்பாரோ என்ற சந்தேகம் வந்திருக்கக்கூடும்!

சண்முகத்திற்கு தவில் வித்வான் முத்துராக்கு ஒரு ஆப்த சிநேகிதர் என்றால், மோகனாவுக்கு மிருதங்க வித்வான் வரதன் தான் காதல் தூதுவர். படத்தில் வரதனுக்கு பின்னணியாக மிருதங்கம் வாசித்த கலைஞர் மதுரை டி. ஸ்ரீனிவாசன் அவர்கள்.

‘இவர்களையெல்லாம் மிஞ்சக்கூடிய ஒருவர் உண்டு இந்தப் படத்தில். ‘சிவாஜி அண்ணன், பாலையா அண்ணன்லாம் இருக்காங்க..நான் எப்படி நடிக்கறது?” என்று இயக்குனரிடம் தயங்கிய ஆச்சி தான் ஜில் ஜில் ரமாமணியாக அத்தனைப் போரையும் ஒரங்கட்டிவிட்டு விஸ்வரூபம் எடுத்து நின்றார். அவருடைய காதலும் சும்மா இல்லை. அவருடைய காதலன் நாகலிங்கம் மோசமானவன் என்பது தெரிந்தும், ‘செயில்ல இருந்து வந்தபிறகாவது அவரு நல்லமாதிரி இருக்கணும்’ என்று கடைசி வரை காதலனுக்காக காத்திருக்கும் வெள்ளந்தியானப் பெண்மணி. சுப்புவின் நாவலில் மிக முக்கிய கதாபாத்திரம் இந்த ரமாமணிக்கு. தீக்காயம் எல்லாம் பட்டபிறகும் சன்முகத்தையும், மோகனாவையும் காப்பற்ற பல முயற்சிகளை ரமாமணி கதாபாத்திரம் செய்யும். ‘சிக்கலார் மனசுக்கு ஏத்தபடி நடந்துக்கோ’ என்று மோகனாவிடம் வேண்டும்போது பத்மினியுடன் சேர்ந்து பார்வையாளர்களும் நெகிழ்வார்கள் என்பது உறுதி.

இந்த கட்டுரையை இவரைக் குறிப்பிடாமல் முடிக்கக்கூடாது. படம் ஆரம்பித்து சரியாய் 45 நிமிடங்கள் கழித்து தான் திரையில் வருவார். வந்த நொடியில் இருந்து ஆர்ப்பாட்டம் தான். இப்படியொரு கதாபாத்திர வடிவமைப்பு இனி இருப்பதற்கில்லை அப்படியே இருந்தாலும், அது வைத்தியின் சாயல் கொண்டதாகவே இருக்கும். “இந்த வைத்தி இல்லேனா..இந்த லோகத்துல நல்லதும் நடக்காது..கெட்டதும் நடக்காது” என்று சுய அறிமுகம் செய்து கொண்டு தொடங்கும் நாகேஷின் சவடால்த்தனத்தை கடைசியில் போலிஸ் வந்து கைது செய்யும் வரை நீட்டித்துக் கொண்டே போவார்.  வடிவும், வைத்தியும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அத்தனையும் சுவாரஸ்யம் கொண்டவை.

“எவ்வளவு பெரிய கழுத்து வச்சிருக்கே..ரெண்டே ரெண்டு நகை போட்டுருக்கே..எவ்வளவு இடம் வீணாப் போறது..அள்ளி அள்ளிப் போட்டுக்கறது..இதெல்லாம் ஒருத்தர் சொல்லணும்” என்று  வடிவிடம் எதைச் சொன்னால் செல்லுபடியாகும் என்று அறிந்து சொல்லும் பாத்திரம்.

“அஞ்சு கட்டத்தையும் ஆள வேண்டியவ நீ..தப்பித் தவறி மோகனாவுக்கு அம்மாவா பொறந்துட்டே…என்ன ஒரு மூஞ்சி..அதுல எவ்வளவு பெரிய பொட்டு..இடமிருக்கு வச்சிக்கற..அது சரி” என்று வடிவை பார்க்குந்தோறும் இடக்காகப் பேசும் கதாபாத்திரம் வைத்திக்கு. அசராமல் ஆடியிருப்பார் நாகேஷ். நகைச்சுவையில் டைமிங் பிசகாமல் பேசப்பட்ட வசனங்கள் ஒவ்வொன்றும்.

வடிவிடம் பேசிவிட்டுப் போகையில் அவர் வீட்டு பணிப்பெண் அபரஞ்சியை ‘சைடு வாக்கில்’ பார்த்துவிட்டு செல்லும் அந்த உடல்மொழி…அவர் கலைஞன்.

தமிழ் சினிமாவின் ரசிகர்கள் பல விதங்களில் கொடுத்துவைத்தவர்கள். அதிலும் சிவாஜி கணேசன், கண்ணதாசன், கே.வி மகாதேவன், ஏ.பி நாகராஜன் கூட்டணியை ரசிப்பதற்கு தனி மனநிலை தேவையில்லை. எப்போது இவர்கள் கூட்டணியின் பாடல்கள் இசைக்கப்பட்டாலும் அது ஒரு மனநிலையைத் தந்துவிடும். பெரும்பாலும் இந்தக்கூட்டணி திரையிசைப்  பக்திப் பாடல்களுக்கு பெயர் பெற்றது என்றாலும், தில்லானா மோகனாம்பாள் இசையைப் பொறுத்தவரை அது நாதஸ்வர இசைக்கு செய்த மாபெரும் சமர்ப்பணம். படத்தின் தொடக்கத்தில் இருந்து எங்கெங்கு நாதஸ்வரத்தின் இனிமையைத் தர இயலுமோ அங்கெல்லாம் இசைத்திருக்கிறார்கள். ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே இங்க்லீஷ் நோட்ஸுக்கு அழைத்து செல்லும் இசை. இந்த இங்க்லீஷ் நோட்சினை அமைத்தவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்.

தமிழ்நாட்டில் நாதஸ்வர இசைக்கு  ஒரு மரபு உண்டு. திருவாவடுதுறை இராசரத்தினம், காருகுறிச்சி அருணாசலம் என இவர்கள் செய்த மகத்தான சாதனையால் நாதஸ்வரம் இந்தியா எங்கும் ஒலிக்கப்பட்டது. தமிழ்நாட்டின்  இராஜ இசை வாத்தியம் என்பதற்கு அத்தனை பொருத்தம் கொண்ட வாத்தியம் இது. தமிழ்சினிமாவில் பிரதானமாக இந்த இசைக்கருவியை முன்வைத்து படமெடுக்கும்போது அதகற்கான அத்தனை நியாயங்களையும் செய்ய வேண்டியிருந்தது. மதுரை சகோதரர்களான பி.என் பொன்னுசாமி மற்றும் பி.என் சேதுராமன் இவர்களை அழைத்து சென்னை ஸ்டுடியோவில் பதினாறு நாட்கள் வாசிக்க வைத்திருக்கிறார்கள். கே.வி மகாதேவன் அவர்கள் ஒரு மரபான இசையை வெகுஜனமாக்க எடுத்துக் கொண்ட முயற்சி எப்போதும் நினைவுகூரப்படவேண்டியது. அதே போல நாதஸ்வர இசைக்கு ஏற்றது போல அந்த லயத்துக்கு கண்ணதாசன் எழுதிய வரிகள்..மெனக்கிடல் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது.  ஆனந்த விகடனில் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடர்கதையை ஜெமினி பிக்சர்ஸ் சார்பில் படமாக்க நினைத்த திரு. எஸ்.எஸ். வாசன், ஏ.பி நாகராஜன் அவர்களுக்கு விட்டுக் கொடுத்ததன் நியாயத்தை இந்தக் கூட்டணி சிறப்பாக செய்திருந்தார்கள்.

இந்தத் திரைப்படத்தில்  நடித்தவர்கள், பணியாற்றியவர்கள் யாரும் தற்போது நம்மோடு இல்லை. ஆனால் தில்லான மோகனாம்பாள்நம் காலம் கடந்து காதல், கலைக் காவியமாக நிற்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியுமா என்ன? எப்படியும் தமிழ் சினிமா நமக்கு இந்தத் திரைப்படத்தை பல வகையிலும் நினைவில் வைத்துக் கொள்ளும் வாய்ப்பை நமக்குத் தந்து கொண்டே தான் இருக்கும்.

Subscribe
Notify of
5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

படம் பார்த்து ரசித்ததைவிட இந்த கட்டுரையை மிகவும் ரசித்து வாசித்தேன். அபாரமான ரசனைத் திறன்!

மிக்க நன்றி சார்

இத்திரைப்பத்திற்கு பலம் எனப் பலவற்றைத் தெளிவாகச் சொல்லி இருப்பது அருமை மேம். கதை, இயக்கம், இசை, வித்துவான்கள், கதாப்பாத்திரங்கள் என்ற வரிசையில் கண்ணதாசனின் பாடல் வரிகளும் அடங்கும். பாகவதர் காலத்துப் பாடல்களுக்கு மத்தியில் பாமரரும் பாடும் விதம் எளிமையான வரிகளை அள்ளித்தெளித்த நவீன தமிழ்க் கவி. மறவே நெஞ்சம் …

ஆமாங்க மேம் அவரைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கீங்க. நான் கவனிக்கல. மன்னிக்கவும்.