Friday, October 16, 2026
Home கட்டுரைகள் யாதும் ஊரல்ல

யாதும் ஊரல்ல

1

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கதை ஒன்று இருக்கிறது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை அவனது வீட்டில் ஒரு அறையில் ஜன்னலுக்குக் கீழ் படுக்கவைத்திருப்பார்கள். அந்தச் சிறுவனுக்கு ஜன்னலின் வழியே தெரிகிற சின்னஞ்சிறு உலகத்தைப் பார்ப்பது மட்டும் தான் ஒரே பொழுதுபோக்கு. ஒருநாள் மருத்துவர் குளிர்காலம் தொடங்க இருப்பதால் ஜன்னலுக்கு வெளியே இருந்து வரும் காற்று சிறுவனின் மேல்பட்டால் இளைப்பு வரும் என்று சொல்லி படுக்கையை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லிவிடுவார். படுக்கையும் இடம் மாறிவிடும். வாய் பேசகூட முடியாத அந்த சிறுவனால் இந்த இடமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. வெற்று சுவரை மட்டுமே பார்த்துக் கொண்டு நாள்முழுவதும் படுத்துக் கொண்டிருக்க முடியாமல் உண்மையிலேயே அவனுக்கு இளைப்பு வந்துவிடும் என்பதாக முடியும் கதை.

இடமாறுதல் என்பது எப்போதுமே இழப்பினைத் தரக்கூடியது தான். வீட்டினையும் ஊரினையும் காலி செய்வதென்பது அநேகமாய் எல்லோருக்கும் நடக்கக்கூடியது தான். இதிலும் சிலர் விதிவிலக்காக இருக்கிறார்கள். சொந்த ஊரிலேயே வேலையும் கிடைத்து பிறந்த அதே வீட்டிலேயே கடைசி வரைக்கும் வாழ்வது என்பது சிலருக்கு மட்டுமே நடக்கும் அதிசயம்.

ஆனால் எல்லோருக்குமே இது கசப்பான அனுபவமாக மட்டுமே இருந்ததில்லை. வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு வாங்கிக் குடிபெயர்ந்திருக்கும் அந்த நாள் மகிழ்ச்சியை மட்டுமே தரக்கூடியதாய் இருந்திருக்கும். சிலர் ஊரை, வீட்டை மாற்றுவதையே சந்தோஷமாகக் கொண்டாடியிருப்பார்கள் அந்தளவுக்கான காயங்கள் அவர்களிடம் இருந்திருக்கலாம்.  ஆனாலும் கூட ஏதோ ஒரு இழப்பைப் பெற்றுக்கொண்டு தான் இடம்பெயர்கிறோம். அந்த ஊரில் கிடைத்த சுவையான தண்ணீராகவோ, விட்டு வந்த மல்லிகைப் பந்தல் செடியாகவோ, வளர்த்த தெருநாயாகவோ, தினமும் பதினோரு மணிக்கு வீட்டைத் தேடி வரும் காகமாகவோ, நமக்காகவே பளிச்சென்று கீரையைத் தனியாக எடுத்து வைத்துத்தரும் கீரைக்காரப் பாட்டியோ, சிறு வயதில் இருந்தே வீட்டு வேலைக்காக வந்து குடும்ப உறுப்பினராய் மாறிவிட்ட பணிப்பெண்ணாகவோ, ஒட்டுறவாய்ப் பழகிய பக்கத்து வீட்டுக்காரர்களாகவோ, சனிதோறும் விளக்கேற்றும் தெருமுனை கோயிலாகவோ அந்த இழப்பு நீளலாம்.

இவையெல்லாம் புது இடத்தில் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்தும் புது இடத்திற்கு ஏற்றமாதிரி மனமும் உடலும் பழகிக்கொண்டுவிடும். ஆனாலும் கூட பழைய ஊரின் நினைவுகள் வரும்போதெல்லாம் ஏற்படுகிற மனஉளைச்சலும், ஏக்கமும்  சாதாரணமானதாக இருந்ததில்லை.

என்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவள் ஆமினா. அப்படி ஒருத்தி வகுப்பில் இருப்பது பேராசியர்களுக்கேத் தெரியாது என்ற அளவுக்கு அவள் ஒடுங்கிப் போய்த் தான் எங்களுடன் உட்கார்ந்திருப்பாள். கல்லூரியின் முதல் வருடம் முழுக்க அவள் எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டதே இல்லை. பிறகு தான் தெரிந்தது அவள் மதியம் பெரும்பாலும் சாப்பிடுவதேயில்லை என்பது. அந்தளவுக்கு அவளது வீட்டில் ஏழ்மை. பிறந்த தினத்திலிருந்து அவள் தன்னுடைய கிராமத்தை விட்டு வெளிய வந்ததில்லை. பள்ளிப்படிப்புக்கென்று போனது கூட தெருமுனையிலேயே இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு மட்டும் தான். கல்லூரிக்கு என்று வருகிறபோது தான் வெளி உலகத்தைக் கொஞ்சமேனும் அவளால் பார்க்க முடிந்தது. அவள் வசித்த ஊர் ரொம்ப கட்டுப்பாடானது. அந்த ஊரிலிருந்து எங்கள் கல்லூரிக்கு கணிசமான அளவில் பெண்பிள்ளைகள் வந்து படித்தார்கள். அதனால் அவர்களுக்கென்று தனியாக வேன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆமீனாவின் அப்பாவால் வாகனத்திற்கான கட்டணத்தைக் கட்டமுடியாது என்பதால் அவளுடைய தெருவில் உள்ள ஒருவர் அந்தக் கட்டணப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

முதன்முதலாக கல்லூரிக்கு வரப்போகும் நாளை நினைத்து அவள் எவ்வளவு ஏங்கிப்போயிருந்தாள் என்று பலமுறை எங்களிடம் சொல்லியிருக்கிறாள். கட்டுப்பாடான ஊர் என்பதால் அந்த வேனில் இருக்கும் பெண்களை வெளியாட்கள் பார்த்துவிடக்கூடாது என்று ஜன்னலில் திரை போட்டு வைத்திருப்பார்கள். இவளுக்கு பெரும்பாலும் ஜன்னலோர இருக்கையும் கிடைக்காது என்பதால் ஏதேனும் இடுக்குத் தெரிந்தால் அதன் வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வருவாளாம். அப்போதுவரை அவள் பார்த்த சினிமா போஸ்டர்களின் எண்ணிக்கை இரண்டோ மூன்றோ தான். இப்படியான ஆச்சரிய வாழ்க்கை வாழ்ந்த ஆமீனாவுக்கு வெளியுலகத்தை பார்க்கும் சந்தர்ப்பமும் வந்தது.

எங்கள் வகுப்பில் எல்லோரும் ஒரு ஞாயிறன்று திருநெல்வேலியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அருவிகள் நிறைந்த பாபநாசத்துக்குப் போய் வரலாம் என முடிவு செய்திருந்தோம். இதிலும் ஆமீனா மட்டும் ஒதுங்கிக்கொண்டாள். அவளை விட்டு நாங்கள் மட்டும் எப்படிச் செல்வது என்று எங்களுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் நாங்கள் ஐந்து பேராக சேர்ந்து அவளுடைய வீட்டில் அனுமதி வாங்கிவிடலாம் என்று ஆமீனாவிடம் கூட சொல்லாமல் அவள் கிராமத்திற்கே போய்விட்டோம். அவளுக்கு எங்களைப் பார்த்ததில் ஒரே சந்தோசம். அதோடு வீட்டின் நிலைமை பரிதாபமாக இருந்தது பற்றி அவளுக்கு கூச்சம் வேறு. அவளுக்கு இரண்டு அக்காக்கள். மூன்று பெண்பிள்ளைகள் வாழும் வீட்டில் கதவு கூட சரியாக இல்லை. சாக்குப் படுதா போட்டுத் தான் வாசலை மூடவேண்டியிருக்கிறது என்பதை ஆமினா எங்களிடம் கூச்சத்துடனும் வருத்தத்துடனும் பகிர்ந்துகொண்டாள். மின்விசிறி வசதி இல்லாத அந்த வீட்டின் நடுக் கூடத்தில் பல இடங்களில் சூரியன் நேரடியாக விழுந்து கொண்டிருந்தது.

எங்கள் ஊரில் வீட்டுக்கு விருத்தினர் வந்தால் ‘கலர்’ வாங்கிக் கொடுப்பது ஒரு சம்பிராதயமாகவே மாறிவிட்ட ஒன்று. எங்கள் எல்லோருக்குமே ‘கலர்’ வாங்கித் தரவேண்டுமென ஆமீனா விருப்பப்பட்டாள். எங்களுக்கு வாங்கிக் கொடுக்கப்போகும் ‘கலரு’க்காக கூடுதலாக மூன்று மணிநேரம் அவளும் , அக்காக்களும் பீடி சுற்ற வேண்டி வருமெனத் தெரியும். அதனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.

ஒருவழியாய் அவள் அம்மாவிடமும், அப்பாவிடமும நீண்ட நேரம் பேசி ஆமீனாவை பாபநாசம் அழைத்துப் போக சம்மதம் வாங்கிவிட்டோம். அவளுடைய அக்காக்கள் தான் ஆமீனாவுக்காக அதிகமும் பரிந்து பேசினார்கள். “வீடு தேடி வந்து பிள்ளைங்க கேக்குது…அவளும் எங்கப் போறா…வாரா.. அனுப்பி வைங்க வாப்பா..” என்றார்கள். சம்மதம் கிடைத்தும் கூட ஆமீனாவுக்கு பயணம் புறப்படப்போவதை நம்ப முடியவில்லை. எங்கள் எல்லோருக்குமாக அன்று ‘துவா’ செய்யப்போவதாக சொல்லிக் கொண்டே இருந்தாள்.

அந்த நாளும் வந்தது. அவளுக்குப் பிடித்தமான இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டோம். ஜன்னலோரம் உட்கார்ந்த அவள் வெளிப்புறத்தில் இருந்து கண்ணை எடுக்கவேயில்லை.  கூட்டமாய்ப் போகும் எருமைமாடுகள் கூட அவளுக்கு அதிசயமானதாக இருக்கும் என்பதை நாங்கள் நினைத்தேப் பார்க்கவில்லை.

அதிலும் காரையார் அணைக்கட்டில் ஒட்டுமொத்தமாய் தண்ணீரைப் அப்படியே அங்கேயே தலையில் கைவைத்து ‘அல்லாஹு’ என்று உட்கார்ந்துவிட்டாள். படகில் இந்தத் தண்ணீரைக் கடந்து தான் அருவிக்கரைக்குப் போக வேண்டும் என்றதும் கைகால்கள் நடுங்க வரமுடியாது என்று அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டாள். பயந்து போயிருந்த அவளை பல வார்த்தைகள் சொல்லி அருவி வரை அழைத்துப் போய்விட்டோம். அங்கும் போய் அவளுக்கு அருவியைப் பார்த்ததும் மலைப்பு. ‘இந்தத் தண்ணி தான் எங்க ஊருக்கு வருதோ?” என்றாள் திரும்பத் திரும்ப. அவள் வசிக்கும் தெருவின் முனையில் ஓடும் தாமிரபரணியை இருபது வருடங்களாக ஒருமுறை கூட நேரில் சென்று பார்த்ததில்லை அவள். நாங்கள் எல்லோரும் அருவியில் குளித்தது போதும் என்று முடிவெடுக்கும் சமயத்திலும் கூடுதலாக ஒருமணிநேரம் அவளுக்காக காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அருவியில் குளிக்கும் உற்சாகம் அளவு கடந்துபோனது அவளுக்கு.

அதன்பிறகு பல நாட்கள் அவள் முகம் பிராகசமாகவே இருந்தது. அவள் அக்காக்கள் பகலும், இரவும் இவள் போய் வந்த இடங்களைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

கல்லூரி முடித்து ஐந்து வருடங்கள் கழித்து நாங்கள் எல்லோரும் திரும்பவும் சந்திக்கலாம் என்று திட்டமிட்டபோது ஆமீனாவைப் பற்றி மட்டும் தகவல் தெரியவில்லை. அவளுடைய கிராமத்தில் இருந்து அதே கல்லூரிக்கு படிக்க வந்த ஒரு மாணவி மூலமாக விசாரித்ததில் வாங்கிய கடனைத் தர முடியாத காரணத்தால் இரவோடு இரவாக ஊரைக் காலிசெய்துவிட்டுப் போனதாக அந்த மாணவி சொன்னாள். அப்போது எனக்குத் தோன்றியது அவளுடைய அப்பா பகலில் ஊரினைக் காலி செய்திருந்தாலாவது ஆமினாவும், அவளது அம்மாவும் அக்காக்களும், தங்களைக் கடக்கும் ஊர்களைப் பார்த்திருப்பார்கள். அந்த துரதிருஷ்டம் கூட அவர்களுக்கு இல்லை.

பழகிய ஊரில் மனிதர்களை விட்டு இரவோடு இரவாக வேறு இடம் நோக்கிச் செல்லும் குடும்பங்களின் மனநிலை ரொம்பவும் கொடுமையானது. பிரிவதை யாரிடமும் சொல்லி ஆற்றிக்கொள்ள முடியாமல் போவதென்பது எவ்வளவு துயரமானது. விடிந்தபின் விஷயம் தெரிந்து ஊருக்குள் தங்களைப் பற்றி என்னப் பேசிக்கொள்வார்கள் என்ற கற்பனை தானே அந்த இரவு நேரப்பயணம் முழுக்க அவர்களுக்கு இருந்திருக்கும்.

உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக அப்படி அப்படியே வீட்டைப் போட்டு விட்டு எங்கு போகிறோம் என்று தெரியாமல் அலைபாய்கிற குடும்பங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. இந்தக் குடும்பங்களைப் பற்றி உலகம் முழுவதுமே திரைப்படங்கள் வருகின்றன. அதில் ஒரு படம் என்னை ரொம்ப நாளைக்கு பாதித்தபடி இருந்தது. Waiting For Clouds அந்தப் படத்தின் பெயர்.

துருக்கியின் அரசியல் நெருக்கடி காரணமாக குடும்பத்தில் எல்லோரையும் இழந்த இருபது வயது பெண் வேறொரு நாட்டிற்கு தஞ்சம் புகுந்துவிடுகிறாள். புதிய நாட்டில் உள்ள நெருக்கடியினால் தனது பெயர், மதம், மொழி எல்லாவற்றையும் மாற்றிக்கொள்கிறாள். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு தனது தம்பியைப் பற்றி மட்டும் தகவல் தெரிந்து அவனைத் தேடி மீண்டும் துருக்கிக்குப் போகிறாள் அந்தப் பெண். அவள் வாழ்ந்த இடம், பேசிய மொழி, வழிபட்ட கடவுள் என எல்லாவற்றையும் அவள் திரும்பவும் எதிர்கொள்ளும்போது அவளுக்கு பரவசமும், ஏக்கமும், அழுகையும், ஆற்றமையுமாக மாறி மாறி வரும். ‘இந்த ஊரின் பெண் நான்..என்னிடம் யாராவது வந்து பேசுங்களேன்’ என்று அவளுக்கு எல்லோரிடமும் கதற வேண்டும் போல இருக்கும்.  ஐம்பது வருடங்கள் கழித்து அவளுடைய கடவுளின் தேவாலயத்துக்குப் போகும்போது எப்படி, என்ன பிரார்த்தனை செய்வது என்று கூட தெரியாமல் அங்கிருந்த சிலையையே அவள் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி எத்தனையோ விஷயங்களை நமக்கு உணர்த்துபவை.

பெண்களுக்கு எப்போதுமே மாற்றம் என்பது சகஜமானது. பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும்போதும், கணவனின் வேலைக்குத் தகுந்தவாறு ஊர்களை மாற்றிக்கொண்டேப் போகும்போதும் பெண்களுக்கேயான பிரத்யேக கவலைகள் வந்துவிடுகின்றன. புதிய இடம் எந்தளவுக்குப் பாதுகாப்பானது என்பதில் தொடங்கி பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமானது பக்கத்து வீட்டுப் பெண்களை சிநேகம் பிடிப்பது. அந்தப் பெண்கள் மட்டும் நட்பாக இருக்கக்கூடியவர்கள் எனத் தெரிந்தால் வரும் நிம்மதியும், சந்தோசமும் வார்த்தையில் வர்ணிக்க முடியாதது.

எனது உறவினர்களில் ஒருவர் அயலகத் தூதரகத்தில் வேலை செய்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாட்டின் தலைநகருக்கும் வேலை மாற்றம் வரும். அவர்களின் முதல் குழந்தை பிறந்தது ஜெனிவாவில். இரண்டாவது குழந்தை எத்தியோப்பிய நாட்டில் உள்ள அடிஸ் அபாபாவில். ஒவ்வொரு நாட்டையும் அதன் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்வதற்குள் அடுத்த  மாற்றல் உத்தரவு வந்துவிடும். போன நாடுகளைப் பற்றியும் அங்குள்ள மக்களையும் , அவரது அனுபவங்களையும் பற்றி கதை கதையாகச் சொல்லுவார். சில கதைகள் விழுந்து சிரிக்கும்படி இருக்கும். சில அனுபவங்கள் அவர் மேல் பரிதாபத்தையும், பச்சாதாபத்தையும் ஏற்படுத்தும். அவரது ஆறு வயது மகன் ஆப்ரிக்க நாடு ஒன்றின் பேரூந்து நிலையத்தில் வைத்து தொலைந்து போன அன்று மொழி தெரியாத அந்த நாட்டில் அங்குள்ளவர்களிடம் புரியவைக்க அவர் பட்ட பாட்டை சொன்னபோது நாங்கள் உருகித் தான் போனோம்.

ஒரு பத்திரிக்கையில் வேலைப் பார்த்தபோது மாவட்ட ஆட்சியர்களின் மனைவிகளைப் பேட்டி எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட ஒரு விஷயம் எந்த நேரமானாலும் மாற்றல் உத்தரவு வரும் என்பதால் அதற்காக அவர்கள் தயாராக இருக்கவேண்டும். இதனால் அவர்களுக்கென்று நிரந்தர தோழிகள் இல்லையென்றும், குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடங்களில் நெருக்கமான நண்பர்கள் அமைவதில்லை என்றும் பகிர்ந்து கொண்டனர்.

‘இந்த ஏரியாவுல வீடு ஏதாவது காலியா இருக்குமா?” என்று தெருவில் போகும்போது முகம் தெரியாத சில பேர் கேட்பார்கள். நிறைய களைப்பும், சோர்வும், புது ஆளிடம் கேட்கிறோமே என்ற கூச்சமுமாக இப்படிக் கேட்பவர்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான குரலும், முகமும் அமைந்துவிடுகிறது.

வீடு மாறுவதை விட கொடுமையானது வாழ்ந்த வீட்டினை விற்பது. என்னுடன் வேலை பார்த்த ஒருவரின் அப்பா கிராமத்தில் இருந்த வீட்டினை விற்வேண்டுமென முடிவெடுத்த நாளில் இருந்து சரியாக சாப்பிடவும் இல்லை. பிறரிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டார். வீட்டின் பத்திரம் வேறு ஒருவர் பெயருக்கு மாற்றம் செய்த நாளில் தனியறையில் யாரிடமும் ஒருவார்த்தை கூட பேசாமல் அடைந்து கிடந்திருக்கிறார். அன்றைய இரவு அவரது உயிர் அவரிடம் இல்லை.

ஏனெனில் எல்லோருக்குமே வீடும், ஊரும்  வெறும் கட்டடங்களாகவும், தெருக்களாகவும் மட்டும் இருப்பதில்லை. அதன் ஒவ்வொரு மூலையிலும் நினைவுகளைத் தேக்கி வைத்திருக்கிறார்கள். அந்த ஞாபங்கள் கிளறும்போது வீடும், ஊரும் ஒவ்வொருமுறையும் நினைவில் உயிர்த்தெழுகிறது.

(மல்லிகை மகள் இதழில் தீராத கதைகள் தொடர் கட்டுரைக்காக எழுதியது )

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Sivasankar
Sivasankar
1 hour ago

உலகில் மிகப்பெரிய கொடுமை ஒருவன் வாழ்ந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்துவது .