Wednesday, November 4, 2026
Home சிறுகதைகள் ஓங்காரம்

ஓங்காரம்

0

“என் அம்மைக்கு இன்னைக்கு என்ன உக்கிரம்னு தெரியலியே..சூலத்துல இரத்தம் வருது பார்த்தியா” என்றார் பாப்பம்மாக்கா.  எங்கக்கா? என்றேன் ஆர்வத்துடன். ‘இந்தா பாரு….” என்று விரலால் சூலத்தைச் சுட்டிக் காட்டினார் பரவசம் கொண்ட முகத்தோடு.

நாங்கள் அப்போது ஆடி வெள்ளியின் முத்துமாரி அம்மன் தரிசனத்துக்காக கோயிலின் முன் நீண்டிருக்கும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். ஒற்றைச் சன்னதி மட்டுமே கொண்ட தெருவோரக் கோயில் அது. சாலை வளைந்து செல்லும் இடத்தில் ஏதேனும் ஒரு சாமியின் ரூப அடையாளங்கள் இருக்க வேண்டும் என்கிற விதியின்படி அங்கிருந்த வேப்ப மரத்தின் கீழ் இரண்டு செங்கல்கள் வைக்கப்பட்டு அதற்கு மஞ்சளும், குங்குமம் என யாரோ செய்த ஆராட்டில், கையளவு சரிகைத் துணி போர்த்தப்பட்டது. அந்த வளைவில் சைக்கிளில் திரும்புகிறபோது கீழே விழுந்து கால்களை சிராய்த்துக் கொண்ட கணேசன்,  அங்கு அந்தத் தெய்வம் இல்லையேல் தன் உயிரே கூட போயிருக்கும் என்று ஊருக்குள் சொல்ல, பீடம் வைக்கப்பட்டு அதன் மேல் செங்கல்கள் ஏற்றப்பட்டு அங்கு சூலமும் நடப்பட்டது. கணேசனின் கனவில் அடிக்கடி ஒரு பெண் சிவப்பு பட்டுடுத்தி வந்து  கணேசா..நான் இங்கன தான் இருக்கேன் என்று சொல்வதாக மரத்தடியில் வந்து அமர்ந்து கொண்டார். அதன் பின்பு அந்தப் பக்கம் போகும்போது கன்னத்தில் போட்டுக்கொண்டு போனவர்களில் சிலர் நின்று செருப்பைக் கழற்றி கைத்தொழ ஆரம்பித்தனர். கணேசன் யாரிடமும் பேசுவதில்லை. அங்கேயே அமர்ந்து வேப்ப மரத்திடம் ஏதேதோ முணுத்துக் கொண்டிருந்தது பலரின் கவனத்துக்கு வந்தது.

வெறும் சூலம் தொழுவதற்கு ஏற்றதல்ல என்று கணேசன் மடிப்பிச்சை எடுக்க, கணிசமாய் சேர்ந்த காசில் அங்கு முத்துமாரி குடியேறினாள். ஒரே வருடத்தில் கணேசன் உள்ளூர் ஜவுளிக்கடை, பாத்திரக்கடைக்காரர்களைப் பார்த்து ஒரு சன்னதியை முத்துமாரிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். “ஊருல  என் அம்மைக்கு சொகமில்ல..நான் போறேன்”  என்று கணேசன் கோயிலை விட்டுச் சென்ற நாற்பத்தியோறாம் நாள் , வேப்பமரம் காய்ந்து கருகத் தொடங்கியது. எல்லோரும் பயந்து போனார்கள்.

அன்று நான் கல்லூரியில் இருந்து வருகையில் கோயிலின் முன்பு சிறு கூட்டம் நின்றிருந்தது. கருகிய வேப்பமரத்தைப் பார்க்க எனக்கும் சங்கடமாக இருந்தது. வேளாண் கல்லூரியில் இருந்து சிலர் வந்திருந்தார்கள். வேப்பமரத்தில் ஒரு ஒட்டுண்ணி பரவியிருப்பதால் கருகியதாகச் சொன்னார்கள். ஆளாளுக்கு என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்கையில் ஒரு ஓங்காரக் குரல் கேட்டது. கணேசன் தான். அழுதுகொண்டே கோயிலை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார். ஓரிருவர் அவரைத் தாங்கிப் பிடிக்கத் தயாராக இருந்தார்கள். வந்த வேகத்தில் கோயில் வாசலில் சூலத்தின் முன்பு மடங்கி விழுந்தார். ‘உன்னைய விட்டுட்டு போயிட்டேனே ஆத்தா..’ என்று தரையில் ஓங்கி அடித்து அடித்து அழுதார். வெறுந்தரையில் உள்ளங்கை பொசுங்க அவர் திரும்பித் திரும்பி அடித்ததை எப்போது நினைத்தாலும் உள்ளுக்குள் அதிரும். கணேசன் கடைவாயில் எச்சில் வழிந்தது. மூக்கிலும் கண்ணிலும் நீர் வழிந்தது. யாரோ தண்ணீர் தர தூக்கி வீசினார். “போவாதன்னு சொன்னியே..போனேனே..என் அம்மை மேலுக்கு முடியாம கெடக்காளேனு போனேனே..நீ தான் என் அம்மைன்னு தெரியாம போயிட்டேனே..என் அம்மையும் போயிட்டா..நீயும் போயிருவியா..தாயே” என்று தலையில் அடித்துக் கொண்டார்.

ஏய் என்றார் நாக்கை மடித்து…வந்துட்டேன்டா.. யம்மா வந்துட்டேன்….வந்துட்டேன்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வேப்ப மரத்தைச் சுற்றி ஓடினார். கட்டிக் கொண்டார். தலையை மரத்தில் மோதினார். திரும்ப சன்னதிக்கு முன்பு வந்து நின்றார். என்னை யாரோ பிடித்திழுத்து ‘வயசுப் புள்ள கிளம்பு’ என்றார்கள். என்னால் அங்கிருந்து நகர முடியவில்லை.

சூலத்தின் முன்பு தரைப்புழுதியில்  படுத்துக் கொண்டார் கணேசன். அவர் கண்கள் வானை நோக்கி முறைத்தபடி இருந்தன. பிறகு வந்த நாட்களில் கணேசன் கோயில் பூசாரி ஆனார்.

விசேஷ நாட்களில் இப்போது கேட்பது போல கணேசனின் குரல் கோயிலைச் சுற்றிலும் எதிரொலி போல கேட்டுக் கொண்டே இருக்கும். கணேசனின் குரல் இன்று அதிகம் எதிரொலித்தது.

பாப்பாம்மாக்கா சூலத்தில் இருந்து ரத்தம் வருவதை இன்னும் சிலரிடம் காட்டிக் கொண்டிருந்தாள். சூலத்தின் அருகே சென்று பார்த்து வந்தேன். தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

“பாப்பம்மாக்கா அதென்ன இரத்தமா? அபிஷேகம் பண்ணிருக்காங்க..சூலத்துல கட்டின சிவப்புத் துணி சாயம் போய் தண்ணி வடிஞ்சிட்டு இருக்கு..இரத்தமாம்..எப்படிக்கா உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுது?”

“ஆங்..அவ உக்கிரமா இருக்கத இப்படித் தாம் காட்டுவா..சக்தியுள்ளவ” என்று கன்னத்தில் பட்பட்டென்று அக்கா அடித்துக் கொண்டாள். கார் ஒன்று வந்து நின்றது. கவுன்சிலரின் மனைவி இறங்கினார். கோயிலை நோக்கிப் போகும் முன் எங்களையெல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார். சூலத்தில் இருந்து ரத்தம் வந்தக் கதையை மறந்து முதுகு ஓடிய முந்தைய இரவு முத்துமாரிக்கு பூமாலை கட்டியதை யாரிடமோ பாப்பாக்கா சொல்லத் தொடங்கியிருந்தாள்.

அடுத்ததாக சிவப்பு நிற கார் ஒன்று வந்து நின்றது. கவுன்சிலர் அதிலிருந்து இறங்கினார். யாரைப் பார்த்தாலும் சிரிப்பார். இன்று யாரையும் பார்க்காமல் கோயிலுனுள் அவர் சென்ற விதம் சரியாகப்படவில்லை. பாப்பாக்கா தான் சொன்னாள், “புருஷனும் பொண்டாட்டியும் தனியா வந்திருக்காவோ..அண்ணாச்சி அவரு வீட்டம்மா கூடத் தான வருவாரு..கோளு ஒண்ணும் சரியில்லையே” என்றாள். அவர் சொல்லி முடிக்கவும், கணேசன் கோயிலில் இருந்து வெளியே வந்து தடுமாறி விழவும் சரியாக இருந்தது.

கணேசன் முகம் சிவந்து விரிந்திருந்தது. “அண்ணே..என்ன பேசிக்கிட்டு இருக்கும்போதே கைய வைக்கறீங்க..நல்லா இல்லண்ணே.”

“ஏல..வெளியூர்ல இருந்து சாமி பேரைச் சொல்லி பொழைக்க வந்தவன் நீ..யாருகிட்ட முறைச்சுகிட்டு நிக்க? உன்னைச் சொல்லி என்ன ஒண்ணுமில்ல..ஏய் இங்க வாடி” என்று குரலுயர்த்த, கவுன்சிலரின் மனைவி வந்தார். அத்தனைப் பேர் முன்பும் இப்படி நடந்ததற்காக அவர் முகத்தில் பதற்றம் எதுவும் இல்லாதிருந்தது.

“இன்னும் எத்தனைப் பொம்பளைகள்ட்ட காசு வாங்கியிருக்கே? பத்து பவுன் சங்கிலி கேக்குதோ உனக்கு? எங்கல வச்சிருக்க சங்கிலியை..எடுத்து இப்ப என் முன்னாடி வைக்கல..கைய காலை உடைச்சி விட்டுருவேன்” என்றார் ஆவேசத்துடன் கூட்டம் தன வரிசையிலிருந்து விலகி சுற்றி சூழ்ந்து கொண்டது.

கவுன்சிலரின் மனைவி தன் கணவனுக்கும் கணேசனுக்கும் நடுவில் வந்து நின்றாள். “நான் தான் என் மனசு விருப்பப்பட்டு சங்கிலியைக் கொடுத்தேன். நம்ம பையன் உடம்பு சொஸ்தமாகி நடமாடனும்னா என்ன வேணாலும் செய்வேன்..பத்து பவுன் சங்கிலி நம்ம மவன் உசுரை விட முக்கியமாப் போச்சா?” என்றாள். யாரும் எதிர்பார்க்காமல் கவுன்சிலர் மனைவியின் கையைப் பிடித்து சட்டென்று முறுக்கத் தொடங்கினார்.

“முறுக்குவே..இன்னும் நல்லா..உன் பவுசு தெரியட்டும்..” என்றாள்.

“நம்ம மவனைப் பத்தி வெளில சொல்லிவியோட்டீ நாயே”

“யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு என் வாயை அடைச்சீருல்ல..எங்க போவேன்? தெனமும் வந்து முத்துமாரிகிட்ட சொல்லி சொல்லி அழுதுருக்கேன்..அவ கணேசன் ரூபத்துல வந்து சங்கிலி கேட்டா குடுத்தேன்..என் பையன் சொகமாயிருவான்..அவ கழுத்துல மின்னுதது என் சங்கிலி இல்ல..நம்ம மவனோட உயிரு..அவ காப்பாத்துவா” என்றாள். கவுன்சிலர் மனைவியை கீழே தள்ளினார். அவள் தடுமாறி விழ, பெண்கள் அவரைத் தாங்கினார்கள்.

“குடும்ப விவகாரத்தை ரோட்டுக்கு கொண்டு வராதீங்க அய்யா..” என்று யாரோ ஒருவர் கூட்டத்தில் கவுன்சிலரிடம் பேச, “என்னய்யா குடும்ப விவகாரம்..தெரிஞ்சு பத்து பவுனு போயிருக்கு..இவன் என்னென்ன சொல்லி என் பொண்டாட்டிகிட்ட வாங்கி வச்சிருக்கானோ..இனி இவனைக் கோயிலுக்குள்ள விட்டீங்கன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்..இன்னும் எவன் எவன் பொண்டாட்டிகிட்டல்லாம் ஆட்டையைப் போட்டுருக்கானோ”

கணேசனின் உடல் மெதுவாக ஆடத் தொடங்கியது. முன்னும் பின்னுமாக நகர்ந்தது. நாக்கை வெளியில் நீட்டினார், மழையை அருந்துவது போல காற்றை வாய் வழி உள் வாங்கினார்.

லேய்….என்றார் அடிவயிற்றில் இருந்து.

“நான் யாருன்னு தெரியுமால்ல? இவ இங்கன இருக்கான்னு கண்டுபிடிச்சவனே நான் தான்..என்னை விரட்டிருவியா..துவம்சம் பண்ணிருவேன்..இல்லாம ஆக்கிருவேன்..” என்றார். ஒரு உடல் இத்தனை தூரம் நின்ற தடத்தில் இருந்து எகிறி இறங்க முடியுமா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். கணேசன் உடல் மத்தளமாய் அதிர்ந்தது. அவரது வேட்டி நெகிழ்ந்திருந்தது. ஒருவர் அவரது வேட்டியை இறுக்கிக் கட்ட முயன்றார். அதற்குள் கணேசன் இருந்த இடத்தில் இருந்து குதிக்கத் தொடங்கினார். வேட்டியை இருக்கக்கட்டியவர் கையோடு வேட்டி பிரிந்து வந்தது.

சுற்றம் எதையும் கணேசன் பொருட்படுத்தவில்லை. வேகமாக அவர் மீது வேட்டி சுற்றப்பட்டது.என்னருகில் நின்றிருந்த பாப்பாம்மாக்கா சாமீ…என்று நெஞ்சில் கைவைத்துக் கத்தினாள். இரண்டு கைகளையும் வாய்க்கருகில் குவித்து ஓங்காரமாய் குலவையிட்டாள். அடுத்தடுத்து அதன் எதிரொலிகளாய் குலவை சத்தம் கேட்டன.

கவுன்சிலர் தன்னைச் சுற்றி கூட்டம் சேர்ந்ததை இப்போது தான் பார்ப்பது போல விழித்துப் பார்த்தார்.

குலவையின் சன்னதம் பெருகிக் கொண்டே போனது.

கணேசன் ஆடிக்கொண்டே போய் ஒற்றைக் கையினால் வெண்கல சூலத்தினைப் பிடுங்கினார்..தலைகீழாய் சூலத்தைக் குத்தி நிறுத்தினார்.

நெஞ்சில் ஓங்காரத்துடன்  அறைந்து கொண்டார்..

“லேய்..என்னை இங்க வரக்கூடாதுன்னு சொல்ல எவனும் பொறக்கலடா..

நான் போறேன்..என் கூட என் பொறத்தால என் ஆத்தா வருவா..”

என்று கண்ணை மூடினார்…அவர் உடல் இன்னும் வேகமெடுத்து ஆடியது.

“வந்துட்டியா..வா …போவோம்..”

என்று தடாலென கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் எழுந்து கூட்டத்திற்குள் செலுத்தப்பட்டவர் போல நடந்தார். கூட்டம் வழிவிட்டது. அவர் போன பின்பும் கூட்டம் வழியை அடைக்காமல் ஓரமாக ஒதுங்கி நின்றது.

யாரும் திரும்பி சன்னதியைப் பார்க்கவில்லை என்பதை அந்த நேரத்திலும் கவனித்தேன்.

பாப்பம்மாக்கா என்னைத் தள்ளிவிட்டு ஓடினாள். போகும்போதே தன் கழுத்தில் கைவைத்து சங்கிலியைக் கழற்றினாள்.

“கணேசா..உன் கூட வாரவளுக்கு போட்டு விடுலே” என்று சங்கிலியைக் கொடுத்துவிட்டு கணேசன் காலில் விழுந்தாள். கூட்டமும் நானும் கைகளை குவித்துக் கொண்டிருந்ததை அப்போது தான் கவனித்தேன்.   

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted