Sunday, October 11, 2026
Home கட்டுரைகள் சொல்லின் துணை

சொல்லின் துணை

0

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கில இலக்கியம் என்னை வசீகரித்திருந்தது. அதனாலேயே பேராசிரியர்கள் பாடம் எடுக்கத் தொடங்கும் முன்னரே கதைப் புத்தகம் பிடிப்பது போல பாடங்களைப் படித்து முடிக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அதன் பலனாக கல்லூரியில் எப்போதும் முதல் மதிப்பெண்களே கிடைத்தது. பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் எப்படியாவது வாங்கிவிடுவேன் என்று தான் நானும் என்னுடைய பேராசிரியர்களும் நினைத்திருந்தோம். வாங்கியிருந்திருக்கலாம் தான். ஆனால் நடந்ததை விதி என்று சொல்லலாமா என்று தெரியவில்லை அல்லது எனது அஜாக்கிரதையாகவும் கொள்ளலாம்.

கடைசி செமஸ்டரில் ஒரு பரீட்சை எழுதிக் கொண்டிருந்தேன். எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரியும். அதனால் வேகமாக எழுதத் துவங்கிவிட்டேன். நடுவில் ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்தபோது பனிரெண்டு இருபது ஆகியிருந்தது. ஆச்சரியம் வந்துவிட்டது. இன்னும் நாற்பது நிமிடங்கள் இருக்கின்றன. இரண்டு பெரிய கேள்விகளுக்கான விடை மட்டும் எழுத வேண்டும். எப்படிப் பார்த்தாலும் எழுதி முடிப்பதற்கு இருபது நிமிடங்கள் போதுமானது தான்.

நிறைய நேரமிருக்கிறது. அதனால் பேனாவைக் கீழே வைத்துவிட்டு ஒருமுறை தேர்வு அறையைச் சுற்றிப் பார்த்தேன். எல்லோரும் பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்தார்கள். கைகளுக்கு சொடுக்கெடுத்தேன். தண்ணீர் தாகமே எடுக்கவில்லை. ஆனால் நேரம் தான் இருக்கிறதே, அதனால் எழுந்து போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். மீண்டுமொரு முறை அறையைச் சுற்றிப் பார்த்தேன்.

சரி எழுதலாம் என்று முடிவுக்கு வந்து நிதானமாக ஒவ்வொரு எழுத்தையும் கடைசி நேர பரபரப்பான கிறுக்கல்கள் இல்லாமல் எழுதத் தொடங்கினேன். திடிரென்று மணி அடித்தது. எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அது ‘வார்னிங் பெல்’. இன்னும் பத்து நிமிடங்களில் தேர்வினை முடிக்க வேண்டும் என்று உணர்த்துவதற்கு அடிக்கப்படுகிற மணி அது.

கடிகாரத்தை மீண்டும் பார்த்தேன். அது இப்போதும் பனிரெண்டு இருபது என்றே காட்டிக் கொண்டிருந்தது. கடிகாரம் ஓடவில்லை. படபடப்பாக வந்தது. இருப்பதோ பத்து நிமிடங்கள். இரண்டு பதில்களை எழுத வேண்டும். ஒருபக்கம் படபடப்பில் எல்லாம் மறந்து போனது போல ஒரு பிரமை.

ஒரு கேள்விக்கான பதிலை அரைகுறையாத்தான் முடிக்க முடிந்திருந்தது. கடைசிக் கேள்விக்கான பதில் எனக்குத் தெரியும். ஆனால் அதற்குள் பரீட்சை முடிவதற்கான மணி அடித்துவிட்டது.

எதிர்பார்த்தது போல அதில் மதிப்பெண்கள் குறைந்திருந்தது. என்ன நடந்தது என்று கேட்ட துறைத்தலைவரிடம் சொன்னபோது அவர் என்னிடம் கோபப்படவோ, தவறைக் சுட்டிக் காட்டி அறிவுரை சொல்லவோ இல்லை ‘கடைசியில முயல் மாதிரி ஆயிட்டே’ என்று மட்டும் சொன்னார். அவர் சொன்னது முயல், ஆமை கதையில் வரும் முயலை. மெதுவாக நடக்கும் ஆமையா வேகமாக ஓடும் என்னை ஜெயிக்கப்போகிறது? என்று ஓட்டப் பந்தயத்தில் ஓய்வெடுத்து தோற்ற முயலைத்தான் அவர் சொன்னார்.

இலக்கியங்களும், கதைகளும் பொழுதுபோக்குவதற்கு மட்டுமல்ல அனுபவத்தைப் பகிர்வதற்கும் தான் என்பதை மூன்று வருட இலக்கியப் படிப்பைப் படித்த பின் தான் தெரிந்து கொண்டேன்.

ஒவ்வொரு நாளும் பல அனுபவங்கள் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றன. அது தவிர பலருடைய அனுபவங்களும் நமக்கு எப்படியாவது வந்தடைகின்றன. இவை எல்லாவற்றையும் நாம் அசை போட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனால் சிலவற்றையாவது பகிர்ந்துகொள்ளலாமே என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது தான் மல்லிகை மகள் இதழில் ‘தீராத கதைகள்’.

எங்கோ ஒருவர் எதற்காகவோ சொன்ன ஒரு வாக்கியம் நமக்கு பல சமயங்களில் கைகொடுக்கும். அப்படியான ஒரு சம்பவம் கல்லூரி மேற்படிப்பு படிக்கிறபோது நடந்தது.

ஒவ்வொரு வருடமும் திருநெல்வேலி சுற்றியுள்ள காடுகளில் வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறும். அதற்கு கல்லூரி மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து காட்டுக்குள் மூன்று நாட்கள் அழைத்துச் செல்வார்கள்.

அந்தப் பயிற்சியில் கல்லூரி மேற்படிப்பு செல்லும்போது எங்கள் வகுப்பில் எல்லோரும் கலந்து கொண்டோம். சிவகிரி சுற்றுப்பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளில் ஒரு பகுதி எங்கள் குழுவினருக்கு ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.

அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது பயணம். எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு மாலை ஆறு மணிக்குள் போக வேண்டும். ஒரு முழு நாள் காட்டுக்குள் மலைகளின் மேல் ஏற வேண்டும் என்பது உற்சாகமாக இருந்தது.

பொதுவாய் மலையேற்றம் செய்கிறபோது கையில் மெழுகுவர்த்தி வைத்திருந்தால் கூட கடப்பாறையை வைத்திருப்பது போல பளு கொடுக்கும். நாங்களோ ஒரு கம்பளிப் போர்வை, உடைகள், உணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில் என்று கனத்த சுமையுடன் ஏறத் தொடங்கினோம். ஏறத் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே களைப்புத் தெரியத் தொடங்கிவிட்டது. தொடக்கத்தில் இருந்த உற்சாகப் பேச்சுகள் குறையத் தொடங்கின. ஒருகட்டத்தில் பேச்சுகள் நின்று அவரவர் சிந்தனையில் நடந்துகொண்டிருந்தோம். இன்னும் சிறிது தூரம் நடந்ததில் எப்போது இந்தப் பயணம் முடியும் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

மலை அடிவாரத்திலேயே காடு தொடங்கிவிட்டது. ஆனால் சுற்றி இருந்த காட்சிகளில் மனம் ஒன்ற முடியவில்லை. எங்களுடன் அடிவார கிராமத்தைச் சேர்ந்த வனத்துறையைச் சேர்ந்த வழிகாட்டிகள் இரண்டு பேர் வந்திருந்தனர். அவர்கள் வாரம் ஒருமுறையாவது தனியாக இந்தப் பகுதிக்குள் வந்து செல்பவர்கள்.

இருவருமே எங்களுடன் அனாவசியமாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சில இடங்களில் மட்டும் எங்களை நிறுத்தி, ‘இது முள்ளம்பன்றியோட முள்ளு’, ‘இது மானோட கழிவு,’ ‘இது மிலாவோட கால்தடம்’ இப்படி காட்டிக் கொண்டே வருவார்கள். இதெல்லாம் தான் நாங்கள் வனத்துறைக்குத் தர வேண்டிய குறிப்பில் இடம்பெற்றாக வேண்டியது.

மதிய நேரத்தில் அனைவரும் சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டோம். ‘இந்த சுமையில்லைன்னா கூட வேகமா ஏறிரலாம்’ என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு வழிகாட்டி சொன்னார், ‘எந்த நேரமும் சுமையைப் பத்தியே நினைச்சிட்டு இருந்தா ஏற கஷ்டமாத் தான் இருக்கும். போய்ச் சேர வேண்டிய இடம் பக்கத்துல வந்துட்டுன்னு நினைச்சுக்கோங்க’ என்றார்.

அப்படிச் சொன்னவரின் தலையில் எங்களுக்கு சமைத்துத் தருவதற்கான பெரிய பாத்திரங்களும், சமையல் சாமான்களும் மூட்டைக் கட்டப்பட்டிருந்தன.

அந்த வழிகாட்டி சொன்னது மலை ஏறும்போது மட்டும் நினைவில் கொள்ள வேண்டியதாக இல்லை. எல்லாவற்றோடும் அவர் சொன்னதைப் பொருத்திப் பார்க்கலாம். இதே வார்த்தைகளை மகப்பேறு மருத்துவர் என்னிடம் சொன்னார். என்னுடைய குழந்தைப் பிறக்கும்போது எடை குறைவாக இருந்த காரணத்தினால் பிறந்ததுமே மருத்துவ கவனிப்புத் தேவைப்படும் என்று மருத்துவரால் சொல்லப்பட்டது. மருத்துவர் எவ்வளவு விளக்கியும் மறுநாள் பிறக்கப்போகும் குழந்தை சில நாட்கள் என்னுடன் இல்லாமல் தனிமைபடுத்தபடும் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. அப்போது மருத்துவர் சொன்னார், “வரப்போற கஷ்டத்தை நினைக்காதீங்க, குழந்தைக்கு குணமாகி சந்தோஷமா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகப்போற நாளை நினைச்சுப் பாருங்க” என்றார். உண்மையிலேயே அந்த நேரத்தில் அந்த வார்த்தைகள் மிகப் பெரிய ஆறுதலைத் தந்தன.

எடைகுறைவு தவிர வேறெந்த பிரச்சனையும் இல்லை என மூன்றே நாட்களில் குழந்தையை கையில் தந்தபோது பட்ட சிரமமெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல மனம் சலனமில்லாமல்  இருந்தது. வன இலாகா வழிகாட்டியும், மருத்துவரும் ஒரே வார்த்தையைத் தான் அவரவர் அனுபவத்தில் இருந்து சொன்னார்கள். ஆனால் அதை பல்வேறு கட்டங்களில் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறேன்.

எவ்வளவு பிரச்சனைகள், போராட்டங்களை சந்தித்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தும் பலரையும் பற்றி தீராத கதைகளில் சொல்லியிருக்கிறேன். அவர்களைப் போல பலரும் நம்மைச் சுற்றி அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவம் என்பது நமக்கான பாடம்.

அனுபவமே ஆசான் என்பார்கள். ஆனால் அனுபவம் தான் கடவுள் என்பார் என்னுடைய எழுத்தாளர் நண்பர். மற்றுமொரு நண்பர் சொல்வார், ’அனுபவம் தான் கடவுளையே உருவாக்கியது’ என்று. இப்படிச் சொன்னவர் மானுடவியல் ஆய்வில் வாழ்நாட்களில் பெரும்பாலான வருடங்களை செவழித்தவர். இந்தியா முழுவதும் உள்ள பழங்குடிகளைத் தேடித் போய் சந்தித்திருக்கிறார்.. அவர்களுடனேயே தங்கி, உண்டு, வாழ்ந்திருக்கிறார்.

‘இன்னிக்கு நாமப் பார்க்கற கடவுளோட உருவங்கள் எல்லாம் மனிதன் தன்னுடைய அனுபவத்துல கண்டடைஞ்சது தான். உதாரணத்துக்கு முதன்முதல்ல பெண் கடவுள் கையில் தான் சூலாயுதம் இருந்தது. என்ன காரணம் தெரியுமா? பெண்கள் தான் முதல்ல விவசாயம் பார்த்தவங்க. தோண்டுகழின்னு ஒரு விவசாய ஆயுதம் உண்டு. மூணு கம்பிகள் இருக்கும். இதை நிலத்துல குத்தி அதுல விதையிடுவாங்க. இந்த தோண்டுகழி தான் பெண் கடவுள் கையில சூலாயுதமா மாறினது” என்றார்.

அனுபவங்களால் கடவுளை உருவாக்க முடியும் என்றால் அதை விட வேறென்ன வேண்டும்? மற்றவர்களின் அனுபவங்களும் கூட நமக்கு சிறந்த வழிகாட்டிதானே…

இந்தியக் குடும்பங்களில் இரண்டு வகை குணாதிசயங்கள் பரவலாக இருக்கின்றன. ஒன்று குழந்தையை அதீத செல்லத்தோடு வளர்ப்பது. இதற்குக் காரணம் ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் தான் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களை நல்லபடியாக வளர்க்கவேண்டும் என்கிற அக்கறையின் வெளிப்பாடு அவர்களை வளர்ப்பதில் வெளிப்படுகிறது. மற்றொரு குணம், குடும்பத்தில் மூத்தவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது. இதற்கு காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட அவசரகதி மாற்றம். இப்படி வயதானவர்கள் புறக்கணிக்கப்படுவது அதிகரித்திருப்பது நிச்சயம் சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இன்று இளைஞர்களுக்கு நிகராக வயதானவர்களும் வேலை தேட ஆரம்பித்திருக்கிறார்கள். என்பது எத்தனை கொடுமை! பெரிய கடைகளிலும், உணவகங்களிலும், ஏடிஎம் வாசல்களிலும், குடியிருப்பின் காவலாளிகளாகவும், வீட்டு வேலை செய்யும் முதிய பெண்களும் கண்களுக்குத் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் அநேகமாய் பிள்ளைகள் இருப்பார்கள். வசதியாகவும் அவர்கள் வாழக் கூடும். ஆனாலும் இப்படி மூத்தத் தலைமுறையினர் வேலை செய்து பிழைக்க என்ன காரணம்? இது என்னுடைய மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. இது தான் பலமுறை ‘தீராத கதைகள்’ மூலமாக வெளிவந்திருக்கிறது.

விடை தெரியாத பல கேள்விகளும், சந்தித்த மனிதர்களின் அனுபவங்களும் தான் தீராத கதைகள் எழுதக் காரணமாக இருந்தன. தொடரைப் படித்துவிட்டு கடிதம் மூலமாகவும், இமெயில் வழியாகவும், நேரிலும் பலரும் பகிர்ந்து கொண்டவை யாவுமே எதற்காக இந்தத் தொடர் எழுதப்பட்டதோ அதைப் பூர்த்தி செய்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

கதைகள் தீராது…ஆனால் எந்த ஒரு கதைக்கும் சிந்திப்பதற்கான இடைவெளி என்று ஒன்று வேண்டும். அந்த இடைவெளி முற்றுப்பெற்றதும் மீண்டும் நாம் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி.

(மல்லிகை மகள் இதழில் எழுதிய தீராத கதைகள் தொடரின் அத்தியாயம்)

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted