எங்கள் வீட்டின் அருகில் ஒரு பூங்கா இருக்கிறது. எப்போதேனும் அந்தப் பூங்காவிற்கு செல்லும்போதெல்லாம் ஒரு குழுவினரைப் பார்க்க நேரும். அந்தப் பூங்காவின் அங்கமாகவே அவர்கள் மாறிவிட்டது போல நான் போகும் நேரங்களில் எல்லாம் அவர்களும் இருப்பார்கள். முப்பது வயதிலிருந்து எழுபது வயது வரையுள்ள பெண்கள் அவர்கள். அதில் ஒருவர் தெலுங்கு மொழிக்காரர். இன்னொருவர் வட நாட்டைச் சேர்ந்தவர் மற்றொருவர் மலையாளத்தில் அங்கொரு இங்கொரு வார்த்தையாக தமிழைக் கலந்து பேசும் ஒரு பெண். எந்த மொழியானாலும் அவர்கள் என் காதுக்கு எட்டியவரை பேசியதெல்லாமே சமையல் குறிப்புகள் தான். நடைபயிற்சியின்போதும், ஓய்வுக்காக பெஞ்சுகளில் அமர்ந்திருக்கும்போதும், நின்றுகொண்டும் அக்காரவடிசிலையும், வாங்கிபாத்தையும் பற்றித் தான் பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஒருநாள் தான் பார்த்தேன், நடக்கும்போது மட்டுமல்ல நடைப்பயிற்சி முடிந்ததும் ஆளுக்கொரு டைரியில் ஒவ்வொருவராய் சொல்ல சொல்ல மற்றவர்கள் சமையல் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். அம்மாக்கள் சொல்லிக்கொடுத்ததும், மாமியார்கள் கற்றுக்கொடுத்துமாக மலையளவு உணவுப் பதார்த்தங்களை செய்யத் தெரிகிற பலரும் இன்னும் இன்னும் சமையலைக் கற்றுக்கொண்டிருப்பதன் காரணம் தான் என்ன? இதுதவிரவும் இப்போதெல்லாம் யூட்யூப்களில் ஒருநாளைக்கு மட்டும் இருநூறு சமையல் வீடியோக்கள் ஒளிபரப்பாகின்றன. எந்த மொழியில் சமையல் நிகழ்ச்சி நடந்தாலும் விடாமல் பார்த்துவிடுகிறவர்களும் நம்மிடம் இருக்கிறார்கள்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் பொதிகை தொலைக்காட்சியில் ஒரு சமையல் நிகழ்ச்சி ஞாயிறு மதியங்களில் ஒளிபரப்பாகும். அதற்கென்று பெரிய பார்வையாளர் கூட்டமே தமிழகத்தில் உண்டு. அந்த நிகழ்ச்சியில் எங்கள் தெருவைச் சேர்ந்த ஒரு பெண் போய் பங்கெடுத்து வந்தார். அதிலிருந்து எங்கள் தெருப் பெண்மணிகள் கடுகு கருகினால் கூட என்ன செய்யவேண்டும் என்பதை அவரிடம் போய்க் கேட்டு வந்தார்கள். அந்தளவு பிரபலமாகிவிட்ட அவர் அந்த சமையல் நிகழ்ச்சியில் செய்துகாட்டியது அரிசி உப்புமாவும், கெட்டியான தேங்காய்ச்சட்டினியையும்.
ஆரம்பத்தில் சமையல் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது ‘நமக்குத் தெரியாததையா செஞ்சுரப்போறாங்க? ஆனாலும் என்ன தான் செய்யறாங்கனு பாப்போம்” என்று வீட்டில் உள்ள மூத்தப் பெண்கள் இங்கிருந்தபடியே நடுவராகிவிடுவார்கள். பிறகு அடுத்த தலைமுறைப் பார்க்கத் தொடங்கியபிறகு அதில் சொல்பவற்றைக் குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தார்கள். இப்போது ஒவ்வொரு குடும்பத்தினருமே ‘ஃபேமிலி டாக்டர்’ போல ஒரு குடும்ப செஃப்பினை யூட்யூப் வழியே கண்டுகொண்டிருக்கிறார்கள்.
இப்போது புதிதாக ஏதாவது சமையல் பொருள் வாங்கினாலே அந்தப பாக்கெட்டினைப் புரட்டிப் பார்த்து அதில் அந்தப் பொருளை எப்படி சமைக்க வேண்டும் என்பது பற்றி எழுதியிருக்கிறதா என்ற அளவுக்கு பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இப்படி செய்முறையோடு வருகிற சமையல் பொருட்கள் மற்றவற்றை விட வேகமாக விற்பனையாகின்றன. அதனால் தான் இரண்டு நிமிடங்களில் செய்யக்கூடிய நூடில்ஸ் பாக்கெட்டிலும் நுணுக்கி நுணுக்கி சமையல் குறிப்புகளை எழுதி நம்மை வாங்கத் தூண்டுகிறார்கள். இப்படி சமையல் என்பது யார் யார் மூலமாகவோ நம்மை வந்து சேருகிறது.
ஹோட்டல் சுவை போல வீட்டில் செய்யலாம் என சமையல் புத்தகங்கள் சொல்லிக்கொண்டிருக்க, வீட்டுச்சுவையில் உணவு கிடைக்கும் என்று சொல்லும் உணவகத்தில் கூட்டம் குவிகிறது.
இந்தியாவில் சமையல் குறிப்புக்கென முதலில் புத்தகம் போட்டவரைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். சிரிக்கும் சத்தம் கேட்ட இடம் நமது தமிழ்நாட்டில் தான். அந்தச் சமையல் புத்தகம் தான் இன்று பல உணவு சமையல் கலைக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை எழுதியது மீனாக்ஷி அம்மாள் என்பவர். வெளியூரில் திருமணம் செய்து கொடுத்த தனது பேத்திகளுக்கு வாரம் ஒரு கடிதத்தில் ஒவ்வொரு சமையல் குறிப்புகளாக எழுதிக் கொண்டிருந்தார். “இதையெல்லாம் ஒரு நோட்டுல எழுதி வெச்சுக்கோங்க பாட்டி” என்று பேத்திகள் சொன்னதும் பேத்திகள் சொல்லைத் தட்டாத பாட்டியாக எழுதி வைத்திருந்தார். அந்தக் குறிப்புகள் தான் இந்தியாவின் முதல் சமையல் குறிப்புப் புத்தகமானது.
ஒரு வருடத்திற்கு முன்பு மீனாக்ஷி அம்மாள் தன் கைப்பட எழுதி வைத்திருந்த அந்தக் குறிப்புகளை அவருடைய பேரன் வீட்டில் பார்த்தேன். ஓரமெல்லாம் கிழிந்து பழுப்பு நிறம் ஏறி பழைய நோட்டாகிவிட்டது. ஒரு மைப் பேனாவினால் எங்குமே ஒரு அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் பொடிசாக எழுதி வைத்திருக்கிறார். 1958ஆம் ஆண்டில் ஒருநாள் அதைப் படித்துவிட்டு குடும்பத்தில் உள்ள ஒருவர் இதை புத்தகமாகப் போடலாம் என்று சொல்ல மொத்த குடும்பமும், உறவுகளும் நம்பமுடியாமல் சிரித்திருக்கிறது. பின்னர் அது ‘சமைத்துப் பார்’ என்ற பெயரில் புத்தகமாகவும் வந்தது.
புத்தகம் வந்த ஒரே வருடத்தில் அந்தப் புத்தக விற்பனையில் கிடைத்த ரூபாயில் சென்னை மந்தைவெளியில் மீனாக்ஷி அம்மாள் ஒரு வீடு வாங்கிவிட்டார். வீட்டின் முகப்பில் ‘சமைத்துப் பார்’ என்று எழுதியும் வைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு வரை அந்த வீட்டின் முன் உள்ள பேரூந்து நிறுத்தத்திற்கு ‘சமைத்துப் பார் ஸ்டாப்’ என்று தான் பெயர். புத்தகம் வெளிவந்தது 60களில். ஐம்பது வருடங்களைக் கடந்துவிட்டது இந்தியாவின் முதல் சமையல் குறிப்பு புத்தகம். ஒரு பிரியமான பாட்டியின் கரிசனத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தினால் தான் அந்தப் புத்தகத்திற்கு பிரபலம் கிடைத்திருக்கிறது. இப்படி எல்லோர் வீட்டிலும் ஒரு மீனாக்ஷி அம்மாள் உண்டு. நம்மிடம் ஒரு பேனாவும், நோட்டும் இருந்தால் போதும்.
எனது தோழி சொல்லுவாள், ‘என் மாமியார் புளி கரைக்கும்போதே சாம்பார் வாசனை வர்ற மாதிரி இருக்கும், நான் சாம்பார் வெச்சாலும் புளித் தண்ணி மாதிரி தான் இருக்கும்.’ உண்மையிலேயே பல வருட அனுபவத்தோடு ஒருவர் ஒன்றைச் செய்கிறபோது அதில் இருக்கும் நேர்த்தி அபாரமானது. ‘ஒரு தேர்ந்த புகைப்படக்காரராக வேண்டுமானால் பத்தாயிரம் புகைப்படங்கள் எடுத்து பழகவேண்டும்,. பத்தாயிரத்தொரு புகைப்படம் தான் உங்களது முதல் நல்ல புகைப்படம்’. பயிற்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு உதாரணமாக கல்லூரியில் எங்களுக்கு இப்படிச் சொல்வார்கள். எல்லாக் கலைகளிலும் இதை அப்படியே பொறுத்தலாம்.
என்னுடைய தோழி எங்களது அம்மாக்களின் சமையலை எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பாள். ஆனால் அவளுக்கு அவளது அம்மாவின் சமையலை குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் அனைவரின் முன்னிலையிலும் சொல்லும்போது பலமுறை அவளது அம்மா சங்கடப்பட்டிருக்கிறார். ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது அவளுடைய அம்மா என்னிடம் சொன்னார். ‘கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட அக்காக்களை விட நான் தான் நல்லா சமைப்பேன். கல்யாணம் ஆகி வந்ததும் மாமியார் வீட்டு சமையல் வேற தினுசா இருந்தது. அவங்க புளிக்கு பதிலா தக்காளி போடறவங்க, வெண்பொங்கல்ல மிளகு தானே சேர்க்கணும், அவங்க பச்சைமிளகாத் தான் போடுவாங்க. எப்பவாவது எங்க வீட்டுல பண்றபடி சமைச்சா தட்டு சாப்பாடோட வாசலுக்குப் பறக்கும். ரொம்ப போராட முடியாம என்னோட டேஸ்ட்டையும் மாத்திட்டு அவங்கள மாதிரி சமைக்க ஆரம்பிச்சு இப்ப அதுவே பழகிப்போயாச்சு” என்றார். பாவமாய் இருந்தது.
பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபாயைக் கைமாற்றாய் கொடுத்துவிட்டு எத்தனை நாட்கள் ஆனாலும் அமைதியாக ஒரு பெண்ணால் இருக்கமுடியும். ஆனால் வாழைப்பூ உசிலி போட்டுக் கொடுத்துவிட்ட கிண்ணம் மாலை நேரத்துக்குள் திரும்பிவரவில்லை என்றால் வருகிற பரபரப்பு இருக்கிறதே…அது பேரூந்து நடத்துனரிடம் ஒரு ரூபாய் சில்லறையை மீதமாய் வாங்கும் வரை இருக்கும் படபடப்புக்கு ஒப்பானது. கொடுத்த பாத்திரம் திரும்பி வராத அல்லது நெளிந்து போய்த் திரும்பி வந்த காரணத்திற்காகவே நாள் கணக்கில் பேசாமல் இருந்த பெண்கள் இங்கு அதிகம். மூட்டை மூட்டையாக வெண்கல, எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லாத வீட்டுப் பரணையே நமது நாட்டில் பார்க்க முடியாது. வேறு வழியில்லாமல் விலைக்குப் போட்டிருந்தாலும் கூட அந்தப் பாத்திரங்களின் வடிவமும், கனமும் பெண்களின் மனதில் நீக்கமற தங்கிப்போய்விடும். “எங்க வீட்டுல ஒரு வெண்கல பாயாச உருளி இருந்தது. ப்ச்… போற இடத்துக்கெல்லாம் எடுத்துட்டுப் போக முடியாம விலைக்குப் போட்டுட்டோம்” என்று முப்பது வருடங்கள் கடந்த பின்னரும் ஒரு துக்கத்தைப் பகிர்வது போல் சொல்லிக் கொண்டிருப்போம்.
அப்படியென்ன பெண்களுக்கும் சமையல் அறைக்கும் அவ்வளவு ஒரு நெருங்கிய உறவு? இதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கிறன்றன. குகை மனிதர் காலத்திலிருந்தே சமையல் என்பது பெண்களின் வசமே இருந்திருக்கிறது. தன் கணவன், தன் குழந்தை, தன் சகோதரன் என்று உறவுகளுக்குக் கொடுத்திருக்கும் அதே உரிமையைத் தான் சமையலறைக்கும் பெண்கள் கொடுத்திருக்கிறார்கள். ஒரே வீட்டில் இருக்கிற மாமியாருக்கும், மருமகளுக்கும் வருகிற பிரச்சனையின் ஆணிவேர் சமையலறையில் தான் முளைத்திருக்கும். ஆனால் அந்த வேரைக் களையவே முடியாது என்பது தான் விதி. “நான் இருந்த வரைக்கும் குக்கர் பளிச்சுன்னு முகம் பாக்கற கண்ணாடி மாதிரி வெச்சிருந்தேன், அவ வந்ததிலேருந்து அடிப்பிடிச்சு சொரசொரன்னு இருக்கு” என்று மருமகள் நுழைந்த சமையல் அறையைப் பற்றி ஆதங்கப்படாத மாமியார்கள் குறைவு. “சமைக்கறது என்ன பெரிய விஷயமா… ஒரு மாசம் தொடர்ந்து சமைச்சா நானும் தான் சூப்பரா உளுந்தங்களி கிண்டுவேன். ஆனா நான் தான் சமையலறைக்குள்ள வந்தாலே என் மாமியாருக்கு பிபி எகிறுதே” என்று அங்கலாய்க்கும் மருமகள்கள் அதிகம். பாவம் இதில் மாட்டிக் கொள்வது என்னவோ எதற்கு தலையாட்டுவது என்று தெரியாமல் இருக்கும் வீட்டில் உள்ள ஆண்கள் தான்.
‘இப்பல்லாம் யாருங்க வீட்டுல சமைக்கறா?’ என்ற குரல்கள் கேட்கின்றன. இருவரும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் அதிகமும் அலுவலகக் கேண்டினிலோ, உணவகங்களிலோ, வீட்டுக்கு ஆர்டர் செய்தோ சாப்பிடுவது என்பது நடக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத இது போன்ற சூழலை வைத்து பெண்கள் சமைப்பதில்லை என்று பொத்தம்பொதுவாக கருத்து வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் குழந்தைகளும், கணவனும் சாப்பாட்டில் சிரமப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவே லட்ச ரூபாய் வரும் வருமானத்தைக் கூட விட்டுக்கொடுத்த பெண்களும் இருக்கிறார்கள். “ஏன் சமையல்னாலே பொண்ணுங்க தானா? ஆண்கள் வேலையை விட்டு வீட்டுல சமைக்கட்டுமே” என்றும் கேள்வி எழுப்பலாம். ஆண்களும் இப்போதெல்லாம் சமைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது ஒருபக்கம், இன்னொரு புறம் கணவனையோ, மகனையோ சமைக்கவிட்டு அமைதியாக பெண்களால் இருக்க முடியாது என்பது தான் உண்மை. இதற்கு இன்னொரு காரணம், ‘தன்னால் தான் சரியாச் செய்யமுடியும்’ என்கிற பெண்களின் அசைக்க விரும்பாத நம்பிக்கை தான். பெண்களிடம் முதலில் களையப்பட வேண்டியது இந்த மூடநம்பிக்கை தான்.
(மல்லிகை மகள் இதழில் வெளிவந்த தீராத கதைகள் தொடருக்காக எழுதிய கட்டுரை)





நான் சமைப்பது போல் வீட்டில் யாரும் சமைக்க முடியாது.. என்னைப்போல் வீட்டை சுத்தமாக யாராலும் வைத்திருக்க முடியாது என்ற நினைப்பில் இருந்தவள் தான் நானும்.. ஆனால் இப்போது எனது மகன்கள் இருவரும் வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் வந்து தனியே சமைக்க துவங்கியது… நான் பசங்களோடு வந்து இருக்கும் போதெல்லாம் ஊரில் கணவர் தனியே சமைத்து கொண்டு வீட்டை சுத்தமாக என்னைவிட அழகாக வைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது எனது எண்ணம் மாறிவிட்டது. இப்போது கணவரோ, மகன்களோ எனக்கு ஏதாவது உணவு சமைத்துக் கொடுக்கும் போது நான் செய்ததை விட சுவையாகவே இருக்கிறது..😊