சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த ஆவணப்படம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது. மொத்தம் நான்கு எபிசோட்கள். செல்வமணி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு வீரப்பனை கதாநாயகனாக சித்தரித்து ஒரு மெகா சீரியல் கூட ஒளிபரப்பானது. அதில் சில எபிசோட்களைப் பார்க்கையில் வீரப்பனை நாயனாக்கியே தீர வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வம் புரிந்தது.
வீரப்பன் என்கிற பெயர் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வந்தது. அவர் இறந்ததைத் தெரிந்து கொண்டபோது பலராலும் நம்பமுடியவில்லை. ஆவணப்படத்தில் சொல்லப்பட்டதன்படி இப்படியொரு குற்றவாளியை இதுவரை இந்தியா பார்த்ததில்லை.
இதில் குறிப்பிடப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியை நேரில் சந்தித்திருக்கிறேன். விகடன் மாணவ நிருபராக திருநெல்வேலியில் பணியாற்றியபோது பணி நிமித்தமாக திருநெல்வேலியில் அப்போது காவல்துறை உயரதிகாரியாக இருந்த ‘ராம்போ’ கோபாலகிருஷ்ணனை சந்திக்கும் வாய்ப்பு மூன்று முறை கிடைத்தது. ஒவ்வொரு முறையும் அவர் வீரப்பனைத் தேடியபோது கிடைத்த சாகச அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். அவரது உள்ளங்கையில் ஒரு வெட்டு இருக்கும். அதை தைத்திருந்தார்கள். அந்த வடு எப்போதும் அவருடன் இருந்தது. என்னிடம் உள்ளங்கையைக் காட்டி “தொட்டுப் பாருங்க..” என்பார். ஆவணப்படத்தில் ஒரு சிறுத்தையைத் தூக்கிக் கொண்டு நிற்பதாகக் காட்டப்பட்ட அந்தப் புகைப்படத்டைத் தான் பெரிதாக மாட்டியிருப்பார். இவையெல்லாம் இந்த ஆவணப்படத்தினைப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது. அவருடைய பேச்சில் வீரப்பன் மீது இருந்த எரிச்சலும் அடங்காத கோபமும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்தக் கோபத்தினை படத்தில் பேசிய அனைத்து வனத்துறை மற்றும் காவல்துறையினரிடமும் பார்க்க முடிந்தது. தங்களுடன் பழகியவர்கள், குடும்பத்தை விட்டு வருடக்கணக்காக காட்டில் தங்கிய சிறப்புப் படையினர் என இவர்கள் ரத்தமும் சதையுமாக துண்டாடப்பட்டு கொலை செய்யப்படும்போது அவர்களுக்குள் ஏற்படும் கோபம் நியாயமானதே.
அதே நேரம் சில சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் வீரப்பனின் குணத்தை புரிந்து கொண்டு அவரைக் கோபப்படுத்தாமல் சமாதான வழியில் அவரை பிடிக்கலாம் என்று இறங்கியதும் சொல்லப்பட்டிருக்கிறது. மலைவாழ் மக்கள், கிராமத்தினர் போன்றவர்களைப் பிடித்துக் கொண்டு வந்து வொர்ஷாப் என்று அழைக்கப்படும் வதைகூடத்தில் வைத்து சங்கர் மகாதேவ் பிடரி என்கிற அதிகாரி சித்திரவதை செய்ததை சொல்கிறபோது மிகுந்த வலியைத் தருகிறது. இவற்றை நாம் கேள்விபட்டிருப்போம், தெரிந்து வைத்திருப்போம். ஆனாலும் அதில் பணியாற்றிய காவல்துறையினரே அந்த நாட்களை நினைத்து “போலிசாக இருக்க வெட்கப்பட்டேன்’ என்று சொல்லுமளவுக்கு இருந்திருக்கிறது. மற்றொருபுறம் சிறப்பு அதிரடிப்படையினர் வெயிலிலும், குடிநீர் இல்லாமலும் குளிரிலும் பட்ட கஷ்டங்களையும் ஏற்பட்ட மரணங்களையும் எந்த மனித உரிமை ஆர்வலர்களாலும், நீதிமன்றங்களாலும் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் சங்கர் மகாதேவ் பிடரியை ஆதரிக்கும் மற்றுமொரு காவல்துறை அதிகாரி. சந்தேகம் ஏற்பட்டாலே சித்திரவதை செய்யும் முறையினை முதலில் தொடக்கி வைத்ததாக கோபாலகிருஷ்ணனை சொல்கிறார்கள். ஆடு மேய்ப்பவர்களைத் தனது கையாலேயே அடிப்பார் என்கிறார்கள். அவரது கைகள் என்பது ஒரு தேர்ந்த குத்துச்சண்டை வீரரின் புஜங்களுக்கு ஒப்பானது.
வீரப்பனைப் பொறுத்தவரை காட்டு யானைகளின் கால்களுக்கு அடியில் தைரியமாக உட்புகுந்து வரும் ஒருவர், உடும்புகளை வெறுங்கையால் சதை கிழிய பிடிக்கும் ஒருவர், எதிரி என்று நினைப்பவரைக் கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து தலையை வெட்டி ஒரு பதக்கம் போல் தன்னுடன் வைத்துக் கொள்ளும் ஒருவர் தன்னை நாயகனாக நினைத்துக் கொண்டதன் வெளிப்பாடு மிக பயங்கரமாக இருந்திருக்கிறது. கடைசி வரை காட்டு ராஜாவாகவே இருப்போம் என்று நினைத்திருக்கிறார். அந்தத் தைரியத்தில் தான் நிருபர் சிவசுப்பிரமணியனை அழைத்து விதவிதமாக புகைப்படம் எடுக்கச் சொல்லி தன்னை கதாநாயகனாக நிறுவியிருக்கிறார். காவல்துறை தரப்பு சொன்னது போல அது தான் வீரப்பன் செய்த மாபெரும் தவறு. புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, தன்னை கதாநாயகனாக நினைத்துக் கொண்டது. காவல்துறையினர் தன்னைப் பிடிக்க நேருக்கு நேர் வருவார்கள் பிடிபடமாட்டோம் என்று நினைத்தே ஒவ்வொன்றையும் செய்திருக்கலாம். ஆனால் காவல்துறை தன்னுடைய அதிகாரத்தை எல்லா எல்லைக்கும் கொண்டு போயிருந்தது. உறவினர்கள், கிராமத்தினர் என எல்லோரையும் சொல்ல முடியாத அவளுவுக்கு சித்திரவதை செய்தபோது தான் அவர் தான் ஒரு நாயகன் அல்ல என்பதை புரிந்திருப்பார். அந்தக் கோபத்தினை அவர் வெளிப்படுத்திய விதம் நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. காவல்துறை, வீரப்பன் தரப்பு இரண்டு பக்கமும் உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
ஒருகட்டத்தில் தன்னை வழிநடத்த யாரேனும் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறபோது சிலருடைய பேச்சினைக் கேட்கிறார் வீரப்பன். அவர்கள் வழி போராட்டக் குழுக்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்கிறார். ஆனால் போராளிகள் எப்படி உருவானாகர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள மறந்திருக்கிறார். ஆவணப்படத்தில் சேகுவேரா, பிராபகரன், மாவோ , ஹோசிமின் என போராட்டவாதிகள் பற்றி மாறன் என்கிற முன்னாள் போராளி ஒருவர் பேசுகிறார். இவர்கள் குறித்து வீரப்பனுக்கு தகவல்கள் தெரிந்திருந்தன என்கிறார். ஆனால் அவர்கள் எதற்காக தொடக்கத்தில் இருந்து போராடினார்கள் என்பதை புரிந்து கொள்ள வீரப்பன் தவறியதையும் உணர்ச்சிவசப்படுபவராய் மாறியதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார். இது இந்த ஆவணப்படத்தின் முக்கியமான அம்சம்.
வீரப்பன் காட்டின் பாதுகாப்புக்காகவோ, ஒரு கொள்கைக்காவோ ஆயுதம் தாங்கியவர் அல்ல. அவர் ஒரு கொள்ளைக்காரர், சட்டத்துக்கு புறம்பான வேட்டைக்காரர். கடத்தல்காரர், கொலைகள் செய்தவர். மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக திடிர்த் தமிழினப் போராளியாகக் காட்டிக் கொண்டவர். இதனை ஆவணப்படம் மிகச் சரியாக சுட்டிக் காட்டுகிறது. இன்றும் சிலரால் காட்டின் பாதுகாவலன் என்று இவர் கொண்டாடப்படுவதன் பின்னணியிலும் அவர் தமிழினப் போராளி என்கிற அரைகுறை அறிவு இருக்கிறது. வீரப்பன் யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்தத் தொடங்கியபோது அந்தக் காட்டில் ஆண் யானைகளே இல்லாமல் ஆக்கிவிட்டார் வீரப்பன் என்கிறார் அப்போதைய காட்டு இலாகா அதிகாரியாக இருந்த பி.கே சிங். அப்படியே இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில ஆண் யானைகள் இருந்திருந்தால் அவை அப்போது கர்ப்பத்தில் இருந்திருக்கும் என்கிறார். எல்லா மரங்களும் இருக்க அத்தனை பெரிய காட்டில் சந்தன மரங்களை பார்க்கவே முடியாது என்றும் அந்தளவுக்கு அவை அழிக்கப்பட்டு விட்டன என்று சொல்லும் அவர் வீரப்பனுக்குத் திருமணமான அதே நாளில் காட்டிலாக்கா மடக்கிப் பிடித்த லாரிகளில் கைப்பற்றப்பட்ட சந்தனமரங்களின் அளவு இதற்கு முன்பும் பின்பும் கூட இந்தியாவில் எங்கும் பிடிபட்டதில்லை என்கிறார்.
இப்படி கூட தோன்றுகிறது. ஒருவேளை இயற்கை குறித்த அறிவினை இயல்பாகப் பெற்றிருக்கும் வீரப்பனுக்கு, இயற்கையின் ஒரு பகுதியை அழித்தால் அதன் தொடர்சங்கிலியான யானையகளைக் கொன்றால் சூழல் பாதிக்கப்படும் என்கிற அறிவு இல்லாமல் இருந்திருக்கலாம். இவவளவு பெரிய காட்டில் சந்தன மரங்களை மட்டும் அழிப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மெத்தனம் இருந்திருக்கலாம். இவற்றை யாரும் சொல்லித் தராமல் இருந்திருக்கலாம். நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய அன்று பெய்த கனமழையில் மூன்று மணிநேரம் அவரை அமரவைத்து தவளைகளின் குரல்களில் ‘சிம்போனி’ இசையைக் கேட்க வைத்தவரும் வீரப்பன் தான்.
இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கையில் வீரப்பன் போன்ற ஒருவர் உருவாகியிருக்கிறார் என்பதை விட பலருடைய வசதிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. காட்டுக்குள் வரும் காவல்துறையினரையும் அதிரடிப்படையினரையும் கேள்வியே இல்லாமல் கொன்ற வீரப்பன், அவர் பலம் இழந்த சமவெளிப்பகுதியில் அதே போல் கேள்வி இல்லாமல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
வீரப்பனோடு சிறு வயதில் பழகிய அவருடைய குழுவில் சிறுவனாக இருந்த அன்புராஜ் என்பவரின் நேர்காணலும் முன்னாள் போராளி மாறன் என்பவரின் பதிவையும் முக்கியமானதாக கருதுகிறேன். இருவரும் எடுத்து வைக்கும் வாதமும், கேள்வியும் தான் ஆவணப்படத்தின் இயக்குனரின் கருத்தாகவும் இருக்கக்கூடும்.
அன்புராஜ் ஒரு கேள்வியை எழுப்புகிறார். “நாம குடிமக்கள், அரசின் கீழ் இருக்கிறோம். இந்த அரசு தேடிக்கொண்டிருக்கும் குற்றவாளியை மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டிருப்பது மோசமான முறை தானே? அப்போது அரசு எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டிருக்கும்?” என்கிறார். இந்தப் படத்தில் காவல்துறையில் வீர மரணங்கள் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதும், அரசினால் நஷ்டஈடு கௌரவம் தரப்பட்டதும் காண்பிக்கப்படுகிறது. அதே நேரம் வீரப்பனைத் தேடும் படலத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்கள், கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களுக்கான பதில் என்ன என்பதும் காட்சியின் மூலம் கேட்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் செல்வராஜ் செல்வமணி இந்தக் கேள்வியை முன்வைத்தே இந்த ஆவணப்படத்தினை எடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
வீரப்பன் என்றதும் எதைச் சொல்வது, எதைச் சொன்னால் யாருக்கும் பாதிப்பிருக்காது என்கிற முடிவோடு எடுக்கப்பட்ட ஆவணப் படமாக இருக்கிறது. யானைத் தந்தங்களும், சந்தன மரங்களும் கடத்தியதில் நூறு கோடி ரூபாய் அளவுக்கு லாபம் இருந்திருக்கும் என்கிறார்கள். அந்தப் பணம் அனைத்தும் வீரப்பனுக்கு மட்டுமே வந்து சேர்ந்திருக்குமா? காட்டில் வாழ்ந்த ஒருவர் அதிகார மையத்தோடு தொடர்பில்லாமல் அத்தனை தூரம் வளர்ந்திருக்க முடியுமா என்பதும் வீரப்பன் தொடர்பான சந்தேகங்கள். இதற்கான பதில்களும், கேள்விகளுமே கூட இந்தப் படத்தில் இல்லை. The Hunt for Veerappan என்று தலைப்பு வைத்ததால் தேடுதல் வேட்டையை மட்டும் களமாக எடுத்துக் கொண்டுள்ளார்கள். வீரப்பன் நெற்றியில் இருந்த துப்பாக்கிக் குண்டு துளைகள் குறித்து பல சந்தேகங்கள் அவர் மரணத்தின் போது எழுப்பப்பட்டன. வீரப்பனது அடையாளமான மீசை அவருடைய சடலத்தில் வெட்டப்பட்டிருந்தது. இவைஎலாம் கேள்விகளாக அவர் இறந்த சமயம் முன்வைக்கப்பட்டன.
இதற்கான பதிலாக தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த அதிகாரி செந்தாமைரைக் கண்ணன் தருகிறார். ‘வீரப்பன் கடத்தல்காரன். அவனைக் அவனைக் கொன்றது சிறப்பு அதிரடிப்படை’. இதில் உங்களுக்கு சந்தேகம் இல்லை அல்லவா? அப்படிஎனில் இதற்கு இடையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளுங்கள்..எங்களுக்கு கவலையில்லை’ என்கிறார். எப்படியாவது அவரைப் பிடித்தேயாக வேண்டும் என்கிற முனைப்பில் வெற்றி பெற்றாயிற்று..,இனி கேள்விகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்பதான பதில் இது.
சில கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அவை அப்படியே தான இருக்கும் என்கிறது ஆவணப்படமும்.