ஒரு பார்வையில் சென்னை நகரம்

2
447
Version 1.0.0

1952 மே மாதம் அசோகமித்திரன் சென்னைக்கு வருகிறார். நிரந்தரமாக இங்கேயே தங்குகிறார். அசோகமித்திரனின் கதைகளில் சென்னைக்கு ஒரு நிரந்தர இடமுண்டு. இவர் ஒரு இடத்தை குறித்து எழுதுகிறபோது நுணுக்கமான தகவல்களைக் காட்டிவிடுவார். பாண்டி பஜாரில் உள்ள கீதா கபேயும், கேரளா  ஹேர்  ட்ரஸ்ஸிங் கடையையும் பார்க்கிறபோது இவர் எழுதிய பாண்டிபஜார் பீடா கதை தான் நினைவுக்கு வரும். சில கதைகளில் அவர் அந்தக் காலகட்டத்தின் கோடம்பாக்கத்தையும் மாம்பலத்தையும் கற்பனைக்கு கொண்டு வரலாம். சென்னை மட்டுமல்ல, ஹைதராபாத்தையும் அவர் எழுத்தில் காட்டியிருக்கிறார். மனிதர்களைப பற்றி எழுதிவிடுவது போலவே இடங்களைக் குறித்தும் அவரால் உள்ளும் புறமும் எழுதிவிட முடியும்.

இவரது சென்னை குறித்த புத்தகம் ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ முக்கியமானது. 1998ல் ஆறாம் திணை இணையதளத்திற்காக சென்னை குறித்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைகள் இந்தப் புத்தகமாக வெளிவந்துள்ளது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். 

சென்னையின் பழமையான இடங்கள் ஒவ்வொன்றைக் குறித்த அரிய தகவல்கள் கொண்ட கட்டுரைகள். தியாகராயர் நகர், சைதாப்பேட்டை, அடையாறு, அம்பத்தூர், குரோம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர் என இவற்றைக் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. வெறும் தகவல்களாக இல்லாமல் அவருக்கே உண்டான நகைச்சுவை உணர்வோடும், நெகிழ வைத்துவிடும் சம்பவங்களோடும், எதிர்பாராத திருப்பங்களோடும் சொல்லிச் செல்வதால் சலிக்காமல் படிக்க வைத்துவிடுகிறது.

நான் குரோம்பேட்டைக்கு அடிக்கடி செல்வதுண்டு. சில வருடங்களுக்கு முன்பு வரை கூட இப்போது போத்திஸும்., சரவணா ஸ்டோர்ஸும் வருவதற்கு முன்பு அந்தப் பகுதியைக் கடக்கும்போது ஒருவித வித்தியாசமான மணம் வரும். தூங்கிக் கொண்டிருந்தால் கூட இந்த மணம் நம்மை எழுப்பி குரோம்பேட்டை வந்ததைச் சொல்லிவிடும். இதனை என்னால் வெற்றிலைச் சாற்றின் மணத்தோடு தான் தொடர்புபடுத்துக் கொள்ளத் தோன்றியிருக்கிறது. செருப்புக்காக தோல் பதனிடும் ஆலையின் மணம் என்பது பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். ஆனால், ஆச்சரியமாக இந்தப் புத்தகத்தில் தான் இந்த ஆலைகள் 1950களிலேயே நலிவடைந்தாலும் காற்றில் அந்த மணம் இருந்திருக்கிறது என்பதைச் சொல்கிறது. அசோகமித்திரன் சென்னை வந்தபோது கவனித்த அதன் மணத்தை நானும் சென்னையில் சுவாசித்து அது குறித்து யோசித்திருக்கிறேன் என்பதில் ஒரு அற்ப பெருமை இருக்கத் தான் செய்கிறது.

இங்கு போகும்போதெல்லாம் குமரன்குன்றம் முருகன் கோயிலுக்குச் செல்வேன். சென்னையின் குன்றுக்கோயில்களில் ஒன்று. அசோகமித்திரன் இங்கு சென்றபோது குன்றில் உச்சியில் சிதிலமடைந்த ஒரு கட்டடத்தைப் பார்க்கிறார். அதைக் கொண்டு அவர் எழுப்பிக் கொள்கிற கேள்விகள் நாவல் எழுதுவதற்கான சாத்தியங்கள் கொண்டவை. அது ஜமிந்தாரின் பங்களாவாக இருக்கலாம் என்று ஆரம்பித்து அங்கு என்னவெல்லாம் நடந்திருக்கூடிய சாத்தியங்கள் இருந்திருக்கும் என சொல்லிக் கொண்டே போகிறார். ஒரு சின்ன புள்ளியில் இருந்து ஒரு பெரும் சித்திரத்தைத் தீட்டிக் கொள்ளும் எழுத்தாளர் அசோகமித்திரனுக்குள் எப்படி உருவாகிறார் என்பதற்கான சான்று இந்தக் கட்டுரை.

திருவல்லிக்கேனி பற்றிய கட்டுரையில் பாரதியாரை சொன்ன அதே பெருமையோடு கு.அழகிரிசாமியைக் குறித்தும் சொல்கிறார். பாரதியார் , துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் இருந்து சென்னை முழுக்கக் கால்நடையாகவே பயணப்பட்டிருக்க முடியும் , ஏனெனில் அவருடைய படைப்புகளில் வண்டிகள் பற்றிய சித்தரிப்புகள் குறைவு தான் என்கிறார். கு.அழகிரிசாமி திருவல்லிக்கேணியின் மீது அபார அன்பு கொண்டிருந்தார் , இன்னும் அவரது ஆவி செங்கல்வராயன் தெருவில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்று கட்டுரையை முடிக்கிறார். உருது மொழி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், இரவின் கடற்கரை, நூறாண்டுகளாக இருக்கும் மெஸ்கள் என சுற்றிக்காட்டிவிட்டு ஒரு தகவலைச் சொல்கிறார். திருவல்லிகேணியில் மெஸ்ஸில் நிரந்த வாடிக்கையாளர் ஆகவேண்டுமெனில் மூன்று நாட்கள் புது வாடிக்கையாளருக்கு சாப்பாடு போட ஒப்புக் கொள்வார்களாம் முதலாளிகள். சாப்படை வீணாக்காமல் சாப்பிடுகிறாரா, உணவை மதிக்கிறாரா, மற்றவர்கள் அருவெறுக்கும்படி சாப்பிடாமல் இருக்கிறாரா, சத்தமாக ஏப்பம் விடுகிறாரா என்பதையெல்லாம் கணக்கில் கொண்டே வாடிக்கையாளர்களாக சேர்த்துக் கொள்வார்களாம். கண்டிப்புக்கு பெயர் பெற்றவர்கள் இந்த மெஸ் உரிமையாளர்கள் என்கிறார்.

சென்னை சென்ட்ரலில் இருந்த ஜட்கா வண்டியைப் பற்றிய தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. அந்த வண்டிகளின் குதிரைகளுக்கும் ஜட்கா வண்டி ஒட்டுபவர்களுக்குமான உறவு குறித்து அற்புதமாக சொல்லியிருக்கிறார். ‘முன்னுக்கு வா..முன்ன வா’ என்று ஜட்கா வண்டியில் அமரும் பயணிகளுக்கு ஏதாவது வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே வரும் வண்டியோட்டிகள் குறித்த கட்டுரையை முடித்த இடம் நெகிழ வைத்துவிடுகிறது.

சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் வால்டாக்ஸ் சாலைக்கு ஏன் அந்த பெயர் என்று தெரியவில்லை என்று எழுதியிருக்கிறார். முதலாம் உலகப்போர் சமயம் சென்னைக்குள் கடல்வழி தாக்குதல் நடைபெறக்கூடாது என்று மக்களிடம் வரி பெற்று ஒரு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதிகள் வாக்டாக்ஸ் ரோடு என்று பெயர் பெற்றது என்று தமிழ்மகன் அவர்கள் எழுதிய ‘ஞாலம்’ நாவலில் தகவல் கிடைத்தது.

மாம்பலம், திநகர் பற்றியத் தகவல்கள், சூளைமேட்டில் தான் அதிகமும் தமிழ் மருத்துவர்கள் இருந்தார்கள் என்பது, பூங்கா நகரத்தில் சீன பல் மருத்துவர்கள் இருந்தார்கள் என்பதும் அவர்களிடம் தகப் பல் கட்டிக் கொள்ள விரும்புவார்கள் என்கிற விஷயங்களும், திரையரங்குகள் பற்றியும் பூங்காக்கள் குறித்தும், பழைய புத்தகங்கள் கிடைக்கும் இடங்களையும்  எழுதியிருக்கிறார்.

புறநகர் ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிறித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான காரணத்தைச் சொல்லியுள்ளார். பெரம்பூர் லூர்துமாதா தேவாலயம், பிரான்சில் உள்ள லூர்து மாதா கட்டடத்தின் மாதிரியைக் கொண்டு கட்டப்பட்டது என்கிறார். பெரம்பூரில் அப்போதைய டான்பாஸ்கோ பள்ளியின் தலைமையாசிரியர் வீட்டுக்குச் செல்கிறார் அசோகமித்திரன். அவர் ஒரு பாதிரியார்.. அந்த வீட்டின் தரையைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார். சண்டிகர் நகரில் நேக்சந்த் என்பவர் மார்பிள் தயாரிப்பில் பிரபலமானவராம். அவரால் உருவாக்கப்பட்ட அந்தத் தரை ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டதைப் போன்ற அழகில் இருந்ததைச் சொல்லி, அந்த வீடு இப்போது இல்லாமல் போய்விட்டதை கவலையோடு குறிப்பிடுகிறார்.

ஒரு ஊரைப் பற்றி அங்கேயே வாழ்பவர்கள் எழுதுவது பெரிய அதிசயமேயில்லை. ஆனால், அதை எப்படி எழுதுகிறார்கள் என்பது முக்கியம். சென்னை போன்ற பெருநகரத்தின் வளர்ச்சியைப் பார்த்தவர் அசோகமித்திரன். பல இடங்களுக்கு காலாற நடந்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தையும் ஆத்மார்த்தமாக நேசித்திருக்கிறார். ஒருகாலத்தில் எப்படி இருந்தது தெரியுமா என்கிற அங்கலாய்ப்பு இவர் எழுத்தில் எங்குமே இல்லை. இதை அவர் கவனமுடன் தவிர்த்திருக்கிறார் என்பதை விடவும், யதார்த்தத்தைப் புரிந்து வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொன்றும் தகவலாக இல்லாமல் பின்னணியோடும், சமூக யதார்த்தத்தோடும், ஆச்சரியத்தோடும், அழகியலோடும், மனிதத்தன்மையோடு அசோகமித்திரன்ம் எழுதியதாலேயே இந்தப் புத்தகம் பல அடுக்குகளில் சிறந்த ஒன்றாக இருக்கிறது.

சென்னை என்றாலே காரணமே இல்லாமல் ஒவ்வாமை கொண்டுள்ள வெளியூர்வாசிகளுக்கு இந்தப் புத்தகத்தை பரிசளித்து படிக்க வைக்க வேண்டும்,.

கு.அழகிரிசாமியும், பாரதியாரும் திருவல்லிக்கேணி வீதிகளில் இப்போதும் வலம் வந்துகொண்டிருப்பார்கள் என்றால், அசோகமித்திரன் சென்னையின் காற்றோடு வலம் வந்து கொண்டிருப்பார் என்று தான் இதைப் படித்து முடித்ததும் நினைத்துக் கொண்டேன்.

பதிப்பகம் : காலச்சுவடு

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
A M KHAN
A M KHAN
21 days ago

very nice