டேவிட் க்ரோனன்பெர்க் (David Cronenberg) கனடா நாட்டு இயக்குனர். முற்றிலும் வித்தியாசமான படைப்புகளைத் தந்திருப்பவர். பள்ளிக்கூட காலகட்டத்திலேயே கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். அவை யாவும் விஞ்ஞான புனைவு இதழ்கள். அறிவியலின் மேல் கொண்ட நாட்டம் காரணமாக ஆராய்ச்சிப் படிப்பினை மேற்கொண்டிருந்தார். மிகத் தற்செயலாகத் தான் திரைப்படத் துறைக்கு அவர் நுழைந்தார். தன்னுடைய அதீத கற்பனைக்கு திரைப்படம் எந்த வகையில் உதவி செய்யும் என்கிற சந்தேகம் அவருக்குத் தொடக்கத்தில் இருந்தது. தொடக்கத்தில் பெரிய அளவில் செலவுகளின்றி சில குறும்படங்களை இயக்கினார். அவை யாவும் விஞ்ஞானப்புனைவுகளே. அப்படித் தான் திரைப்படத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்கிறார். திகில் அமானுஷ்யப் படங்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவை யாவும் அப்போது தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருந்தன. அதனால் டேவிட் க்ரோனன்பெர்க் தனது கதையை வித்தியாசமானதாகக் காட்ட நினைத்தார். ஒரு மனிதனின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவதும், வடிவமைப்பதும் அவனுடைய உடலே என்பதை நம்பினார். அதை எப்படிக் காட்சிப்படுத்துவது என்று முயற்சி செய்து வெற்றியும் பெற்றார். அது வரைத் திரைப்படங்கள் இதனைக் காட்டியதில்லை. Body Horror என்கிற புது வகைமையை அப்படித்தான் திரைப்படங்களில் தோற்றுவித்தார். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் டேவிட் க்ரோனன்பெர்க் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு Consumed என்கிற நாவலை எழுதினார். அது பரவலான கவனத்தையும் பெற்றுள்ளது.
- பதின் பருவத்தில் நீங்கள் நாவல் எழுதியிருக்கிறீர்கள். திரைப்படத்துறைக்கு வந்தபிறகு நீண்டதொரு இடைவெளி எழுத்துத்துறையில் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. திரும்பவும் நாவல் எழுதுவதற்கு எப்படி திரும்பினீர்கள்?
நாவலாசிரியர் ஆக வேண்டும் என்கிற ஆசையை நான் எப்போதுமே தொலைத்ததில்லை. கடைசி முறையாக நாவல் எழுத முயற்சி செய்தது 1971ஆம் ஆண்டு. அப்போது ஃபிரான்சின் தெற்குப்பகுதியில் இருந்தேன். அப்போது எனக்கு நான் முழுமையான இயக்குனராகவே இருக்கப்போகிறேனா, வணிகப்படங்களை இயக்கப்போகிறேனா என்கிற தெளிவு எதுவும் இல்லை.
சினிமா என்னைக் கடத்திக் கொண்டுபோய்விட்டது. சில் மாதங்களுக்கு முன்பாக கனடாவின் பென்குயின் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் எனக்கு ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை அனுப்பி வைத்தார். என்னுடைய திரைக்கதைகள் அவரை எப்போதுமே ஈர்ப்பதாகவும், எனக்குள் ஒரு நாவலாசிரியன் இருப்பதை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். ‘இதற்கு முன்பு ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா? என்று கேட்டார். ஐம்பது வருடங்களுக்கு முன்பு நாவல் எழுதியதைப் பற்றி அவரிடம் சொன்னேன். திரும்பவும் எழுத இயலுமா என்று கேட்டார். எனக்கும் எழுதினால் தான் என்ன என்று தோன்றியது. திரைக்கதையாகத் தொடங்கிய ஒரு கதை அப்படியே பாதியில் நின்றது. அதை அப்படியே நாவலாக எழுதிவிடலாம் என்று நினைத்தேன். ‘Consumed’ நாவல் எழுதுவதற்கு எனக்கு எட்டு வருட காலங்கள் ஆனது. இந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டர் முன்பாக எவ்வளவு நேரம் இந்த நாவல் எழுதுவதற்காக செலவழித்தேன் என்பது தான் முக்கியம். சொற்பமான நேரமே என்னால் ஒதுக்க முடிந்தது. அதற்குள் நான்கு திரைப்படங்களை முடித்துவிட்டேன். கொஞ்சமாக எழுதிவிட்டு மீண்டும் ஓன்றரை வருடங்களுக்குப் பிறகு எந்த இடத்தில் விட்டேனோ அங்கிருந்து மீண்டும் சிந்தித்துத் தொடங்குவது என்பது என்னால் இயலாத காரியமாக இருந்தது. அதனால் ஒரேடியாக எழுத உட்கார்ந்து முடித்தேன்.
- நாவலுக்கும் திரைக்கதை வடிவமைப்புக்குமான முக்கிய வித்தியாசமாக எதைப் பார்க்கிறீர்கள்?
திரைக்கதை என்பது ஒரு புதுமையான கலப்பின மிருகம் போன்றது. நல்ல வசனங்கள் எழுதி கதையையும் வளர்த்தெடுத்தால் நல்ல திரைக்கதையாசிரியராக முடியும். திரைக்கதையில் நீங்கள் முப்பத்தைந்து வயதான, அழகான என்று தான் எழுத முடியும். நாவல் என்றால் ஒரு கதாபாத்திரத்தை உங்களின் எண்ணத்தில் உருவாக்குகிறீர்கள். நீங்கள் அதற்கொரு உடையைத் தருகிறீர்கள், ஒளியமைப்பை உருவாக்குகிறீர்கள். இது ஒருவகையில் நமக்குள் ஒரு திறப்பினை உண்டாக்கும். தொடர்ந்து செயலாற்ற ஒரு தைரியத்தைத் தரும். நாவல் என்பது தனி, அது திரைக்கதைக்கு சமமாகாது.
- ஒரு நேர்காணலில் ஃபெலினி இப்படி சொல்லியிருந்தார். “ஒரு படைப்பு அது புத்தகமாகவோ, ஓவியமாகவோ, இசையாகவோ, திரைப்படமாகவோ இருக்கலாம், இது ஒருவரை அவர்களின் ஆட்டிப்படைக்கும் எண்ணங்களில் இருந்து வெளியேற்ற உதவும் என்றார். ஒரு திரைப்படத்தை முடிக்கும்போதோ, நாவல் எழுதி முடிக்கிறபோதோ உங்களுக்கு இப்படித் தோன்றியிருக்கிறதா?
இது ஒரு அடக்கமுடியாத ஆவலின் விளைவே. தொடர் எண்ணங்களை இருந்து கிடைக்கிற விடுதலை என்று என்னால் நினைக்க முடியவில்லை. இந்தப் பணிகள் எல்லாமே ஒரு களத்துக்குள் செயல்படுபவை. ஒரு குறிப்பிட்ட படைப்பை முடித்ததும் எனக்கு அவர் சொன்னது போன்றதான உணர்ச்சி நிலை ஏற்பட்டதில்லை. இவையெல்லாம் தத்துவ விசாரணைகள் தான். ஒரு படைப்பு உருவாகும்போது உங்களுக்குள் உள்ள மனிதன் ஒருவனுடன் நீங்கள் உரையாடிக் கொண்டிருப்பீர்கள். இது ஒவ்வொரு படத்துக்கும் மாறுபடும், ஒவ்வொரு படைப்புக்கும் வேறுபடும். எனக்கு ஃபெலினியை மிகப் பிடிக்கும். ஆனால் இனி மக்கள் அவரை நினைவு வைத்திருக்க மாட்டார்கள் எனபதை என்னால் நம்ப முடியவில்லை.
- நீங்கள் உங்கள் திரைப்படங்களில் தொடர்ந்து தற்கொலை குறித்த காட்சிகளை வைக்கிறீர்கள். கதாநாயகன் தன்னைப் பலியிட்டுக் கொள்வது போன்றதான படைப்புகளைப் பார்க்க முடிகிறது. சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை என்பது ஒரு அருமையான விடுதலை உணர்வு என்று சொல்லியிருந்தீர்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில், திரையில் கதாபாத்திரங்கள் இறக்கும்போது உங்களுடைய மரணத்தை நீங்கள் ஒத்திகைப் பார்ப்பதாக சொல்லியிருந்தீர்கள்.
ஆமாம். இது போன்ற நாடகத்தனமான பேச்சை சில வருடங்களுக்கு முன்பு பேசியிருக்கிறேன். ஆனால் அதில் உண்மை இருக்கிறது. நமது வாழ்வை முடித்துக் கொள்வது என்பது ஈடுஇணையற்ற ஒரு கருத்தாக்கம். ஏன் சில மதங்கள் தற்கொலைக்கு எதிரானதாக இருக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். சில மதங்கள் தற்கொலை ஒரு விடுதலையுணர்வு என்றும் போதிக்கின்றன. ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும்போது எப்போது வேணுமானாலும் ஒருவர் தன் வாழ்வை முடித்துக் கொள்ள முடியும் எனபதை அறிவுறுத்திவிட்டே செல்கிறார். நாமும், இன்னும் சொல்லப்போனால் ஒரு விலங்கும் கூட ஒட்டுமொத்த வாழ்க்கையை பாதுகாப்பதற்காகவே தான் செலவிடுகிறோம். இது அப்படியே தற்கொலைக்கு எதிரானது. நீங்கள் சொல்லலாம், இது மனித இனம் மட்டுமே செய்யக்கூடியது. சமீப காலங்களில் நீடித்து வாழ்தல் என்பதும் அரசியல்மயமாக்கப்பட்டுவிட்டது. மக்கள் நீண்ட காலம் வாழ்கிறபோது, அதற்கான வலியையும் சேர்த்தே அனுபவிக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் தற்கொலைக்கு சமமானது தானே. அனால் நமக்குள் ஒரு சக்தி மறைந்திருக்கிறது. அது தான் நம்மை தற்கொலைக்கும், வாழ்தலுக்கும் இடையில் இருத்துகிறது.
- உங்களுடைய படங்களில் உள்ள உரையாடல்கள் நேரடியாக ஒருவருக்கொருவர் பார்த்து பேசுவதாக இல்லாமல் இருக்கின்றன. இடையில் தொழில்நுட்பம் சார்ந்த ஏதோ ஒன்று குறுக்கிடுகிறது. ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இடையில் ஒரு மாற்று வழிதேவைப்படுகிறதா?
நமக்கு பாலியல் தொடங்கி தொடர்புக்கும், உணவுக்கும் எல்லாவற்றிற்கும் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.
அது அவசியமான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. நம்மிலிருந்து ஒரு நீட்சியாகத் தான் தொழில்நுட்பத்தை நான் பார்க்கிறேன். ஐம்பதுகளில் வெளிவந்த பல விஞ்ஞானப் புனைவு கதைகளில் தொழில்நுட்பம் என்பது மனிதனை சீரழிக்க வந்த ஒன்றாகவே காட்டப்பட்டது. ஆனால் அது அப்படியானதல்ல. அது மனிதனின் சிறந்த மற்றும் மோசமான பகுதிகளின் நீட்சி. இன்றுள்ள போர் இயந்திரங்களைப் பாருங்கள். அதிகாரம் என்கிற நம்முடைய போதை ஏற்படுத்திய கற்பனை தான் உலோக ஆயுதமாக மாறியிருக்கிறது. அது நம்மிலிருந்து ஒரு நீட்சி தானே. ஆக, தொழில்நுட்பம் என்பது நமது வாழ்க்கையை பாதிக்கிறது, ஒன்று கலந்திருக்கிறது, நமக்குள் உறைந்திருக்கிறது, நாமாகவே இருக்கிறது. நம்முடைய நாகரீகத்தின் வளர்ச்சியிலும் இதைப் பார்க்க முடியும். இது பாலியல் வரைக்கும் நம்மிடையே உருக்கொண்டுள்ளது. இது என்னைப் பரவசப்படுத்துகிறது.
- உங்களுடைய படங்களின் தலைப்புகளும், கதாபாத்திரங்களின் பெயர்களும் புதுமையாக , எதையோ குறிப்பதாக இருக்கின்றன. எப்படி இது அமைகிறது?
எனக்கும் கூட இது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. புதிராகக் கூட இருக்கிறது. கதாபத்திரங்களுக்கு பெயர் வைப்பதென்பது என்னைப் பொறுத்தவரை முக்கியமானது. ஒருவருக்கு முழு வாழ்க்கையையும் அடையாளத்தையும் அதன் மூலமாகத் தருகிறோம் இல்லையா! அதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு அது எப்படி அமைகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அது எப்படியென்றால், ஒரு ஷாட் வைக்கும்போது அது சரியாக இருக்குமா இல்லையா என்று யோசிப்பதைப் போல பெயரினையும் வைத்துவிடுகிறேன். அது ஒரு உள்ளுணர்வு. இதற்கென்று சட்டத்திட்டங்கள் இல்லை. இது குறித்து கவனிக்கப்படுவதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சில நேரங்களில் ஏதாவது ஒரு பெயரை வைத்து ஸ்க்ரிப்டினை எழுதத் தொடங்குவோம். ஒருகட்டத்தில் தான் தெரியவரும், இது இந்தக் கதாபாத்திரத்துக்கு தவறாக பொருந்துகிறதே என்று. ஏனெனில் அந்தப் பெயருக்கு தொடர்பில்லாதவாறு அந்தக் கதாபாத்திரம் வேறொரு படிநிலையை அடைந்திருக்கும். சில நேரங்களில் பெயரை வழக்கறிஞர்கள் மாற்றி விடுவார்கள்.
அதாவது நாம் நம்முடைய திரைக்கதையை அனுப்பி வைப்போம். அதனை தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் வாசிப்பார்.
இப்படித் தான் The Brood படத்தில் ஆலிவர் ரீட் மனநல மருத்துவராக வருவார். அவருக்கு நான் வைத்திருந்த பெயர் வேறு. எனக்கு அந்தப் பெயர் பிடித்திருந்தது. ஆனால் டொராண்டோவில் அதே பெயரில் ஒரு மனநல மருத்துவர் இருக்கிறார் என்று தெரியவந்தது. உடனேயே வழக்கறிஞர் அந்தப் பெயரை மாற்றச் சொல்லிவிட்டார். ஒருவேளை அந்த மருத்துவர் மானநஷ்ட வழக்குத் தொடுக்கக் கூடும் என்கிற அச்சம் தான் காரணம். ஏனெனில் அதில் அந்தக் கதாபாத்திரம் கெட்டவன். இதே போல ஒரு போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு பொறுத்தமான எனக்குப் பிடித்த பெயரை வைத்திருந்தேன். அதையும் வழக்கறிஞர் மாற்ற சொல்லிவிட்டார். அதே பெயரில் ஒரு காவல் அதிகாரி இருக்கிறாராம். ஒரு கதாபாத்திரத்துக்குப் பெயர் வைத்து அந்தப் பெயரோடு பேசி, பழகி உரையாடி அதை கடைசி நேரத்தில் மாற்றுவது கடினமானதுதான். ஆனால் யோசித்தால் வழக்கறிஞர்கள் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது.
எழுதப்படாத சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே திரைத்துறை இயங்கிவருகிறது. உங்களுடைய படைப்பினை இந்த சட்டத் திட்டங்கள் பாதிக்கிறதா? இதைப் பற்றிக் கூற முடியுமா?
முதலில், சட்டத்திட்டங்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை. இரண்டாவது, ஒரு படைப்பாளராக இந்த சட்டதிட்டங்களினால் ஏற்படும் , மன வேற்றுமைகள். இவற்றோடு தான் பயணிக்க வேண்டியிருக்கும். நான் ஒரு உலகத்தை உருவாக்குகிறேன். அங்கு அரசு இல்ல, ஜனாதிபதி இல்லை, இராணுவமும் இல்லை. ஆனால் சட்டதிட்டங்கள் மட்டுமே உள்ளன. அது தான் உங்களிடம் எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் என்பதை முன்வைக்கின்றன.
Crimes of the Future படத்தில் மனிதம் மற்றும் சூழலியல் அழிவை நோக்கி செல்லும்போது கலையின் பங்கு என்னவாக இருக்கும் என்று சொல்வதாக புரிந்து கொள்ளலாம். சால் மற்றும் கேப்ரிஸ் இருவரும் படத்தில் நிகழ்த்துக்கலை கலைஞர்கள். அவர்களின் உடல்கள் கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. சால் கெட்டுப்போன உடலை கலையாக மாற்றுகிறார். லாங் (இவர் மனித பரிணாமத்தை மீட்டுருவாக்கம் செய்யும் ரகசியக் குழுவின் தலைவர். ஸ்காட் ஸ்பீட்மேன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்) மற்றும் இவரது குழுவினர் வீணான பிளாஸ்டிக் பொருட்களை ஊடச்சத்தாக மாற்றுவார்கள். கெட்டுப் போன உடலை கலையாகவும், பிளாஸ்டிக்கை ஊட்டசத்தாகவும் மாற்றும் இந்த இரண்டின் அணுகுமுறையும் என்ன என்பதை சொல்ல முடியுமா? இப்படி யோசிக்க வேண்டிய அவசியம் என்ன?
தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்கிற விருப்பம் தான காரணம். மிகுந்த சோர்வான காலகட்டத்தில் தான் நாம் கூடுதல் நம்பிக்கையுடன் பிழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்தக் கதாபத்திரங்கள் இதனை நேர் எதிராக செய்கிறார்கள். நீங்கள் இதனை இன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்றால், இப்படி சொல்லலாம் , “நாம் இப்போது சூழலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு முக்கிய காரணம் பிளாஸ்டிக். ஒரு தீர்வு என்னவென்றால், உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் பிளாஸ்டிக்கைத் தடை செய்ய வேண்டும். கடலில் கலந்து விட்ட மைக்ரோ ப்ளாஸ்ட்டிக்கினை சுத்தம் செய்ய வேண்டும். இப்போது மனித உடல்களிலும் கலந்துவிட்ட 80 – 90 சதவீதம் மைக்ரோ பிளாஸ்டிக்குகளை அகற்ற வேண்டும். இது சாத்தியம்தானா ? சொல்லுங்கள். நம்மால் இதனைச் செய்ய முடியுமா? முடியாது தானே. பொருளாதாரத்தை பாதிக்கும் எதுவொன்றையும் இரண்டு நாடுகள் சேர்ந்து அனுமதிக்காது.
இரண்டாவது தீர்வு என்பது, நாம் பிளாஸ்டிக்கை சாதகமாக மாற்றலாம். பிளாஸ்டிக்கை ஒரு ஊட்டச்சத்து உணவாக, புரதமாக மாற்றலாம். உயிரியல் அறிஞர்கள் சில பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை பிளாஸ்டிக்கைத் தின்றுவிடக்கூடியவை. அவற்றை உயிர் ஆற்றலாகப் பயன்படுத்தலாம். ஒரு செல் உயிரினம் கூட அதைப் பயன்படுத்தி உயிர்வாழும் என்றால் நம்மால் முடியாதா என்ன? இது அதிர்ச்சித் தரக்கூடிய, நம்பமுடியாத தீர்வாக இருக்கலாம். ஆனால் இது தான் ஏற்ற தீர்வு. ஒரே பிரச்சனைக்கு இரண்டு தீர்வுகள். இரண்டுமே அறிவியல் புனைவு. இது தான் இந்தப் படம்.
- ஒரு மூளை எப்படியெல்லாம் சிந்திக்கும், பயத்தையும், விடாப்பிடியான அச்சத்தையும் எப்படி கைக்கொள்ளும் என்பதை உங்கள் படங்களில் காட்டி வருகிறீர்கள், அது சுவாரஸ்யமானதும் கூட. மூளையின் சிந்தனையை காட்சிப்படுத்த எப்படி முடிகிறது? அதற்கான தாக்கம் எப்படி உங்களுக்குக் கிடைக்கிறது? உங்களுடைய ‘ஆன்டனாவை’ உள்ளுக்குள் திருப்பி வைப்பீர்களா?
நான் அதனை வெளிப்புறமாக திருப்புகிறேன். அது எனக்குள் பிரதிபலிக்கிறது. என்னுடைய இயல்பென்பது எதையும் மிக நீண்ட நேரமாக மனதிலேயே வைத்துக் கொண்டு கவலைப்படுபவன் அல்ல, என்னுடைய உணர்ச்சியின் பாதையை அறிந்தவன். ஏனெனில் நம்மை வழிநடத்துவது அற்புத பேராற்றல் கொண்ட நரம்பு மண்டலங்கள் தான். உங்களுடைய நரம்பு மற்றும் உணர்வு மண்டலங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைக் கொண்டு உண்மைத்தன்மையை அறிய முடியும். உங்கள் கால்களுக்கு அருகில் நாய் ஒன்று அமர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இருவரும் தனிதனி உணர்வாளர்கள் என்பது தானே உண்மையானதாக இருக்க முடியும். ஆனால் உங்களுடைய உணர்வுகளை நீங்கள் புதுப்பித்தால் நாயின் உண்மைத்தன்மைக்குள் நீங்கள் சென்றுவிட முயும். இது ஏற்றுக் கொள்வதற்கு சிரமமானதுதான். ஏனெனில் நமக்கு முன்பாக உள்ள உலகம் உறுதியானதாகவும், யதார்த்தமானதாகவும் இருக்கிறது. பார்க்கும் வண்ணங்கள் உண்மையானதாக இருக்கின்றன. ஆனால் அது அப்படியே உண்மையானதல்ல என்பது தான் உண்மை. கான்ட், பிளேட்டோ போன்றவர்கள் உண்மைக்கு பின்புள்ள உண்மையைக் கண்டுகொள்வதில் பைத்தியக்காரநிலையை அடைந்திருக்கிறார்கள்.
ஆக ஒரு மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் அமைதித்தன்மையை மாற்றினால் என்னவாகும்? நாம் மது அருந்துவதை அமைதித்தன்மைக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த அமைதியை நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? எப்படி அதனோடு வாழ்கிறோம்? இந்தக் கேள்விகளும், மக்கள் தங்களது சுயத்தை மடைமாற்றம் செய்கிறார்கள் என்பதையும் தான் கேள்வியாக முன்வைக்கிறேன்.
- திகில், அதிர்ச்சி போன்றவை இதிலிருந்து தான் உங்களுக்குத் தொடங்கியதா?
ஆமாம். எல்லோருமே நான் தான் திரைப்படங்களில் body horrorஐ (வன்முறை, உடலில் ஏற்படும் காயங்கள், பாலியல் போன்றவற்றை வலிகளின் மூலமாக உணர்த்துவது) அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அத்தனை பயமுறுத்துவதாக இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. நீங்கள் ஒரு இயக்குனர், குறைந்த பட்ஜெட்டில் ஒரு திகில் படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உங்களைச் சுற்றிலும் பலர் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களைத் தனித்து எப்படிக் காட்டுவீர்கள்? நான் குறிப்பிட்ட களத்தைக் காட்ட நினைத்தேன் ஆனால் அதே சமயம் புலனாகாத தன்மையைத் தவிர்க்கவும் நினைத்தேன். நான் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அதே சமயம் அதன் அடியாழங்களில் ஒரு கோட்பாடு இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன். நரம்புமண்டலங்கள் நிஜமென்றால் அதில் ஒரு அற்புதமான அமைப்பு இருக்கிறதென்றால் அதை எப்படி கதையாக்குவீர்கள்? உடனேயே நாம் உண்மையை மாற்றுவதற்கு உடலைத் தான் மாற்றியாக வேண்டும். இது தான் என்னை videodrome படத்தினை என்னை இயக்க வைத்தது.
- உங்களுடைய கதாபாத்திரங்கள் தங்களது அலுவலை ஒரு மதம் போல் நினைப்பவர்கள். அவர்களை அலுவல் சுரண்டும் அல்லது அவர்கள் தங்கள் பணிகளைச் சுரண்டுவார்கள். இது கதை சொல்லும் உத்திக்காக உருவாக்கினீர்களா அல்லது அனுபவத்தின் வெளிப்பாடா?
Dead Ringers படத்தை எடுத்துக் கொண்டால் அலுவல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமமாக கையாள்வது என்பது பற்றியான எனது கருத்து என்று நினைக்கிறீர்களா? அப்படியல்ல. என்னுடைய கதாபாத்திரங்கள் மத நம்பிக்கைவாதிகளாக இருப்பதை நான் விரும்பவில்லை. நான் அதை உற்சாகப்படுத்துவதில்லை. என்னைப் போன்றவர்கள் எதிலும் ஒரு அமைப்பு வேண்டும் என்று நினைப்போம். அந்த அமைப்பு செயல்படவேண்டும், அதற்கென்று விதிமுறைகள், சட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்போம். அதனால் எனக்கு இவற்றையெல்லாம் விஞ்ஞானிகளிடமும், கலைஞர்களிடமும் சிறு இனக்குழுவிலிருந்தும் பெற்றுக்கொள்கிறோம். ஒரு குழுவாக இணைந்து ஒரு யதார்த்தத்தை உருவாக்குவது சுவாரஸ்யமாக இருக்கிறது.
- நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைத் திரைப்படமாக் எடுக்க முடிகிறதா?
கற்பனையில் இருந்து தான் தரிசனத்தைப் பெறுகிறேன். ஒரு படம் உருவாகும் முன் அதைப் பற்றிய மாபெரும் கற்பனை நமக்கு இருக்கும். படமாக வெளிவந்த பிறகு நீங்கள் தான் கற்பனையின் தரிசனத்தையும் கண் முன் இருக்கும் படத்தையும் ஒப்பிட வேண்டும். நான் இவற்றையெல்லாம் செய்வதில்லை. ஒரு படம் எடுப்பதென்பது தன்னளவில் உருவாகிவருவது. நமக்கு ஆச்சரியங்களைத் தரக்கூடியது. பல நுணுக்கமான விவரணைகளின் ஒட்டுமொத்த வடிவம் தான் திரைப்படங்கள்.