சத்ரியனுக்கு அழிவில்லை

0
200

ஒரு மதிய நேரம். கேபிள் டிவி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலகட்டத்தில் ‘சத்ரியன்’ படத்தை நானும் எனது அண்ணனும் பார்த்தோம். ஏற்கனவே அண்ணன் படத்தினைத் திரையரங்கில் பார்த்திருந்ததால், நான் படம் பார்க்கும்போது, “அடுத்து என்ன நடக்கும்?” என்று கேட்டபடி இருந்தேன். ஒருவகையில் யூகிக்கமுடியாத காட்சிகளாக அடுத்தடுத்து இருந்தது தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

அதன்பிறகு சத்ரியன் படத்தினைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நல்ல படமும் அறிந்தும் அறியாமலும் ஒரு குணத்தை, நிறத்தை, மனநிலையை உருவாக்கிக்கொள்ளும். அப்படி சத்ரியன் படத்தை நினைத்தால் உடனே நினைவுக்கு வருவது அதன் குறைந்த ஒளி.

போலிஸ் படம் என்று தமிழில் வெளிவந்திருக்கும் படங்களில் மறுக்க முடியாத ஒன்று இது. இந்தப் படம் வெளிவந்தது 1990 ஆம் வருடம். தமிழ் சினிமா தனது முகத்தை மற்றொரு தளத்துக்கு மாற்றிக் கொண்ட காலகட்டம். இந்த வருடத்தில் வெளிவந்த படங்கள் அநேகமாக அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதற்கு முன்பு கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா தன்னை எப்படியெல்லாம் தகவமைத்துக் கொண்டதோ அதன் உச்சத்தைத் தொட்ட வருடம் இது. சாமி படம், திகில் படம், குடும்ப உறவுகள் குறித்து சொன்னவை, நகைச்சுவை படங்கள், கிராமத்தை மையமாகக் கொண்டவை, பாடல்களால் வெற்றி பெற்றவை, பரிசோதனை முயற்சி படங்கள் என எல்லாவற்றின் கலவையாக இந்த வருடம் வந்த படங்கள் அமைந்தன. தமிழ்த் திரைப்படத்தில் ஒளிப்பதிவு தொடங்கி, படத்தொகுப்பு, கலை இயக்கம் என தொழில்நுட்பமும் கதையும் கோர்த்து மாயம் செய்த படங்களின் அஸ்திவாரத்தை 90களின் படங்கள் செய்தன. நடிகர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் கடந்து தொழில்நுட்ப வல்லுனர்களின் பெயரையும் தெரிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டிய காலகட்டம் இது.

சத்ரியன் மணிரத்னம் அவர்களின் கதை, திரைக்கதையில் கே. சுபாஷ் அவர்களால் இயக்கப்பட்ட திரைப்படம். மணிரத்னத்தின் ஆலயம் நிறுவனம் படத்தினைத் தயாரித்திருந்தது. படம் பெரும் வெற்றி. மீண்டும் மீண்டும் பார்வையாளர்களை திரையரங்குக்கு வரவைத்தது. இப்போது வரையிலும் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நாயகனின் படம் எப்போது மறுமுறை திரையிடப்பட்டாலும் வசூலைக் குவிக்கும் என்றால், அது விஜயகாந்த் நடித்த படத்திற்கு தான்.

விஜயகாந்த் அவர்களின் முக அமைப்பும், வசன உச்சரிப்பும், உடல்மொழியும் அவரைத் தங்களது பாகமாய் பார்வையாளர்களை நினைக்க வைத்திருந்தது. விஜயகாந்தினைப் பொறுத்தவரை அவர் தனது பலம், பலவீனங்களைத் தெரிந்து வைத்திருந்தார். தன்னால் ஆகக்கூடிய ஆகச்சிறந்த திறமைகளை அவர் முழுவதுமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் நகைச்சுவையிலும் அவர் மிக இயல்பாக மற்றவர் ஏற்றுக்கொள்ளும்படி நடித்தது அவரது பலம். எம்ஜிஆர் அவருக்கு உதாரண மனிதர் எனபதை பலமுறை மேடைகளில் அவர் சொல்லியிருக்கிறார். அதே நேரம் திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்டு தமிழ், தமிழ்நாடு போன்ற இலட்சியத்தையும் தன்னிடம் வைத்துக் கொண்டார். அதனால் தான் புரட்சிகரமான படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்ததும், தன்னை ஒரு இலட்சியவாதியாக சித்தரித்ததும் அவர் மன அனுமதியோடு ஈடேறியிருந்தது. இதனை அப்போதைய எந்தக் கதாநாயர்களும் இவரளவுக்கு கைகொண்டதில்லை.

பொங்கல் திருநாளுக்கு புலன் விசாரணை வெளிவந்த அதே ஆண்டு அக்டோபரில் தான் சத்ரியன் வெளிவந்தது. இரண்டுமே போலிஸ் கதை. வெவ்வேறு கதைகளைக் கொண்ட படங்கள்.

சத்ரியன் படம் திரைக்கதையில் புதியதொரு பாணியைக் கொண்டிருந்தது. இதற்குப் பின்பாக மணிரத்னம் படங்களில் இந்தப் பாணியை அவர் பின்பற்றத் தொடங்கியிருந்தார். தளபதி, நாயகன், சத்ரியன் மூன்றும் சந்திக்கிற புள்ளிகள் உண்டு. மூன்றிலும் நாயகர்கள் சிறு வயதில் அனாதையாக்கப்பட்டவர்கள். வேறு ஒருவரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டவர்கள். இரத்தத்தையும் வன்முறையையும் கண்டு வளர்ந்தவர்கள். மூவருமே இரக்கக்குணம் கொண்டவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். கோபக்காரர்கள். தங்களுக்கும் தங்களை நம்பியவர்களுக்கும் ஏதேனும் அநீதி நடந்தால் அதற்காக எதையும் எதிர்ப்பவர்கள்.

சத்ரியன் – மனைவியை இழந்து குழந்தைகளோடு அமைதியான வாழ்க்கை வாழும் முன்னாள் போலிஸ் அதிகாரி மீண்டும் போலிஸ் வேலைக்கு சேர்ந்து வில்லனை எதிர்க்கிற கதை. விஜயகாந்த் அப்போது பிரபலமான கதாநாயகன். அவருக்கு ஓபனிங் சீன் என்று எல்லாப் படங்களிலும் தனியாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் மிக சாதரணமாக அறிமுகமாவார். சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த், குழந்தைகளை பள்ளிக்கு கிளப்புபவர், வருமானத்துக்கு ரேடியோ மெக்கானிக் வேலை செய்பவர் என இயல்பான அறிமுகம். இதுவே கதை ஏதோ சொல்லப்போகிறது என்பதை உணர்த்திவிடும். ஒரு பாதி வரை கதாநாயகன் மேல் கதை செல்லாமல் மற்ற கதாபாத்திரங்கள் வழி கதை சென்று கொண்டேயிருக்கும். அதனால் தான் இது வித்தியாசமான திரைக்கதை என்று இன்று பார்க்கும்போதும் தோன்றுகிறது.

பன்னீர்செல்வம் தைரியமான போலிஸ் அதிகாரி என்பதும் ஏதோ ஒரு இறந்தகால அனுபவம் அவரிடம் நிலைத்துள்ளது என்பதெல்லாம் அங்கங்கே கதை சொல்லிக் கொண்டே வருகிறது. ப்ளாஷ் பேக் காட்சி தொடங்கும்போதே அதுவரை பார்வையாளர்களும் சண்டைக்காட்சிக்கென வந்திருக்கும் ரசிகர்களும் என்ன எதிர்பார்ப்பார்களோ அது நிறைவேறுகிறது. இத்தனை விறைப்பான மிடுக்கான கோபக்கார போலிஸ், ‘அநியாயம் பண்றவங்களை இல்லாமப் பண்ணுவேன்’ என்று சபதமேற்ற ஒரு இளைஞன் ஏன் இப்படியான அமைதியான வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும் என்கிற கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்வதில் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அந்தக் கதையும் ஏமாற்றம் தரவில்லை. மனைவி இறந்தபிறகு , இனி இந்த ‘டிபார்ட்மென்ட்’ நம் குழந்தைகளையும் பலி கேட்டுவிடும் என பயந்து வேலையை ராஜினாமா செய்கிறார். தன்னால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற அருமைநாயகம் விடுதலையாகிவிட்டார் என்று தெரிந்தும் எந்த எதிர்வினையும் காட்டாத அளவுக்கு பன்னீர்செல்வம் அமைதியாக இருக்கிறார் என்பது அடுத்த ஆச்சரியம்.

இப்படி அமைதி காப்பதற்காகவா பன்னீர்செல்வம் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கும்? வாளும் வாளும் மோத வேண்டும் அல்லவா? மற்ற திரைக்கதைகளில் இருந்து இந்தப் படம் வித்தியாசப்படும் இடம் இது தான். வில்லனே முன்வந்து தன்னை எதிர்த்தாக வேண்டும் என்று கதாநாயகனைத் தூண்டுவது. “வரணும்..பழைய பன்னீர்செல்வமா வரணும்” என்று கடைவாய் சிரிப்போடு அருமைநாயகம் சொல்வது மிகப்புதிது. “இரத்தம் கொதிக்கல..” என்று தன்னை எதிர்க்க சொல்லி கடுப்பேற்றும் கதாபாத்திரம்.

“இல்லை” ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டு அமைதியாக செல்லக்கூடிய பன்னீர்செல்வம் எப்படி அருமைநாயகத்தை எதிர்கொள்கிறார் என்பதை விறுவிறுப்பாக சொன்னதில் படம் வெற்றி கண்டது.

அருமைநாயகத்தின் கதாபாத்திரம் அட்டகாசமானது. திலகனின் குரலும் அலட்டிக் கொள்ளாத உடல்மொழியும், அந்தக் கூர்மையான பார்வையும்..எதுவும் செய்யாமல் ஆனால் அச்சமூட்டக்கூடியவை.

சிறைச்சாலையில் அவருக்கு இருக்கும் செல்வாக்கும் யாரையும் நேர் எதிரியாக மோதாத அவரது குணமும் அவரது அறிமுகக்காட்சியிலேயே நமக்குத் தெரிந்துவிடும்.

தனக்கு எதிரியாக யார் இருக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கிறார். அவர்களுடன் மோதுகிறார். தன் மீதான அச்சம் யாருக்கும் குறைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அருமைநாயகத்தை பன்னீர்செல்வம் வீட்டுக்குள் புகுந்து இழுத்துக் கொண்டு போகும் காட்சியை அருமைநாயகம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். தன்னை அவமானப்படுத்திவிட்டு அமைதியாக பன்னீர்செல்வம் வாழும்வரை தன் மீதான மதிப்பு எவருக்கும் ஏற்படப்போவதில்லை என்பதை கணித்திருக்க்க வேண்டும். தன்னை எதிர்த்தவர் அமைதியாக வாழக்கூடாது என்பதும் அவர் எண்ணமாக இருந்திருக்க வேண்டும்.
“நம்ம மேல பயம் இருக்கற வரைக்கும் தான் நம்மள எல்லாரும் மதிப்பாங்க” என்கிற பின்னாட்களில் வந்த வில்லன் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி அருமைநாயகம்.

பன்னீர்செல்வதுக்குக் கூட தனது பலம் பலவீனம் தெரிவதில்லை. அருமைநாயகத்துக்கு பன்னீர்செல்வத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கிறது. கடைசி வரை உணர்ச்சியின் வேகத்தில் முடிவெடுத்து நடந்து கொள்ளும் பன்னீர் செல்வத்துக்கு எதிராக எதையும் திட்டமிட்டு செய்து காட்டும் ஒருவராக நிற்கிறார் அருமைநாயகம்.

பன்னீர்செல்வத்தை எதிர்ப்பது என்பதை விட அவருடன் போட்டியிடுவது அருமைநாயகத்துக்கு பிடித்தமானதாய் இருக்கிறது. “உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னோட அதே வெறி, கோபம், சாவுக்கு பயப்படாதது எல்லாம் உன்கிட்டயும் இருக்கு” என்கிறார் அருமைநாயகம்.

இருவருமே ஒரே பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஒருவர் போலீசாகி இருக்கிறார். மற்றவர் நேரெதிரில் குற்றம் செய்பவராக இருக்கிறார்.
கடைசி காட்சி வரை இரண்டு பேருமே தங்களது குணத்தை விட்டுக் கொடுப்பதே இல்லை. அருமைநாயகம் பற்றித் தெரிந்தும் தனியாக வந்து சிக்கிக் கொள்கிறார் பன்னீர்செல்வம். பன்னீர் செல்வத்தின் பலம் தெரிந்து நாற்பது அடியாட்களோடு வந்து நிற்கிறார் அருமைநாயகம்.

கடைசிக் காட்சியில் சிதிலங்கள் கொண்ட கடற்கரையில் நின்று கொண்டு,

“பாத்தியா செல்வம்..இது தான் நான் பொறந்த இடம்..எல்லாம் அழிஞ்சு போச்சு. நான் அழிய மாட்டேன். உன்னை மாதிரி எத்தனை பன்னீர் செல்வம் வந்தாலும் நான் அழிய மாட்டேன். உன்னால முடியாது பன்னீர் செல்வம்”

“சத்ரியனுக்கு சாவே இல்லடா” என்று சாவின் விளிம்பு வரை சென்று மீண்டும் முதலில் இருந்து எழுந்து வருகிற ஒருவராய் பன்னீர்செல்வம் மாறுகிறார் என்று கதை முடிகிறது.

பானுப்ரியா கதைக்குள் வந்ததும் கதை வேறொரு வடிவம் பெறுகிறது. ஒரு கட்டம் வரை துறுதுறுப்பான பானுப்ரியா தான் படத்தினை ஆட்சி செய்வார். சலசலவென்று வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் பெண் இவர். பன்னீர்செல்வத்தின் கேலி கிண்டல்களை பொருட்படுத்தாத அறுந்த வால் கதாபாத்திரம்.
மறக்க முடியாத தமிழ்க் கதாநாயகி பாத்திர வடிவமைப்பில் பானு கதாபாத்திரத்துக்கு இடமுண்டு.
“மாலையில் யாரோ மனதோடு பேச” எத்தனை அற்புதமான பாடல். ஒயில் என்கிற ஒரு வார்த்தைக்கு பொறுத்தம் பானுப்ரியா தான் என்பதாக எப்போதும் இந்தப் பாடலைப் பார்க்குந்தோறும் தோன்றும். பானுப்ரியா நல்ல கலைஞர். பரதநாட்டியம் கற்றுக்கொண்ட ஒருவருக்கு உடல் மொழியின் மீது அதிக நினைவு இருக்க வேண்டும். சற்று பிசகினாலும் அந்த பாவனைகள் வந்து நின்று விடும். பானுப்ரியாவைப் பொறுத்தவரை அவர் மேற்கத்திய நடனம் ஆடினாலும் அதன் லயம் மாறாமல் ஆடக்கூடியவர். உடல் மொழியுடன் கூடிய கச்சிதமான நடிப்பு எப்போதும் அவரிடத்தில் வெளிப்படும். நகைச்சுவையை இயல்பாகக் கைகொண்டவர். இந்தப் படத்திற்குப் பிறகு விஜயகாந்த் பானுப்ரியா இருவரின் நடிப்பில் ‘பரதன்’ என்றொரு படம் வந்தது. அதில் இருவருமாக இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார்கள். பானுப்ரியா என்கிற ஒரு கலைஞர் மீது பெரும் மரியாதையும் ஆச்சரியம் தோன்றச் செய்யக்கூடிய பாடல் அது. அவர் ஒரு அற்புதம்.

இரண்டு குழந்தைகளுக்கு அப்பா என்கிற விஜயகாந்த் தான் பல வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸின் ரமணாவாக வந்தபோது நாம் மீண்டும் ரசித்தோம்.

சத்ரியன் படத்தின் எந்தக் காட்சியை எப்படி திருப்பிப் போட்டு எடுத்தாலும் சத்ரியன் காட்சி தான இது என்று நினைவுக்கு கொண்டு வருமளவுக்கு 33 வருடங்களாக இந்தப் படம் நினைவில் தங்கியிருக்கிறது.

தனியாக நகைச்சுவை ட்ராக், டூயட் பாடல்கள் எதுவுமில்லாமல் வழமையான கதை சொல்லல் முறையின் விதியையும் மீறி சொல்லப்பட்ட சத்ரியன் படம் இன்றளவும் ஒரு மைல் கல் தான். புதிய கதைகளோடு காத்திருந்த இயக்குனர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்த படமென்றும் சொல்லலாம்.

‘சத்ரியனுக்கு’ அழிவில்லை.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments