ஆகுதல்

0
81

“உங்களால் ஒட்டுமொத்தமான ஏற்றத்தையும் பார்க்க முடியவில்லை என்றாலும், நம்பிக்கையைக் கொண்டு முதல் அடியினை எடுத்து வையுங்கள்”

இது மார்டின் லூதர் கிங் ஜூனியரின் பிரபலமான வாக்கியம்.

அமெரிக்க பேரரசு ஆப்பிரிக்க வம்சாவளியினரின் துணை இல்லாமல் இத்தனை தூரம் முன்னேறியிருக்க முடியாது என்பதே வரலாற்று உண்மை. இதை மறைக்கவே வெள்ளை இன அடிப்படைவாதிகள் காலம் முழுக்க வெறுப்போடு போராடுகிறார்கள். கடந்த பல நூற்றாண்டுகளாக அமெரிக்க மண்ணில் ஆப்ரிக்கர்கள் எதிர்கொண்ட அவமானங்கள், முரண்பாடுகள், எரிச்சல்கள், உயிர்ப்பலிகள், உரிமையின்மைகளை உலகம் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. நம்பிக்கை இழக்கின்ற காலகட்டம் என்பது அமெரிக்க மண்ணில் இருக்கும்  கறுப்பின மக்களுக்கு நிரந்தர மனநிலையாக இருந்தது. இவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தலைவர்கள் உருவானார்கள். போராட்டங்கள் நடந்தன. இசைக்குழுக்கள் தங்கள் பங்குக்கு பெரும் நம்பிக்கையைத் தந்தன. திரைப்பட இயக்குனர்கள் உருவானார்கள். தொழிலதிபர்கள் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அமெரிக்காவில் தொழில் தொடங்கினார்கள். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் எது செய்தபோதும் பல மடங்கு உழைக்க வேண்டியிருந்தது.

இந்த மாற்றங்களும்  கூட உடனடியாக நடந்துவிடவில்லை. அங்கங்கு பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் இதன் மிகப்பெரும் தாக்கமாக அமைந்தது சட்ட உரிமை இயக்கம். அமெரிக்க முழுவதும் வாழ்ந்த கறுப்பின மக்களை இந்த உரிமைப் போராட்டம் ஒன்று கூடச் செய்தது. ஒற்றுமையே பலம் என்று கறுப்பின மக்கள் உலகுக்கு நிரூபித்த தருணங்கள்  அவை.  இந்தப் போராட்டத்துக்கு முன் பின் என கறுப்பின மக்களின் வாழ்க்கை முறையைப் பிரிக்கலாம். இவற்றைக் குறித்து பல்வேறு ஆவணப்படங்களும், திரைப்படங்களும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆவணப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. மற்ற ஆவணப்படங்களில் இருந்து இது வேறுபட்டதன் காரணம், இதைப் போல் நம்பிக்கை ஏற்படுத்திய ஒரு ஆவணம் சமீபத்தில் கறுப்பின மக்களுக்கு கிடைத்ததில்லை. அந்த ஆவணப்படத்தின் பெயர் Becoming

பிரபலமான ஆவணப்படம் இது. சட்ட உரிமைப் போராட்ட வெற்றிக்குப் பிறகும் கூட அதிகார மையத்தில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமரமுடியும் என்பது பலருக்கும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அது நடந்தது. போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்களில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் தலைமை உருவானதை அமெரிக்கா இந்த நூற்றாண்டில் பார்த்துவிட்டது. அதோடு அதற்குக் கிடைத்த வரவேற்பும் குறிப்பிட்டாக வேண்டியது. எட்டு ஆண்டு காலம் பாரக் ஒபாமா அதிபராக ஆட்சிப் பொறுப்பில் இருந்து அதில் இருந்து விலகியபோது ‘மீண்டும் வாருங்கள்’ என்று மக்கள் அவர் செல்லும் வழியில் கூக்குரல் எழுப்பினார்கள், அழுதார்கள். ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெள்ளை இன அமெரிக்கர்களும் சேர்ந்து ஒபாமாவை அழுதபடி அனுப்பி வைத்தார்கள்.  அதன் பின்பு திரு & திருமதி ஒபாமா அவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கவும் தொடங்கினார்கள். அதன் வெளிப்பாடே இந்த ஆவணப்படம்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவியான மிட்செல் ஒபாமா குறித்த ஆவணப்படம் இது. பாரக் ஒபாமா இரண்டு முறை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அவருடைய தேர்தல் பிரச்சாரங்களின் போதும், அதிபராக அவர் பொறுப்பேற்றிருந்தபோதும்  பாரக் ஓபாமாவுக்கு நிகராக மிட்செலும் செய்திகளில் இடம்பெற்றார்.

இதற்கு முன்பு பொறுப்பேற்றிருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் மிட்செல் அளவுக்கு எந்தவொரு ஜனாதிபதியின் மனைவியும் தங்களை இந்தளவுக்கு முன்செலுத்திக் கொள்ளவில்லை.

அமெரிக்க மக்களுக்கு மிட்செல் அவர்களது  குடும்பத்தில் ஒருவராகவே மாறியிருந்தார். குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு. தங்களில் ஒருவர் முதன்முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர்கள் அடைந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மிகப்பெரியது. பாரக் ஒபாமாவின் ‘we can’ என்கிற பிராச்சார செய்தி, அமெரிக்கர்களின் மந்திரமாக மாறியது. ஒருபுறம் பாரக் ஒபாமா அரசியலிலும் ஆட்சி நடைமுறையிலும் ஈடுபட்டிருக்க அவருக்கு சமமாக சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் மிட்செல்.

எட்டு வருட காலம் பொறுப்புக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து விடுபட்ட பின் மிட்செல் ஒரு புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகம் தான் Becoming. பரபரப்பான எட்டு வருட வாழ்க்கை, தினமும் நிகழ்ச்சி நிரல்களுக்கு பின் ஓடிய ஓட்டம், அரசியல் சூறாவளிகளின் மத்தியில் வாழ்க்கை, அணியும் உடை தொடங்கி யாரையெல்லாம் சந்திக்க வேண்டுமோ அது வரை எல்லாமே மற்றவர்களின் திட்டப்படியே பழகிய வாழ்க்கை என இருந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின் மிட்செல் ஒபாமா என்ன செய்யப்போகிறார் என்பதே இந்த புத்தகம் எழுதப்பட்டதின் நோக்கம். அதோடு எட்டுவருட வாழ்க்கையில் அவர் கற்றுக்கொண்டது என்ன என்பதையும் பேசியிருக்கிறார். இதில் இந்தப் புத்தகத்திற்கும் ஆவணப்படத்திறகுமான தொடர்பு எதில் வருகிறது என்றால், இந்தப் புத்தகம் வெளிவந்ததும் மிட்செல் ஓபாமா அமெரிக்காவில் சாலை வழி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஒவ்வொரு மாகாணமாக மக்களோடு உரையாடினார். எந்தக் கட்டுப்பாடுமின்றி மக்களை சந்தித்தார். இதனை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடு.

மிட்செலை சந்திப்பவர்கள் அவரைத் தங்களது முன்மாதிரியாக நினைத்துக் கொண்டதாக சொல்கிறார்கள். ஒரு பெண்மணி மிட்செலைப் பார்த்ததும் அழுகிறார். “எங்களில் ஒருவர் இந்த இடத்துக்கு வருவார் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்த்ததில்லை” என்கிறார்.

மிட்செலின் பதில் இப்படியாக இருக்கிறது, “நாம் ஏன் நினைத்துப் பார்க்காமல் இருக்க வேண்டும்? நமது கனவு நமது உரிமை இல்லையா? கனவுக்கு எல்லையுண்டா என்ன? நாம் என்ன கனவு காண வேண்டும் என்கிற உரிமையைக் கூட நாம் மற்றவர்களுக்கு கொடுத்து வைத்திருந்தோம்..நமக்கு எல்லாவற்றுக்கும் இந்த மண்ணில் உரிமையுண்டு” என்கிறார்.

ஆவணப்படத்தின் தொடக்கத்தில் “நான் சிகாகோவின் தெற்குப் பகுதியில் இருந்து வந்திருக்கேன்..இதுவே நான் யார் என்று சொல்வதற்கு போதுமானதாகும்” என்கிறார்.

மிட்செலின் பள்ளி காலத்தில் அவருடைய அப்பா சொந்தவீடு ஒன்றினை வாங்குகிறார். உடனே அவர் வீட்டில் அருகில் குடியிருந்த வெள்ளை இன அமெரிக்கர் தனது வீட்டினை காலி செய்து போய்விடுகிறார். இது மிட்செலின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. பிறகு தான் அவர் புரிந்து கொள்கிறார். அமெரிக்க மாகாணங்களின் புறநகர்ப்பகுதிகள் வேகமாக வளர்ச்சியடைவதன் காரணம், கறுப்பின மக்கள் நகரத்துக்குள் வீடு வாங்குகிறபோது அந்தப் பகுதியில் இருக்கும் வெள்ளை இனத்தவர்கள் வீடுகளை காலி செய்து புறநகர்ப் பகுதிக்கு குடியேறுகிறார்கள் என்பது.  கறுப்பின மக்கள் குடியேறும் பகுதிகளில் பாதுகாப்பு இருக்காது என்று அவர்கள் முடிவு செய்திருக்கின்றனர் என்பது மிட்செல் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

அதோடு அவர் கல்லூரியில் சேர்கிறபோது கல்லூரி விடுதியில் மிட்செலின் அறை மற்றுமொரு பெண்ணுக்கும் பகிரப்படுகிறது. அந்தப் பெண் வெள்ளை இன அமெரிக்கர். அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு தனது மகள் ஒரு கறுப்பினப் பெண்ணோடு அறையைப் பகுர்ந்து கொள்கிறாள் என்று தெரியவந்தபோது உடனே தனது மகளுக்கு அறையை மாற்றித் தரும்படி கேட்டு மாற்றியும் கொள்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம், “கறுப்பினத்தவர்கள் பாதுகாப்பானவர்கள் அல்ல” என்பது. இவையெல்லாம் மிட்செல் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெறும் ஒரு தோலின் நிறம் எப்படி ஒருவரின் ஆளுமையையும், சுயத்தையும் தீர்மானிக்கும் என்பது மிட்செல் தன் மனதில் எழுப்பிக் கொண்டிருந்த கேள்வி.

வீடுகளிலும், கல்லூரியிலும் மட்டுமல்ல அமெரிக்க ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் அதிகாரப்பூர்வமாக குடியேறியபின்னும் இந்த வெறுப்புணர்வு சிலரிடம் இருந்தது. ஆப்ரிக்காவில் இருந்து அடிமை இனத்தவர்களாக அழைத்துவரப்பட்ட மக்களின் உழைப்பில் கட்டப்பட்ட அந்த வெள்ளை மாளிகையில் முதன்முறையாக ஒரு ஆப்ரிக்க வம்சாவளி குடும்பம் அதிகாரப்பூர்வமாக உரிமையாக்கிக் கொண்டதை வெறுப்பாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒபாமா குடும்பத்தினர் அங்கு குடியேறிய சில நாட்களில் மாளிகையை நோக்கி ஒருவர் தனது துப்பக்கியால் சுடத் தொடங்கினார். இதற்கு முந்தைய ஜனாதிபதிகளைக் காட்டிலும் ஒபாமா குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் மூன்று மடங்காக இருந்தது என வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்திருந்தனர். “இப்படியெல்லாம் நடக்கும்போது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?” என்று கேட்கிறார்கள். அதற்கு மிட்செல் இப்படி சொல்கிறார், “அவர்கள் தாழும்போது நாங்கள் உயர்கிறோம்” என்றார்.

இந்த ஆவணப்படத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில்  மாணவிகளை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவர்கள் பலருக்கும் மிட்செலிடம் கேட்பதற்கு கேள்விகள் இருந்தன. எல்லோருக்குள்ளும் எதிர்காலம் குறித்த கேள்விகள் இருந்தன. “உங்களுடைய நகரம், சூழல் எல்லாமே நீங்கள் பழகிய ஒன்றாக இருக்கும். அதில் இருந்து வெளிவருவதற்கு நீங்கள் தயங்குவீர்கள். ஆனால் அந்தத் தயக்கம் தேவையற்றது. சிறு வயதில் இருந்து என்னுடைய அம்மாவும் அப்பாவும் நான் எனது வசதியான சூழலில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். மேற்படிப்புக்கு சிகாகோவில் இருந்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு செல்லப்போகிறேன் என்றதும் எனது பள்ளியில் இருந்த ஆலோசகர் ஒருவர், “உன் தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறாய் மிட்செல்” என்றார். யார் தகுதியை யார் நிர்ணயிப்பது? நான் பிரின்ஸ்டன் பல்கலைகழத்தில் படித்தேன்..அங்கிருந்து ஹார்வர்ட் சென்றேன். என்னால் முடிந்தது உங்களால் முடியாதா?” என்று கேட்கிறார்.

இப்படியானதொரு நம்பிக்கை அந்த மாணவிகளுக்குத் தேவைப்படுகிறது. வயதானவர்களை, பதின்பருவ பிள்ளைகளைக் கொண்டிருக்கும் அம்மாக்களை என பல்வேறு தரப்பினரை மிட்செல் சந்தித்ததும், அவர்கள் கதைகளைக் கேட்பதுமாய் இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார். அவர் செல்லுமிடங்கள் எல்லாம் பிரம்மாண்டமான அரங்குகளிலேயே நிகழ்வு நடைபெற்றன. அனைத்து அரங்கங்களும் நிரம்பியிருந்தன.

எதற்காக மிட்செல் இதனை செய்ய வேண்டும். மிட்செலுக்கு தன்னுடைய இடம் அமெரிக்க வரலாற்றில் என்னவாக இருக்கிறது என்பது தெரியும்.  தன்னுடைய பிரபலத்தை, தான் போராடி வந்த வாழ்க்கையை அவர் பலருக்கும் நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதில் செலவிடுகிறார். ஜனாதிபதியின் மனைவி என்று விருந்து விழாக்களையும் கேளிக்களிலும் மட்டும் கலந்து கொள்வதை அவர் விரும்பவில்லை. தொடர்ந்து அவர் உரையாட விரும்புகிறார். அமெரிக்காவின் அடுத்தத் தலைமுறை மீது மிட்செலுக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படங்களில் அவர்களுடைய வரலாறுகள் பேசப்பட்டிருக்கின்றன, போராட்டங்களும் தலைவர்கள் பற்றியும் பேசப்பட்டதில் இத்தனை நூற்றாண்டுகள் கழித்து ஒரு ஆவணப்படம் நம்பிக்கையின் மொழியாக வெளிப்பட்டிருக்கிறது என்பது தான் இதைப் பற்றி உரையாடுவதற்கு  தூண்டுகிறது.

ஆவணப்படம் முழுக்கவும் பல்வேறு மக்களின் முகங்கள் தொடர்ந்து காட்டப்படுகின்றன. அந்தமுகங்களில் பல நூற்றாண்டு காலமாக தேங்கியிருந்த தயக்கங்களும், வலிகளும் சோர்வும் கரைந்தபடி இருப்பதைப் பார்க்க முடிகிறது.

நம்மில் ஒருவர் என்கிற எண்ணம் எத்தனை வலு சேர்த்திருக்கிறது என்பது மிட்செலை சந்திக்க வரும் ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் தெரிகிறது. அரசியல் காரணங்கள், காழ்ப்புகள் கடந்து இந்த நம்பிக்கை இன்று காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

படத்தின் முடிவில் ஒரு மாணவி இபப்டி சொல்கிறாள் “நான் தைரியமானவளாக வலுவுள்ளவளாக இருக்கிறேன்” இது மிட்செல் தந்த தைரியத்தில் அந்த மாணவி உரத்துப் பேசியது..இந்தக் குரல் ஒலிக்க பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தக் குரல்களை வெளிக்கொண்டு வந்ததற்காகவே இந்த ஆவணப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rjgopaalan
Rjgopaalan
1 year ago

யார் தகுதியை யார் நிர்ணயிப்பது? நான் பிரின்ஸ்டன் பல்கலைகழத்தில் படித்தேன்..அங்கிருந்து ஹார்வர்ட் சென்றேன். என்னால் முடிந்தது உங்களால் முடியாதா?”

இந்த வரிகள் , என் பார்வையில் இக்கட்டுரையில் மிக முக்கியமாக தெரிகிறது.
படிப்பவர்களுக்கும். நேரில் மிட்செலை சந்தித்தவர்களுக்கும் கூட !