Saturday, October 17, 2026
Home கட்டுரைகள் பொது பால்யத்தின் பின்னணி இசை

பால்யத்தின் பின்னணி இசை

0

இசையமைப்பாளர் தேவா மறைந்த செய்தியை என்னுடைய சில நண்பர்கள் அடுத்தடுத்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பினார்கள். அனைவருமே திருநெல்வேலிகாரர்கள்.  குறிப்பாக என்னுடைய பால்ய காலத்தின் சகி, சகாக்கள். எப்போதேனும் சந்திக்கும்போது நிகழ்கிற எங்களுடைய உரையாடலில் இத்தனை நாட்களாக தேவா அதிகம் இருந்ததில்லை. ஆனால், இன்றைய தினம் அவர்கள் உடனேயே மறைவு செய்தியைப் பகிர்ந்து கொண்டதன் காரணம் எங்களுடன் அவர் பல ஆண்டு காலங்கள் இருந்தார் என்பது தான்.

பாட்டுப் புத்தகம் புழக்கத்தில் இருந்த காலகட்டம். பத்தாம் வகுப்பில் எல்லா டீச்சர்களும் எங்களுக்கு எதிரிகளாக இருந்தனர் ‘உங்கப்பா அம்மா கஷ்டப்பட்டு உங்களைப் படிக்க வச்சதுக்கு பலனைக் காட்டற நேரம் இது…” என்பதை விதம்விதமாக பார்ப்பவர்கள் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த நேரம். நாங்கள் வகுப்புக்கு வருவதற்கு ஒரு காரணமாக இருந்தன பாட்டுப் புத்தகங்கள். வரப்போகிற படத்தின் பாட்டுப்புத்தகம் யார் எடுத்து வருகிறாளோ அவளுக்கு அன்று நாங்கள் சகலவிதமான மரியாதைகளையும் தந்து கொண்டிருந்தோம். மங்கையக்கா கடையில் ஐம்பது பைசாவுக்கு ஏதேனும் அவள் எங்கள் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம் என்பது உட்பட. அப்படித் தான் ஒருத்தி ‘நேருக்கு நேர்’ பாட்டுப் புத்தகத்தோடு வந்தாள். அழுத்தித் தொட்டால் மை அழிந்து விடும் ஒரு புத்தகம் என்பதால் அதனை பாதுகாப்பாக வாங்கி எங்கள் நோட்டில் எல்லாப் பாடல்களையும் எழுதிக் கொண்டோம்.  என்னுடைய கையெழுத்து நன்றாக இருக்கிறது என்று எவரேனும் சொன்னால், ‘பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு..பொருளிருக்கு’ என்று எழுதிய நாட்களை நினைத்துக் கொள்வேன்.

ஏ. ஆர் ரஹ்மானிடம் ஒரு நேர்காணலில் திருக்குறளை அவரது பாடல்களில் பயன்படுத்துவது குறித்துக் கேட்கப்பட, ‘இந்தத் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி’ என்றார். அதை தேவா எங்களுக்குக்கு முன்னரே செய்திருந்தார். ‘கண்டு கேட்டு உண்டுயிர்த்து  உச்சறியும் ஐம்புலனும்’ என்கிற திருக்குறளுக்கு நாங்கள் விளக்கம் தேடி நூலகத்துக்குச் சென்றோம். தமிழாசிரியையிடம் விளக்கம் கேட்கக்கூடாது என்று புரியுமளவுக்கு அப்போது மூளைக்கு வயது வந்திருந்தது.

முதல் ரேங்க் மாணவியும், நாங்கள் சிரித்தே பார்த்திராத எங்கள் வகுப்பின் லீடருமான ஒருத்தி நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து போர்டில் பெயர்கள் எழுதிவிட்டாள். ‘என்னட்டீ பேசிட்டு இருந்தீங்க?” என்றாள்.

“ஏன் சொன்னா தீர்த்து வச்சிருவியோ?”

“என்னத்தனு சொல்லுங்க..”

“அவள் வருவாளா’ பாட்டுல ஒரு வரி புரியல..பேசிட்டு இருந்தோம்.” என்று அவளுக்கு தொடர்பில்லாத ஒன்றைப் பற்றிப் பேசும் அக்கறையின்மையோடு நாங்கள் சொல்ல,  

“அது என்ன வரின்னு எனக்குத் தெரியும்” என்றாள்.

ஸ்மூத்தாய் செல்லும் ஃபிளாப்பி டிஸ்க் அவள்..நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்” என்றதும் மொத்த வகுப்பும் அவள் மீது முதன்முறையாகக் காதல் கொண்டு பார்த்தோம்.

பிறகு Floppy disc என்றால் என்ன என்பதையும் விளக்கினாள். அதுவரை கம்ப்யூட்டரைக் கண்கொண்டு பார்த்திராத எங்களுக்கு அவள் மீது ஒரு மரியாதை வந்தது. அவள் ஏன் முதல் மாணவியாக இருக்கிறாள் என்று புரிந்தது. எல்லாவற்றையும் விட அவள் ‘பாட்டுப் பைத்தியம்’ என்று தெரிய வந்தபோது நாங்கள் அவள் செய்த கொடுமைகளை எல்லாம் மன்னித்தோம். அவள் எங்களை மன்னிக்காமல் ‘கிளாஸ்ல சினிமா பாட்டைப் பத்தி பேசிட்டு இருந்தாங்க மிஸ்’ என்று மாட்டிவிட்டாள்.

என்னுடைய அப்பாவுடன் ரேடியோ கேட்பது அலாதியான ஒன்று. அவர் தேர்ந்து இசைக் கேட்கக்கூடியவர். இலங்கை வானொலியில் ஞாயிறு மதிய நேரம் புதுப்ப்பாடல்களின் தொடக்க இசையைக் கேட்டதுமே அதன் சாயல் கொண்ட பழைய பாடல்களைச் சொல்லி விடுவார். ராகத்தைத் துல்லியமாக சொல்வார். அநேகமாக எல்லாப் புதுப் பாடல்களையும் அவர் எதிர்த்து வந்தார். அப்பாவுக்கு மிகப்பிடித்த வரிசையில் ஓரு பாடல் எப்போதும் இருந்தது.  அந்தப் பாடல் குறித்து அப்பா மிக ரசித்துப் பேசியிருக்கிறார். யூட்யூப் காலத்தில் எந்தப் பாட்டையும விருப்பப்படும்போது கேட்கலாம் என்றபோது அவர் என்னிடம் விரும்பிக் கேட்டப் பாடல்களில் ஒன்று ‘ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்..’ ஒவ்வொரு முறையும் ஹரிஹரன் ‘டெலிபோன் குயிலே’ எனும்போது அப்பாவின் முகம் பார்க்கத் தோன்றும். ஹரிஹரன் வெவ்வேறு விதங்களில் இந்த வரியைப் பாடி அப்பாவிடம் பாராட்டினைப் பெற்றுக்கொண்டே இருந்தார். தேவாவுக்கும் அப்பாவுக்கும் சேர்த்து இந்தப் பாடலை இன்று கேட்டேன். காணாமல் எங்கும் ஒன்றைத் தேடுவதை மையாகக் கொண்ட பாடல் இது. இன்று கலங்க வைத்துவிட்டது.

ஐந்தாம் வகுப்பில் புது மாணவியாக கோமதி ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்திருந்தேன். வகுப்பில் ஒரு மாணவனை நோக்கி என்னுடைய கவனம் சென்றது. ஏதேனும் பேசிக்கொண்டோ, சிரித்துக் கொண்டோ இத்தனை மகிழ்ச்சியாக ஒருவனால் இருக்க முடியுமா என்பதானவன் அவன். அன்று அவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்த சங்கீதா ‘இவன் பாட்ஷா கதையை சூப்பரா சொல்லுவான்’ என்றாள். அன்று அவன் எனக்கு பாட்ஷா கதையைச் சொன்னான். இதுவரை இப்படி ஒருவர் கதை சொல்லி நான் கேட்டதில்லை. ரஜினி கல்யாண மண்டபத்துக்கு வந்து நக்மாவை அழைத்து செல்லும் காட்சியின் பின்னணி இசை இப்போது வரை பாரதியின் குரலில் தான் எனக்கு நினைவில் இருக்கிறது. ஹேய்…ஹே.ய்…பாட்ஷா..பாட்ஷா….அப்படியே நக்மா கையைப் பிடித்ததும் ‘தங்க மகன் இங்கு…’ என்று பாடி முடித்து தான அடுத்தக் காட்சிக்கு செல்வான். அவன் இசையுடன் முழுக்கதையையும் முழங்கிய நாளில் இருந்து என்னுடைய நெருங்கிய நண்பனாகக் கடைசி வரை இருந்தான். கடைசி வரை என்பது அவனுடைய இறுதி காலம் வரை.

ஆற்றங்கரைக்குப் போவதென்பது எங்களுக்கு பொழுதுபோக்கோ, சாகசமோ அல்ல. வாழ்க்கையின் ஒரு பகுதி. யாருக்கும் தெரிந்திடக் கூடாது என்று நாங்கள் நினைக்கும் எந்த ரகசியத்தையும் நடு ஆற்றில் மிதந்தபடி தான் பேசுவோம். அப்படித் தான் முந்தைய நாள் விசாலாட்சி அக்காவுக்கு தரச் சொல்லி ஒருவன் கொடுத்தக் கடிதத்தை கூச்சமேயில்லாமல் பிரித்துப் படித்ததையும் அதில் எழுதி இருந்ததையும் நாங்கள் பேசிக்கொண்டோம். அதில் எங்களை வியக்க வைத்த, லவ் பண்றவன் எல்லாவனும் கூறு கெட்டவம் தான்  என்று அப்போது நினைக்கத்தக்கதுமான ஒரு வரி இருந்தது.. “விசா..நீ பாக்க சுவலட்சுமி மாதிரியே இருக்கே”. எப்படிப் பார்த்தாலும் சுவலட்சுமியின் சாயல் கொஞ்சமும் இருந்திராத ஒருத்தியை எப்படி ஒருவனால் அபப்டி நினைக்க முடிந்தது என்பது தான் அன்றைய நடு ஆற்று ரகசியம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ‘மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையும் உந்தன் ஞாபகமே’ பாடல் கரையில் இருந்து ஒலிக்கத் தொடங்கியது.

விசாலாட்சி அக்கா குளிக்க வந்திருந்தாள். அவனும் வந்திருந்தான். பேட்டரி போட்டு கேட்கும் டேப்ரிகார்டர் எடுத்து வந்திருந்தான். அதில் தான் அந்தப் பாடல். நாங்கள் கடிதத்தைப் பிரித்து படித்ததை அறிந்திடாத விசாலாட்சி அக்கா அந்தப் பாடலுக்கு வெட்கப்பட்டாள். அப்போதும் அவள் சுவலட்சுமி போல இல்லை. ‘உன்னைக் காதலிச்சு புத்தி பேதலிச்சு புஷ்பம் பூத்திருக்கு’ என்கிற வரியில் நாங்க கரையேறும்போது ‘ஏட்டி..நான் சுவலட்சுமி மாதிரியா இருக்கேன்’ என்று அக்கா கேட்க நாங்கள் ஒன்றும் சொல்லாமல் சென்று எங்க பொறாமையைத் தீர்த்துக் கொண்டோம். விசாலாட்சி அக்காவும், அவனும் வேறு வேறு திருமணங்கள் செய்து கொள்ள, நாங்கள் இப்போதும் மீனம்மா பாட்டினைக் கேட்டால் அவர்கள் இருவரையும் நினைத்துக் கொள்கிறோம்.

தேவா மூலமாகத் தான் பாடகர் உன்னிகிருஷ்ணன் அறிமுகம். அதன் பின்னர் அவருடைய கர்நாடக சங்கீத கேசட்டுகளை காசு சேர்த்த் வாங்கிக் கேட்கும் அளவுக்கு பரம ரசிகையானேன். கானா பாடல்களுக்கு பெயர் பெற்ற தேவாவின் அற்புதமான மெலடிகளுக்கு உன்னிகிருஷ்ணனின் குரல் இனிமையாக்கியிருந்தது. அதே போல அனுராதா ஸ்ரீராம் அவர்களும். ஹரிஹரன் – அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன் – அனுராதா ஸ்ரீராம் எது அட்டகாசமாக இருக்கும் என பேசிக்கொண்டே மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பஸ் பிடித்து கல்லூரி சென்று அங்கும் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம்.

பிறந்த தினத்தில் இருந்து தியேட்டருக்குப் போகாமல் அழுது அடம் பிடித்து ‘நினைத்தேன் வந்தாய்’ படத்துக்கு அம்மாவை அழைத்துச் செல்லச் சொல்லி சென்று வந்த பாத்திமா எப்போதும் முணுமுணுக்கும் பாடல் ‘என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்’ அந்தப் பாடலை அவள் பாட்டு புத்த்த்கத்தைப் பார்த்து எழுதிக் கொள்ளும்போது நான் உடனிருந்தேன். அவளுடைய அம்மா அப்போது தான் அவளிடம் அவளைப் பெண் பார்க்க வரவிருப்பதாகச் சொன்னார். ப்ளஸ் டூ எக்ஸாம் முடிச்சதும் கல்யாணம் பண்ணிடுவாங்க என்று கலங்கியபடி அவள் சொன்னதைத் தான் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்கிறேன்.

வாலி, முகவரி, அவ்வை சண்முகி , ஆசை, காதல் கோட்டை, காதலே நிம்மதி என சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் வெளிவந்த படங்களின் பாடல்கள், ஆஹா படத்தில் முதன்முதலில் பார்த்தேன் காதல் வந்தது என ஒவ்வொன்றுக்குமே என்னிடம் தனிப்பட்ட கதைகள் இருக்கின்றன. எங்களது பள்ளி, கல்லூரி காலங்களை தேவா இல்லாமல் நினைத்துப் பார்க்கவே முடிந்ததில்லை.

இன்னும் இன்னும் சில நினைவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அத்தனையுமே ஒரு காலகட்டத்தின் நினைவுகள். அவற்றின் பல சம்பவங்களின் பின்னணி இசையாக தேவா இருந்திருக்கிறார்.

நாம் இசை கேட்பதே நினைவுகளுக்குள் தேங்கத் தான் என்றால், இனியும் தேவா எங்களுக்குள் இசைத்துக் கொண்டே தான் இருப்பார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted