Tuesday, January 14, 2025
Homeகட்டுரைகள்குட்டி யானையின் பெருநெருப்பு

குட்டி யானையின் பெருநெருப்பு

ஒரு நண்பகல் நேரம். எனது குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இருவரும் அப்போது பள்ளிக்குப் போகத் தொடங்கியிராத வயது. குழந்தைகள் விழித்திருக்கும் சமயமும், உறங்கும் நேரமும் அம்மாக்களுக்கு வெவ்வேறான உலகங்கள்.  சிறிது நேரம் நம்மைப் பற்றி சிந்திக்க கிடைக்கும் நொடிகள் அவர்கள் உறங்கும்போது மட்டுமே வாய்க்கக்கூடியவை. அப்படியான அந்தப் பகல்பொழுதில், மனநிலையில் சோர்வு ஏற்பட்டிருந்தது. ‘என்ன செய்து கொண்டிருக்கிறோம்..என்ன செய்வோம்?” என்கிற ஒரு மனநிலை அது. எதிர்காலம் எங்கிருந்தோ சடாரென்று குதித்து முன்வந்து நின்று பயமுறுத்தத் தொடங்கியது. ‘இப்படியே எனக்கென்று நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருந்தால், எப்போது என்னுடைய சில கனவுகளை, ஆசைகளை இலட்சியங்களை நிறைவேற்றுவது?’ என்று தோன்றியது.

இந்த இடம் தான் பல பெண்களை நிறுத்தி வைக்கும் ஒரு பள்ளம். இதனைத் தாண்டவேண்டும். ஆனால் நேரமும் சூழலும் ஒத்துழைக்கவில்லை. எழுதுவது தான் என்னுடைய தொழில். ஊடகத்திற்கும், எனக்குமாக எழுதுவது. ஆனால் மனம் ஒருங்கிணையவே இல்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால் எழும் உடற்சோர்வும்,  தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டிருந்தது.

இப்படியான பொழுதுகளில் சில நேரங்களில் நாம் அதிர்ஷ்டசாலிகள் ஆவோம். நமக்கான போதிமரத்தை நாம் கண்டடையத் தேவையில்லை. அவை நம்மை நோக்கி வரும், நாம் அதனை போதி என்று கண்டு கொள்ள வேண்டும் அவ்வளவே தான். அந்த நண்பகல் நேரத்தில் என்னை நோக்கி நீண்டது போதியின் கிளை ஒன்று.

வீட்டின் பால்கனியில் நின்று பார்த்திருந்தபோது கீழே பணியாளர்கள் தார் ரோடு போட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் மூன்று வயது இருக்கலாம். அவன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான். ஒருபக்கம் வேகும் தார், மறுபக்கம் அதற்கான வேலைகள். இவன் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. அந்தச் சிறுவன் தெருவின் ஒவ்வொரு வீட்டுப் படியாக ஏறி விளையாடினான். தார் ரோடு போடுகிற பெண் பணியாளரின் மகன் என்று தெரிந்தது, அவனுடைய அம்மா வேலைக்கு இடையில் வந்தார், அவனுக்கு தண்ணீர் தந்தார், மீண்டும் வேலையைப் பார்த்தார், உணவு தந்தார், வேலையை மீண்டும் தொடர்ந்தார். அவனை ஒரு வீட்டின் நிழலில் தூங்க வைத்தார், திரும்பவும் தனது வேலையைத் தொடர்ந்தார். அன்றைய நாள் முழுவதும் வேலை ஒரு கண்ணும், பிள்ளை மேல் ஒரு கண்ணுமாக அந்தப் பெண்ணின் பொழுது போனது. மாலையில் பணி முடிந்து அவர்கள் கிளம்பினார்கள். நான் அந்தப் பெண்ணைக் குறித்தே யோசித்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் பெண் வீட்டுக்குப் போன பிறகு சமைக்க வேண்டியிருக்கும். மீண்டும் மறுநாள் வேறொரு இடத்துக்கு வேலைக்குப் போகக்கூடும் நிழல் போலத் தன மகனையும் அழைத்துக் கொண்டு.

இந்தப் பெண் எனக்குக் கற்றுத் தந்து ஏராளம். பொழுதுபோக்கிற்கோ, நிரம்பப் படித்ததாலோ இந்தக் கடினமான சுட்டெரிக்கும் வேலைக்கு அந்தப் பெண் வந்திருக்கவில்லை. பொருளாதாரத் தேவை மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியும். குழந்தையைப் பார்த்துக் கொள்ள குடும்பத்தில் எவரும் இல்லாததால் வேலைக்கு அழைத்து வந்திருக்கிறார். இது உலகம் முழுவதும் உள்ள வேலைக்குப் போகும் பெண்களின் ஒரு நிலை. இந்தத் தொடர் கண்ணியில் நானும் ஒரு கண்ணி. நானும் ஓடியாக வேண்டும். என்னுடைய கனவை நான் அடைய வேண்டுமென்றால், நான் தான் அதற்கு முதல் அடி வைத்திருக்க வேண்டும். புறக்காரணங்கள் எல்லாமே வெறும் காரணங்களே என்று அன்றைய தினம் தோன்றியது.

அந்தப் பெண்ணின் அமைதியான முகம் என்னை ஈர்த்திருந்தது. அந்த அமைதிக்கு அவரது அனுபவம் மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியும்.. குழந்தையை உறங்க வைத்த பிறகும் கூட அவனுடைய பாதுகாப்பை உறுதி செய்ய, அவன் புரளாமல் இருக்க அங்கிருந்த பணியாளர்களின் சோற்றுக்கூடைகளால் அவனை அணை கட்டிவைத்துவிட்டுப் போனதில் தெரிந்த கவனம் அலாதியானது. இந்தப் பெண்ணுக்கு உள்ள ஒரு ஆறுதல் குழந்தையை வேலை செய்யும் இடத்தில் தன்னுடன் வைத்துக் கொள்ள முடிந்தது தான். ஆனால் அது கடினமானதும் கூட.

இந்தப் பெண்ணின் மற்றொரு வகைமை தான் நான். பொருளாதாரத் தேவைகளும் எனது இலட்சியங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அவற்றை சரி செய்ய வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும் என்று  தீவிரமாக யோசித்தேன்.

எழுத்தென்பது ஒரு உந்துதல். ‘வா வா’ என்றால் வந்து நிற்காது. அதற்கு தொடர் பயிற்சி அவசியம். எனக்கோ ஒரு இடைவெளிக்குப் பிறகு எழுத உட்கார்ந்தால் வார்த்தைகள் மறந்திருந்தன. தட்டச்சு செய்வது கூட கடினமாக மாறியிருந்தது. இது மீண்டும் மனஉடைவை உருவாக்கியது. வாசிக்கத் தொடங்கினேன். குழந்தைகள் தூங்கும் நடுஇரவுகளிலும், மீண்டும் அலாரம் வைத்து எழுந்த அதிகாலைகளிலும் என தொடர் வாசிப்பு. ஒரு மாத காலம்..பல பக்கங்களை ஒரு தவம் போல வாசித்தேன். அது என்ன செய்யும்..எழுத வைக்குமா என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. வெளித்தொடர்பு அற்று, சமூக வலைத்தளங்களை விடுத்து நான் வாசித்த தருணங்கள் அவை. அதற்கு பலன் இருந்தது. வாசித்த ஒரு புத்தகம் குறித்து குறிப்பேட்டில் எழுதுவதற்காக தொடங்கியபோது, மடை திறந்தாற்போல் எழுதத் தோன்றியது. எழுதும்போது கூட மாற்றம் தெரியவில்லை. எழுதி முடித்து போதும் என்று நினைக்கையில் பதினைந்து பக்கங்களைக் கடந்திருந்தேன். அப்போது தான் பளிச்செனத் தோன்றியது..எனக்கு எழுத்து மீண்டும் கிடைத்துவிட்டது..!! மிக அற்புதமான தருணம் அது. என்னால் மீண்டும் மனம் ஒன்றி எழுதிவிட முடியும் என்பது பேராற்றலாக என்னுள் நிறைந்திருந்தது. அன்றைய தினத்தில் இருந்து இப்போது வரை ஓட்டம் தான். திரும்பிப் பார்க்கவியலாத ஓட்டம்.

இரண்டு புத்தகங்களுக்காக தினமும் மொழிபெயர்த்தேன். அப்போது தான் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினேன். ஒரு கட்டுரைத் தொடரை ஒப்புக் கொண்டேன். ஒரு இதழுக்கு பொறுப்பாசிரியராக வேலை செய்தேன். அடுத்ததாக ஒரு தொலைகாட்சித் தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதினேன். இவையெல்லாம் செய்யும்போது கூட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. அவர்களைப் பார்த்துக் கொண்டே எதையெல்லாம் செய்ய முடியும், அவர்கள் தூங்கும் நேரம் என்ன வேலைகளை எல்லாம் செய்யலாம் என்று ஒரு பட்டியலிட்டேன். ஒவ்வொரு நொடியையும் பாலைவனத்தில் கிடைக்கிற குடிதண்ணீர் போல சேமித்தேன்.

இதே நேரம் தான் அதிகமான திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும் அது குறித்து எழுதுவது என இரண்டையும் சேர்த்து உருவாக்கினேன். ஒரு நாவல் வாசித்து அதனை எப்படி திரைக்கதையாக் மாற்றியிருக்கிறார்கள் என்கிற ஒரு தொடர் எழுதினேன். மற்றொரு பக்கம், உலகம் முழுவதும் உள்ள பெண் இயக்குநர்களின் படங்கள் பார்த்து அது குறித்து வாராவாராம் ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன். இந்தத் தொடர் மீண்டும் எனக்குள் உத்வேகத்தினை எழுப்பியிருந்தது. அத்தனை பெண் இயக்குநர்களும் என் போன்றதான மனநிலையைக் கடந்து வந்திருக்கிறார்கள் எனும்போது அவர்கள் மீது ஒரு ஆதுரம் தோன்றியது. நான் தனி ஆள் இல்லை என்கிற உணர்வு ஏற்பட்டது. சொல்லப்போனால் இந்த உணர்வுக்காகத் தான் அவர்களைப் பற்றித் தேடித் தேடி படங்கள் பார்த்து எழுதினேன். ஒளிப்பதிவாளர்கள் குறித்த குறிப்பிடத்தகுந்த ‘ஒளி வித்தகர்கள்’  இரண்டு பாகங்களாக  மொழிபெயர்த்தேன்.

இவையெல்லாம் செய்வதற்கு உந்துதலாக இருந்தது அந்த நண்பகல் நேரத்தில் நான் பார்த்த அந்தப் பெண்மணி தான். அவர் முகம் எனக்கு இப்போது நினைவில்லை. அவருக்கு இப்படியொரு மாற்றத்தை ஒருவருக்கு ஏற்படுத்தியிருக்கிறோம் என்பது கூடத் தெரியாது. ஆனால் அது நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது.

இப்போதும் சோர்வுறும் தருணங்களிலும் ஏதேனும் சிறு வெற்றி கிடைத்தாலும் அதைக் கொண்டாடிக் கொள்ளும் மனநிலையிலும் ஒரு குறிப்பிட்ட நாளை நினைத்துப் பார்ப்பேன். அது நான் வேலைக்காக முதன்முதலாக சென்னைக்கு வந்து இறங்கிய நாள். ஊடகத்தில் வேலை பார்க்க வந்த எனக்கு அது சார்ந்த ஊடகப் பின்னணியும் கிடையாது. எந்தத் தைரியத்தில் இந்த மாநகரத்துக்குள் வந்தேன் என்று வியப்பு தோன்றும். நம்பிக்கை என்கிற ஒரு கட்டற்ற குட்டி யானையை மனதில் வைத்திருந்தேன். அந்த யானைக்கு தீனி கொடுப்பது மட்டுமே எனது வேலையாக இருந்தது. பசித்த  வயிறு கொண்ட அந்த குட்டி யானைக்கு எதைக் கொடுத்தாலும் போதாமல் ஆனது. வேறெந்த சிந்தனையும் இல்லாது வேலையும், அது சார்ந்த எண்ணங்களும் தான் தினசரி வாழ்க்கை. நான் பணி செய்த ஊடக நிறுவனம் அப்போது நஷ்டத்தில் இயங்கி வந்தது என்பது எனக்குத் தெரியாது. மூன்று மாத காலங்கள் வேலை பார்த்தும் சம்பளம் வரவில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. ஊரில் இருக்கும் அப்பாவிடத்தில் வாங்குவதற்கும் மனம் ஒப்பவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ‘சம்பளமே இல்லாம கஷ்டப்படாத..திரும்பி வா’ என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம், மற்றொன்று எனது சுயமரியாதை. அப்பாவும் அம்மாவும் ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்றாலும் கூட, சம்பாதிக்க என்று சென்னை வந்துவிட்டு வேலையும் பார்த்துக்கொண்டு வீட்டில் பணம் வாங்குவது என் தன்மானத்துக்கு கேள்வியாய் எழுந்தது. சென்னை கிளம்பிவரும்போது அப்பா கொடுத்துவிட்ட பணத்தினை கஞ்சத்தனமாக செலவு செய்து தேக்கிக் கொண்டேன். இருப்பதற்கு அக்கா வீடு என்பதால் முதல் மூன்று மாதங்கள் சமாளிக்க முடிந்தது.

அதன் பின் சம்பளமென ஒரு சொற்ப பணத்தை நிரப்பி காசோலையாகத் தந்தனர். அதனை அப்பாவுக்கு அனுப்பி என்னுடைய வங்கியில் போடச்சொன்னேன். அந்தக காசோலையும் ‘காசில்லை’ என்று திரும்பிவிட்டது. பிறகு வேறு வேறு வேலைகளைத் தேடிக்கொண்டேன். அந்தக் காலகட்டம் சோதனையாக இருந்தன. ஆனாலும் யானைக்குட்டிக்கு உணவிடாமல் இல்லை. அது தான்  செல்லும் வழிகளில் கிடைத்தவற்றை ஆவலுடன் உட்கொண்டது.

இன்றளவும் சென்னை வந்து நின்ற நாளை நினைத்துக் கொள்வது இதற்காகத் தான். “எதுவும் இல்லாமல் தானே வந்து நின்றோம்..இந்தத் தோல்வியைக் கடக்க முடியாதா? முதலில் இருந்து கூட தொடங்கலாம்” என்று மனம் களைப்புறும் நாட்களில் அந்த நாளின் குட்டி யானையை எழுப்பி உட்கார வைப்பேன். வெற்றிகளின் போது, “இது அல்ல..நான் நினைத்தது..வெற்றியில் தேங்கிடக் கூடாது, போக வேண்டிய தூரம் அதிகம்” என குட்டி யானையை தட்டிக் கொடுப்பேன்.

இப்படி நமக்கென சில உணர்வுகளை நினைவுகளை வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் நம்முடைய அடையாளம் இதுவென்று தீர்மானித்த பிறகு அதை முடிவு செய்த கணத்தை மீண்டும் மீண்டும் நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அது தரும் உந்துதல் போல வேறெதுவும் இருந்திடாது.

அந்தக் கணம் ஒரு தீப்பொறி அல்ல. அது தான் நெருப்பு. நோக்கம் உண்மையானதாக இருந்தால், சுடர்விடும்போதே பெரும் நெருப்பாய் மாறி நம்மைப் பற்றிக்கொள்ளும். நம்முடைய வேலையெல்லாம் அந்த நெருப்பை அணையாமல் பாதுகாக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்குத் தெடர்ந்து செயலூக்கம் பெற வேண்டும். நெருப்பின் இயல்பே அது உருவான இடத்தில் தடத்தையும், தடயத்தையும் ஏற்படுத்துவது. எனக்குள் அது ஏற்படுத்திய தடம் தான் இன்றளவும் என்ன அதன் பாதையில் ஓடவைக்கிறது.  

(எழுத்தாளர் மதுமிதா தொகுத்த அகம் தொகுப்பில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை. ஹெர் ஸ்டோரீஸ் வெளியிட்டிருக்கிறார்கள்)

RELATED ARTICLES
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Most Popular