சாத்தா

1
542

எழுத்தாளர் ஏக்நாத் ‘சாத்தா’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதற்கான அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன். குலதெய்வக் கோயிலுக்கு செல்கிற உறவின் முறை கொண்டவர்கள் பற்றிய நாவல். இதை விட இந்த நாவலை இப்படிச் சொல்ல வேண்டும், குலதெய்வம் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்தவாறே இருக்கிறது. தன்னுடைய பிள்ளைகளுக்காக அது தன் காட்டை விட்டு, பச்சை வாசனையை விடுத்து தன் மேல் பொழியும் இலைகளின் மழைத்துளிகளை விடுத்து அடர் இருட்டில் இருந்து சமவெளிக்கு கண் கூச வந்து நிற்க சம்மதித்திருக்கிறது. பெரும் இறைஞ்சுதலில் தன்னுடைய மக்கமார்கள் வேண்டுதலைப் புறக்கணிக்கத் தெரியாமல் வந்து நிற்கிறது. அப்படியான தெய்வம் தான் சொல்லும் இடத்தில் குடியேற உத்தரவிடுகையில் அதன் பக்தர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைப் பேசுகிறது நாவல்.

குலதெய்வத்தைப் பார்க்கவேண்டி ஒவ்வொருவரும் செய்து கொண்டிருக்கும் பயணத்தைப் பற்றி சொல்ல எல்லோருக்குமே தனிப்பட்ட செய்திகளுண்டு. வாழ்நாள் முழுவதும் தன் குலதெய்வத்தைத் தேடியவரும் இங்கு உண்டு. எந்தவொரு நல்ல காரியத்துக்கு முன்பாகவும், வாரிசுகளுக்கு இறக்கப்போகும் முதல் முடி காணிக்கைக்கும், திருமண பத்திரிகையை காலடியில் வைக்கவும் , எந்தக் காரியத்துக்கு உத்தரவு கேட்கவும் குலதெய்வங்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். மரணப்படுக்கையின் கடைசிச் சொல்லாய் ‘குலதெய்வத்தை விட்டுறாதீங்க’ என்று சொல்லிச் சென்றவர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் திருநெல்வேலியில் இருந்தவரை எங்கள் குலதெய்வமான திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள மலை மேல் குடிகொண்டுள்ள பெருமாளைத் தரிசிக்க புரட்டாசி மாதத்தின் ஒரு சனிக்கிழமை சென்று வருவோம். அநேகமாக ஒருமுறை கூடத் தவறவிட்டதில்லை. அப்பா அதனை ஒரு கடமையாகவே நினைத்தார். இடையில் நான் செல்வதில் ஒரு நீண்ட இடைவெளி விழுந்தது. மீண்டும் சென்று தெய்வத்தின் முன்பு நின்றபோது ஏற்பட்ட சிலிர்ப்பை நான் அப்பாவை நினைத்துக் கொள்ளும்போதெல்லாம் உணர்கிறேன்.

நமக்கென்று ஒரு தெய்வம் என்பது எத்தனை நம்பிக்கையைக் கொடுக்கிறது..முயற்சியால் ஆகாதெனினும் தெய்வத்தால் ஆகிவிடும் என்பது ஒரு தைரியம்.

ஆண்வழிச் சமூகமாய் இருப்பதால், ஒரு பெண்ணிற்குத் திருமணமானதும் கணவர் வீட்டின் வழி கிடைக்கும் தெய்வத்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறாள். அந்தப் பெண்ணிற்கு முதலில் சொல்லித் தரப்படுவது, அந்தக் குடும்பத்தின் தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய சடங்குகளையே.  கணவர் வழி உறவினர்களை எப்படிக் கவனிப்பதற்கும் அணைத்துக் கொண்டு போவதற்கும் பயிற்றுவிப்பதைப் போலவே தெய்வத்தை வழிபடவும் கற்றுத்தரப்படுகிறது.

என்னுடைய அப்பாவழித் தெய்வத்தை அறிந்திருந்த நான், பல வருடங்களுக்குப் பிறகே என் தாய் வழி தெய்வத்தை அறிந்தேன். என் அம்மா, பேச்சுக்குக் கூட என்னிடம் அவருடைய குலதெய்வத்தைப் பற்றிச் சொன்னதில்லை என்பது இன்று வரை எனக்கு ஆச்சரியமே.  அதோடு, ஒருமுறை கூட அங்கு செல்லவேண்டும் என்றும் பேசியதில்லை. என் தந்தை வழி குலதெய்வத்தின் பெரிய படம் என் வீட்டில் உண்டு. என் அம்மாவின் குலதெய்வத்தின் படம் எங்கள் வீட்டில் இருந்ததில்லை. மிக இயல்பாக என்னுடைய அம்மாவால் தெய்வத்தை மாற்றிக் கொள்ள முடிந்திருக்கிறதா என்று தோன்றும். ஆனால் அது அப்படியும் அல்ல. திருமணம் என்கிற ஒன்றிற்காய் பயிற்றுவிக்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர் என்னுடைய அம்மா. இந்தப் பயிற்சியில், குலதெய்வ மாறுதல் என்பது இயல்பான ஒன்றாய், போதனையாய் சொல்லப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. அப்பாவின் மறைவுக்குப் பிறகா, அல்லது வயது மூப்பின் காரணமாகவா ..எதோ ஒன்று..அம்மாவுக்கு இப்போதெல்லாம் பால்ய நினைவுகளே அதிகம் சூழ்கின்றன. அவர் வாழ்ந்த மதுரையையும், சித்திரைத் திருவிழாவையும் தெருக்களையும் குறித்து அவர் அதிகம் பேசுகிறார். அது போலவே தன் தந்தை வழி குலதெய்வம் குறித்த சிந்தனையும், நெருக்கமும் அவருக்குள் எழுந்து வருவதை உணர முடிகிறது. எனது அம்மாவும், என் அப்பாவின் தங்கையுமான எனது அத்தையும் அவரவர் குலதெய்வக் கடவுளரைக் குறித்துப் பேசுவதில் இருக்கும் ஏக்கத்தினை நான் இப்போதெல்லாம் உணருகிறேன். என் அத்தையின் குலதெய்வம் என்னுடைய அம்மாவினுடையதாகிறது. ‘குலதெய்வத்துக்கு செய்ய வேண்டியதையெல்லாம் முறைப்படி செய்கிறோம்’ என்பதை என் அத்தையிடம் என் அம்மா தவறாமல் சொல்ல வேண்டியிருக்கிறது.

‘சாத்தா’ நாவலின் முன்னுரையில் ஏக்நாத் தன்னுடைய அம்மா மந்திரமூர்த்தி சாமியின் ‘சாமிகொண்டாடி’ எனச் சொல்கிறார். இவருடைய அம்மா தனது தந்தை வழித் தெய்வத்தை அறிமுகம் செய்த அளவுக்கு தன் கணவர் வீட்டு குலதெய்வத்தை சொன்னதில்லை என்பதைச் சொல்கிறார். எனில், ஒவ்வொரு பெண்ணின் மனதின் அடியாழத்தில் குடியிருப்பது அவருடைய தெய்வமாகவே இருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது.

இப்படி, சாத்தா நாவல் எத்தனயோ நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது. சில தர்க்கங்களை எழுப்புகிறது. கேள்விகளைத் தருகிறது.  ஒரு தெய்வம் தன இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்தால் வரக்கூடிய ஆபத்துகளை சொல்லிச் செல்கிறது. இந்த நாவலில் குறிப்பிடப் படவேண்டிய ஒரு இடம் உண்டு.  சாத்தாவுக்கு கும்பாபிஷேகம் செய்யலாம் என்று இளம் தலைமுறையினர் பிடிவாதம் பிடிக்கையில் மூத்தோர் ஒருவர் சொல்கிறார், கும்பாபிஷேகம் செய்வதாக இருந்தால் அந்தக் கோயிலுக்கு பிள்ளையார் வரவேண்டும். கோபுரம் இருக்க வேண்டும், அதில் கலசமும். அந்தக் கலசத்துக்குத் தான் அபிஷேகம் செய்வார்கள். ‘இதெல்லாம் வந்தா அவரு நம்ம சாத்தாவா வே இருப்பாரு’ என்கிற அவரது ஆதங்கமும் கேள்வியும் மாற்றப்பட்ட கடவுளர்கள் சார்பாக வைக்கப்பட்டது.

இந்த நாவலில் வருகிற துரைசாமி என்கிற ஒரு கதாபாத்திரம் துணை இயக்குனராய் சினிமாவில் வேலைப் பார்ப்பவர். முதன்முதலாக தனது குலதெய்வத்தைப் பார்க்க பங்குனி உத்தரத்தன்று வருகிறார். தன்னுடைய ஊரில் அம்மாவை விட்டு சென்னைக்கு சென்ற முத்துசாமி ‘இந்த ஊருல என்ன இருக்கு’ என்று சொல்லிவிட , ஆண்டி என்பவர் சொல்லும் பதில் தான் குலதெய்வத்துக்குமானது. ஆண்டி சொன்ன பதிலைத் தான் குலதெய்வம் தன ஆவேச வாக்கில் எடுத்துச் சொல்கிறது. ‘ஒன் வீட்டு பொறவாசல்ல என்னை வந்து உக்காரச் சொல்லுதியோ’ என்கிற அதன் ஆவேசமும், முத்துசாமிக்கு ஆண்டி சொல்வதும் ஒன்று தான். முத்துசாமியிடம் இந்தப் பதிலை ஆண்டி சொல்லும்போது அவன் தலையின் நச்சென்று அரச மலை இலையொன்று விழும். நாவலின் முக்கியப் பகுதியென இதனை எடுத்துக் கொண்டேன்.

‘அம்மையைத் தேடித் தான் புள்ளைங்க வரணும்..” என்று குலசாமி வாக்கு சொன்னாலும், தன பிள்ளைகளுக்காக சமவெளி வரத் தயாராகவே இருக்கிறது. ‘இவ்வளவு பேசுதியோ..ஐயப்பன பாக்கப் போறதும் தான் செரமம்..அதுக்காக ஐயப்பனைக் கீழயா கொண்டு வந்துட்டீங்க..” என்று கேட்கப்படும் கேள்வியும் நியாயமானதே. ஒருவேளை, குலசாமி ஒரு பெண்ணின் உடலில் இறங்கியதாலும், பெண்கள் வருவதற்கு சிரமம் என்பதாலும் கூட கீழே இறங்கி வர சம்மதித்திருக்கலாம்.

குலதெய்வம் பெண்களுக்கானது தானே! பெண்கள் போற்றாத குலதெய்வம் ஏது!! 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ஏக்நாத்
ஏக்நாத்
4 months ago

நன்றி தீபா. நான் எழுதியதை விட உங்கள் விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.