“நீ சிலரை சில நேரங்களில் முட்டாளாக்கலாம்
எல்லா நேரங்களிலும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது
எங்களுக்கு வெளிச்சம் தெரிகிறது
எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் எழுந்து நிற்போம்
Get Up Stand Up for your Right”
என்கிற பாப் மார்லியின் பாடலைக் கேட்டிருப்போம். இந்தப் பாடலின் தொடக்கத்தில் ஒரு தாள இசை வரும். அது ஒரு துள்ளலான இசை. அது ஒரு அழைப்புக்கான இசையும் கூட. ஆயிரம் வார்த்தைகளில் ஆற்றக்கூடிய சொற்பொழிவுகளைக் காட்டிலும் நான்கு நிமிட பாடல்கள் மாயம் செய்யக்கூடியவை. இந்த மாயத்தை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நூற்றாண்டுக்கு முன்பிருந்து செய்து வருகிறார்கள்.
இசையுலகில் ஆப்ரிக்க இசைக்கு ஒரு இடமும் பாரம்பரியமும் உண்டு. அவர்களின் இசை இன்றும் மக்களிடம் இருந்து உருவாகி வருகிறது. ஆப்பிரிக்கர்கள் கடும் உழைப்பாளிகள். அதனாலேயே அடிமையாக்கப்பட்டவர்கள். பிறப்பு தொடங்கி இறப்பு வரை எல்லாவற்றையும் இசையால் கொண்டாடுபவர்கள், கடப்பவர்கள். பயிரிடும் காலமும், அறுவடைக் காலங்களும் அவர்களுக்கு இசைக்கானவை. தொடக்கத்தில் இருந்தே அவர்கள் இசையை ஒரு கதை சொல்லலுக்காக, தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தியவர்கள். இதனாலேயே ஆப்பிரிக்க வம்சாவழியினர் எங்கு சென்றாலும் இசையை தங்களின் வாழ்வின் அங்கமாக பார்க்கிறார்கள்.
ஆப்பிரிக்காவின் வட பகுதியில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள் அமெரிக்காவின் வயல்களிலும் பருத்திக் காடுகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்கையில் முணுமுணுக்கும் பாடல்கள பல வடிவங்கள் பெற்று ஜாஸ் இசையாக மாறியது. செய்யும் வேலையில் சிறு தேக்கமும், தவறும் நிகழ்ந்தால் அவர்களைப் பதம் பார்க்க கையில் சவுக்கு கம்புகளோடு நிற்கும் அமெரிக்கக் கங்காணிகளிடமிருந்து தப்புவதற்காக பாடிக்கொண்டே வேகமாக வேலை செய்யும் முறையை ஆப்பிரிக்கர்கள் பின்பற்றினார்கள். பாட்டோடு சேர்ந்து தாங்கள் சொல்ல விரும்பியதை ரகசியக் குறிப்புகளோடு பாடல் வரிகளில் இணைத்துப் பாடவும் செய்தார்கள். இந்த முணுமுணுப்புகள் உரத்த குரல்களில் மேடைகளில் ஒலிக்க ஒரு நூற்றாண்டுக்கும் மேல் எடுத்துக் கொண்டது.
கறுப்பின இசை என்பது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. அவர்களுக்கென தனி அடையாளம் கிடைத்தது. இந்த இசை உலகத்தில் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி சரித்திரத்தைத் தங்கள் பக்கம் திரும்ப வைத்த பாடகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை இந்தக் கட்டுரை வழியே நினைவு கூறலாம்.
1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் இனப்பாகுபாடு அதன் உச்சத்தைத் தொட்டிருந்த காலகட்டம். வெள்ளை இன மக்களின் தங்குமிடங்கள், உணவகங்கள், பொது கழிப்பறைகளில் கறுப்பினத்தவர் நுழையக்கூடாது என்று அறிவிப்பு பலகைகளைத் தொங்க விட்டுக் கொண்டிருந்த நேரம். மரியன் ஆண்டர்சன் இசை உலகத்துக்கு அடி எடுத்து வைத்திருந்தார். அவரது பெயரும் பாடும் திறமையும் இசை விமர்சகர்களை அவர் பக்கம் ஈர்த்திருந்தன. மரியன் ஆண்டர்சன் ஒரு பொது நிகழ்வில் பாடுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது அமெரிக்க குடியரசின் மகள்கள் என்கிற அமைப்பு. இதனை எதிர்த்து பத்திரிகையில் சிலர் எழுதினார்கள். வயதான சில பெண்கள் சேர்ந்து மரியன் ஆன்டர்சன்னை பாட விடாமல் செய்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டிருந்தார்கள். இது ஒரு விவாதமாக மாறியது. அப்போது தான் அவருக்கும் அமெரிக்க கருப்பின் மக்களின் வரலாற்றுக்கும் மறக்க முடியாத நிகழ்வு நடந்தது. அது ஆவணப்படமாக் இன்றும் காணக்கிடைக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் மற்றும் திருமதி ரூஸ்வெல்ட் இருவருமாக சேர்ந்து லிங்கன் நினவு அரங்கத்தின் முன்பு ஈஸ்டர் அன்று மரியனை ஆண்டர்சனை மக்கள் முன்பாக பாட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இது நம்ப முடியாத வாய்ப்பு. நான்காயிரம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த அரங்கில் அன்று 75,000 அமெரிக்கர்கள் கூடியிருந்தார்கள். மேடையில் மட்டும் இருநூறு அமெரிக்க முக்கியஸ்தர்கள் நிறைந்திருந்தனர். மரியன் ஆண்டர்சன் அங்கு பாட வேண்டும். முதல் பல வரிசைகளில் வெள்ளை இன மக்கள் இருக்க, சில கிலோமீட்டர் தாண்டி கறுப்பின மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அங்கிருந்து மேடை கூட தெரிந்திருக்காது. ஆனால் தங்களில் இருந்து ஒருவர் அந்த மேடையில் நிற்கிறார் என்பது அவர்களுக்கு எத்தனை பெரிய உணர்வினை ஏற்படுத்தியிருக்கும்! மரியன் மெதுவாக மேடை ஏறி வருகிறார். மைக் முன் நிற்கிறார். இந்த நிகழ்ச்சியை இலட்சக்கணக்கானவர்கள் நேரடியாக வானொலியில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மரியனுக்குத் தெரியும். ஒரு கறுப்பினப் பெண் அத்தனை பேர் முன்னிலையிலும் நிற்பதென்பதே எத்தனை பெரிய போராட்டம். அங்கு அவர் பாட வேண்டும். மரியன் அமைதியாக மைக் முன்பு நிற்கிறார். மக்களின் முகத்தில் எதிர்பார்ப்பு. அந்த நிமிடம் மரியனின் முகம் என்னவாக இருந்திருக்கும் என்பதை அவர் முகம் காட்டிக்கொடுக்கிறது. பதற்றமாக இருந்திருக்கிறார். அவருக்குத் தெரியும், இது தனக்கான வாய்ப்பு மட்டுமில்லை. தனது இனத்தின் பிரதிநிதியாக நிற்கிறோம் என்பது. இது இன்னும் பொறுப்பான சுமை. கண்களை மூடுகிறார். நீண்ட பெருமூச்சினைத் தருகிறார். சட்டென்று உடைபடுகிறது குரல்.
ஈஸ்டர் தினத்தில் அவர் “எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்” என்று பாடினார். மேடை மறுக்கப்பட்ட ஒருவரின் குரல் இது. அமெரிக்க இசைத்துறை மறக்காத ஒரு பெயர் மரியன் ஆண்டர்சன். இதன் பிறகு அமெரிக்க அரசியல் வரை இந்த நிகழ்வின் தாக்கம் இருந்தது. மரியன் ஆண்டர்சன் ஒரு ஆளுமையாக மாறினார்.
அதன் பிறகு வந்தவர் ரே சார்லஸ். இவரது இசைத்தட்டுகள் இலட்சக்கணக்கில் விற்பனையானது. இவரின் இசை துள்ளலானது. காதுகளை நிறைக்ககூடியது.
ரே சார்லஸ் சிறு வயதில் தன் அப்பாவை பிரிந்தவர். இவருடைய அம்மா ரேவையும் அவரது தம்பியையும் வைத்துக் கொண்டு சிறு உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டே அங்கே தங்கினார்கள். அந்த உணவகத்தில் பியானோ வாசிப்பவரிடம் அடிப்படை பியானோ இசையைக் கற்றுக்கொள்கிறார் சார்லஸ் ரே. அவருக்கு நான்கு வயதாக இருக்கையில் ஒரு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விடுகிறார். அதில் இருந்து காப்பாற்றப்பட்டாலும் அவருடைய கண்பார்வை மெதுவாக மங்கத் தொடங்கியது.
ஏழு வயதாகும்போது முற்றிலும் தன பார்வையை இழக்கிறார் ரே. இவருடைய அம்மா அவரை கண்பார்வைத் திறனற்றவர்களுக்கான பள்ளியில் சேர்க்கிறார். இங்கு அவரை சேர்ப்பதற்கு அவருடைய அம்மா பலரின் சிபாரிசை நாட வேண்டியிருந்தது. படிப்பில் நாட்டமில்லாமல் இசையில் பிடிப்பு கொண்டிருந்த ரேக்கு அம்மா இத்தனை தூரம் ஒவ்வொருவரிடமும் தனக்காக மன்றாடுகிறாரே என்கிற ஒரே காரணத்துக்காக பள்ளியில் சேர முடிவு செய்தார். அங்கு அவருக்கு பிரெய்லி முறை கற்றுத் தரப்படுகிறது. அங்குள்ள பியானோ வகுப்பில் சேர்ந்து கொள்கிறார். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது அவரது தம்பி இறந்துவிட, அடுத்ததாக அம்மாவும் இறந்து போகிறார். யாருமற்ற ரே அம்மாவின் இறுதிச் சடங்கு முடிந்ததும் மீண்டும் பள்ளிக்கு போக வேண்டாம் என்கிற முடிவோடு மற்றொரு ஊரில் உள்ள உணவகத்தில் பியானோ வாசிப்பவராக சேர்கிறார். இங்கு அவருக்கு புதுப் புது இசைக்கோர்வைகளை முயற்ச்சித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இவரது புகழ் பரவுகிறது. பிரபலமடைகிறார்.
ரே சார்லைசைப் பற்றி இன்றும் பேசிக்கொண்டிருப்பதன் காரணம் இவரின் வருகைக்குப் பிறகு ஜாஸ் இசை வேறு ஒரு தளம் கண்டது. உணர்ச்சிகரமான இசை என்பது மென்மையாகவும் இருக்க முடியும் என வடிவமைத்தவர். பல மனநல மருத்துவமனைகளில் ரே சார்லசின் இசையை ஒலிக்கவிடுகையில் தங்களையறியாமல் நோயாளிகள் கண்ணீர் விடுவதையும் அந்த இசை ஒலிக்கும் இடம் நோக்கித் அழைக்கப்பட்டவர்கள் போல நடந்து போவதையும் அவரைப் பற்றி குறிப்பிடுபவர்கள் சொல்கிறார்கள். அதனால் தான் இவரை “ஆன்ம இசையின் தந்தை” என்கிறார்கள்.
“நீ வீட்டிற்கு வந்ததும்
உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேன்
மரியாதையைத் தானே..
அதுவும் கொஞ்சமாக..
நீ வீட்டை விட்டுப் போனதும்
நான் எந்தத் தவறும் செய்யவில்லை மிஸ்டர்..
நீ எனக்கு மரியாதை தரலாம்
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமேனும் மரியாதை கொடு..
உனக்காக நான் என் பணத்தையெல்லாம் தந்தேன்..
அதுக்கு பதிலாக மரியாதை கொடு”
இப்படியான ஒரு பாடலை எழுதி கோடிக்கணகானவர்களை முணுமுணுக்க வைத்தவர் அரேதா ஃபிராங்க்ளின். சட்ட உரிமைப் போராட்டத்தில் இவருடைய பாடல்கள் அதிகம் கேட்கவும் பாடவும்பட்டன.
பில்லி ஹாலிடே அருமையான பாடகி. இவரது குரலின் உருக்கம் என்பது சிறு வயதில் இருந்து அவர் கடந்து வந்த பாதையில் இருந்து உருவானது. பிழைப்புக்காக இவர் சிறுவயதில் செய்யாத வேலை இல்லை. ரயிலை சுத்தம் செய்திருக்கிறார். உணவகத்தில் வேலை செய்திருக்கிறார். வீடுகளின் தரைகளையும் குளியலறை, கழிவறைகளை சுத்தம் செய்திருக்கிறார். இதெல்லாம் இவரது பனிரெண்டு வயதிற்குள் நடந்தவை. பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் இவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க, பனிரெண்டு வயதில் அவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சில நாட்கள் இவரை காப்பகம் ஒன்றில் பாதுகாத்து வைத்தனர். அங்கிருந்து வெளியேறியதும் மீண்டும் வீடுகளில் சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்தார். க்ளப்களில் வேலை செய்கையில் அங்கு பாடப்படும் பாடல்கள் அவரை ஈர்த்தன. யாரும் கற்றுத் தராமல் அவராகவே தனியாக பாடி பயிற்சி எடுத்துக் கொள்கிறார். சாக்சபோன் வாசிக்கும் ஒருவரை சந்திக்கிறார். இருவருமாக சேர்ந்து ஒரு இசைக்குழுவை உருவாக்குகிறார்கள். எங்கெல்லாம் பாட வாய்ப்பு வருகிறதோ அங்கு போய்ப் பாடுவார் பில்லி. இவரது குரலில் உள்ள காத்திரத்தன்மை பலரை இவரை நோக்கி ஈர்த்தன.
இவரது வளர்ச்சி மெதுவாக உயரத்தை அடைந்தது. அமெரிக்காவின் தென்பகுதிக்கு சுற்றுப்பயணம் செய்யும் இசைக்குழுவில் பில்லிக்கு பாடகியாக இடம் கிடைத்தது. அந்தக் குழுவில் இவர் மட்டுமே கறுப்பினப் பாடகி. எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் கடைசி வரை ஓய்வெடுக்க கூட யார் முன்பும் உட்காரக்கூடாத சூழல் அவருக்கு இருந்தது. பல மேடைகளில் கறுப்பினப் பெண் பாடினால் கேட்கமாட்டோம் என்று பார்வையாளர்கள் சொல்ல பாதியில் இறக்கி விடப்பட்டிருக்கிறார். ஒரு மேடையில் யாரோ இவரை நோக்கி கறுப்பினப் பெண் என்று மோசமான வார்த்தையை ஒருவர் சொல்ல, கோபத்தில் பில்லி அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். தங்குமிடத்தில் லிப்ட்டில் கறுப்பினப் பெண் ஏறக்கூடாது என்று சொல்ல பல மாடிகளை ஒவ்வொரு முறையும் ஏறி இறங்குவது எப்படி என்று பதிலுக்கு கேட்டிருக்கிறார். மீண்டும் அவரது இனம் பற்றிய வசவுகளும், கேலிகளும் பதிலாக வர, அதோடு அந்த இசைக்குழுவில் இருந்து தன்னை வெளியேற்றிக் கொண்டார் பில்லி ஹாலிடே.
பில்லியின் வாழ்க்கை முழுக்கவுமே பெரும் ஓட்டம் இருந்து கொண்டிருந்தது. எப்போது பாடத் தொடங்கினாலும் அவரிடம் இருந்த சிறு புன்னகையை அவர் விட்டுத்தந்ததில்லை. இசை குறித்த முறையான பயிற்சியற்ற பில்லி ஹாலிடே நான்கு கிராமி விருதுகளை வென்றார்.
பாப் இசையின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிற மைக்கேல் ஜாக்சனின் மிக பிரியத்திற்குரிய முன்னோடி ஜேம்ஸ் பிரவுன். வறுமையில் இருந்து தப்பிக்க அம்மாவுடன் நியூயார்க் வருகிறார். இரண்டாம் உலகப்போருக்கு வீரர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் நின்று அவர்களை உற்சாகமூட்ட சிறுவன் ஜேம்ஸ் பிரவுன் தெருவில் நின்று ஆடிக் கொண்டிருப்பான். பாடல்கள் பாடுவான். இப்படி உள்ளூரில் சில பாடகர்களின் அறிமுகம் கிடைத்தது. பதினாறு வயதில் சில காலங்கள் குத்துச்சண்டை வீரராகவும் இருந்திருக்கிறார். போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார் ஜேம்ஸ் பிரவுன். அங்கும் இசையைக் கைவிடவில்லை. உடன் சிலரை சேர்ந்துகொண்டு அங்கேயே ஒரு இசைக்குழுவினை உருவாக்கினார். அவர்களே பாடல்கள் எழுதி பாடுவார்கள். சிறையில் கால்பந்தாட்டப் போட்டிகள் நடக்கையில் ஜேம்ஸ் பிரவுனின் பாடல்கள் கூடுதல் உற்சாகம் தந்தன. சிறையின் கொடுமைகளில் இருந்து இவரது பாடல்கள் சிறு வெளிச்சத்தை அங்குள்ளவர்களுக்குத் தந்திருக்கின்றன. ஜேம்ஸ் பிரவுன் சிறையில் இருந்து வெளியேற வேண்டுமானால் பிரசங்கப்பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டது. அந்த நிபந்தனையின் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியேறினார். சில காலங்கள் பிரசங்கப் பாடல்களைப் பாடினார். ஊர் ஊராகச் சென்றார். இவரது பாடல்களுக்கும் குரலுக்கும் பெரும் ரசிகர்கள் உருவானார்கள். இசைத்தட்டுகள் அதிகம் விற்பனையாகின. வெவ்வேறு விதமான பாடல்களை இவரது நண்பர் எல்லிஸ் எழுத இவர் மேடைதோறும் பாடினார்.
Say it Loud , I am Black I am Proud என்கிற இவரது பாடல் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளைக் கொண்டு பாட வைத்திருப்பார். இப்போது வரை அமெரிக்க இளைஞர்களால் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பாடல் இது. “Get up and say something”போன்ற பாடல்கள் கறுப்பின மக்களுக்காக குரல் கொடுப்போம் என்கிற குழிவினர் அமைதி காத்தபோது அவர்களுக்காக எழுதப்பட்டு இவர் பாடிய பாடல். தனது பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி கறுப்பின மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கினார்.
அமெரிக்க அரசியலிலும் சமூகத்திலும் தொடர்ந்து சில குரல்கள் அடிமைகள் என்ற பெயரில் தொடர்ந்து புறக்கணிக்கபப்ட்டு வந்தன. பேச்சுரிமை தடை செய்யப்பட்டது. பொதுவெளியில் அடிமை முறைக்கு எதிராக உரையாற்றுபவர்கள் கண்காணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடும் வேலை செய்பவர்களுக்கு கூலிகள் குறைக்கப்பட்டன. இவர்கள் நிறுவனம் தொடங்க தடை இருந்தது. திரைப்பட உலககுக்குள் ஒரு கறுப்பினத்தவர் கூட நுழைய முடியாதபடி கதவுகள் மூடியிருந்தன. இந்தச் சூழலில் தான் இந்தப் பாடகர்கள் ஒரு அலை போல எழுந்து வந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு வழிகாட்டினார்கள். எதையும் இசையால் கடத்த முடியும் என்று நம்பினார்கள். அது தொடர்ந்து நிகழவும் செய்தது நடந்தது.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அமெரிக்க நிலத்தில் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு இந்த இசை பெரும் கடமையைச் செய்திருக்கிறது. இவர்களில் சிலரை மட்டும் இந்தக் கட்டுரை மூலமாக நினைவு கொண்டுள்ளோம். இன்னும் எத்தனையோ பேர் தங்களின் வாழ்வை பணயமாக வைத்து இசையை ஒரு போர்க்கருவியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். மக்களை உத்வேகப்படுத்த சொற்களைக் காட்டிலும் பாடல்வரிகள் தான தொடக்கத்தில் இருந்து பெரும் பங்காற்றியுள்ளன.
நாம் ஏன் இபப்டி ஆனோம் என்கிற கழிவிரக்க கேள்விகளில் இருந்து இப்படி இருக்க மாட்டோம்..என்று பிடிவாதமான குரலாக மாறுவதற்கு இந்த இசையுலகம் அதிக வருடங்களை எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத் தொடர்ந்து அமெரிக்க ஜாஸ், பாப் இசையின் வரலாறை அறிந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
இசை எப்போதுமே சுதந்திரத்தின் வெளிப்பாடு..இவர்கள் அதன் தூதுவர்கள்.
(நீலம் இதழ் கறுப்புத்திரை தொடருக்காக எழுதியது)