கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வாசித்த புத்தகம் ‘யானைகளும் அரசர்களும் – சுற்றுச்சூழல் வரலாறு’.. யானைகள் பற்றியது. சீனாவில் தான் உலகிலேயே அதிகமான யானைகள் இருந்திருக்கின்றன. ஆனால இன்று சீனாவில் யானைகளின் எண்ணிக்கை இருநூற்றைம்பதுக்குள் மட்டுமே உள்ளன. இதோடு ஒப்பிடும்போது இந்தியாவில் எத்தனையோ இழப்புகள், அழிவுகளுக்குப் பின்னும் யானைகள் குறிப்பிட்ட அளவில் இருப்பதற்கான காரணத்தை ஆராய்கிறது இந்த நூல். மனிதர்களின் நேரடி பயன்பாட்டுக்கு யானை வந்த பிறகு அது பாதுகாக்கப்பட்டது என்பது இந்தப் புத்தகம் சொல்லும் அடிப்படை. இதை எழுதியவர் தாமஸ் ஆர். ட்ரவுட்மன். அமெரிக்காவில் மிஷிகன் பல்கலையில் மானுடவியல் பேராசிரியாகப் பணியாற்றியவர். ‘திராவிட சான்று’, திராவிட உறவுமுறை’புத்தகங்களை எழுதியவர்.
போர்க் காலங்களில் யானைகள் எப்படியெல்லாம் பயன்பட்டன, போரில் பயன்படுத்தும் யானைகளை எப்படி பெண் யானைகளைக் கொண்டு பிடிப்பார்கள், எப்படி பழக்கப்படுத்துவார்கள் எப்படி பராமரிக்கப்பட்டன பாகர்கள் போன்றவற்றைப் பற்றிச் சொல்கிறது.
யானைகள் பராமரிப்பு , மருத்துவம் பற்றி மட்டும் இந்தியாவில் எழுதப்பட்ட நூல்கள் அதிகம். 800 பக்கங்கள் கொண்ட நூல்கள் கூட எழுதப்பட்டிருக்கின்றன. பண்டைய இந்தியாவில் யானைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள இரு புத்தகங்களை ஆசிரியர் நமக்கு பரிந்துரைக்கிறார். ஒன்று அர்த்த சாஸ்திரம். மற்றொன்று அய்னி அக்பர். இரண்டுமே யானைக் காடுகளைப் பாதுகாப்பது பற்றிவிரிவாகப் பேசுகிறது. யானை கங்காணிகள் குறித்து எழுதியிருக்கின்றன. யானைகள் குறித்து சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்கள் துல்லியத்தன்மை கொண்டவை. அவை பிராமணர்களால் எழுதப்பட்டது என்றாலும், யானை பராமரிப்பு குறித்து அதனை பராமரிக்கும் கீழ்நிலை ஊழியர்களிடம் இருந்து தகவல் பெற்றே நூல்கள் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார். ஏனெனில் அதில் பயன்படுத்தப் பட்ட வார்த்தைகள் யானைகளோடு புழங்குபவர் பயன்படுத்தும் சொற்கள் என்கிறார். ஆனால் அவை எழுதப்படும் போது கடவுளிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட யானைகளை வழிநடத்தும் கட்டளைகளாக சொல்லப்பட்டிருக்கிறது. யானைகளையே கூட கடவுள் அனுப்பிய மின்னல் கீற்று என்றே குறிப்பிட்டுள்ளதாம் இந்த நூல்கள்.
கிமு 500 – 300வரையிலான காலகட்டத்தில் பல போர்கள் நடந்திருக்கின்றன. மகத நாடு போரில் முன்னணியில் இருந்ததற்கான காரணம் அதன் யானைப் படை தான். எந்த நாடு தன்னுடைய யானை மற்றும் குதிரைப் படையின் மீது பெரும் கட்டுப்பாடும், ஒழுங்கும் கொண்டிருக்கிறதோ அதுவே வெற்றி பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறது என்கிற தகவலைக் கொண்டு போர்களைப் பற்றிய பெரும் வரைவை இந்தப் புத்தகம் தருகிறது. சிரியாவில் யானைகள் அழிந்ததற்கு காரணம் அங்கு போருக்கு யானைகள் பயன்படுத்தப்படவில்லை என்பதும், இந்தியாவில் யானைகளை பராமரித்தற்கு காரணம் போர்களும், போரில்லாத சமயத்திலும் கூட தங்கள் படையில் யானைகளை வைத்திருந்ததை மன்னர்கள் பெருமையாகக் கருதினார்கள் என்பதும் தான்.
யானை என்பது இந்து, பௌத்த, சமணத்தில் தெய்வீகக் குறியீடாகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே யானை சமூக தளத்தில் இருந்து மத தளத்திற்கு வந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
யானைகள், இலை தழை மூங்கில் என அதன் பெருத்த உடலுக்கு பொருந்தாத உணவையே உண்பதால் அவற்றுக்கு ஜீரணம் விரைவாக நடைபெற்றுவிடும். இதனால் யானைகள் ஒரு நாளில் 16 மணிநேரம் உணவுக்காக மட்டுமே அலைந்து திரிகிறது என்கிறார். இதனடிப்படையில் யானைகளின் அழிவையும், யானைக்காடுகளின் அவசியத்தையும் உணர முடிகிறது.
இந்தப் புத்தகம் யானைகளைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் மட்டுமே கொண்டது என்று சொல்லிவிடமுடியாது. அதற்கான புத்தகங்கள் தனியாக எழுதப்பட்டிருக்கின்றன. இது முழுவதும் மன்னர்களுக்கும் போர்களுக்கும் யானைகளுக்குமான உறவைப் பேசுகிறது;
ஒரே அடியில் வாசித்து விட முடியாது. சிலவற்றை திரும்பத் திரும்ப வாசித்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் ஒவ்வொரு பக்கத்தையும் கடக்கும்போதும் தாமஸ் ஆர். டிரவுட்மனின் ஆர்வமும் ஆதங்கமும் புரிகிறது. தரவுகளைக் கொண்டே எழுத நினைத்திருக்கிறார். அதனால் நிதானமாக படிக்க வேண்டியிருக்கிறது.
ஆர்வம் ஏற்படுத்துகிற புத்தகம்.
வெளியீடு : காலச்சுவடு
தமிழில் ப. ஜெகநாதன்மற்றும் சு. தியோடர் பாஸ்கரன்