நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இது. மும்பையின் கேங்ஸ்டர்கள் குறித்து படித்திருப்போம். கேள்விப்பட்டிருப்போம். படங்கள் வந்திருக்கின்றன. அவர்களுக்கு இணையாக, அவர்களே மதிக்கும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இவர்களுக்கு எப்படி துணையாக இருந்தனர், எதிரிகளாக மாறினார்கள் என்பது பற்றியான புத்தகம் இது. லல்லன் பாபி என்பவர் போலீசில் பிடிபடுகிறார். அங்கிருந்து தன வீட்டுக்கு போன் செய்ய வேண்டும் என்கிறார் அனுமதி தரப்படுகிறது. அவர் தன் தம்பியிடம் பேசுகிறார். “இன்று இரவு நான் வரமாட்டேன். சமையலறையை மாற்றிவிடு” என்கிறார். எதற்காக அவர் இப்படி சொல்கிறார் என்பதை நீண்ட நாட்கள் கழித்து தான் போலிஸ் கண்டுபிடித்திருக்கிறது. அவர் எதற்காக கைது செய்யப்பட்டாரோ, அந்தக் கடத்தல் பொருட்கள் அவருடைய சமையலறையில் இருந்திருக்கின்றன. அதைத் தான் மாற்ற சொல்லியிருக்கிறார் அதுவும் போலிஸ் சூழ ஸ்டேஷனில் இருந்து. இந்தத் தைரியம் தான் இந்தப் பெண்களின் அடையாளம் என்கிறார் இதனை எழுதிய ஹுசைன் ஜைதி . இவர் ஜேன் போர்கஸ் என்பவருடன் எழுதிய புத்தகம் இது. ஹுசைன் சித்தியுடன் விக்ரம் சந்த்ராவும் சிலரை சந்திக்கச் சென்றிருக்கிறார். இந்த விக்ரம் சந்த்ரா தான் Sacred Games நாவலை எழுதியவர்.
ஜீனா பாய் என்றொருவர். நாம் யாரையெல்லாம் மும்பையின் பெரிய தலை என்கிறோமோ அவர்களையெல்லாம் முதுகில் தட்டி வேலை வாங்கியவர். ஜீனா பாய் ஒரு பஞ்சாயத்தை முடித்து வைத்த கதையை விவரிக்கிறார்கள். இரண்டு எதிர் எதிர் பெரிய கேங்க்ஸ்டர் கும்பல் இணைந்தால் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு நகரின் மையமான இடத்தில் உள்ள ஷாப்பிங் மாலை வாங்கலாம் என்கிற நிலையில் , இரண்டு கேங்க்ஸ்டர்களையும் ஜீனா பாய் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார். திட்டத்தையும் சொல்கிறார். அங்கேயே சண்டை போடத் தொடங்கும் அவர்களை அதட்டி உட்கார வைக்கிறார். இன்றும் கூட அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் இவர்கள் ஜீனா பாய் இறக்கும் காலம் வரை அம்மா என்கிற ஸ்தானத்திலேயே வைத்திருந்திருக்கிறார்கள். ஜீனா பாய் இவர்களுக்கு தந்ததெல்லாம், உணர்வுப்பூர்வமான ஆதரவு.
மற்றுமொரு ஆச்சரியம் தரும் ஒரு பெண் இருந்திருக்கிறார். சப்னா என்பது அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர். தன கணவன் ஒரு கேங்க்ஸ்ட்ர்களால் கொல்லப்பட, அவர்களை பழிவாங்க, அந்த கேங்க்ஸ்டரின் எதிரி குழுவில் இணைகிறார். துப்பாக்கி சுட கற்றுக் கொள்கிறார். அவரே ஒரு தனி குழுவினை உருவாக்குகிறார். போலிசுக்கு இன்பார்மர் ஆகிறார். ஒருநாளில் அவர் தன் வீட்டிலேயே தன் கணவனைக் கொன்ற கேங்க்ஸ்டர்களால் 22 இடங்களில் உடலில் குத்துப்பட்டு இறந்துபோகிறார். இதனை ஜெயிலில் இருந்து கொண்டு புத்தக ஆசிரியர்களிடம் விவரிப்பவர் சப்னாவை ஒரு தலையாகக் காதலித்த, அவளுக்கு துப்பாக்கி சூடுக் கற்றுக்கொடுத்த எதிரி கேங்க்ஸ்டரின் தலைவர்.
மகாலட்சுமி பாப்பம்மாள் என்கிற தமிழ்ப்பெண் பற்றியும் விவரங்கள் உண்டு. அவர் எப்படி போதைப் பொருள் கடத்தும் தொழிலுக்கு வந்தார் என்பதே நம்ப முடியாததாக அதே நேரம் அது தான் உண்மையாகவும் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியவர்கள் பாப்பம்மாளை சந்திக்க சென்ற நிகழ்வை விவரித்திருக்கிறார்கள். திடுக்கிடும் திருப்பங்கள் என்பார்களே அப்படி இருந்தது.
மோனிகா பேடி அபு சலீம் பற்றிய விரிவான கட்டுரையும் உண்டு.
கங்குபாய் பற்றிய படமே வந்திருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் கங்குபாய் பற்றிய கட்டுரையை அப்படியே திரைக்கதை செய்திருக்கிறார். கங்குபாயின் காதல் பகுதி மட்டும் சஞ்சய் லீலா பன்சாலி கேள்விப்பட்டு சேர்த்திருக்க வேண்டும்.
இவை தவிர கணவர்களைக் காப்பாற்ற கேங்க்ஸ்டர்களை கையிலெடுத்தப் பெண்கள்., அரசியலுக்கு வந்தவர்கள், வெளிப்பார்வைக்கு வர்த்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு நிழலுலக வேலைகளைச் செய்த பெண்கள் என அடுத்தடுத்து கட்டுரைகள்..
இவர்களில் வெகு சிலருக்கு மட்டுமே வறுமை என்பது காரணமாக இருந்திருக்கிறது. மற்றவர்களுக்கு காதல் என்பது ஆச்சரியமான ஒன்று..
சுவாரஸ்யமான புத்தகம் என்று கடந்து போக வழியில்லை..அத்தனையும் வாழ்க்கை.