விட்டல் ராவ் எழுதிய ‘வண்ண முகங்கள்’ வாசித்தேன். ஓவியர், திரைப்படங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் எழுதக்கூடியவர், புனைவு எழுத்தாளர் என்பது இவரைப் பற்றி நான் அறிந்து கொண்டது. பதிப்பாளரும் நண்பருமான ஜீவ கரிகாலனும் நானும் உரையாடும்போதும் ஒருமுறை கூட விட்டல் ராவினுடைய பெயரைச் சொல்லாமல் ஜீவ கரிகாலன் உரையாடலை முடித்ததில்லை. விட்டல் ராவின் ‘காலவெளி’ நாவலை சில வருடங்களுக்கு முன்பு வாசித்திருக்கிறேன். அது ஓவியக் கல்லூரியில் படித்த மாணாவர்கள் மீண்டும் பல வருடங்களுக்குப் பின் ஒன்றிணைந்த போது நடக்கும் கதை.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் யாவரும் அரங்கில் ‘வண்ண முகங்கள்’ வாங்கினேன். வாசிப்பதற்கு முன்பு வரை அது கட்டுரைத் தொகுப்பா, சிறுகதைத் தொகுப்பா என்று கூடத் தெரியாது. விட்டல் ராவ என்கிற பெயரைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன். நேற்றைய தினம் புத்தகத்தைப் புரட்டும்போது தான் நாவல் என்று தெரியவந்தது. அதிலும் நாடகக் கம்பெனி குறித்தது என்றதும் ஆர்வம் ஏற்பட்டு இரவில் படித்து முடித்தேன்.
விட்டல் ராவின் சகோதரி குப்பி வீரண்ணா நாடகக்குழுவில் பணி செய்தவர். கர்நாடகாவில் குப்பி வீரண்ணாவுக்கு அப்படியொரு மரியாதை. அவரின் பிரமாண்ட செட்டுகளைக் குறித்து இப்போதும் வியந்து பேசும் தலைமுறை உண்டு. யானை என்றால் யானை படம் போட்ட திரைச்சீலையைக் காட்டமாட்டார், யானையே மேடையில் வந்து நிற்கும். இதற்காகவே யானையை வளர்த்தாராம் வீரண்ணா. இவருடைய நாடகத்தில் பயிற்சி பெற்றவர் தான் பின்னாட்களில் தமிழில் பிராமாண்ட படைப்புகளுக்கு முன்னோடியாக இருந்த இயக்குநர் பி.ஆர் பந்துலு அவர்கள்..
இந்தப் பின்னணிக்கும் நாவலுக்கும் தொடர்பு உண்டு என்பதால் இந்த அறிமுகம்.
குப்பி வீரண்ணா காலத்தில் புராண பக்தி நாடகங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இவருடைய பாதிப்பு இல்லாத நாடகக் கம்பெனிகள் கர்நாடகாவில் இருக்க முடியாது. அபபடியொரு நாடக கம்பெனியை கதைக் களத்தில் கொண்டு வந்திருக்கிறார் விட்டல் ராவ்.
கிருஷ்ணப்பா என்பவருடைய நாடகக்கம்பெனி தான் கதைக்களம். ஒரு கம்பெனி எப்படி நடைபெறும், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அவர்களுக்கிடையே இருக்கும் நட்பு, காதல் , பணப்பற்றாக்குறை, க்ரீன் ரூம் உரையாடல்கள், திருமணங்கள் என்று இத்தனைத் தகவல்களும், உணர்வுகளும் இந்த நாவலின் பெரும் பலம். ‘பெனிஃபிட் ஃபண்ட்’ நாடகங்கள் பற்றியும், ஒரு நாடகக்குழு எப்படி ஒரு குடும்பமாக வாழ்ந்தார்கள் எனபதையும் இந்த நாவல் விவரித்துச் சொல்கிறது.
சாதாரணமானவை என்று ஒரு வரியைக் கூட ஒதுக்க முடியாத அளவுக்கு அடர்த்தி கொண்டது.
திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒவ்வொரு நாடக நடிகரும் கொண்டிருக்கும் வேட்கை அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதில் ஏற்படுகிற தோல்விகள் என ஒரு பக்கம். அச்சுதராயர் போன்ற கதாபாத்திரங்கள் கடைசி வரை நாடகங்களைப் பற்றி புரிந்து கொண்டு அதற்கு ஈடுகொடுத்து நிற்பது மறுபுறம். இறுதியில் நாவலை முடித்த இடம் மிகச்சிறப்பு. ஒரு நாடக கம்பெனி எப்படித் தன்னை காலத்துக்கு ஏற்ப மாற்றிக்கொண்டது என்பதோடு முடித்திருக்கிறார் விட்டல் ராவ்.
ஒரு ஊரில் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரைத் தங்கும் நாடக்குழு முதலில் என்ன செய்வார்கள், ஒரு ஊரினை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்கள், தங்குவதற்காக இடத்தினை எப்படி கண்டுபிடிப்பார்கள், பெண்களுக்கான பாதுகாப்பு எப்படி அமைக்கப்படும் இதோடு அவர்களுக்குள் ஏற்படும் சிறு சலசலப்புகள், பொறாமைகள் என்பதைச் சொல்லிச் செல்லும் நடை மிக அற்புதமாக இருக்கிறது. எந்தவொரு சிறு தகவலையும் விட்டல் ராவ் விட்டு வைக்கவில்லை. ஒரு அரங்கம் எப்படி நிர்மாணிக்கப்படுகிறது என்பதையும் கூட சொல்லிவிடுகிறார்.
மேடை நாடகத்தினை மட்டும் பின்னணியாகக் கொண்டு அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையினைப் பேசும் நாவல் இதற்கு முன் நான் வாசித்ததில்லை. கர்நாடகாவில் நடக்கும் கதை என்றாலும் அப்படியே தமிழுக்கும் பொருந்தக்கூடியது. லிங்காயத்துகள் குறித்த ஒரு பகுதி மட்டும் நாவலின் ஊடாக வருகிறது என்பது கடந்து அப்படியே தமிழ்க்களம் தான்.
நாடகக்கலைக்கும் ஓவியர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாடங்களில் திரைச்சீலை வரைந்தவர்கள் அதற்கு உதவியாக இருந்தவர்கள் பின்னாட்களில் புகழ்பெற்ற ஓவியர்களாகி இருக்கிறார்கள். பார்சி நாடகத்தின் தாக்கம் ரவிவர்மாவின் ஓவியங்களில் உண்டு. நாடகத்தினால் ஈர்ப்பு கொண்ட பலரும் ஓவியக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இதன் ஒரு தொடர்ச்சியாக விட்டல்ராவினைப் பார்க்க முடியும். அவருக்குள் நாடகங்களைப் பார்த்த கணங்களும், அதன் வசீகரமும் நிலைபெற்றிருக்கிறது. அவர் ஓவியராகவும், நாடக ரசிகராகவும், எழுத்தாளராகவும், நினைவுகளை சேமிப்பவராகவும் இருப்பது நமக்கு ஒரு அற்புதமான நாவலைத் தந்திருக்கிறது.
இந்தக் களத்தில் நாவலை எழுதியமைக்கு விட்டல் ராவ் அவர்களுக்கு நன்றியும், வணக்கங்களும்.
வெளியீடு: ஜெய்ரிகி பதிப்பகம்