நூல்வனம் வெளியிடும் புத்தகங்களை எனக்குப் பிடிக்கும். சிம்ரன் போஸ்டரையே மூன்று மணி நேரம் பார்ப்பேன் என்பது தான் எனக்கு இவர்கள் புத்தகம். சும்மா கையில் வைத்திருந்தால் போதும் என்கிற அளவுக்கு தரமாக வெளியிடுகிறார்கள்.
இப்படித் தான் அட்டைப்படம் நன்றாக இருக்கிறதே என ‘பறந்துபோய்விட்டான்’ என்கிற சிறுகதைத் தொகுப்பை வாங்கி வந்தேன். எட்கர் கீரத் எழுதியது. தமிழில் செங்கதிர் மொழிபெயர்த்திருக்கிறார். எட்கர் கீரத் இஸ்ரேலிய எழுத்தாளர். ஹீப்ரு மொழியில் எழுதுபவர். இவையெல்லாம் இந்தத் தொகுப்பை உடனடியாக வாசிக்கக் காரணமானது.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. ஒன்றின் உள்ளடக்கத்தை அவர் வேறு எங்கும் கொண்டு வருவதில்லை. மிகத் தீவிரமான ஒன்றைக் கதையாக எடுத்துக் கொள்கிறார். ஆனால், சொல்லும்போது அதை புன்சிரிப்போடு நம்மை வாசிக்க வைக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொரு வரியும் நம்மை நிலைநிறுத்திவிடுவதால், ஒரு கதை முடித்து அடுத்த கதைக்கு எந்த தயக்கமும் இன்றி படித்து விட முடிகிறது.
பிறந்த உடனேயே ஒரு குழந்தை முகாமுக்கு அழைத்து வரப்படுகிறது. அதைப் போல நிறைய குழந்தைகள். அவர்களக் செய்யும் ஒவ்வொரு செயலும் எப்போதும் கேமராவால் கண்காணிக்கப்படும். அதில் ஒரு குழந்தை வளருகிறது. அந்தக் குழந்தை அதற்கு முன்பு முற்றிலும் பார்த்திராத ஒரு நிலக் காட்சியை தன கனவில் துல்லியமாகக் காண்கிறது. அதைப் பற்றி யாரிடமும் அது சொல்லவில்லை. ஏனெனில் அந்தக் கனவு மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருக்கிற ஒரே ரகசியம். இப்படித் தொடங்குகிற ஒரு கதை ‘தபுலா ரஸா’. இந்தத் தொகுப்பின் முதல் கதை. இதைப் படித்து முடித்த உடனேயே யார் இவர் என்கிற எண்ணம் தான் ஏற்பட்டது.
ஒவ்வாமைகள் என்கிற இந்தத் தொகுப்பில் உள்ள மற்றொரு கதையை படித்தவுடன் , எட்கர் கீரத்தைப் பற்றித் தெரிந்தாக வேண்டும் என்கிற எண்ணம் இன்னும் அதிகமானது. இவருக்கென இணையதளம் உள்ளது. அதை வாசித்தேன். நல்ல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்கான கிராபிக் நாவல்களை எழுதியுள்ளார். மனைவி ஷீராவுடன் சேர்ந்து Jellyfish என்கிற அனிமேஷன் படத்தினை இயக்கியிருக்கிறார். Jellyfish ஷீரா எழுதிய கதை. இருவருமாக திரைக்கதைகள் எழுதியிருக்கிறார்கள். கோட்டோவியங்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இதற்கு அவருடைய ஆட்டோக்ராப் இடும் முறையே சாட்சி. இவருடைய சில கதையில் திரைக்கதைக்கான கூறும் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு ஒரு சாட்சியாக ‘ஒரு கிராம் தேவை’ கதையைச் சொல்லலாம்.
இவர் அளித்த நேர்காணல்களில் சிறுவனாக இருந்த எட்கர் தன் அப்பாவுடன் உரையாடியதை எழுதியிருக்கிறார். நல்ல வாழ்க்கை, மோசமான வாழ்க்கை என தரம் பிரிக்கக் கூடாது…வாழ்வதற்கு உகந்த காலம், கடினமான காலம் அவ்வளவு தான் வாழ்க்கையின் கூறுகள் என இவர் அப்பா சொன்னதை பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். இவருடைய அப்பாவும், அம்மாவும் யூத வதை முகாமில் இருந்து தப்பியவர்கள். போர்ச்சூழலும், ஆபத்துகளும் கொண்ட வாழ்க்கை என்பதை இரண்டு தலைமுறைகளாக பார்த்து வருவதால், இவரது கதைகளில் அவை வெளிப்படுகின்றன. ஆனால், எங்குமே தாழ்வுணர்ச்சியோ, தன்னிரக்கமோ இல்லை. இஸ்ரேலில் வசிக்கும் இவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்களில் போரைப் பற்றிய இவரது பார்வை, குழந்தைகள் மீதான அக்கறை, அறிவுத் தளத்தில் இயங்கும் சமூகத்திற்கும் மக்களுக்குமான இடைவெளி, என பேசியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை தமிழுக்கு மொழிபெயர்த்த செங்கதிர் ஜெய்ப்பூரில் மத்திய அரசுப்பணியில் இருக்கிறார் என அறிமுகம் சொல்கிறது. அங்கு தமிழே புழங்காத சூழலில் மொழிபெயர்ப்பு என்பது அவருக்கு ஆசுவாசத்தை அளித்திருக்கக் கூடிய தேர்வாகவும் இருந்திருக்கிறது என முன்னுரையில் குறிப்பிடுகிறார். நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார்.
எட்கர் கீரத் எழுதிய மற்ற கதைகள் அவரது தளத்தில் ஆங்கிலத்திலேயே கிடைக்கின்றன. அதை வாசிக்க இந்தப் புத்தகம் சிறந்தத் தொடக்கமாக எனக்கு அமைந்திருக்கிறது.