The Devil’s Advocate : The untold story

0
49

திரு நரேந்திர மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு ஊடகங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. மோடியின் ஆட்சிக்கு சாதகமான செய்திகளைச் சொல்லும் ஊடகங்கள் அரசால் அரவணைக்கப்பட்டன. அப்படியல்லாத ஊடகங்களின் பங்குகள் அரசுக்கு நெருக்கமானவர்களால் கைப்பற்றப்பட்டன. மிஞ்சினால் அமலாக்கத் துறையினரால் சோதனை செய்யப்பட்டன. ஊடகங்களில் பணிபுரிந்த தலைமை நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள் சிலர் செய்தி நிறுவனங்களில் இருந்து வெளியேறி தங்களுக்கென ஒரு ஊடகத்தை உருவாக்கிக் கொண்டனர். தொலைகாட்சியின் செய்தி ஊடகங்கள் கடந்த சில வருடங்களாக தங்களுடைய செல்வாக்கினை இழந்து வருகின்றன. ஒரு செய்திக்காக தொலைகாட்சியின் முன் உட்கார்ந்திருக்கும் நிலை இன்றில்லை. இதனை வாராவாரம் வெளிவருகிற டிஆர்பி ரேட்டிங்கில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். செய்தி சேனல்களின் டிஆர்பி பாதாளம் நோக்கி வேகமாக சரிகின்றது.

இன்று ஒரு செய்தி நிறுவனத்தை நம்புவதை விட மக்கள் தனி நபர்களை பின்தொடரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களும் அரசின் விளம்பரத்தை நம்பாமல் மக்களிடம் கௌரவமாக தங்களது செய்தி சேனலுக்கு பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். செய்தி ஊடகத்தின் முகம் மாறிவருகிறது.

இவர்களில் தனித்து நின்று தொடர்ந்து களத்தில் பேசிக்கொண்டிருப்பவர் கரன் தப்பார். இவருடைய அனுபவம் இந்தத் துறையில் கால் நூற்றாண்டைக் கடந்து விட்டது. இன்றும் இவரது நேர்காணல்கள் அதிகமானோரால் பார்க்கப்படுகின்றன. நாட்டில் நிலவும் எந்தப் பிரச்சனையையும் இவர் சம்பந்தப்பட்டவர்களிடம் முன்வைக்கிறார். THE WIRE நிறுவனத்துக்காக இவர் எடுக்கும் நேர்காணல்களில் எப்போதுமே ஒரு நேர்த்தி அமைந்திருக்கும். கேள்விகள் கேட்கும் விதமும் அதற்கென இவருடைய முன்தயாரிப்பும் குறிப்பிடப்படவேண்டியது.

இவர் தனது அனுபவங்கள் குறித்து எழுதிய Devil’s Advocate புத்தகம் வாசிபப்தற்கு அத்தனை சுவாரஸ்யமானது. 90களின் இறுதியில் ஒரு அலையென சில ஊடகவியலார்கள் வந்தார்கள். அதுவரை அரசியல்வாதிகளையும், பிரபலங்களையும் நேர்காணல் செய்வதென்பது அவர்களின் புகழ்பாடி புன்னகைக்க வைப்பதாகவே இருந்தது. சிலரின் வருகை இந்த அடிப்படையை மாற்றியது. அப்போது தொடங்கி இன்று வரை அவர்களில் முக்கியமானவராக கரன் தப்பார் இருப்பதாலேயே அவர் தனது அனுபவமாக எழுதிய இந்தப் புத்தகம் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாக் இருக்கிறது.

கரன் தப்பார் முன்பு நேர்காணலுக்கு அமருகிற ஒவ்வொரு பிரபலமுமே தயார் நிலையில் வந்து அமர வேண்டும். ஏனெனில் ஒருவரைக் குறித்த முழு விவரத்தையும் சேகரித்து புள்ளி விவரங்களோடு சமரசமற்று கேள்வி கேட்கும் வல்லமை கரனுக்கு உண்டு. அதற்கு எப்படி பயிற்சி எடுத்தார் என்பதையும் விளக்கியுள்ளார். முக்கியமாக தான் செய்த தவறுகளையும் சமரசமற்று எழுதியிருக்கிறார்.

வெளிப்படையாக அனைவரையும் பற்றி எழுதியுள்ளதால் புத்தகம் வெளிவந்த பிறகு அவருக்கு சிலரிடமிருந்து எதிர்ப்பு வந்திருக்கிறது. எந்தளவுக்கு என்றால் மிக அனுபவசாலியான கரனை எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல், நேர்காணலும் செய்ய விடாத அளவுக்கு..

இதற்கு முக்கிய காரணம் இந்தப் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் உள்ளது.

புத்தகத்தின் கடைசி மூன்று அத்தியாயங்கள் விறுவிறுப்பான படத்தின் க்ளைமாக்ஸ் போன்றது. மிகுந்த சர்ச்சைக்குள்ளான மூவரின் நேர்காணல் குறித்து அடுத்தடுத்த அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார். அந்த மூவர் – ராம் ஜெத்மலானி, ஜெயலலிதா, நரேந்திர மோடி.

இந்த மூவருமே நேர்காணலை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து சென்றவர்கள். ஏன் என்பதை கரன் தன் பாணியில் நேர்த்தியாய் விளக்கியிருக்கிறார்.

முக்கியமாய் இங்கே சொல்ல நினைப்பது நரேந்திர மோடியின் நேர்காணல் பற்றி..

நேர்காணலின் முதல் கேள்வியாக, கோத்ரா சம்பவத்தையும், உச்சநீதிமன்றம் ‘நீரோ’ என்று சொன்னதையும் முன்வைக்க, ‘யாரோ சிலர் சொன்னதை நான் பொருட்படுத்துவதில்லை’ என்று மோடி பதில் தந்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் எப்படி யாரோ ஆவார்கள்? என்கிற கேள்விக்கு, “நீதிபதிகள் வாய்மொழியாத் தான் சொன்னார்கள். ஆனால் தீர்ப்பில் எழுதப்படவில்லை” என்றிருக்கிறார்.

ஆனால் தீர்ப்பில் நீதிபதிகள் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நேர்காணல் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே கரனின் கேள்விகளை புறந்தள்ளிவிட்டு, மைக்கினை கழற்றி வைத்துவிட்டு நேர்காணலை முடிக்க சொல்லியிருக்கிறார் மோடி. ஆனால் அடுத்த முக்கால் மணிநேரம் எதுவும் நடக்காதது போல  கரனுக்கு ‘குஜராத்தி மாடல்’ விருந்து உபசாரம் செய்திருக்கிறார்.

இந்த விருந்து உபசாரத்தை தன்னுடைய சாமர்த்தியம் என்பதாகவே மற்றவர்களிடம் பகிர்ந்திருக்கிறார் மோடி. ஆனால் ஊடகம் தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டும் என்று மோடி நினைத்திருக்கவில்லை. மறுநாளே அந்த மூன்று நிமிட நேர்காணலும் அவரது கோபமும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் இதனைத் தன்னுடைய ஆயுதமாக எடுத்துக் கொண்டது.

மோடி மனதில் கரன் மீதான பழியுணர்ச்சி இருந்ததை கரனிடம் பாஜகவை சேர்ந்தவர்களே சொல்லியிருக்கிறார்கள். இதன் காரணமாகவே கரன் தப்பார் நெறியாளுகை செய்கிற நிகழ்ச்சிகளில் எந்த பாஜக தலைவர்களும், பேச்சாளர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்றிருக்கிறார் மோடி. அமித்ஷாவை சந்தித்து கரன் தப்பார் இது குறித்து பேசிய பிறகும் கூட மோடி தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

தான் சந்தித்த அனைத்து தலைவர்களின் , பிரபலங்களின் குறைகளை சுட்டிக்காட்டும் கரன், அவர்களின் நேர்மறையான அணுகுமுறையையும் சொல்லவே செய்கிறார்.

மோடியைக் குறித்து கரன்  இந்த அர்த்தத்தில் நம்மிடம் சொல்கிறர். “மிகுந்த நற்குணம் படைத்த, வெளிப்படையான ஆளுமையான மனிதர் என்று நினைத்திருந்தேன்..ஆனால் அவர் இவை எவற்றிலுமே பொருந்தாதவர்’..

இந்தக் கடைசி அத்தியாயத்தை வாசித்து முடிக்கையில் தோன்றியது இது தான்.  மோடி அவர்கள், பிரதமரான பின் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட தனித்து  நடத்தவில்லை என்பதிலிருந்து, வெளிப்படையான பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள அவர் எப்படி அஞ்சுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  இதற்கு கரன் தாப்பரின் பேட்டி அவர் மனநிலையில் (psyche) ஏற்படுத்தியுள்ள அச்ச உணர்வே என்று தோன்றுகிறது.

அதன் பிறகு தேர்தலை ஒட்டி மோடி அளிக்கும் அனைத்து பேட்டிகளும், முன்னதாகவே ஒத்திகை பார்க்கப்பட்டவை என்பதை மறந்து விடக் கூடாது.  ஒரு மிகப் பெரிய ஆளுமையாக கோடிக்கணக்கானோரால் வழிபடப்படும் மோடி அவர்களுக்கு, வெளிப்படையான பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த இன்று வரை துணிவு வராததன் காரணத்தை கரன் தாப்பர் நூலில் மோடி பற்றிய அத்தியாயம் புரிந்து கொள்ள வைக்கிறது.

அமிதாப் பச்சன் அவர்களை நேர்காணல் செய்தபோது கேட்கப்பட்ட ஒரு கேள்வியில் கோபமாகி அவர் நடந்து கொண்ட விதத்தினை கரன் எழுதியிருக்கிறார். அமிதாப்புக்கு கரன் மீது ஏற்பட்ட எரிச்சலில் அவரது மனைவி ஜெயா பச்சன் மீது காட்டிய கோபம் அது.

கரனின் நீண்ட கால தோழியான பெனசிர் புட்டோ குறித்து நெகிழ்ந்து எழுதியுள்ளார். அவரது திருமணத்துக்கு இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஒரு நண்பராக சென்று கலந்து கொண்டது, அவரது மரணச் செய்தி கேட்டபோது உள்ளுக்குள் உடைந்ததையும் வெளிப்படையாக எழுதியுலாளர். பெனசிர் குறித்து கரன் எழுதியதில், வரிகளுக்கு இடையே கிடைக்கிற சொல்லப்படாத வார்த்தைகள் முக்கியமானவை.

இந்தப் புத்தகத்தினை வாசிக்கையில் ஒவ்வொரு ஆளுமை குறித்து நாம் தெரிந்து கொள்வதைக் காட்டிலும் ஊடகம் என்பது எத்தனை சக்திவாய்ந்தது என்பதையும், அதை எத்தனை தூரம் ஒரு ஊடகவியலாளர் கூர்திட்டியபடி இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இன்றைய சமகால இணைய ஊடகங்கள் நமக்கு செய்திகள் என்ற பெயரில் காட்டும் ஒவ்வாமைகளுக்கு இடையில் கரன் போன்றவர்களின் அனுபவம் மிக அவசியமாகிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments