Lover திரைப்படம்

1
46

Lover படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. தற்காலச் சூழலை பதிவு செய்கிற படங்கள் அவசியமானது. ஒரே மாதிரியான காட்சிகள் என்ற தோற்றம் ஏற்படும். அது தான் இந்தப் படத்தின் பலமும் கூட. இப்படியான கதைகளின் ‘ஐடியா’ புதிதல்ல, ஆனால் படத்தினை எப்படி முடிக்க வேண்டும் என்கிற தெளிவு இல்லை என்றால், படம் குழப்படியாகிவிடும். யார் பக்கம் நியாயம், யார் மீது தவறு என்றெல்லாம் போதனை செய்யாமல், இரு கதாபாத்திரங்களையும் நம் முன்னால் நிறுத்திவிட்டு இயக்குநர் ஒதுங்கிக் கொள்கிறார். பலருக்கும் இது நமது கதை போல உள்ளதே என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கும். ப்ரேக் அப் பற்றிய கதைகள் இந்திய மொழிகளில் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. அதில் பக்குவமாகக் கையாளப்பட்ட படம் என்று சொல்லலாம். இருவர் காதலிக்கும் சூழலில், எந்த நேரத்தில் எது மாதிரியான உணர்வுகள் தோன்றும், எப்போது கோபமும், அழுகையும் ஆற்றாமையும் குற்ற உணர்வும் ஏற்படும் என்பது அநேகமும் பொதுவானவை. அந்தந்த உணர்வுகளைக் காட்டியிருப்பதாலேயே பலருக்கும் தங்களுடன் படத்தினைத் தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது.

ஒரு விஷயத்தை அடிக்கோடிடாமல் போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு பெண் கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் வருகின்றன. ஒன்று அம்மா, மற்றொன்று காதலி. இருவருக்கும் நிகழ்காலத்தை மறந்து அடுத்தது பயணத்தைத தொடர வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு அவர்கள் இருவரும் தங்களை எப்படி சமன் செய்து கொள்கிறார்கள் என்பதைக் காட்டிய விதம் பிடித்திருந்தது. அம்மா, செடிகள் வளர்க்கிறார், செடிகள் வாங்குகிறார். தொடர்ந்து இதைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அருண் தன அம்மாவை நினைத்துப் பார்க்கும்போது கூட செடிகளுடன் இருக்கும் அம்மாவே நினைவுக்கு வருகிறார். இது சாதாரணமாக வைக்கப்பட்ட காட்சியாகத் தோன்றவில்லை. பெண்கள் மனதைத் திசைத்திருப்ப செய்யும் காரியங்களுள் ஒன்றென இதைக் காட்டுவதாகவே எடுத்துக் கொள்கிறேன். திவ்யாவும் பயணம் போகிறாள், இசைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறாள்..இது நடைமுறையும் கூட. படத்தின் எண்டு கார்டில் சொல்லப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பு உண்டு.

மணிகண்டன் அவர்கள் குறித்துச் சொல்ல வேண்டும். நமக்கு ஸ்டார்கள் இருக்கிறார்கள். நடிகர்கள் குறைவு. தன்னைத் திரையில் உயர்த்திக் காட்டிக் கொண்டே இருப்பவர்களைப் பார்த்து சலித்துப் போயிருக்கையில் மணிகண்டன் போன்றாவர்கள் அந்தப் படத்திற்கான நியாயத்தை செய்து விடுகிறார்கள். மணிகண்டன் ஏற்றிருக்கும் அருண் கதாபாத்திரம் யதார்த்தமானது, அதே நேரம் சிக்கலானது. கொஞ்சம் அசந்தாலும் ‘சைக்கோ’ மாதிரி இருக்கான் என்று சொல்ல வைத்து விடக்கூடிய கதாபாத்திரம். ஆனால், பரிதாபத்தையும் இயலாமையும் கொண்டிருக்கும் கதாபாத்திரமும் கூட. ‘நம்ம செய்யறதுல என்ன தப்பு இருக்கு?” என்று உண்மையிலேயே தெரியாதவர். இப்படியான ஒரு கதாபத்திரத்தை ஏற்று நடிக்க நிச்சயம் துணிவு வேண்டும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த கதாபாத்திரத்தை நடிக்கவே ஸ்டார்கள் விரும்புவார்கள். பெண்கள் எரிச்சலடையும் கதாபாத்திரம் இது. இந்தப் படத்தில் அருணை புரிந்து கொள்ள முடியும், ஆனால ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியான ஒரு பாத்திரத்தில் சரியாய்த் தன்னைப் பொருத்தி நடித்தற்காக மணிகண்டன் பாராட்டப்பட வேண்டியவர். அதே போல திவ்யாவாக நடித்த ஸ்ரீ கௌரி ப்ரியா. எனக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.

அடுத்து என்ன ? என்று பரபரப்பான திரைக்கதைக்குப் பின் ஓடாமல், நிதானமாக அணுகியிருக்கிறார்கள். இப்போதுள்ள காதலர்கள் குறித்து கடந்த தலைமுறையினருக்கு புதிர்த்தன்மை உண்டு. அதன் சிடுக்கை ஓரளவு எடுக்க நினைத்திருக்கிறார்கள்.

இந்தப் படம் உரையாடலையும், விவாதங்களையும் ஏற்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. அதற்காகவே இது போன்ற படங்கள் வரவேண்டும்.

இயக்குநர் பிரபுராம் வியாஸுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள்.

1 COMMENT

  1. அக்கா நீங்கள் கொடுத்த விமர்சனம் சரியாக தான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here