எஸ்.எஸ். வாசன் – நினைவோ ஒரு பறவை

0
324

எஸ்.எஸ். வாசன் இயக்குநராகவும் வெற்றி பெற்றவர். ஒவ்வொரு படத்திலும் சாதனைகள் செய்தே தீருவேன் என்று ஒருவர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியான படங்கள் தான் எஸ்.எஸ்.வாசன் இயக்கியதும் தயாரித்ததுமானவை. ஒரு தயாரிப்பாளராக அவர் சினிமாவின் போக்கினை மாற்றியிருக்கிறார். சினிமா என்பது வியாபாரம் என்றால், அது தன் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்தார். வெறும் கதை சொல்லல் மட்டுமே திரைப்படமாகிவிட முடியாது, அது ஒரு காட்சி ஊடகம், கதையை காட்சியின் அத்தனை சாத்தியங்களோடு சொல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.  ஒரு இயக்குநராகவும் இதனை நிகழ்த்திக் காட்டியவர்.

‘ஆனந்த விகடன்’ பத்திரிகை நஷ்டத்தில் இயங்கிய காரணத்தால் அதனைக் கைவிட்டிருந்த புதூர் வைத்தியநாதர் என்பவரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி சில் மாதங்களிலேயே முப்பதாயிரம் பிரதிகளை விற்றார் எஸ்.எஸ். வாசன். பத்திரிகையின் உள்ளடக்கத்தை சுவாரஸ்யமாக மாற்றியதுடன் அதற்குத் தொடர்ந்து அவர் கொடுத்த விளம்பரங்களினால் விற்பனை அதிகரித்தது. மக்களோடு அதிகம் பழகும் வாய்ப்பு கிடைத்த காரணத்தால் தான்  அவர்களின் ரசனையைத் துல்லியமாக வாசன் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே  கே.சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த  ‘தியாக பூமி’ போன்ற படங்களை விநியோகிக்கத் தொடங்கினார். அவருடைய கணிப்பு சரியாக வேலை செய்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றது. வாசன் அவர்கள் தயாரித்து இயக்கிய படங்களைப் பார்க்கிறபோது, மக்களின் ரசனை என்னவாக இருந்திருக்கிறது, எதைப் படமாகக் காட்டினால் அவர்களின் வரவேற்பினைப் பெறலாம் என்று தெரிந்து வைத்திருந்த ஒருவர் என புரிந்து கொள்ள முடியும். ‘சந்திரலேகா’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ ‘இரும்புத்திரை’ என அவர் தயாரிக்கவும், தமிழில் இயக்கவும் செய்த படங்கள். இவை தவிர இந்தியிலும் படங்களை இயக்கவும் தயாரிக்கவும் செய்திருக்கிறார். தமிழில் இருந்து இந்திக்குச் சென்ற தயாரிப்பாளர்களில் முன்னோடி இவர்.

மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ தீக்கரையானபோது அதனை5 வாங்கி புதுப்பித்து ஜெமினி ஸ்டுடியோ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தொடங்கிய  வருடம் அவர் எடுத்தப் படங்கள் எல்லாமே வெற்றி. மங்கம்மா சபதம், அபூர்வ சகோதரர்கள், மிஸ் மாலினி, பால நாகம்மா என அடுத்தடுத்து வெற்றி பெற்றன. ‘மங்கம்மா சபதம்’ படத்தின் இயக்குநரான ஆசார்யாவைக் கொண்டு ‘சந்திரலேகா’ என்கிற படத்தின் அறிவிப்பினை வெளியிடுகிறார். பிரமாண்டமான விளம்பரங்களைப்

 படத்தின் தலைப்பை வெளியிடுவதற்காக செய்தார்.    ஆனால், கதை தயாராகாமல் இருந்திருக்கிறது. ஜெமினி ஸ்டுடியோ கதை இலாகாவினர் எத்தனை கதைகள் சொன்னாலும் அது வாசனுக்குத் திருப்தியாக இல்லை. ஜெமினி நிறுவனம் அது வரை தயாரித்திருந்த படங்கள் எல்லாமே தலைப்பு தொடங்கி  பெண்களை மையமாகக் கொண்டவை என்பதால் ‘சந்திரலேகா’வும் அப்படியே இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய  விருப்பமாக இருந்திருக்கிறது. கிராமத்தில் இருந்து விதிவசத்தால் நகரத்துக்கு வருகிற பெண்ணின் மீது அந்த நாட்டு இளவரசனுக்கு ஆசை வந்துவிடுகிறது. கெட்ட குணம் படைத்த அந்த இளவரசனிடம் இருந்து சந்திரலேகா எப்படித் தப்புகிறாள் என்பதைக் கதையாகச் சொன்னபோது வாசன் அது சாதாரண கதையாக இருக்கிறது என்று ஒதுக்கிவிட்டார். பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் ரெனால்ட்ஸ் எழுதிய நாவலில் இருந்த முதல் பக்கத்தில் உள்ள ஒரு காட்சியை ஜெமினி கதை இலாகாவைச் சேர்ந்த வேப்பத்தூர் கிட்டு வாசித்துக் காட்ட அது பிடித்துப் போய் அதில் இருந்து ‘சந்திரலேகா’ படத்தின் கதை உருவாகியிருக்கிறது.

ஒரு கிராமத்து பெண்ணை கொள்ளையர்கள் குதிரை வண்டியில் அழைத்துப் போய் ஆடச் சொல்கிறார்கள். அவள் மறுக்கிறாள். தங்களது சாட்டையால் அடித்து அவளை ஆட வைக்கிறார்கள் என்பது தான் அந்த முதல் பக்கத்தில் இருந்த கதை. ‘சந்திரலேகா’ படத்தில் இந்தக் காட்சி வந்திருந்தது.

படத்தின் இயக்குநரான ஆச்சார்யா ஏதோ காரணத்தால் விலகிக் கொள்ள, அதுவரை தயாரிப்பாளராக இருந்த வாசன் முதன்முறையாக இயக்கத் தொடங்குகிறார்.

சந்த்ரலேகா திரைப்படம்

‘சந்திரலேகா’ படம் இன்று வரையிலும் இந்தியாவின் சாதனை தான். படத்தின் தொடக்கத்தில் ‘இது எந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்த சரித்திர படம் அல்ல’ என்றும் ‘ஒரு பெண்ணின் கதை’ என்பதாகவும் எழுதிக் காட்டி விடுகிறார்கள். ஒரு கிராமத்து பெண்ணான சந்திரலேகா ஒரு குதிரை வீரனை சாலையில் சந்திக்கிறார். அந்த வீரனுக்கும் சந்திரலேகாவுக்கும் பார்த்த உடனேயே காதல் ஏற்பட்டுவிடுகிறது. அந்த வீரன் தான் நாட்டின் இளவரசன் என்பது சந்திரலேகாவுக்குத் தெரியாது. அவளுக்குத் தெரிந்தால்  தயக்கத்தினால் தன் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்கிற தயக்கத்தில் அந்த இளவரசனும் கடைசி வரை சொல்லாமால் மறைக்கிறார். கடைசி காட்சியில் தான் சந்திரலேகாவுக்குத் தான் காதலித்தது அந்த நாட்டின் இளவரசன் என்பது தெரிய வருகிறது. இதற்கிடையில் இளவரசனின் தம்பி சஷாங்கன்,  தனக்கே நாட்டையாளும் உரிமை வேண்டும் என்று சண்டை போடுகிறான். அவனும் சந்திரலேகாவை பார்த்துவிட, தன் அண்ணன் விரும்பிய பெண் என்பது தெரியாமல் அவளை அடைய நினைக்கிறான். தன்னை எதிர்த்த அம்மா அப்பாவை சிறையில் அடைக்கிறான். அம்மாவையும், அப்பாவையும் சந்திரலேகா மற்றும் நண்பர்களின் உதவியோடு மீட்கிறான் இளவரசன். இந்தக் கதையும் கூட பல புராண, நாட்டுப்புறக் கதைகளின் களம் தான் என்றாலும் ‘சந்திரலேகா’ வித்தியாசப்படுவது அதன் பிரம்மாண்டக் காட்சிகளில்.

முதல் காட்சியில் தொடங்குகிற பிரமிப்பு படத்தின் இறுதி வரைக்கும் நீடித்திருக்கும். பெரிய கோட்டைகள், அகழிகள், மலைகள், யானைகள், குதிரைகள், சர்க்கஸ் அரங்கங்கள், நாடோடிகளின் பாடல்கள் என அப்போது திரைப்படங்களில் காட்டுவதற்கு யாரும் தைரியப்படாத, தயங்குகிற பல விஷயங்களைக் காட்டியிருந்தார். இளவரசனை அவனது தம்பி சஷாங்கன் ஒரு குகையில் கட்டி வைத்து பெரிய பாறையால் மூடிவிடுவான். இதனை சந்திரலேகா பார்த்துவிடுவாள். அவள் ஒருத்தியால் அந்தப் பாறையை நகர்த்தவே முடியாது. அந்தப் பக்கமாக சர்க்கஸ் நடத்துவதற்காக ஒரு கூட்டமே போய்க்கொண்டிருக்கும், புலிகள் கூண்டுக்குள் சுற்றியபடி இருக்கும், ஒட்டங்கங்கள் முன்செல்லும், யானைகளும் அதன் குட்டிகளும் பின்தொடரும். விதவிதமான வண்டிகளில் சர்க்கஸ் கோமாளிகளும் அதில் பணி செய்வர்களும் அமர்ந்திருப்பார்கள். இவர்கள் மலைக்கு நடுவே உள்ள பாதையில் ஒரு ஊர்வலம் போலச் சென்று கொண்டிருப்பார்கள். யோசிப்பதற்குள்ளாகவே  மூச்சு முட்ட வைக்கும் இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார். இதில் உள்ள யானைகளை வைத்து இளவரசன் சிறைபிடிக்கப்பட்ட அந்தப் பாறையை நகர்த்துவார்கள். யானை வந்தது, பாறையைத் தள்ளிவிட்டது என்பதாக அல்லாமல் விரிவான காட்சி அது. சங்கிலிகளை பாறையோடு சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில்  வரிசையாக யானைகள் நிற்கும். அதன் மேல் அமர்ந்து பாகங்கள் கட்டளையிட அந்தப் பாறைகளை யானைகள் நகர்த்துவது போன்றதான காட்சி.  இந்த ஒரு  பிரம்மாண்ட காட்சி  வாசனுக்கு போதவில்லை. அடுத்தடுத்து பிரமிப்பை ஏற்றிக்கொண்டே போகிறார்.

சர்க்கஸ் காட்சிகளை காட்டுகிறார். சர்க்கஸில் வித்தை காட்டுபவர்கள் எப்படி தயாராவார்கள் என ‘க்ரீன் ரூம்’ காட்சிகளைக் காட்டுகிறார். திரைக்கதையாகப் பார்க்கையில் சாதாரண காட்சி போலத் தோற்றமளிக்கும் எதுவும் காட்சியாக விரியும்போது தனித்தன்மையைப் பெற்றுவிடுவதே ‘சந்திரலேகா’ படத்தின் சிறப்பாக இருக்கிறது. சந்திரலேகாவும் இளவரசனும் ஒரு நாடோடிப் பெண்கள் கூட்டத்தில் தஞ்சமடைகிறார்கள். சஷாங்கனின் ஆட்கள் இங்கும் இவர்களைத் தேடி வருகிறார்கள். இருளில் ஒவ்வொரு பெண்களின் முகத்துக்கு அருகிலும் விளக்கினைக் காட்டி சோதிக்கின்றனர் வீரர்கள். அந்தப் பெண்கள் நடனமாடுகிறார்கள். அது ஒரு தனித்துவமான பாடலாகவும் இசையாகவும் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து பிரமிக்கும்போதே அடுத்த காட்சி இன்னும் திகைப்படைய வைக்கிறது. ஊரின் மையத்தில் சஷாங்கனின் ஆளுயர சிலை பீடத்தில் இருக்கிறது அங்கிருந்து பாடல்  ஒன்று தொடங்குகிறது.

தமிழ் சினிமாவின் அரிதிலும் அரிதான பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஜெமினி ஸ்டுடியோவில் தொடர்ந்து இசையமைத்தவர்கள் எஸ்.ராஜேஸ்வர ராவ் மற்றும் எம்.டி. பார்த்தசாரதி. இருவருமாக இணைந்து இசையமைத்தத் திரைப்படம் இது. பின்னணி இசை பற்றிச் சொல்லியாக வேண்டும். சஷாங்கன் பதவியேற்க வருகையில் கொடுக்கப்பட்ட பின்னணி இசை , தீவட்டி கொள்ளையர்கள் ஊருக்குள் வருகையில் தரப்பட்ட இசை, சர்க்கஸ் காட்சிகளுக்குத் தரப்பட்டவை, க்ளைமாக்சில் பாடல் எதுவுமின்றி ட்ரம்ஸ் மீது ஆடப்படும் நடனத்துக்கு ஒலிக்கும் இசை என மூன்று வருடங்கள் இசையமைப்புக்காக தொடர்ந்து பணி செய்ததில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள். லத்தீன் அமெரிக்க சாயலில் வெளிவந்த, ‘அயிலோ பகரியாமோ’ பாடலும், காட்டு வழியில் சர்க்கஸ் குழுவினர் பாடிக்கொண்டு வரும் நாட்டுப்புறப்பாட்டும், இசைக்குழுவினர் மிருதங்கம் தபேலாவை இசைத்துக் கொண்டு வழித்துணைக்காக பாடுவதும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பெரும் அனுபவம்.  

ருடோல்ஃப் ப்ரீமில் என்கிற இசை மேதை The FireFly என்கிற இசை நாடகத்துக்கு 1912ல் இசையமைக்கிறார். லத்தீன் அமெரிக்க நாட்டுப்புறப் பாட்டின் சாயல் கொண்டது. அந்தப் பாடல் மிகப் பிரபலமானது. அந்த நாடகம் 1937ல் அதே பெயரில் படமாக எம்ஜிஎம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அதே லத்தீன் அமெரிக்க நாட்டுப்புறப் பாடல் அதில் இணைக்கப்பட்டது. The Donkey Serenede என்கிற பெயரில் அது மீண்டும் பிரபலமானது. இந்தப் பாடலைத் தான் ‘சந்திரலேகா’வில் ‘அயிலோ பகரியமா” என்ற பாடலில் பயன்படுத்தியிருப்பார்கள். தமிழில் வெளிவந்த முதல் ஜிப்ரிஷ் மற்றும் வார்த்தை விளையாட்டில் வெளிவந்த பாடலென்று சொல்லலாம்.

திரைப்படங்கள் நாடகங்களில் இருந்து தோன்றியது என்பதால் வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இந்தப் போக்கு இன்று வரை கூட நீடிக்கிறது. சில படங்களை வானொலியில் ஒலிச்சித்திரமாக ஒலிபரப்புவார்கள். அப்போதும்  கதையை புரிந்து கொள்ள முடியும். ஆனால் சந்திரலேகா படத்தில் வசனங்கள் குறைவு, காட்சிகளால் ஆனது இந்தப் படம். படத்தை பார்த்தால் மட்டுமே அனுபவம் கிடைக்கும். சஷாங்கனுக்கு முடிசூட்டுவதற்கான விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும். சிறையில் மன்னனும், ராணியும் இருப்பார்கள். ஒரு வசனம் கூட கிடையாது. முழுவதும் சுற்றுப்புற ஒலியின் மூலமாகவே மன்னனின் மனநிலையைப் புரிய வைத்த காட்சி. முரசு கொட்டுவது, வீரர்கள் நடப்பது, கைதட்டும் ஒலி..இதை மட்டுமே மன்னர் கேட்டுக் கொண்டிருப்பார். அவர் இதனைக் குறித்தெல்லாம் கவலையில் இருக்கிறார் என்பது நமக்கு சொல்லாமலேயே விளங்கும். இப்படி ஒரு காட்சியினை எடுப்பதற்கு அசாத்திய கற்பனையும், காட்சி மீதான நம்பிக்கையும் வேண்டும்.

சந்திரலேகா படம் ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் 1948ஆம் ஆண்டு வெளிவந்தது. இதோடு இந்தியிலும் எடுக்கப்பட்டு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் இங்கு வெளியிடப்பட்ட அன்றே வெளியானது. Pan India movieயின் தொடக்கம் இந்தப் படமாகத்  தான் இருந்திருக்க வேண்டும்.

‘சந்திரலேகா’வில் மட்டுமல்லாமல் எஸ்.எஸ்.வாசன் தமிழில் இயக்கிய மற்றொரு திரைப்படமான ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல் காட்சியைச் சொல்ல வேண்டும். வணிகக்கப்பல் ஒன்று புயலில் சிக்கிக் கொள்கிறது. அந்தக் கப்பலின் பாய்மரத்தை அந்தப் புயலையும் எதிர்த்து கயிறின் மீதேறி கழற்றுகிறார் ஜெமினி கணேசன். அங்கிருந்து கதைத் தொடங்குகிறது.

எஸ்.எஸ் வாசன் இயக்கியக் கதைகள் யாவும் ஒரு சிறு தாளில் எழுதிவிடக்கூடியவை தான். அதைத் திரைக்கதையாக மாற்றும்போது ஒரு கற்பனை உலகத்துக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார். ஒரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து வைக்க அவர் உருவாக்குகிற காட்சிகள் இன்றைய வணிக சினிமாவின் இலக்கணமாக இருக்கிறது. கதாநாயகனுக்கு பிரமாண்டக் காட்சி என்றால், வில்லனை அறிமுகப்படுத்தும் போது அவனுடைய தீய குணங்களைச் சொல்வதற்கான ஒரு காட்சி. ‘சந்திரலேகா’வில் சஷாங்கன் அறிமுகமாகும் காட்சியில் வேட்டை நாய்களின் குரைப்பொலிகள் கேட்கும், சஷாங்கன் நாய்களைக் கையில் பிடித்துக் கொண்டு வருவார். அதன்பிறகு ஒவ்வொரு முறையும் சஷாங்கனை அரண்மனைக்குள் காட்டும்போதும் அங்கு ஒரு வேட்டை நாய் இருக்கும். சஷாங்கன் கோபப்படும்போது முத்தாய்ப்பாக அந்தக் காட்சியில் நாய் அதிகாரமாக குரைக்கும்.

இரும்புத்திரை படத்தில் சிவாஜிகனேசன் கதாபாத்திரம் அறிமுகம். வைஜெயந்தி மாலாவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். ரிக்ஷாவை அழைத்துக் கொண்டு வர வைஜெயந்தி மாலா வருவார். ரிக்ஷா மட்டும் இருக்கும், ரிக்ஷா ஓட்டுனர் இருக்க அமாட்டார். பக்கத்தில் யாரையாவது அழைக்கலாம் என்றால் சற்றுத் தள்ளி ஒருவர் ‘சத்திய சோதனை’ புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பார். ரிக்ஷா அருகில் ஒரு பெண் நிற்பதைப் பார்த்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பவர் எழுந்து வருவார். அவர் தான் சிவாஜி கணேசன். ‘நான் ரிஷ்காரரைக் கூப்பிட்டேன்’ என்பார் வைஜெயந்தி மாலா. “நான் தான் ரிக்ஷா ஒட்டுபர்’ என்று புத்தகத்தினை சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு ரிக்ஷாவினை ஓட்டுவார். வைஜெயந்தி மாலாவால் நம்பவே முடியாது. மருத்துவரிடம் சிவாஜி கணேசன் தேர்ந்த ஆங்கிலத்தில் பேசுவார். இப்படி நன்கு படித்த ஒருவர் ஏன் ரிக்ஷா ஓட்டுநராக இருக்கிறார் என வைஜெயந்திமாலா போல நமக்கும் தோன்றும். அதன் காரணங்களை அடுத்தடுத்த காட்சி நமக்கு சொல்லும், கடைசிவரை சிவாஜி கணேசன் கதாபத்திரம் பொதுவுடைமை, தொழிலாளர் சங்கம் என கதையில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய கதாபாத்திரமாக அமைந்திருக்கும்..

இரும்புத்திரை படத்தில் வைஜெயந்திமாலாவும், சிவாஜிக்கும் ஒரு காதல் காட்சி உண்டு. தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்றெனக் கூறலாம். ‘என்கிட்டே பழகின மாதிரி வேற பெண்கிட்ட  பழகியிருக்கீங்களா?”என வைஜெயந்தி மாலா கேட்க, அதற்கு சிவாஜி கூறும் கதையும், அதற்கு வைஜெயந்தியின் முகபாவனைகளும்..ரசிக்கக்கூடியவை.

ஒரு இயக்குநராக வாசன் பார்வையாளர்களுக்கு ஆச்சரியங்களைத் தருவதற்கு மெனக்கிட்டிருக்கிறார். அதற்கான வாய்ப்புகள் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு கதையின் யதார்த்தத்தன்மைக்கு ஈடுகொடுப்பதற்கு பிரமாண்டத்தைக் கையிலெடுக்கிறார். இது ஒரு முரணாகத் தோன்றினாலும், இதைத் தான் செய்திருக்கிறார் வாசன். உதாரணமாக, சஷாங்கனை வீழ்த்த வேண்டுமெனில் கோட்டைக்குள் செல்ல வேண்டும். படத்தில் சில காட்சிளில், திரும்பத் திரும்பக் காட்டப்படுவது,  கோட்டை எத்தனை பாதுகாப்பானது என்பதும், அதில் ஒரு குண்டூசி கூட வீரர்களின் கண்ணில் படாமல் உள்ளே நுழைய முடியாது என்பதும் தான். அப்படியெனில் கோட்டைக்குள் இருக்கும் சஷாங்கனை வீழ்த்த அவனது அண்ணன் எப்படி தனக்கு ஆதரவான வீரர்களை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய முடியாது. இது யதார்த்தம், இதை சரி செய்ய ராட்சச முரசுகளுக்குள் வீரர்களை ஒளிந்து கொண்டு கோட்டைக்குள் அனுப்பப்படுகிறார்கள். அதன் மேல் நின்று ஆடும் நடனம் முடிந்ததும், அதில் இருந்து வீர்கள் வெளிப்படுகிறார்கள் என்பதாக அக்காட்சி அமைகிறது. படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் பிரமாண்டங்களின் தொகுப்பு.

திரு எஸ்.எஸ். வாசன்

‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி கணேசன் தனது அண்ணன் வேலை செய்யும் நூற்பாலைக்குள் வருகிறார். ராட்சத இயம்ந்திரங்கள் கொண்ட நூற்பாலையிலேயே படம் பிடித்திருக்கிறார்கள். அங்கு ஒரு இயந்திரம் பழுதாகிறது. அதனை சிவாஜி கணேசன் சரி செய்கிறேன் என்கிறார். அவர் ஒரு மெக்கானிக்கும் கூட. இப்படி சொல்லிவிட்டு அடுத்த காட்சியில், இயந்திரம் சரியாகிவிட்டது என்று வசனத்தில் சொல்லியிருக்கலாம். ஆனால் எப்படி ‘சந்திரலேகா’வில் யானைகள் ஒரு பாறையை இழுத்ததையும், சர்க்கஸ் காட்சிகளையும், நீண்டதொரு வாழ் சண்டையையும் காட்டினார்களோ அப்படி விரிவான ஒரு காட்சி தான்  சிவாஜி எப்படி இயந்திரத்தை சரி செய்கிறார் என்பதும். இப்படி கதையின் யதார்த்தத்துக்கு பிரமாண்டக் காட்சிகளை பயன்படுத்தியதில் முன்னோடி இயக்குநராகவும், முதல் இயக்குநராகவும் வாசன் இருந்திருக்கிறார்.

பத்மினியும், வைஜெயந்திமாலாவும் அற்புதமாக நடனம் ஆடக்கூடியவர்கள். இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து ஆடுகிறார்கள், அதுவும் போட்டி போட்டுக் கொண்டு. இன்று வரை ‘கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே’ இந்திய சினிமாவின் மறக்க முடியாத ஒரு  போட்டிப் பாடலாக மாற்றியிருக்கிறது.

‘இரும்புத்திரை’ படத்தைத் தயாரித்து இயக்க  முடிவு செய்தபிறகும் இதன் தலைப்பு எதுவும் திருப்திகரமாக் அமையவில்லை. அதனால் போட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். தலைப்புகளை அனுப்பச் சொல்லி அறிவித்திருந்தார்கள். ஒரு இளைஞர் நோட்டு முழுவதும் 2500 தலைப்புகளை எழுதி அனுப்ப, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு தான் இரும்புத்திரை.

இவர் இயக்கியத் தயாரித்த படங்களைத் தொடர்ந்து பார்க்கையில், அசராத ஒரு மனம் கொண்ட ரசனையையும், வேட்கையும் ஒன்று சேர பார்ப்பது தான் எஸ்.எஸ். வாசனின் திரைப்படங்கள் எனத் தோன்றும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments