அப்பாலே போகும் யாத்ரீகன்

0
323

அப்பாலே போகும் யாத்ரீகன்

எளிமை தான் மிகக் கடினமானது” – மார்டின் ஸ்கார்சிஸ்

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக சினிமாவுக்காக நின்று நிதானமாக உழைத்துக் கொண்டிருக்கிறார் மார்டின் ஸ்கார்சிஸ் (Martin Scorsese). இப்படித்தான் இவரது படம் இருக்கப்போகிறது என்று கணிப்பதற்குள்ளாகவே வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்திச் சென்று விடுபவர்.   வன்முறையை மையமாக வைத்து படம் எடுக்கிறார் என்று இவரைப் பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும்போது பதினான்காவது தலாய் லாமா பற்றி KUNDUN’ படம் எடுத்து வெளியிட்டார். MEAN STREETS’ படம் திரைக்கு வந்ததுமே அடுத்த பத்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் ஃபெலினி என மார்ட்டின் ஸ்கார்சிஸ் பேசப்படுவார் என விமர்சகர்கள் கணித்தனர்.

படம் இயக்குவதை மட்டுமே திரைத்துறைக்கு தனது பங்களிப்பாக இவர் செய்துவிடவில்லை. ஒரு நாள் இரவு 2.30 மணிக்குத் தனது அறையில் அமர்ந்து ஒரு படத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் பரவசமாய் அவரை ஆட்கொண்டு விடுகிறது. மறுநாளே அமெரிக்கத் திரைப்பட உலகிற்கு ஒரு செய்தியை சொல்கிறார்மாலித் தீவில் இருந்து ஒரு படம் வெளிவந்திருக்கிறது. அதன் பேர் Yeelen’ என்னை மிகவும் ஈர்த்தப் படமாக இந்தப் படத்தை சேர்த்துக் கொண்டேன் என்றார். MOOLAADE’ போன்ற செனெகல் நாட்டுத் திரைப்படங்கள் பலரின் கவனம் பெற்றதற்கு காரணமும் இவர் தான்.   இந்த  உலகில் எந்த சிறுதேசத்தில் சிறந்த படங்கள் வெளிவந்தாலும் அதைப் பற்றிப் பேசுவதன் மூலம் அனைவரிடமும் கொண்டு சேர்த்து விடுகிறார்.  

இதோடு The Film Foundation என்கிற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பழையப் படங்களைப் பாதுகாத்தும் வருகிறார்.

  • திரைப்படம் எடுப்பதற்கான உந்துதல் எங்கிருந்து கிடைத்தது ?

என்னுடைய அப்பா, அம்மா இருவருமே வேலைக்குப் போகிறவர்கள். நானோ உடல்நிலை தேறாத நோய்வாய்பட்ட சிறுவனாக இருந்தேன். எங்கேயும் என்னால் தனியாகச் செல்ல முடியாது. எந்தப் புத்தகத்தையும் படிக்கவும் முடியாது. ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தேன். அப்போது அடிக்கடி சினிமா பார்ப்பதற்கு மட்டும் அப்பா என்னை அழைத்துக் கொண்டு செல்வார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பக்கம் என்னுடைய கற்பனைகள் விரியும். ஆறு முதல் பனிரெண்டு வயது வரைக்குமான வருடங்கள் எனக்கு முக்கியமானவை. எனது அப்பாவின் சகோதரர்களும், சகோதரிகளும் மாலை வேளைகளில் எனது வீட்டிற்கு வருவார்கள். அந்த நாள் முழுவதும் என்ன நடந்தது, எப்படியான மனிதர்களை சந்தித்தார்கள் போன்ற விஷயங்களை எல்லாம் அவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் சேர்ந்து சினிமாவுக்கு போவோம். அந்தச் சூழல் தான் திரைப்படம் நோக்கி என்னை ஈர்த்திருக்கிறது.

  • உங்களுடைய வாழ்க்கை தான் உங்களது சினிமா என்று சொல்லுகிறீர்கள்.. எதனால் அப்படி உணர்கிறீர்கள்?

மதமும், நவீன சமூகத்தின் கிறித்தவ நெறிகளும் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி சிந்திக்கிறேன். அதுவே என்னை சில படங்களை எடுக்கத் தூண்டுகின்றன. நான் இத்தாலிய அமெரிக்க குடும்பங்களுக்கு மத்தியில் வளர்ந்தவன். எப்போதும் எங்களது வீட்டுக்கு குழந்தைகள் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள்.  அந்த சூழலும் மக்களும் தான் எனது படங்களிலும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

  • உங்கள் படங்கள் பெரும்பாலும் நீதிகேட்ட மனிதர்களைப் பற்றியும் பாதுகாப்பற்ற பெண்களைப் பற்றியுமே அதிகம் சித்தரிக்கிறது. அதே நேரத்தில் வன்முறையையும் அதிகம் சார்ந்திருக்கிறது. இதை நீங்கள் உணருகிறீர்களா?

மார்டின் ஸ்கார்சிஸ் படங்கள் என்றதும் மக்கள் என்ன நினைப்பார்களோ அதையே தான் கேள்வியாக கேட்டிருக்கிறீர்கள். வன்முறைக்கு நான் ஆதரவாளன் கிடையாது. MEAN STREET’  படத்தில் கணவனால் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகும் பெண், அவனை விட்டு வெளியேறுவதாக காட்சி இருக்கிறது.

ஒரு மனிதன் தொடர்ந்து சமூகத்தால், சுற்றி உள்ளவர்களால் தாக்கப்படும்போது வேறு வழியில்லாமல் பதில் சொல்வதற்கு அவன் வன்முறையையே கையில் எடுக்க முடியும். ‘RAGING BULL’  படத்திலும் கூட மையச் சரடு அது தான்.

சிறு வயதில் இருந்தே இது போன்ற சூழல்கள் எனக்கு பரிச்சயமாகியிருந்ததும் ஒரு காரணம். ஆன்மிக வன்முறைகள், மனவியல் வன்முறைகள்,  உணர்சிவசப்படுகிறபோது நடைபெற்று விடுகிற வன்முறைகள் என நான் பலவற்றை சந்தித்திருக்கிறேன். ஒரு விஷயம் நமக்குள் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டால், அது நம்மை விட்டு நீங்காது.

  • நியூயார்க் நகரை மையப்படுத்தி பல படங்கள் எடுத்து விட்டீர்கள். இந்த நகரத்தின் மேல் உங்களுக்கு எப்படி ஈர்ப்பு வந்தது?

பழைய படங்கள் எப்படி இந்த நகரத்தைக் காட்டியிருக்கிறது என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொண்டேன். நாற்பதுகளில் இருந்த நியூயார்க் நகரம் எப்படி இருந்தது என்பதை நான் படங்கள் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன். ஆனால் அதெல்லாம் பொய் என்பது எனக்குப் புரிந்து போனது. படங்களில் பார்த்த சாலைகள் மிகவும் சுத்தமானதாக, தெருக்கள் நேர்த்தியானதாக இருந்தன. ஒருவேளை அவையெல்லாம் கலிபோர்னியாவில் படம்பிடிக்கப்பட்டதாக இருக்கலாம். நியூயார்க்கின் தெருக்களில் நடந்த போதும், தியேட்டர்களுக்கு சென்றபோதும், ஒரு சர்ரியலிசத் தன்மையோடு தான் அந்த நகரம் தெரிந்தது. அதனால் எனது கதைக்குத் தேவைப்பட்ட நியூயார்க் நகரத்தை அசலாகக் காட்ட நினைக்கிறேன்.

  • படப்பிடிப்பு நடக்கும்போது தான் நடிகர்களைத் தயார்படுத்துகிறீர்கள். ஏன்?

அது படப்பிடிப்பு நேரங்களில் நடக்கிற அபூர்வமான சுவாரஸ்யங்களில் ஒன்று. இல்லையென்றால் வேலை அலுப்புத் தட்டிவிடும். ஏன் படப்பிடிப்பு நேரங்களை அலுப்பூட்டுகிற விஷயம் என சொல்கிறேன் என்பது ஏற்கனவே படம் எடுத்தவர்களுக்குப் புரியும். அதில் எதுவுமே புதியதாக இருக்காது. ஏற்கனவே பேப்பரில் இருப்பதைத் தான் ஒவ்வொரு நாளும் படமாக எடுக்கப்போகிறோம். இந்த நேரத்தில் நடிகர்களுக்கு தளத்தில் வைத்து காட்சிகளை விவரித்து தயார்படுத்துவது கொஞ்சம் ஆர்வம் தரக் கூடியது.

அதனால் தான் பாபி டி நீரோவுடன் வேலை செய்வதற்கு விருப்பப்படுகிறேன். அவர் தளத்துக்கு வந்த பின்புதான் கதாபாத்திரத்துக்குள் தன்னைக் கொண்டு செல்கிறார். புதிதான வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு பயம் இருந்ததில்லை. எனக்குப் பிடித்த தைரியம் அவரிடம் இருக்கிறது.

  • உங்களது சொந்த பிரச்சனைகள் காரணமாக ஒரு இடைவேளைக்குப் பிறகு ‘RAGING BULLபடத்தை இயக்கம் செய்தீர்கள்படமும் பிரமாண்ட வெற்றி பெற்றதுராபர்ட் டி நீரோ தான் உங்களை மறுபடியும் இயக்கச் சொன்னார் என்பதும், Jake La Mottaவின் கதாபாத்திரம் உங்களை நினைவுபடுத்துவதாக நீரோ சொன்னதாக சொல்லப்படுகிறதே?

ஆமாம் உண்மை தான். எனக்குத் தாமதமாகத் தான் இளமைக் காலம் கிடைத்தது. அதற்கு காரணமும் நான் தான். எனக்கு பாதிரியாராக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதற்கென்று பிரத்யேகமாக படிக்கவேண்டியிருந்தது. . வீட்டிலிருந்து தினமும் கிளம்பி சர்ச்சுக்குப் போக வேண்டும். மீண்டும் என்னுடைய தெருவுக்கு வரவேண்டும். நண்பர்களை சந்திக்க வேண்டும். ‘Mean street’ போன்ற எனது பகுதியில் இருந்து கொண்டு பாதிரியார் படிப்பெல்லாம் படிக்க முடியாது எனத் தெரிந்துவிட்டது. அது என்னை இரட்டை மனநிலைக்குள் தள்ளிவிட்டது.

அதனால் என்னுடைய இளமையை கழித்துவிட வேண்டுமென முடிவு செய்து, வாழ்வை வாழ்வதற்கு ஹாலிவுட்டை தேர்ந்தெடுத்தேன். நியூயார்க்கின் கிழக்குப் பகுதியின் தெருவைச் சேர்ந்த ஒருவனால் ஹாலிவுட்டுக்குள் நுழைவது ரொம்ப சிரமமாகத்தான் இருந்தது. வித்தியாசங்கள் என்னவென்றால், துப்பாக்கிகளுக்குப் பதில் அங்கே ஒப்பந்தங்கள் இருக்கும். கத்திகள் நெஞ்சை குறிவைக்காமல் உங்கள் முதுகை குறிவைக்கும் அவ்வளவுதான்.

இதுபோன்ற சூழலில் ஒருவன் நான் எப்படி நடந்துகொண்டேனோ அப்படிதான் இருப்பான். அதனால் தான் என்னால் Jake La Motta கதாபாத்திரத்தை வடிவமைக்க முடிந்தது. நீரோவும் அதனால் வசிகரீக்கப்பட்டார். திரைக்கதைக்கு எனக்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொண்டன.

i

  • ‘RAGING BULL’  தான் என்னுடைய கடைசி படம். இதற்கு மேல் நான் இயக்கப் போவதில்லைஎன சொல்லியிருந்தீர்களா?

ஆமாம் சொன்னேன். தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால் வந்த என்னுடைய முட்டாள்தனமான வெளிப்பாடு. ‘MEAN STREET’, ‘ALICE DOESN’T LIVE HERE ANYMORE’, ‘TAXI DRIVER’ படங்களுக்கு நியூயார்க் நகரத்தைத் தவிர மற்ற இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ‘RAGING BULL’ படத்தை கடினமானதாக, வெளிப்படையாக எடுத்துவிட்டு பிறகு அமெரிக்காவில் படம் இயக்குவதை நிறுத்திவிடவேண்டும் என நினைத்தேன்.  இத்தாலி சென்று அங்கு ஆவணப்படங்கள் எடுக்க வேண்டுமென்றும் நினைத்திருந்தேன்.

  • நீங்கள் சினிமாவின் பெரும் ஆளுமையாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு உந்துதல் தேவைப்படும்போதெல்லாம் மற்ற படங்களைப் பார்ப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

ஒரு படத்தை படம்பிடிக்கும்போதோ, எடிட்டிங் செய்யும்போதோ ஒரு ஆசுவாசமோ , தேக்கமோ ஏற்படும். அந்த வேளைகளில் மற்றவர்களின் படைப்புகளைப் பார்க்கும்போதோ, உற்சாகம் வந்துவிடுகிறது.

  • உங்களுக்குத் தேவைப்படுகிற நிதிஆதாரம் படம் எடுக்கும் சமயங்களில் இருந்திருக்கிறதா?

ஓரிரு படங்களுக்கு மட்டுமே எனக்கு நிதிஆதாரம் கிடைத்திருக்கிறது. மற்றவை அனைத்திற்கும் பணம் இருந்தால் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தலாமே என்று யோசிக்கிற நிலைமை தான்.

அதிலும் 1973ம் வருடம் மிக மோசமான காலகட்டம். என்னுடைய திருமண வாழ்க்கை அப்போது தான் முறிவடைந்திருந்தது. அமெரிக்கத் திரைப்பட கழகத்தை விட்டு வெளியேறி இருந்தேன். வேலை எதுவும் இல்லை. கடன் வேறு ஒருபக்கம். முழுமையாக தனிமையாக்கப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட என் வாழ்க்கை எல்லாமே காரில் தான். அந்த சமயத்தில் உடல்பிரச்சனை வேறு வந்துவிட்டது. மிக மோசமான வலியோடு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். எனக்கு அல்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு, மூன்று வாரங்கள் என்னால் யாரிடமும் பேசக்கூட முடியவில்லை. மருத்துவமனையில் இருந்து திரும்பி மீண்டும் காரில் வாழ்க்கைத் தொடங்கியது.

உலோக கல்லறைக்குள் இருந்து நகர்ந்து கொண்டே நகரத்தைப் பார்ப்பது போலவே இருந்தது. அந்த நேரத்தில் துப்பாக்கி முனையில் அமர்ந்து எழுதுவது போல, ‘TAXI DRIVER’  திரைக்கதையை எழுதினேன். அந்த நேரம் தற்கொலை எண்ணம் மிகுந்திருந்தது. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தேன். ஃபோர்னோகிராபி படங்களைப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவனாய் இருந்தேன். அதெல்லாமே அந்தத் திரைக்கதையில் பிரதிபலித்தது. எழுதி முடித்ததும் நகரத்தை விட்டு ஆறு மாத காலம் விலகி இருந்தேன். திரும்ப லாஸ் ஏஞ்செல்ஸ்க்கு வந்தபோது உணர்வுரீதியாக கொஞ்சம் பலம் சேர்ந்திருந்தது.

‘TAXI DRIVER’ வெளியீட்டுக்கு முந்தைய நாள் இரவில் படத்தில் வேலை செய்த எல்லோரிடமும், “நாம் பயங்கரமான ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். அந்தப் படம் கழிவறையில் வீசப்பட்டாலும் கூட நாம் பெருமிதப்பட வேண்டும்” என்று சொன்னேன். மறுநாள் மதியக் காட்சிக்காக திரையரங்குக்குச் சென்றிருந்தேன். ஒரே கூட்டம். நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். பிறகு தான் தெரிந்தது அது இரவுக்காட்சிக்கு டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்த கூட்டம் என்பது. ஓடிப்போய் சந்தோசத்துடன் வரிசையின் கடைசியில் போய் நின்று கொண்டேன்.

  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘GOODFELLAS’  மாதிரியான படம் எடுக்க என்ன காரணம்?

Nick Pileggi –ன் புத்தகம் Wise Guy’  எனக்குப் பிடித்திருந்தது தான் காரணம். அடிதடி படங்கள் வேண்டாம் என நான் நினைத்திருந்த நேரத்தில் இந்தப் புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. இது அடிதடி வாழ்க்கையைப் பின்பற்றுகிற மக்களைப் பற்றியதான கதை. அவர்களின் அன்றாட வாழ்க்கை, உணவு, உடைகள் பற்றியான கதை. மொத்தத்தில் நான் எங்கிருந்து வந்தேனோ அவர்களைப் பற்றிப் பேசுகிற கதை. அதற்காக நான் வன்முறை வாழ்க்கையைக் கடைபிடித்தேன் என்று நினைத்துவிடாதீர்கள். அவர்களோடு வளர்ந்தேன். எனக்கு அவர்களின் உணர்வுகள் புரியும். அதைத் திரையில் காட்டும் சவாலான வேலையை செய்திருக்கிறேன். அவர்களின் உணவைப் பற்றி நான் குறிப்பிட காரணம், உணவு அவர்களின் சடங்கில் ஒரு பகுதி. குறிப்பாக சிறையில் இருப்பவர்களின் உலகத்தில் உணவென்பது ஒரு அடையாளம். இத்தாலிய அமெரிக்க  வாழ்க்கையில் பணத்துக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் உணவுக்கு உண்டு.

  • ‘GOOD FELLAS’  தொடங்கி உங்களின் அனைத்து படங்களிலும் இசை முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது

எனக்கு இசை மிகவும் விருப்பமானது. என்னால் இசையமைக்க முடியாது. ஆனால் அது எனக்கு அற்புதமானது. ஒரு முழு படத்தையும் தாங்குகிற வல்லமை அதற்கு உண்டு. பார்வையாளர்களுக்கு நாம் கடத்திவிடுகிற ஒரு விஷயத்தை இசை சரியான முறையில் கொண்டு போய் சேர்த்துவிடும். ‘GOOD FELLAS’ படத்தில் முதலிலேயே இசையை அமைத்து விட்டோம். அதன் சில இசைக் கோர்வைகள் எனது மனதில் வெகு காலமாக இருந்தன.

  • இந்தப் படம் சர்ச்சைகளுக்கு இடம் அளித்தது. அதிலும் நீரோவும், ஜூலியட் லூயியும் பேசிக்கொள்கிற வசனங்களும், பிறகு பாலியல் வன்முறைக் காட்சிகளும் எதிர்ப்பைப் பெற்றன. எதனால் இப்படிப்பட்ட காட்சியமைப்புகள்?

முதலில் ஸ்டீவ் என்னிடம் ஸ்க்ரிப்ட்டைத் தந்தபோது முதலில் மாற்ற நினைத்தது அந்த பாலியல் வன்முறைக்  காட்சியைத் தான். மூலக் கதையில் ராபர்ட் மிட்சம் பள்ளிக்கூட மாணவியை துரத்துகிறது போல என்னால் இயக்க முடியாது. நான் என்ன மனதில் நினைத்திருந்தேனோ அதைத்தான் எடுத்தேன். அந்தப் பெண்ணை பலவீனபடுத்துவதன் மூலம் நம்பிக்கையாலும், அன்பாலும் உருவாக்கப்பட்ட ஒரு குடும்பத்தினை அந்தக் கதாபாத்திரம் குலைக்கிறது. 

இத்தனை மோசமானதாக பதிவு செய்ய வேண்டுமா என பலரும் என்னிடம் கேட்டார்கள். எவ்வளவு நேர்மையாக காட்ட முடியுமோ, அப்படித் தான் பதிவு செய்திருக்கிறேன். இன்றைய ஊடகங்கள் மிகவும் பலமுள்ளவைகளாக இருக்கின்றன. எங்கு போனாலும் நமக்குப் பார்க்க செய்தி சேனல்கள் நிறையக் கிடைக்கின்றன. உண்மை மிகவும் கொடூரமானதாக இருப்பதை நீங்கள் அவற்றில் பார்க்கலாம்.

சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பேசி, பின்னரே நாங்கள் அப்படி அப்பட்டமாக காட்டிவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தோம். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உண்மையிலேயே எத்தனை கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என்பதை என்னுடைய படம் பார்த்த பிறகு பலரும் உணர்ந்திருப்பார்கள்.

அதே போல் படத்தில் நீரோ குத்திக்கொண்டிருக்கும் டாட்டூவும் பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வரைந்து கொண்டது. இதுபோன்ற நபர்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பதை சிறைச்சாலைக்கு சென்று நேரடியாகப் பார்த்து அதன்படியே நீரோ தனது உடல் மொழி தொடங்கி, பேச்சு வரையில் எல்லாவற்றையும் வடிவமைத்துக் கொண்டார்.

  • தலாய் லாமாவை மையப்படுத்தி ‘KUNDUN’ மாதிரியான படத்தை இயக்க வேண்டுமென ஏன் தோன்றியது?

என்னிடம் Melissa Mathison-ன் திரைக்கதை வந்தது. அந்த நேரம் இயக்குவதற்காக படங்கள் வரிசையாக காத்திருந்தன. அந்தத் திரைக்கதையை வாசித்தேன். அதன் எளிமை எனக்குப் பிடித்திருந்தது. புத்தமதத்தை பற்றியோ, சரித்திர இதிகாசத்தை சொல்கிற கதையாகவோ இல்லை. கடந்த 1500 வருடங்களாக சீன – திபெத் உறவைக் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அதனைப் பின்னணியாகக் கொண்ட ஒரு மனிதனைப் பற்றிச் சொல்கிறது. ஒரு குழந்தை வளருகிறது, அது வாலிபனாகிறது. அந்தக் குழந்தை ஆன்மிகவாதியாகிறது.

அந்த ஆன்மிகவாதிக்கு பெரும் பொறுப்பு வந்து சேருகிறது. அந்தப் பொறுப்பை அஹிம்சை வழியில் நின்று கொண்டு அவர் சுமக்கிறார். திபெத்தின் கலாசாரத்தையும், ஆன்மிகத்தையும் அவர் எல்லா தேசங்களுக்கும் சுமந்தபடி போய்க்கொண்டிருக்கிறார்.

Melissa-ன் திரைக்கதையை நாங்கள் இருவருமாக அமர்ந்து பதினான்கு முறை மாற்றி எழுதினோம். பதினான்காவது திரைக்கதை தான் எங்களுக்கு திருப்தியைக் கொடுத்தது. ஏனென்றால் அது முதல் இரண்டு திரைக்கதையைப் போலவே இருந்தது.

  • இந்தப் படத்தின் மூலமாக நீங்கள் சொல்ல நினைத்ததை பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்தீர்களா?

எனக்கு உறுதியான ஒரு எண்ணம் இருந்தது. நான் சொல்ல வருகிற விஷயங்களை குழந்தையின் கண்ணோட்டத்திலேயே சொல்லிவிடலாம் என நினைத்தேன். ‘Low Angle’ கேமரா கோணங்களாக வைத்ததோடு அல்லாமல் அவன் வளருகிறபோது, அவனைச் சுற்றியுள்ள எல்லாமே அவனால் பார்க்கப்படுவது போல வடிவமைத்தேன். வீட்டில் ஒரு பிரச்சனை என்றால், பெரியவர்கள் அதைப் பற்றிப் பேசத் தயங்குவார்கள். ஆனால் குழந்தை சட்டென்று பேசிவிடும். இந்தப் படத்தில் பெரியவர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரம் தான் ரெய்ட்டிங்.

குழந்தையின் பார்வையில் இருந்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு அழுத்தமும், உண்மையும் அதிகமுண்டு. அதனால் தான் குழந்தை லாமாவை வைத்து சில கேள்விகள் எழுப்பினோம். “ஏன் பிட்சுக்கள் துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள்?” போன்ற கேள்விகளை எழுப்புகிறபோது சூழல் ஒருவித அமைதிக்குள் செல்லும். அதை நான் லாங் ஷாட்டிலேயே வைத்திருந்தேன். இப்படி மறைமுக குறிப்புகள் படம் முழுக்கவே இருக்கின்றன.

  • உங்கள் படங்களில் நீங்கள் பெருமைப்படுகிற படம் எது?

எனக்கு ‘THE LAST TEMPTATION OF CHRIST’ படம் பிடிக்கும். அதனுடைய கருத்து, நடிகர்களின் பங்களிப்பு, இசை என எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது.

  • இயேசுவை மேலும் தெரிந்து கொள்ள வேண்டி அந்தப் படம் எடுத்ததாக சொல்லுகிறீர்களா?

ஆமாம். ஆனால் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இயேசுவின் செய்திகளின்படி வாழ்வது எனக்குப் பிடித்திருக்கிறது.  அதுதான் மிகுந்த சிரமமானது. நம்மால் அப்படி வாழ்ந்துவிட முடியுமா? அப்படி முடியவில்லை என்றால் நமது தோல்வியை நாம் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

(மேதைகளின் குரல்கள் புத்தகத்தில் இருந்து தரப்பட்டுள்ள நேர்காணல்)

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments