நீராலான சுடர்

0
112

நீரும் நெருப்பும் என்று தான் சொல்ல வேண்டும் நீரோடலையும் பெண்களை. நெருப்பை நீர் அணைப்பது போல நீரை நெருப்பாய் அணைக்க பெண்களால் முடியும். பிறந்ததிலிருந்து சென்னை வருவது வரையிலான இருபதாண்டு காலத்தை நீர்நிலையின் அருகிலேயே கழித்திருக்கிறேன். காலெட்டும் தூரத்தில் தாமிரபரணி போல ஒரு நதியை வைத்துக் கொண்ட பெண்களுக்கு நீர் என்பது வெறும் தண்ணீர் மாத்திரமே அல்ல.

தண்ணீர் குடம் என்றாலே அதைத் தூக்கும் விரல்கள் பெண்களுடையவை என்று நம் ஆழ்மனதில் பதிந்து போயிருக்கிறது. குடத்தையும் , குழந்தையையும் வைப்பதற்காகவே பெண்களின் இடுப்பு வளைவாக படைக்கப்பட்டிருக்கிறது என்பது முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

நீர் என்பது பெண்களுக்குள் ஒரு இசையை எழுப்பி விடுகிறது. இசை மகிழ்சசி தரகூடியதாய் அல்லது மென் சோகத்தை எழுப்புவதாய் கூட இருக்கலாம். குற்றாலத்தின் ‘சீசன்’ தொடங்குவதை தென்மாவட்டங்களில் எத்தனையோ பெண்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அருவிக்குள் தங்களை ஒளித்துக் கொள்கிற பேரானந்தத்தை அனுபவிப்பதற்காகவே கிளம்பி வருகிறவர்கள் பலர் உண்டு.

பக்கத்தில் நிற்பவர்களின் முகம் தெரியாத அருவித் தண்ணீருக்குள் நிற்கும்போது மனமும் உடலும் தனியே பிரிந்திருப்பதை உணர முடிந்தவர்களே மீண்டுமீண்டுமாய் அருவியை நோக்கிப் பயணமாகிறார்கள்.

தொடர்ந்து இருபது வருடங்கள் ஒரு சீசன் கூட தவறவிடாமல் குற்றாலத்திற்கு சென்றிருக்கிறேன். அந்த ஊரின் அழகே எப்போதும் தண்ணீர் சொட்டும் கோலத்துடன் உள்ள மனித முகங்கள் தான். பேரருவியின் முன் நிற்கையில் சர்க்கஸ் கோமாளியின் முன் நிற்கும் குழந்தைகள் போல மாறிவிடுகின்றன பெண்களின் முகங்கள். திறந்த வெளியில் பலவித சிரிப்புகளையும், ஆனந்ததையும் கொண்டிருக்கும் முகங்களை அருவிகளின் முன்பு தரிசிக்கலாம்.

சிரித்து களிப்பதற்கு அருவி என்றால் பெண்களுக்குள் அமைதி ஏற்படுத்துவது நதி தான்.

திருநெல்வேலியில் கைலாசபுரம் என்றொரு இடமிருக்கிறது. ஒரு சிவன் கோயில் அதன் எதிர்த்தாற்போல நீண்டதும், அகலமுமான படித்துறை. அதன் முடிவில் தைப்பூச மண்டபம். இதன் முன்பாக தாமிரபரணி. சிவன் கோயில் வாசலில் நின்று பார்த்தால் ஒருகாலத்தில் நதி ஒடுவது தெரியும். இன்று இடம் மாறிப்போய்விட்டது. படித்துறைகள் சமதளமாகிவிட்டன. இங்கு சில வருடங்களுக்கு முன்பு எனது உறவினர்கள் வசித்தார்கள். அத்தை முறை கொண்ட அவர்களோடு பலமுறை ஆற்றுக்கு சென்றிருக்கிறேன். அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து எப்போதும் ஒரு பெண் ஆற்றுக்குக் குளிக்கப் போய்க் கொண்டிருப்பதை அப்போது பார்த்திருக்கிறேன். அதிகாலையில் ஒருமுறை பின்பு வேலை முடித்ததும் ஒரு குளியல் பிறகு துவைப்பதற்கென்று தனியாக என்று பலமுறை ஆற்றுக்குப் போய்வரும் பெண்களும் இருந்தார்கள். இன்று அந்த இடம் சாக்கடை கலக்கிற ஒரு இடமாக மாறிவிட்டது.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அக்கா தங்கைகள் மூவர் ஆற்றங்கரையை ஒட்டியத் தெருவில் வசித்தார்கள். அவர்களில் கடைசி தங்கைக்கு அப்போது வயது முப்பது கடந்திருக்கும். அவர்களில் யாருக்கும் திருமணமாகவில்லை. மூவருமே ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். தினமும் ஆளுக்கொரு வாளி நிறைய துணிகள் எடுத்து வருவார்கள். ஆற்றுக்கு நடுவே இருக்கும் ஒரு வட்டப் பாறையில் திசைகொருவராய் அமர்ந்து துவைப்பார்கள். நீண்ட நேரம் குளிப்பார்கள். யாருடனும் பேசாமலேயே வீட்டுக்கு போய் விடுவார்கள். எனக்குத் தெரிந்து ஐந்தாறு வருடங்கள் இப்படித் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் எந்த ஊருக்குப் போனார்கள் என்பது தெரியவில்லை. அந்த ஊரில் ஆறு இருக்கிறதா என்பதும் அறியக் கூடவில்லை.

என்னுடைய தோழிகளோடு விடுமுறை நாட்களின் பெரும்பகுதி நேரத்தை ஆற்றங்கரையில் கழித்திருக்கிறேன்.  ஓடும் தண்ணீரில் கால்களை மட்டும் நனைத்தபடி சிறிது நேரம், கழுத்து வரையிலுமான நீரிலும், மூழ்கி எழுந்தும் பல மணி நேரம் என நீரில் கரைத்த அந்த நிமிடங்கள் இனி திரும்பும் என்பது சாத்தியமில்லை.

ஆற்றோடு வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு நதித்தடமே அற்ற ஊரில் எதிர்காலம் அமையுமென்றால் என்னவாகும்? அவள் கனவுகளில் அனுதினமும் நதி வரும்..

என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்திக்கு ஜாதகத்தில் மிகுந்த நம்பிக்கை. அவளுடைய ஜாதகப்படி தண்ணீரில் கண்டம் என்று ஒரு ஜோதிடர் சொல்லிவிட்டார். அது அவள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதன்பிறகு மழையில் நனைவதற்குக் கூட பயப்படுமளவுக்கு மாறிவிட்டாள். இவளைத் தான் நாங்கள் திருச்செந்தூருக்கு அழைத்து சென்றோம். கோவிலுக்குள் போவதற்கு முன்பு கடலில் குளிப்பதென்பது அங்குள்ள பழக்கம். கடலில் கால் நனைக்கவே கூட அவள் மறுத்துவிட்டாள். நாங்கள் எல்லோரும் கடலில் குளிக்க முடிவெடுத்தபோது அழ ஆரம்பித்து விட்டாள். வேறு வழியில்லாமல் கடலை விட்டு ஒதுங்கி மணலில் வெகுதூரத்தில் போய் உட்கார்ந்து எங்களை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள். கடல் ஒரு குழந்தை போன்றது. தூக்கிக் கொஞ்சச் சொல்லும்.

எங்களுடைய குதூகலத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். கடலுக்குள் இறங்கியாக வேண்டுமென அவளுக்கு ஆசை வந்துவிட்டது. ஆசை பயத்தை வென்றது. கடலில் இறங்கியவள் கரைக்கே வரமாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டாள். கிட்டத்தட்ட மூன்று மணிநேரமாக அவள் கடலை விட்டு நீங்கவேயிலை. நாங்கள் திருச்செந்தூர் பயணத்தை மறந்த பிறகும் கூட அவள் கடல் குளியலைப் பற்றி ஓயாமல் நினைவுபடுத்தியபடியே இருந்தாள்.

சில வருடங்களுக்கு முன்பு அவளைப் பார்க்க சென்றிருந்தேன். திருமணமாகியிருந்தது. குடும்பப் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருந்தாள். அவள் வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்கு செல்லும்போது தெப்பக்குளத்தில் கால் நனைக்கலாம் வா என்று அழைத்ததற்கு, ‘எனக்கு பயமாயிருக்கு..தண்ணியில கண்டம்’ என்றாள். கண்டம் தண்ணீரில் இல்லை என்றேன். ‘தெரியும்’ என்றாள் புன்னைகையுடன்.

ஊட்டியில் மட்டுமே வாழ்பவர்கள் தோடர் இன மக்கள். உயரமான மலைப்பகுதியிலேயே வசிப்பார்கள். அவர்களைப் பற்றிய ஒருஆவணப்படம் எடுக்கச் சென்றிருந்தேன். நாங்கள் போகும்போது ஊட்டியில் மழை பெய்து கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர். இதில் மழை வேறு சேர்ந்து கொள்ள பகலிலேயே நடுக்கம் எடுத்தது.

தோடர்களின் குடியிருப்புக்குள் செல்லும்போது  இரண்டு பெண்கள் ஒரு வீட்டின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். கையில் குடை ஏதுமில்லை. ஸ்வெட்டர் போட்டிருக்கவில்லை. ஒரு வேலிக்கு இந்தப்புறமும், அந்தப்புரமுமாக நின்று சூழல் மறந்து பேசிக்கொண்டிருந்தனர். மழை பெய்வது பற்றிய எந்த பிரக்ஞையுமற்ற பேச்சு.

மழையும், பனியும், ஊதக்காற்றும் அவர்களுக்கு பழகிப்போன ஒன்று தான் என்றாலும் ஒரு மழையை இப்படித் தங்களுடன் இணைத்துக் கொண்டு அவர்களால் உரையாட முடிந்தது ஆச்சரியம் தான். இந்தப் பெண்களுகாத் தான் ஊட்டியில் அடிக்கடி மழை பொழிகிறதோ!

ஐம்பது வருடங்களுக்கு முந்தைய தமிழ்நாட்டில் அநேகமாக எல்லா நகரங்களிலும் நடுவே நதி ஒன்று பாய்ந்தபடி இருந்திருக்கும். தஞ்சாவூர் எழுத்தாளர்கள் காவேரியைப் பற்றி எழுதாமல் இருந்ததில்லை. இதில் முக்கிய பதிவென்பது கணவனை இழந்த பெண்கள் யார் கண்ணிலும் படாமல் குளித்து வர வேண்டுமென்பதற்காக அதிகாலை இருட்டில் முகத்தை மறைத்தபடி ஆற்றில் குளித்து வரும் ஒரு காட்சி. அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்கள் வீட்டை விட்டு வெளிவர முடியும். அந்தப் பெண்களின் மனமும், உடலும் சிறிது நேர விடுதலையாவது அனுபவித்திருப்பது நதியோடு மட்டுந்தான் இருந்திருக்க முடியும் இல்லையா!!

இந்திரா பார்த்தசாரதியின் கதையில் ஒரு பாட்டியின் கதாபாத்திரம் வரும்.  அறுபது வருடங்களாக அதிகாலையில் ஆற்றுக்குக் குளிக்கப் போய் வருவார். வரும்போது ஒரு சிறிய குடத்தில் நீரெடுத்து வருவார். குழாயில் வீடு நோக்கி நீர் வரத் தொடங்கியகாலமாகியிருக்கும் காவேரி வறண்டிருக்கும். ஆனாலும் நதிக்குப் போய் நீராடிவிட்டு வருவார். இதைப் பார்த்து அந்தப் பாட்டியிடம் மற்றொரு கதாபாத்திரம் ‘நீரில்லாத நதியில் எப்படி குளிக்கிறீர்கள்’ என்று கேட்கும். அதற்கு அந்தப் பாட்டி ஊற்றுத் தோண்டி குளிப்பதாகச் சொல்வார்.. பா வருட பழக்கத்தை விட முடியாத வழக்கம் அது. அந்தப் பாட்டிக்குத் தானே தெரியும் நதி அவரின் துயரையும், கனவையும், தனிமையையும் பகிர்ந்து கொண்டது என்பது.

நதியற்ற ஊரில் பிறந்தவர்களுக்கு இந்த வாய்ப்பும் இல்லாமல் போயிருக்கும்.

நீர் நாமிருக்கும் இடத்திற்கு வந்த பின் அதனுடனான உறவென்பது அத்தியாவசியய பயன்பாட்டுக்கு என்று மட்டுமே மாறிப் போய்விட்டது. அதனாலேயே கூட நீர்நிலைகள் நம் கைவிட்டுப் போகும்போது குடிநீர் தேவையை மட்டும் எண்ணி கலங்குகிறோம். ஆனால் நீர்நிலைகள் ஒருபோதும் வெறும் குடிதண்ணீராக மட்டுமே இருந்ததில்லை. இதைப் புரிந்து கொண்டவர்கள் தான் அடுத்தத் தலைமுறைக்கு நீர்நிலைகளின் அவசியத்தை எடுத்துச் சொல்ல முடியும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rjgopaalan
Rjgopaalan
1 year ago

குடத்தையும் , குழந்தையையும் வைப்பதற்காகவே பெண்களின் இடுப்பு வளைவாக படைக்கப்பட்டிருக்கிறது என்பது முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
#

நம்பிக்கையாக பதிய வைக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லுங்கள் மேம்.
===========

#பக்கத்தில் நிற்பவர்களின் முகம் தெரியாத அருவித் தண்ணீருக்குள் நிற்கும்போது மனமும் உடலும் தனியே பிரிந்திருப்பதை உணர முடிந்தவர்களே மீண்டுமீண்டுமாய் அருவியை நோக்கிப் பயணமாகிறார்கள்.#

எத்தனை அழகான காட்சியை முன்னே வைக்கும் வரிகள்.

============
#தண்ணியில கண்டம்’ என்றாள். கண்டம் தண்ணீரில் இல்லை என்றேன். ‘தெரியும்’ என்றாள் புன்னைகையுடன். #
ஒரு ஷார்ட் பிலிம் ஏ முடித்துவிட்டீர்களே
==============

எழுத்துக்களுடனேயே நீர் நிலைகளோடு பயணித்த உணர்வு.

ஒவ்வொரு சூழல்களிலும் அங்கு பொருத்திப்பார்க்கும் அளவிற்கான அழகான வார்த்தைக்கோவை.

பலரும் இந்நேரம் தங்களின் ஆற்றில் டைவ் அடித்த அனுபவங்களுக்கோ, குளிக்கஅனுமதியில்லா குளநீர் சம்பவங்களைப்பற்றியோ பயணித்துக்கொண்டிருப்பர்

Rjgopaalan
Rjgopaalan
1 year ago

#நதியற்ற ஊர்களில் பிறந்தவர்களுக்கு இந்த வாய்ப்பும் இல்லாமல் போயிருக்கும்

அவர்கள் நிலையிலிருந்தும் யோசித்து ஒரு வரி இடைச்செருகலாக எழுதிவிட்டீர்கள். ஆனால் அது சார்ந்த எண்ணங்களும், ‘ ஆமாம் ல்ல ‘ என்றும், வேறென்ன செய்திருப்பார்கள் என்றும் யோசிக்க வைத்துவிட்டது.