கர்த்தாக்கள் – ஸ்டீவன் ஜேலியன்

0
300

சிறந்த படங்களைத் தந்துகொண்டிருக்கும் திரைக்கதையாசிரியர்கள் அவர்கள் எழுதிய திரைப்படங்கள் , நேர்காணல்கள் கொண்ட தொடர் இது.

ஸ்டீவன் ஜேலியன் – 30 வருடங்களுக்கும் மேல் ஹாலிவுட் படங்களுக்குத் திரைக்கதைகள் எழுதி வருகிறார். திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அமெரிக்க நிலப்பரப்பு, அங்கு மாறி வருகிற கலாசாரம் போன்றவற்றை பற்றிய தெளிவு கொண்டவர். Awakenings, Schindler’s list, A Civil Action,  Mission Impossible,  Moneyball, American Gangster,  A Girl With Dragon Tattoo’, ‘The Irishman’ போன்றவை இவரது திரைக்கதைகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான திரைப்படங்கள்.

இவருடைய திரைக்கதை பாணி என்பது மையக் கதாபாத்திரங்களைப் பின்தொடர்பவையாக இருக்கின்றன. அந்தக் கதாபத்திரங்கள் எதைப் பார்க்கிறதோ, எவற்றை உணர்கிறதோ, எதைக் கண்டடைகிறதோ, என்ன சொல்கிறதோ அதைத் தான் பார்வையாளர்களும் உணர்வார்கள். இதைக் கடந்த மற்ற எல்லாம் பார்வையாளர்கள் யூகித்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பின்னணி , அதன் தன்மை, பேசுகிற விதம், அந்தக் கதாபாத்திரத்தின் தினசரி வாழ்க்கை, அவற்றின் திறமை, செய்கிற தொழில் போன்றவற்றை ஒரு ஆய்வு போல செய்து கொள்கிறார். அனாவசியமான வசனங்கள் அற்று காட்சிகளைப் புரிய வைக்க நினைப்பது இவரது எழுத்தின் பலம். ஒரு காட்சியை இவர் எழுதுகிறார் என்றால் அதன் அத்தனை நுட்பத்தையும் எழுத்தில் கொண்டு வந்துவிடுகிறார். ஒரு காட்சி என்பது வெறும் வசனங்களாலும் செயல்களாலும் மட்டுமே நிறைவு பெறுவதில்லை, அந்தக் காட்சி எந்த சூழலில், எந்த மாதிரியான இடத்தில் வைத்து நடக்கிறது என்பதும் ஸ்டீவன் ஜேலியனுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

எப்படியான படங்களாக இருந்தாலும் அவற்றின் அடிநாதமாக ஸ்டீவன் ஜேலியன் மனித உணர்வினைக் காட்டுவதில் தான்  தொடங்கி முடிக்கிறார். நீளமான காட்சிகள் என்பது இவரது படங்களில் மிக அரிதானது. மிக அவசியப்பட்டால் மட்டுமே நீளமான காட்சிகள் இவரது திரைக்கதையில் இடம்பெறும். உதாரணத்திற்கு Schindler’s List திரைப்படத்தில் ஸ்கிண்ட்லர் மனமாற்றம் அடையும் காட்சியை சொல்லலாம். அதுவரை சுயநலமிக்க வியாபாரியாக இருக்கும் ஸ்கிண்ட்லர் தன கண் முன்னே யூதர்கள் சுடப்பட்டு இறந்து விழுவதையும், கூட்டம் கூட்டமாக மக்கள் சாலைகளில் நடப்பதையும் பார்க்கையில் அவர் மனம் மாறும் காட்சி அது. அந்தக் காட்சி முழுவதும் ஒரு சிறுமி தெருவில் தனியாக நடந்து போனபடி இருப்பாள். இது படத்தின் நீளமான காட்சி. அத்தனை ஆழமாக சொல்லப்பட வேண்டியதும் கூட. இது போன்ற காட்சிகளைத் தவிர்த்து பெரும்பாலும் அவரது காட்சிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மை இருக்கும்.

ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை அவரால் சில நொடிகளிலேயே சொல்லிவிட முடியும். சில சொற்களில் விளங்க வைக்க முடியும். Awakenings திரைப்படத்தின்  உடல் செயழிழப்பினால் நோயுற்றவர்களின் மருத்துவமனைக்கு டாக்டர் சாயர் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு வருவார். அவரிடம் அங்குள்ள பணியாள் சொல்வார், “இந்த இடத்திற்கு தோட்டம்  என்று தான் பெயர். ஏனெனில் இங்குள்ளவர்களுக்கு நாங்கள் உணவும், தண்ணீரும் மட்டும் கொடுப்போம்” என்பார். அதாவது ஒரு செடி போன்றவர்கள் இவர்கள். வேறெந்த பயனும் இல்லை என்பதைச் சொல்வது. 

டாக்டர் சாயர் அங்குள்ள ஒவ்வொருவரையும் பார்த்தபடி நடந்து செல்லும்போதே, ‘நல்ல டாக்டர் போல இருக்கு’ என்று நமக்குத் தோன்றிவிடும். அத்தனை தூரம் அந்தக் கதாபாத்திரத்தின் உடல் மொழியிலும் சிறு சிறு விஷயங்களிலும் நுணுக்கங்கள் தெரியும். இந்த நுணுக்கங்களை திரைக்கதையிலேயே ஸ்டீவன் குறிப்பிட்டுவிடுகிறார். அதே போல் அவர் வசனத்தைப் பயன்படுத்தும் முறையும் குறிப்பிடப்பட வேண்டியது. ’Awakenings’ படத்தின் முதல் காட்சியின் மூன்று சிறுவர்கள் விளையாடியபடி பேசிக்கொள்வார்கள். “இந்த நதி பனியால் உறைந்து போனால், மீன்களும் உறைந்துவிடும்“ என்பான் ஒரு சிறுவன், மற்றொரு சிறுவன் சொல்வான், “மீன்கள் ஒருபோதும் உறையாது. அவற்றுக்கும் நீரின் அடியில் இடம் உண்டு” என்று.  மொத்தப் படத்தின் உணர்வைச் சொல்லும் வசனம் இது. ஏனெனில் கதையே உயிரோடு இருந்தும் காலத்தில் உறைந்தவர்கள் பற்றியதுதான். அவர்களை மீட்க முடியும் என்கிற நம்பிக்கையைப் பற்றிப் பேசும் படமும் கூட.

இப்படி இவருடைய திரைக்கதையில் தொடங்கிய சில நொடிகளிலேயே படத்தின் கருவைச் சொல்லும்  ஒரு வசனம் வந்துவிடும்.  ’The Irishman’ படத்தில் முதல் சில நொடிகளில் வரும் வசனம், “நான் வீடுகளுக்கு வண்ணமடித்திருக்கிறேன்”. படத்தைப் பார்க்கும்போது தெரியும் அது ஒரு சங்கேத மொழி என்பதும் அப்படியென்றால், இரத்தத்தால் சுவர்களை வண்ணமாக்கும் வேலையைச் செய்யும் அடியாள் தொழில் என்பதும். அதே போல் அந்தக் கதையின் தேவை கருதி பேசப்படுகிற வசனங்கள் பொருத்தமான இடங்களில்  மீண்டும் மீண்டும் சொல்லப்படும். “make coffee. sort mail” என்கிற ’A Girl with Dragon Tattoo’ படத்தில் வருகிற வசனம் போல.

ஸ்டீவன் ஜேலியன் படங்களில் நிச்சயம் 130 காட்சிகளாவது இடம்பெற்றிருக்கும். மையக்கதை என்று ஒன்றும், அதைச் சார்ந்த மற்றொரு கதையும் உடன் பயணிக்கும்.  இரண்டும்  ஒரு கட்டத்தில் ஒன்றிணையும். அதாவது தனித்தனியான இரு கதாபாத்திரங்கள் ஒன்றிணைவார்கள். இது போன்ற பாணி அவருக்கு மிக இலாவகமாக கைகூடியிருக்கிறது.

இதுவரை பதினாறு திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். அதில் சில படங்கள் குறித்து:

ஸ்டீவனின் இரண்டாவது திரைப்படம் Awakenings. மிக அருமையான திரைக்கதைக் கொண்ட படம். 1973ஆம் ஆண்டு நடந்த உண்மைக் கதை. ஆலிவர் சாக்ஸ் என்கிற நரம்பியல் துறை மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்கு பணியாற்ற செல்கிறார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகமே Awakenings திரைப்படமானது. நோயாளிகள் அதிலும் அசையக் கூட முடியாமல் வருடக் கணக்கில் ஒரே இடத்தில் இருப்பவர்கள், இவர்களைப் பராமரிக்கும் மருத்துவமனை இதுதான் கதைக்களம். மேலோட்டமாகப் பார்த்தால், இதில் என்ன கதை இருக்க முடியும் என்று தோன்றும். இது போன்ற கதைகள் அலுப்பூட்டக் கூடியதாகவும் மாறிவிடும் அபாயம் உண்டு. ஏனெனில் மருத்துவத்துறை குறித்து தொழில்நுட்ப வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இந்தக் கதையை சொல்ல முடியாது. ஆனால் இந்தப் படத்தினைப் பார்க்கத் தொடங்கி முடியும் வரை நம்மை அப்படியேக் கட்டிப் போட்டுவிடக்கூடிய கதை சொல்லல் முறை இதில் உண்டு.

ஏற்கனவே சொன்னது போல ஸ்டீவனின் பாணி என்பது கதாபாத்திரங்களைப்  பின்பற்றுவது. மால்கம் சாயர் லியோனார்ட் என்கிற ஒரு நோயாளியையும் மற்றவர்களையும் எப்படி மீட்டெடுக்கப் போராடுகிறார் என்பதும் லியோனார்ட் தன்னை எப்படி ஒரு பரிசோதனைக் கருவியாக சாயருக்கு ஒப்புக் கொடுக்கிறார் என்பதும் தான் கதை. பலவிதமான தருணங்களால் உருவாக்கப்பட்ட கதை. ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நெகிழவைக்கிற, நம்பிக்கைத் தருகிற தருணங்களை ஸ்டீவன் உருவாக்கியிருக்கிறார்.

“இந்த நோயாளிகளினால் எந்தப் பயனும் இல்லை. அவர்களுக்கு உணவும், மருந்தும் தந்து சும்மா வைத்துக் கொண்டிருந்தால் போதும்” என்று தான் அந்த மருத்துவமனை இயங்குகிறது. இயல்பிலேயே மண்புழுக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சாயருக்கு இந்த பிரபஞ்சத்தில் ‘சும்மா’ என்று எதுவும் இருப்பதில்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு நோயாளியையும் உற்றுக் கவனிக்கிறார். அவர்களின் பின்னணியைத் தெரிந்து கொள்கிறார். அவர்களிடம் ஏற்படும் சிறு அசைவுக்கும் மகிழ்கிறார். சில வசனங்கள், சில காட்சிகள் போதுமானதாயிருக்கிறது. மருத்துவர் மால்கம் சாயரின் கருணையைப் பற்றிச் சொல்வதற்கு.

சாயரின் கதாபாத்திர வடிவமைப்பு என்பது ஹாலிவுட் திரைப்படங்களில் மறக்க  முடியாத பாத்திரம். ஒரு மருத்துவரின் குணங்களை மட்டும் சொல்லாமல் இந்த மானுடத்துக்கு என்ன தேவை என்று சொல்லக்கூடிய கதையாகவும் இருக்கிறது. அன்பு, கருணை, காதல் இதெல்லாம் தான் எப்பேர்பட்ட மனிதனாக இருந்தாலும் அவனைப் பண்படுத்தும் என்பதே சாயர் கண்டு கொண்ட பெருன்மையாக இருக்கிறது. அதனைச் சொல்லவே இந்தத் திரைக்கதையைப் பயன்படுத்திக் கொண்டார் ஸ்டீவன்.

ஒரு காட்சி. சாயர் தனது வீட்டுக்கு வருகிறார். அவர் வந்ததும் ஏங்கிருந்தோ ஒரு நாய் அவரிடத்தில் ஓடிவரும். நாயைப் பார்த்து பயப்படுவார் சாயர். அதனிடமிருந்து தப்பித்து வீட்டுக்குள் புகுந்து கொள்வார். ஏனெனில் அவர் அப்படித் தான். அவருக்கு மண்புழு போல மென்மையான விஷயங்களே நிறைந்திருக்கும் சூழலில்  இருப்பவர். ஆனால் இதே மனிதரைத் தான் அவர் சிகிச்சை அளித்த நோயாளிகளே தாக்க வருவார்கள். ஆனால் அவர் அப்போது தப்பித்து ஓடமாட்டார். மீண்டும் அவர்களிடம் இரு கைகளையும் விரித்து வருவார். அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்.

இந்த உலகத்தில் வாழும் எந்தவொரு மனிதருக்கும் தேவைப்படுவது அன்பும், பரிவுமே என்பதை பிரச்சாரமாக இல்லாமல் கதாபாத்திரத்தின் மூலமாக நமக்கும் உணர வைத்தது அற்புதமான ஒன்று.

எந்த அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் வெறித்துப் பார்த்தபடி வருடக்கணக்கில் அமர்ந்திருக்கும் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் சாயருக்குத் தோன்றுவது, ”அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்?” என்பது. இப்படி தனக்குள் அவர் கேட்டுக் கொண்டதும் தான் அவர் ஒவ்வொருவரின் பின்னணியையும் தேடிப் போவார்.  அதைக் கொண்டே அவர்களின் மூளையைத் தூண்டுவார். இப்படி ஒரு மருத்துவரின் விடாத முயற்சியையும் தேடலையும் இந்தப் படத்தின் காட்சிகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் நோயாளிகள் ஒரு அதி தீவிர மருந்தினால் தற்காலிகமாக குணமடைவார்கள். சில நாட்களில் மீண்டும் அவர்கள் பழைய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். அந்த சிறிது கால விழிப்புணர்வை அவர்களுக்குத் தான் வழங்கியது அவர்களுக்கு செய்த நன்மையா? குற்றமா? என்று சாயர் மறுகுவார். படம் இப்போது முடியும் தருவாயில் இருக்கையில், சாயர் மீண்டும் நம்பிக்கைக் கொண்டு பயணத்தைத் தொடங்குவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த உலகத்தின் அழியாத உண்மை என்பது மானுடத்தின் சக்தி தான் என்ற விழிப்புணர்வுக்கு வருவார் சாயர். ஒரு அழகான பயணத்துக்குள் நாம் போய்வந்த ஒரு உணர்வினை இந்தப் படத்தில் ஸ்டீவன் நமக்குத் தந்திருப்பார். அக விழிப்புணர்வு என்கிற மையத்தை நோக்கியே கதையைக் கொண்டு சென்றதுதான் இந்தப் படத்தின் மூலமாக ஸ்டீவன் அடைந்த வெற்றி.

இந்தப் படத்துக்குப் பிறகு ஸ்டீவன் எழுதியத் திரைக்கதை Schindler’s List. அந்த வருடத்தின் சிறந்த திரைப்படமாகவும், இதுவரை வெளிவந்த சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களில் எப்போதும் இடம்பெற்றிருக்கும் படமாக அவருக்கு அமைந்தது. ஜெர்மானியர்கள் யூதர்களை இன அழிப்பு செய்யத் தொடங்கிய காலகட்டத்தில் நடக்கும் கதை. பெரும் பணக்காரரும் தன்னை ’நாஜி’ என சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்டவருமான ஆஸ்கர் ஸ்கின்ட்லர் என்பவர் எப்படி மனம் மாற்றமடைந்து தனது தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த ஆயிரம் யூதத் தொழிலாளிகளைக் காப்பற்ற முன்வந்தார் என்பதும் அதில் அவர் எல்லாவற்றையும் இழந்தார் என்பதையும் சொல்லும் படம்.

நாஜிப் படைகள் யூதர்களை இன அழிப்பு செய்ததை பதிவு செய்தால் அது கதையை எங்கெல்லாமோ அழைத்துப் போகும் அபாயம் உண்டு. அதனால் அவர் தனது வழக்கப்படி ஆஸ்கர் ஸ்கின்ட்லர் பார்த்ததையும், உணர்ந்ததையும் மட்டும் திரைக்கதைக்கு எடுத்துக் கொண்டார். ஸ்கின்ட்லர் நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போரைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஊழல் செய்து ஒரு தொழிற்சாலையைத் தொடங்குவதும், அதற்கு யூதர்களை சம்பளமில்லாமல் வேலைக்கு அமர்த்திக்கொண்டதும் முதல் பாதி கதை. இரண்டாம் பாதி தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்து மனம் மாறி தன்னால் ஆன உதவியை ஸ்கின்ட்லர் செய்ய முன்வருவது என இரண்டாக வகுத்துக் கொண்ட திரைக்கதை வடிவம் இது.  இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இப்படியொரு திரைக்கதை வடிவம் என சுலபத்தில் சொல்ல முடிந்தது போல  ஸ்டீவனுக்கு திரைக்கதை எழுதும்போது இருந்ததில்லை. அவர் இந்தக் கதையை எப்படிக் கையாள்வது என்கிற குழப்பத்தில் இருந்திருக்கிறார். குறிப்புகளுக்கு பல காலங்கள் செலவிட்டப் பின்னரே இந்தத் திரைக்கதை வடிவத்தைக் கண்டடைந்திருக்கிறார். ஒரு பாவ மன்னிப்பு கோரும் விதத்தில் உணர்வினைக் கொண்டு சென்றதாலேயே இன்றளவும் இந்தப் படம் நமக்குள் தங்கியிருக்கிறது.

ஹாலிவுட் படங்களில் கேங்க்ஸ்டர் வகைப்படங்கள் அதிகம். அவற்றில் குறிப்பிட வேண்டிய ஒன்று ’American Gangster’. ரிட்லி ஸ்காட் இயக்கிய படத்திற்கு திரைக்கதை ஸ்டீவன் ஜேலியன்.

ஒரு காலத்தில் நியூயார்க் நகரின் ஹார்லம் பகுதியில் அசைக்க முடியாத ஒருவராய் இருந்தவர் பிரான்ஸ் லூகாஸ். லூகாஸின் தொழில் போதைப் பொருட்களை விநியோகம் செய்வது. பெரும் பணக்காரரான அவர் புத்திசாலியாகவும் இருந்தார். மிக நீண்ட வருடங்களுக்குத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததால், அவர் விற்று வந்த  BLUE MAGIC எனும் பெயர் கொண்ட போதை மருந்தை யார் விற்கிறார்கள் என்பதே போலீசுக்குத் தெரியாமல் இருந்தது. பிறகு போலிசால் பிடிபட்டு சிறையில் பல வருடங்கள் கழிந்து ஒரு காலத்தில் சக்கரவர்த்தியாக வாழ்ந்த ஹார்லம் பகுதிக்குத் திரும்பி வருகிறார். அவரை நியூயார்க் டைம்ஸ் இதழுக்காக நேர்காணல் செய்கிறார்கள். ‘The Return of Superfly’ என்கிற பெயரில் லூகாஸ் குறித்த கட்டுரையை ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டது. இந்தக் கட்டுரையை வாசித்த ஸ்டீவன் ஜேலியன் அதனை ஒரு திரைக்கதையாக மாற்ற முடியும் என நம்பினார். அதன்படியே ஒரு திரைக்கதையை எழுதி ரிட்லி ஸ்காட்டிடம்  தருகிறார். அந்தப் படம் தான் American Gangstar.

பிராங்க் லூகாஸின் வாழ்க்கை சாகசமானது. அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை திரைப்படத்துக்கு அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தனை நிகழ்வுகளைக் கொண்ட வாழ்க்கை அவருடையது. ஆனால் அதில் எதையெல்லாம் எடுத்துக் கொள்ளலாம், எந்த இடத்தில் படத்தை முடித்துக் கொள்ளலாம் என்பதை முதலில் ஸ்டீவன் ஜேலியன் வரையறுத்துக் கொண்டார். லூக்காஸின் வாழ்க்கையைப் பற்றி சொல்ல எத்தனையோ இருந்தாலும் ஸ்டீவன் ஜேலியன் எதை முன்னிலைப்படுத்துவது என்பதில் தெளிவாக இருந்தார்.

முதலாவது ஒரு ‘டானிடம்’ ஓட்டுநராக, உதவியாளராக வேலை பார்த்த லூக்காஸ் எப்படி யாரும் அசைக்க முடியாத இடத்தினை அடைகிறார். அதற்கு அவர் செய்த வழிமுறைகள் என்ன, எதற்காக லூக்காஸ் தவறு என்று தெரிந்தும் போதைப் பொருட்களை விற்றார். போன்ற கேள்விகளை உருவாக்கிக்கொண்டு அதற்கான விடையை திரைக்கதையில் முன்வைக்கிறார்.

அடுத்ததாக இந்தப் படத்தில் இணைக்கப்பட்டிருக்கும்  ரிச்சி ராபர்ட்டின் கதை. இவர் லூக்காஸ் வாழ்ந்த காலத்தில் போதைத் தடுப்பு பிரிவில் பணி செய்தவர். மிக நேர்மையான மனிதர் என அறியப்பட்டவர். அவர் எப்படி  லூக்காஸ் என்கிற அணுக முடியாத ஒரு நபரை திட்டமிட்டு வளைத்துப் பிடித்தார் என்பதும் உண்மை சம்பவம். இது எலியும் பூனைக்குமான கதை.  போலிஸ் புத்திசாலித்தனமாக ஒரு குற்றவாளியை எப்படி பிடிக்கிறது என்பதற்கான அத்தனை வழியையும் நடந்த உண்மையான சம்பவங்கள் சொல்லிவிட்டன என்பதால் சரியான கலவையில் ஸ்டீவன் ஜேவிலியன் திரைக்கதையில் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்.  உதாரணத்திற்கு லூக்காஸின் மனைவி அவருக்கு மிக அதிக விலை மதிப்புள்ள ஒரு அங்கியினை வாங்கித் தருகிறார். அதை அணிந்து கொண்டு இருவரும் குத்துச்சண்டைப் போட்டியினைப் பார்க்க செல்கிறார்கள். அதற்கு முன்பு வரை போலிஸ் ’ப்ளூ மேஜிக்’ என்கிற போதைப் பொருளை விற்கும் நபர் யாரென்றே தெரியாமல் இருக்கிறது. அதோடு லூக்காஸ் என்கிற ஒரு நபர் வாழ்வது குறித்தே அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் லூக்காஸைத் தான் தேடிக் கொண்டிருப்பார்கள். தான் சிக்கிவிடக்கூடாது  என்பதற்காகவே  லூக்காஸும் தன்னை ஆடம்பரமாக பொது இடங்களில் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பார். மனைவி ஆசையாக வாங்கித் தந்த காரணதுக்காகவே அந்த அங்கியினை அணிந்து கொண்டு குத்துச்சண்டை போட்டிக்கு வர, இதுவே அவருக்கு வினையாகிவிடும். “குத்துச்சண்டை போட்டி என்பது வெறும் விளையாட்டல்ல அது ஒரு அரசியல்” என்பார் லூக்காஸ். அதற்கு முன்வரிசையில் இடம் பிடிப்பதற்கு ‘டான்’களிடையேயும், இத்தாலிய ‘மாஃபியா’க்களிடையேயும் கடும் போட்டி நிலவும். அது ஒரு கௌரவம் போன்றது. இங்கு தான் தன்னைத் தவறவிடுகிறார் லூக்காஸ். ரிச்சி ராபர்ட்ஸுக்கு முதன்முதலாக லூக்காஸ் மீது சந்தேகம் வரும் இடம் இது தான். “யார் இவன். இத்தனை விலையுயர்ந்த அங்கியை அணிந்திருக்கிறான். மாஃபியாக்களுடன் சகஜமாக உரையாடுகிறான். முன்வரிசையில் இடம்பெறுகிறான்’ என கவனிக்கத் தொடங்குவான்.

போலிஸ் தன்னைக் கவனித்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளும் லூக்காஸ் தன் மனைவி வாங்கித் தந்த அந்த விலைமதிப்புள்ள அங்கியை வீட்டுக்கு வந்ததும் தீயிட்டு கொளுத்துவான். இது போன்ற காட்சி எங்கு இடம்பெறுகிறது என்பதில் தான் திரைக்கதையின் நுணுக்கம் இருக்கிறது. இங்கு ஒரு வசனம் கூட இடம்பெறாது. ஆனால் அத்தனையும் புரிந்துவிடும். ஒருவரின் வாழ்க்கையைப் படமாக மாற்றும்போது முன்னும் பின்னுமாக சம்பவங்களை மாற்றிக் கொள்ள முடியும். அது படைப்பாளரின் சுதந்திரம். இந்த சுதந்திரத்தை ஸ்டீவன் ஜேலியன் இந்தப் படத்தில் நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

லூக்காஸ் தன்னுடைய தம்பியை சிறுவயதில் கறுப்பின வெறுப்பு அமைப்பு ஒன்று அழைத்துப் போய்க் கொன்றதை நேரில் பார்த்ததாலேயே தான் வன்முறையைக் கையில் எடுத்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழில் சொல்கிறார். பின்பு ‘பம்பி’ ஜான்சன் முதன்முதலாக லூக்காஸை தன்னுடன் சேர்த்துக் கொண்டதையும் லூக்காஸ் நேர்காணலில் விவரிக்கிறார். கிட்டத்தட்ட அது மகாபாரதத்தில் துரியோதனன் கர்ணனை தன் நண்பனாக ஏற்றுக்கொள்ளும் காட்சிக்கு நிகரானது. அதே போல் போதைப் பொருளுக்கான மூலப்பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய  வியட்நாமின் வடகிழக்கில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு லூக்காஸ் பயணம் செய்து அங்கு பட்ட கஷ்டங்களையும், பசி தாளாது உயிர் வாழ வேண்டி இறந்து போன நாயின் சடலத்தைத் தின்றதையும் லூக்காஸ் சொல்லியிருப்பார். ஆனால் இதனைப் படங்களில் சேர்க்கவில்லை. லூக்காஸ் வடகிழக்குப் பகுதிக்கு தனியாக பயணம் செய்ததையும் அங்கிருந்து மூலப் பொருட்களை எப்படி கொள்முதல் செய்தார் என்பது மட்டுமே காட்டப்படுகிறது. அவர் அங்கு பட்ட சிரமங்கள் படத்தில் இல்லை. லூக்காஸின் தம்பி கொல்லப்பட்ட சம்பவம் கூட வெறும் வசனமாக அதுவும் லூக்காஸ் ரிச்சியிடம் வாக்கு மூலம் கொடுக்கும் இடத்தில் சேர்த்து விடுகின்றனர்.

லூக்காஸை ஒரு கதாநாயகனாக காட்ட வேண்டாம் என்கிற எண்ணம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். ஹார்லம் பகுதி  முழுக்க போதைக்கு அடிமைப்பட்டு குழந்தைகள் கைவிடப்பட்டு நடுத்தெருவில் அலைந்த அவலங்களுக்கு லூக்காஸும் ஒரு காரணம். இதனால் தான்  லூக்காஸை ஒரு ஆன்ட்டி ஹீரோவாக காட்டாமல், அவன் ஏன் இதை செய்தான்? எப்படி செய்தான் ? எதற்காக செய்தான்? என்பதற்குள் மட்டுமே திரைக்கதையை நிறுத்தியிருக்கக்கூடும் ஸ்டீவன். அதோடு வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் இறந்து போனபோது அமெரிக்கா இறந்த வீரர்களுக்காக மரியாதை செலுத்திக் கொண்டிருந்தது. ஆனால் லூக்காஸ் அந்த இறந்த வீரர்களின் சவப்பெட்டியில் தான் போதைப் பொருட்களைக் கடத்துகிறான். இதற்கு லூக்காஸ் சொல்கிற காரணம், “வியட்நாம் போருக்கும் கறுப்பின மக்களுக்கும் என்ன தொடர்பு?” என்பது. ஆனால் அதே கறுப்பின மக்களை போதைக்கு அடிமையாக்கி சீரழித்ததும் லூக்காஸ் தான் என்பதே திரைக்கதை சொல்லும் மற்றொரு அங்கம்.

யாருடைய சுயசரிதையை படமாக்குகிறோம், ஏன் அதை சொல்ல வேண்டும் என்கிற தெளிவு ஒரு திரைக்கதையாசிரியருக்கு முக்கியமானது என்பது American Gangstar மூலம் தெரிந்து கொள்ளலாம்.

A Girl with Dragon Tattoo  படம் ஸ்டீவன் ஜேலியன்  திரைக்கதை எழுதியதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. இதே பெயரில் ஸ்வீடிஷ் மொழியில் நாவலாக வந்திருந்தது. இந்த நாவலை ஸ்வீடனிலும் திரைப்படமாக்கியிருந்தனர். ஆனால், ஸ்டீவன் ஜேலியன் எழுதி டேவிட் ஃபிஞ்சரால் இயக்கப்பட்ட திரைப்படம் பெருமளவில் பேசப்பட்டது. ஸ்வீடிய மொழித் திரைப்படம்  அத்தனை தூரம் எடுபடவில்லை. ஒரே கதையை இரு வேறு எழுத்தாளர்கள் எப்படி புரிந்து கொண்டு திரைக்கதை அமைத்தார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டாக இதனைப் பார்க்கலாம். நாவலில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும்  காட்சிகளைத் தான் இரண்டு படங்களும் எடுத்தாண்டன என்றாலும், ஒவ்வொரு காட்சியிலும் எந்த உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் இரண்டு எழுத்தாளர்களும் காட்டிய வித்தியாசம் தான் ஹாலிவுட் படத்தினை பல படிகள் மேலே கொண்டு போயிருக்கிறது.

A Girl with Dragon Tattoo படத்தின் ஒன்லைன், நாற்பது வருடத்திற்கு முன்பு  ஒரு தீவில் ஒரு பதின்பருவ பெண் காணாமல் போகிறார். அந்தத் தீவின் உரிமையாளருக்கு உறவினர் பெண் அவள். அவள் கொலை செய்யப்பட்டாளா? அல்லது காணாமல் போனாளா? என்பது அந்தக் குடும்பத்தின் நாற்பது வருட கால மர்மமாக இருக்கிறது. அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் அந்தத் தீவின் உரிமையாளருமான ஹென்றிக் வாங்கர் விரும்புகிறார். அவர் அதற்காக ஒரு புலனாய்வு பத்திரிகையாளரை வரவைக்கிறார். அந்தப் புலனாய்வு பத்திரிகையாளர் தனக்கு உதவி செய்வதற்காக லிஸ்பெத் என்கிற பெண்ணை அழைத்துக் கொள்கிறார். லிஸ்பெத் திறமையான ஹேக்கர். இருவரும் சேர்ந்து அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கி அந்தக் குடும்பத்தின் பல்வேறு மர்மங்களைக் கண்டுபிடிக்கின்றனர். இறுதியில் காணாமல் போன பெண்ணுக்கு என்ன ஆனது என்பது கதை. நாவலாக அதிகப்பக்கங்களில் சொல்லப்பட்ட இந்தக் கதையை படமாக மாற்றும்போது சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். காட்சியின் விறுவிறுப்பும் குறையக்கூடாது. ஏனெனில் நாவலில் ஒவ்வொன்றும் விஸ்தாரமாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்வீடிய மொழித் திரைப்படத்தில் நாவலின் அனைத்துக் காட்சிகளும் இடம் பெற வேண்டும் என்பதாக புரிந்து கொண்டு காட்சிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

உதாரணத்திற்கு, ஹென்றிக் மிக்கேலுக்கு தனது குடும்ப உறுப்பினர் அந்தத் தீவில் எங்கெங்கு வசிக்கிறார்கள் என்பதை சொல்லும் காட்சி. நாவலில் அதே காட்சி உண்டு. ஒருவகையில் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அதில் இந்தக் கதையின் மர்மத்துக்கான விடை தெரிந்து போகவும் செய்யும்.  நமது புத்திசாலித்தனத்தை சோதிக்க வைக்கப்பட்ட காட்சி அது. மொத்த நாவலை வாசித்து முடித்ததும் நமக்கு இந்தக் காட்சி நினைவுக்கு வரும், எப்படித் தவறவிட்டோம் என்றும் தோன்றும்.

இந்த இடம் தான் திரைக்கதை ஆசிரியருக்கு சவாலான இடம்.  ஸ்வீடிய மொழியில் மிகச் சாதாரணமாக ஒருவர் தனது குடும்பத்து உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார் என்பதை சொல்வது போல “இங்க என் தங்கை இருக்கிறாள்”, “இந்த வீட்டில் என்னுடைய தங்கை பையன் இருக்கிறான்”. ’அதோ அங்க தெரியுதே அந்த வீட்டுல இருக்கறவன் யார்கிட்டயும் பேச மாட்டான்’ இப்படியாக இருக்கும். ஆனால் ஸ்டீவோ இந்தக் காட்சியில் அற்புதம் செய்திருப்பார். ஒரு மூத்த உறுப்பினர் தன்னுடைய குடும்பத்தினர் மீது கொண்ட கசப்புணர்வை வெளிக்காட்டுவதே இந்தக் காட்சியில் விஞ்சி நிற்கும். அதே நேரம் இந்தக் காட்சியில் மென் நகைச்சுவையுணர்வும் இருக்கும், இதை ரசிக்கும் நாம், நமக்காக சொல்லப்பட்ட ஒரு ‘க்ளு’வை விட்டுவிடுவோம்.  படத்தின் முக்கிய முடிச்சு அவிழும்போது நமக்கு இந்தக் காட்சி நினைவுக்கு வரும்.

ஒரு நாவலை வாசிக்கிறபோது எதனால் ஒரு எழுத்தாளர் அந்தக் காட்சியை அப்படி எழுதியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுதல் மிக அவசியம். அதை ஸ்டீவன் சரியாக உள்வாங்குகிறார்.

திரைக்கதையின் ஒரு விதி, எங்கு தொடங்குகிறதோ அங்கு முடிய வேண்டும் என்பது. இந்தப் படத்தில் அது சற்று மீறப்பட்டுள்ளது. படத்தின் தொடக்கத்தில் ஹென்றிக் போனில் பேசுவதும் அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்பதும் காட்டப்படுகிறது. பிறகு மிக்கேலின் கதாபாத்திரம் அறிமுகம். அதன் பிறகே லிஸ்பது காட்டப்படுகிறார். ஆனால் படத்தின் முடிவு லிஸ்பெத்தின் உணர்வோடு முடிகிறது. லிஸ்பத் மிக்கேலுக்காக பெரும் வேலை ஒன்றைச் செய்கிறாள். அவளுக்கு மிக்கேலைப் பிடிக்கிறது. மிக்கேலுக்காக ஒரு ஜாக்கெட் வாங்கிக்கொண்டு அவரைப் பார்க்க வரும்போது அவர் தன்னுடைய காதலியோடு செல்வதைப் பார்க்கிறாள். வாங்கிய ஜாக்கேட்டினை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு செல்கிறாள் மிக்கேல். அதோடு படமும் முடிகிறது.

இந்தப் படம் ஒரு மர்மத்தை இருவர் சேர்ந்து கண்டுபிடித்தார்கள் என்பதாக ஸ்டீவன் ஜேலியன் உள்வாங்கிக்கொள்ளவில்லை. அவர் லிஸ்பெத்தின் பார்வையிலேயே கொண்டு செல்கிறார். அதற்கு மற்றொரு காரணமும் இருந்திருக்க வேண்டும். லிஸ்பெத்தின் பிரச்சனையும், காணாமல் போன பெண்ணின் சிக்கலும் ஒன்றாகவே இருக்கின்றன. அதைத் தான் ஸ்டீவன் ஜேலியன் வலியுறுத்த விரும்பியிருக்கிறார். அதனால் தான் படம் வெறும் ஒரு த்ரில்லர் வகையாக இல்லாமல் நம்மைத் தன்னோடு ஒன்றிணைக்கிறது.

இதனை அவர் ’IRSIHMAN’ படத்திலும் செய்திருப்பார்.  இது உண்மைக் கதையின் அடிப்படையில் எடுத்தாளப்பட்ட திரைக்கதை. 1950-களில் அமெரிக்காவில் ட்ரக் ஓட்டுநராக வேலை பார்த்த பிராங் சீரான் என்பவர் பஃபாலினோ என்பவரிடம் அடியாளாகச் சேருகிறார். இவர் பரிந்துரையின்பேரில் ஹாஃப்மான் என்பவருக்கும் வேலை செய்கிறார். இந்த மாஃபியாக்களுக்குள் ஏற்படுகிற அடிதடி, வன்மம், சண்டை சச்சரவுகள் எப்படி ஒவ்வொருவரையும் பாதிக்கிறது என்பது மேலோட்டமான கதை. ஐம்பதுகளில் அமெரிக்காவில் நிழல் அரசாங்கம் செய்து வந்த இத்தாலிய மாஃபியாக்கள் பற்றிய கதை ஹாலிவுட்டில் ஏராளம் உண்டு. அவையெல்லாம் ‘டான்’களைப் பற்றிப் பேசுகிற படமாக இருக்கையில், இந்தப் படம் அவர்களின் அடியாள் ஒருவரின் பார்வையில் செல்கிறது. இந்தக் கதையை ஒரு ஆவணம் போல் பிராங் சீரான் பார்வையில் எழுதியது சார்லஸ் பிராண்ட் என்பவர். இந்தக் கதைக்கு வைத்திருந்த பெயர் ’I heard you painted houses’. முப்பது ஆண்டு கால வாழ்க்கையைச் சொல்கிற படம். அதிகமான கதாபாத்திரங்கள், சொல்வதற்கான சம்பவங்கள் என இருப்பதால் கதையை நேர்கோட்டில் சொல்ல முடியாத சிக்கல் இருந்திருக்கும். கதையை இணைக்கும் புள்ளியைத் தேடுவது தான் கடினமாக இருந்தது என்றிருக்கிறார் ஸ்டீவன். பிறகு ஒரு யோசனையில் இந்தக் கதை குறித்து தான் எழுதிய குறிப்புகளைத் திரும்பத் திரும்ப வாசிக்கையில்  ஒரு திருமணத்துக்கு ஃபிராங்கும் பாஃபலினோவும் குடும்பத்தோடு காரில் பயணம் செய்வதில் இருந்து கதையைத் தொடங்குகிறார். அவர்களின் பயணத்தின் போது முதன் முதலில் இருவரும் சந்தித்துக் கொண்ட இடம் வருகிறது, அதில் இருந்து ஒவ்வொரு பின்னணியாக சொல்லப்படுகிறது.

இது நல்ல யுத்தி. ஏனெனில் இந்தக் கதையில் அதிகமான ஃப்ளாஷ்பேக்குகள் தொடர்ந்து வந்தபடி இருக்கும். சற்றுக் குழப்பமான கதையும் கூட. அதனால் சொல்வதற்கு வசதியாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவசரமில்லாமல் நிதானமாக திரைக்கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். கதையை அந்தக் கதாபத்திரங்கள் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.

இதோடு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்வதால், அடுத்து இவரால் என்ன பிரச்சனை இந்தச் சூழலில் ஏற்படும் என்கிற பரபரப்பு நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்தக் கதையில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு இடமேயில்லை. துப்பாக்கியால் சுடுவதும், சண்டையிடுவதும் தான் படம். அதற்காக வைத்திருக்கும் கதாபாத்திரம் தான் ஃபிராங்கின் மகள் கதாபாத்திரம். அவள் ஒருத்திக்கு மட்டும் தான் தன்னுடைய அப்பா எதோ தவறு செய்கிறார் என்பதும் அவர் கொலைகாரராக இருப்பரோ என்கிற சந்தேகமும் வருகிறது. அவள் கடைசி வரை அப்பாவிடம் பேசுவதில்லை. ஆனால் ஹாஃமேனை  ஞானத் தந்தையாக ஏற்றுக்கொள்கிறாள். ஹாஃமேனை தன்னுடைய அப்பா தான் கொன்றிருக்கிறார் என்கிற சந்தேகம் அவளுக்கு உறுதியானதும் அவருடன் பேசுவதை நிறுத்திவிடுகிறாள்.

எல்லோருக்கும் முன்பாக எந்த மனசாட்சியுமின்றி நிற்கும் பிராங் கடைசியில் தன்னுடைய மன்றாடலை தன மகள் நோக்கித் திருப்புவதாக படம் முடியும். படமும் கூட ஒரு மருத்துவமனை விடுதியில் பிராங் யாரிடமோ தன் கதையை சொல்வது போலத் தொடங்கி அங்கேயே முடிகிறது. இப்படி தொடக்கமும் முடிவும் ஒரு உணர்வுக்குள் வந்துவிடுவதால். இடைப்பட்ட கதையில் எத்தனை சம்பவங்களையும் வைத்துவிட முடிகிறது.

’The Irishman’ படம் மார்ட்டின் ஸ்கார்சிசி இயக்கியத் திரைப்படம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், பென்னி மார்ஷல், ரிட்லி ஸ்காட் என எந்த இயக்குநருக்கு திரைக்கதை அமைத்துக் கொடுத்தாலும் தன்னுடைய பாணியை விட்டுத் தராத ஒருவராக இருக்கிறார் ஸ்டீவன் ஜேலியன்.

ஸ்டீவன் ஜேலியன் இதுவரையிலும் குறைவான நேர்காணல்களே தந்திருக்கிறார். அவற்றில் இருந்து சில கேள்விகளும் பதில்களும்.

கேள்வி: நாவல் போன்ற புனைவு மற்றும் கட்டுரை போன்ற அபுனைவில் இருந்து நீங்கள் அநேக திரைக்கதைகளை  எழுதுகிறீர்கள். இரண்டையும் திரைக்கதையாக மாற்றும்போது எந்த மாதிரியான வேறுபாட்டினை கைக்கொள்கிறீர்கள்?

பதில்: முதலில் தொடங்குவதற்கான புள்ளி எது என்று முடிவு செய்கிறேன். இதிலிருந்து  தான் திரைக்கதைக்கான  வேறுபாடு தொடங்குகிறது. சில நேரங்களில் கட்டுரைகளில் இருந்து தெளிவான கதை சொல்லல் முறையை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு ’Searching for Bobby Fisher’ என்ற திரைக்கதை கட்டுரை தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது. மற்றுமொரு உதாரணம் ’Awakenings’. சில நேரங்களில் வரலாறில் இருந்தும் ஒரு ‘ஐடியா’வை திறனாய்வு செய்வதில் இருந்தும் கூட திரைக்கதையை அமைக்க முடியும். இதற்கு உதாரணம் ’Moneyball’.

அபுனைவில் இருந்து திரைக்கதை அமைக்கிறோம் என்றால் அதற்கு ஒரு கதையை உருவாக்கி அதை சில கதாபாத்திரங்கள் மூலம் சொல்ல வைக்க வேண்டும்.

நாவல் என்றால் அதில் சொல்லப்பட்ட கதாபாத்திரங்களுக்குள் நிகழ்வதை அவர்களின் வாழ்க்கையை, எண்ணங்களை  புரிந்து கொள்ள வேண்டும். இப்படி புரிந்து கொண்டு விட்டாலும் அதை எப்படி பார்வையாளருக்கு சொல்வது என்பது முக்கியம். வாய்ஸ் ஓவரில் சொல்லலாம். ஆனால் வாய்ஸ் ஓவரில் சொல்லும் வாய்ப்பு  கதையில் இல்லாமல் போகலாம்.  அதே நேரம் கதாபாத்திரங்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன உணர்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.

இதற்கு சில நேரங்களில் வசனங்கள்  கூட உதவி செய்வதில்லை.  ஆனால் நமக்கு ஒரு நல்ல செய்தி உண்டு.  திரைப்படங்கள் காட்சி ஊடகம் என்பதால்  நம்மால் சொல்வதை விட காட்டி விட முடியும். அதற்கான சாத்தியங்களை யோசிக்க வேண்டும்.

  • அதிகமும் உண்மைச் சம்பவங்களை படமாக மாற்றுகிறீர்கள். உங்களை ஏன் அதிகமும் உண்மைச் சம்பவங்கள் ஈர்க்கின்றன?

என்னுடைய அப்பா பத்திரிக்கையாளர். அதனால் எப்பொழுதும் செய்திகள் குறித்து பேசக்கூடிய சூழலில்தான் நான் வளர்ந்தேன்.  அப்போதிருந்தே  உண்மைச் சம்பவங்கள் கட்டுரை வடிவில் வருவதை பற்றிக் கேட்டு வருகிறேன். இது போன்ற கட்டுரைகளில் இருந்து  ஒரு திரைக்கதையை உருவாக்கும்போது சம்பவத்தின் உண்மைத்தன்மையில் இருந்து விலகிவிடக்கூடாது. நான் எப்போதும் ஒரு சம்பவத்தின் குழப்பங்களிலும், மனிதரின் சிக்கலான லட்சியத்திலும், நடத்தையிலும் கவனம் செலுத்துவதில்லை.

  • கதைக்கு அல்லது சம்பவத்துக்கு திரைக்கதை அமைக்கலாம் என எப்படி முடிவு செய்கிறீர்கள்?

பதில்: நானே முதலில் எனக்கு கேட்டுக்கொள்ளும் கேள்வி சில உண்டு. இந்தக் கதையுடன் சில மாதங்கள் பயணம் செய்வதற்கான ஆர்வத்தை இது ஏற்படுத்துகிறதா ? என்பதும் , இதில் போதுமான அளவு என்னுடைய பங்களிப்பை செய்ய இயலுமா? என்பதும். உண்மையிலேயே என்னால் இதனை உள்வாங்கிக் கொள்ள முடியுமா ?  என்றும் கேட்டுக் கொள்வேன். கடைசி கேள்வியாகக் கேட்டுக்கொள்வது, யார் இதனை இயக்கப்போகிறார்கள்   என்பதும், இந்தக் கேள்வி முக்கியமானது.  ஏனெனில் ஒரு இயக்குநருக்கும், திரைக்கதை எழுத்தாளருக்கும்  உண்டான ஒன்றிணைவைத்தான் பார்வையாளர்கள் திரையில் பார்ப்பார்கள். இந்த அனுபவம் குறிப்பாக நல்ல இயக்குநர்களுடன் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக டேவிட் ஃபின்சருடன். 

  • படத்திற்கான திரைக்கதை வாய்ப்பு எப்படி வந்தது?

தயாரிப்பு நிறுவனம் ’The Girl With The Dragon Tattoo’ புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார்கள். அதற்கு முன்பு அந்த புத்தகத்தை நான் வாசித்ததில்லை. ஜனவரி மாதம் அந்த புத்தகம் எனக்கு வந்து சேர்ந்தது. செப்டம்பரில் படப்பிடிப்பு என்றார்கள்.  மிகக்குறைவான காலகட்டம்.  இதற்கு முன்பு அத்தனை குறைவான காலகட்டத்தில் ஒரு திரைக்கதையை நான் எழுதியது இல்லை. நேரமில்லை என்றதுமே  மனம் சுணங்கியது. பெரும்பாலும் நான் என்ன செய்வேன் என்றால்,  குறிப்புகளாக எடுத்துக்கொள்வேன். அந்தக்  குறிப்புகளை நிகழ்வாக மாற்றுவேன். பின்பு அதற்கு குறிப்புகள் எழுதுவேன். இந்த நாவலைப் பொறுத்தவரை  கடைசியில் என்னிடம் குறிப்புகள் மட்டுமே சேர்ந்தன. கதையாக மாறவேயில்லை. இது நடக்கவே போவதில்லை என்ற சோர்வு ஏற்பட்டது. இந்த நாவலில் வேறு பலரும் படமாக்க நினைத்திருந்தனர். அது வேறு திரைக்கதையை சரியாக செய்ய வேண்டுமே என்கிற  உளைச்சலை தந்து கொண்டிருந்தது. பிறகு திரைக்கதை எழுதுவது நிகழ்ந்துவிட்டது.

  • நீங்கள் எப்படி எழுதுவீர்கள்? ’A Girl with Dragon Tattoo’ படத்தினை பிறகு எப்படி  குறுகிய காலத்தில்   முடித்தீர்கள்?

முதல் பிரதி எழுதி முடிக்க ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டன. மற்ற எழுத்தாளர்களுடன் நான் உரையாடி இருக்கிறேன்.  அவர்கள் காலை ஏழு மணிக்கு எழுவார்கள் என்றும். எட்டு மணிக்கு எழுதத் தொடங்கினால் மதியம் ஒரு மணி வரை எழுதுவார்கள் என்றும். பிறகு இரவில் எழுதத் தொடங்குவார்கள் என்றும் சொன்னார்கள்.

  • எந்த நேரத்தில் எழுதுவீர்கள்?

என்னுடைய இளம் வயதில்  எப்பொழுதும் எழுதிக் கொண்டே இருந்திருக்கிறேன். பதினைந்து, இருபது வருடங்களாக.  அதாவது  குழந்தைகள் பிறந்த பிறகு எழுத்து என்பது சாதாரண நடைமுறைக்குள்  வந்து  விட்டது. ஒன்பதரை மணிக்கு எழுதுவேன்.  குழந்தைகள்  பள்ளியில் இருந்து திரும்புவதற்கு  சற்று நேரத்திற்கு முன்பு வரை தொடர்ந்து எழுதுவேன்.

  • நாளும் இத்தனை பக்கங்கள்  எழுத வேண்டும் என்கிற கணக்கு வைத்துக்கொள்வீர்களா?

இல்லை. முதல் மூன்று மாதங்கள் எழுதவே மாட்டேன்.  குறிப்புகள் எடுப்பேன். படங்கள் பார்ப்பேன். பிறகு  எழுதத் தொடங்கும்போது பக்கக் கணக்குகள் வைத்துக்கொள்ள மாட்டேன். எவ்வளவு தூரம் எழுத முடியுமோ   எழுதிக்கொண்டே போவேன். மூன்றில் இரண்டு பங்கு தூரம் கடக்கும் போதுதான் எனக்கே நான் எதை நோக்கி செல்கிறேன் என்கிற தெளிவு கிடைக்கும்.  

  • முதல் படம் ’Falcon and Snowman’ குறித்து?

முதல் படம் எப்போதுமே மறக்க முடியாதது. உண்மையைச்சொல்ல வேண்டுமென்றால் எழுதத் தொடங்கும்போது பயமாக இருந்தது.  எப்படியும் என்னை வேண்டாம் என திருப்பி அனுப்பி விடுவார்கள் என்றே நினைத்தேன். படத்தின் இயக்குநர் ஜான் ஸ்லெஸஞ்சர்  அப்போது மிக பிரபலமாக இருந்தார். முதல் திரைக்கதை அனுபவம் நன்றாகவே இருந்தது.  ஆனால் தொடக்கம் நன்றாக அமைந்தால் அடுத்தடுத்து  எல்லாமே சிறப்பாகவே அமையும் என்றும் சொல்லிவிட முடியாது. மோசமான அனுபவங்களும் கிடைத்தன.  அதனால் நல்ல அனுபவங்கள் கிடைத்தால் அதை அனுபவியுங்கள்.  ஏனெனில் தொடர்ந்து அப்படி நடந்துகொண்டே இருக்காது.

  • படம் குறித்து?

பதில்: இந்தப் படத்திற்கான திரைக்கதை  எழுதும் வாய்ப்பு பலரிடமும் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது.  இதனால் இந்தத் திரைப்படம் நடக்குமா? என்பதே பலருக்கும் சந்தேகமாக இருந்தது.  அதனால் என்னிடம் வந்து சேர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.  ஆனால் அதிகத் தொல்லைகளைக் கொடுத்த படம் இது.  ஆனால்   எனக்கு இருந்த அழுத்தத்தினை திரைக்கதைக்குள் காட்டவில்லை.  சித்ரவதைக் கூடம் குறித்து கதை சொல்ல வேண்டுமென்றால்  அதை நீங்கள் பார்க்கும்படி சொல்ல வேண்டும்.  இந்தப் படத்தின் அஸ்கர் ஸ்கிண்ட்லர்  படத்தை தூக்கிச் செல்லும் ஒரு கருவி. தொடக்கத்திலேயே முடிவு செய்து விட்டேன். ஸ்கிண்ட்லர் மூலமாக எதை சொல்ல வேண்டுமோ, எதையெல்லாம் காட்ட முடியுமோ  அவை மட்டும்தான் காட்டப்படவேண்டும்.  ஏனெனில் அதிகமாக காட்டவும்,  சொல்லவும்  வேண்டி இருக்கும்  கதையை ஒரு சட்டத்துக்குள்  கொண்டுவர வேண்டுமென்றால்  ஒன்றை நோக்கி குவிக்க வேண்டும்.  நான் இந்த படத்தில்  அஸ்கர் ஸ்கிண்ட்லரை நோக்கி குவித்தேன்.  சொல்லாமல் விடுபட்ட கதைகளை விட, சொல்கிற  கதை முக்கியமானது.  ’Schindler’s List’  படம் முடிந்ததும்  மற்ற படங்களுக்கு பணி செய்வது  கடினமாக இருந்தது.  குறிப்பிட்ட தரத்துக்கு கீழே உள்ள படங்களில் பணி செய்ய விருப்பம் இல்லாமல் போனது.  கடைசியில் ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டி இருந்தது.  பலருக்கும் இது போன்று ஏற்படும் என நினைக்கிறேன். ஒவ்வொரு படத்தையும் தொடங்கும்போது ’Schindler’s List’ படத்தினை  மறக்க வேண்டி இருந்தது.  

  • படத்திற்கு ஆஸ்கார்  கிடைத்தது குறித்து?

இந்தப் படம்  வெளிவந்த போது அந்த  வருடத்தின் சிறப்பான படமாக அமைந்தது. எப்போதுமே எனக்குள் நான் சொல்லிக் கொள்வேன்.  சரிதான். திரும்பவும்  இப்படி நடக்க போவது இல்லை என.  அதனால் முடிந்தவரை  அதன் பலன்களை அனுபவித்துக்கொள்வேன்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
சாவித்திரி கண்ணன்
சாவித்திரி கண்ணன்
1 year ago

மிக நுட்பமான பார்வையோடு எழுதப்பட்ட கட்டுரை. இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு இந்த கட்டுரை வாசிப்பு சிறந்த அனுபவத்தை தரும்.