காப்பு

1
316

‘வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சிக்க மூணு இடங்களுக்குப் போயிட்டு வந்தா போதும்’ இப்படி அடிக்கடி சொல்வார் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர். அவர் இந்த மூன்று இடங்களுக்கும் போய் வந்தவர். அவர் சொன்ன இடங்களின் வாசலைக் கூட மிதிக்காதவர்களும் அநேகம் பேர் உண்டு தான். வாழ்வின் இறுதிவரை இங்கு செல்லாமல் இருப்பது அவர்கள் வாங்கி வந்த வரம் என்று சந்தோஷப்பட வேண்டும். இப்படியான சர்வ வல்லமை கொண்ட அந்த இடங்கள் மருத்துவமனை , காவல் நிலையம், நீதிமன்றம்.

ஆனாலும் இப்படி நினைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது தனியார் மருத்துவமனைகள் தான். போட்டி மருத்துவமனைகள் பெருகத் தொடங்கிய பின் அவர்கள் கொடுக்கும் விளம்பரமே நம்மைக் கவர்ந்து இழுக்கின்றன. ‘உங்கள் இருதயம் பழுதடைந்துவிட்டதா? கவலையே வேண்டாம், எங்களிடம் தரமான, நல்ல நிலையில் உள்ள இருதயங்கள் இருக்கின்றன” என்ற ரீதியில் இவர்கள் செய்யும் விளம்பரங்கள் பலரையும் கவர்கின்றன என்பது தான் இதில் கவனிக்கப்படவேண்டியவை.

இதற்கு உதாரணம் என்னுடைய நண்பரின் அம்மா அகிலாண்டம். சர்வ ஆரோக்கியத்துடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிற அகிலாண்டத்திற்கு என்னுடைய நண்பர் தொலைபேசியில் அடிக்கடி பேசுவார் “யம்மா..உடம்பு நல்லாருக்குல்லா..?” என்றால், பட்டென்று சொல்லுவார், “எனக்கென்னல கொறைச்சல்…கரண்டிய கைல எடுத்ததுமே முதுகு ஓடியுதும்பாளே ஒன் பொண்டாட்டி அவ உடம்பப் பாத்துக்கோ” என்பார் நக்கலாக. அப்படிப்பட்ட அகிலாண்டம் ஒருமுறை நண்பருக்கு போன் செய்து, “தல கிறுகிறுங்கு…உக்கார முடியல…உக்காந்தா எந்திரிக்க முடியல” என அழுதிருக்கிறார். அடித்துப் பிடித்து என் நண்பரும் சென்னையிலிருந்து தன்னுடைய கிராமத்திற்கு ஓடினார். நண்பர் போயிருந்தபோது அகிலாண்டம் தள்ளுவண்டி பாத்திரக்கடைக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.. நண்பரைப் பார்த்ததும் தடாலென்று கீழே விழுந்து, “இப்பவே என்னை ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போ..” என சொல்லிவிட்டு மயங்கியிருக்கிறார்.

கொண்டு போன பெட்டிப் படுக்கையைக் கூட கீழே வைக்காமல் அவசரமாக அம்மாவை அழைத்துக் கொண்டு ஆட்டோ பிடித்து அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து போயிருக்கிறார் நண்பர். அதுவரை மயக்கத்திலிருந்த அகிலாண்டம் சட்டென்று விழித்து, “ஏல..என்னைய இப்படியே கொள்ளி வைக்கக் கூட்டிட்டுப் போயிரலாம்னு பாக்கியா..ஒழுங்கா நான் சொல்ற ஆசுபத்திரிக்கு கூட்டுப் போ” என்று மீண்டும் மயங்கி விழ, அவர் சொன்ன மருத்துவமனையின் பெயரைக் கேட்டு நண்பர் ஆடிப்போயிருக்கிறார்.

கட்டப்பட்டு சில நாட்களே ஆன புத்தம்புதிய மருத்துவமனை என்பதால் நோயாளிகளாக வருபவர்களுக்கு ஐம்பது சதவீத தள்ளுபடியில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தது. அதனால் அங்கு பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் சொத்தில் பாதி மட்டுமே காலியாகிக் கொண்டிருந்தது. அகிலாண்டத்தை ஒரு இளம் மருத்துவர் பரிசோதித்து ‘பாட்டி…உங்களுக்கு ஒண்ணுமில்ல.. வெயில்ல நின்னுருப்பீங்க.. கிறுகிறுத்திருக்கும்..பிரஷர், சுகர் எதுவும் இல்ல” என்றதும் அகிலாண்டம் கொதித்துப் போனார்.

“பெரிய டாக்டர வரச்சொல்லு..நீ பொடிப்பய. உனக்கு என்ன தெரியும்? எனக்கு வந்திருக்கிற வியாதிக்கு ரெண்டு நாளு இங்க கெடந்து டிப்ஸ் (ட்ரிப்ஸ்) ஏத்திட்டுத் தான் போவேன்’ என்று சொல்ல  மருத்துவமனை நிர்வாகம் அகமகிழ்ந்து உடனே அட்மிஷனைப் போட்டு அகிலாண்டத்திற்கு ஏக உபசாரம் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு நாட்கள் அங்கிருந்து சகல சௌகரியங்களையும் அனுபவித்துவிட்டு வந்திருக்கிறார். அதோடு நில்லாமல் கிராமத்தில் இருந்தும், உறவினர் வட்டத்திலிருந்தும் யார் யாரெல்லாம் தன்னைப் பார்க்க வரவில்லை என்பதை குறித்துக் கொண்டு மகனிடம் அதைச் சொல்லிக் காட்டியே வராத பி.பியை வரவைத்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை நண்பர் சொன்னபோது வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய ‘ஐசுக்குட்டி’ கதை தான் நினைவுக்கு வந்தது. ஐசுக்குட்டிக்கு பிரசவ வலி வந்துவிடும். அதுவும் தலைப் பிரசவம். வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் காலம் அது. ஆனாலும் ஐசுக்குட்டிக்கு தன்னுடைய பிரசவம் டாக்டர் கையாலேயே நிகழவேண்டும் என்பது பெரும் விருப்பம். அதற்காக பிரசவ வலியை பன்மடங்காக வெளிக்காட்டிக் கொண்டிருப்பாள். கையில் பைசா எதுவும் இல்லாத ஐசுக்குட்டியின் கணவன் அவளிடம் ‘எப்படியாவது பிரசவித்துவிடு’ என்று ஜன்னல் வழியே கெஞ்சிக் கொண்டிருப்பான். ஊரில் உள்ளவர்களுக்கு ஐசுக்குட்டியின் கதறல் சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு செயற்கையாய் மாறும். கடைசியில் வேறு வழியில்லாமல் மருத்துவரை அழைத்து வர ஆள் அனுப்பி வைக்கப்படும். மருத்துவர் வரும்வரை குழந்தை வெளியில் வராமல் இருக்க அரும்பாடுபடுவாள் ஐசுக்குட்டி. மருத்துவர் வீட்டினுள் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடி ஐசுக்குட்டி பிள்ளை பெற்றுவிடுவாள். அப்போதும் அவளுக்கு ஒரு பெருமை இருக்கும் ‘என்ன இருந்தாலும் டாக்டரு வந்த பெறகு தானே எனக்கு பிரசவம் ஆச்சு..”

இதனை குழந்தைகளின் மனநிலையோடு ஒப்பிடுகிறது மன நல மருத்துவம். நடக்கத்தொடங்கும் குழந்தை கீழே விழுந்துவிட்டால் தானாக எழ முயற்சி செய்யும். ஒருவேளை நாம் பார்த்து ‘ஐயோ..கீழ விழுந்துட்டியா?’ என்று கேட்டுவிட்டால் உடனே அழத் தொடங்கிவிடும். அதே போல குழந்தைகளைக் கண்டுகொள்ளாமல் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தால் தங்கள் பக்கம் பெரியவர்களைத் திசைத் திருப்ப சும்மாவேனும் கீழே விழுந்து கைகாலை உதறிக் கொள்வார்கள் சில குழந்தைகள். இந்த மனநிலை வளர வளர பலருக்குள்ளும் தங்கி விடுகிறது. அதிலும் இந்த மனநிலைக்குள் அடிக்கடி சிக்குவது பெண்கள் தான் என்கிறது மருத்துவம்.

அது உண்மைதான் என்பது போல பல பெண்களைப் பார்க்க நேருகிறது. கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு தோழி எப்போதுமே சோர்வுடன் இருப்பாள். அவளுக்கு ஒரு ‘தனி’ மனநிலை உண்டு. யாரேனும் ‘எனக்கு தலை வலிக்கிறது’ என்றால் இவளும் ‘ஆமாம் எனக்கும் தலைவலி இருக்கு’ என்பாள். முதுகு சுளுக்கியிருக்கிறது என்றால், ‘ஆமாம் எனக்கும் முதுகு வலி’ என்று ‘கம்பெனி’ கொடுப்பாள். இப்படியான இவள் ஒருநாள் பத்திரிகை விளம்பரம் ஒன்றைப் பார்த்திருக்கிறாள். ‘அதீத படபடப்பு, வியர்வை, உடல் சோர்வு என உடல் கோளாறுகளின் நீண்ட பட்டியலை அதில் படித்துவிட்டு எங்களிடம் அலுத்துக் கொண்டாள், ‘இதுல சொல்லியிருக்கறதெல்லாம் எனக்கும் இருக்கு. அதுல போட்டிருக்கற மாதிரி எனக்கு பவுத்திர வியாதி தான் வந்திருக்கணும்’ என்றாள். விவரம் தெரியாத நாங்களும் ‘அப்படியா?’ என்று அப்பாவியாய்க் கேட்டு வைத்தோம்.

ஒருமுறை எனக்கு கண்ணில் ஏதோ விழுந்தது போல உறுத்தல் ஏற்பட்டது. தண்ணீரால் துடைத்துவிட்டாலும் உறுத்தல் நின்றபாடில்லை. ஒருநாள் முழுக்க அவஸ்தையாக இருந்தது. எங்கள் ஊரில் கண் மருத்துவத்துக்கு பெயர் பெற்ற ரத்தினசாமி டாக்டரைப் பார்க்கப் போனேன். என்னுடைய கண் பிரச்சனையைச் சொன்னதும் , ‘நேத்து குத்தாலத்துக்கு குளிக்கப் போனியோ?” என்றார். ‘ஆமாம் டாக்டர்..நீங்களும் வந்திருந்தீங்களா?” என்றேன் ஆச்சரியமாகி. “அருவியில குளிக்கப்போறோம்னு சூடுபறக்க எண்ணையத் தேச்சிருப்ப…அரைகுறையா குளிச்சிருப்ப..சூடு கிளப்பி விட்டிருக்கு..இதக் கண்டுபிடிக்க நான் குத்தாலம் வரணுமாக்கும்..மருந்தெல்லாம் ஒண்ணும் வேணாம்..இன்னொரு தரம் தலைக்கு குளி” என்று அனுப்பிவைத்தார். வயதான பெண்கள் வந்தால் இவர் கவனிக்கும் விதமே தனியாக இருக்கும். “பாட்டி…கண்ணுல பொறை விழுந்துட்டு கேட்டியளா..ஒரு ஆபரேஷன் பண்ணிக்கிடுங்க.. கொள்ளுப்பேரன் பேத்திங்க உங்க கண்ணுல விரல விட்டு ஆட்டுதத நீங்களும் கண்குளிரப் பாக்கணும்லா’’ என்பார் சிரித்தபடி. வந்த பாட்டிகளுக்கு பல்லில்லாத வாயெல்லாம் பூரிப்பாகிவிடும். பூரிப்புக்குக் காரணம் ‘இவராவது நம்ம உடம்பு பிரச்சனையை காது கொடுத்து கேக்காரே’ என்பதாகவே இருக்கும்.

சென்னையின் பணக்காரர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று அது. அங்கே அலுவல் நிமித்தமாய் எனக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருந்தது. நான் எப்போது போகும்போதும் எழுபது வயதான ஒரு பாட்டி தனது வீட்டின் கதவுக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பார். பக்கத்திலேயே அவருடைய ஊன்றுகோலும் இருக்கும். ஒருநாள் அவரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அடிக்கடி என்னை அங்கு அவர் பார்ப்பதால் தயக்கம் ஏதுமின்றி பேசினார். வீட்டிற்குள்ளும் அழைத்துப் போனார். மூன்று படுக்கையறைகள் கொண்ட பிரமாண்டமான வீடு. சுவரெங்கும் மோகினியாட்டம் ஆடுகிற அழகிய பெண்ணின் புகைப்படங்கள். அந்தப் புகைப்படங்களையே பார்த்தபடி இருந்த என்னிடம், “இது யாருன்னு தெரியுதா?” என்றார் புன்சிரிப்புடன். ‘இல்லை’ என்று தலையாட்டினேன். “நான் தான் அது. இந்தியன் ப்ரெசிடென்ட் கிட்ட அவார்டெல்லாம் வாங்கியிருக்கேன்” என்றார் பெருமையுடன். “வீட்ல வேற யாரும் இல்லையா?” என்றேன் தயக்கத்துடன். “எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவில் இருக்காங்க. அவங்க தான் இந்த வீட்டை எனக்கு வாங்கிக் கொடுத்தது. எனக்கு கால் மூட்டு வலி ரொம்ப வருஷமா இருக்கு. இப்ப ரொம்ப அதிகமாப் போச்சு. எத்தனை மேடைகள்ல ஆடியிருப்பேன். அப்பல்லாம் இந்த மூட்டு வலி எட்டிப் பார்த்துருக்குமா? இப்ப இங்கேருந்து வாசலுக்குப் போறதுனா கூட ‘ஸ்டிக்’ தேவைப்படுது. வீட்டுக்குள்ள இருக்கும்போது கீழ விழுந்தா கூட தூக்கிவிட ஆள் கிடையாது. அதுக்கு பயந்து தான் சமையல்காரம்மா வந்துட்டுப் போனதுக்கப்புறம் வீட்டு வாசல்லேயே உட்கார்ந்துருப்பேன்” என்றார் சாதரணமாக. அத்தனைப் பெரிய வீடென்பது அர்த்தமில்லாததாகவே இப்போது தெரிந்தது.

அதோடு அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார். “ஒண்ணு பண்ணேன்…நீ இங்க வந்துறேன். உனக்கு ஒரு ரூம் எடுத்துக்கோ. வாடகை எல்லாம் தேவையில்ல..ஒரு பேச்சுத் துணைக்கு எனக்கு மனுஷங்க வேண்டும்” என்றார் தேர்ந்த ஆங்கில வார்த்தைகளில். முன் பின் தெரியாத என்னிடம் இப்படி கேட்கும் அளவுக்கு அவருக்குள் தனிமையும், நோய் குறித்த பயமும் ஆட்கொண்டிருக்கிறது என்பது அவர் மேல் எனக்கு கரிசனத்தை ஏற்படுத்தியது.

“கால் வலிக்குதுன்னு சொன்னீங்களே ..இப்ப எப்படி இருக்கு? “ என்று கேட்கும் ஒரு விசாரிப்பு போதும் பல பெண்கள் இன்னும் பத்து ஆள் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். இந்த அருமையான அக்கறை இல்லாதது தான் பெண்களை சோர்வடையச் செய்கிறது.

உடல் உபாதை, சிக்கலான நோய்கள் என்பதை சகித்துக் கொள்ளவும் அதோடு வாழவும் பெண்கள் பழகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் மனம் தான். ‘சிசேரியன்’ செய்து கொண்ட பெண்களுக்கு குறைந்தது ஒருமாத ஓய்வென்பது கட்டாயம்.

சமீபத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. குறைவான காலத்திலேயே பிறந்துவிடும் குழந்தைகளை அடுத்த நிமிடம் சிகிச்சைக்காக தாயிடமிருந்து எடுத்துவந்து தனியாக பராமரிப்பார்கள். வேறு யாரும் குழந்தையைத் தொடுவதற்கு அனுமதி இல்லை என்பதால் ‘சிசேரியன்; செய்து கொண்ட உடம்போடு குழந்தையின் பக்கத்திலேயே இருக்க வேண்டும். இது எவ்வளவு கடினம் என்பது அனுபவிக்கும் அவர்களிடத்தில் கேட்டால் தான் தெரியும். ஆறரை மாதத்திலே பிறந்த தனது குழந்தையை அங்கு சேர்த்திருந்தார் ஒரு பெண். குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆகும்வரை மருத்துவமனையில் தான் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டனர் மருத்துவர்கள். ‘ஆபரேஷன் ஆனதிலேருந்து ஒரு நாள் கூட நிம்மதியா தூங்கலீங்க. என் பாப்பா என்னிக்கு என் கைக்கு வருதோ அன்னிக்குத்தான் எனக்கு மூச்சு வரும். அவன் உடம்புல என்னலாமோ ட்யூப் மாட்டியிருக்காங்க. அவன் முகத்தையே கூட என்னால சரியா பார்க்க முடியல. பார்க்கும்போதே அழுகை வந்திருது. ஆனா அதுக்கு மத்தியிலும் அவன் எப்பவாவது தூக்கத்துல சிரிப்பான் பாருங்க..அந்த நிமிஷதுக்காகத் தாங்க நான் எல்லா வேதனையையும் தாங்கிட்டு இருக்கேன்” என்றார் அந்த பெண். குழந்தைப் பிறப்புக்குப் பின் அவர் பத்தியம் எடுத்துக் கொள்ளவில்லை, அவருக்கு வேண்டிய மருந்துகளையும் முறையாக உட்கொள்ளுவதில்லை. நடந்தாலே சுருக்கென்று தைக்கும் அடிவயிற்றின் வேதனையையும் அவர் பொருட்படுத்தவில்லை. இப்படி அங்கிருக்கும் ஒவ்வொரு தாயுமே குழந்தைகளுக்காக தன் வேதனையை மறந்தவர்கள்.

நோயின்றி வாழ்வது மட்டும் தான் ஆரோக்கியமான வாழ்வென்பது இல்லை. எந்த உடல் வேதனையாக இருந்தாலும் சுற்றி இருப்பவர்களின் கரிசனம் இருந்துவிட்டாலே அது வளமான வாழ்வு தான் என்பது தான் பலருடைய வாழ்க்கையையும் பார்க்கிறபோது புரிகிறது.

புகைப்படம் நன்றி : சசிகுமார் சாமிகண்ணு

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
பாலஜோதி இராமச்சந்திரன்
பாலஜோதி இராமச்சந்திரன்
21 days ago

எங்கூரு பக்கம் ஆஸ்பத்திரியையும் சுடுகாட்டையும் சொல்லுவாங்க. போலீஸ் ஸ்டேஷன் வாசலையும் கோர்ட் வாசலையும் ஆயுசுக்கும் மிதிக்கக் கூடாதும்பாங்க.