டெல்லி கணேசன் – அஞ்சலி

0
327

பத்து வருடங்களுக்கு முன்பு ராஜ் தொலைகாட்சி சேனலில் Beach Girlsஎன்கிற நிகழ்ச்சிக்கு ஸ்க்ரிப்ட் எழுதி அதன் துணை இயக்குநராகவும் பணி செய்து கொண்டிருந்தேன். அது ஒரு ஜாலியான கேள்வி பதில் நிகழ்ச்சி. தீவிரமான கேள்விகள் எதுவும் இருக்காது. நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து
கொண்டார்கள். டெல்லி கணேஷ் அவர்களும் நிகழ்வுக்கு வந்திருந்தார்.  சிலர் அந்த ஷோவுக்கு வரப்போகிறார்கள் என்றால் மொத்த யூனிட்டும் ஆர்வமாகிவிடுவார்கள். “அவங்ககிட்ட என்ன கேள்வி கேக்கப்போறீங்க?” என்று யூனிட் ஆட்கள் தனியாக வந்து கேட்பார்கள். டெல்லி கணேஷ் அவர்கள் வந்தபோதும் இது நடந்தது. எந்தக் கேள்வியும் சீரியசாக இருக்காது என்பதால், மொத்த யூனிட்டும் அந்த நிகழ்ச்சியில் ரசித்து வேலைப் பார்த்தார்கள். டெல்லி கணேஷ் வந்த அன்று அவர் சொன்ன பதில்களால் மொத்த படப்பிடிப்புத் தளமும் சிரித்துக் கொண்டாடியது. நான் அதிகமும் வியந்தது அவரது நினைவாற்றலைத் தான்.

நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவமாக இருந்தாலும் அப்போது தான நடந்து முடிந்திருந்தது போல அத்தனை இயல்பாகவும், சுவாரஸ்யமாகவும் அவரால் சொல்ல முடிந்தது. அதே போல அவர் நடித்தப் படங்களின் வசனங்களை எந்தத் தடையுமின்றி பேசிக் காட்டிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் சுகுமாரன் என்னை அழைத்து டெல்லி கணேஷ் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். “உங்க ஊரு தான்..” என்றதும் திருநெல்வேலியில் எங்கு என்பதை விசாரித்தார். ‘நல்லா வரணும்..கேள்விகள் ரொம்ப நல்லா இருந்தது’ என்று வாழ்த்தினார். அவர் திருநெல்வேலி வல்லநாட்டைச் சேர்ந்தவர். அவரை முதலும் கடைசியுமாகப் பார்த்தது அப்போது தான்.

அதனால் என்ன, எத்தனை படங்களில் நம்மை பார்க்க வைத்திருக்கிறார். சில நடிகர்கள் தான் திரையில் வந்ததும் நம்மை ஏமாற்ற மாட்டார்கள். டெல்லி கணேஷ் என்றதும் நமது நினைவுக்கு வந்தப் படங்கள் கடந்து, அவர் திரையில் வந்து போன எந்தப் படங்களிலும் நமக்கு அலுப்புத் தந்ததில்லை. மிக இயல்பான நடிப்பு என்று சொல்வது எளிது, நம்மை நம்ப வைக்கச் செய்வது  மிகக்கடினம்.

‘நாயகன்’ படத்தைச் சொல்ல முடியும். அந்தப் படத்தின் பெரும்பாலானக் காட்சிகளில் கமல்ஹாசனுடன் உடன் நிற்கும் கதாபாத்திரம். ஓரிரு வார்த்தைகள், மிஞ்சிப் போனால் ஒரு வாக்கியத்தில் மட்டுமே வசனங்கள். ஆனால முழுப் படத்திலும் வரவேண்டும். ஒரு நடிகனின் திறமை வசனங்களைப் பேசுவதிலும், பாடுவதிலும் ஆடுவதிலும் இருப்பதைப் போன்றே ஒரு காட்சியில் மற்றவர்கள் பேசும்போது தருகிற பாவனையிலும் உள்ளது. ஒரு நல்ல நடிகனை நாம் அங்கு அடையாளம் கண்டுவிட முடியும்.. நாயக்கர் டாக்டரிடம் பேசும்போதும், ரெட்டி சகோதரர்களிடம் பேசுகையிலும், சூர்யா இறந்ததை நாயக்கரிடம் சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவிப்பதிலும் நாம் டெல்லி கணேசன் எனும் நடிகனைப் பார்க்க முடியும். “சொல்லலியே.. நாயக்கர் எங்கன்னு கேட்டாங்க..சொல்லியே..எனக்கு எங்க இருந்து தான் தைரியம் வந்ததுன்னு தெரியல நாயாக்கரே..போறது நாயக்கருக்காக செத்தா பெருமை தான்..நீங்க நன்னாருக்கேளா” என்கிற வசனம் தான் அந்தப் படத்தில் அவர் அதிகமும் பேசுகிற ஒன்று. ‘இது போதும்..நான் யாரென்று காட்ட’ என்பது போல காட்டியிருப்பார்.

இதே டெல்லி கணேசுக்குத் தான் சலசலவென்று கமல்ஹாசனிடம் வம்பு வளர்க்கும் கதாபாத்திரம் ‘அவ்வை சண்முகி’ படத்தில். ஒரு காதில் பூவைத் தொங்கவிட்டுக் கொண்டு படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம். 

டெல்லியில் விமானத் துறையில் பணியாற்றிக்கொண்டு அங்கு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை சென்னையில் விசு அவர்களின் நாடகங்களில் சேர்த்தவர் திரு. காத்தாடி இராமமூர்த்தி அவர்கள். இவருடனும் நான் இணைத்து வேலை செய்திருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. சீரியல்களில் ‘பிராம்ப்ட்’ வாங்கிப் பேச மாட்டார்கள். அதனைத் தாழ்வாக நினைப்பவர்கள்.  வசனங்களை மனப்பாடம் செய்யும் அந்தத் திறனுக்குக் கரணம் அவர்களின் மேடை நாடக அனுபவம் தான். டெல்லி கணேசன் அடிப்படையில் மேடை நாடகக் கலைஞர். சில மேடை நாடக நடிகர்கள் சினிமாவில் ஜொலிக்காதததற்குக் காரணம் அவர்களின் அதீத நடிப்பாற்றல். நாடகத்தில் நடிக்கும்போது எதையும் அதீதமாய் வெளிப்படுத்தினால் தான் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் வரைப் போய்ச் சேரும் சினிமாவுக்குள் இது தேவையில்லை. இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொண்டவர்களே சினிமாவில் ஜெயித்திருக்கிறார்கள்.

அதே போல குரல் வளம். நடிப்பு எத்தனை முக்கியமோ, குரல்வளமும் அதே அளவு முக்கியத்துவம் கொண்டவை. அதனால் இப்போதெல்லாம் வாய்ஸ் ஆர்டிஸ்ட் என்கிறார்கள். டெல்லி கணேசன் அவர்களின் குரலின் ஏற்ற இறக்கங்கள் அத்தனை கச்சிதமானது.வட்டார மொழியை உள்வாங்கி நடிக்கக்கூடியவர். விஷ்ணுவர்த்தன். சிரஞ்சீவி போன்றவர்களின் படங்கள் தமிழில் டப் செய்யப்படும் போது அவர்களுக்காக பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.

இயக்குநர்கள் கே. பாலசந்தர், விசு, கமல்ஹாசன் போன்றவர்கள் இயக்கிய, நடித்தப் படங்களில் இவருடைய திறமை அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. நகைச்சுவை மட்டுமல்லாமல், செண்டிமெட் காட்சிகளிலும் அழ வைத்துவிடும் திறமை கொண்டவர்கள் மிக அபூர்வம். சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் அபூர்வ சகோதரர்கள், சிதம்பர ரகசியம் போன்ற படங்களைச் சொல்லலாம்.

அவரது ஒரு நேர்காணலை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஒரு இயக்குநர் தன்னிடம் சொல்கிற கதாபாத்திரத்தை அவர் உள்வாங்குகிற விதம் குறித்து பேசியிருந்தார். கதாபாத்திரம் குறித்து தெரிந்து கொண்ட பினனர் அந்தக் கதாபாத்திரம் என்னவெல்லாம் செய்யும் என்கிற சித்திரத்தை அவர் முழுமையாக உள்வாங்கிக்கொள்வதைப் பற்றி சொல்லியிருந்தார்.  இவருடிய நகைச்சுவை பாணி என்பது அந்தக் கதாபாத்திரத்துக்கே உண்டான இயல்பான ஒன்றாகவே அமைந்து வந்திருக்கிறது.  ‘அவ்வை சண்முகி’யிலும், ‘எதிரி’ படத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளலாம். ‘நாயகன்’ படத்துக்கும் ‘ராகவேந்திரா’வுக்கும் இடையில் இருக்கும் உடல்மொழி மாற்றத்தையும் நம்மால் வேறுபாடு தெரிந்து கொள்ளமுடியும்.

‘ஆஹா’ படத்திலும், ‘மைக்கேல் மதன காமராஜன்’ இரண்டிலுமே சமையல்காரர் கதாபாத்திரம். எத்தனை வேறுபாடுகள் இரண்டுக்கும். பட்பட்டென்று பேசுவதிலும், கண்டிப்புடன் இருப்பதிலும் இரண்டு படத்திலும் வேறுபாடு காட்டியிருப்பார். ஆஹா படத்தில் நான் ரசிக்கும் காட்சிகள் பல. அதில் சில, சமையலறையில் ஒவ்வொரு கதாபாபத்திரத்திடமும் பேசிக்கொண்டிருக்கும் காட்சி. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டக் காட்சி அது. “உன் உசரத்துக்கு தண்ணி போட்டா கிக் இறங்கறதுக்கே நாலு நாள் ஆகுமேடா’ என்று பேசிக்கொண்டே அங்கும் இங்கும் ஒவ்வொருவருக்கும் எதையோ சொல்லிக் கொண்டே போவார். “டைமிங்’ என்றால் அது தான். அதே போல பானுப்ரியா வீடு தேடி வந்து பெண் கேட்கிற காட்சி. இதெல்லாம் தூக்கி சாப்பிடும்படி தான் சமையல்காரர் என்று தெரிந்ததும் விஜயகுமாரிடம் அவமானப்படும்போது காட்டுகிற கோபமும் வலியும்.

தமிழ் சினிமாவில் நாகேஷுக்கு ஒரு இடம் இருந்தது. அவரால் நகைச்சுவை, செண்டிமெண்ட், வில்லன் என எந்தக் கதாபத்திரம் என்றலும் அதில் ஒன்ற முடியும். அப்படியான கதைக்களங்களை உருவாக்கும்போது நாகேஷை மனதில் வைத்தே எழுதினார்கள். அவரும் ஏமாற்றியதில்லை. டெல்லி கணேஷையும் இந்த இடத்தில் வைக்க முடியும். இதற்கு சமீபத்திய உதாரணமாக வசந்த் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘பாயாசம்’ கதையைச் சொல்லலாம். தி.ஜானகிராமன் எழுதிய சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்று இது.

அண்ணன் மகனின் வளர்ச்சியைப் பிடிக்காத ஒருவர் தன்னுடைய இறந்து போன மனைவியுடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருப்பார். தன்னுடைய மகள் கணவனை இழந்து நிற்க, தன்னுடைய அண்ணன் மகன் , அவனது மகளுக்கு விமரிசையகாத் திருமண செய்வதைத் தாங்காமல் பொறாமைக் குணத்தோடு வளைய வருவார்.  சிடுசிடுப்பையும், பொறாமையும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாமலும், உள்ளுக்குள் வைத்துக் கொள்ள இயலாமலும் சுற்றிச் சுற்றி வருகிற கதாபாத்திரம். அந்தப் பாயச அண்டாவைக் கவிழ்த்துத் தள்ளிவிட்டுவிட்டு பதறாமல் சமாளிக்கிற அந்தப் பதைபதைப்பு……டெல்லி கணேஷ் அவர்களின் அத்தனை வருட அனுபவத்தின் வெளிப்பாடு அது.

சிலர் நம்மை விட்டு நீங்கும்போது பெரும் இழப்பு என்று சொல்லப்படுவதுண்டு. டெல்லி கணேஷின் இறப்பு நிச்சயம் அப்படி சொல்லப்படக்கூடியது. மனிதர்களை அவர் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அதன் வெளிப்பாடு தான் தன்னுடைய கதாபாத்திரங்கள் வழியாக வெளிக்கொண்டு வந்தது என்கிறார் ஒரு நேர்காணலில். டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பின் நூலாம் ஒரு தலைமுறை நபர்களின் உடல்மொழியை நாம் கண்டுகொள்ள முடியும். யாருடைய நடிப்பு சாயலையும் உள்வாங்காது மனிதர்களிடமிருந்து பெற்று அதை வெளிப்படுத்தும் நடிகர்கள் மறைவது நிச்சயம் பேரிழப்பு தான்.

சில கதாபாத்திரங்கள் அவர் இல்லாததால் எழுதப்படாமல் போகும். அதுவும் தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பே.

ஓவியம் : நன்றி – பிரேம் டாவின்சி

https://www.premdavinci.in

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments