என் வாழ்க்கை.. என் பிரார்த்தனை

2
216

ரேகா ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். இதை வேறுவழியில்லாமல் பாலிவுட் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கும் இந்திய சினிமாவில் ரேகா வயது ஏறாத தேவதைதான். அவரை இன்னும் கனவுகன்னியாக நினைக்கிறார்கள். நடிக்க வந்த காலகட்டத்தில் இருந்தே அவரைப் பற்றி வந்த வதந்திகளும், பிரச்சாரங்களும் இன்னும் ஓயவில்லை. யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் பேட்டியோ, சந்திப்பையோ ஏற்படுத்தித் தராத ரேகா மற்றவர்கள் பார்வையில் புதிரான பெண்மணியாகவே இருக்கிறார். அதற்கு தன்னுடைய வாழ்க்கை தான் காரணம் என்கிறார்.

 அவர் வெவ்வேறு இதழ்களுக்கு அளித்த பேட்டியின் சிறு தொகுப்பு இது.  

(இந்தப் பேட்டி 2014 ஆம் ஆண்டு மல்லிகை மகள் இதழுக்காக மொழிபெயர்க்கப்பட்டது)

  • அப்பா ஜெமினி கணேசன் அம்மா புஷ்பலதா இடையில் என்ன மாதிரியான திருமண உறவு இருந்தது?

அது கவிதைத்துவமான உறவு. ஆனால் ஒரு உறவு எப்போதுமே அப்படியே இருந்துவிட்டால் மட்டும் தான் அது அற்புதமானதாக மாறுகிறது. என்னுடைய அப்பா நான் குழந்தையாக இருக்கும்போதே பிரிந்துவிட்டார். அவர் வீட்டில் இருந்த நாட்கள் எனக்கு நினைவில்லை. அப்பா பிரிந்த பிறகும் அம்மா எப்போதும் போல் தான் இருந்தார். அப்பாவைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். எந்தளவுக்கு அவர் மேல் பைத்தியகாரத்தனமான காதல் கொண்டிருந்தார் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். சாவித்திரி அம்மாவுடன் என் அப்பாவைத் திரையில் பார்க்கும்போது ‘வாவ், இது தான் காதலின் உதாரணம்’ என்று நினைத்திருக்கிறேன். எனக்கு மூன்று அம்மாக்கள். பாப்ஜியம்மா, என்னுடைய அம்மா, சோட்டிம்மா (திருமதி.சாவித்திரி). அம்மாவும் , சாவித்திரி சித்தியும் நெருக்கமான தோழிகள் போல் பழகுவார்கள். அம்மா தான் சோட்டிம்மாவை கவனித்துக் கொள்வார்.

பாப்ஜி அம்மா குழந்தைகளும் நாங்களும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அப்போது அவர்களைக் கொண்டு விடுவதற்காக அப்பா வருவதை இரண்டு முறை பார்த்திருக்கிறேன். ‘ஓ! என்னுடைய அப்பா’ என்று நினைத்தேன். அவர் என்னைப் பார்த்தாரா என்பது கூட தெரியாது. ஆனால பார்ப்பதற்கு அவரைப் போலவே இருந்தேன் என்று தான் சொல்வார்கள்.

  • உங்களுடன் அப்பா பேசுவதில்லை என்று வருத்தம் இருந்ததில்லையா?

நான் அப்போது பல விஷயங்களை யோசித்துக் கொண்டிருப்பேன். எல்லாமே அந்த வயதுக்கான சிந்தனைகள். “என் சகோதரி இவ்வளவு அழகாக இருக்கிறாள், நான் ஏன் இப்படி இருக்கிறேன், “, இன்னிக்கு ஹோம்வொர்க் முடிக்க வேண்டும்” இப்படியான  யோசனைகள். ஆனால் அவரைத் தள்ளி நின்று பார்த்ததே போதுமென்று இருந்தது. எப்போதுமே அவர் எனக்கு ஒரு ஹீரோ தான்.

  • ஒரே நகரத்தில் தான் வாழ்ந்திருக்கிறீர்கள். ஆனால் அப்பா உங்களை வந்து பார்க்கவில்லை என்று தோன்றியதே இல்லையா?

ஒரு தம்பதியாக அவர்களுக்குள் என்ன நடந்தது, என்ன பிரச்சனைகள், ஏன் பிரிந்தார்கள் இதெல்லாம் எனக்குத் தெரியாது. முதிரிச்சியடைந்த ஒரு ஆணும், பெண்ணுமாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். ஒரு சின்னப் பெண்ணாக நான் என்ன சொல்லியிருக்க முடியும்? எனக்கு ‘பாதர்’ என்ற வார்த்தைக்கே ரொம்ப நாள் அர்த்தம் தெரியாது. ‘ஃபாதர்’ என்றாலே சர்ச்சில் இருக்கும் பாதிரியார் தான் ஞாபகத்துக்கு வருவார்.

  • பாட்டி, அத்தை, அம்மா என பெண்களால் வளர்க்கப்பட்டவர் நீங்கள். ஆளுமை செலுத்திய முதல் ஆண் யார்?

கடவுள் தான். எனக்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் என்னைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. நான் தான் அவர்களை கவனித்துக் கொண்டேன். சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதானது. அது உணர்வுப்பூர்வமாக எடுத்த முடிவு அல்ல . பொருளாதாரத் தேவைக்காக எடுக்கப்பட்ட முடிவு. இப்போது வரை என்னுடைய கூச்ச சுபாவம் முற்றிலும் போகவில்லை. பல வருடங்கள் என்னால் சகஜமாக ஆண்களுடன் பேச முடியாது. பயமாகவே இருக்கும்.

  • அப்போது ரேகாவின் கனவு என்னவாக இருந்தது…?

ஒரே ஒரு படம் தான் என்ற தீர்மானத்தோடு தான் பதிமூன்று வயதில் நடிக்க வந்தேன்.. எனக்கு திருமணம் செய்துகொள்ளவேண்டும், அதுவும் என்னை மிக மிக நன்றாக, அன்பாக பார்த்துக் கொள்கிற கணவன் கிடைக்க வேண்டும். நிறைய குழநதைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அது தான் அப்போதைய ரேகாவின் கனவு. பிறகு திரும்பிப் பார்க்க நேரம் இல்லாதபடி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

  • நடிகையாக விருப்பம் இல்லாமல் இருந்தீர்கள். ஆனால் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி உங்களைத் தயார்படுத்தி கொண்டீர்கள். எப்படி இந்த மாற்றம்?

நிறைய பேர் என்னை அவர்கள் படத்தில் நடிக்க வைக்க நினைத்தார்கள். என்னுடைய தொழிலுக்கு ஓரளவேனும் நியாயம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். இரண்டரை வருட காலம் உடலை செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். ஆனால் அப்போது நாங்கள் எல்லாவற்றையும் தவறாகவே செய்தோம். இன்றைக்கு எனக்கு இருக்கற உணவு குறித்த அக்கறையும், அறிவும் அப்போது இல்லை. அப்போதெல்லாம் உடலைக் குறைக்க தேர்ந்தெடுத்தத் ஒரே வழி பட்டினி கிடப்பது தான. மாதகணக்காக பால் மட்டும் தான் சாப்பிடுவேன். அப்படி உணவை மறுப்பது தவறு என்று இப்போது தெரிகிறது. பல வருடங்களுக்கு நான் நடிப்பை வெறும் தொழிலாகத் தான் பார்த்தேன். எனக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிட்டதை மிக மெதுவாகத் தான் உணர்ந்தேன்.

  • பானு ரேகாவாக இருந்த காலத்திலிருந்து பாலிவுட்டின் தேவதை ரேகாவாககொண்டாடப்படும் இப்போது வரை உள்ள உங்கள் பயணம் என்னக் கற்றுத் தந்திருக்கிறது?

நாம் வளர வளர அனுபவங்கள் கிடைக்கிற போது நிறைய மாற்றங்கள் வரும். பதிமூன்று வயதில் நடிகையாக ஒன்றும் தெரியாமல் இருந்த போது பலரும் என்னுடைய அப்பாவித்தனத்தைப் பயன்படுத்த நினைத்தார்கள். அம்மாவின் உடல்நிலை அப்போது மோசமாக இருந்ததால் உறவுக்காரப் பெண்ணுடன் தான் படப்பிடிப்புக்கு போவேன். தெரியாத மொழி வேறு. பஞ்சாபியில் என்னைப் பற்றி சுற்றியுள்ளவர்கள் பேசுவார்கள். பின்னாட்களில் தான் என் காதுபடவே என்ன பேசியிருக்கிறார்கள் என்பதற்கான அர்த்தம் தெரிந்தது. நல்லவேளை அப்போது அறியாமல் இருந்தது எவ்வளவு நல்லது என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் கடந்து வந்த பாதையில் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். என்னுடைய  உடலின் ஒவ்வொரு செல்லிலும் நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே இருக்கின்றன. பழைய கசப்புகளை அப்படியே தூக்கிப் போட்டு விடுவேன்.

  • எப்படி முடிந்தது உங்களால்?

நான் எதையும் கூர்மையாக கவனிப்பேன். யாரிடம் என்ன நல்ல விஷயம் இருந்தாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொள்வேன். அதை என்னுடைய ஒரு பகுதியாகவே மாற்றிக் கொள்வேன். என்னை நானே பலமுறை செதுக்கிக் கொள்கிறேன்.

  • 90ல் உங்களுக்கும் முகேஷ் அகர்வாலுக்கும் திருமணம் நடந்தது. உங்கள் வாழ்க்கையை பல விதங்களில் மாற்றி அமைத்தது இல்லையா?

முகேஷுக்கும் எனக்கும் திருமணத்தின் போது தான் அறிமுகம். அந்தத் திருமணம் என்கிற சம்பவத்தில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அந்த சமயம் தான் நான் ஒரு பெண்ணாக என்னை உணர்ந்து கொண்டிருந்தேன். என் உண்மையான நண்பர்கள் யார், அக்கறை கொண்டவர்கள் யார் என தெரிந்து கொண்ட நேரம் அது. அந்த நேரத்து வலிகள், கசப்புகள் எல்லாமே எனக்குள் எங்கோ மறைந்து போய்விட்டன.

  • திருமணமான சில மாதங்களிலேயே அவருடைய தற்கொலை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

இது எனக்கு நடந்திருக்க வேண்டாம் எனத் தோன்றியது.  நமக்கு ஏன் இப்படி என்று தன்னிரக்கத்தில் பல நாட்கள் தவித்திருக்கிறேன். பிறகு எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் நான் மௌனமாகிவிட்டேன். யாரிடம் எதுவும் பேசுவதில்லை. மேலே இருந்து ஒருவன் ஆட்டுவிக்கிறான்.

  • எப்படி இதிலிருந்து மீண்டு வர முடிந்தது?

நாம் எல்லோரும் மனிதப் பிறவிகள். தோற்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் உண்டு. ஆனால் அப்போதும் நமக்கு முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருக்கும். நாம் அதில் நேர்மறையான அணுகுமுறையை மட்டுமே பார்க்க வேண்டும். மரணம், பிரிவு, வெறுமை, சோர்வு, ஏமாற்றம், துரோகம், வெறுப்பு இவை எல்லோருடைய வாழ்க்கையிலுமே இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையை இவை பாதிக்கும் போது நீங்கள் மட்டும் தான் அதை சரிசெய்து கொள்ள முடியும். யார் சொன்னார்கள் வாழ்க்கை எளிது என்று? வாழ்க்கை எல்லாவற்றையும் சுலபமாக கொடுத்துவிடாது. எனக்கு வாழ்க்கை அப்படித் தான் பயிற்சி தந்திருக்கிறது. தன்னிரக்கத்தைத் தவிர உங்கள் ஆத்மாவைத் தொட்டு நெகிழ வைக்கிற எதுவாக இருந்தாலும் அதற்கு நன்றியோடு இருங்கள்.

  • ரேகா போதை மருந்து எடுத்துக் கொண்டார், குடிபழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார் என்றெல்லாம் பரப்பப்படும்போது கூட அமைதியாக இருந்தீர்கள்

ஆமாம். அடிமையாகத் தான் இருந்தேன். குடிக்கும், போதைக்குள் அல்ல வாழ்க்கையின் மேல் இருந்த அன்பில் அடிமையாக இருந்தேன்.

  • உங்களுக்கென்று குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

சில நேரங்களில் மட்டும். என்னுடைய நெருங்கிய தோழிகள் எல்லோருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது தோன்றும்.

  • ஏன் எப்போதும் தனிமையிலே இருக்கிறீர்கள்?

நான் ரொம்ப சுதந்திரமாக இருக்கிறேன். யாரைப் பார்க்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எங்கு போகலாம், யாரை வீட்டுக்கு அழைக்கலாம் என எல்லாவற்றையும் நானே தீர்மானிக்கிறேன். என்னை விட அதிர்ஷ்டசாலி இருக்க முடியாது. எனக்கு நெருங்கிய தோழிகள் இருக்கிறார்கள். ஒரே ஒரு தோழி வாழ்க்கை முழுவதும் உங்களுடன் இருந்தால் நீங்கள் பெரும் அதிர்ஷ்டசாலி. நான் தனியாக ஒரு வீட்டில் இருக்க வேண்டும் என திட்டமிடவில்லை. அது தானாகவே நடந்தது. என் வாழ்க்கைத் திரைக்கதையில்ல் இடைவெளி வரை என்னுடைன் இருந்த  தங்கைக்குத் திருமணமானது. அடுத்த பாதியில் எனது இன்னொரு சகோதரிக்கும் திருமணம்..அவர்கள் அவர்களுடைய குடும்பத்தை கவனிக்கப் போய்விட்டார்கள். பிறகு..?

நான் தனிமையை நேசிக்கிறேன். தினமும் என் வீட்டு தோட்டத்தில் உட்கார்ந்து சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும், பறவைகளும், மீன்கொத்திகளும் வந்துபோவதைப் பார்க்கிறேன். இந்த வீடு எனக்கான சரணாலயம். நான் யாரையும் அழைப்பதில்லை. எனது நெருங்கிய நட்புகள் கூட என் வீட்டிற்கு வந்ததில்லை. என்னை நானே கவனித்துக்கொள்கிறேன். இது எனக்காக நான் எடுத்துக் கொண்ட பொறுப்பு. நான் தவறு செய்தால் அது என் தவறாக மட்டுமே இருக்கும். யாரும் பொறுப்பேற்க முடியாது.

என்னுடைய மிகப்பெரிய சந்தோசம் என்பது எனக்கான வேலைகளை நானே செய்து கொள்வதில் இருக்கிறது. நான் எனக்காக பாயாசம் செய்கிறேன். சாப்பிடுகிறேன். சாப்பிட்ட பாத்திரத்தை நானே சுத்தம் செய்கிறேன். செடிகளுக்கு தண்ணீர் விடுவதும், வீட்டுப்பொருட்களை துடைத்து வைப்பதும் நான் சந்தோஷமாக செய்கிற காரியங்கள்.

நான் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் கடவுள் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என நினைத்திருக்கிறேன். பெண் பலவீனமனாவள் என்பதாலேயே பூஜை செய்வதிலும், ஊதுபத்தி , தீபம் ஏற்றியும் வழிபாடு செய்வதில்லை. பெண்ணுக்குத் தான் எதையும் தாங்கும் , எதிர்கொள்ளும் சக்தி இருக்கிறது. அதற்காக பெண் எப்போதும் பெருமைக் கொள்வதில்லை. நன்றியுடையவளாகவே இருக்கிறாள்.

கடவுளிடம் நான் மானசீகமாக உரையாடுகிறேன். பிரார்த்திக்கிறேன். தியானம் செய்யும்போது கிடைக்கிற சக்தி என்னைச் சுற்றி பரவுவதாக நம்புகிறேன்., என் வாழ்க்கையே ஒரு பிரார்த்தனை போலவும், அதற்கு கடவுள் ஆசிர்வதித்தது போலவும் தான் இருக்கிறது.

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Balaji
Balaji
1 year ago

Life is so Beautiful 💐