பாகன்

0
372

 “தென் தமிழ்நாட்டில் பெண்ணுடன் சிநேகம் கொள்வது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஆண் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அங்கே சூழ்நிலை முக்கியமே இல்லை. அச்சம் நாணம் மடமை, பயிர்ப்பு இடத்திற்கு இடம் மாறுபாடு அடையக்கூடிய விஷயம் அல்ல. பெண்ணின் இந்தக் கல்யாண குணங்கள் எல்லாம் ஆண் மீது கொண்ட பயத்தின் வெளிப்பாடுகள்”.

இது நாவலில் இருந்து தரப்பட்ட வரிகள். வாசித்தவுடன் இதை எழுதிய எழுத்தாளர் யாரென்று தொடர்ந்து வாசிப்பில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிடும். எழுத்தின் பாணியை தன்னுடைய உள்ளங்கை ரேகை போல வைத்திருக்கும் பாலகுமாரன் எழுதியதே இது. எழுத்தென்பது சிலருக்கு ஆர்வம் என்றால், பாலகுமாரன் அவர்களுக்கு அதுவே தொழில், ஜீவன், ஜீவனம்.

அவர் எழுத்து அவரை மாற்றியது போலவே வாசகர்களையும் மாற்றியது என்பது தான் சொல்லப்பட வேண்டியது. இந்த புதிய தொடரில் ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளர் குறித்து எழுதலாம் என்ற எண்ணம் வந்தபோது பாலகுமாரன் குறித்து முதல் அத்தியாயம் எழுத வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. காரணம் பள்ளிக்கூட காலகட்டங்களில் அவர் பெயரை கேட்காத நாளில்லை. ஒரு எழுத்தாளரைக் குறித்து மணிக்கணக்காக அண்ணனும், அக்காவும், அண்ணனினின் சிநேகிதர்களும் எங்கள் வீட்டில் அமர்ந்து பேசியிருக்கிறார்கள் என்றால் அது பாலகுமாரன் குறித்து தான். அவருடைய புத்தகங்களில் அப்படி என்ன தான் இருக்கிறது என வாசிக்கத் தொடங்கும்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை அல்லது புரிந்தார் போல இருந்தது. அதன்பிறகு கல்லூரி காலங்களில் தான் மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன்.

ஒரு தலைமுறை முழுவதையும் தன்வசப்படுத்தியிருந்த எழுத்தாளர் என்று இவரைச் சொல்லலாம். இவர் எழுத்தை மறுப்பவர்கள், உடன்படுபவர்கள், இவர் எழுத்தின் மீதேறி நின்று மற்றவர்களை வாசிக்க தொடங்கியவர்கள் என்று கணிசமானவர்கள் இவரைத் தொட்டே சென்று கொண்டிருந்தனர்.

எனது அண்ணனின் நண்பர் நான்காம் வகுப்பு படிக்கும்போது தன்னுடைய அப்பாவை இழந்தார். அவருக்கு ஒரு அக்கா,  தங்கை, ஒரு தம்பி . பனிரெண்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அதன்பின் கல்லூரியில் சேரவில்லை. ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் கம்ப்யூடர் கற்றுக்கொண்டே அங்கேயே வேலை பார்த்தார். சைக்கிளில் ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர் பயணம் செய்வார். என்னென்ன வேலைகள் செய்தார் என்ற கணக்கே இல்லை. அவருடைய அக்காவுக்கு திருமணம் செய்து வைத்தார். தம்பி தங்கைகளை படிக்க வைத்து இன்று இருவருமே நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். திருமணமும் முடிந்துவிட்டது. சென்னையில் சொந்த வீடு வாங்கிவிட்டார். ஒரு வங்கியில் மேலாளராக பணி செய்கிறார். இவருடைய இந்த வளர்ச்சிக்கு காரணமாக அவர் பாலகுமாரனை அடிக்கடி சொல்லுவார். இத்தனைக்கும் அவர் பாலகுமாரனை நேரடியாக சந்தித்ததில்லை. தொலைபேசியில் கூட பேசியதில்லை. இவரின்  எழுத்துகள் எனது நண்பரின் அண்ணனுக்கு ஊன்றுகோல் போல இருந்திருக்கிறது.

பாலகுமாரனின் கதைகளில் ஒரு தன்மை உண்டு. அவர் அறமென நினைப்பது தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருத்தல் என்பதை. ‘ஊரு உலகம் என்ன சொன்னா என்ன? உனக்கு நீ தான் ராஜா..நல்லா வேலை செய்..மாடு மாதிரி உழைச்சு குடும்பத்தைக் காப்பாத்து..நல்லா சாப்பிடு..படுத்தா தூங்கிரு”  இதனை அவருடைய கதாபாத்திரங்கள் வெவ்வேறு விதங்களில் சொல்வார்கள். ஒருவனுக்கு இது போதுமா? இப்படி இருந்தால் அவனுடைய வாழ்க்கை நிறைவேறுமா என்ற கேள்விக்கும் அவரிடத்தில் பதில் உண்டு. ஒருத்தன் உழைக்கிறான்னா..அவன் மனசுல வேறெந்த எண்ணமும் இருக்காதுன்னு அர்த்தம். நல்லா சாப்பிடறான்னா..உடம்புல வியாதி இல்லன்னு புரிஞ்சுக்கலாம். படுத்ததும் தூங்கிடறான்னா, அவனுக்குள்ள எந்தக் குற்றவாளியும் கிடையாதுன்னு பொருள். ஒரு மனுஷன் வாழறதுக்கு இதை விட வேற என்ன வேணும்?

இப்படி பெரிய விஷயங்களை அவருக்கு எளிமையாக விளக்கத் தெரிந்திருந்தது.

என்னுடைய தோழிக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயமாகியிருந்தது. பிப்ரவரியில் திருமணம். அவள் பாலகுமாரனின் வாசகி. நாங்கள் தோழிகள் நான்கு பேர் ஒரே வீட்டில் சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். ஒருநாள் காலை அவள் என்னிடம் பாலகுமாரனின் நாவல் ஒன்றின் ஒரு பக்கத்தினை வாசித்துக் காட்டினாள். அது கோயிலுக்கு செல்லுவது குறித்து சொன்னது. ‘நாமளும் வெளியூர் கோயிலுக்கு எங்கயாவது போகலாமா?’ என்றாள். திருமணமானதும் இப்படிக் கிளம்பிப்போகும் சாத்தியம் இல்லை என்பதை அவள் முன்னரே கணித்திருந்தாள். நாங்கள் இருவரும் ஜனவரி மாதம் கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் கோயில்களுக்கு செல்லத் திட்டமிட்டு சென்றோம். மூன்று நாட்கள் பயணம். அந்த நாவலில் வரும் நாயகன் சாகேதராமனாக தன்னை உணர்ந்ததை அவள் ஒவ்வொரு கோயிலிலும் சொல்லிக் கொண்டே இருந்தாள். இப்போதும் அவள் பொது நூலகத்தில் இருந்து பாலகுமாரன் புத்தகங்களை வாங்கி வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள். அவளிடம் நான் பார்த்த ஒன்று,   நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதும், அந்த வேலையை குடும்பச் சூழல் காரணமாக விட்டபோதும் எந்தக் குறையுமில்லாமல் இருந்தாள். அதற்கு காரணமாகவும் இருந்திருக்கிறார் பாலகுமாரன். எந்த நிலையையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டதாக் சொன்னாள்.

இது குறித்து அவளுக்கும் எனக்கும் விவாதம் ஏற்பட்டதுண்டு. பாலகுமாரனைப் பிடிக்கும் என்பதற்காக உன்னுடைய ஆழ்மன ஆசைகளை நிராகரிக்கிறாய். இதற்கு அவர் எழுத்தைத் துணையாகக் கொள்கிறாய் என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவள் தன பிடியை விட்டுக் கொடுத்ததேயில்லை. எனக்கு எப்படியிருந்தாலும் அதில் நிறைவு தான் என்று சொல்லிவிடுவாள். ஒருவேளை அதை அவள் நம்புகிறாள் என்றால், அதை மாற்றுவதற்கு நாம் யார் என்று அவள் வேலைக்குப் போவதைக் குறித்து பேசுவதையே விட்டிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளரால் சிந்திக்க வைக்க முடியும். சில எழுத்தாளரால் தனது எழுத்தையே போதையாக்க முடியும். பாலகுமாரனின் எழுத்துகள் இரண்டாம் வகை. அவருடைய தீவிர வாசகர்கள் பாலகுமாரனின் சாயல் போலவே மாறிவருவதை பலரிடம் கண்டிருக்கிறேன். பெண்களை அவர்கள் எதிர்கொள்வதிலும், ஆன்மீக நாட்டங்களிலும் தங்கள் தொழில் மீது கொண்ட அக்கறையிலும் அவர்கள் பாலகுமாரனின் கதாபாத்திரங்களாகவே உலா வருபவர்கள். இந்த வெகுமதி வேறெந்த எழுத்தாளரின் வாசகர்களிலும் நான் கண்டதில்லை.

ஒன்றைத் தொட்டால் அதன் நுணுக்கம் வரை சென்று எழுதிவிடும் வழக்கம் அவருக்கே உண்டானது. ‘நெல்லுச்சோறு’ என்கிற ஒரு நாவல், மல்லாட்டை விவசாயத்தையும், மண்டிகள் குறித்தும் எழுதியிருப்பார். இரும்புக் குதிரை நாவலில்  வாகனங்களின் உதிரி பாகங்கள் சந்தை குறித்த அத்தனை தகவல்களை நாம் வாசிக்க முடியும். மற்றுமொரு நாவலில் துறைமுகத்தில் சரக்கு ஏற்றி இறக்கும் வழக்கங்கள் குறித்து விவரித்திருப்பார். திரைப்படத் துறை குறித்தும் நாவல் எழுதியிருக்கிறார்.

பாலகுமாரன் எழுத்துகளை வாசிக்கையில் அவர் எது சார்ந்து எழுதுகிறாரோ அதற்காக உழைத்திருப்பது புரியும். இவருக்கு சோழ தேசத்தின் மீது கொண்ட அன்பை சரித்திர நாவல்களில் புரிந்து கொள்ள முடியும். ‘உடையார்’ நாவலின் அத்தனை பாகங்களிலும் அவர் எழுதியிருக்கும் விதம், இராட்சசத்தனமானது. பெருவுடையார் கோயில் கட்டப்பட்டதன் காரணம் என்ன, மகாமேரு போல கோபுரம் கட்ட வேண்டுமென்கிற எண்ணம் எங்கிருந்து ராஜ ராஜ சோழனுக்கு ஏற்பட்டது, ஒரு கோயிலினால் ஒரு ஊர் எப்படி உருவாகும், ஒரு கட்டடம் வளரும்போதே பின்னணியில் ஊடாடுகிற அரசியல் எப்படிப்பட்டதாக இருக்கும், இந்தக் கோயிலுக்கான பெண்களின் பங்களிப்பு என்னவாக இருந்திருக்கும்  என முழு சித்திரத்தினை அவர் காட்டி விடுகிறார். அதன் மிச்சம் மீதியெல்லாம் தான் ‘யானைப்பாலம்’, ‘சொர்க்கம் நடுவிலே’ போன்ற நாவல்களில் நமக்குக் கிடைக்கின்றன. “சாவா மூவாப் பேராடுகள்” என்கிற ஒற்றை வரி கல்வெட்டு செய்தியைக் கொண்டு தஞ்சை கோயில் கட்டப்பட்டபோது எங்கிருந்தெல்லாம் ஆடுகள் இறக்குமதி ஆகியிருக்கும் என்பதைப பற்றி எழுதியிருப்பார். சோழ தேசத்து மக்களுக்கு கிடா ஆடு என்றால்  மிகுந்த இஷ்டமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அப்படித் தான இருந்திருக்க வேண்டும் என்பதை யானைப்பாலம் நாவலில் சோழர்கள் கீழை சாளுக்கியத்துக்கு படை எடுத்துப் போகையில் அங்கிருக்கும் கிடா ஆடுகளை பிடித்துக் கொண்டு வரவேண்டுமென வீரர்கள் நினைத்ததாய் எழுதியிருப்பார். ஒரு வரலாற்றுக் குறிப்பை புனைவாக மாற்றுவதற்கு தனித்திறன் வேண்டும். ராஜராஜனை கோயில் கட்டத் தூண்டியது எதுவாக இருக்கும் என்கிற வினாவை எழுப்பிக் கொள்கிறார்.  இலங்கையின் மீதான போரா? அறச்செயலா? ஈசன் மீது கொண்ட பக்தியா? எல்லோரையும் ஈடுபடுத்தும் ஒரு பெரும் பணியை முடுக்கிவிடுவதா என்கிற கேள்விக்கு நாவலில் அவரே ஒரு பதிலையும் தருகிறார். அந்தப் பதிலை அவர் தஞ்சைக் கோயிலில் இருந்தே பெறுகிறார். பெரிய புராணக் கதைகளில் வரும் அடியவர்களை கோயிலின் சிற்பங்களில் செதுக்கியதில் இருந்து தானும் அப்படியான அடியவராக வேண்டும் என்கிற எண்ணமே ராஜராஜனை திருப்பணி செய்யத் தூண்டியிருக்க வேண்டும் என்றும் ஒரு பார்வையைக் கொண்டு வருகிறார்.

ஒரு எழுத்தாளர் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை கூர்மையாகக் கவனிக்க வேண்டும். அது குறித்து தேவைப்படும் சமயங்களில் தனது கருத்தை முன் வைக்க வேண்டும். “திருமணமான என் தோழிக்கு” என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். நான்கு திருமணமான பெண்கள் குறித்த கதைகள். “ஏன் திருமணமான ஆண்களுக்கு என்று இல்லாமல் பெண்களுக்கு என்று குறிப்பிட்டு எழுதுகிறேன்?” என்று தொடங்கி அறிமுகப்பகுதியில் இன்றைய பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் கொண்ட தயக்கங்களையும், திருமணம் அவளுடைய இலட்சிங்களுக்கு தடையாகி விடுமா என்பதையும் பேசியிருக்கிறார். அவருடைய கருத்தில் நமக்கு உடன்பாடும் எதிர்ப்பும் இருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறையின் தீவிரமான ஒரு சிக்கலைக் குறித்தும் பேசியிருக்கிறார் என்பது தான் அவசியமானது.  எப்போதுமே ஒரு விவாதத்தைத் துவக்கி விடக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் தனது எழுத்தில் கொண்டு வந்துவிடுபவர் பாலகுமாரன்.

பாலகுமாரன் குறித்து எழுதும்போது அவர் திரையுலகுக்கு செய்த பங்களிப்பை மறுத்துவிட்டு முடிக்கவியலாது. எழுத்தாளர் என்பவரும், வசனகர்த்தாவும் வேறு வேறு. இருவருக்கும் தொழில் எழுத்து தான் என்றாலும் இரண்டின்  செய்நேர்த்தியும் வெவ்வேறு. எழுதத் தெரிந்த எல்லோராலும் திரைக்கதையும் வசனமும் எழுதிவிட முடியாது. அது ஒரு தனிக் கைவினை. தமிழ் சினிமாவில் இரண்டிலும் உயரம் சென்றவர் என பாலகுமாரனை சொல்ல முடியும். மொத்தக் காட்சியின் சுவாரஸ்யத்தையும், அர்த்தத்தையும் ஒரே வரியில் கூர்மைப்படுத்தத் தெரிந்தவர். இவர் எழுதுகிற வசனங்களில் ஆழமும், செறிவும், கூர்மையும் இருப்பதைப் பார்க்கலாம்.

இவருடைய நாவல்களில் வருகிற நாயகர்கள் வலி தாங்குபவர்கள், பல பிரச்சனைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வலி தாங்குபவர்கள். இதனை ஒரு வடிவமாகவே தன நாவல்களில் பயன்படுத்தி வருவார். இதனை திரைப்பட வசனமாக பயன்படுத்தும்போது  வலிச்சா ஜெயிக்கறல்ல..வலி தாங்கிப் பழகு என்று பளிச்சென்று சொல்லிவிடுவார். திரைப்பட வசனமாக வரும்போது நீட்டிமுழக்காமல் தெறிக்கவிடுவது போல சொல்ல அவருக்குத் தெரியும்.

அபிராமி அந்தாதி நூறு பாட்டு கத்துகிட்டேல்ல..அபிராமிக்கு லெட்டர் எழுதனுங்கற..ஏன் எழுதக் கத்துக்கக்கூடாது

அபிராமி உள்ள இருக்கு..எழுத்தெல்லாம் வெளில இருக்கு

இதில் அபிராமி உள்ள இருக்கா என்பதாக இல்லாமல் உள்ள இருக்கு…என்பது திட்டமிட்டு எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன்.

குணா படத்தினை ஒவ்வொரு முறையும் பார்க்கையில் பாலகுமாரனின் மேல் மதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு வசனம் எழுதுவதே ஒரு கஷ்டம். புத்திசாலித்தனமான, பிடிவாதமான மனநல பாதிப்பு உள்ள ஒருவருக்கு எழுதுவதென்பது கயிற்றுக்கு மேல் நடப்பதற்கு சமமானது. கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் கதாபாத்திரத்தின் மீதான நம்பகத்தன்மை போய்விடும்.

கண்மணி அன்போட காதலன்…நாக்கு தடிச்சு போச்சா?”

என்று தொடர்பில்லாமல் அதே நேரம் தொடர்போடும் பேச வேண்டும்.

“இது தீப்பெட்டி..கீழே போட்டா கீழே விழும்..நீயும் அப்படித் தான் சாதாரண மனுஷன்..உன்னால மேலே பறக்கவே முடியாது

என்றதும் குணா அங்கிருக்கும் பஞ்சினை எடுத்துப் பறக்கவிடுவார். அது மேலே பறக்கும். நான் பஞ்சு போல என்று என்று பக்கம்பக்கமாகப் பேசியிருந்தால் அந்தக் காட்சி இப்போது வரை நினைவில் நின்றிருக்காது. பஞ்சு போல என்பதைக் காட்டி விடுவார் குணா. இது பாலகுமாரனின் அற்புதமான யுத்தி.

இன்று வரை குணா படமும், பாட்ஷாவும் நம் மனதில் வசனமாகவும் நிலைபெற்றிருக்கிறது. “ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்பதும், “சத்ரியனா இருக்கறதவிட சாணக்கியனா இரு” என்கிற ஜென்டில்மேன் வசனமும் கதைக்கு பொருந்துபவை.

உறவுச்சிக்கல்கள், ஆண் பெண் உறவு, ஆன்மீக சிந்தனைகள், யோகிகளின் தன் வரலாறு, பெரிய புராணக் கதைகள் என இவர் தொட்ட களங்கள் பெரியவை. இதன் மூலம் பலருக்கும் குருவாக இருந்திருக்கிறார். ஆயிரம் விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்படுகின்றன. ஆனாலும் இவர் எழுத்தின் மீது இன்னும் அவருடைய வாசகர்கள் கொண்ட பிடிப்பென்பது பாலகுமாரன் தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு எழுதியிருக்கிறார் என்பதாகவே இருக்கிறது.

பாலகுமாரன் எழுத்துகளை எப்போது வாசித்தாலும் அவர் மூடி மறைக்காமல் எல்லோருக்கும் எதையோ சொல்லியிருக்கிறார் என்றே தோன்றும். இந்த ஒளிவு மறைவற்றத் தன்மையே இன்றளவும் அவருக்கு வாசகர்களை சேர்த்துக் கொண்டே போகிறது.

எல்லாவிதமான வெற்றிக்குமான சூத்திரமாக அவர் சொன்னதை சொல்லி நிறைவு செய்வது பொருத்தமாக அமையும்.

வெற்றி பெற வேண்டுமா, அறிந்து கொள்ள ஆசைப்படுங்கள்!!

(மல்லிகை மகள் இதழில் ‘எழுத்து வாசம்’ தொடருக்காக எழுதியது)

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Thendral
Thendral
1 year ago

பள்ளிக்காலத்தில் படித்த பாலகுமாரன் எழுத்துகளை அது ஏற்படுத்திய தார்மீக சிந்தனைகளை கண்முன் நிறுத்துகிறது இந்த கட்டுரை.மகிழ்வும் நன்றியும்!

Alamelu Mangai DS
Alamelu Mangai DS
1 year ago

இதற்கு மேல் ஏதும் சொல்ல முடியாது.. அத்தனை முழுமையான பார்வை.. பாலகுமாரன் இன்னும் மரணிக்கவில்லை, தன் வாசகர்கள் மனதில் ஜீவித்துக் கொண்டு தான் இருக்கிறார். இது தான் அமரஜீவிதம் என்பதா?
முதல் அத்யாயமே மிக அருமையான, ஆழமான அத்யாயமாக அமைந்துவிட்டது.
நன்றி தீபா அவர்களே!

Kavignar ara
Kavignar ara
1 year ago

உடையார் மிக செம்மையாக எழுதினார் // இரும்பு குதிரை கள் இன்ன பிற எல்லாம் இனிமை இனிய கதைகள் ஆன்மீக ஈடுபாடு விசிறி சாமியாரிடம் இனிய அமரர்
கவிஞர் ஆரா

Aoundar
Aoundar
1 year ago

பாலா சார் பற்றி எவ்வளவு எழுதினாலும், இன்னும் பலர் வந்து தங்கள் வாழ்வை அவர் திருப்பிப்போட்ட ஒரு சம்பவத்தை சொல்வார்கள். அவருடைய கடைசி 3வருடங்கள் கிட்டத்தட்ட வாராவாரம் சென்னையில் உடன் சென்று இருக்கிறேன். வங்கியில் நல்ல பதவியில் இருந்த என்னை, வேலையை விடு, யோக ஆசிரியராக வாழ்வை தொடங்கு என தீர்க்கமாக சொன்னவர் அவர் தான். ஒரு எழுத்தாளர் இவ்வளவு தீர்மானமாக அடுத்தவர் வாழ்வில் முடிவெசுக்கலாமா? தெரியவில்லை. ஆனால் பாலா சார், அதை செய்தார். இன்று ஒவ்வொரு புது வகுப்பிலும் எப்படியோ அவரை நன்றியுடன் குறிப்பிட்டு விடுவேன்.

ஆம் பாலாசார், நீங்க சொன்ன மாதிரி, நான் ஒரு நல்ல யோகா டீச்சராயிட்டேன். எப்போதும் போல உடனிருங்கள்.