என் கதை.. நம் கதை

உயிரோட்டமான காட்சிகள், தேர்ந்த திருப்பங்கள் போன்றவை திரைக்கதை எழுதுவதற்கான அம்சங்களில் சில என்றால் இயக்குனர் சாரா பாலியின் வாழ்க்கை இதற்குள் கச்சிதமாகப் பொருந்தும். இதனைப் பலரும் சாராவிடம் சொல்லியிருக்கின்றனர். தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் ஆர்வம் இல்லாவிட்டாலும் அதன் ஒரு பகுதியை ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். அந்த ஆவணப்படத்தின் மையம், சாராவின் அம்மாவைச் சுற்றியே சுழல்கிறது.

சாரா பாலி கனடாவிலும், ஹாலிவுட்டிலும் பிரபலமான நடிகை. சிறந்த நடிப்பிற்கான விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். புகழ்பெற்ற இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் சாராவின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் சாரா தன்னை ஒரு நடிகையாக மட்டும் நினைத்துவிடவில்லை. எப்போதுமே தனக்குள் விழித்துக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது தான் சிறு வயதிலிருந்தே சாராவின் விருப்பமாக இருந்தது. ஒரு எழுத்தாளராக நிரூபிக்க வேண்டும் என்று சாரா நினைத்தபோதெல்லாம் அதற்கான சூழல் அவருக்கு அமையவில்லை. ஏனென்றால் சாரா நடிக்கத் தொடங்கும்போது அவருக்கு வயது நான்கு.

சாராவின் அம்மா டயான் ஒரு நடிகை. அப்பா மிக்கேல் பாலியும், அண்ணனும் திரைப்படத்திற்கான நடிகை, நடிகர்களைத் தேர்வு செய்யும் ‘காஸ்டிங்’ இயக்குனர்களாக இருந்தனர். அதனால் திரைப்படத்துறை என்பது சாராவுக்கு ஒரு விளையாட்டு உலகத்திற்குள் நுழைந்த ஒரு உணர்வையே தந்தது.

கனடாவில் எங்குப் போனாலும் சிறுமி சாராவை மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். அந்த வயதில் சாரா நடித்து சம்பாதித்த தொகை ஒரு குடும்பம் செழிக்க போதுமானதாயிருந்தது. பதினோரு வயது வரை சாராவுக்கு எல்லாமே இயல்பாக போய்க்கொண்டிருந்தது. சாராவுக்கு பதினோராவது பிறந்தநாள் கழிந்து இரண்டு நாட்கள் ஆனபோது அவருடைய அம்மாவின் மரணமடைந்தார்.

மிக நீண்ட நாட்கள் புற்றுநோயினால் படுக்கையிலேயே நாட்களை செலவழித்திருந்த அம்மாவின் இழப்பு என்பது சாராவுக்குள் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியது. அம்மாவின் மரணம் ஒருவகையில் விடுதலையுணர்வினை தந்ததாக நினைவு கூர்கிறார் சாரா. ஏனெனில் நோய்த்தாக்கத்தால் அம்மா படும் வேதனைகளை எதிர்கொள்ளும் தைரியம் சாராவுக்கு இல்லாமல் இருந்தது.

இதோடு சாராவின் உடல்நிலையும் அப்போது சீராக இல்லை. பல நாட்கள் படுக்கையிலேயே கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுவந்தவர், ‘நடிப்பு என்பது கடந்து நாம் படைப்புரீதியாக சிந்திக்கவும் செய்ய வேண்டும்’ என்று யோசிக்கத் துவங்கினார். எழுதவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் அது அவருக்கு சுலபமாக அமையவில்லை. மிகுந்த மனநெருக்கடி ஏற்பட்டதால் தன் கவனத்தைத் திசைத் திருப்ப அப்பாவின் உதவியோடு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து சாராவுக்கு மற்றொரு திகைப்பான செய்தி கிடைத்தது. அதுவரை தன்னுடைய அப்பாவாக நினைத்திருந்த மிக்கேல் தனது வளர்ப்புத் தந்தை என்று தெரியவந்தது. அம்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது குறித்து தெரிய வரும்போது தன அம்மாவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நடிப்பிற்கும், படம் இயக்குதலுக்கும் ஐந்து வருட காலங்கள் இடைவெளி தந்தார். பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்த சாரா யாரிடமும் சொல்லாமல் பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்துக் கொண்டார். ஐந்து வருடத்திற்குப் பிறகு அவர் ‘Stories We tell’ (2012) என்கிற ஆவணப்படத்தோடு மீண்டு வந்தார். இருபது வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த தன் அம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அவருடன் பழகிய அத்தனைப் பேரையும் அந்த ஆவணப்படத்தில் பேட்டிக் கண்டிருந்தார். அம்மாவைப் பற்றி அவர் நினைத்திருந்ததும், இந்தப் படத்தின் மூலமாக சாராவின் அம்மா அவருக்குக் காட்டிய தரிசனமும் வெவ்வேறாக இருந்தது. தன்னை ஒருபோதும் அம்மா ஒதுக்கவில்லை, எப்போதும் பிரியமாகவே இருந்திருக்கிறார் எனபது சாரா அதில் கண்டுகொண்ட உண்மை. ஒரு குடும்பத்தின் கதை என்பதாக இல்லாமல் திருமணம், உறவுகள், விவாகரத்து, மறுமணம், குழந்தை வளர்ப்பு போன்றவற்றைப் பற்றியும் பேசிய படமாக இருந்ததால் திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு விருதுகளையும் பெற்றது. அதோடு ஒரு படைப்பாளியாக சாராவுக்கு நற்பெயரையும் இந்த ஆவணப்படம் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்த ஆவணப்படம் தவிர சாரா இதுவரை இயக்கியது இரண்டே திரைப்படங்களும், சில தொலைக்காட்சி தொடர்களும் தான். இரண்டு திரைப்படங்களுமே அவர் மேலுள்ள மதிப்பை உயர்த்தியிருக்கிறது. ‘ஒரு நடிகை என்ன இயக்கிவிடப்போகிறார்?’ என்று அவர் முன்பாகவே பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர். விமர்சனங்களுக்கு பதில் சொல்லி தன்னை இழந்துவிடாத தன்மை எப்போதுமே சாராவுக்கு இருந்தது. அதனால் மௌனம் காத்தவர் ‘Away From Her’ (2006) படத்தோடு அனைவரையும் எதிர்கொண்டார்.

‘சிறுகதைகளின் மகாராணி’ என்று அறியப்படுகிற கனடா நாட்டு எழுத்தாளரான அலிஸ் மன்றோவின் ‘The Bear came over the Mountain’  கதை சாராவை பாதித்தது. கணக்கில் வைக்க முடியாத அளவுக்கு அதனைத் மீண்டும் மீண்டுமாய் வாசித்தார். அப்போதும் கூட அதனைத் திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் அந்தக் கதையில் தன்னை எது அப்படி ஈர்க்கிறது என்பதைத் தொடர்ச்சியாக யோசிக்கும்போது தான் ஒரு கதை திரைக்கதையாக அவரை அறியாமலேயே உருமாறத் தொடங்கியது.

மற்றொரு காரணம் ஜூலியா கிறிஸ்டி என்கிற நடிகையின் முகம். இந்தக் கதையைப் படிக்கும்போதெல்லாம் ஃபியானோ என்கிற கதாபாத்திரத்தில் ஜூலியா கிறிஸ்டியை நினைத்துக் கொண்டே படித்தார். இந்தக் கதையைப் படமாக்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்ததின் விளைவாக அவருக்குள் அந்தக்கதை பல பரிமாணங்களைக் காட்டத் தொடங்கியது. உடனே அலிஸ் மன்றோவிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்றார்.

‘திரைப்படமாக்கும் அளவுக்கு இந்தக் கதையில் என்ன இருக்கிறது. அலிஸ் எழுதிய எளிமையான கதைகளில் இதுவும் ஒன்று’ என்று தான் பலரும் நினைத்தனர். அந்த ‘எளிமை’ என்பது தான் சாராவை ஈர்த்திருந்தது. ‘Away From Her’ என்ற திரைப்படமாக மாற்றம் பெற்றது.

நாற்பது ஆண்டு கால திருமண வாழ்க்கையை திருப்தியோடு கழித்த கிரான்ட், ஃபியானோ என்கிற தம்பதி தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.

கனடாவில் பனி சூழ்ந்த சமவெளியின் நடுவே ஒரு அழகான பண்ணை வீட்டில் இருவரும் வசிக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு மிகச் சாதாரணமாகவே நடந்துகொள்ளும் ஃபியானோவுக்குள் சின்ன சின்ன மாறுதல்கள் ஏற்படுவதை கிரான்ட் வருத்தத்துடன் கவனிக்கிறார். பாத்திரங்களைக் கழுவி குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கிறாள். பேசிக்கொண்டிருக்கும்போதே என்னப் பேசுகிறோம் என்பதை மறந்து திணறுகிறாள்.

கிரான்ட்டுக்கு நிலைமையின் தீவிரம் புரிகிறது. ஃபியானோவுக்கு வந்திருப்பது வயதான காலத்தில் தாக்குகிற ஞாபக மறதி நோயான அல்ஜிமர் என்பது தெரிய வருகிறது.

இந்த நோய்த் தாக்குபவர்களை பாதுகாக்கும் ‘மெடோஹவுஸ்’ என்ற வயதானவர் விடுதியில் ஃபியானோ சேர்க்கப்படுகிறாள். அந்த விடுதியின் ஒரு விதிமுறை, நோயாளியை சேர்த்ததும் ஒரு மாத காலத்திற்கு அவருடைய உறவினர்கள், நண்பர்கள் யாரும் வரக்கூடாது என்பது. திருமணமான காலத்திலிருந்து இருவரும் இத்தனை நாட்கள் பிரிந்திருந்ததில்லை என்றெல்லாம் கிரான்ட் வாதாடுகிறார். விடுதியின் மேற்பார்வையாளர் விதிமுறைகளைத் தளர்த்த முடியாது என்கிறார்.

வேறுவழியில்லாமல் ஃபியானோவை அங்கே விட்டுச்செல்கிறார். ஒரு மாத காலமும் கிரான்ட்டிற்கு தனிமை என்பது வேதனை தருவதாக இருக்கிறது. ஃபியானோவைப் பார்க்கப் போகும் நாள் வருகிறது. மனைவிக்குப் பிடித்தமான பூக்களை வாங்கிக்கொண்டு விடுதிக்கு விரைகிறார். ஃபியானோவைப் பார்த்ததும் கிரான்ட் உணர்ச்சிவசப்படுகிறார். ஃபியானோ அருகில் போய் நிற்கிறார். அவரைப் பார்த்ததும் ஃபியானோ புன்னகைக்கிறாள். கிரான்ட்டிடம் ஏதேதோ பேசுகிறாள். ஆனால் கிரான்ட்டினை ஒரு விருந்தினராக மட்டுமே நினைத்துப் பேசிக்கொண்டிருக்கிறாள். இது கிரான்ட்டிற்குள் மன நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கடுத்த அதிர்ச்சியாக அங்கே சக நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆப்ரே என்பவரைக் காட்டி தன்னுடைய பால்யகால சிநேகிதன் என்கிறாள்.

இதோடு இருவரும் மன நெருக்கம் கொண்ட தம்பதியினர் என்பது போல நடந்துகொள்கிறார்கள். ஆப்ரேயிடம் ஃபியானோ காட்டும் இந்த  நேசத்தினை சகித்துக் கொள்ள முடியாமல் போராடுகிறார் கிரான்ட். ஒவ்வொரு நாளும் ‘நான் தான் உன்னுடைய கணவன்’ என்பதை ஃபியானோவற்கு நினைவுபடுத்த வருகிறார் கிரான்ட். ஆனால் ஃபியானோ அதற்கு இடம்கொடுக்காமல் ஆப்ரேயை கவனிப்பதிலேயே நேரம் செலவிடுகிறாள். ஒருநாள் ஃபியானோவிடம் ‘நான் உன்னுடைய கணவன்’ என சொல்லியும் விடுகிறார். ஃபியானோவோ குழம்பியவளாய், ‘நாளை நீங்கள் என்னைப் பார்க்க வரவேண்டாம்’ என்று கண்ணீரோடு கிரான்டிடம் சொல்லிவிட்டு ஆப்ரேவை நோக்கிச் செல்கிறாள். உடைந்து போகிறார் கிரான்ட். ஆனாலும் ஃபியானோ மீண்டும் தன்னை நினைவு கொள்வாள் என்கிற நம்பிக்கையில் தினமும் விடுதிக்கு வந்து ஒரு ஓரமாய் அமர்ந்து அவளைப் பார்த்தபடியே அமர்ந்திருக்கிறார் கிரான்ட்.

ஆப்ரேவை அங்கிருந்து அவர் மனைவி வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறாள். இதனால் எப்போதும் துயரத்துடனேயே ஃபியானோ இருக்கிறாள். மீண்டும் ஆப்ரேவை ஃபியானோவிடத்தில் அழைத்து வருவதற்கான முயற்சியில் இறங்குகிறார் கிரான்ட். அவர் மனைவியிடத்தில் போய்ப் பேசுகிறார். இறுதியில் ஒருவழியாக அவர் மனைவியின் சம்மதம் பெற்று ஆப்ரேவை அழைத்து வந்துவிடுகிறார். ஆப்ரேவை ஃபியானோ தங்கியிருக்கும் அறையின் வாசலில் இருத்திவிட்டு ‘உனக்கொரு ஆச்சரியத்தைத் தரப்போகிறேன்’ என்று ஃபியானோவிடம் சொல்கிறார் கிரான்ட். ஆனால் இப்போது ஃபியானோவிற்கு கிரான்ட்டினை அடையாளம் தெரியத் தொடங்குகிறது. அதை அவள் வெளிப்படுத்தியதும் அந்த நொடிக்காகவே காத்திருந்த கிரான்ட்டிற்கு அது நெகிழ்வினைத் தருவதாக படம் முடிகிறது.

ஒரு இலக்கியப் படைப்பு திரைப்படமாக உருமாறும்போது இருக்கும் சவால்களை சாரா நன்கு உணர்ந்திருந்தார். இதற்கு அவரின் வாசிப்புப் பழக்கமும் கூட காரணமாய் இருந்திருக்கிறது. அலிஸ் மன்றோவின் கதைக்கு சாரா திரைக்கதை வடிவத்தை நேர்த்தியாகத் தந்திருக்கிறார். அதற்காகவே இந்தப் படத்திற்கான திரைக்கதை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறுகதையின் சில வசனங்கள் கட்சிகளாகவும், காட்சிகள் வசனங்களாகவும் தேவைக்கேற்ப கச்சிதமாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

அல்ஜிமர் நோயின் கூறுகளை அலிஸ் சில பக்கங்களை செலவழித்து விளக்கியிருக்கிறார். இரண்டே காட்சிகளில் ஃபியானோவின் நோய்த் தீவிரத்தை சாரா உணர்த்திச் சென்று விடுகிறார். கிரான்ட் மற்றும் ஃபியானோவின் இளமைக்கால சம்பவங்களில் இருந்து அலிஸ் சிறுகதையைத் தொடங்குகிறார். திரைப்படமோ ஃபியானோவின் மறதியினால் கிரான்ட் எதிர்கொள்ளும் உளைச்சலையும், ஏக்கங்களையும், அவரின் பேரன்பையுமே மையமிடுகிறது. சிறுகதையாக எழுதும்போது உள்ள சுதந்திரம் அதைத் திரைக்கதையாக்கும்போது மட்டுப்படும் வாய்ப்பு உண்டு. கிரான்ட்டின் பார்வையிலேயே ஃபியனோவை நாம் பார்ப்பதாக அமைத்திருக்கும் திரைக்கதை வழியாக அந்தக் கட்டுப்பாட்டினை அழகாகத் தாண்டிவிடுகிறார் சாரா.

சாராவின் அடுத்தப்படமான ‘Take this Waltz’ (2011) படமும் திருமண உறவினைப் பற்றிப் பேசுவதாகவே இருந்தது. மார்கோ என்கிற பெண் தனது திருமண வாழ்வினை உப்பு சப்பற்றது என்றே நினைக்கிறாள். அவளுக்கு டானியல் என்பவருடன் பழக்கம் ஏற்படுகிறது. அந்தப் பழக்கம் டானியலை மறுமணம் செய்து கொள்ளச் செய்கிறது. ‘வாழ்க்கை இடைவெளிகள் நிறைந்தது. அதை வேறொரு உறவு மூலம் இட்டு நிரப்ப முடியாது’ என்கிற இந்தப் படத்தின் வசனம் தான் படம் சொல்லும் செய்தி.

சாராவுக்கு திருமணம் ஆகி விவாகரத்தும் முடிந்திருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளோடு வாழ்கிறார். 

தனது அடுத்தப் படத்திற்கான அறிவிப்பினை இரண்டு முறை வெளியிட்டார் சாரா. ஆனால் இரண்டு முறையுமே அவர் புதிய படங்களுக்கான வேலைகளைத் தொடங்கவில்லை. இயல்பிலேயே போராட்ட குணம் கொண்ட சாரா அதனை சமூக வாழ்க்கையிலும் காட்டுகிறார். அரசியலில் ஈடுபட்டிற்கும் சாரா பலமுறை சமூகம் சார்ந்த போராட்டங்களில் பங்கு கொண்டுள்ளார். தனது கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கும் அவரது குணம் பல எதிரிகளை அவ்வப்போது அவருக்குக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் சாரா அசருவதில்லை. ஒரு போராட்டத்தின்போது போலீசாரால் தாக்கப்பட்டு தன்னுடைய இரண்டு பற்களையும் இழந்திருக்கிறார். ஒரு நடிகையாக முகம் என்பது அவருக்கு முக்கியமானது. ஆனாலும் கூட தனது கொள்கைகளுக்காக அதைப் பற்றிக் கவலைபப்டாமல் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்.

தனக்குத் தோன்றும்போது அடுத்த படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். எப்போது அவருக்குத் தோன்றினாலும் அவரால் நல்ல படைப்பையே தர இயலும். ஏனெனில் அவரே சொல்வது போல முடிவு குறுகலாய் இல்லாத பரந்து  விரிந்த உலகம் அவருடையது.

(2015 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை. எனது ‘மாதர் திரையுலகு’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments