தூரத்தில் ஒலிக்கும் கண்டாமணி தனது இசையை நிறுத்தியபின் நம் மனதுக்குள் ஒரு அதிர்வு ஏற்படும், அந்த அதிர்வின் குரல் தான் வாணி ஜெயராமினுடையது. சில குரல்கள் சிலவற்றை நமக்கு நினைவுபடுத்தும். எனக்கு வாணியின் குரல் ஏனோ இனிய அதிர்வை நினைவுபடுத்தியபடி இருக்கிறது. நிச்சயமாக தனித்துவ குரல். இந்தக் குரல் அவர் கடுமையான பயிற்சியினால் கொண்டு வந்தது. திருமணத்துக்கு முன்பு கர்நாடக சங்கீதம் பயின்றிருந்த வாணி மும்பைக்கு கணவருடன் குடிபெயர்ந்த்ததும் இருபது வயதுக்குப் பிறகே வசந்த் தேசாய் என்கிற கலைஞரிடம் இந்துஸ்தானி கற்றுக் கொள்கிறார். இதற்காக தான் வேலை பார்த்துவந்த வங்கி வேலையை விடுகிறார். இந்துஸ்தானியும், கர்னாடக சங்கீதமும் இரட்டைக் குழல் என்றாலும், இரண்டிற்குமான பாடும் முறைகள் வெவ்வேறானவை. மிகக் குறைவானவர்கள் தான் இரண்டிலும் சரியளவு தேர்ச்சி பெற்றவர்ககளாக இருக்கிறார்கள். வாணி இரண்டு இசை வகைமைக்கும் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தார்.
இந்த இரண்டு விதமான இசையிலும் உச்சம் தொட்ட பாடல்களை வாணி பாடியிருக்கிறார். ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்’ கேட்டுவிட்டு அப்படியே ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் ‘பாரதி கண்ணம்மா…நீயடி சின்னம்மா”வைக் கேட்டுப் பாருங்கள். இரண்டுக்குமான அற்புத வித்தியாசங்கள் புரிபடும். ‘பாரதி கண்ணம்மா’ பாடலில் ஒரு வரி வரும்..அது அப்படியே வாணியின் குரலுக்கு பொருத்திவிடலாம். அந்த வரியை வாணி தான் பாடியிருப்பார் என்பது எத்தனை பொருத்தம்
“ஒரே ராகங்களில் பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம்
மாறும் தினம் மாறும்
அழகிய கலை இது
இவளது நிலை இது”
இந்த வரிகள் படத்தின் கதாநாயகியின் கதாபாத்திரத்துக்கு எழுதப்பட்டது என்றாலும் வாணி ஜெயராமின் குரலுக்கு இதை விட பொருத்தமான ஒரு விளக்கம் இருக்க முடியாது. எல்லா வகையான பாடல்களையும் பாடியவர். மெல்லிசை, கடினமான சங்கதிகள் கொண்டவை, நாட்டுப்புறப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என எல்லாவற்றிலும் நிறைவைக் கொடுத்தவர்.
இயக்குனர் கே.பாலச்சந்தர் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது அறிந்தது. அவருடைய படங்களின் பாடல்கள் தனித்துவமாக அமைந்திருக்கும். இசைக்கலைஞர்களை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு மட்டுமே அவர் ‘சிந்து பைரவி’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘அபூர்வ ராகங்கள்’ என படங்கள் இயக்கியிருக்கிறார். ‘சிந்து பைரவிக்கு’ கே.ஏ . யேசுதாஸ், உன்னால் முடியும் தம்பிக்கு எஸ்.பி .பி அபூர்வ ராகங்களுக்கு வாணி ஜெயராம்.
அபூர்வ ராகங்கள் படத்தில் கதாநாயகி பிரபலமான திறமையான கர்நாடக இசைப்பாடகி. மிக முக்கியமாக அந்தத் துறையில் தன்னம்பிக்கையும் ஆளுமையும் கொண்ட ஒரு பெண் என்பதாக கே.பி பாத்திரப்படைப்பு செய்திருப்பார். அதற்கு நடிப்பில் ஸ்ரீவித்யா நியாயாம் செய்திருப்பார். இப்படிப்பட்ட ஆளுமை கொண்ட ஒரு பாடகியின் குரல் எப்படி இருக்க முடியும்? வாணி ஜெயராம் குரல் போல இருக்க வேண்டும் என்று கேபியும் இசயமைப்பாளர் எம்எஸ்வியும் எடுத்த முடிவின்படி கிடைத்த பாடல்கள் தான் எத்தனை அருமையானது!!
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..
பாடல் இன்றளவும் இசை நுணுக்கம் அறிந்தவர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய பாடல். வெவ்வேறு ராகங்களில் கோர்க்கப்பட்ட இந்தப் பாடலைத் தவறில்லாமல் பாடுவதற்கு எந்தவொரு இசைப் பயிற்சி செய்யும் மாணவரும் முயற்சி எடுப்பார்கள்.
அபூர்வ ராகங்கள் படத்தில் வருகிற கேள்வியின் நாயகனே பாடலும் கூட பாடுவதற்கு மிகச் சவாலான ஒன்று. மேடையில் பாடும் ஒரு பாடல் என்பது கடந்து அந்தப் பாடலின் சூழல் வித்தியாசமானது. அது படத்தின் கதாபாத்திரங்கள் சிலருக்கு செய்தியைச் சொல்லும் பாடல். கோபித்துக் கொண்டு வழி தவறி வந்த ஆட்டுக்குட்டியை அதன் எஜமானரிடம் ஒப்படைக்கும் ஒரு பெண் பாடும் பாடல் அது. பல அடுக்குகளால் ஆன பாடல். இந்தப் பாடலைக் கவனித்தால் ஒன்று புரியும். வெறும் பாடும் திறமை மட்டும் தேவைப்படாத ஒன்று இது. ‘கேள்வியின் நாயகனே’ என்று அதட்டித் தொடங்கும் பாடல், அடுத்த வரியில் இறைஞ்சலாக மாறி பின் மீண்டும் கண்டிக்கும் குரலுக்கு போய், புரிந்து கொள்ளேன் என்று பணிவாக இறங்கி வரும். இவையெல்லாம் பல்லவியில் வரும் உணர்வு விளையாட்டுகள் மட்டுமே.
போகப்போக பாடல் தனக்கென ஒரு கதை எழுதியபடி போகும். குரலுக்கும் ஒரு இசைக்கருவிக்குமான கேள்வி பதில் அது. பாடகியின் குரலுக்கு மிருதங்கம் பாடல் முழுவதும் பதில் சொல்லியபடி தொடர்ந்து வரும், சில நேரங்களில் விஞ்சி நிற்கும். ஒருகட்டத்தில் குரல் உடைந்து நிற்கும். மிருதங்கத்தின் உக்கிரம் தாங்காமல் தயங்கி நிற்கும் குரலை வாணி ஒரு விசும்பலில் காட்டி நிறுத்துவார்.
அந்தப் பாடலைத் தொடர வந்து நிற்பார் பாடகியின் மகள். இப்போது அம்மாவும் மகளும் சேர்ந்து பாடுவார்கள். வாணி ஜெயராமும், பாடகி பி.எஸ் சசிரேகாவும் இணைத்து பாடுவார்கள். கண்ணதாசன் தனது வரிகளில் விஞ்சி நின்ற இடம் இது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்காக இந்தப் பாடலைக் கேட்கத் தோன்றும், எம்எஸ்விக்காக, கண்ணதாசனுக்காக, வாணிக்காக, சசிரேகாவுக்காக , மிருதங்கத்துக்காக என மீண்டும் மீண்டும் நினைத்து அதிசயத்தக்க பாடல் இது.
பாடலின் இறுதியில் தன் மகளுடன் சேர்ந்த குதூகலத்துக்கு பாடகி போய்விடுவார். அப்போது மிருதங்கம் வாசிக்கும் கமல் கோபத்தில் எழுந்து போக குரலில் சிறிய நக்கல் தொனிக்க, முருகா உன் அப்பாவுடன் இனி சேர்ந்துக்கோ…என்று முடிப்பார், கமல் தன அப்பாவுடன் இணைத்து உட்கார்ந்ததைப் பார்த்ததும் குரல் நெகிழ்ச்சிக்குள் போகும். ஒரு பாடல் இசை நுணுக்கங்களில் பிரமாதமாக அமைவதும் அதனை திறன் மிகுந்த பாடகி பாடுவததையும் கடந்து வரிக்கு வரி மாறுகிற அந்த உணர்வை உள்வாங்கி வாணி ஜெயராம் பாடியதால் தான் அது அபூர்வ ராகமாக மாறியிருக்கிறது. இப்படியொரு பாடலைத் தமிழ் சினிமா அதற்கு முன்பும் பின்பும் இதுவரையிலும் நமக்குத் தரவில்லை.
இப்படி சிக்கலான சூழல்களில் பாடுவதற்கு வாணி அவர்களையே இசையமைப்பாளர்கள் தேடி இருக்கிறார்களோ என்று தோன்றும் அளவுக்கு அவர் தனது குரல் வழி அந்தப் பாடலில் சூழலுக்கு நியாயம் செய்திருப்பார். அதில் ஒன்று ‘என்னுள்ளே ஏதோ..ஏங்கும் ஏக்கம்” பாடல். திருமணமான ஒரு பெண் வேறொரு ஆடவன் மீது காதல் கொள்வதும் அதை வெளிப்படுத்துவதுமான பாடல் இது. எந்தவொரு உறுத்தலும் விரசமுமின்றி ஏக்கத்தை வெளிப்படுத்துகிற ஒரு பாடல்.
ஒவ்வொரு தலைமுறைப் பெண்களுக்கும் பிடித்தமான சினிமாப் பாடல்கள் என ஒரு பட்டியல் இருக்கும். ஒவ்வொருவருக்கும் அது வேறுபடவும் செய்யும். ஆனால் சில பாடல்கள் தான் எல்லோருடைய பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும். பொதுவாக அந்தப் பாடல்கள் முணுமுணுக்கும்போது மகிழ்ச்சியைத் தருகிறவையாகவும் இருக்கும். இப்படி சென்ற தலைமுறைப் பெண்கள் அனைவருடைய விருப்பப் பட்டியலிலும் நீங்காமல் இடம் பெற்றிருக்கும் பாடல் ‘மல்லிகை மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’.
சில வருடங்களுக்கு முன்பு திரு.வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் காவியத்தலைவன் என்கிற படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் திருப்புகழில் இருந்து ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. திருப்புகழ் என்றாலே அதன் கடினமான மொழிநடை குறித்து நாம் அறிவோம். அதைப் பாடுவதற்கு மொழித்திறன் அவசியம். அந்தப் படலை வாணி எயராம் ஆவர்கள் பாடியிருப்பார்கள். அற்புதமான பாடல். இந்தப் பாடலை பாடுவதற்கு வாணி அவர்களை ரஹ்மான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அவரது குரல் வளம் மட்டுமாக இருந்திருக்காது. இப்படியொரு பாடலைப் பாட உச்சரிப்பு அவசியம். தொடக்கத்தில் இருந்தே சவாலான பாடல்களைப் பாடும் திறன் கொண்ட வாணியால் பாடி விட முடியும் என்று ரஹ்மான் நம்பியிருப்பார். யோசித்தால், வேறு யாரும் இந்தளவுக்கு அந்தப் பாடலுக்கு நியாயம் செய்துருக்க முடியாது என்றும் தோன்றுகிறது.
“இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..”
“கவிதை கேளுங்கள்”
“நித்தம் நித்தம் நெல்லிசோறு”
“நான் உன்னை நினைச்சேன்..நீ என்னை நினைச்சே”
என இவர் பாடிய பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பத்தாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்த எண்ணிக்கை என்பது பதிவு செய்யப்பட்ட பாடல்கள் மட்டுமே. இவை தவிர மேடைகளில் பாடியது தனி. பக்திப் பாடல்களையும் பெருமளவில் பாடியிருக்கிறார். வாணி அவர்கள் திரைத்துறைக்கு வந்திருந்தபோது ஏற்கனவே கணிசமான பாடகிகள் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நாம் என்ன செய்யப்போகிறோம்..என்கிற கவலை தனக்கு இருந்ததில்லை என்கிறார். ஏனெனில் சினிமாவில் பாடுவது என்பது அவருக்கு கனவாக இருந்ததில்லை. பாட வேண்டும் அவ்வளவு தான். பாடிக்கொண்டே இருக்க வேண்டும்,,பயிற்சி செய்ய வேண்டும்..இது மட்டும் தான் அவருடைய கனவாக இருந்திருக்கிறது. திரைப்படங்களில் பாட வாய்ப்பு வந்தபோதும் கூட, இத்தனைப் பாடல்களைப் பாடுவோம் என்று அவர் நினைத்திருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் பாடல்பதிவின்போதும் பயந்து கொண்டே பாடியதாக ஒரு நேர்காணலில் சொல்கிறார். அந்த பயம் என்பது தனது திறமை மீது கொண்டது அல்ல, சரியாகப் பாட வேண்டுமே என்கிற பயம். ஒருமுறை ஒரு பாடலைப் பாடிவிட்டு ரிக்கார்டிங் ஸ்டுடியோ விட்டுக் கிளம்புகையில், எம்எஸ்வி அவர்கள் வாணியை அழைக்கிறார். மிகவும் பயந்துபோயவிட்டாராம் வாணி. தவறாக பாடியிருக்கிறோம் போல இருக்கிறது அழைத்துக் கண்டிக்கப் போகிறார் என்று யோசித்தபடி சென்றிருக்கிறார். “ஏதாவது தப்பா பாடிட்டேனா..திரும்பப்பாடட்டுமா” என்று கேட்டிருக்கிறார். “என்னம்மா எவ்வளவு நல்லா பாடியிருக்கே..இப்ப திரும்பக் கேட்டேன்..அற்புதம்” என்றிருக்கிறார் எம்எஸ்வி. வாணி சொல்கிறார், “அவர் அப்படி சொன்னபிறகும் மனதில் நடுக்கம் இருந்து கொண்டு தான் இருந்தது” என்று. இந்த தொழில்பக்தி தான் அவரை உயரத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. அவரது குரலில் கடைசி வரை நடுக்கம் இல்லை, அத்தனை துல்லியமும் தெளிவும் இருந்தது. இதற்கு தன்னுடைய குருமார்களுக்கும் இறைவனுக்கும் நன்றி சொன்னார்.
‘மன்மதலீலை’ படத்தில் ‘நாதமென்னும் கோயிலிலே’ என்கிற பாடலைப் பாடியிருப்பார். அதில் முதல் சரணம் இப்படி வரும்
“இசையும் எனக்கிசையும்
தினம் என் மனம் தான் அதில்அசையும்
நீ அசைத்தாய் நான் நான் இசைத்தேன்”
என்று வரிகள் வரும்,
நான் நினைக்கிறேன், ‘கேள்வியின் நாயகனே’, ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘நாதமென்னும்’ போன்ற பாடல்களை எழுதுவதற்கு முன்பு கண்ணதாசன் அவர்கள் எம்எஸ் விஸ்வநாதனிடம் “யார் பாடப்போறாங்க?” என்று கேட்டிருப்பார். “வாணி” என்று சொல்லியிருப்பார் எம்எஸ்வி. “அப்புறம் என்ன..எப்படி எழுதினாலும் பாடிருவாங்க..”: என்று கண்ணதாசன் வரிகளை செம்மையாக்கியிருப்பார். இவங்களுக்காக ஒரு வரி எழுதுவோம் என்று தான்
‘இசையும் எனக்கிசையும்’ என்றும்
‘ஏழு ஸ்வரங்களுக்கு எத்தனை பாடல்’, ‘தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான், மங்கை தரும் தரிசனத்தைத் தேடுகிறான்’ என்றெல்லாம் எழுதியிருப்பார். இவையெல்லாம் பாடுவதற்கு கடினமான சங்கதிகள்..
மாபெரும் ஆளுமைகள் நீங்கும்போது அவர்கள் சாதாரணமாக நம்மை விட்டுப் பிரிவதில்லை. நமக்கு முன் ஒரு சவாலை, ஒரு கேள்வியை விட்டுப் போவார்கள். வாணி ஜெயராம் அவர்களும் ஒரு சாவலை விடுத்து சென்றிருக்கிறார். அவரளவுக்கு தெளிவாகவும், நேர்த்தியுடனும் அர்ப்பணிப்புடனும் இசையைப் பயின்று அதனை ஒரு தவமாக ஏற்றுக்கொண்டு பாட முடியுமா என்பதே அவர் வைத்த சவால். ஒரு துறையில் முன்னேற நினைப்பவர்கள் அவர்களது முன்னோர்களின் வெற்றியை பின்பற்றுவது என்பது அவர்களின் உழைப்பையும் பின்பற்றுவதே. வாணி ஜெயராம் போல அப்படியே நகலெடுத்துக் கூட பாடிவிட முடியும். அதற்குத் தேவை பயிற்சி மட்டுமே. ஆனால் வாணி ஜெயராம் பாட வேண்டிய பாடலை ஒருவர் படுவதற்கு பயிற்சி மட்டுமே போதாது..அதற்கு வாணியாக மாற வேண்டும்..பதினெட்டு மணிநேரம் பயிற்சிக்காக மட்டுமே ஒதுக்க வேண்டும்..உச்சரிப்புக்காக மனம் கூர்ந்து அதில் லயிக்க வேண்டும்.. முன்னோடிகள் மீதான சரணாகதி வேண்டும்..நான் கற்றுக்கொண்ட வரையில் இசைக்கு அல்ல, எந்தத் துறையின் முன்னேற்றத்திற்கும் இது அவசியப்படும் ஒன்றாக இருக்கிறது.
இதனை வலியுறுத்தி, ‘என் போல நீங்களும் மாற வேண்டும்..முடியுமா’ என்று புன்னகையுடன் கேட்டுவிட்டு சென்றிருக்கிறார் வாணி ஜெயராம்.
(மல்லிகை மகள் இதழுக்காக எழுதியது)
வாணி ஜெயராமின் குரலை அணுவணுவாக ரசித்து எழுதியுள்ளீர்கள்! உங்க ரசனை மிக நுட்பமானது.
மிக்க நன்றி சார்
ஆழமான தேடலும் தொகுப்பும். பிரமாதம். வாசிக்கும் போதும் வாசித்து முடித்ததும் நிச்சயம் 4 பாடல்காளாவது, முனுமுனுப்பது நிச்சயம்
நன்றி கோபால்