இந்த நினைவு தான்..

0
7

ஒரு பாடல் வரி எப்போதேனும் நமது நினைவுகளை முன்னும் பின்னுமாக அலைகழித்துக் கொள்ளும். அல்லது வாசிப்பில் கிடைக்கப்பெறுகிற ஒரு வரி அந்த நாளையேத் தன்னுடன் தக்க வைத்துக் கொள்ளும். சமீபத்தில் ஒருவரி அப்படித்தான் சில நிமிடங்களை அப்படியே நிறுத்தி வைத்தது. வேறொன்றையும் யோசிக்க விடாதபடிக்கு அந்த வரி மட்டும் மனதுக்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பாடல் மெட்டைப் போல பலமுறை எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன்.

ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாவேஸ்கியின் புதினமான ‘அசடன்’ நாவல் படித்துக் கொண்டிருக்கும்போது அந்த வரி வாசிக்கக்கிடைத்தது. “குழந்தைகளோடு உடன் இருந்தாலே ஆன்மாவின் காயங்கள் ஆறிவிடுகின்றனவே”. என்பதே அந்த வார்த்தைகள். இதற்கு முன்பும் ஒருமுறை இந்த நாவலை வாசித்திருக்கிறேன். அப்போதும் இந்த வரியைக் கண்டிருப்பேன். ஆனால் மறுவாசிப்பின்போது மட்டும் இந்த வார்த்தைகள் என்னை ஏன் இத்தனை தூரம் பாதிக்க வேண்டும்?

முதல் வாசிப்பின் போது எனக்கு திருமணமாகியிருக்கவில்லை. இரண்டவது வாசிப்பின்போது எனக்கு குழந்தைகள் பிறந்திருந்தனர். இது தான் காரணமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு முடிவு ஏற்பட்டது.

நம்முடைய அனுபவம் தான் நமது பார்வையை மாற்றுகிறது. வாழ்க்கை நாம் கடந்து வருகிற ஒவ்வொன்றுடனும் நம்மை இணைத்துக் கொண்டே இருக்கிறது. நினைவுகளை அனுதினமும் தந்தபடி இருக்கின்றன. ‘நினைவோ ஒரு பறவை’ பாடலைக் கேட்குந்தோறும் நினைவை ஒரு பறவையோடு ஒப்பிட்ட அந்தக் கற்பனையை ரசித்திருக்கிறேன். ஆனால் நினைவென்பதை ஆகாசம் என்றும்  சொல்லலாம். பகலில் தன்னை வெளிக்காட்டி இருளில் தன்னை மறைத்துக் கொள்ளும் ஆகாசம் போல சில நினைவுகள் நமக்கு பளிச்சென்று தங்கிவிடுகிறது. சில நினைவுகள் எங்கோ ஓரத்தில் அப்படியே அமிழ்ந்து கிடக்கின்றன.

ஒரு சிறு அசைவு கூட நமது நினைவை மேலெழும்ப வைக்கக்கூடியதாக மாறும். எனது மகளின் ஒரு சிறு செய்கை தனது இறந்து போன அப்பாவினை நினைவுபடுத்துவதாக என் கணவர் அடிக்கடி சொல்வார். அந்த நேரங்களில் அவரின் நினைவுகளை அவருடைய அப்பாவன்றி வேறொருவரும் நிரப்பியிருக்க மாட்டார்.

வயதானபின்பு உடல் தளர்ச்சியுற்று படுக்கையில் காலங்கழிக்கும் நிலை வரகூடாதென்றே எல்லோரும் விரும்புகிறோம். மற்றவர்களுக்கு நாம் பாரமாக மாறிவிடுவோம் என்பது மட்டுமல்ல நினைவுகளோடு மட்டுமே நாம் வாழப் பழகவில்லை என்பதும் ஒரு  காரணம். அம்புப்படுக்கையில் கிடந்த பீஷ்மருக்கு தனது மரண நாள் நெருங்குமட்டும் மிச்சமிருந்தது நினைவுகள் மாத்திரம் தானே!

எனது அப்பாவின் மூத்த பெரியம்மா சமீப காலம் வரை வாழ்ந்து மறைந்தவர். தனது வீட்டை மட்டுமல்லாது அந்தக் கிராமத்தையே தனது வார்த்தைக்கு செவிசாய்க்க வைத்தவர். வைரக் கம்மலும், மூக்குத்தியும், நெற்றி நிறைத்த திலகமுமான தோற்றம் தான் அவரின் முகமென பதிந்திருக்கிறது. தன் கணவனுக்கு வயதானது பற்றி அக்கறைக் கொண்டிருந்த அவருக்கு தனக்கும் சேர்த்து தான் வயது ஏறிக் கொண்டிருக்கிறது என்பதில் சிந்தனை செல்லவில்லை. அதனாலேயே சுறுசுறுப்பாக இருந்தார். கணவன் இறந்ததும் சூழல் காரணமாக வேறொரு ஊருக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரை சந்திக்க சென்றபோது நான் பார்த்த கம்பீர மனுஷியாக இல்லை. உட்கார்ந்திருக்கும்போதே நெடுஞ்சாணாக விகாசித்து இருக்கும் அவரது தோற்றம் எப்படி ஓரிரு மாதங்களுக்குள் சுருங்கிப் போனது என்பது அவர் மனம் மட்டுமே அறிந்திருந்த ஒன்று. அப்போது அவரிடம் தங்கியிருந்தது கம்பீரம் அல்ல, அது குறித்த அவரது நினைவுகள் மட்டுமே. அவரின் இறுதிக் காலம் முழுக்க நினைவு ஒரு பறவையாய் அவர் முன் சிறகடித்துக் கொண்டே இருந்தது.

குழந்தைகள் எப்படி ஒரு விஷயத்தை நினைவுகொள்கிறார்கள் என்பது ஆர்வம் தரக்கூடியது. அவர்கள் தங்களின் பார்வைக்கு உட்பட்டதையும், தெரிந்ததையும் புதியதான ஒன்றுடன் தொடர்புபடுத்திக் கொண்டே வருகிறார்கள். என்னுடைய மகளிடம் சித்திரை மாத முழுநிலவைக் காட்டி, ‘தங்கத்தட்டு மாதிரி இருக்கு’ என்றேன். அவள் சொன்னாள், ‘மாம்பழம் மாதிரி இருக்கு’. தங்கத்தட்டினைப் பார்த்திராத அவளிடம் என்னுடைய ஒப்புமை செல்லுபடியாகவில்லை.

அலிஸ் மன்றோ எழுதிய ஒரு கதை பிறகு திரைப்படமாக எடுக்கப்பட்டது. என்பது அந்தக்கதையின் பெயர். மனமொத்த முதிய தம்பதி கனடா நாட்டில் வசித்து வருகிறார்கள். சேர்ந்து நடைபயிற்சிக்கு செல்வது, வீட்டைப்பராமரிப்பது, இசை கேட்பது, புத்தகங்கள் படிப்பதென எந்த ஒரு குறைவுமின்றி சென்று கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கையில் சிறிய பிரச்னையகாக உருவெடுக்கும் ஒன்று பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. மனைவிக்கு மெதுவாக ஞாபகமறதி வரத் தொடங்கும். அடுப்பில் இருந்து இறக்கிய பதார்த்தத்தை உணவு மேஜைக்கு எடுத்து செல்வதற்கு பதிலாக குளிர்சாதன பெட்டியில் வைப்பார். பேசிக்கொண்டிருக்கும்போதே தான் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து ஒரு அசட்டு சிரிப்புடன் அப்படியே நிற்பார். முதலில் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் கணவர் அதன் தீவிரத்தன்மை  புரிந்ததும் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறார்.

மனைவிக்கு வந்திருப்பது வயதான காரணத்தால் ஏற்பட்டுள்ள அல்ஜிமர் நோய் எனத் தெரிய வரும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் யாவற்றையும் மறந்து போவார்கள், தங்களுடைய பெயர் உட்பட. அவர்களுக்கு எது நினைவில் தங்கியிருக்கும் என்பது கூட யாராலும் யூகிக்க முடியாது. சில நேரங்களில் நினைவு மீட்கப்படலாம் என்பது அபூர்வமான ஒரு அதிசயம். வீட்டில் வைத்து பராமரிப்பது முடியாத காரியம் என்பதால் அதற்கென்று உள்ள பராமரிப்பு இல்லத்தில் மனைவியைக் கொண்டு விடுவார் கணவன்.

மனைவியை அங்கு விட்டுவிட்டு கணவன் அனுபவிக்கும் தனிமை தான் கதையின் ஆதாரம். இதோடு அந்த மனைவி தன்னுடைய கணவனையே மறந்து போவார். பராமரிப்பு இல்லத்தில் உள்ள மற்றொரு முதிய ஆணைக் காட்டி, ‘இவர் தான் என்னுடைய பால்ய சிநேகிதன்’ என்று சொல்லி நெருக்கம் காட்டுவதும் கணவனால் சகித்துக் கொள்ள முடியாமல் போகும். என்றாவது ஒருநாள் அவளுக்குத் தன்னை அடையாளம் தெரியும் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் அந்த இல்லத்துக்கு வந்து மனைவியைக் கவனித்துக் கொள்வார் என்பதாக கதை அமைந்திருக்கும். மிகவும் உருக்கமான கதை.

மனிதனுக்கு தன் நினைவுகள் அழிந்து மறதி தொடங்கும்போது தன்னுடைய இறுதி  காலம் நெருங்கிவிட்டதாகவே முடிவு செய்து கொள்கிறான். ‘இப்பல்லாம் சமைக்கும்போது உப்பு போட மறக்கறேன்..வயசாகுதுல்ல’ என்பது வீட்டுக்கு வீடு கேட்கிற குரலாக இருக்கிறது. நினைவு தப்புவதென்பது தங்களின் அடையாளமாகி விடக்கூடாது என்பதே மனிதனின் பெரும் விருப்பமாக இருக்கிறது.

எங்களுக்கு மிக நெருங்கிய குடும்ப நண்பர் வீட்டில் ஒரு முதியவர் அல்ஜிமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் எழுதிய புகைப்படமும், வீட்டு முகவரியும் அவரது சட்டைப்பையில் எப்போதுமிருக்கும். எத்தனை பாதுகாப்பு இருந்தாலும் சில சமயங்களில் வீட்டை விட்டு எங்கேனும் வெளியில் கிளம்பி விடுவார். திரும்ப வீட்டுக்கு வரும் வழி தெரியாமல் தவிப்பார். அதனாலேயே இந்த ஏற்பாடு. இந்த நினைவழிவுக்கு முந்தைய காலகட்டத்தில் அவருக்கு பிடித்தமான செயலாக இருந்தது பயணங்கள் தான். எங்கு சென்றாலும் நடந்தே சென்று விடக்கூடிய தலைமுறையைச் சேர்ந்தவர் என்பதால் மிக நீண்ட வருடங்களுக்கு அவர் தன்னுடைய நடை பயணத்தையே நம்பியிருந்தார்.

ஒரே நாளில் பதினைந்து கிலோமீட்டர் வரை கூட வேகமாக நடந்து கடந்து விட முடியும் அவரால். தங்கிருந்த கிராமத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இவரது பெயர் பிரபலம். அனைவரின் குடும்பங்களையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துவைத்திருப்பவர். எந்தவொரு விசேஷத்தையும் தவற விட மாட்டார். முதல் ஆளாக உதவிக்கு போய் நிற்பார். மூன்று தலைமுறை சேர்ந்தவர்களை ஒரு குடும்பத்தில் தெரிந்து வைத்திருப்பவர். ஒருமுறை அவர் வீட்டுக்கு நாங்கள் சென்றிருந்தபோது யாரோ ஒருவர் தன்னுடைய அப்பா இறந்து போன திதி எந்த தினம் வருகிறது என்று கேட்பதற்காக இவரைப் பார்க்க வந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அத்தனை கூரிய நினைவாற்றல். இப்படியானவர் தன்னுடைய பெயரைக்கூட மறந்து விடுகிறார் என்பதுதான் எல்லோருக்குள்ளும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடைய கிராமத்தை விட்டு சென்னைக்கு அவர் குடிபெயர்ந்ததாலேயே வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டியிருக்கிறது என்றார் அவர் மனைவி.

உண்மை தான். அவர் கிராமத்தில் இருந்திருந்தால் அவர் தொலைந்து போகக்கூடும் என்றே கற்பனை செய்ய முடியாது. அவர் முகமே அவரின் பெயராகவும், விலாசமாகவும் இருக்கும் அங்கே. பழகிய மனிதர்களைத் தேடித் தான் அவர் சென்னையின் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தாரோ என்று கூட எனக்குத் தோன்றும்.

நினைவுகள் தண்ணீரைப் போல. அமிழ்ந்து வைத்திருக்க முடியாதவை  துளித்துளியாய் சேரும்போது பெருவெள்ளமாய் மாறி தானாகவே வடிந்துவிடும். பகிரப்படும்போது தான் தண்ணீர் அதன் பயனை அடைகிறது. அது போன்றே சில நினைவுகளும் பகிரப்பட வேண்டியவை தான். நாமது இறுதிக் காலகட்டத்தில் நினைவுகள் ஒரு கண்ணாடி போல் முன்னே நின்று சிரிக்கும், அழும், துயர் தரும், ஆற்றாமையைக் கொடுக்கும் இலலாவிட்டால் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிடும்..ஆனாலும் உறக்கத்தில் தன்னிச்சையாக எழும் கனவுகள் போல மரணத்தின் இறுதி கூட நினைவுகளாலேயே எழுந்து நிற்கும்..

நினைவுகள் வரமும், சாபமுமானது

1 COMMENT

  1. ஆழமான விஷயங்களை ஆங்காங்கே டச் செய்துவிட்டு நினைவுகளை தூண்டிவிட்டு செல்கிறீர்கள். தங்கத்தட்டிலும் மாம்பழத்திலும் புத்தக்கத்திலும், 15 கிமீ நடப்பத்திலும், வயோதிகத்தையும் சமீபத்தில் மறந்து நின்றவைகளையும், தொட்டுச்சென்றுவிட்டால் கூட பரவாயில்லை சில நிமிடங்களேனும் ஒவ்வொரு தருணத்திலும் நிற்க, நினைக்க வைத்துவிடுகிறது.

    இந்த கட்டுரை படிக்க ஐந்து நிமிடங்களே ஆனாலும், அரை மணி நேரமோ அரை நாள் விழுங்கிவிடக்கூடியது என்பதையும் பகிரங்கமாக தெரிவித்து, சற்றே நினைவுகளில் ஆழ்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here