உயிர்த்தேன் – மனதின் விசாரங்கள்

0
112

தி. ஜானகிராமன் அவர்களின் படைப்புகளில் அதிகம் கவனத்துக்கு வராத ஒரு படைப்பு ‘உயிர்த்தேன்’. தி,ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ இரண்டும் வாசகர்களை எப்போதுமே உணர்ச்சி லயதுக்குள் சிக்க வைப்பவை. ஒரு படைப்பாளரின் உச்சபட்சமான மனநிலை வெளிப்படும் தருணம் சில படைப்புகளில் அமையும். ‘அம்மா வந்தாள்’ அப்படியான வெளிப்பாடு கொண்டிருக்கிற படைப்பு. உயிர்த்தேன் ஒரு பத்திரிகையில் தொடருக்காக எழுதப்பட்ட நாவல் என்பதாக வாசித்த நினைவிருக்கிறது.

ஒரு படைப்பினை எழுதுவதற்கு படைப்பாளருக்கு எதுவோ உந்துசக்தியாக் இருந்திருக்க வேண்டும். உயிர்த்தேன் நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தின் சமூகப் பின்னணியைப் பார்க்கையில் நகர வாழ்க்கையின் சலிப்பில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள கிராமம் நோக்கி வருகிற ஒருவரது அனுபவங்களைச் சொல்கிற நாவல் எனலாம். மற்றொரு பார்வையில் அதிகாரப் பகிர்வைப் பற்றி பேசுகிறது என்றும் கொள்ளலாம். தன்னிறைவு பொருளாதாரம் பற்றியும் சொல்கிறது எனலாம். இதையெல்லாம் கடந்து இந்த நாவல் உயிர்ப்போடு இருப்பதென்பது நாவல் மாந்தர்கள் தங்கள் மனதுக்குள் நடத்துகிற விசாரங்களால் தான்.

தி.ஜாவினுடைய எழுத்தின் வலிமை என்பது அவரால் ஒரு மனிதனின் மனதை பாகம் பாகமாக பிரித்து எழுத்தில் கொண்டு வந்து விட முடியும். ‘உயிர்த்தேன்’ அதனை அற்புதமாக செய்திருக்கிறது. இதை வாசித்து முடிக்கையில் ஆச்சரியம் தரும் ஒன்றிருந்தது. இந்தக் காலகட்டத்தில் கூட பேசுவதற்கு தயக்கம் கொள்கிற ஒன்றை ஐம்பது வருடங்களுக்கு முன்பு சரியாகக் கையாள முடிந்திருக்கிறது என்பது தான்.

சொந்த கிராமமான ஆறுகட்டிக்கு நகரத்தில் இருந்து குடும்பத்துடன் குடிபெயர்ந்து வருகிறார் பூவராகன். செங்கம்மா என்கிற ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அவளுடைய நிதானமும், அழகும் அவரை பாதிக்கின்றன. அவளிடம் சகல திறமைகளும் இருப்பதை புரிந்து கொள்கிறார். அந்த ஊரில் உள்ள கோயிலை மறுநிர்மாணம் செய்ய முடிவு செய்கிறார். செங்கம்மாவின் யோசனையின் பேரில் அந்த ஊரின் விவசாய சாகுபடியை தானே முன்னின்று செய்கிறார். ஊரும் கோயிலும் மறுநிர்மாணம் ஆகிறது. செங்கம்மா மேல் தாள முடியாத ஈர்ப்பு கொள்கிற பழனிவேல் அதனை வெளிப்படுத்தத் முடியாமல் தவிக்கிறான். அந்தக் கோபம் எல்லாம் செங்கம்மா பூவராகன் வீட்டில் அவள் வேலை செய்வதை நோக்கித் திரும்புகிறது. பூவராகன் மீதும் எரிச்சல் கொள்கிறார். ஊரை உதாசீனம் செய்கிறார். செங்கம்மா ஊர் நிர்வாகியாக பூவராகனால் மாற்றப்படுகிறாள். செங்கம்மாவை ஊரே கொண்டாடுகிறது. பழனிவேலை செங்கம்மா சந்திக்கிறாள். அந்த சந்திப்பு இருவர் மனதிலும் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இனி தன்னால இந்த ஊரில் வாழவே முடியாது என்று பழனிவேல் கிளம்புகிறான். இறுதியில் செங்கம்மாவின் நினைவு தாளாமல் தன் நினைவையே தன் உடலோடு அழித்துக் கொள்கிறான்.

காமமும், காதலும் பற்றிப் படர்வது. வெட்ட நினைத்தால் இன்னும் வீரியம் கொள்வது. நம்முடைய உடைமை அல்லாத ஒன்றின் மீது கொள்கிற இவை இரண்டும் மிகுந்த மன உளைச்சலைக் கொண்டு வருபவை. செங்கம்மாவின் மீது கொண்ட ஈர்ப்பை பூவராகனும், பழனிவேலும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது நாவல் பேசுகிற மிக முக்கியமான களம்.

பூவராகன் செங்கம்மாவைப் பார்த்ததுமே தன்வசம் இழக்கிறார். செங்கம்மாவை அவரால் ஒரு மனிதப் பிறவியாகவே நினைத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்றி வைத்த தீபம் காணுமிடங்களில் எல்லாம் சுடர் விடுவது போல் செங்கம்மா பூவராகனின் உள்ளும் புறமும் நிறைகிறாள். அந்த சோதியினைக் கொண்டு தன்னை பொசுக்கிக் கொள்ளலாம் அல்லது தன்னுடைய அக இருளைப் போக்கிக் கொள்ளலாம் என்கிற இரு தேர்வுகள் பூவராகனுக்கு. அவர் தன் அகஇருளை விரட்டுகிறார். பழனிவேல் தன்னைப் பொசுக்கிக் கொள்கிறான்.

தமிழில் பெண்களை பற்றி அழகியலோடும், மதிப்புடனும் எழுதிய படைப்பாளர்களில் தி.ஜானகிராமன் முதன்மையானவர். இவருடைய பெண் கதாபாத்திரங்கள் ஒரே வார்ப்பில் செதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மனிதப் பிறவியின் அத்தனை நல்லதுகளையும் தன்னுள்ளே கொண்ட கதாபாத்திரங்கள். தி.ஜா அவர்கள் அப்படியான ஒரு பெண்ணை கண்டிருக்க வேண்டும் அல்லது தேடலில் தோற்று சிருஷ்டித்திருக்க வேண்டும்.

மோக முள் யமுனாவை ‘அம்மா வந்தாள்’ அலங்காரத்தம்மாவிடம் காண முடியும்.. இவர்கள் இருவரையும் செங்கம்மாவிடமும், அனுசூயாவிடமும் கண்டுகொள்ள இயலும்.

உயிர்த்தேன் நாவலில் வருகிற நான்கு பெண் கதாபாத்திரங்களையும் தனித்தனியாக சொல்லாமல் நிறைவுபெறாது. செங்கம்மா வறண்டபூமியான சிவகங்கையில் வளர்ந்து ஆறுகட்டிக்குத் திருமணமாகி வந்தவள். பூவராகனின் மனதினைப் போலவே அவளுக்கும் இந்த ஆறுகட்டியின் மண் மனம் பிடிக்கிறது. நிலத்தின் வெறுமையை சந்திப்பவர்கள் அதன் வளத்தைக் காணுமிடத்தில் அதனுடன் இயல்பாய் அன்பு கொள்கிறார்கள். ஊர் முழுவதும் நிலத்தினை பாழாக்கிக் கொண்டிருக்க அது தாள மாட்டாமல் பூவராகனிடம் ஊர் நிலத்தினை சாகுபடி செய்யும்படி சொல்கிறாள். அப்படி அவளை சொல்லச் செய்தது அவள் பிறந்து வளர்ந்த மண்ணான சிவகங்கையாகவே இருக்க முடியும். நுட்பமான ரசனை கொண்ட பெண். நேர்த்தியாக பேசத் தெரிந்த பெண்கள் யாவரையும் வசப்படுத்துகிறார்கள். செங்கம்மா அப்படியானவள். எதையும் நறுக்கென்று சொல்லத் தெரிந்தவள். பல இடங்களில் இதற்கான உதாரணங்கள் நமக்கு வாய்க்கின்றன. குறிப்பாக பூவராகனின் நண்பரான ஆமருவியிடம் பழனிவேலைப் பற்றி முதன்முதலாக பேசுவது. தன்னை அகலிகையாகவும் பழனிவேலை இந்திரனாகவும் அவள் சித்தரித்து பேசுகிற விதம். ஆமருவி என்கிற ஒரு கலைஞனின் மனதில் அது பல்வேறு ரூபங்களாக விரிகின்றன. அவை கோபுர சிற்பங்களில் கலையாய் வெளிப்படுகின்றன.

“இவங்க பண்ணியிருக்கறதையும் கொஞ்சம் ஞான திருஷ்டியோட தான் பாக்கணும். எல்லாக் கோபுரத்தையும் பாக்கற மாதிரியில்ல,..என்னமோ தினுசா இருந்தது. அப்புறம் பார்க்கப் பார்க்க என்னென்னெமோ எல்லாம் தோணிக்கிட்டே இருந்தது. பொம்மை எல்லாம் இப்படித் தான் பண்ணனும் போலருக்கு. இது தான் சரி, மத்தவங்க பண்றதை எல்லாம் இனிமே பார்க்கக்கூட முடியாது போலருக்கேன்னு தோணிக்கிட்டே இருந்தது..” என்று செங்கம்மா போல ஒரு பெண் சொல்கையில் ஆமருவி போன்ற கலைஞனுக்கு அதை விட பெரிய அங்கீகாரம் ஒன்று இருப்பதில்லை.

செங்கம்மா பொம்மைகளை மட்டுமல்ல மனிதர்களையும் அதே கூர்த்தன்மையோடே கவனிக்கிறாள், உள்வாங்குகிறாள். அதனாலேயே எல்லோருடைய பலம் பலவீனங்களைக் கடந்து அவளால் அனைவரையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது. தன்னை இந்த ஊர்க்காரர்கள் வெண்ணையும் சுண்ணாம்புமாகத் தான பார்க்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுக்காக பேச முடிகிறது. பழனிவேல் தன்னை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தும் அவனை வெறுத்து ஒதுக்க அவளால் இயலவில்லை.

பழனிவேல் மீது செங்கம்மாவிற்கு இருப்பது அசூயை அல்ல, தன்னை நெருங்க முடியாது என்று தெரிந்தும் தன் மேல் இப்படி பித்துக் கொண்டிருக்கிறானே என்கிற பரிதாபம். அதனால் ஏற்படுகிற சிறு கோபம், ஒரு விலகல். பழனிவேலை சந்திக்க செல்கிறபோது அவளுக்குள் அவனைக் குழந்தையாக்கி குறும்பு செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது. கடைசியில் செய்வதறியாத குழந்தை போல் மாறுகிறாள்.

செங்கம்மா கால்களில் பழனிவேல் விழுந்ததும், அவளைக் கட்டி அணைத்து முத்தமிட்டதும் செங்கம்மாவை நிலைகுலையச் செய்கின்றன. அதன்பின் அவள் தன்னை ஒதுக்கிக் கொள்கிறாள். மனதுக்குள் ஒடுங்குகிறாள். பழனிவேல் தன்னைத் தொட்டான் என்பதற்கான ஒதுங்கல் அல்ல அது. இப்படி பழனிவேலை செய்யத் தூண்டியது தன்னுடைய தவறு என்கிற குற்ற உணர்வு தான். தன்னுடைய அழகும், தனிமையில் அவனை சந்தித்த செய்கையுமே எரிந்து கொண்டிருந்த அவன் மன நெருப்பினைத் தூண்டி விட்டிருக்கிறது என்கிற குற்ற உணர்வு தான் எல்லாவற்றிலிருந்தும் அவளை விலக்கிவைத்தது. அது தன்னுடைய தவறில்லை என்று அனுசூயாவால் தெரியவருகிறபோது அவள் சட்டென்று பழைய நிலைக்கு மாறுகிறாள். நுட்பமான ஒரு இடம் இது நாவலில். தி.ஜா அதன் அடியாழம் வரைத் தொடுகிறார்.

செங்கம்மாவின் மற்றொரு பிரதி தான் அனுசூயா. தனிமை அவளை யாவரின் மீதும் பிரியம் கொள்ள வைக்கிறது. பிரியமும், அன்பும் என்னவெல்லாம் செய்யும் என்று தெரிந்து வைத்திருக்கிற மனுஷியாக இருக்கிறாள் அனுசூயா. அதனாலேயே யாரையும் காயப்படுத்தாமல் வாழ முடிகிறது அவளால். செங்கம்மாவின் நிலையைக் கடந்து வந்தவள் அனுசூயா. தன்னை அடைய முடியாத ஒருவன் தன வாழ்க்கையை அழித்துக் கொண்டதை கண்டவள். அது அவளை எல்லோர் மீதும் வரையறையற்ற பிரியமாய் மாற்றுகிறது. ஆனால மனதுக்குள் தனிமையாக வாழ்பவள். கொடுக்க மட்டுமே தெரிந்த எதிர்பார்ப்பில்லாத ஒரு ஆத்மா. அதனால் தான் அவளிடம் எடுத்ததை யாவரும் திருப்பித் தருகையில் அதனை அளவோடு எடுத்துக் கொண்டு பிரியத்தை செலவழிக்கிறாள். ஆமருவியைத் தான் திருமணம் செய்திருந்தால் அவனை மட்டுமே எப்போதும் ஆராதித்துக் கொண்டு இருந்திருப்பாள் என்று அனுசூயா செங்கம்மாவிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்த இடம். ஆமருவிக்கும் அனுசூயாவுக்கு பல விஷயங்களில் ஒத்துப் போகிறது என செங்கம்மாவால் கண்டு கொள்ள முடிந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆமருவி போன்ற ஒருவருக்கானது அல்ல தனது பிரியம். அது இந்த உலகத்தில் உள்ள பாவப்பட்ட ஜீவன்களுக்கானது. ஏனெனில் தானும் ஒரு அடிபட்ட பிறவி தான் என்பதே அனுசூயா அனைவருக்கும் சொல்ல விழைவது. அதனை செங்கம்மாவால் புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவளிடம் மனம் திறந்து தன்னுடைய தனிமை வாழ்க்கைக்கான காரணத்தை சொல்கிறாள்.

தனக்காக ஒருவன் மரணத்தை தழுவியிருக்கிறான் என்பதை அவளால் கடக்கவே முடியாமல் போகிறது. ஆனால் தான் பார்ப்பவர்கள் யாவரிடமும் அவனைக் கண்டு அவன் பால் செலுத்த இயலாத பரிவை மற்றவர்களிடம் செலுத்தலாம் என்கிற ஒரு தவத்தில் வாழ்பவளாக இருக்கிறாள். யாருக்கு எது தேவையோ அதைத் தன்னிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிற அவளது சுபாவம் புரிந்து கொள்ள கடினமானது. ஆனால் புரிந்து கொள்ள வைத்திருப்பது தான் அற்புதம். பழனிவேலின் மரணச் செய்தி கேட்டதும் உடைந்துவிடுகிற செங்கம்மாவைத் தேற்றுவதற்காகவே அனுசூயா ஆறுகட்டிக்கு வந்திருக்கக்கூடும். செங்கம்மா தன்னைப் போல் ஆகிவிடக்கூடாது என்கிற அனுசூயாவின் மனப்பதற்றம் தான் செங்கம்மாவைத் தேறுகிறது.

புராணக் கதையில் அனுசூயா கதாபாத்திரம் கடவுள்களையும் குழந்தைகளாக்கியது. இந்தக் கதையிலும் அனுசூயா அப்படியானவளாகவே இருக்கிறாள். அனுசூயாவின் கதாபாத்திரப் படைப்பு நிகரற்ற ஒன்று என நிச்சயமாக சொல்லமுடியும்.

பூவராகனின் மனைவி ரெங்கநாயகி தன்னுடைய உடல்நிலை காரணமாக தன மேல் சுயஇரக்கம் கொள்கிற ஒரு பெண். ஆனால் எதையும் அதன் போக்கில் செல்ல அனுமதிப்பவள். பெண்ணுக்கே உண்டான சூட்சுமத்தைக் கொண்டவள் தான். அதே நேரம் தன்னுடைய கணவன் செங்கம்மாவை முன்னிறுத்தும் போதெல்லாம் அதனை தன்னுடைய குரலாகவே மாற்றிக் கொள்கிறாள். செங்கம்மாவின் மீது அவளுக்கு ஒருபோதும் பொறாமையோ, அசூயையோ எரிச்சலோ வருவதில்லை. அவளை ஆராதிக்கிறாள் மிகுந்த மனவிசாலம் இருப்பவர்களாலே மட்டுமே முடிகிற காரியம் இது. செங்கம்மாவையும், அனுசூயாவையும் அவளால் அன்பெனும் தராசில் ஒன்றாக ஏற்ற முடிகிறது. அனுசூயா எப்படியான பெண் என்பதை நாம் பூவராகனின் பார்வையில் பார்ப்பதைக் காட்டிலும் ரெங்கநாயகியின் கண்ணோட்டத்தில் பார்த்தே வியக்கிறோம். ரெங்கநாயகி ஆச்சரியம் தருகிற ஒரு வார்ப்பு.

நரசிம்மனின் மனைவி லக்ஷ்மியும் அத்தனை கச்சிதமான ஒரு பாத்திரம். கண்ணுக்கும், மனதுக்கும் அழகான பெண்ணை இந்த சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை அவள் நரசிம்மனிடம் பேசுகிறபோது சொல்கிற விதம் மிக ஆழமான இடங்கள்.

“பொண்டாட்டி சொத்தா இருக்கறது போதாதுன்னு சிநேகிதனும் உங்களோட தான் பேசனும், உங்க யோசனையைத் தான் கேட்கணும், உங்க மூலமாத் தான் அவன் மத்தவங்க பேசணும்னு நினைச்சிகிட்டா எப்படி?”

போகிறபோக்கில் சொல்கிற ஒரு வார்த்தை. “பொண்டாட்டி சொத்தாக இருக்கறது” என்பது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இதைப் பற்றி தி.ஜா பேசியிருக்கிறார். இந்த யதார்த்தத்தை வேறு எவரும் இந்த நாவலில் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை. செங்கம்மாவும், ரெங்கநாயகியும் தத்தமது கணவர்களால் மதிக்கப்படுபவர்கள். அதனால் லக்ஷ்மியால் செங்கம்மாவை முன்னிறுத்தி இதனை சொல்லிவிட முடிகிறது.

யதார்த்தத்திலும் கூட மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவருக்கான இடங்களில் உயர்ந்து நிற்கிறார்கள். தி.ஜா மனித மனங்களைக் குறித்தே அதிகமும் எழுதியிருக்கிறார். அவாருடைய அனைத்து படைப்புகளிலுமே மாந்தர்கள் தங்களை ஏதேனும் ஒரு கணத்தில் உணருகிறார்கள். அந்தக் கணத்தில் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். இந்த நாவலிலும் கூட இதே உணர்வுநிலை எட்டப்படுகிறது.

செங்கம்மாவின் கணவன் கணேசன் பழனிவேலிடமிருந்து பெறுகிற கடிதத்தை வாசிக்கிறபோது அவர் மனம் செங்கம்மாவை மேலும் உயர்த்துகிறது. அதன் மூலம் தானே உயர்ந்து நிற்கிறார். பூவராகன் தன் மனதில் செங்கம்மாவைக் குறித்து நினைத்துக் கொண்டதை மறைவில்லாம விளக்குகிறபோது உயர்கிறார்.

பழனிவேலு செய்தது எல்லாம் அனைத்து மனித மனங்களிலும் உள்ள ஒரு இருளான பகுதி தான். ஆனால் அதை அவன் தன்னுடைய வாழ்நாள் தவறாக நினைக்கிறான். அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறபோது அனைவரையும் போல நமக்கும் ஆச்சரியம் ஏற்படுகிறது.

இவர்கள் மட்டுமல்ல ஆதிமூலம், திருநா, அம்பா கடாட்சம், ஸ்வேதாரண்யம் என அனைவருமே தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் அதனை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். “சண்டைக்காரனோடு சமாதானம் செய்து கொள்கிறது, பெண்ணோடு கூடுகிற மாதிரி. அப்படி ஒரு கிளுகிளுக்கிற உணர்வு அது” என்று நாவலில் ஓரிடத்தில் வரும். இந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருமே இந்த உணர்வினை அடைகிறார்கள். இந்தப் படைப்பு சாதித்தது இங்கு தான்.

தி.ஜானகிராமன் வர்ணனைகளின் அரசன். ஒரு புல்லினைப் பற்றி விவரிப்பதிலும், மனிதர்களின் உருவத்தை சொல்வதிலும் ஒரேவிதமான  நேர்த்தியும், அழகும் இருக்கும். ஆறுகட்டிக்குள் நாம் நுழையும்போதே அந்த ஊரின் இட, வல பக்கத்தை அறிந்து கொள்கிறோம். அங்கே இருக்கிற எதுவும் நமக்குத் தெரியும் என்பதான ஒரு கற்பனை வந்துவிடுகிறது. அங்கு வாழும் மனிதர்களின் குணத்தைப் போலவே அவர்களின் உருவமும் நமக்குள் பதிகிறது.

மிக நுட்பமானதொன்றை ரசிக்கும்படியாகத் தந்த படைப்பு என்று உயிர்த்தேன் நாவலை சொல்லலாம். அதனால் தான்  ஐம்பது வருடங்கள் கடந்தும் நம்மால் அதன் அசல் உயிர்ப்போடு வாசிக்க முடிகிறது. இந்தப் படைப்புக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய சன்மானம் அதுவே.

(பேராசிரியர் திரு கல்யாணராமன் தொகுத்த ஜானகிராமம் கட்டுரைத் தொகுப்புக்காக எழுதிய கட்டுரை)

புகைப்படம் நன்றி சசிகுமார் சாமிக்கண்ணு

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rjgopaalan
Rjgopaalan
1 year ago

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும், அது கொடுக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்களை மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்.

ஒரு வேளை செங்கம்மாவோ, பழனிவேலோ,அனுசுயாவோ நிஜமாக இருந்திருந்தால் இதை படித்து மகிழ்ந்திருப்பார்கள்.

தனது படைப்பை ஒருவர் உள்வாங்கி, ரசனையோடு எழுத்துகளாக, அவர்பார்வையில் எப்படி பார்க்கிறார் என்பதே.. ஒரு ஆகச்சிறந்த மகிழ்வாக இருக்கும் ஒரு படைப்பாளிக்கு

நிச்சயம் திரு.தி.ஜானகிராமன் இக்கட்டுரையை படித்தால் மகிழ்ந்திருப்பார்.
அவர் பார்வைக்கும் சென்றிருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் மேம்.
.

Sasikumar Samikan
Sasikumar Samikan
1 year ago

நீங்கள் கதையை உள்வாங்கும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது. சிலிர்ப்பு நாவலை வாசித்துவிட்டு மீண்டும் இந்த கட்டுரையை வாசிக்க வேண்டும்.