‘ஸ்பேரோ’

0
426

கடந்த வருடம் எழுத்தாளர் அம்பை சென்னைக்கு வந்திருந்தார். அவர் தற்போது குடியிருப்பது மும்பையில். அவரைச் சந்திக்க வேண்டுமென்று நான் ஆர்வம் கொண்டிருந்தேன். எழுத்தாளர் தமயந்தி அம்பையை சந்திப்பதற்காக என்னை அழைத்துப் போனார். அடையாரில் உள்ள ஒரு உணவகத்தில் அம்பையை சந்தித்தோம். அவருடைய கதை குறித்து எனக்கு பேச வேண்டியிருக்கவில்லை. காரணம், அந்தக் கதைகள் எனக்கும் அதற்குமான தனிப்பட்ட உரையாடல்களைக் கொண்டிருந்தன. நான் நேரில் சந்திக்க விரும்பும் எழுத்தாளர்களில் முதன்மையானவராக அம்பை இருந்தார். தொடர்ந்து அவரது கதைகளையும், செயல்பாடுகளும் எனக்கு உற்சாகமளிக்ககூடியதாய் இருக்கின்றன. அந்த முறை அவர் சென்னை வந்திருந்தது கூட அவரது ஆய்வுப் பணிக்காக. தொடர்ந்து ஒருவர் எந்த சலிப்புமில்லாமல் தனக்குப் பிடித்த ஒன்றுக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

கல்லூரி படிக்கும் காலத்தில் அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ தொகுப்பினை  நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்தேன். ஆனால் அதை அப்போது வாசிக்க முடியவில்லை. வேறொரு நண்பர் படித்து விட்டுத் தருவதாக எடுத்துச்சென்று விட்டார். அதன் பின் அம்பையின் சிறுகதைகளை வாசிக்கக் கூடவில்லை. சென்னையில் வேலைக்கு சேர்ந்த பிறகு வாங்கிய புத்தகங்களில் ‘வீட்டின் மூலையில் சமையலறை’ புத்தகம் சிறுகதைத் தொகுப்பு புத்தகமும் இருந்தது.

‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்கிற கதையை அதற்கு முன்பு எவரும் எழுதியதில்லை. அம்பை இந்தக் கதை எழுதிய இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு The Great Indian Kitchenஎன்கிற திரைப்படம் மலையாள மொழியில் வெளிவந்த போது எல்லோராலும் மீண்டும் மீண்டும் இந்தக் கதை பேசப்பட்டது. தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்றென இந்தக் கதையை  சொல்லமுடியும். எப்போதும் அந்தக் கதைக்கு அந்த மதிப்பு உண்டு. மீனாட்சி என்கிற ஒரு பெண் ஒரு ராஜஸ்தான் குடும்பத்துக்கு மருமகளாகிறார். அந்த வீட்டின் சமையலறையில் இருந்து கதை விரிகிறது. மிக ஒடுக்கம் கொண்ட அந்த சமையலறையில் இரண்டே ஜன்னல்கள். இரண்டும் சிறியவை. பெரிய வீடு, போனால் போகிறதென்று  வீட்டோடு ஒட்டியது போல கட்டப்பட்ட ஒரு சமையலறை. ஆனால் அந்த வீடே ஆறு வேளைகளில் உண்ணப்படும் உணவுகளால ஆனதாக இருக்கிறது. அந்த வீட்டின் மருமகள்கள், சித்திகள், பாட்டிமார்கள் என எல்லாரும் புழங்கும் இடம் அது. யார் யாருக்கு என்னென்னா அதிகாரம் என்பதைச் சொல்லாமல் சொல்லும் கதையின் ஓரிடம். மீனாட்சி கேட்கிறாள் “இந்தச் சன்னலில் இருந்து பார்த்தால் எதிரில் மலை அழகாகத் தெரிகிறது..ஆனால் ஏன் அங்கு துணி காயபப்டும் கயிறைக் கட்டி மலையை மறைக்கிறீர்கள்..சமையலறையைக் கொஞ்சம் விசாலப்படுத்த இடமும் இருக்கிறதே’ எனக் கேட்க, அவள் கோரிக்கை சொல்லால் அல்ல செயலால் நிராகரிக்கப்படுகிறது. அந்த வீட்டின் தலைவர் கூடுதலாக இரண்டு நைலான் கயிறுகளை அங்கு துணி காயப் போட வேண்டி கட்டுகிறார்.

இருந்து நாள் முழுவதும் சப்பாத்திக்கு மாவு பிசைவதும், உருளைக்கிழங்குகளை உரிப்பதும், இறைச்சிகளை மஞ்சளில் கிளறுவதுமாக பெண்கள் தங்களுக்கே இட்ட அற்புத வாய்ப்பாக நினைத்து செய்து கொண்டே இருக்கிறார்கள். “ஒளியற்ற ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபாஸ் ஜந்துவின் எண்கால் போல் ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப் போட்டன. கால்கள் இறுக இறுகக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும் தலையில்பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள்” என்று எழுதியிருப்பார். அஜ்மீர் ராஜஸ்தானியக் குடும்பத்தின் கதை அல்ல இது. நம்முடைய அம்மாக்களும், பாட்டிகளும் மனைவிகளும், சகோதரிகளும்  தான் அந்தப் பெண்கள். அவர்களின் உலகம் சமையல் அறையிலிருந்தே தொடங்குகிறது. அவர்களது அதிகாரமும் அங்கேயே தொடங்கி அங்கேயே முடிகின்றன.

எங்கு போனாலும் சமையலறையையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லும், அதை ஒரு இயல்பாக மாற்றி வைத்திருக்கும் ஆண், பெண் என அத்தனை பேருக்குமான கதை இது.    ‘ஒருவேளை மூளையின் அத்தனை திறப்புகளிலும் பூண்டும், மசாலாவும், பூரியும் அடைத்துக் கொண்டிருக்காவிட்டால், நீங்களும் கைலாயத்தில் உட்கார்ந்து காவியம் எழுதியிருக்கலாம், இராசாயனக் குண்டுகள் இல்லாத உலகத்தை யோசித்திருக்கலாம், ஆப்பிள் மரத்தில் இருந்து விழுவதைக் கவனித்திருக்கலாம் என்று மீனாட்சி அந்த வீட்டின் மூத்த உறுப்பினர் ஜீஜாவைப் பற்றி நினைப்பாள்.

இதே தொகுப்பில் நான் ரசித்துப் படித்த ஒரு கதை ஒன்றுண்டு. ‘வெளிப்பாடு’ என்று பெயர். இந்தக் கதையில் வரும் அனுபவம் பலமுறை எனக்கு நிகழ்ந்துள்ளது. எந்த வெளியூருக்கும் தனியாக பயணம் செய்து வருகிறேன். எனக்குத் தெரிந்த ஒருவர் எப்போது என்னை ஆட்டோவிலோ , டாக்சியிலோ அனுப்பும்போது ஓட்டுநரிடம் “பத்திரமா கூட்டிட்டு போங்க..தனியா இருக்காங்க” என்பார். எனக்கு சில சமயங்களில் சிரிப்பு வரும். அதே மாதிரியான கதை தான் இது. டெல்லியில் இருந்து  இருந்து ஆய்வுக்காக வரும் ஒரு பெண் திருநெல்வேலிக்கு வருவார். தெரிந்தவர் வீட்டில் ஒருநாள் தங்குவார். அந்த வீட்டின் பெண்ணுக்கும் இவருக்கும் நடக்கும் உரையாடல்கள் அற்புதமாக அமைந்திருக்கும். கிளம்பும்போது திருநெல்வேலியில் இருந்து பக்கத்து ஊருக்கு பேருந்து ஏற்றிவிடுகையில் பஸ் கண்டக்டரிடம் இவரைப் பத்திரமாகப் பார்த்துக்கங்க..ஊருக்குப் புதுசு என்பார் அந்தத் தெரிந்தவர்..

 பிறந்த குழந்தை  இறந்தபோது அதன் அஸ்தியைக் கரைத்த கடலில் குழந்தையின் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். அங்கு அலையடித்து வந்து கரையில் போட்ட மஞ்சள் மீன் நெளிகிறது. அஸ்தி கரைத்த கடலில் இருந்து ஜீவனுக்காக துடிக்கும் மற்றொரு உயிர்..அதைக் கடலில் திரும்ப எடுத்துப் போட அவளால் முடியவில்லை. அது வழுக்குகிறது. அதனை மீண்டும் கடலுக்கும் கொண்டு விடுகிறான் மீனவச்சிறுவன். அந்த மஞ்சள் மீன் கடலின் நீலத்தோடு கரைந்து உள்ளே போகிறது. இப்படியொரு கதை. ஒரு தேர்ந்த சிறுகதைக்கு வார்த்தைகளின் அளவோ பக்கங்களோ அவசியமில்லை என்பதை உணர்த்தும்படியான ஒரு நல்ல அனுபவத்தைத் தருகிற கதை இது.

இந்தத் தொகுப்பில் தொடங்கி தொடர்ந்து அம்பையின் கட்டுரைகளை, அவர் எடுத்த நேர்காணல்களை தொடர்ந்து படித்து வருகிறேன். ஒரு காத்திரமான குரல் அவருடையது. அவருடைய சமகாலத்திலும், அதற்கு முன்பாகவும் எழுதிய எழுத்தாளர்களில் இருந்து அம்பை வேறுபாடும் விதம் தொடர்ந்து அவரை வாசிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்ணிய எழுத்தாளர் என்று அவர் எப்போதும் சொல்லப்படுகிறார். ஆனால் , அவர் பெண்களைக் குறித்தும் கதைகள் எழுதியிருக்கிறார் என்றே சொல்ல முடியும். எதையும் அவர் பிரசாரமாக உரத்து சத்தமிட்டு  சொன்னதில்லை. அது அவரது கதையில் இருக்கும் பலமென சொல்ல முடியும். பெண்கள் தங்களுக்காகப் போட்டுக்கொள்கிற வளையங்களையும் அழுத்தங்களையும்  குறித்து அதிகம் எழுதியிருக்கிறார். அவர் காட்டும் பெண்கள் உலகத்தில் எல்லாவிதமானவர்களும் இருந்தார்கள். அவர்களைச் சுற்றி எல்லா விதமான மனிதர்களும் இருந்தார்கள்.

அம்பை அவர்களின் சிறுகதைகளில் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’, ‘காட்டில் ஒரு மான்’ போன்றவை என்றைக்குமாக நாம் வாசிக்க வேண்டிய கதைகள்.

அம்பையினுடைய மற்றொரு பலமென்பது இந்தியாவின் நகரங்கள், கிராமங்களில் உள்ள வாழ்க்கை முறையினை அவர் சொல்லும் விதம். அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்ததில் நமக்குக் கிடைத்த கொடைகள் இவரது கதைகள். அஜ்மீர் குடும்பத்தையும், திருநெல்வேலியையும், டெல்லியையும், மும்பையையும் அவரால் கதைகளுக்குள் கொண்டு வர முடியும். ஒவ்வொரு மாநிலங்களில் அரசியல் பின்புலத்தையும் அவர் கதைத் தளமாகக் கொண்டு வந்திருக்கிறார்.

ஸ்பேரோ என்கிற அமைப்பினை அவர் நடத்துகிறார். இதற்காக இந்தியா முழுவதும் அம்பை பயணம் செய்கிறார். வெவ்வேறு துறைகளில் ஆளுமை கொண்டுருக்கிற பெண்கள் குறித்து இந்த அமைப்பின் மூலமாக ஆவணப்படுத்துகிறார். இப்போது அவரிடம் பெண் ஆளுமைகள் குறித்த பெரும் ஆவணக் களஞ்சியமே இருக்கிறது. அவர்களில் கோயம்புத்தூரில் ஒரு பெண்மணியைச் சந்தித்தது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தப் பெண்மணி கோலம் போடுவதில் மிகத் தேர்ந்தவர். கடவுளகர்களின் உருவத்தை தத்ரூபமாக கோலம் போடுவார். நவராத்திரி சமயங்களில் பாலின் மீது கோலம் போட்டு அதைக் கெடாமல் பத்து நாட்கள் வரை பாதுகாப்பார் என்பதை எல்லாம் கேள்விப்பட்டு அவரைப் பற்றி ஆவணப்படுத்த  வேண்டும் என அம்பை அவரை சந்திக்கப் போயிருக்கிறார். அந்தப் பெண்மணியின் கணவர் இவர்களது நேர்காணல்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பது போல நாளிதழோடு உட்கார்ந்திருக்கிறார். அந்தப் பெண்மணியோ தன்னுடைய பேரக்குழந்தையை  இடுப்பில் வைத்துக் கொண்டே அம்பையிடம் பேசியிருக்கிறார் “கோலம் போடுவதில் எப்படி இத்தனை ஆர்வம் ஏற்பட்டது?”என்று கேட்கையில் அந்தப் பெண்மணி தனக்கு இசையிலும் ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் என்றும் வாய்ப்பாட்டு பாடி பயிற்சி எடுக்கையில் அது மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என யாருக்கும் தொல்லை தராத கோலம் போடுவதைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியிருக்கிறார். ஏன் கடவுளர் படத்தையே வரைகிறீர்கள்..வேறு உருவங்களையும் முயற்சி செய்யலாமே என்று கேட்க, கடவுளர் படத்தைத் தவிர பறவை, மரங்கள் என வரைந்தால் அது பொழுதுபோக்கு என்பதாக மாறிவிடுகிறது என்றும் கடவுளர் படத்தினை வரைவதால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள் என்றும் அந்தப் பெண்மணி சொல்லியிருக்கிறார். அம்பை அந்தக் கட்டுரையில் இப்படிச் சொல்கிறார். அந்தப் பெண் தொடர்ந்து மௌனத்தையே மொழியாக்கியிருக்கிறார். தனக்கு விருப்பமான இசைக் கலையை கைவிட்டதில் ஒரு மௌனம், தனக்குப் பிடித்த ஓவியத்தை கோலமாக்கியதில் ஒரு மௌனம், பிடித்த உருவங்களை வரைய முடியாமல் கடவுளர்களை வரையத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒரு மௌனம்..யாரிடமும் இது குறித்து இதற்கு முன்பு பேசாமலிருந்ததில் ஒரு மௌனம்..” என்கிறார் அம்பை.

அவர் எழுதிய கதைகளுக்கு நிகரானதாக அவரது இந்த உழைப்பு முக்கியமானவை. சுதந்திரப் போராட்டக்காலத்தில் அதில் கலந்து கொண்ட பெண்கள், இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் என அதிகம் பிரபலமாகாத ஆளுமைகளை தேடித் தேடி அவர் ஆவணப்படுத்திய பெண்களில் பலர் இன்று காலத்தோடு சென்றிருக்கலாம். ஆனால் அவர்களை ஆவணம் செய்ததின் மூலமாக அவர்களின் இருப்பிற்கு பெரும் வலு செய்திருக்கிறார் இவர்.

சாகித்ய அகாடெமி விருது, டாடா நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது என தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இப்போது எழுதி வருகிறவர்களின் படைப்புகளைத் தொடர்ந்து படிப்பதோடு அது குறித்த கருத்துகளையும் அவர் சொல்லிவருவது முக்கியமானது. ஆங்கிலம், ஸ்வீடிஷ் போன்ற மொழிகளில் இவரது படைப்புகள் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அவரை சந்திக்கையில் எனக்கிருந்த மகிழ்ச்சி, இந்திய இலக்கிய ஆளுமைகளில் ஒருவரை சந்திக்கிற இருக்கிறோம் என்பது கடந்து அவர் ஒரு தோழியைப் போல இன்னும் சொல்லப்போனால் குழந்தையின் ஆர்வத்தோடு எலலாவற்றையும் கேட்டதையும், பகிர்ந்ததையும் சொல்ல முடியும். இதனை முதிர்ச்சி என்றும் சொல்ல வேண்டும்.  

(மல்லிகை மகள் இதழுக்காக எழுதிய கட்டுரை)

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments