வாழை

8
1546

வாழை படத்தினை ஹாட்ஸ்டாரில் பார்த்தேன். ஒரு திரைப்படத்துக்கு என்று வழக்கமாக உள்ளத் திரைக்கதை யுத்தி எதுவும் படத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஒரு டீன் ஏஜ் சிறுவனின் பார்வையில் படம் சொல்லப்பட்டிருக்கிறது. இது மாதிரியான கதை சொல்லல் முறையினை பொதுவாக ஈரானியத் திரைப்படங்களில் பார்க்க முடியும். எந்தவொரு பெரிய விஷயத்தையும் அங்குள்ள இயக்குநர்களில் சிலர் ஒரு காலகட்டம் வரையிலும் சிறுவர் சிறுமிகளைக் கொண்டே சொல்லி வந்தார்கள். அவர்களுக்கு வேறு வழியும் இருந்திருக்கவில்லை. அந்த நாட்டின் திரைப்படத் துறைத் தணிக்கை அப்படியானது. ஆனால், ஒரு உணர்வினை அவர்களால் கதை வழியே நமக்குள் கொண்டு வந்துவிட முடியும். அதில் தேர்ந்தவர்கள் அவர்கள்.

‘வாழை’ படம் தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம் என்கிற ஊரில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை வழியே பயணிக்கும்போது நம்முடன் தாமிரபரணியும், வாழை மரங்களும் கூடவே வரும். இயக்குநர் மாரி செல்வராஜ் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பார்த்த, அனுபவித்த ஒரு களத்தை நமக்குத் தந்திருக்கிறார்.

எனக்கு இந்தப் படத்தில் ஈர்த்த சில விஷயங்கள் உண்டு. திருநெல்வேலி என்பது நதி பாயும் ஊர் என்றாலும் உள்ளடங்கிய கிராமங்கள் சற்று வெளிறிப் போய் இருக்கக்கூடியவை. வயலும், வாழைத் தோப்பும் கூடவே ஆறும் இருக்கிற ஊர் என்றாலும் அதில் ஒரு வறட்சி இருப்பதைப் பார்க்க முடியும். அதை அப்படியே இந்தப்படம் காட்டியிருக்கிறது. திருநெல்வேலிப் பகுதியைக் களமாகக் கொண்டு இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இருந்து பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை மூன்றுமே அதன் அசல்த்தன்மை கொண்டிருக்கின்றன.

அடுத்தது வட்டார மொழி. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் நடித்திருகிறார்கள். குறிப்பாக இரண்டு சிறுவர்களும். அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு ஒரு வழக்கம் உண்டு. வட்டார மொழி என்பது உச்சரிப்பில் மட்டும் இல்லை, அதை வெளிப்படுத்தும் விதத்திலும் உண்டு.

“நான் டான்ஸ் ஆடுவேன் “ என்று சொன்னால்,

“டான்சா..ஆடுவியோ” என்பார்கள்.

“டீச்சர்..என் சட்டை கிழிஞ்சிருச்சு”

“சட்டையா? கிழிஞ்சிட்டோ?” என்பார்கள். அதாவது அப்படியா என்று கேட்பதற்கு பதில் பதிலையே ஒரு கேள்வியாக மாற்றுவது. இதனை பூங்கொடி டீச்சர் கதாபாத்திரத்தில் பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின் மொழியை அவ்வளவு ரசிக்கமுடிந்தது. ஊருக்குப் போய் வந்த ஒரு உணர்வு கிடைத்தது.

சிவனைந்தன், சேகர் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், இந்தச் சிறுவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பேச்சு வழக்கு அப்படித்தான் சொல்கிறது. திறமையான இருவரை இந்தப் படம் மூலம் நமக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள், இவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

இந்தப் படத்தினை எந்த பிரபலமான நடிகரும் இல்லாமல் ‘என் கதை..நான் சொல்ல வேண்டும்’ என்றே மாரி செல்வராஜ் அணுகியிருக்கிறார். அவர் அதற்குத் தான் திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். சில இயக்குநர்கள் இன்றும் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கும் கதையை இயக்க முடியாமல் ஆனால் தொடர்ந்து படங்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவோம். அந்த வகையில் தன்னைப் பாதித்த ஒரு நிகழ்வை மாரி செல்வராஜ் சொல்லிவிட்டார். ஆனால், அவர் சொல்ல நினைத்தது ஒரு விபத்தைப் பற்றி மட்டும் தானா? அந்த விபத்துக்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், வறுமை, இயலாமை, கோபம் எல்லாமே இருக்கிறது. ஆனால் எதுவும் முழுமை பெறவில்லை என்பது தான் படம் பார்த்து முடித்த பின்னும் நிறைவில்லாமல் போவதற்கான காரணங்களாக இருக்கின்றன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் இறப்பது, படகுப் பயணத்தின் போது கவிழ்ந்து மரணமடைவது, ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா செல்கிறபோது விபத்தில் சிக்குவது என ஒவ்வொரு விபத்துக்குப் பின்னாலும் நம்மால் கதைகளை சொல்லிவிடமுடியும் ஆனால், மாரி செல்வராஜ் சொல்ல வந்தது வெறும் விபத்தைத் தானா என்ற கேள்வி எழுகிறது. ஒரு முதலாளியின் பேராசை இத்தனை பேரை பலி வாங்கியிருக்கிறது என்றால், அது நிச்சயமாக மனதில் பதியவில்லை. ஒரு சிறுவன் தன்னைச் சுற்றி உள்ளவர்களை இழந்துவிட்டான் என்று சொல்ல வருகிறார் என்றால், அதுவும் முழுமையாக வெளிப்படவில்லை. கனி. வேம்பு என காத்திரமாகச் சொல்லப்பட வேண்டிய கதாபாத்திரங்கள் இருந்தும் அவர்கள் மேல் கதை செல்லவில்லை.  இதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்குத் தானே ஆனால் ஒரு வாய் சோறு சிவனைந்தனால் சாப்பிட முடியவில்லை என்று தான் சொல்ல வந்திருக்கிறார்கள்  இதற்காக இந்த பேரிழப்பைக் காட்டியிருந்திருக்க வேண்டுமா எனவும் தோன்றுகிறது.

கடைசி இருபது நிமிடங்களில் என்னவோ நடக்கப்போகிறது என்று கதையைத் தள்ளி தள்ளி விட்டு ஒரு பெருச்சோகத்தைச் சொல்லி கதை முடிந்திருக்கிறது. உண்மையில், கதை முடிகிற இடத்தில் தான் படம் தொடங்குகிறது. இந்த இழப்பினை ஏற்படுத்திய முதலாளியின் பேராசை எதனால், இந்த விபத்துக்குப் பிறகு இதனை வைத்து ஆடப்பட்ட அரசியல், அதிகார ஆட்டங்கள் என்ன, இழந்ததவர்களின் கோபம் என்னவாக இருந்தது, மீண்டும் எப்படி அவர்கள் அதே ஊரில் காய் சுமக்கத் தங்களை ஒப்புக் கொடுத்தார்கள் இவையெல்லாமும் தான் பார்வையாளர்களுக்குத் தெரிய வேண்டியவை.

சிவனைந்தன் , பூங்கொடி டீச்சர் மீது கொண்ட அன்பும், அக்கறையும் படத்தின் ஒரு பாகம் போல அல்லாமல் அது தான் முக்கிய கரு என்பது போல ஆகிவிட்டது. ஒரு பொருந்தா நேசம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு எல்லாருக்கும்  தெரிய வந்தால் என்னவாகுமோ என்கிற ரீதியில் கதைப் போய்க் கொண்டிருந்தது

‘பரியேறும் பெருமாள்’ தொடங்கி ‘வாழை’ வரை மாரி செல்வராஜ். ஒரு பெரிய நிகழ்வு, சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதை நோக்கி காட்சிகளை நகர்த்துகிறாரோ என்றும் இந்தப் படம் பார்க்கும்போது தோன்றியது. படத்தின் இறுதியில் எதைச் சொல்லி அனுப்பினால் பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள் என்கிற புரிதலாகவும்  இருக்கலாம். பரியேறும்பெருமாளில் இயல்பாகக் கூடி வந்த இந்தத் தொனி மற்றப் படங்களில் விலகி நிற்கிறது.

ஈரானியப் படங்களை நான் இந்தப் படத்துக்கு மேற்கோள் காட்டியதற்குக் காரணம், ஒன்றரை மணி நேரப் படத்தில் என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எதை நோக்கிக் கதை நகரவேண்டும் என்கிற தெளிவு அவர்களின் அநேகப் படங்களில் உண்டு. அதே ரீதியிலான கதையை எடுத்துக்கொள்ளும்போது ‘க்ளைமாக்ஸ்’ தரும் அதிர்ச்சிக்காக சொல்ல வருவதில் இருந்து பிசகியதில் படம் அங்கேயும் இல்லாமல், இந்தப் பக்கமும் சேராமல் நின்றுவிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, சில கதைகளை சிலர் தான் சொல்ல முடியும். அது அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியான கதை. அதைச் சொல்ல ஒரு இயக்குநருக்கு முழு சுதந்திரம் உண்டு. மாரி செல்வராஜ் அதைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், உணரவைக்கவில்லை.

Subscribe
Notify of
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sendil Kumar Balasubramanian
Sendil Kumar Balasubramanian
25 days ago

நல்ல விமர்சனம். பிடித்திருக்கு, பிடிக்கவில்லை என்ற ஒரு சொல்லில் கடந்து விடாமல், இங்கு விரிவாக எழுதியதும் நன்று.

OTTயில் பார்க்கும் போது, ஏற்கனவெ கடத்தப்பட்ட முன்னனுமாத்தில் படத்தை அனுகியிருப்பதாக தோன்றுகிறது. ( இது என் கருத்து மட்டுமே. இல்லாமலும் இருக்கலாம்).

என்னை பொருத்த வரையில் இந்த கதையோ, படமோ, அந்த இறுதி காட்சியில் வரும் விபத்தை பற்றியது அல்ல.

கொடியது கேட்கின் வரிவடிவேலோய்… கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று ஒளவையார் பாடியதை பற்றியது.

பட்டு நெசவும் கைத்தறி நெசவாளர், தன் மகள் திருமண சேலை நெய்ய, வாயில் ஜரிகையை மறைத்து திருடி எடுத்து வரும் “காஞ்சீவரம்” திரைப்படத்தின் அவலத்தை ஒத்தது.

திருடுவது தவறு. பசிக்கு அது எதுவும் தெரிவதில்லை என்பதை காட்சி படுத்த எடுத்தது.

அப்பாவின் சடலம் நடுவீட்டில் கிடத்தியிருக்க, மனைவியுடன் உடலுறவு கொண்டதை ஒருவர் தைரியமாக, தன் சுயசரிதையில் எழுதும் போது, அதை சத்ய சோதனையாகவும், அவரை அண்ணலாக, மகாத்மாவாக ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அதுவே தான், உடன்பிறந்தவள் உட்பட, ஊரில் 20 பேர் பலியான துக்க நிகழ்வில், அதையெல்லாம் மீறிய பசி, சிவனைந்தனை சொந்த வீட்டில் சோறு திருட வைக்கிறது. அதையும் பெற்ற தாயே அதை கையும் களவுமாக பார்க்க நேரிடுவது, அந்த சிறுவன் மனதில் ஏற்படுத்திய சோகத்தை சொல்வது தான் மாரி செல்வராஜ் சொல்ல வந்தது என எனக்கு படுகிறது.

பெற்ற குழந்தையை ராமேஸ்வர அகதி முகாமில் விட்டுவிட்டு, போர் நடக்கும் தன் தாய் நாட்டை நோக்கி ஒரு பெண்ணை ஓட வைத்தது எது என்ற கேள்வியோடு ஆரம்பிக்கும் கண்ணத்தில் முத்தமிட்டால் திரைப்படம்…

பறவையும் விலங்கும் பசித்தால் உண்ணும் ஒரு வாழை பழத்தை, தன் பசிக்கு ஒரு சிறுவன் பறித்து சாப்பிடும் போது, அதை திருட்டாக மாற்றியது எது? உடன் பிறந்தவள் பிணமாக கிடந்தாலும்,விபத்தில் தெரிந்த முகங்கள் இறந்தாலும், ஊர் முழுக்க அழுதாலும், அதையெல்லாம் மங்க செய்து, சிவனைந்தனை, தன் சொந்த வீட்டில் சோறு திருடி சாப்பிட வைத்தது எது? அப்படி சாப்பிடும் போதும் பசியறிந்து பால் சுரக்கும் தன் தாயை கண்டு அவனை ஓட வைத்தது எது? தன் ரத்தத்தை பாலாக கொடுத்த தாய், பசியில் உண்ணும் தன் மகனை ஓட ஓட விரட்ட செய்தது எது?

“யார் பாதவத்தி” என்ற இறுதி பாடலில் இதற்கெல்லாம் விடையெழுதியிருப்பார் மாரி செல்வராஜ்.

என்னளவில் வாழை திரைப்படம் cinematic excellence, where every art of cinema joined hands to build such an incredible art.

சாவித்திரி கண்ணன்
சாவித்திரி கண்ணன்
25 days ago

சிறப்பான விமர்சனம். வாழை படம் தொடர்பான பல விமர்சனங்கள் படித்துள்ளேன். நீங்க பார்த்த மாதிரி யாருமே பார்த்து விளக்கவில்லை.

Jadeepa
Deepa
24 days ago

மிக்க நன்றி சார்

பாலஜோதி இராமச்சந்திரன்
பாலஜோதி இராமச்சந்திரன்
24 days ago

பேசப்படும் கவனம் ஈர்க்கும் திரைப்படங்களுக்கு முகநூலில் உடனே உரை எழுதிவிடும் உங்களிடமிருந்து ‘வாழை’ க்கும் தாமதமான விமர்சனம், அதுவும் உங்களது தளத்தில் வந்திருப்பதன் முக்கியத்துவம் வாசித்தப் பின்பே புரிந்தது.

சொந்த மண்ணின் கதை என்ற சிலிர்ப்பும் சிலாகிப்பும் இருந்தாலும் கூர்நோக்கும் பார்வை இதில் இருக்கிறது.

அதுதான் உங்களைச் காத்திரமிக்க திரைமொழி-திரைப்பட ஆய்வாளராக அடையாளப்படுத்தி இருக்கிறது.

‘உணரவைக்கவில்லை’ என்ற கடைசி வரி, வாழை பற்றிய ஒட்டுமொத்த பிழிந்தெடுப்பு.

Muneeswaran Munees h
Muneeswaran Munees h
24 days ago

தெளிவான, சிறப்பான விமர்சனம் வாழ்த்துகள் சகோ 💐💐💐 ❤️❤️❤️