திருநெல்வேலி பயணம் – கிருஷ்ணாபுரம்

0
158

மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டன திருநெல்வேலிக்கும் திருநெல்வேலிக்குள்ளும் பயணம்
செய்து. எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் ‘திருநெல்வேலிக்கு நீங்க வர…’ என்று தான்
ஆரம்பித்தார், என்ன ஏது, எப்போது எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. ‘வர்றேன் சார்’
என்றேன். பிறகு தான் மற்ற விவரமெல்லாம் கேட்டுக் கொண்டேன். முதல் நாள்
திருநெல்வேலியில் புத்தகக் கண்காட்சியிலும் அருகில் இருந்த ஜிகர்தண்டா கடையிலும், மதுரம்
உணவகத்திலும் கழிந்தது. கல்லூரித் தோழிகளும், சமூக வலைதளங்களில் அறிமுகம்
ஆனவர்களும், எனது மதிப்பிற்குரியவர்களையும் சந்திக்கும் வாய்ப்பாக முதல் நாள் அமைந்தது.
சினிமா குறித்த கருத்தரங்கிற்கு முன்பாக எனது மரியாதைக்குரிய பேராசிரியர் திரு. சௌந்தர
மகாதேவன் அவர்களின் ‘திருநெல்வேலி நினைவுகள்’ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டேன்.
மறுநாள் கொற்கைக்கும் திருச்செந்தூருக்கும் போகவேண்டும் என்கிற எனது திட்டத்தில்
‘யாவரும்’ பதிப்பாளரும் , நண்பருமான ஜீவகரிகாலன் அவர்களும் எழுத்தாளரும் நண்பருமான
கார்த்திக் புகழேந்தியும் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த பயணத் திட்டத்தை சற்று மாற்றி
அமைத்தனர். அதன்படி நாங்கள் மூவருமாக பிந்திய அதிகாலையில் காலையில் கிளம்பினோம்.
கிருஷ்ணாபுரம் , ஆத்திச்சநல்லூர், கொற்கை, திருச்செந்தூர், மணப்பாடு இவை தான் எங்களது
பயணத் திட்டம்.

கிருஷ்ணாபுரம் கோயிலின் சிற்பங்கள் குறித்த ஒற்றை வரியில் சிற்பங்களுக்கு அருகிலேயே
குறிப்புகள் தரப்பட்டிருந்தன. அதை வாசித்துவிட்டு அடித்தடுத்து என்று நகரக்கூடிய படைப்புகள்
அல்ல அவை. பரப்பளவில் கோயில் மிகச்சிறியது. சிற்பங்களும் குறைவு. ஆனாலும் ஒருமுறை
சென்று பார்ப்பதோடு நிறைவினைத் தருவதில்லை அவை. ஏற்கனவே சில முறை
சென்றிருந்தாலும் அவை நினைவில் இல்லை. அதுவும் நன்மையே. இந்த முறை அவை வேறு
கதைகளையும் சொன்னது.

அங்கு வயதான ஒருவர் சொல்லிப் பழகிய குரலிலும் மொழியிலும் எங்களுக்கு வழிகாட்ட
உதவிக்கு வந்தார். வந்த சில நொடிகளிலேயே ‘இது வேற ஆளுங்க’ என்கிற உணர்வு அவருக்கு
வந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நாங்கள் மூவரும் பேசுவதை அவர் கேட்டுக்
கொண்டிருந்தார். நாங்கள் மூவருமே ஒரு புள்ளியில் சிற்பங்களில் மூதாதையர்களை தேடிக்
கொண்டிருந்தோம். நான் ஒவ்வொரு ராஜகுமாரியும் இளவரசியும் அணிந்திருந்த நகைகளில்
கூடுதல் கவனம் செலுத்தினேன். அது மிகுந்த சுவாரஸ்யம் தந்தது. கழுத்தோடு ஒட்டியிருந்த
அட்டிகைக்கான ‘டிஸைன்’ இளவரசிகளுக்கும், பணிப்பெண்களுக்கும் ஒரே மாதியாக இருந்தன.
அது ஒருவேளை ‘தாலியாக’ இருக்கக்கூடுமோ என்ற எண்ணம் வந்தது. தெரியவில்லை. ஆனால்
அந்த ‘டிசைனை’ நான் அப்படியே ஒரு பிரபல நகைக்கடை விளம்பரத்தின் ‘நெக்லஸ்’ வரிசையில்
பார்த்திருக்கிறேன்.

பல்லெல்லாம் தெரியும்படி ஒருவர் சிரிப்பது எத்தனை மகிழ்ச்சியானது. அபூர்வமானது. அப்படி
சிரித்த நிலையில் ஒருவர் காலங்காலமாக சிற்பத்தில் நின்று கொண்டிருக்கிறார் அங்கே. அவர்
வாங்கி வந்த அற்புத வரம் அது. சற்றுத் திரும்பினால், குறுவாளுடன் ஒரு வீரர் சண்டைக்குப்
புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டு இப்போது
சண்டையைத் தொடங்கவிருக்கிறார் என்பது போல இருந்தது. அவர் உடைகள் காற்றில் பறந்து
கொண்டிருந்தன. கால்கள் ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் ஊத்தப்பம் அளவுக்கு பருமன்.
கண்களில் கடும் தீவிரம். அவர் கையில் கேடயமும், அகண்ட மார்பில் ஒட்டிய, தொங்கிய ஆரமும்,
முத்துமாக .. அரசராகத் தான் இருக்க வேண்டும். அவர் பின்னால் போர்க்குதிரை ஆவேசமாக
வந்து கொண்டிருந்தது. இதற்கு நேரெதிர் தூணில் தான் ஒருவர் ‘இளித்துக்’ கொண்டிருக்கிறார்.
‘எத்தனை நூற்றாண்டு சிரிப்பு..இல்ல’ என்றார் கார்த்திக் புகழேந்தி. சரியாய் அதைத் தான் நானும்
நினைத்துக் கொண்டிருந்தேன். வழிகாட்டி அவரை எங்களுக்கு குரங்கு மனிதன் என்று அறிமுகம்
செய்ய முயன்று கொண்டிருந்தார். வால் இருந்திருந்தால் அனுமான் என்று வெண்ணைக் காப்பு
முடிந்திருக்கும். மனிதர் தப்பித்தார். அவர் ராஜகுமாரியைக் கடத்த நினைக்கிறார் என்றார்
வழிகாட்டி. அவருக்கு அப்படித் தான் சொல்லப்பட்டிருந்தது. கடத்தும் ஒருவனுக்கு இருக்கும்
கள்ளச்சிரிப்பு அல்ல அது. மனதிலிருந்து பொங்குகிற சிரிப்பு அது. பெண்ணை ஜாலம் பேசி
மயக்க நினைப்பவன் முகம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனபோதிலும் அச்சு மாறாது என்பதை
உள்ளுணர்வு உணர்ந்திருந்ததால் அவர் ராஜகுமாரிக்கு வேடிக்கை காட்டும் ஒருவராகவும்
இருக்கலாம் என்று தோன்றியது. அதே தூணுக்கு மறுபக்கம் எளிமையான உடையில் ஒரு பெண்
கொட்டாங்குச்சி போன்ற இசைக்கருவியை ஏந்தியிருந்தார். நாடோடியாக இருந்த அவர்கள்
இருவரும் ராஜகுமாரியின் பொழுதை தங்கள் வசமாக்கியிருக்கலாம். பிரபலமாக அவர்கள்
இருந்திருக்கலாம் அதனால் சிற்பமாக மாறியிருக்கலாம். இவையெல்லாம் யூகம் தான் என்றாலும்
இப்படி மனச்சித்திரங்களை நமக்கு உருவாக்குவதற்காகவே பல நூற்றாண்டுகளாக அவர்கள்
கதைகளாக மாறி நிற்கிறார்கள்.

கிருஷ்ணாபுரம் சிற்பம் ஒவ்வொருன்றுக்கும் நாங்களாக உருவாக்கிக்கொண்ட கதைகள் பல. ‘ஒரு
படத்துல காட்டுவாங்களே..அது மாதிரி நைட் கோவில் மூடினபிறகு இந்த சிற்பத்துக்கெல்லாம்
உயிர் வந்தா என்னப் பேசம்?” என்று ஜீவகரிகாலன் கேட்டார். ‘எதுக்கு இப்படி மூஞ்சியப்
பக்கத்துல கொண்டு வந்து பாக்கறாங்கன்னு நம்மளத் திட்டிக்குவாங்க’ என்றேன்.
ஒவ்வொருவருக்கும் கற்பனைகள் இருந்தன.

எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரே விதமான கிளிச் சொற்களைக் கொண்டு ஒவ்வொரு
சிற்பத்தையும் பற்றி சொல்ல நினைத்தாலும் அவர் அகத்தில் இருந்து ஒன்று எழுந்து வந்தது.
“வீட்டைப் பத்தி எந்தக் கவலையுமில்லாம இதை எல்லாம் செய்திருக்காங்க.,.அதான் இப்படி
அற்புதமாயிருக்கு” என்றார். அப்படி அவர் சொன்னது மிக இயல்பானதாக இருந்தது. பலமுறை
ஒத்திகைப் பார்த்தா வார்த்தைகள் இல்லை அவை. அவர் நினைத்துக் கொண்ட எண்ணங்கள்.
அவர் சட்டையணியவில்லை. நரைத்த தாடி நீண்டிருந்தது. தசை காணா உடல். எதனாலோ
சிவந்திருந்த கண்கள். ஒரு புன்னகை. உணர்ந்து அவர் சொன்ன வார்த்தைகள் தாம் அவை.
அடுத்ததாக ஆதிச்சநல்லூர் சென்றோம்.

மூவாயிரம் ஆண்டுகால இடுகாட்டு பூமி..இல்லை வீடுகளும் இருந்திருக்கின்றன என்றார்
ஆய்வாளர். மிகச் சிறந்த உரையாடலை அவர் வழி பெற்றோம்..
அது தனியாக எழுத வேண்டியது !!!

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
R Venugopal
R Venugopal
1 year ago

கிருஷ்ணாபுரம் கோவிலின் சிற்பங்களை பற்றிய உங்கள் பதிவும் மற்றும் பாகம் இரண்டு இல் வரும் ஆதிச்சநல்லூர் பற்றிய பதிவு ஒரு ஆச்சரியம் நிறைந்த ஊராக எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறது . பணி சிறக்க வாழ்த்துக்கள்