The Romantics

The Romantics ஆவணப்படம் பார்த்தேன். பி.ஆர் சோப்ரா தொடங்கி உதய சோப்ரா வரைக்குமான ஒரு பயணத்தைத் தந்திருக்கிறார்கள். இதில் கற்றுக்கொள்ள தனிப்பட்ட விதத்தில் எனக்கு  ஏராளம் உண்டு. குறிப்பாக ஆதித்யா சோப்ரா பேசியவை. மிகுந்த கூச்ச சுபாவமுடையவர் என்றும் அவர் பொது நிகழ்வுக்கு வருவதே செய்தியாக மாறுகிறது என்கிற சூழலில் முழு ஆவணப்படத்தையும் அவர் தாங்குகிறார். இதுவரை பேசாமல் இருந்ததையெல்லாம் சொல்லியே ஆகவேண்டும் என்கிற தீர்மானத்தில் அவர் இருந்திருக்கலாம்.

 இந்த ஆவணப்படத்தை உதய் சோப்ரா இணைத்தயாரிப்பு செய்திருக்கிறார். அதனால் எந்தத் தடங்கலும் இன்றி உதய் மற்றும் ஆதித்யா சோப்ரா பேசியிருக்கிறார்கள்.

இதில் சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். யஷ் சோப்ராவின் மொத்தக் குடும்பமும் சினிமாவைக் கடந்து எதையும் யோசிக்காத ஒன்றாக இருந்திருக்கிறது. யஷ் என்கிற அப்பா தனது மகன்களை வளர்த்த விதமும், ஆதித்யா மேல் அவர் கொண்ட நம்பிக்கையையும் காட்டிய விதம் அபாரமானது. இதில் மிகுந்த ஆச்சரியம் கொண்டது ஆதித்யா சோப்ரா குறித்து தான். அவர் சினிமாவை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பது தான்.

யஷ் சோப்ரா என்பது ‘பிராண்ட்’ ஆக மாறிய பின் அவருடைய மகனாக இருந்து படம் இயக்குவது என்பது எத்தனை அழுத்தமான ஒன்றாக இருந்திருக்கும் என்பது புரிந்து கொள்ளக்கூடியது. அதை ஆவணப்படத்தில் ஆதித்யா விளக்கிய விதம் அபாரமானது.

இவற்றையெல்லாம் கடந்து ஆதித்யாவைப் பார்த்து வியந்த ஒன்று உண்டு. உள்ளுணர்வைத் தான் மிகவும் நம்புவதாக சொல்கிறார். புது நடிகர்களைத் தேர்ந்தெடுத்தது, கதைகளை யோசித்தது, படம் வெளியிடும் தேதியை முடிவு செய்தது என எல்லாவற்றுக்கும் அவர் தனது உள்ளுணர்வையே நம்பியிருக்கிறார். சிறுவயதில் இருந்து தான் திரைப்படத் துறைக்குத் தான் செல்லப்போகிறோம் என்பதில் அவருக்கிருந்த உறுதியும் முன்தயாரிப்பும் அவருடைய உள்ளுணர்வினை வடிவமைத்திருக்கிறது. ஆனாலும் ஆதித்யா அப்படி  நம்பி தயாரித்த ஒரு திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களை ரசிக்கவைக்கவில்லை.  அப்போது அவர் எடுத்த முடிவு முக்கியமானது.

“யஷ்ராஜ் நிறுவனத்துக்கு புதிய சிந்தனைகள் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார். ஒரு கிரியேட்டிவ் குழுவினை உருவாக்குகிறார். அவர்களைத் தன்னோடு கதை கேட்க செய்கிறார். முதல் திரைப்பட வாய்ப்பினை அவர்களுக்குத் தருகிறார். சிறு பட்ஜெட் படங்கள் நோக்கி கவனம் திருப்புகிறார். அந்தப் படங்கள் வெற்றிகளும் பெறுகின்றன. ஒரு படைப்பாளர் வழிகாட்டியாக மாறுகிறபோது ஏற்பட்ட மாற்றங்கள் அவை.

இந்த ஆவணப்படம் என்னளவில் மிகுந்த முக்கியமான ஒன்று. ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கும், இயக்குனருக்கும் இருக்கும் அத்தனை சவால்களையும், தயக்கங்களையும் பற்றிப் பேசுகிறது. மிக முக்கியமாக தோல்விகளை எப்படிக் கையாள்வது என்பதை..

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments