கண்காணாத் தோட்டங்கள்

0
341

சாலையை மேம்படுத்தும் சமயத்தில் நமது வீட்டின் திண்ணை இடிக்கப்பட்டு விட்டால், அந்த வீட்டின் அடையாளமே மாறி விடுகிறது. நமது கண்கள் போலவும், முகத் தாடை போன்றும் ஒவ்வொரு வீடும்  அதற்கான பிரத்யேக அடையாளங்களை இருத்தி வைத்துக் கொண்டே இருக்கின்றன. நாம் வசிக்கும் இடத்தின் அடையாளமும், நெருக்கமும் அந்த இடம் தருகிற வாசனையிலும், அனுபவத்திலுமே இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு பிரத்யேகத்தை வைத்திருக்கிறது சல்மாவின் வீடு. சல்மா ஒரு பாலஸ்தினியப் பெண். இஸ்ரேல் பாலஸ்தினிய எல்லையான வெஸ்ட் பாங்க்கில் சல்மாவின் எளிய வீடு அமைந்திருக்கிறது. வீட்டின் சுவர்களில் புகைப்படங்களில் சிரிக்கும் மகள், மகன் மற்றும் பேரன் பேத்திகளின் மத்தியில் வாழும் சல்மாவின் தனிமையின் மிகப் பெரும் அன்பைப் பெற்றிருக்கின்றன வீட்டைச் சுற்றும் அடர்ந்த எலுமிச்சை செடிகள். காடு போன்ற அந்த எலுமிச்சைகளை கவனிப்பதில் மட்டுமே தனது வாழ்நாட்களை செலவிட்டு கழிக்கிறாள் சல்மா.

ஒருநாள் வழக்கமான காலை நேரம் ஒன்றில் அவளது பக்கத்து வீடு பரபரப்புக்குள்ளாகிறது. இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் அவரது மனைவியும் அந்த வீட்டிற்கு குடிவரும்  அன்றைய தினத்தில் இருந்து அந்தப் பிரதேசமே மாறிப் போய்விடுகிறது. தொடர்ந்து அலறுகிற சைரன் ஒலிகளும், உயரமாக வடிவமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரங்களும், துப்பாக்கிகளோடு வலம் வருகிற காவலர்களும் என சகல மாற்றங்களையும் எந்தவித சலனமுமின்றி பார்த்து கொண்டிருக்கிறாள் சல்மா.

பாதுகாப்புத் துறை அமைச்சரின் மனைவியான மிராவுக்கு தனது வீட்டில் இருந்து பார்க்கிறபோது கண்ணில் படுகிற சல்மாவின் பக்கத்து வீட்டு எலுமிச்சை மரங்களின் அடர்ந்த தோப்பு பிடித்து விடுகிறது. ஆனால், பாதுகாப்புக்கு உறுத்தலாய் இருந்துகொண்டேயிருக்கும் அதனை வெட்டி விடும்படியும், நஷ்ட ஈடு அளிப்பதாகவும் அமைச்சரின் பாதுகாவலர்கள் சல்மாவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பு வைக்கின்றனர். மிரண்டு போகிற சல்மா தனது மகனிடமும், மகளிடமும் உதவி கேட்கிறாள்.

நஷ்டஈட்டை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு எலுமிச்சை மரங்களைப்  பற்றி யோசிக்கக் கூட வேண்டாம் என்கின்றனர் வெளிநாடுகளில் வசிக்கும் அவ்வுறவுகள். ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் சல்மா நீதி கேட்டு தனியாக அலையத் தொடங்குகிறாள். தனது அப்பாவினைத் தொடர்ந்து தன்னிடம் வந்து சேர்ந்த எலுமிச்சை மரங்களின் மீது நுனிக் கீறல் கூட விழுந்து விடக்கூடாது என்பதில் உறுதியாகிறாள்.

காலை நேரங்களில் மரத்திலிருந்து எலுமிச்சைகள் பழுத்து நிலத்தில் விழுகின்ற மென்மையான ஓசை தான் ஒவ்வொரு நாளும் சல்மாவை துயில் எழுப்புகிறது. தோப்பினை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற கடிதம் வருகிற மறுநாளும் அந்த ஒலி சல்மாவை எழுப்பத்தான் செய்கிறது. அவளின் படுக்கையறை சுவர் முழுவதும் நிழல்களாய் அசையும் அந்த மரங்கள் ‘சல்மா..சல்மா’ என வாஞ்சையாகவும் ரகசியமாகவும் தோட்டத்தில் இருந்து எழுப்பும் சத்தத்தைக் கேட்டதும் அவள் சிலிர்க்கத் துவங்குகிறாள். சிறு வயதில் தன்னைத் தோளில் உட்கார வைத்து தோட்டத்தினுள் தூக்கிச் செல்லும்   அப்பாவின் குரலாகவும், அந்நேர சல்மாவின் உற்சாக சிரிப்பாகவும் அந்த சத்தம் மாறுகிறது. இந்தக் சத்தம் தான் அவளுக்கு மேலும் போராடும் வலுவைத் தருகிறது.

இந்த நேரத்தில் சல்மாவுக்கு  உதவ முன்வருகிறார் ஜியாத் தாவூத் என்கிற இளம் வழக்கறிஞர். ஜியாத் தாவூதின் நட்பு சல்மாவுக்கு மற்றுமொரு உலகத்தை விரிக்கிறது. ரஷ்யாவில் இருந்து அகதியாக வந்திருக்கும் ஜியாத் தாவூதும் சல்மாவும் அவரவர் உலகத்தின் தனிமையை சிறுசிறு விஷயங்களால் நிரப்பிக் கொள்ள முயலுகின்றனர். அடிக்கடி சந்தித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் தருணங்களை இருவருமே ரசித்து கொள்கின்றனர். இதனை அறியும் சல்மாவின் குடும்ப நண்பர், ‘நீ அழகான , வயதான பெண். புத்திசாலியும் கூட. உன் மகன் வயதில் இருக்கும் ஜியாதுடன் அடிக்கடி சந்தித்துப் பழகுவது உங்கள் குடும்பத்துக்கு அவமானம். உனது கணவன் இருந்திருந்தால் தேசத்தின் பாதுக்காப்புக்காக இந்த எலுமிச்சை மரங்களை வெட்டி தள்ளி இருப்பான்.. அவன் நல்ல கணவன் , நல்ல தகப்பனுமாகவும் இருந்திருக்கிறான்’ என சொல்லி கண்டித்துவிட்டுப் போகிறார்.

தனது அப்பா பராமரித்த தோப்பின் நிலையினைக் குறித்தும், தனக்கு ஆறுதலாக இல்லாத பிள்ளைகள் குறித்தும் துயரங்களை அனுபவித்து வரும் சல்மா அவரது வார்த்தைகளை மெளனமாக ஜீரணித்துக் கொள்கிறாள். இது போன்ற மன உளைச்சல்களை அவள் கடக்கும்போதெல்லாம் அதிக பட்ச மௌனம் மட்டுமே அவளிடமிருந்து வெளிப்படுகிறது.

சல்மா என்கிற ஒரு சாதாரண பெண் இஸ்ரேலிய அமைச்சரையும், மிரட்டும் ராணுவத்தின் அடக்குமுறையையும் எதிர்ப்பது ஊடகத்தின் கவனத்தைப் பெறுகிறது.

சுயநல அரசியலும், ‘பாதுகாப்பு’ என்ற பெயரில் நடத்தப்படுகிற நாடகங்களும் தனது கணவனால் நிகழ்த்தப்படும்போதெல்லாம் ஒரு சிறு புன்னைகையை மட்டுமே அனைவரின் முன்னிலையிலும் மிராவினால் தர முடிகிறது. அதனை சரி செய்து கொள்ளும் விதமாக ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சரின் மனைவியான அவள் தன்னை யாரும் கண்காணிக்காத ஒரு நேரத்தில் வேலி மேல் எகிறிக் குதித்து சல்மாவின் வீட்டை நோக்கிப் போகிறாள். சல்மாவின் வீட்டைச் சுற்றி வருகிற போது வீட்டின் சுவர்களைப் பார்த்து அழுது கொண்டிருக்கும் சல்மாவினை ஜன்னல் வழியாக காண்கிறாள் மிரா. அவளை ஆற்றுப்படுத்தும் எண்ணத்தில் அவசரத்தோடு மிரா கதவைத் தட்டப் போகிற நேரம் அவளைத் தேடி வந்து விடுகின்றனர் பாதுகாவலர்கள். சல்மாவை சந்திக்க முடியாதபடிக்கு மிரா அங்கிருந்து அழைத்து செல்லப்படுகிறாள்.

பக்கத்து வீட்டில் வசிக்கிற ஒரு பெண் தங்களால் பாதிக்கப்படுவது தனக்கு வருத்தத்தைத் தருகிறது என்று மிரா பொறுமையிழந்து ஒரு பத்திரிகைப் பேட்டியில் சொல்லப்போக, அது உடனே வெளியாகிறது. இதே நேரம் நீதிமன்றம் தனது தீர்ப்பை சொல்ல அதன்படி சல்மாவின் வீட்டின் பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே விடப்பட்டதில் அவை  அங்கங்கு நிற்கின்றன.

அதிகாரவர்க்கத்தை எதிர்த்துத் துணிந்து போராடும் ஒரு பெண்ணின் கதை என்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் கதையின் மையப்புள்ளி என்பது இரண்டு பெண்களின் தனித்த உலகத்தை கூறுவதாகவே இருக்கிறது.

விருந்தினர் கூட வராத வீட்டில் வாழும் சல்மாவும், சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வெளிநாட்டில் படிக்கும் மகளிடம் பேசத் தவித்து கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிற மிராவினுடைய ஏக்கமும் அடிக்கடி கதையில் சந்தித்துக் கொள்கின்றன. சல்மாவின் தனிமையை, அவளது நிஜமான உணர்வுகளை மிராவால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனாலேயே சல்மா தன்னுடைய தோப்புக்குள் அத்துமீறி நுழைந்த பாதுகாவலர்களை ஆவேசமாக விரட்டும்போது, மிரா பேசுகிற பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமைதியாகிறாள்.

இஸ்ரேலில் நடந்த உண்மையான சம்பவத்தினை அடிப்படையாக வைத்து  எடுக்கப்பட்டது என்பது இந்த ‘லெமன் ட்ரீ’ (Lemon tree) படம்  கூடுதல் கவனத்தைப் பெறுவதற்கு காரணமாக இருந்தது. இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையின் அமைச்சர் ஷால் மொபாஜ் என்பவர் தனது வீட்டினை இஸ்ரேலின் ஆக்ரமிப்பு பகுதிக்கு மாற்றியபோது பக்கத்து வீட்டில் வளர்ந்திருந்த ஆலிவ் மரங்களை வெட்டச் சொல்லி உத்தரவு போட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ‘இது தீவிரவாதிகள் ஒளிந்து கொள்ளுவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது’ என்பதே. இதே காரணத்தையே ‘லெமன் ட்ரீ’ படத்தில் வருகிற பாதுகாப்பு அமைச்சரும் திரும்பத் திரும்ப சொல்லி கொண்டிருப்பார். ஆலிவ் மரங்களைக் காப்பாற்றும்படி அந்தக் குடும்பம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து அதில் தோற்றும் போனார்கள் மரங்களும் வெட்டப்பட்டன. உண்மையான சம்பவங்கள் நடைபெற்ற ஜெருசேலம், கல்கில்யா, ரமலா, உயர்நீதிமன்ற வளாகம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதால் ‘நம்பிக்கைக்குரிய’ படம் என்று இஸ்ரேல் பார்வையாளர்கள் மிகுந்த வரவேற்ப்பைக் கொடுத்தனர்.

சல்மா ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் இருந்து நகரத்திற்குள் செல்லும்போது பாலஸ்தீனம் தொடங்கி இஸ்ரேல் வரை கட்டப்படுகிற சுவர் தொடங்கி,  இஸ்ரேல், பாலஸ்தீனிய இளைஞர்கள் வேலைக்காக அமெரிக்கா செல்வது, எந்த முன்அறிவிப்புமின்றி ஊரடங்கு அமலுக்கு வருவது, கிறித்தவ, இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வைத்துக் கொண்டிருக்கும் காழ்ப்புணர்வு, ஊடகங்கள் இந்த விஷயங்களை சித்தரிக்கும் விதம் என அந்த நாட்டின் முக்கிய உள்பிரச்சனைகள் படத்தின் பின்னணியாக  தன்னியல்போடு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஒருசமயம் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்து நடத்தும் செலவிற்காக சல்மா தன் நகைகளை விற்கப் போகிறாள். அதற்கு முன்பாக கடைசித் தடவையாக  நகைகளை எல்லாம் அணிந்து கொண்டு அவள் கண்ணாடி முன் நிற்பது, எதிர்பாராத நேரத்தில் தன்னைப் பார்க்க ஜியாத் வரும் ஒரு நேரத்தில் தலையை மறைக்க முக்காடு போடும் சல்மா, அதனைக் கழட்டி விட்டு ஒரு நொடி கண்ணாடியில் தன்னை சரிசெய்துகொண்டு கதவைத் திறப்பது, சல்மாவின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் தீவிர முகபாவத்தோடு இருக்கும் சல்மாவின் கணவர் புகைப்படத்தையே ஜியாத் பார்ப்பது என கதாபாத்திரங்களின் மனவோட்டங்களை இந்தத் திரைப்படம் நுணுக்கமாக பதிவு செய்துகொண்டே வருகிறது.

இந்தப் படத்தின் இயக்குனர் இரான் ரிக்ளிஸ் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிற யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு இடையேயான உறவுகளையே தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் சொல்லி வருகிறார். ‘இது பெண்ணியத்தை பேசும் படம் இல்லை என்றும் எல்லை பிரச்சனையில் எளிய மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதையே தான் சொல்ல நினைத்தாதாகவும் ‘ இயக்குனர் சொன்னாலும் கூட , இஸ்ரேலியப் படங்களில் உறுதியான பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் படங்களின் வரிசையில் ‘lemon tree’ இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. சல்மாவாக நடித்த ஹியாம் அப்பாஸ்க்கு  சிறந்த நடிகைக்கான விருது படம் வெளிவந்த ஆண்டில் எல்லா திரைப்பட விழாக்களும் அளித்து கெளரவப்படுத்தின. நமது கௌரவம் இப்படத்திற்கு.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments