சுவையினும் மெலிதே அன்பு

0
183

பழங்குடி  இனத்தைச் சேர்ந்த தன் அம்மாவிடமிருந்தும், கத்தோலிக்க கிருத்துவரான அப்பாவிடமிருந்தும் கற்றுக் கொண்ட ஒரு அபூர்வமான வித்தையைத் தன் தாயைப் போலவே தனது மகளுடன் ஐரோப்பா முழுவதும் பரப்பிய ஒரு பெண்ணின் கதையைக் கொண்டது ‘Chocolat’.  அன்பினால் செய்யப்படுகிற எதுவுமே நல்ல மாற்றத்தைத் தரும் வல்லமை உடையது என்பதை சொல்ல விரும்பியதாகக் கூறும் பிரெஞ்சு இயக்குனர் Lasse hallstrom அதற்காக எடுத்துக் கொண்ட நாவலான Chocolat – யையே தான் இயக்கிய படத்திற்கு தலைப்பாகவும் வைத்துக் கொண்டார். ஐம்பதுகளின் பின்னணியில் உள்ள பிரெஞ்சு தேசத்தினை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

இந்தப் படத்தினைக் காண விழைகிற போது ஒரு சுவைமிகுந்த கற்பனைக்குள் நுழைந்துவிடுகிற உணர்வைத் தருவதனாலேயே பலருடைய பிடித்த படமாக இது மாறிவிடுகிறது.

பிரெஞ்சு தேசத்தின் புராதனம் கலையாத ஒரு கிராமம் தான் இதன் கதைக்களம். ஊரைச் சுற்றி ஓடுகிற நதி போலவே அந்தக் கிராமமும் எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாடோடும் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் அடையாளமாகவும், பெருமையாகவும் இருக்கிற தேவாலயத்தினையும், ஊரையும் பாதுகாக்கும் பொறுப்பை பரம்பரையாக மேயர் பால் டி ரேனாட் குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. வார பிரார்த்தனைக்கு ஊர்மக்கள் அனைவரும் தேவாலயத்திற்கு வந்துவிடுகிறார்களா என்பதை உன்னிப்பாக கவனிக்கும் அவர் பழமைவாதத்தின் தீவிர நம்பிக்கையாளராக இருக்கிறார்.  பனிக்காற்று வீசும் ஒரு நாளில் கட்டுக்கோப்பை எப்போதும் கைவிடாத அந்த ஊருக்குள் ஒரு பெண்ணும், அவளது ஆறு வயது மகளும் வருகிறார்கள்.

இருவரும் அர்மன்ட் என்கிற வயதான பெண்ணை சந்திக்கின்றனர். தன்னுடைய பெயர் வியன்னா என்றும், தனது மகளை அனோஷ்கா என்றும் அறிமுகம் செய்து கொள்ளும் அந்தப் பெண் இந்த ஊரில் தான் ஒரு சாக்லேட் கடை வைக்கப்போவதாகக் கூறுகிறாள். யாருமற்று தனிமையில் இருக்கும் அர்மன்ட், வெகுநாள் பூட்டிக்கிடக்கும் தனது ஒரு வீட்டினை அவர்களுக்கு வாடகைக்கு விடுகிறாள். வியன்னா அந்தப் பழைய வீட்டின் கீழ்ப்பகுதியினை நேர்த்தியானக் கடையாக மாற்றி, மாடியில் அனோஷ்காவுடன் தங்குகிறாள். விதவிதமான சாக்லேட்டுகளை செய்யத்தொடங்கி அழகான அடுக்குகளாக வைத்திருக்கும் அவளின் செய்கையை கிராமமே ஓரக்கண்ணால் கவனிக்கிறது.

மறுநாள் வியன்னாவை அவளது கடைக்கு வந்து சந்திக்கிறார் மேயர். ஈஸ்டருக்கு முந்தைய நாற்பது நாள் விரதத்தில் கிராமமே இருக்கும் போது இது போன்ற சாக்லேட் கடையை திறந்தது தனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது என அவர் கூற, ‘இது வெறும் சாக்லேட் விற்கும் கடை மட்டுமல்ல’ என்று புதிராகப் பேசுகிறாள் வியன்னா. வார நாளில் நடக்கும் தேவாலயப் பிரார்த்தனைக்கு மேயர் அவளை அழைக்க, தனக்கு தேவாலயம் செல்லும் பழக்கம் இல்லை என்று புன்னகையுடன் அவரது அழைப்பையும் மறுத்துவிடுகிறாள். அவளுடைய கணவன் குறித்த வியன்னாவின் பதிலும் மேயருக்குத் திருப்தி தராமல் போகிறது. இதெல்லாம் மேயருக்கு வியன்னா மேல் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

சாக்லேட் கடைத் திறந்ததிலிருந்து ஊர்மக்கள் அனைவரும் வெளியில் இருந்து அதன் அழகிய அமைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே வராமல் நகர்ந்துவிடுகின்றனர். வியன்னாவின் முதல் வாடிக்கையாளராக வருவது அர்மன்ட் தான். இறுக்கமாகவேக் காணப்படும் அர்மன்ட், வியன்னா கொடுத்த ஒரு சாக்லேட் காஃபியைக் குடிக்கப்போய் அதன் ருசியில் தன்னையிழந்து தன் அகமனது விஷயங்களைப் பேசத் தொடங்குகிறாள். தன்னுடைய மகள் கரோலினா அதே கிராமத்தில் இருந்து கொண்டு தன்னிடம் பேசாமல், தன் பேரனையும் தன்னிடம் பழகவிடாமல் இருப்பதுப் பற்றிய வேதனைப் பகிர்வாக இருக்கிறது அது.

மற்றொரு நாளில் கலைந்த தலையும், அழுக்கு உடையுமாக வரும் ஒரு பெண் வியன்னா கடையில் இல்லாத சமயமாகப் பார்த்து ஒரு சாக்லேட் டப்பாவை திருடிக் கொண்டு போய் விடுகிறாள்.. இது தெரிந்ததும், வியன்னா ஜோசெபின் என்கிற அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்றுவிடுகிறாள். வியன்னாவைத் தன் வீட்டில் கொஞ்சமும் எதிர்பாராத ஜோசெபினிடம், அவள் திருடிய அதே போன்ற  சாக்லேட்டுகளைக் கொடுத்துவிட்டு, ஆறுதலாக அவள் தலையையும்  வருடிவிட்டு வந்து விடுகிறாள். கணவனின் கொடுமையினால் தான் ஜோசெபின் இப்படி அலைகிறாள் என்பது வியன்னாவுக்கு தெரிய வருகிறது.

வியன்னாவின் கடைக்கு வருகை தருகிற மற்றொரு பெண், துயரமான முகத்துடனேயே எப்போதும் இருக்கிறாள். அவளிடம் பேசிய கொஞ்ச நேரத்திலேயே வியன்னாவுக்கு அவளது பிரச்சனை என்னவாக இருக்கக்கூடும் என்பதை யூகிக்க முடிகிறது. அந்தப் பெண்ணுக்கு ஒரு சாக்லேட் டப்பாவும், அவளது கணவனுக்குத் தரச் சொல்லி ஒரு சாக்லேட் டப்பாவையும் தருகிறாள்.

வீட்டிற்கு வரும் அந்தப் பெண் வியன்னா தனது கணவனுக்காக கொடுத்த  சாக்லேட் டப்பாவை அலட்சியமாக வீச, அது அவளது கணவனின் கண்ணில் பட்டுவிடுகிறது. அதை அவன் எடுத்து வாயில் போட, அந்த ருசி அவனுக்குள் பெரும் மாற்றத்தை நிகழ்த்துகிறது. அந்தக் கணத்திலிருந்து தனது மனைவியிடம் நெருக்கமாக நடந்துகொள்ளத் தொடங்குகிறான். மறுநாள் பளிச்சென்ற முகத்துடன் கூடிய வெட்கப் புன்னைகையும் கொண்டு வியன்னாவின் கடைக்கு வரும் அந்தப் பெண் தனது கணவனுக்காக கொடுத்த சாக்லேட் அத்தனையையும் மொத்தமாக வாங்கிப் போகிறாள்.

ஒருநாள் அர்மன்டின் மகள் கரோலின் தனது பனிரெண்டு வயது மகன் லூக்குடன் வியன்னாவின் கடையைக் கடக்கும்போது அவர்களை உள்ளே அழைக்கிறாள் வியன்னா. வேண்டாவெறுப்பாக நுழைகிறாள் கரோலின். லூக்கிற்கு அந்தக் கடையும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாக்லேட்டுகளையும் பார்க்க ஆசையாக இருக்கிறது. வியன்னா அவனுக்கு சாக்லேட் கேக்கைத் எடுத்துத் தர அதை சாப்பிடவிடாமல் தடுக்கிறாள் கரோலின். அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தி தானும் வெளியேறுவதிலேயே குறியாக இருக்கிறாள். எதனால் தன்னை கரோலின் உதாசினப்படுத்துகிறாள் எனப் புரியாமல் இருக்கும் வியன்னாவிற்கு, இதற்கெல்லாம் காரணம் மேயர் தனக்கு எதிராக செய்கிற பிரச்சாரம் தான் எனத் தெரிய வருகிறது.

கோபத்துடன் மேயரை சந்திக்கப் போகிறாள் வியன்னா. ஊரின் கட்டுக்கோப்பை சிதைக்க முயல்கிறாள் வியன்னா என மேயர் குற்றம் சாட்டுகிறார் வியன்னா அதனை மறுக்கிறாள். வரபோகும் ஈஸ்டர் திருநாளுக்குள் வியன்னாவை அந்த ஊரிலிருந்து விரட்டிவிடப்போவதாக சவால் விடுக்கிறார் மேயர்.

ஒருநாள் ஜோசெபின் வியன்னாவின் கடைக்கு சிரித்தபடி வருகிறாள். தன்னுடைய கணவன் தன்னை அடித்ததற்காக அவனைத் தான் திருப்பி அடித்துவிட்டதாக சொல்லும் ஜோசெபின் ஆர்ப்பாட்டமாக சிரிக்கிறாள். அவளுடைய சிரிப்பில் கலந்து கொள்ளும் வியன்னா, இனி அவள் தன்னுடனும் அனோஷ்காவுடனுமே தங்கி இருக்கலாம் என்கிறாள்.

ஜோசெபினின் கணவன் செர்ஜ் தன்னுடைய மனைவி பிரிந்ததைப் பற்றி மேயரிடம் புகார் தெரிவிக்கிறான். அதனை விசாரிக்க மீண்டும் மேயர் வியன்னாவின் கடைக்கு வருகிறார். ‘ஜோசெபினை அவளது கணவனிடமிருந்து பிரித்து வைத்துக் கொண்டாள்’ என வியன்னாவுக்கு எதிரான குற்றமாக அவர் மாற்ற நினைக்க, வியன்னா ஜோசெபினுக்கு ஏற்பட்ட காயத்தை மேயரிடம் காட்டுகிறாள். இனி தான் காட்டுமிராண்டித்தனமான செர்ஜுடன்  வாழப்போவதில்லை என ஜோசெபின் தெரிவிக்க, இது மேயருக்கு தன்மான பிரச்சனையாகிவிடுகிறது.

செர்ஜினை முழுக்கத் தன் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்கிறார் மேயர். அவனுக்கு முடி திருத்தி விடுகிறார். தினமும் குழந்தைகளிடம் அமர்ந்து அவன் நீதிநெறி வகுப்புகளைக்  கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறார். அதே சமயம் வியன்னா சாக்லேட் செய்யும் கலையை ஜோசெபினுக்குக் கற்றுத் தருகிறாள். போதாதற்கு தன்னுடைய உடைகளையும் கூட அவளுக்குத் தர, இப்போது ஜோசெபின் தன்னம்பிக்கைக் கொண்ட வசீகரமான பெண்ணாக மாறத் துவங்குகிறாள்.

கரோலினாவின் மகன் லூக் அவனது அம்மாவுக்குத் தெரியாமல் வியன்னாவின் கடைக்கு வரத் துவங்குகிறான். அவன் வரும்போது அர்மென்ட்டும் வந்துவிட, பாட்டியும், பேரனும் மனம் விட்டுப் பேசிக் கொள்கிறார்கள். அர்மென்ட் அவனுக்காக கவிதை வாசித்துக் காட்டுகிறாள். லூக் தனது பாட்டியை ஓவியமாக வரைகிறான். இருவருக்கும் அந்த நேரம் மிக அழகான பொழுதுகளாகின்றன.

வியன்னாவின் சாக்லேட் ருசி கிராமத்துக்குள் பரவத் தொடங்குகிறது. தங்களது விரத காலத்தை மறந்து ஒவ்வொருவராக வியன்னாவின் கடைக்கு வரத் தொடங்குகின்றனர். வரும் ஒவ்வொருவரின் மனநிலை, குணாதிசயத்திற்கு ஏற்றவாறு சாக்லேட்டுகளைத் தருகிறாள் வியன்னா. அவளின் வாடிக்கையாளர்கள் பாதிரியாரிடம் போய் தங்களுக்கான பாவமன்னிப்பினைக் கேட்டுக் கொள்கின்றனர். மேயரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பாதிரியாருக்கும் கூட மற்றவர்கள் அனுபவித்து சொல்வதைக் கேட்டு தானும் அந்த சாக்லேட்டுகளை ருசிக்க வேண்டுமென்கிற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.

கிராம மக்கள் வியன்னாவின் கடைக்கு போகத் தொடங்கியது தெரிந்தவுடன், மேயருக்கு அவள் மேல் வன்மம் அதிகரிக்கிறது. இந்த சமயத்தில் அந்த ஊருக்கு ஆற்றுவழியாக பயணம் செய்யும் நாடோடிகளின் குடும்பங்கள் வருகின்றன. தங்களுக்கென்ற ஒரு ஒழுங்குமுறை வாழ்க்கையைப் பின்பற்றாத அவர்களுக்கு, ஊருக்குள் யாரும் உதவக் கூடாது என மேயர் சட்டம் போடுகிறார். வழக்கம் போல அந்த சட்டத்தை கடைபிடிக்காமல் வியன்னா அந்தக் கூட்டத்தினரிடம் நட்பாகப் பழகுகிறாள். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் வியன்னாவுக்கு நண்பனாகிறான்.

இந்த நேரத்தில் மேயர் வியன்னாவுக்கு எதிரான தனது பிரசாரத்தை பாதிரியார் வாசிக்கும் தேவாலய பிரசங்கம் மூலம் வற்புறுத்துகிறார். இதைக் கேள்விப்படுகிற வியன்னா உடைந்து போகிறாள். அவளை சமாதானப்படுத்தும் அர்மென்ட், தன்னுடைய எழுபதாவது பிறந்த நாளில் ஒரு விழா ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். நாடோடிகளின் படகில் வைத்து நடைபெறுகிற பிறந்தநாள் விழா களைகட்டுகிறது. அம்மாவிடம் சொல்லாமல் தனது பாட்டியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் லூக் பாட்டியின் கையைப் பிடித்து உற்சாகமாக நடனமாடுகிறான். அவனைத் தேடி அங்கு வரும் கரோலின், லூக்கின் சந்தோசத்தைப் பார்த்து ஒன்றும் பேசாமல் திரும்பிப் போய்விடுகிறாள். ஜோசெபின் சந்தோசமாக படகில் ஆடுவதைப் பார்த்து தாங்க முடியாமல் கொதிக்கிறான் செர்ஜ்.

விழா முடிந்து அனைவரும் படகிலேயே களைப்பாக தூங்கும் நேரம், அந்தப் படகுக்கு தீ வைத்துவிடுகிறான் செர்ஜ். இதில் நாடோடி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இறந்துவிட, மற்றவர்கள் உயிர்த் தப்புகின்றனர். செர்ஜ் வைத்த தீயில் தான் படகு எரிந்தது என்கிற உண்மை மேயருக்கு மட்டும் தெரிந்திருக்க, அவர் அவனை ஊரை விட்டே ஓடும்படி சொல்கிறார். அவனும் போய் விடுகிறான். நாடோடி குடும்பத்தினர் மறுநாள் காலை அந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு பயணம் செய்கின்றனர். இது வியன்னாவிற்கு தாங்கமுடியாத வேதனையைத் தருகிறது.

அவளும் அந்த ஊரைவிட்டு போகலாம் என முடிவெடுக்கிறாள். அப்போது ஜோசெபின், மனம் மாறிய கரோலின், வியன்னாவின் மற்ற வாடிக்கையாளர்கள் என எல்லோரும் அவளைப் போகவிடாமல் சில செயல்களால் தடுத்து விடுகின்றனர். அவர்களது அன்பு வியன்னாவைத் தடுத்து விடுகிறது. ஊரில் எல்லோருமே வியன்னாவின் கடைக்கு மேயரை மீறி சுதந்திரமாக செல்லத் தொடங்குகிறார்கள். தான் தோல்வியடைந்துவிட்டதாக குமுறுகிறார் மேயர். கோப வெறிகொண்டு கையில் கத்தியுடன் நடுஇரவில் அவளது கடைக்குள் நுழைகிறார் அவர். அப்போது அங்கு சிலைகள் போன்றும் மற்றும் பல அதிசயத்தக்க வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகளைக் கண்டு அவற்றை உடைத்து எறிகிறார். அவரது ஆவேசத்தினிடையே ஒரு சின்னத் துளி மட்டும் சிதறி அவரது உதட்டில் பட்டுவிடுகிறது. தன்னை மறந்து அதை நாவால் ருசித்து விடுகிறார். அந்த நொடியில் கண்கள் சொருகி அதன் சுவையை அனுபவிக்க நேர அதன்பின்  அங்குள்ள அத்தனை சாக்லேட்டுகளையும் தின்று தீர்த்துவிடும் ஆவேசம் அவருக்குள் புகுந்து விடுகிறது. தின்று தின்று சுவைத்து ஓய்ந்து போய் ஒருகட்டத்தில் அங்கேயே தூங்கி விடுகிறார்.

ஈஸ்டர் தினமான மறுநாள் காலை அவரைப் புன்னைகையுடன் எழுப்புகிறாள் வியன்னா. வியன்னாவைப் பார்க்கமுடியாமல் தனது செய்கைக்காக குறுகிப் போய் அமர்ந்திருக்கிற மேயரை வியன்னா தனது புன்சிரிப்பினைக் கொண்டே சமாதானம் செய்கிறாள். அன்றைய ஈஸ்டர் தினம் தனது மனதை மாற்ற வந்த தினம் என்று மேயர் நினைக்கிறார். ஊரில் ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்திற்கு அனுமதியும் கொடுத்து அதில் உற்சாகமாக கலந்தும் கொள்கிறார். ஜோசெபின் தனது கணவன் விட்டுச் சென்ற காபி ஷாப்பை எடுத்து நடத்துகிறாள். வாடைக்காற்று வீசுகிறது. ஆனால் வேறெங்கும் செல்லாமல் வியன்னாவும், அனோஷ்கவும் அங்கேயே தங்க முடிவு செய்கின்றனர்.

ஒரு சாக்லேட் மக்களை மதத்திற்கு எதிராக தூண்டி விடுமா? எனக் கோபமாக குரல்கள் எழுந்தன. சக மனிதர்கள் மீதான அன்பும், அக்கறையுமே மதங்கள் போதிக்கின்றன. இந்த அன்பையும், அக்கறையையும் ஒருபோதும் கட்டுப்பாட்டின் மூலம் வென்றுவிடவே முடியாது. சாக்லேட் என்பது இந்தப் படத்தின் குறியீடு தான். ஒவ்வொரு மனதிற்குள்ளும் உண்டாகியிருக்கிற அகச்சிக்கல்களைத் தீர்க்கும் மருந்து அந்தந்த மனிதரிடமே தான் இருக்கிறது. அதனைக் கண்டுபிடிக்கும் வித்தையில் ஜெயிப்பதும், முயற்சிப்பதும் தான் மனித வாழ்க்கை. வியன்னா, எங்கிருந்து அந்த ஊருக்கு வந்தாள், அடுத்து எங்கு போவாள் என்கிற கேள்விகளுக்கான விடையைப் படம் நமக்கு சொல்வதில். வியன்னாவின் அம்மா அவளுக்குக் கற்றுக் கொடுத்தததை தன்னுடைய மகளுக்கு வியன்னா கடத்துகிறாள். அவள் தயாரிக்கும் சாக்லேட்டும், அந்தக் கடையும் எல்லோருடைய பிரச்சனையையும் தீர்ப்பதாக இருக்கிறது.

பிரான்சில், சாக்லேட் 1615ஆம் ஆண்டில் தான அறிமுகமாகிறது. அரச குடும்பத்தினர் மட்டுமே சுவைக்கூடியதான விலைமதிப்பு மிகுந்த உணவுப் பண்டம் அது. அரசக் குடியினர் திருமணத்தின்போது இளவரசிகளுக்கு சாக்லேட் தயாரிக்கும் உபகரணங்களை சீதனமாக கொடுத்துள்ளனர். பிரான்ஸ் மக்கள் சாக்லேட்டினை சுவைக்க இரு நூற்றாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் மெதுவாக சாக்லேட் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. அப்போதும் கூட, எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய பொருளாக அது இல்லை. இருபதாம் நூற்றாண்டில் சாக்லேட்டுக்கான பிரத்யேகக் கடைகள் திறக்கப்படுகின்றன. ஒருவர் மற்றவருக்கு சாக்லேட்டினைப் பரிசளிப்பது என்பது, அரசக் குடும்பங்களின் பழக்கத்தை ஒத்திருப்பதால், அதை கௌரவமாக மக்கள் நினைத்தனர். இன்றும் பிரான்ஸ் சாக்லேட்டுகளுக்கு உலகம் முழுக்க வரவேற்பு உண்டு. மக்கள் அதன் சுவையில் தங்களை மறக்கிறார்கள் என்பதால், அது மதரீதியாக விலக்கப்பட்ட உணவு என பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பிரசாரம் நீடிக்கவில்லை. இந்தப் பின்னணியில் தான இந்தப் படத்தையும் பார்க்க வேண்டும். எது மக்களைத் தன பக்கம் ஈர்க்கிறதோ அது கடவுகுக்கு எதிரானது என்கிற பிரச்சாரத்தினை அடிப்படையாகக் எதிர்க்கிறது இந்தப் படம். இது கதவுக்கு எதிரானது அல்ல, மதத்தின் பெயரால் அடக்குமுறையை செலுத்தும் எவருக்கும் எதிரானது என்பதைச் சொல்லவே நமக்கு வியன்னாவை அறிமுகம் செய்கிறார்கள்.

வியன்னா ஒவ்வொருவருக்கும் தரும் சாக்லேட்டில் அவர்களின் பிரச்ச்னைகளுக்கான தீர்வினை வைத்திருக்கிறாள். அதைத் தன் அம்மாவிடமிருந்தே கற்றுக் கொண்டதாகச் சொல்கிறாள். எல்லோருக்கும் மகிழ்வாக வாழ வேண்டிய தேவையும், தகுதியும் இருக்கிறது என்பதே வியன்னாவின் வாதம்.

சாக்லெட்டின் மாய ருசியை திரைவழியாக உணரச் செய்த விதத்திலும் வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது  சாக்கலேட்டின் சுவை மிகுந்த இந்தப் படம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments