ரசிகையின் மகன் – கருப்புத் திரை 3

0
2

“ஹாலிவுட் கதாபாத்திரங்களுக்கும் எனது கதாபாத்திரங்களுக்கு வித்தியாசம் இருக்கிறது தெரியுமா!! எனது கதாபாத்திரங்கள் உண்மையானவை”
இப்படி ஹாலிவுட்டின் கதவுகளுக்குள் நின்று கொண்டு சொல்ல வேண்டுமெனில் ஒருவருக்கு அசாத்திய தைரியம் இருக்க வேண்டும், அல்லது தன்னுடைய படைப்புகளின் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்பைக் லீக்கு இரண்டும் உள்ளன.

ஸ்பைக் லீயின் ரசிகர்களுக்கு அவரின் தொப்பியும் நன்கு அறிமுகமாயிருக்கும். 1619 என்கிற எண்ணிடப்பட்ட தொப்பி அது. அவை வெறும் எண்கள் அல்ல. அதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அதன் பின்னணி தெரியவேண்டும் என்றே ஸ்பைக் லீ அணிகிறார். அவருடைய மூதாதையர்கள் ஆப்ரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாக கடத்திக் கொண்டு வரப்பட்டவர்கள். ஒட்டுமொத்த அமெரிக்க கறுப்பினத்தின் மூதாதையர்கள் அவர்கள். சொந்த நிலத்தில் இருந்து ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக ஏற்றி வந்த முதல் கப்பல் அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்த வருடம் 1619. அமெரிக்கப் புரட்சியில் முதல் இரத்தப் பலி கொடுத்ததும் ஆப்பிரிக்கனே. தங்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும், எந்த வரலாறையும் மறந்துவிடக்கூடிய மனித மூளைகளுக்கு அறிவுறுத்த வேண்டியே ஸ்பைக் லீ 1619 எண்ணிட்ட தொப்பியை அணிகிறார்.


ஸ்பைக் லீ அரசினை கேள்வி கேட்பார், தனது கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக சர்ச்சைகளுக்கு உள்ளாவார், திரைப்படத்துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மேடையில் பட்டென போட்டு உடைப்பார். இதற்கென அவருக்குத் தனித் தைரியம் தேவைப்பட்டிருக்கவில்லை. அவருக்கு இருந்த ஒரே உறுதி, அவர் இறந்தகாலைத்தையும், நிகழ்காலத்தையும் அறிந்தவர் என்பது தான். தனது படங்களின் வழி அவர் இவை இரண்டையும் குறித்த சிந்தனையைத் தான் கேள்வியாக முன்வைக்கிறார்.
படங்களில் பேசுவதோடு அவர் தன்னை ஒதுக்கிக் கொள்வதில்லை. அமெரிக்காவில் ஹரிகேன் புயல் தாக்கியபோது விளிம்புநிலை மக்களை அரசு அந்த புயல் காலத்தில் கைவிட்டதை ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டதோடு, அப்போதைய புஷ் தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிக்கவும் செய்தார். அந்த ஆவணப்படத்தில் அவர் கருப்பு, வெள்ளை இனப்பாகுபாட்டினைப் பார்க்கவில்லை, மிகவும் பின்தங்கிய பகுதிகளை புஷ் அரசாங்கம் எவ்வாறு புறந்தள்ளியது என்பதையும் பதிவு செய்திருந்தார். அதில் வெள்ளை இன மக்களின் துயரங்களும் மிகுந்திருந்தன.  

ஸ்பைக் லீயின் அம்மா இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர். மகனுக்கு அவர் சொன்னக் கதைகளில் வரலாறுகளும் உண்டு. அப்பா ஜாஸ் இசைக் கலைஞன். பாப் டைலனுடன் இசைக்கச்சேரிகள் செய்தவர். பாப் டைலன் எலெக்ட்ரிக் கிதாருக்கு மாறியபோது  “என்னால் அதோடு ஒத்துப் போகமுடியவில்லை’ என நல்ல வருமானம் தந்து கொண்டிருந்த மேடை நிகழ்வுகளில் பங்கேற்பதை நிறுத்திக் கொண்டவர். அவருக்கு அப்போது ஸ்பைக் லீயோடு சேர்ந்து ஐந்து குழந்தைகள். அப்பாவுக்கு வேலையில்லை என்றதும் லீயின் அம்மா வேலைக்குச் சேர்ந்தார்.  பள்ளிகளில் கறுப்பின இலக்கியங்கள் வகுப்பினை எடுக்கத் தொடங்கினார் அம்மா. “எல்லோருக்கும் நான் சமமானவன் என்று நிரூபிக்க வேண்டுமானால், அவர்களை விட எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்பதை முதலில் காட்டியாக வேண்டும்” இது லீயின் அம்மா தனது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து. அம்மாவின் பாதிப்பும் அப்பாவின் பிடிவாதக் குணமும் கொண்ட குழந்தையாகவே வளர்ந்தார் லீ. 

அவருடைய அப்பாவிற்கு திரைப்படங்கள் பார்ப்பதென்பது அறவே விரும்பத்தாகத ஒன்று. அவருடைய ஆர்வமெல்லாம் விளையாட்டுகளில் மட்டுமே. லீயின் அம்மா திரைப்பட ரசிகை. மார்ட்டின் ஸ்கார்சியின் ரசிகையாக இருந்திருக்கிறார். அவர் மூலமே திரைபபடங்கள் குறித்த பார்வையும், அதை பகுத்தறியும் திறனும் வாய்க்கப்பெற்றதாக பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார் லீ. அவருடைய அம்மாவை தனது கல்லூரி காலகட்டத்தில் இழந்தார் லீ. 

கல்லூரியில் படிக்கும்போது தனது நண்பர்களுடன் ஒரு குறும்படத்தை இயக்கினார். அது கல்லூரிக்குள்  கவனம் பெற்றது. படிப்பு முடிந்ததும் அதே குழுவினரைக் கொண்டு அவர் இயக்கிய படம்  She Has Got To Have It.  அந்தப் படத்தை இரண்டே வாரங்களில் முடித்தார். 

அப்போது தொடங்கி தொடர்ந்து சுயாதீனப் படங்கள் எடுப்பதில் விருப்பம் கொண்டிருக்கிறார் லீ. ‘நமக்கான படங்களை நாம் தான் எடுக்க வேண்டியிருக்கிறது. ஹாலிவுட்டின் ஸ்டுடியோ கதவுகள் நமக்காகத் திறக்கும் என்று காத்திருக்க முடியாது. நம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இயக்குனராவும், நடிகராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் இருப்பதை விட முக்கியமானது ஸ்டுடியோவின் தலைமையை ஏற்பது. அது தான் அதிகார மையம். அது நிகழும்போது தான் நமது படங்களும் ஜனரஞ்சக சந்தைக்கு வரும்” என்பார். சொந்தத் தயாரிப்பில் எடுத்த இவரது படங்கள் பெரும்பாலும் அதிகக் கவனத்தை உலகம் முழுவதும் பெற்றிருக்கின்றன. குறைந்த செலவில் ஒரு கதையை எப்படி சொல்ல முடியும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்.

இதற்கு அவரது மூன்றாவது படமான She Has Got To Have It படத்தை உதாரணமாகச் சொல்லலாம். லீ வளர்ந்த ப்ரூக்ளின் அவரது படத்தில் தவறாமல் இடம்பெடிருக்கும். ப்ரூக்ளினின் சகிக்கமுடியாத கோடைகாலம் இந்தப் படத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். அந்தப் பகுதியின் வெப்பத்தை நம்மால் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ந்து கொள்ள முடியும். இந்தப் படம் வெளிவந்த காலத்திலும், முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு யுனிவர்சல் ஸ்டுடியோ மீண்டும் வெளியிட்டபோதும் ஒரே மாதிரியான கடும் எதிர்ப்பையே சந்தித்தது. அதான் வாழ்ந்த தெருவில் நடந்த சம்பவங்களையே லீ கதையாக மாற்றியிருந்தார். இத்னஹ்ர்காக அவர் ஒரு தெருவையே உருவாக்க வேண்டியிருந்தஹ்டு. சொந்தத் தயாரிப்பு என்பதால் மிகக் கச்சிதமாக திட்டமிட்டிருந்தார். அந்தப் படத்தில் இடம்பெறுகிற பிட்சா கடையும், வீடுகளும் உடைந்து போன கட்டடங்களில் இருந்து உருவாக்கப்பட்ட தற்காலிக படப்பிடிப்புத் தளங்கள். அதில் பழங்கால ஓவியங்கள் வண்ணங்கள் என ஒவ்வென்றும் திட்டமிட்டு குறைந்த செலவில் உருவாக்கப்பட்டவை. அதில் ஒரு தீ விபத்து காட்சி. அதுவும் கூட கேமேராவில் எது காட்டப்படுமோ அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட காட்சிகள். அதிக பட்ஜெட் படங்களுக்கு இணையான தரத்தையும் அது தந்திருந்தது.


இந்தப் படம் மட்டுமில்லாமல் லீயின் ஒவ்வொரு படங்களிலுமே இனப் பிரச்சனையை அவர் தூண்டி விடுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தபடி இருக்கும். அதற்கு ஒவ்வொரு முறையும் சளைக்காமல் பதில் சொன்னபடி இருக்கிறார் லீ. “நாங்கள் யார் என்பதை நீங்கள் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். நியூயார்க் நகர வீதிகளில் டாக்ஸிக்களை வாடகைக்குக் கேட்டால், ‘எங்கள் ட்ரிப் முடிந்துவிட்டது’ என்று சொல்கிறார்கள். அது பொய் என்று எங்களுக்குத் தெரியும். இப்படி ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் பாகுபாடு காட்டிக் கொண்டே இருக்கையில் அதைப் பற்றி மட்டும் பேசவே கூடாது என்று சொல்வது சரியாகப்படுகிறதா?” இது லீயின் கேள்வி.


இவருடைய கதாபாத்திரங்களும் இதையே தான் கேட்கின்றன. “நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கடை வைத்திருக்கும் நீ ஏன் உன்னுடைய சுவர்களில் ஒரு கறுப்பின தலைவனின் புகைப்படத்தைக் கூட மாட்டவில்லை. எல்லாமே இத்தாலியர்களாகவும் அமெரிக்கர்களாகவும் இருக்கிறார்களே. ஏன்” என்று கேட்கும் ஒரு கதாபாத்திரம்.
“நீங்கள் உங்கள் இனத்தின் விடுதலைக்காக இதெல்லாம் செய்கிறீர்களா?”


“இல்லை..அவர்களின் அதிகார உரிமைக்காக”

கடவுள் என்ன கருப்பரா? எல்லாருக்கும் தெரியும் கடவுள் வெள்ளை நிறத்தவர் என்பது.

இவை இவரது படங்களின் சில உதாரணங்கள்.

எதையும் வெளிப்படையாக விவாதிக்கும், பேசிவிடும் தன்மை கொண்டவை இவரது படங்கள். பூசி மறைக்கும் வேலையே இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் தனது கதைகளைத் தானே தயாரிக்கிறார் என்பது. யாரிடமும் ஒவ்வொரு காட்சிக்குமான அர்த்தத்தையோ, அதன் அரசியல் பின்புலத்தையோ சொல்ல வேண்டிய அவசியத்தை அவர் விரும்புவதில்லை. இப்போதும் அவரது தயாரிப்பு நிறுவனமான Forty Acres and Mule Filmworks  ப்ரூக்ளினில் தன இன மக்கள் வசிக்கும் ஒரு  தெருவிலேயே நடத்திவருகிறார்.

 

திரைப்படங்களின் ஆதிக்கத்தை அவர் முப்பது வருடங்களாக நேரில் சந்தித்ததால், பலருக்கும் இலவசமாக திரைப்பட நுணுக்கங்களைக் கற்றுத் தருகிறார். எந்தக் கல்லூரிக்கும் சிறப்பு பேராசியராக செல்கிறார். அதற்கு ஒரே காரணமாக அவர் சொல்வது, நமது கருத்தை சொல்வதற்காக ஒரு வலிமைமிக்கத் தளமாக திரைப்படங்கள் இருக்கிறது. அதை வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான். எந்தத் திரியில் நெருப்புப் பற்றும் என்பது நமக்குத் தெரியாது. என்னுடைய கடமை எல்லாம் நெருப்பை எடுத்துக் கொண்டே அலைவது தான் என்பது லீயின் வாழ்க்கை முறைகளில் ஒன்று.

பொதுவாக லீயின் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர் வன்முறையைத் தூண்டுகிறார் என்பதாக இருக்கிறது. “ஒருவன் வன்முறையைத் தூண்டுவதற்கும், தன்னைத் தற்காத்துக் கொள்ள திருப்பித் தாக்குவதற்குமான வேறுபாட்டினைத் தான் என் படங்களில் பார்க்க முடியுமே தவிர, வன்முறையை அல்ல” என்பது அவரது வாதம். அவர் படங்களை பார்க்கும் எவருக்கும் அவர் சொன்னதன் அர்த்தம் புரியும்.

ஒரு பூங்காவில் கறுப்பினப் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டபோது அரசாங்கமும், ஊடகங்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை. கறுப்பின மக்கள் தங்களுக்குள் அடிதடியில் ஈடுபடும்போது, “இவர்கள் அடித்துக்கொண்டு சாகட்டும்” என்று விட்டுவிடுகிறார்கள். ஆனால் வெள்ளை இனப் பெண்ணுக்கு இது  மாதிரியான பாதிப்பு ஏற்பட்டால், உடனே கடவுள் இருக்கிறாரா? என்கிற ரீதியில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதையெல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் தன்னைப் போல ஒருவன் இதற்கான எதிர்வினையைத் படங்களில் காட்டுவதில் என்ன தவறு என்பது லீயின் குரல். 

அவருடைய மையக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதமே அலாதியானது. Inside man படத்தில் டால்டன் ரஸ்ஸல் தன்னைப் பற்றி இபப்டி சொல்வதில் இருந்து தொடங்கும் படம். “என் பெயர் டால்டன் ரஸ்ஸல்..நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில் நான் வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பவன்” இப்படி அவன் தொடங்குகையில் பார்வையாளர்கள் கூர்மையடைந்துவிடுவார்கள். டால்டன் ரஸ்ஸல் என்ன

சொன்னாலும் கேக்கத் தயாராகிவிடுவார்கள். அவன் எங்கிருக்கிறான் என்பதை அடுத்த ஷாட் காட்டிவிடும். சிறையில் அமர்ந்திருப்பான் ரஸ்ஸல். போதுமான அளவுக்கு பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவுடன், கதைக்குள் செல்வார் லீ. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘சைய்ய சைய்யா’ பாடலை டைட்டிலில் பயன்படுத்தியிருந்தார்.    

அதே போல் இவரது படங்களின் முதல் காட்சி என்பது அதி ஸ்வாரஸ்யாமனது. நம்மால் யூகிக்க முடியாதது. Blackkklansman படத்தின் முதல் காட்சி Gone with the Wind படத்தின் ஒரு காட்சியில் தொடங்கும். அமெரிக்க உள்நாட்டுப் போரில் காயமடைந்த வீரர்களுக்கு நடுவில் நாயகி நடந்து வரும் காட்சி அது. அது முடிந்ததும் ஒருவர் வெள்ளை இன மக்கள் எத்தனை உயர்வானவர்கள், அவர்களுடன் கருப்பின மக்கள் ஏன் ஒன்று கலக்கக்கூடாது என்றும் பைபிளில் வெள்ளை இன மக்களே உலகத்தை ஆள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது என்றும் ஆவேசமாகப்  பேசிக்கொண்டிருப்பார். அவருக்குப் பின்னால் திரையில் வெவ்வேறு காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். நாம் கதைக்குள் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகே வருவோம். கல்லூரி மாணவர்கள் மத்தியில் சட்ட உரிமை குறித்து பேசுபவரிடமிருந்து படம் தொடங்கும். இந்தப் படம் லீ இயக்கியதில் குறிப்பிடத்தக்கது. 1970ல் கொலோரோடாவில் றான் ஸ்டால்வார்த் என்கிற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக காவல்துறையில் பணியில் அமர்த்தப்படுகிறார். அவர் அப்போதைய ரகசியக் கலவரக் குழுவான கு கு கிளானில் ஊடுருவுகிறார். அந்தக் குழு அமெரிக்கா வெள்ளை இனத்தவருக்கே என்று கலவரங்களை ஏற்படுத்தும் குழு. அதில் ஊடுருவும் றான் சந்திக்கும் சவால்களும் சாகசங்களுமே கதை. மிகத் தீவிரமான அரசியலைப் பேசக்கூடிய படம் இது. லீ இதில் செய்திருக்கும் வித்தை என்பது றான் ஸ்டால்வார்த்தின் கதாபாத்திர வடிவமைப்பு தான். சுற்றிலும் வெள்ளை இனத்தவர் இருக்க, அவர்களுக்கு இடையில் பணியாற்ற தனியான நெஞ்சுரம் வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளும் றான் எது குறித்தும் பகடியையும் அதே சமயம் தன்மானத்தையும் ஒரு சேரக் கொண்டிருக்கும் ஒருவராக இருக்கிறார். 

அடுத்தது மால்கம் எக்ஸ் திரைப்படம். இவர் இயக்கிய படங்களில் நிச்சயமாய் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் Malcolm X. முதலில் திரையில் மால்கம் எக்ஸின் குரல் மற்றுமே ஒலிக்கும். அவர் பேசிய பிரபல மேடைப் பேச்சில் ஒலிக்கிற குரல். அதன் பின்  நாம் அறிந்த மால்கம் எக்ஸ் வெகு நேரத்துக்குப் பிறகே நமக்கு முன் தோன்றுவார். ஒரு தலைவன் எப்படி உருவாகிறார் என்பதைக் காட்டும் படம் தான் அது. அதில் எப்போதுமே வியக்கும் ஒரு காட்சி ஒன்றுண்டு. தனது மரணத்துக்கான மேடையை நோக்கி மால்கம் எக்ஸ் செல்வதக்று முன்பு எடுக்கபப்ட்ட காட்சி. மிக புத்திசாலித்தனமான , அதே நேரம் நம்மை உணர்வுவயப்பட வைக்கும் காட்சி அது. மால்கம் எக்ஸ் எந்த மேடையில் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது சுடப்பட்டு இறந்து போனார் என்பது வரலாறு. அதனால படம் பார்ப்பவர்கள் அவர் து மரணத்துக்கான் மேடை

நோக்கிப் போகிறார் என்பது தெரிந்துவிடும். அதை லீ காட்டியிருக்கும் விதம் அற்புதமானது.

சிறந்த தொழில்நுட்பக் கலைஞர் ஸ்பைக் லீ. ஒவ்வொரு படங்களிலும் அவர் வண்ணங்களைப் பயன்படுத்தும் விதமும், கேமெரா கோணங்களும் வசனங்களும் அபபடியொரு ஒத்திசைவைக் கொண்டிருக்கும். அவருடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அநேகமாய் முப்பது வருடங்கள் அவருடன் பயணப்பட்டவர்களாகவே இருப்பார்கள். ஆனாலும் ஒவ்வொரு படத்தினைத் தொடங்குவதற்கு முன்பும் அவர் அதற்காக முன்தயாரிப்பில் முழுமையாக ஈடுபதுவதைத் தவிர்க்ககூடாது  என்றே நினைக்கிறார் லீ. குழுவில் உள்ள அனைவருக்கும் படப்பிடிப்பின் அத்தனை திட்டங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்று திட்டமிடுபவர் லீ.

லீயின் படங்களும் அவரது பேச்சுகளும் சர்ச்சைக்குள் சிக்கலாம். அது குறித்து அவர் கவலைப்படுவதில்லை. எல்லோருக்கும் அவர் சொல்லும் பதில்,

‘வரலாறை புரிந்து கொள்பவர்கள் என்னையும் புரிந்து கொள்வார்கள்” என்பது. இவருடைய படங்களைப் பார்ப்பதற்கு அமெரிக்கக் கறுப்பின அரசியல் குறித்தும், அதன் வரலாறு பற்றியும் அடிப்படையாகத் தெரிந்து கொள்ளும் அவசியத்தினை ஏற்படுத்தியிருக்கிறார். அதனைத் தெரிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு அவர் சொல்லும் செய்தி எத்தனை ஆழமானது என்பது புரியும்.

ஸ்பைக் லீயுமே கூட எல்லாக் காட்சிக்கும், வசனங்களும் எல்லாருக்கும் அதன்  ஆழத்தைச் சொல்லும் என்பதற்காகக் காட்டுவதல்லை. அவர் எதிர்காலத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவர். திரைப்படங்கள் வழி தன் இனத்தின் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு செய்தியை , வரலாறினை ஒவ்வொரு படத்திலும் அவர் தந்து கொண்டே இருக்கிறார்.

ஒரு இயக்குனராக அது தன்னுடைய பணி என்று நம்புகிறார். அதனாலேயே அமெரிக்க  இனவெறி அடிப்படைவாதிகள் இவர் படத்தை அஞ்சுகின்றனர். அச்சம் ஆபத்தானது, ஆனால் வரலாற்றை மறைப்பவர்களின் அச்சம் அவசியமானது. இது ஷெல்டன் ஜாக்சன் லீ என்கிற ஸ்பைக் லீக்கும் தெரியும்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here