நேற்று J பேபி படம் பார்த்தேன். எனக்குப் படம் பிடித்திருந்தது. பலவற்றை நினைவுபடுத்தியது படத்தின் கதை. எனது எட்டு வயது வரை வாசுதேவநல்லூர் என்கிற ஊரில் இருந்தேன். குற்றாலத்தில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர். குற்றாலம் சுற்றுப்பகுதியில் பலரைப் பார்க்க இயலும்., அவர்கள் இந்தியிலும், பிகாரியிலும், குஜராத்தியிலும் பேசிக்கொண்டே அலைந்து கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் வயதானவர்கள். வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ள முடியாத காரணத்தால் அவர்களைக் குடும்பமே அழைத்துக் கொண்டு வந்து குற்றாலம் போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களில் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். குற்றால அருவியில் குளித்தால் அவர்களின் மனநோய் சரியாகும் எங்கிற நம்பிக்கையைக் காரணமாக வைத்து அவர்கள் அங்கு அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்டவர்கள். அப்படி அலைந்து அலைந்து குற்றாலத்தின் சுற்றுப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு வந்துவிடுவார்கள். இப்படியாக சிலரை சிறுவயதில் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களை எல்லாம் நேற்று நினைத்துக் கொண்டேன்.
ஒருகாலகட்டத்தில் நாளிதழ்களின் இணைப்பிதழாக வருபவற்றில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டவர்கள் குறித்த கதைகள் ஒரே மாதிரி விதவிதமாய் வந்து கொண்டிருந்தன. அது பெரும்பாவம் என்பதாக எல்லாக் கதைகளும் முடியும். இந்தப் படத்தில் J. பேபியின் பிரச்சனை கொண்ட அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக் கொள்ளும் பிள்ளைகள் சந்திக்கும் சூழல்கள் அதிகம் பேசப்படுவதில்லை. அம்மாவை மிகப் பிடிக்கும், ஆனால் அவரது மனநிலை பிறழ்ந்தால் எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை என்பது படத்தின் ஒரு அடிநாதம். அதுவும், ஒரே அறை கொண்ட வீடுகளில், வறுமைக்கோட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்பது பேசப்படாத ஒன்று. அதனை படமாக்கியிருப்பதை அவசியமான ஒன்றாகவே பார்க்கிறேன். அம்மாவை எல்லோருக்கும் முன்பும் அடித்துவிட்டு குற்றஉணர்வில் உட்கார்ந்திருக்கும் மகன் முன்பாக ‘சாப்பிடவே இல்ல..பசிக்குது நைனா’ என்று வந்து நிற்கும் அம்மாவை இதற்கு முன்பு நாம் திரையில் பார்த்ததில்லை.
பிள்ளைகளுக்கு பாரமாகிவிட்டோம், ஒரே சொத்தும் கைவிட்டுப் போவது என்பதெல்லாம் வயதானவரை அதிலும் சுயமரியாதை கொண்டு பிள்ளைகளை வளர்த்தவரை என்னவெல்லாம் செய்யுமோ அதன் அளவு அதிகமானால் என்ன ஆகுமோ அதைக் காட்டியிருக்கிறார்கள். J.பேபியில் என் அம்மாவைப் பார்த்தேன், என் அப்பாவை, பெரியம்மாவை, அத்தையை..அவர்கள் விரும்புவதெல்லாம் மரியாதையை..
திரு ஊர்வசி குறித்து முதலில் எழுத ஆரம்பித்திருந்தால், மற்ற எதுவும் சொல்ல முடியாமல் போயிருக்கும். அப்பாவித்தனமும், ஆளுமையும் ஒரு சேரக் கொண்ட கதாநாயகிகள் நமக்கு அபூர்வமாவே கிடைத்திருக்கிறார்கள். சாவித்திரி, சரிகா, ரேவதி இவர்களில் ஊர்வசி எல்லாருக்கும் ஒரு படி மேல். இது போன்ற ஒரு கதாபாத்திரம் இனி நாயகிகளுக்கு அமையுமா என்று தெரியாது. அப்படியே அமைந்தாலும், ஊர்வசியை விஞ்ச முடியுமா என்பது சந்தேகமே. “நான் என்ன பண்றேன்னு எனக்கேத் தெரியல நைனா” என்று அவர் சொல்லிவிட்டு அழுதுகொண்டே பார்க்கிறபோது ஒரு புன்னகையை அவர் வெளிப்படுத்தியது…என்ன ஒரு அற்புதமான நடிகை அவர்!
கோர்ட் காட்சியில் அவர் நீதிபதியிடம் பேசுகிற காட்சியில் அப்படி சிரித்திருக்கிறேன்..”என் அம்மாவைக் கூட்டிட்டு போயிடுவியா..நானே டாகடர்” என ஒரு பெண் சொல்லும்போது அவளை சமாதானம் செய்து நிறுத்தும் இடத்திலும், “இது என்னோட பெரிய பையன்..சின்ன மகன்” என்று பெங்காலியில் மற்றவர்களிடம் சொல்லும்போதும்..இந்த அம்மாக்களின் குணங்கள் மாறாது போலிருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது..
இந்தப் படம் வெளிவந்த உடனேயே பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டேன்..சிறிது முன்பாகவே பார்த்திருக்கலாம். படத்தின் இயக்குநர் திரு. சுரேஷ் மாரிக்கு ஒரு வாழ்த்து கூடுதலாக சொல்ல வேண்டும், நடிகர்கள் தேர்வில் அசத்தியிருக்கிறார். யாரு அந்த செல்வி கதாபாத்திரத்தில் நடித்தவர் எனத் தெரியவில்லை..தவறவிடக்கூடாத நடிகை அவர்.
திரைப்படத்தில் பணிபுரித்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்..