Homeகட்டுரைகள்ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா !

ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா !

(2016 ஆம் ஆண்டு ‘உலகை ஆளும் ராசாத்திகள்’ என்கிற ஒரு தொடரை தொடர் மல்லிகை மகள் இதழுக்காக எழுதினேன் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை)

ஐஸ்வர்யா ராய் என்கிற பெயர் இந்தியாவில் இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர்ந்து உச்சரிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த உலக அழகிப் போட்டியின் போது தான் உலகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஐஸ்வர்யா ராயின் பெயரே தெரியும். உலக அழகியாக ஐஸ்வர்யா ராய் பெயர் அறிவிக்கப்பட்டதும் இந்தியாவே மகிழ்ச்சியில் கைக்கொட்டியது. அந்தக் கைதட்டல் இன்று வரை ஓயவில்லை.

ஐஸ்வர்யா பிறந்தது கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரில். அப்பா கிருஷ்ணராஜ் இராணுவத்தில் உயிரியல் நிபுனராக இருந்தார், அம்மா ஒரு எழுத்தாளர். பள்ளியில் படிக்கும்போதே ஐஸ்வர்யாவுக்கு விதவிதமாக சிகையலங்காரம் செய்து கொள்வதும், புதிய விதமான உடைகளைப் போட்டுப் பார்ப்பதிலும் ஆர்வம் இருந்தது. இதற்கெல்லாம் வீட்டில் யாரும் தடை சொல்லவும் இல்லை. அப்போதைய ஐஸ்வர்யாவுக்கு ஒரு கனவு இருந்தது. அதை அவர் அம்மாவிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். ‘அம்மா நான் புகழ்பெற்ற ஆர்க்கிடெக்டாக வருவேன், அதன் பின் கல்யாணம் செய்து கொண்டு நான் வடிவமைத்த வீட்டில் கணவர் குழந்தைகளோடு வாழ்வேன்’  இவ்வளவு தான் ஐஸ்வர்யாவின் ஆசை. உயிரியலில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் நடுவே கொஞ்சம் மருத்துவராகும் கனவும் அவருக்கு வந்து போனது.

அழகு எதையும் சாதிகக்க்கூடியது என்பது ஐஸ்வர்யாவுக்கு தெரிந்திருந்தது. ஆனால் தன்னுடைய அழகை மட்டும் மூலதனமாக வைத்து முன்னேறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் ஐஸ்வர்யா. “கல்லூரியில் முதல் வருடம் முடியும்போது முதல் மதிப்பெண்கள் வாங்கியிருந்தேன். என்னிடம் பலரும் கேட்டது, ‘நீயெல்லாம் நன்றாகப் படிப்பாய் என்றே நாங்கள் நினைக்கவில்லைஎன்றார்கள். எனக்கு இப்படி அவர்கள் சொன்னது கோபத்தை வரவழைத்தது என்கிறார். அழகாய் இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்கிற பொதுப்புதியை தான் எப்போதுமே வெறுத்து வந்ததாக சொல்கிறார் ஐஸ்வர்யா. கல்லூரியில் படிக்கும்போது இவரின் ஆங்கிலப் பேராசிரியை ஐஸ்வர்யாவை சில புகைப்படங்கள் எடுத்து ஒரு விளம்பர நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு ஐஸ்வர்யாவின் முகவெட்டுப் பிடித்துப் போய் விட உடனேயே விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்காக துபாய் சென்று வந்தார்.

அதன் பின் சில மாடலிங் வாய்புகள் வந்தன. அந்த நேரம் தான் மிஸ் இந்தியா போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பு வந்தது. அதில் வெற்றி பெற்றால் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளலாம் . ஐஸ்வர்யாவுக்கு உடனேயே உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. இதற்கு காரணம் புகழ் மட்டுமல்ல, ‘இந்திய பெண்கள் ஒன்றும் தெரியாதவர்கள், அவர்களுக்கு கல்வியறிவே கிடையாது, நாகரீகமற்றவர்கள் என்று தான் மேலை நாடுகளில் நினைக்கிறார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது தான் அவரின் லட்சியமாக இருந்தது . அதற்காக இந்தப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டார். சிறப்பாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார். தன்னை எப்படியெல்லாம் வடிவமைத்துக் கொள்ள வேண்டுமோ அதற்கான பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டார்.

அந்த ஈடுபாடும், மன உறுதியும் ஒரே இரவில் உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது. ஒரு கனவு போல நடந்து முடிந்த அந்தப் போட்டிக்குப் பிறகு அடுத்து என்ன?’ என்ற கேள்வி ஐஸ்வர்யாவுக்கு எழுந்தது. இனி தான் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாது. வாழ்க்கை நமக்கு ஒரு வழி காட்டியிருக்கிறது அதில் பயணிப்போம் என்று முடிவெடுத்தார். அந்த விதி அவரை மேடு பள்ளமுமாக அழைத்துச் சென்றது.

ஆரம்பகாலத்தில் ஐஸ்வர்யா நடித்த படங்கள் எதுவுமே வணீகரீதியாக எடுபடவில்லை. இதோடு ஐஸ்வர்யா ராயின் நடிப்பு குறித்து மோசமான விமர்சனங்களும் வந்தன. ‘மேடைகளில் கேட்வாக் மட்டுமே போகலாமேஎதற்காக இந்தப் பெண் நடிக்க வருகிறாள்?’ என்றெல்லாம் பேசினார்கள். கலங்கிப்போனார் ஐஸ்வர்யா. தன்னுடைய தவறு என்ன என்பதைப் புரிந்து கொள்ள சில மாத காலம் அவகாசம் எடுத்துக் கொண்டார். முழுமையாக இயக்குநர்களிடம் தன்னை ஒப்படைப்பது என்ற முடிவுக்கு வந்தார். கேமராவின் முன்பு அந்தக் கதாபாத்திரமாக மட்டுமே இருக்க வேண்டும், அங்கு அழகி பட்டமெல்லாம் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்து கொண்டார். தமிழிலும், இந்தியிலும் சிறந்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரையில் அவர் தோன்றுகிற சில நொடிகள் மட்டுமே ஐஸ்வர்யா ராயாக பார்வையாளர்களுக்குத் தெரிந்தவர், பிறகு கதாபாத்திரமாக மட்டுமே அவர்களின் மனதில் பதிந்தார். தொடர்ந்து பட வாய்ப்பகள் வந்தன. ‘எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறிவிடுதல்என்பதில் ஐஸ்வர்யாவுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்து வருகிறது. அதனாலேயே திரைப்படகளுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதோடு தொடர்ச்சியாக சர்வதேச மாடலிங், பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகள், சமூக நல சேவைகள், விளம்பரங்கள், நல்லெண்ணத் தூதுவர் என பல கட்டங்களிலும் சிறப்பாக பணியாற்ற முடிகிறது அவரால்.

இதற்கிடையில் சில படங்கள்; அவருக்குத் தோல்வியை தந்தபோது அவர் மீதான பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. அதில் ஒன்று அவர் மற்றவர்களிடம் மிக மோசமாக நடந்து கொள்கிறார் என்பது. அதற்கு உடனேயே அவர் பதில் சொல்லிவிடவில்லை. சிக்கலான காலகட்டங்களில் அமைதியாக இருப்பது என்பது அவர் அனுபவப்பாடம். அதனால் மீண்டும் வெற்றிகளை அடைந்தபின்னரே அதற்கான பதிலைச் சொன்னார். “அகங்காரம் கொண்டவள், யாரையும் மதிப்பதில்லை, அழகி என்ற திமிர் பிடித்தவள் என்றெல்லாம் என்னைப் பற்றி சொல்லப்படுகிறது. ஒன்று மட்டும் சொல்வேன், நான் ஒரு மனிதப்பிறவி. எனக்கு சில ஆளுமைகள் இருக்கின்றன. அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. என்னைப் பற்றி அவதூறு சொல்பவர்கள் யாரும் என்னிடம் பழகியது கூட இல்லை. என்னுடைய நண்பர்கள், இயக்குநர்கள் இவர்கள் அனைவரிடமுமே நான் அன்பாக இருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு பெண்ணும் கூட. என்னால் அன்பாக மட்டுமே இருக்க முடியும்என்றார்.

உடன் நடிக்கும் நடிகர்களுடன் ஐஸ்வர்யா ராய்க்கு இருந்த அந்தரங்க நட்பு பற்றி தொடர்ந்து கேள்விகள் எழுப்பபட்டன. அதில் ஒரு நடிகர் குறித்து தைரியமாக கருத்தை வெளியிட்டார், “என்னுடைய நல்ல நண்பர்களில் அவரும் ஒருவர். ஆனால் பெண் என்பதாலேயே என்னைப் பற்றி மோசமான வார்த்தைகளை கூறும்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அவரை விட்டுப் பிரிகிறேன்என்றார். இந்த வெளிப்படையான பேச்சினால் ஐஸ்வர்யா பற்றிப் பேசிக் வதந்தி கிளப்பிக் கொண்டிருந்தவர்கள் வாயை மூடினார்கள். மீண்டும் அவர் அபிஷேக் பச்சனுடன் இணைத்துப் பேசப்பட்டார். இருவருக்கும் திருமணம் என்றதும் அந்தத் திருமணத்தைப் பற்றி ஏராளமான வதந்திகள் பரப்பப்பட்டன. இப்போதும் ஐஸ்வர்யா அமைதியாகவே இருந்தார்.

ஆனால் பிரபலமானவராக இருப்பதன் வேதனையை திருமணத்திற்குப் பிறகு சிலநேரங்களில் அனுபவித்ததாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா. “என்னுடைய தனிப்பட்ட வாழ்வு என்பது வெட்டவெளிச்சமாக தெரியப்பட வேண்டும் என்பதில் எல்லோருமே விருப்பமாக இருந்தனர். உடல் கொஞ்சம் மாற்றமமடைந்தாலும், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பார்கள். என்னுடைய வயிற்றுப் பகுதியை சிவப்பு அம்புக்குறியினால் சுட்டிக்காட்டி பத்திரிகைகள் நான் கர்ப்பமாக இருந்ததாக செய்தி வெளியிடும். இதனைக் கடந்த போக மனதளவில் நிறைய பக்குவப்பட வேண்டியிருந்ததுஎன்றார்.

ஐஸ்வர்யா தான் கர்ப்பமாக இருக்கிற செய்தியை அறிவித்த நொடியில் இருந்து அவரின் கர்ப்ப காலத்து செய்திகள் பற்றித் தெரிந்து கொள்ள ஊடகங்கள் ஆர்வமாக இருந்தன. ஐஸ்வர்யாவுக்கு குழந்தைப் பெறுவதற்கு முன் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகமானோரால் தேடிப்பார்த்த பிரபல புகைப்படமானது.

ஆராத்யா பிறந்த ஒரு வருடத்திற்கு ஐஸ்வர்யா வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. ஒருமுறை காரில் அவர் அமர்ந்திருந்த ஒரு புகைப்படம் வெளியாகி கேலி கிண்டலுக்கு உள்ளானது. அந்தப் புகைப்படத்தில் ஐஸ்வர்யா உடல்பருமனோடு இருந்தார். உலக அழகியே ஆனாலும் இது தான் கதி என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கிண்டல் பேசப்பட்டது. பத்திரிகைகள் அட்டைப்பட கட்டுரையாக இதனை வெளியிட்டது. பெண்கள் உடல்நலத்தைக் காக்க வேண்டும் என்ற அறிவுரையுடன் மருத்துவக் கட்டுரைகள் வெளிவந்தன. ‘ஐஸ்வர்யா இனி அவ்வளவு தான் என்று சிரிக்கப்பட்டது. வழக்கம்போல் இப்போதும் அமைதியாகவே இருந்தார் ஐஸ்வர்யா.

அடுத்து வந்த கான் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொண்டபோது அனைவரும் அதிசயப்பட்டுப்போனார்கள். சிக்கென்ற உடலுடன் முன்னைக்காட்டிலும் பொலிவுடன் வந்து நின்றார் ஐஸ்வர்யா. இதைப்பற்றி பின்னர் பலமுறை பேட்டிகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “என்னுடைய உடல் குறித்து மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறேன். ஒரு நடிகையாக, மாடலாக என்னுடைய உடலை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டுமோ அப்படி நான் இருந்தேன். ஒரு தாயாக என்னுடைய உடலை நான் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது அளவான சாப்பாடு, உடற்பயிற்சி இதெல்லாம் தவிர்க்கப்படவேண்யிருந்தது. அதனால் உடல் பெருத்துவிட்டது. இது எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுகிற இயற்கையான நிகழ்வு. இதுவும் ஒரு அழகு தான். இப்போது நான் எப்படியிருக்கிறேன் என்றும் பாருங்கள். மீண்டும் எனது வேலைக்கான உடலைக் கொண்டு வந்தேனா இல்லையா?” என்று கேட்டு அசரடித்தார். தனக்கு எப்போது எது தேவையோ, எது சரியோ அதை செய்வது தான் ஐஸ்வர்யாவின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஆராத்யா பிறப்பதற்கு முன்பு பல படங்களில் ஒப்பந்தம் ஆகியிருந்தேன். குழந்தைப் பிறந்த ஆறு மாத காலம் கழித்து மீண்டும் நடிக்கத் தொடங்கிவிடலாம் என்று தான் நினைத்திருந்தேன். அதனால் கர்ப்ப காலங்களில் அடுத்து நடிக்கப்போகும் படங்களுக்கான திரைக்கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். முதன்முறை தாயாபவர்கள் எல்லோருமே என்னைப் போல் தான் நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆராத்யா பிறந்த பிறகு எல்லாமே மாறிப்போனது. மூன்று வருட காலம் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. ஆராத்யா தான் என்னுடைய உலகமாகிப் போனாள். காலை எழுந்ததும் அவள் முகத்தைப் பார்ப்பது இரவு அவளைத் தூங்க வைப்பது, மீதி நேரங்களில் அவளுக்குத் தேவையானதை செய்து தருவது என்பது மட்டும் என்னுடைய தினசரி வேலையானது. ஆராத்யா பிறப்பதற்கு முன்பு என்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பது கூட எனக்கு மறந்துவிட்டதுஎன்கிற ஐஸ்வர்யா மீண்டும் நடிக்க வந்தபோது ஒரு தாயாக பல விதிமுறைகளைத் தயாரிப்பாளரிடம் பேசி தெளிய வைத்தப் பின்னரே நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

தினமும் ஆராத்யாவை பள்ளியில் கொண்டு போய் விட்டு விட்டுத் தான் படப்பிடிப்புக்குப் போவேன். அதனாலேயே மும்பையில் படப்பிடிப்பு நடத்தும் படங்களுக்கு மட்டும் சம்மதித்தேன். அதே போல் மாலை அவளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தும் இடத்திற்கு அழைத்து வந்துவிடுவேன். இதுவரை ஆராத்யாவைப் பார்த்துக் கொள்ள என்று தனியாக யாரையும் நியமிக்கவில்லை. இது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. உலகம் முழுவதும் வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் இது. மற்றவர்களை விட நான் ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலி. அவர்கள் தாங்கள் வேலைப் பார்க்கும் இடத்திற்கு குழந்தைகளை அழைத்து வர முடியாது. ஆனால் எனக்கு அந்த சுதந்திரம் இருந்ததுஎன்றார்.

இப்போது ஐஸ்வர்யாவுக்கு வயது நாற்பத்தி இரண்டு. பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். விளம்பரங்களில் ஒரு நொடி நேரம் ஐஸ்வர்யா ராய் முகம் காட்டினால் போதும் கோடிகளைக் கொட்டுகிறோம் என சர்வதேச நிறுவனங்கள் காத்திருக்கின்றன. சர்வதேச திரைப்பட விழாக்களின் மேடைகள் இவரின் வருகையால் பெருமை கொள்கின்றன. இதெல்லாம் தன்னுடைய அழகுக்கு மட்டும் கிடைத்த பெருமையல்ல, தான் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை சமூகம் கவனித்து வருவதால் கிடைக்கிற அங்கீகாரங்கள் என்பதை புரிந்து வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. அதனாலேயே அவர் எப்போதும் சொல்கிறார் சமூகம் உங்களை மட்டுமல்ல உங்களைச் சார்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்தும் உங்களை எடை போடும்’.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments