டீ ரீஸ் விரும்பிய இடம் – கறுப்புத் திரை 2

0
186

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணம் நாஷ்வில்லி நகரத்துக்கு  பல முகங்கள் உண்டு. இன்று அங்கு உயரமான கட்டடங்கள் உள்ளன. அதி வேக வளர்ச்சி பெற்ற நகரமாகவும் இருக்கிறது. ஆனால் அறுபதுகள் வரை அங்கிருந்த நிலைமை வேறு. கருப்பு வெள்ளை இனப்பாகுபாடு அதிகமுள்ள பகுதியாக இருந்தது. உணவகங்களிலும், பொது இடங்களிலும் கறுப்பின மக்களுக்கு தனி வரிசை, அலட்சியமான கவனிப்பு என கடைபிடிக்கப்பட்டதில் பொது இடங்களில் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தத் தொடங்கினர் அங்குள்ள கறுப்பின மக்கள். இது பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கத் தொடங்கியது. இதன் பின்னரே அங்கே சமூக சமன்பாடு மெல்லத் தொடங்கியது.

நாஷ்வில்லி பற்றிய அறிமுகத்துக்குக் காரணம் இயக்குனர் டீ ரீஸ். இவர் இங்கு பிறந்த கருப்பினப் பெண். அப்பா காவல்துறை அதிகாரியாக இருந்தார். அம்மா ஒரு பல்கழைக்கழகத்தின் விஞ்ஞானியாக பணிசெய்தார். டீ ரீஸ் தனது நாற்பதாவது வயதில் Mudbound ஒரு படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கினார். படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதே பெயரில் ஹிலாரி ஜோர்டான் எழுதிய நாவலுக்குத் தான்  சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார். முதன்முதலாக தழுவல் திரைக்கதைக்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கறுப்பினப் பெண் ஆனார் டீ ரீஸ். அந்த வருடத்திய ஆஸ்கரை  டீ ரீஸ் பெறவில்லை என்றாலும், ஆக முக்கியமான திரைப்படம் என பெயர் பெற்றது. இந்த இடத்துக்கு சாதாரணமாக் டீ ரீஸ் வந்துவிடவில்லை. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஓட வேண்டியிருந்தது. தன்னையே சந்தேகப்பட வேண்டியிருந்தது. அதனால் அந்த ஓட்டத்தைப் பார்த்துவிட்டு Mudbound பற்றி பேசினால் சரியாக இருக்கும்.

உள்ளாடைகள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் டீ ரீஸ்.  ஊர் ஊராகச் சுற்றுகிற வேலை, விதவிதமான மனிதர்களை சந்திக்க முடியும் என்பதே இந்த வேலையை டீ ரீஸ் தேர்ந்தெடுக்கக் காரணம். இந்த நிறுவனத்தில் ஒருநாள் விளம்பரப் படம் ஒன்று எடுக்கப்பட்டது. அதனை வேடிக்கைப் பார்க்க போயிருந்தார் டீ ரீஎஸ். “இது தானே..நான் நினைத்தது..எனக்கு இது தானே தேவை… இத்தனை அழகாய் கற்பனை செய்து திரையில் காட்ட முடியும் என்றால், அதை ஏன் நான் முயற்சிக்கக் கூடாது. நாம் ஏன் இயக்குனராக கூடாது?” என்பது தான் டீ ரீஸின் எண்ணமாக மாறியிருந்தது. சுருங்கச் சொன்னால், அவர் இப்படி நினைத்தாராம், “நான் மீன்..இதுவரை தண்ணீரைக் காணாத மீன்..இதோ என்முன் தண்ணீர்.” சட்டென்று வேலையை உதறிவிட்டு மீன் தண்ணீரில் நீந்தத் தொடங்கிவிட்டது.

டீ ரீஸ் திரைப்பட இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள நியூயார்க் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். தங்கிப் படிக்க ஒரு வீடு தேவையாக இருந்தது. நியூயார்க் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் டீ ரீஸுக்கு வீடு கிடைத்தது. அங்கு அவர் தங்கியிருக்கிறார் என்பதே கேள்விப்படுபவர்களுக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்தது. காரணம், அங்கு குடியிருந்த அனைவருமே வெள்ளை இன மக்கள். டீ ரீஸ் வீட்டினுடைய உரிமையாளர்கள் கறுப்பினத்தவர்கள், அவர்கள் டீ ரீஸ் திரைப்படப் படிப்பில் சேரவிருக்கிறார் என்றதும், அவர்களுக்குப் பிடித்துப் போய் வீட்டினை வாடகைக்கு தந்திருக்கின்றனர். இது முதல் வரவேற்பாக டீ ரீசுக்கு அமைந்தது.

பல்கலைகழகத்தில்  அவருக்கு பகுதி நேர ஆசிரியராக பணியாற்றியது இயக்குனர் ஸ்பைக் லீ. ஸ்பைக் லீ அப்போது Inside Man படத்தின் முன்தயாரிப்பு வேலையில் இருந்தார், அவருடைய வகுப்பில் இருந்து இரண்டு மாணவர்களை தனது படத்தின் இடை நிலை பயிற்சியாளராக சேர்த்து கொள்வதாக அறிவித்திருந்தார். அதற்காக அவர் பயிற்சியும் தந்திருந்தார். மாணவர்கள் அதை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பரிசோதனையும் வைத்தார். அவர்களில் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய  உதவியாளராக சேர்ந்தனர். அதில் இருவராக இருந்தார் டீ ரீஸ்.

அதற்கு முன்பு வரை ஒரு படப்பிடிப்புத் தளத்தில் எப்படி படப்பிடிப்பு நடைபெறும் அதற்கான தயாரிப்புகள் என்ன எனபதைப் பற்றி பாடத்தில் மட்டுமே படித்திருந்த டீ ரீஸ் முன்பாக ஒரு உலகம் விரிந்தது. இது தனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பென நினைத்து வேலை செய்தார். இப்போதும் தனது மாணவியான டீ ரீஸிடம் ஸ்பைக் லீ தான் வியக்கும் ஒன்றாக சொல்வது அவரது கடின உழைபைத் தான். படப்பிடிப்பில் வேலை செய்துமுடித்து கல்லூரி படிப்பையும் முடிக்கும் நாளில் அவரது பேராசிரியை டன்லப் என்பவர் டீ ரீஸ் கைகளில் நாணயங்களைத் தருகிறார், “நாணயங்கள் கனக்கிறதா? உனது கனவுகளும் இது போல கனக்கும்…ஏனெனில் இது உனது கனவு மட்டுமல்ல..பள்ளிக்குக் கூட செல்ல முடியாத உனது மூதாதையரின் கனவும் தான். திரைப்படத் துறைக்கு உனது வருகை கனமிக்க கனவுகளின் வழியாக இருக்கட்டும்” என்று நாணயங்களை லையில் அளித்தார் .தனது இன மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று நினைத்திருந்த டீ ரீஸுக்கு இந்த வார்த்தைகள் உற்சாகம் தந்தன.

Pariah என்ற பெயரில் ஒரு திரைக்கதையை எழுதினர். அதனை குறும்படமாக இயக்கினார். அந்தக் குறும்படம் நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை சர்வதேச அளவில் பெற்றது. ஆனால் இதனை முழு நீளத் திரைப்படமாக எடுக்க எந்தத் தயாரிப்பாளரும் முன் வரவில்லை. அந்த சமயம் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்காக ஒரு ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது Eventual Salvation என்ற பெயரில் வெளிவந்தது. எண்பது வயதான ஒரு பெண் தன்னுடைய நிலத்தை மீட்டு, அங்கு வீடு கட்டியது குறித்த ஆவணப்படம் அது. மிகுந்த வரவேற்பை அது பெற்றது. அந்தப் பெண்மணி டீ ரீஸின் பாட்டியே தான். இரண்டாம் உலகப்போரின் போது தனது சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர் மீண்டும் தனது நிலத்துக்கான போராட்டத்தை முன்வைத்து திரும்பவும் அங்கு வீடு கட்டிக் கொண்டதைப் பற்றியே டீ ரீஸ் ஆவணப்படம் எடுத்திருந்தார்.

ஆவணப்படத்தில் பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது pariah திரைக்கதையை தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்கிற நம்பிக்கை டீ ரீஸுக்கு வந்தது. ஒவ்வொரு தயாரிப்பு   நிறுவனமாக சென்று கொண்டிருந்தார். ஏற்கனவே விற்பனைப் பிரதிநிதியாகப் பொருட்களை கடை கடையாக எடுத்துச் சென்று விற்ற அனுபவம் டீ ரீஸுக்கு உண்டு. ஒரு பொருளின் எந்த மதிப்பை முன்வைத்தால், விற்பனையாகும் என்பதை அவர் கற்றிருந்தார். அதனால் Pariah திரைக்கதையை சளைக்காமல் கேட்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதன் திரைக்கதை வடிவத்தைக் கொண்டு சேர்த்தார். “இன்று அழைப்பு வரும்..நாளை கூட வரலாம்” என்று காத்திருந்தவருக்கு எந்த அழைப்பும் வரவில்லை. சோர்வு  தட்ட ஆரம்பித்திருந்தது.

ஒருநாள் focus features நிறுவனத்தில் திரைக்கதையைத் தந்திருந்தார். இதுவும் ஒரு முயற்சியே என்ற நிலையில் தான இருந்தார். ஆனால் அவர்கள் இந்தக் கதையை புரிந்து கொண்டார்கள். உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்கச் சொன்னார்கள். அதன் பின் நடந்ததெல்லாம் டீ ரீஸ் மறக்கமுடியாத அனுபவங்கள். படம் வெளிவந்தது. டீ ரீஸுக்கு நல்ல பெயர். பதின் பருவத்தில் இருக்கும் கறுப்பினப் பெண் தன்னை தன்பால் சேர்க்கையாளர் என்று கண்டு கொண்ட தருணத்தையும், குடும்பத்தில், குறிப்பாக அவள் அதிகம் நம்பிய அப்பாவிடமும் இருந்து கிடைத்த எதிர்வினைகளையும் சொல்லும் படம். அந்தப் பெண் வீட்டை விட்டு செல்கிறாள். அவள் அப்பாவுக்கு எழுதும் கவிதையில் .”நான் ஒடவில்லை … தேர்ந்தெடுக்கச் செல்கிறேன்” என்கிறாள். தனது இலட்சியத்துக்காக செல்லும் ஒவ்வொருவரும் சொல்லும் வாக்கியமாக மாறியது. ஒருவகையில் இது தன்னுடைய வாழ்க்கையில் தான அடிக்கடி நினைக்கும் வாக்கியம் என்கிறார். 

Pariah வெளிவந்த ஆண்டு 2011. அதன் பின் நான்கு வருடங்கள் கழித்தே Bessie திரைப்படத்தை இயக்கினார். அமெரிக்க ப்ளுஸ் இசைக்குழுவின் பாடகி பெஸ்ஸி ஸ்மித்தின் வாழ்க்கைக்கதை இது. ஹெச்பிஓ நேரடியாக தயாரித்தது. ஹெச்பிஓ தொலைகாட்சியில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் பேர் பார்த்தது இந்தப் படத்தைத் தான் என்று அதிகாரப்பூர்வமாக அந்த நிறுவனம் வெளியிட்டது.

டீ ரீசைப் பொறுத்தவரை தனது இனத்தின் வரலாறுகளை, அவர்களின் கப்டந்த கால வழிகளை, வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்க கூடியவர். டீ ரீஸின் பாட்டி டைரி எழுதும் பழக்கம் கொண்டவர்.  அவர் தான் சந்தித்த பல அனுபவங்களை எழுதியபடி இருந்திருக்கிறார். பலவற்றை கதைகளாக பேரப்பிள்ளைகளுக்கு சொல்லியிருக்கிறார். பாட்டி டைரியில் பதிவு செய்ததை டீ ரீஸ் திரைப்படமாக எடுத்திருக்கிறார். அவரது பாட்டி பண்ணையில் வேலை செய்தவர். பருத்தி விவசாயி. வீட்டில் எப்போதுமே பருத்தி மூட்டைகளும், அதன் வாசனையும் நிரம்பியிருக்கும் என்கிறார் டீ ரீஸ். அந்த வாசனைகளுக்கு நடுவில் பருத்தி மூட்டைகளுக்குள் உட்கார்ந்து தன் பாட்டி எழுதிய டைரியை வாசிக்கையில் ஒவ்வொன்றுமாக காட்சியாக மனதில் விரிந்ததைத் தான் பின்னாட்களில் திரைப்படமாக மாற்றுகிறார். ஹிலாரி ஜோர்டான் எழுதிய Mudbound நாவல் வாசிக்கக் கிடைத்தபோது தன்னுடைய குடும்பத்தின் வரலாறுக்கும் நாவலுக்கும் உள்ள  தொடர்பை புரிந்து கொள்கிறார். அதனாலேயே அதற்கு திரைக்கதை அமைத்தார் டீ ரீஸ்.

“என்னைப் பொறுத்தவரை என்னுடைய குடும்பக் கதையை விவரித்து சொல்வது அவமானகரமானதாக இல்லை. என்னுடைய பாட்டி ஒரு பண்ணையில் வேலை செய்தவர். அவருடைய அனுபவங்களை நான் தர விரும்பினேன். சின்ன சின்ன விஷயங்களில் ஏற்படுகிற வசதிகளுக்குக் கூட அவர் நன்றியுணர்வைக் கொண்டிருந்தார். ஒரு கோப்பை குளிர்ந்த நீர் அருந்துவற்குக் கிடைத்தால் கூட அதனை நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் ஒரு கோப்பைநீர் குளிராவதற்கு பல நிலைகளைக அதுகடக்கவேண்டிருக்கிறது என்பது அவர்களது எண்ணம். அவர்களைப்பொறுத்தவரை காபி, சர்க்கரை, இனிப்புகள் இவையெல்லாமே ஆடம்பரமானப் பொருட்கள். இவர்கள்தினமும் இறைச்சி எடுத்துக் கொண்டதில்லை, ஒரு நாளைக்கு அறநூறு கலோரிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பழச்சாறுகளைக் கூட கண்டதில்லை

இவர்கள் மேல் எப்போதும் ஒருவித நாற்றம் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் இதனை எப்படி புரிந்து கொள்வீர்கள்? அவர்களுடைய இடங்கள் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமில்லையா?அதனால் இவர்களைப் பற்றிய கதையைத் தான் எடுக்க நினைத்தேன். என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் டீ ரீஸ்.

Mudbound  படத்தைப் பார்த்தவர்களுக்கு அவர் சொல்வது புரியும். எப்போதும் ஈரம் காயாத சேரும் சகதியுமான ஒரு நிலத்தில் வேலை செய்யும் இரண்டு குடும்பங்கள். ஒரு குடும்பம் வெள்ளை இனம்.  மற்றொன்று கறுப்பினக் குடும்பம். வேறு குடியிருப்புகள் ஏதுமற்ற அந்த நிலத்தில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இரண்டு குடும்பங்களும் ஒரே அளவிலான வசதிகளையும் பொருளாதார அமைப்பையும் கொண்டது. ஆனாலும் கூட  வெள்ளை இனக் குடும்பம் கறுப்பினக் குடும்பத்தைத் தங்களோடு இணைத்துக் கொள்வதில்லை. ஒதுக்கியே வைத்திருக்கின்றனர். இதோடு ஏவல் பணி செய்வது அவர்களின் கடமை என்பது போல நிறுவுகிறார்கள். இப்படி செய்வது இயல்பானது என்பது போலேவே இரு குடும்பமும் ஏற்றுக்கொள்கிறது.  இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற மாற்றங்களை இதோடு பதிவு செய்கிறார்   டீ ரீஸ். படம் எதையும் பிரசாரமாகவோ, நியாயம் கோரியோ நிற்கவில்லை. ஆனால் யதார்த்தத்தை பதிவு செய்கிறபோது அனைத்தும் கேள்விகளாகின்றன.

இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க இராணுவத்தில் பணிக்கு சேர எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கறுப்பின மக்கள் பலரும் இராணுவத்தில் கலந்து கொண்டார்கள். போர் முடிவுக்கு வந்தது. மிஞ்சியவர்கள் தங்களின் இடம் திரும்பினார்கள். ஆனால் எப்போதும் போல பேரூந்துகளில் பின்வாசல் வழியாகத் தான் அவர்கள் ஏற்றப்பட்டார்கள். பொது இடங்களில் ஒதுங்கி நிற்க வைக்கப்பட்டார்கள். பொது கழிவறையைப் பயன்படுத்தத் தடை நீடித்தது. எந்த வழக்கமும் மாறவில்லை. அவர்கள் மீண்டும் வயல்களில் கூலிக்காக வேலை செய்தார்கள். தெரு வியாபாரிகள் ஆனார்கள். இவர்கள் இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சண்டையிட்டவர்களாக இருந்தனர்.

போர் என வரும்போது மட்டும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும் என்று நினைத்தவர்கள் போர் முடிந்ததும் கண்டுகொள்ளாமல் விட்டதை தனது குடும்பத்திலேயே கண்டிருந்தார் டீ ரீஸ். “ஒரு நாட்டின் குடிமகன் என்பதால் போருக்கு சென்ற நாங்கள், போர் முடிந்ததும் மீண்டும் ஏன் அடிமைகளாக நடத்தப்படுகிறோம்? யாருடைய குடிமகன்கள் நாங்கள்?” என்கிற கேள்விகளை டீ ரீஸ் தந்து படைப்புகள் மூலமாக எடுத்து வைக்கிறார்.

டீ ரீஸிடைய பாட்டியின் அம்மாவுக்கென ஒரு கனவு இருந்ததில்லை. கனவு காணலாம் என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  பாட்டிக்கு ஸ்டனோக்ராஃபர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறது. ஆனால் பண்ணையில் தான் கடைசி வரை வேலை செய்ய முடிந்திருக்கிறது. டீ ரீஸின் அம்மா படித்து விஞ்ஞானியாக இருந்திருக்கிறார். டீ ரீசோ யாரும் சுலபத்தில் எட்ட முடியாத கனவுக்குள் நுழைந்து தன் இனம் குறித்து பதிவு செய்து  உலகறிய செய்திருக்கிறார். இது டீரீஸின் வளர்ச்சி மட்டுமல்ல, எங்கெங்கு உரிமைகள் மறுக்கப்படுகிறதோ, குரல்கள் அமைதியாக்கப்படுகிறதோ அதன் வெளிப்பாடு இப்படித் தான இருக்கும்.

டீ ரீஸ் தொடர்ந்து படங்களை இயக்குகிறார். சில படங்கள் தோல்வியடைந்துள்ளன. சில கவனம் பெருகின்றன. இது ஒரு படைப்பாளருக்கு சகஜமே. ஆனால் எந்தப் படத்திலும் அவர் தன் சுயத்தை வீட்டுக் கொடுத்ததில்லை. தான் நினைத்ததை சொல்கிறார். விமர்சனம் வருகையில் அதனை எதிர்கொள்கிறார். பதிலே சொல்ல வேண்டாம், இட்ட வேலையை செய்து கொண்டிருக்கப் போதுமானது உங்கள் வாழ்க்கை என்கிற பின்னணியில் இருந்து வந்தவர் எல்லோரையும் எதிர்கொண்டு பதில்களைத் தருகிறார், என்பதும் அவர் பதில் வேண்டி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன என்பதுமே பெரும் சாதனை.

டீ ரீஸ் போன்றவர்கள் விரும்பிய இடம் இது. அதற்காகவே இவர்கள் எழுதுகிறார்கள்..இயக்குகிறார்கள்..

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments