அந்த ஒரு பாடல்!

0
230

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். ஐந்தாம் வகுப்பில் இருந்து நாங்கள் 25 வருட காலங்கள் நட்பாக பழகியிருக்கிறோம். அவனை நினைத்தால் என்னிடம் பழகியது, பேசியது எல்லாம் கடந்து ரஜினியின் முகமும் சேர்ந்தே நினைவுக்கு வரும். சில வருடங்களுக்கு முன்பு ஒருநாள் அவன் என்னிடம் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தான். அவன் என்னிடம் பேசிய அந்த நேரத்தில் தான் ரஜினியின் ‘காலா’ வெளியாகவிருந்தது. படத்தினைப் பார்க்க ஆவலாக இருப்பதாக சொன்னான். பேசிய இருபது நிமிடங்களில் பதினைந்து நிமிடங்கள் ரஜினியைக் குறித்து மட்டுமே பேசிகொண்டிருந்தான்.  அவர் பற்றிப் பேசுகையில் அவன் மிதமிஞ்சிய உற்சாகத்துக்குள் செல்வதை 25 வருடங்களாகத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அன்றைய தினமும் அவன் பேச்சு அப்படித் தான் இருந்தது. நாங்களும் அவனும் கூட எதிர்பாராதது,  ‘காலா’ திரைக்கு வருவதற்கு முன் உடல்நலப் பிரச்சனையால் இறந்து போனான். நண்பர்கள் அனைவரிடமும் அவன் ரஜினி குறித்து தான் கடைசி வரை உரையாடியிருக்கிறான் எபது தெரிந்தது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவனுடைய பெரும் விருப்பமாக இருந்தது.

ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் ரசிகர்கள் உண்டு. இவர்களை எல்லாம் பொதுவான வழக்கில் ரசிகர்கள் என்று சொல்லிவிடுகிறோம். ஆனால் ஒவ்வொருவரின் ரசிகர்களுக்கும் நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு என்பதை அனுபவத்தில் கண்டுகொண்டேன். 2008 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ‘ரசிகன்’ என்கிற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. ரஜினி, கமல், சிவாஜி, எம்ஜிஆர், இளையராஜா, எஸ்பிபி என இவர்களின் ரசிகர்களைக் கொண்டு நடத்தபப்டுகிற ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்க்ரிப்ட் எழுதி இணை இயக்கமும் செய்திருந்தேன். இதற்காக ஒவ்வொருவரின் ரசிகர்களையும் சந்தித்திருக்கிறேன். உரையாடியிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் குறைந்தது நூறு ரசிகர்களையாவது நேர்காணல் செய்திருப்பேன். தமிழ் சினிமாவின் மற்றொரு முகம் தெரிய வந்த அனுபவம் அது எனக்கு. ஒவ்வொருவருக்குள்ளும் சினிமா நடிகர்களும், ஜெயித்தவர்களும் எப்படி பதிந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும்போது வியப்படைந்தேன்.

இவர்களில் ரஜினி ரசிகர்களிடம் சொல்லிவைத்தாற்போல் ஒரு உணர்வைக் கண்டுகிள்ள முடிந்தது. அவர்களிடம் பொதுவாக சில கேள்விகளைக் கேட்பேன். “ஏன் உங்களுக்கு ரஜினியைப் பிடிக்கிறது?” என்று கேட்டால் ஒவ்வொரு பதிலை சொல்வார்கள். ஸ்டைல், வசீகரம், நிறம், அடிபட்டு முன்னேறியவர் , நல்லவர், ஆன்மீகவாதி என்றெல்லாம் சொல்லிவிட்டு நல்ல நடிகர் என்பார்கள். ஆனால் இவர்களிடம் கண்ட ஒற்றுமை, ஒரு கட்டத்தில் பலரும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை நிறுத்தியிருக்கிறார்கள். சிலர் தேம்பி அழவும் செய்திருக்கிறார்கள். ஆனால் என்னிடம் பேசியதில் கண்கலங்காதவர் குறைவு.

எதனால் இப்படி? என்று யோசித்திருக்கிறேன். பலருக்கும் அவர் மேல் அத்தனை அன்பினையும் வைக்கக் காரணம், அவருக்குள் தங்களை இவர்கள் பொருத்திக் கொண்டது தான். இது தான்  ரஜினியின் வெற்றி.

அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் பார்க்கும் ஒவ்வொருவரையும் அவரிடத்தில் பொருத்திப் போக வைத்துவிடும். அவர் எந்தக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறாரோ அதுவாகவே படத்தில் கடைசி வரை வந்துபோவார். தளபதி படத்தில் ஒரு நண்பன் அவர். எஜமான் படத்தில் கிராமத்தின் தலைவர் அவர், பாட்ஷா படத்தில் ஒரு ஆட்டோக்காரர், முத்து படத்தில் பணிவான வேலையாள் இப்படி அவர் படத்தின் கதாபாத்திரத்தோடு முற்றிலும் பொருந்திப் போனார். இந்தக் கதாபாத்திரத் தேர்வு ஒவ்வொரு மனிதரையும் தன்னைத் திரையில் பார்ப்பது போல மாற்றிவிடும். இந்த இயல்பான கதாபாத்திரங்கள் தான் ரஜினி இத்தனை பேரை சென்று அடைய காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

ரஜினியின் கதைத் தேர்வுகளை அண்ணாமலைக்கு முன் அண்ணாமலைக்கு  பின் என்று பிரிக்கலாம். இது என்னுடைய கணிப்பு. ஒரு வெள்ளந்தியான இளைஞன். அவனுக்கென்று தேடி வருகிற ஒரு காதல். ஒரு அம்மா, தங்கை என்று குடும்பம். ஒரு  சுயதொழில். இப்படி அமைதியாயிருக்கிற ஒரு மனிதனுக்கு நண்பன் ஒருவன் துரோகம் செய்கிறான். நாயகன் நடுத்தெருவுக்கு ஒரே நாளில் வந்துவிடுகிறான். ‘உன்னை ஜெயித்துக் காட்டுகிறேன்’ என்று சபதம் இடுகிறான். எப்படி ஜெயிக்கிறான் என்பது மட்டுமல்ல கதை. ஜெயித்த பின் ‘அண்ணாமலை’ எப்படி நடந்து கொள்கிறான் என்பது தான். அண்ணாமலை அந்தப் படத்தில் ஜெயித்ததை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜெயித்த பின்பும் பழைய ‘அண்ணாமலையாகவே’ வாழ்கிறான் என்பதை ஒரு  வாழ்க்கைத் தத்துவம் போல ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்தப் படத்தினை ரஜினியின் வாழ்க்கைக்கு கொஞ்சம் நெருக்கமான படமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

‘எந்த ஏவிஎம் ஸ்டுடியோவுல வச்சு என்னைத் திருப்பி அனுப்ப  கார் குடுக்க முடியாதுன்னு ஒரு தயாரிப்பாளர் சொன்னாரோ .. அதே ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஃபாரின் கார்ல வந்து இறங்குவேன்னு அன்னைக்கு நினைச்சேன்” என்று சபதமிட்டு அதை சாதித்துக் காட்டிய ரஜினி தான் அண்ணாமலை. சரி ஏவிஎம்முக்கு ஃபாரின் காரில் வந்தாயிற்று.. வீடுகள் வாங்கியாயிற்று..புகழ், பணம் எல்லாம் கொட்டுகிறது..ஆனாலும நிம்மதியில்லை என ஆன்மிகம் பக்கம் சென்ற ரஜினி தான் அண்ணாமலையில் ‘சுமைதாங்கி சுமையானதே..நிம்மதி போனதே’ என்று தனக்கு எழுத வைத்தவர். இப்போது வரை அவர் தன் நிம்மதியை எங்கு தேடுவது என்று தவிப்பவராகவே வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறார். இந்தப் படம் அவருக்குமக் அவரை அறிந்த ரசிகர்களுக்கும்  மிக நெருக்கமான படமாகிவிட்டது.  அதனால் தான் அண்ணாமலைக்கு முன் பின் என்று அவர் படங்களைப் பிரிக்க நினைக்கிறேன்.

அண்ணாமலைக்குப் பிறகு வந்த அவரது படங்களில் இந்தப் படத்தின் அதே பாணியை அவர் பின்பற்றினார். அவமானமும், துரோகமும் ஏற்பட்டு வீழ்ந்த ஒருவன் எப்படி உயருகிறான் என்பதே அவரது படத்தின் கதையாக மாறின. முத்து, பாட்ஷா, படையப்பா, சிவாஜி, அருணாசலம் என நீளும் அவரது ஹிட் படங்களின் கதைகள் அவமானப்பட்ட ஒருவரின் கதைகள். அதிலும் சொத்தில் எமாற்றப்பட்ட கதைகளே அதிகம். அவமானப்படாத மனிதன் இந்த உலகில் இல்லை என்பதாலும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையாக தனது படங்களில் அவர் வாழ்ந்ததும் அவரைத் தொடந்து மக்கள் மனதுக்குள் நெருக்கமாக்கின. இது தான் அவரது ரசிகர்களை அவர் பற்றிப் பேசும்போதெல்லாம் நெகிழவும் வைத்திருக்க வேண்டும். அவருடைய படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலரும் சொல்வது, “கதையின் ஒன்லைன் இது தான்..இதை டெவலப் பண்ணலாம்’ என்று அழைத்துச் சொல்வார் என்று சொல்லியிருக்கிறார்கள். அவை யாவும் மீண்டும் மீண்டுமாக எடுக்கப்பட்ட அண்ணாமலை கதைகள் தான். ஆக, ரஜினி தனது வாழ்க்கைக் கதையையே விதவிதமாக எடுத்துப் பார்த்திருக்கிறார். அது ஒரு சாமானியன் ஹீரோவாகும் கதை என்பதால் எல்லோருக்கும் பிடித்துப் போனது. ஒருவர் ஜெயிப்பது என்பதல்ல முக்கியம், அதன்பிறகு அவர் எப்படியாக மாறுகிறார் என்பது தான் ரஜினிக்கு சொல்ல வேண்டியதாக இருந்தது. அதனால் தான் ஜெயித்ததை ஒரே பாட்டில் சொல்லிவிட்டு கதைக்குள் சென்றுவிடுகிறார். கடைசி வரை அவருக்கு நிம்மதியைத் தேடித் தரும் அந்த ஒரு பாடலை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இதில் இருந்து மாறிய எல்லாருடைய எதிர்பார்ப்பையும் எகிற வைத்த படம் எந்திரன். படம் பேசப்பட்டது. மீண்டும் ரஜினி தனது பழைய பாணி கதைக்குள் போகிறார். ‘லிங்கா’ இதில் தோல்வி கண்டது. அதன் பின்னர் ஷங்கர் , ஏ.ஆர் முருகதாஸ் , பா, ரஞ்சித், கார்த்திக்  சுப்புராஜ் என அனுபவமும், ஆர்வமும் கொண்ட இயக்குனர்களுடன் இணைந்தார். வெவ்வேறு கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரஜினிக்கு நிச்சயம் இருக்கும். அப்படி நடித்தவர் தான் அவர். ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘தில்லுமுல்லு’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘அவள் அப்படித்தான்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘பைரவி’ ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ போன்ற படங்களில் தன்னை மிகச்சிறந்த நடிகராகவும் நிலைநிறுத்தியவர் தான் அவர்.

அதற்கான காட்சிகள் அவருடைய வணீகரீதியான படங்களில் கிடைத்தால் அந்தக் காட்சியைத் தன அற்புத நடிப்பால்  தூக்கி நிறுத்துவிடுவார். அவருடைய தோல்விப் படங்களிலும் கூட ரஜினியின் மிக யதார்த்தமான சிறப்பான  நடிப்பின் காட்சிகளை பார்க்கமுடியும்.

அவருக்குப் பிறகு அவரது பாணியில் நடிக்க வந்த கதாநாயகர்களில் அவருடைய இடத்தைப் பிடிக்க நினைக்கும் எவரும் அவரது வசூல் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர நடிப்பின் மூலமாக மட்டுமே அவர் பெற்ற  வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

சினிமா என்பது தொழில், வியாபாரம் என்பதைக் கடந்து அது அடிப்படையில் ஒரு கலை. அந்தக் கலைக்குள் தன்னை ஒரு கலைஞனாக இணைத்துக் கொண்டவரை மட்டுமே காலம் தன்னோடு நிலைநிறுத்திக் கொள்ளும். மற்றவர்கள் அன்றைய தலைமுறையினர் மட்டுமே அறிந்தவர்களாக இருப்பார்கள்.  வாழும் காலத்திலேயே காலாவதியும் ஆவார்கள். அப்படியானவர்களை இந்தத் திரையுலகம் காட்டிக்கொண்டே தான்  இருக்கிறது.

மூன்று தலைமுறை ரசிகர்களை ஒருவர் தன் பக்கம் வைத்துக் கொண்டிருப்பது வெறும் வசூல் மன்னனாக இருந்ததினால் மட்டுமல்ல, தொடக்கத்தில் இருந்தே அவருக்கு இருந்த தொழில் பக்தி, தனக்கு ஏற்ற மாதிரியான கதையைத் தேர்ந்தெடுக்கும் திறன் இவையெல்லாம் தான். இதோடு தான் எளிமையான பின்னணியில் இருந்து வந்த ஒருவர் என்பதை சொல்லி நம்பிக்கையின் சின்னமாக உருவெடுத்ததும் தான்.

ரஜினியும் சறுக்கியிருக்கிறார். ஆனாலும் அவரே சொல்வது போல குதிரை போல எழுந்து நின்றிருக்கிறார். தான நம்பும் சினிமா தன்னை கைவிடாது, வீழ்ந்தாலும் எழுவோம் என்று அவர் நம்புவதாலேயே மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறார். அவரால் தன்னை ஒருபோதும் கதாநாயகன் அல்லாத கதாபாத்திரத்தில் நினைத்துப் பார்க்க இயலாது. அவர் தன்னை காந்தம் என நம்புகிறார். இது இந்தத் தலைமுறையினரையும் ஈர்க்கும் வரை அவர் சூப்பர் ஸ்டார் தான்.

அப்படியே அவர் இருக்கட்டும்!!!

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rangarajan
Rangarajan
1 year ago

This article beautifully narrated how an actor stands for generations , not just because of collections , also for his pure artmanship.

Jadeepa
Deepa
1 year ago
Reply to  Rangarajan

Thank you so much